Search This Blog

16.9.09

புதிய வரலாறு படைத்தவர் பெரியார்! - அண்ணா



திருச்சியில் பெரியார் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் அண்ணா பேருரை

நம்முடைய தனிப் பெருந்தலைவர் பெரியாரவர்களுடைய 89ஆவது ஆண்டுப் பிறந்தநாள் விழாவில் நான் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது பற்றி உள்ளபடியே மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் முதலமைச்சரான பிறகு ஏதாவது ஒரு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமானால், இந்த விழாவிலே நான் கலந்துகொள்வது தான் அந்தப் பெரிய மகிழ்ச்சியாகும். ஆனால், உங்களிலே பலருக்கு இது புதுமையானதாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரையில் இடையில் சில நாள் இல்லாமலிருந்து பழைய நிகழ்ச்சிதானே தவிர, இது புதிதல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் அவர்களுடைய 89ஆவது ஆண்டுப் பிறந்தநாள் விழாவானது இன்றைய தினம் தமிழகத்திலுள்ள எல்லாப் பண்பாளர்களாலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கையானது.

கட்சிக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக எல்லாக் கட்சியிலுள்ள பண்பாளர்களும் வரவேற்கத்தக்கதாக, தமிழக மக்கள் நல்வாழ்வில் அக்கறை உள்ளவர்கள் போற்றத்தக்க நிகழ்ச்சியாக இந்த மாபெரும் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இங்கே வந்திருக்கிற பல்லாயிரக்கணக்கான மக்கள், கிட்டத்தட்ட ஒரு இலட்சம் மக்கள் இருக்குமென்று நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் இந்த மாபெரும் கூட்டத்தில் அமைதியாக இருந்தால்தான் இவ்விழாவிற்குத் தனிச் சிறப்புத் தேடிக்கொடுத்தவர்களாவீர்கள்.

பெரியாருக்கு நன்றி செலுத்துவோம்!

பெரியார் அவர்கள் இன்று 89-ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிற நேரத்தில், அவர் நமக்கு இதுவரையில் ஆற்றியிருக்கிற தொண்டுக்கு, - அவர்களால் தமிழகம் பெற்றிருக்கிற நல்ல வளர்ச்சிக்கு,பெயருக்கு, அவர்களுக்கு நம்முடைய மரியாதையை அன்பை இதயத்தைக் காணிக்கையாக்குவதற்கே இங்கே கூடியிருக்கிறோம். பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் நேரத்தில் இங்கே நடந்த ஊர்வலமும் அதன் சிறப்பும் பெரியார் அவர்களுக்கு நம்முடைய வணக்கத்தைத் தெரிவிப்பதற்காகத்தான் என்று எண்ணுவது நமது கடமையாகும்.

புதிய வரலாறு படைத்தவர் பெரியார்!

தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் இன்னும் உலகத்திற்கே கூட என்று சொல்லலாம்; அவர்கள் செய்திருக்கிற அரிய பெரிய காரியங்கள், ஆற்றியிருக்கிற அருந்தொண்டுகள், ஏற்படுத்தியிருக்கிற புரட்சிகர உணர்ச்சிகள், ஓடவிட்டிருக்கிற அறிவுப்புனல் தமிழகம் என்றுமே கண்டதில்லை. இதற்குப் பிறகும் இப்படிப்பட்ட மாபெரும் புரட்சி வேகத்தை நாம் காணப் போவதில்லை - வரலாற்றில் பொறிக்கத்தக்க, புதிய வரலாறு என்று கருதும் நிலைமையை அவர்கள் தன்னுடைய பொதுத் தொண்டின் மூலம் நமக்கு அளித்திருக்கிறார்கள்.

வாழ்நாள் முழுவதும் போர்களம் கண்டவர்

பிறந்தநாள் கொண்டாடுகிற நேரத்தில் என்னு-டைய நினைவுகள் திராவிடர் கழகமாகவும், அதற்கு முன்னால் தமிழர் இயக்கமாகவும், சுயமரியாதை இயக்கமாகவும் இருந்த நேரங்களில், அவர்களோடு இருந்து பணியாற்றிய பல எண்ண அலைகளை நெஞ்சில் ஓடவிட்டுக் கொண்டிருக்கின்றன. எத்தனை இரவுகள், எத்தனை பகல்கள், எத்தனை காடுமேடுகள், எத்தனை சிற்றாறுகள், எத்தனை பேராறுகள், எத்தனை மாநாடுகள் என்று எண்ணிப் பார்க்கிற நேரத்தில், ஒரு போர்வீரன் களத்தில் புகுந்து, இந்தப் படையை முறியடித்தேன்; அந்தப் படையை வென்றேன் என்று காட்டி மேலும் மேலும் சொல்-லுவதைப் போல, அவர்கள் வாழ்நாள் முழுவதும் களத்தில் நிற்கிற ஒரு மாபெரும் போராட்டமே நம்முன் காட்சியளிக்கிறது.

சுகபோகங்களைத் துறந்த நம் தந்தை!

முதல் போராட்டம் அவர் உள்ளத்திலே தோன்றியிருக்க வேண்டும்! செல்வக்குடியில் பிறந்தவர் அவர்! தன்னுடைய செல்வத்தை - செல்வாக்கைக் கொண்டு ஊரை அடக்கிப் போகபோக்கியத்தில் மிதந்து மகிழ்ந்திருக்கலாம். அப்போதிருந்த பலருங்கூட அப்படிப்பட்ட வாழ்க்கையில் தான் இருந்தார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையில் இருந்து தன்னைத் தனியாக்கிக் கொண்டு, தன்னைப் பிரித்துக்கொண்டு என்னுடைய செல்வம் எனக்கில்லை; என்னுடைய செல்வத்தைக் கொண்டு போக போக்கியத்தில் திளைக்கப் போவதில்லை; பொது வாழ்க்கையிலே ஈடுபடப் போகிறேன் என்று எண்ணிய நேரத்தில் அவர்க்கிருந்த செல்வமும், அவருடைய குடும்பத்திற்கிருந்த செல்வாக்கும், அதனால் அடையக்கூடிய சுகபோகங்களும் அவருடைய மனத்தில் ஒருகணம் நிழலாடியிருக்க வேண்டும். அப்போது உள்ளத்தில் நிச்சயமாக ஒரு போராட்டம் எழுந்து இருக்க வேண்டும். செல்வத்தில் புரளலாமா? அல்லது வறுமையில், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு என்னை நான் ஒப்படைப்பதா! என்ற போராட்டத்தில் தொண்டு உள்ளத்தில் வெற்றி அடைந்தார். செல்வத்திற்காக அல்ல நான்; சுகபோகத்திற்காக அல்ல நான்; என்னிடத்தில் உள்ள அறிவு, உழைப்புத் திறன், என்னிடத்தில் அமைந்திருக்கிற பகுத்தறிவு அனைத்தும் தமிழக மக்களுக்குத் தேவை; தமிழகத்திற்கு மட்டுமல்ல - முடிந்தால் இந்தியா முழுவதற்கும் தேவை; வசதிப்-பட்டால் உலகத்திற்கே தேவை; வீட்டை மறப்பேன் என்று துணிந்து நின்று அந்தப் போராட்டத்தில் முதன்முதலில் வெற்றி பெற்றார்.

இதில் பிரமாதம் என்ன இருக்கிறது என்று எண்ணக் கூடும், செல்வம் இல்லாதவர்கள்; செல்வம் உள்ளவர்கள் அவற்றை விட்டுவிட்டு வெளியே வருவது ஒருபுறம் இருந்தாலும், ஒருவர் கையில் ஒரு அரிந்த பலாப்பழத்தைக் கொடுத்து ஒரு மணி நேரம் அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டு-மென்றால், வைத்திருப்பவர் வாயில் நீர் ஊறும்; நேரம் செல்லச் செல்ல பலாச்சுளையில் மொய்த்துக் கொண்டிருக்கிற ஈயோடு சேர்த்துச் சாப்பிடுவார்களே தவிர பார்த்துக்கொண்டே இருக்கமாட்டார்கள்.

பெரியார் குடும்பத்தின் சிறப்பு!

பெரியாருடைய குடும்பத்தின் நிலை எப்படிப்பட்டது? எந்தப் பக்கம் திரும்பினாலும் வாணிபத்தில் ஆதாயம்; நிலபுலன்கள்; வீடு வாசல்கள். இவைகள் எல்லாவற்றையும் பார்த்து, இவைகள் எனக்குத் தேவையில்லை என்றார். என் நாட்டு மக்களுக்கு - நல்லது கெட்டது ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் அற்றுப் போயிருக்கும் மக்களுக்கு - வேறு ஒரு செல்வத்தைத் தருவேன்; அறிவுச் செல்வத்தைத் தரப்போகிறேன்; சிந்தனைச் செல்வத்தைத் தரப்போகிறேன்; அதைத் தடுப்பார் எவரேனும் குறுக்கிடுவார்களானால் அவர்களுடைய ஆற்றல்களையும் முறியடிப்பேன். இதுதான் என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்று சொல்லி அவர்கள் கிளம்பினார்கள். அதுதான் வாழ்க்கையின் முதல் போராட்டத்தில் அவர்கள் பெற்ற வெற்றி!

பெரியாரின் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி

அதற்குப்பிறகு அவர்கள் சந்தித்த ஒவ்வொரு களத்திலேயும் வெற்றிதான் கிடைத்திருக்கிறது. அந்த வெற்றிகள் எல்லாம் நாம் எடுத்துக் கொண்டிருக்கிற காரியங்களுக்குப் போதுமானதாக அமையவில்லையென்று செட்டி நாட்டரசர் அவர்கள் சொன்னார்கள். ஒப்புக் கொள்கிறேன்! அந்தப் போராட்டத்துக்கான இன்றையச் சூழ்நிலை என்ன? எந்த நிலையில் மொழிப்பிரச்சினை வந்திருக்கிறது? என்று பார்க்க வேண்டும். 1934, 35, 36- ஆம் ஆண்டுகளில் இந்தியை அவர்கள் ஆட்சி மொழி என்று அல்ல; தேசிய மொழி என்றழைத்தார்கள். இந்தத் தேசத்திற்கென்று ஒரு மொழி உண்டு; அதுதான் இந்தி; இந்தத் தேசத்திற்கு இருக்கத்தக்க தேசியமொழி இந்திதான் என்று 1935-இல் அவர்கள் சொன்னார்கள். பெரியார் அவர்களின் போர் முறையின் தன்மை உங்களிலே பலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். அவர்கள் எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முதலிலே அப்படைக்கு எங்கே மூலபலம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த மூலபலத்தைத் தாக்குவது தான் அவருடைய போர் முறையாகும்.


தேசியத்தை எதிர்த்துப் பெரியார் போர்க்கொடி!

ஆகையினால், இந்தியாவின் தேசியமொழி இந்திதான் என்று சொன்னவுடன், தேசம் என்பது மகாப்புரட்டு! இந்தியா என்கிறீர்களே, இந்தியா என்பது மிகப்பெரிய கற்பனை என்று கூறி, அவை இரண்டையும் உடைத்து எறிவதுதான் என்னுடைய வேலை என்று கிளம்பினார்கள். அப்படி இந்தியைக் கொண்டு வந்தவர்கள் இந்தியாவையும் உடைத்துவிடக் கூடாது என்று, தேசியம் என்று சொல்லியதை மாற்றிக்கொண்டு, இந்தியாவில் தேசிய மொழிகள் பதினான்கு இருக்கின்றன; அதில் ஒன்றுதான் இந்தி; ஆனால், இந்தி பெரும்பாலானவர்கள் பேசுவதால் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது பெரியார், ஆட்சி மொழி என்பது இருக்கட்டும்; உங்களுடைய ஆட்சியின் லட்சணம் என்ன? யார் - யாரை ஆளவேண்டும்? எதற்காக ஆளவேண்டும்? என்று ஆட்சி முறையைப்பற்றி அவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். உடனே இந்தியை ஆதரிக்கிறவர்கள், ஆட்சி மொழி இந்தி என்பதை விட்டு விட்டு, ஒரு இணைப்பு மொழியாக இருக்கட்டும் என்று நேசம் கொண்டாடுகிறார்கள். பாசம் காட்டுகிறார்கள், சொந்தம் கொண்டாடுகிறார்கள். நாம் இணைந்திருக்க வேண்டாமா? என்று இணைப்பு மொழி என்ற இடத்திற்கு இந்தி வந்ததற்கு மிகப் பெரிய காரணம் பெரியார் அவர்கள் நடத்திய அறப்போராட்டம்தான்.

மொழிப் பிரச்சினை, அவர்களைப் பொறுத்தவரையில் மிகச் சாதாரணமான பிரச்சினை. அவர்கள் முக்கியமாகக் கருதுவது தமிழ்நாட்டு மக்களிடையே மனிதத் தன்மை வரவேண்டும்; அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிற காட்டு மிராண்டித்தனமான கொள்கைகள், நாட்டைக் காடாக்கத் தக்க கொள்கைகள், வெளி உலகத்தாராலே இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே உதறித் தள்ளப்பட்ட உருப்படியற்ற கொள்கைகள் மறையவேண்டும்; இவைகள் நீக்கப்பட்டுத் தமிழக மக்கள் துல்லியமான எண்ணத்தில் - செயல் திறனில் பகுத்தறிவாளர்களாக, பண்பாளர்களாகத் திகழ வேண்டும்; அதற்கு ஒரு அறிவுப் புரட்சி தேவை என்பதிலே அவர்கள் நாட்டம் அமைந்திருக்கிறது. அந்த நாட்டத்தின் உருவம்தான் பெரியார் அவர்கள் என்றால் அது மிகையாகாது.


---------------------திருச்சியில் 17.9.1967-இல் நடைபெற்ற தந்தை பெரியார் அவர்களின் 89-ஆவது ஆண்டுப் பிறந்தநாள் விழாவிற்குத் தலைமையேற்று அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை

2 comments:

Thamizhan said...

பெரியாரைப் புரிந்தார்
பெரியாரைப் புகழ்ந்தார்!

பெரியாரை இகழ்வார்
பெரியாரால் வாழ்ந்தார்!

புகழென்றே இகழ்வென்றோ
வாழவுமில்லை வாடவுமில்லை.
துணிவொன்றே துணையாய்
அறிவொன்றே வழியாய்
சரித்திரம் படைத்தார்
மனிதனைக் கண்டார்!

நன்றி எதிர்பார்த்தால்
தொண்டல்ல தொழிலென்றார்!
பிறந்தநாள் இன்றென்றே
பெருமையுடன் வாழ்த்துகின்றோம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா