Search This Blog

6.9.09

ஜாதி இழிவை ஒழிக்க வேண்டுமானால்....


ஜாதி காக்கும் சட்டம் இருக்கும் போது சட்டசபை மூலம் சாதி ஒழிப்பது எப்படி?

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

இந்தக் கூட்டத்தில் ஜாதி ஒழிப்புப் பற்றிய சொற்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது. ஜாதி ஒழிப்புக்கு சட்டம் செய்ய வேண்டும். கலப்பு மணம் செய்ய வேண்டும் என்று தலைவர் யோசனை சொன்னார்கள்.

நம் இந்தியா முழுவதுமே ஜாதியை அடிப்படையாகக் கொண்ட நாடு தான். அது மட்டுமல்ல,
இந்திய மக்கள் நம்பி வணங்கும் கடவுள் - ஜாதியை அடிப்படையாகக் கொண்ட கடவுள் ஆகும்.

இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ள மதமும் ஜாதியை அடிப்படையாகக் கொண்ட மதம் தான்.

அதுபோலத் தான் இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துப் போற்றும் புராணங்கள், சாஸ்திரங்கள் எல்லாம் ஜாதியை அடிப்படையாகக் கொண்டது தான்.

அடுத்து நம்மை ஆளும் அரசாங்கமும் ஜாதியை அடிப்படையாகக் கொண்டது தான். இன்று நேற்றல்ல; தொன்று தொட்டே இப்படித் தான் உள்ளது!

இப்படிப்பட்ட நிலையில் இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு ஜாதியை ஒழிப்பது என்றால் முடியுமா? ஜாதிக்கு ஆதாரமான கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும், புராணத்தையும், ஒத்துக் கொண்டு ஜாதியை மட்டும் இன்னொருவன் நீக்கவில்லை என்பது எவ்வளவு அர்த்தமற்றப் பேச்சு என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

எந்த நாட்டில் ஜாதிப் பாகுபாடு இல்லை என்று கூறுகின்றோமோ அந்த நாட்டுக் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றின் காரணமாக ஜாதி ஆனது அங்கு நிலைக்கும்படி இருக்காது.

நம் நாடு அப்படியா? நமது இன இழிவுக்கும், நமது முட்டாள்தனம் மடமைக்கும், இந்த மதம், கடவுள், சாஸ்திரம் தானே காரணமாக உள்ளன. இந்த நாட்டுக்கு ஏற்பட்டு உள்ள ஆட்சிகளை எல்லாம் எடுத்துக் கொண்டால் ஜாதியைப் பாதுகாப்பதாகத் தானே உள்ளன?

தலைவர் ஜாதியை ஒழிக்க சட்டம் செய்ய வேண்டும் என்றார். நமது சட்டமே ஜாதிக்குத் காரணமாகத் தானே உள்ளது?

சட்டசபைக்குப் போகின்றவர்களால் ஜாதி ஒழிப்புப் பற்றி சட்டசபையிலேயே பேசவே முடியாதே? ஒருவன் உண்மையிலேயே ஜாதி ஒழிக்க முற்படுவான். ஆனால் அவன் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் இவற்றை நம்புவான். ஆனால், அவனால் ஜாதியை ஒருபோதும் ஒழிக்க முடியாது. இவற்றை ஒழித்தால் தான், கைவிட்டால் தான் ஜாதியை ஒழிக்க முடியும்.

டாக்டர் அம்பேத்கரும் இந்து மதத்தையும், சாஸ்திரத்தையும், கடவுளையும் ஒத்துக்கொண்டு ஜாதியை ஒழிக்க முடியாது என்று எடுத்துக்காட்டியுள்ளார். ஜாதியை ஒழிக்க "காந்தியும், காந்தித் திட்டமும் பிரயோசனப்படாது. இவர் ஜாதி ஒழிப்பது என்பது பித்தலாட்டமானது" என்று கண்டித்து எழுதியுள்ளார். கீதையை "முட்டாள் பசங்களின் உளறல்" என்று தைரியமாகச் சொன்னவர். இராமாயணத்தைக் கொளுத்தியவரும் ஆவார்!


சட்டசபைக்குச் செல்வதன் மூலம் ஜாதியை ஒழிக்க முடியும் என்று எண்ணுவது பைத்தியக்காரத்தனம் அல்லது முட்டாள்தனம் ஆகும்.


சட்டசபையில் போய் ஜாதி ஒழிப்புப் பற்றி சட்டசபையிலோ பார்லிமென்டிலோ பேச எங்கே சட்டத்தில் இடம் உள்ளது? என்று தான் ஆளும் கட்சியினரும் கேட்பான்?


ஜாதி ஒழிய வேண்டுமானால் ஜாதி காரணமாகக் கீழ்நிலையில் உள்ள மக்கள் எல்லோரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். இதற்குப் பாடுபடும் இயக்கத்துக்கு ஆதரவாகச் சேர வேண்டும். இப்படி இல்லாமல் ஜாதியை மட்டும் எவனாவது ஒழிக்க வேண்டும் என்று கூறினால் என்ன சாதாரணமாகக் கையில் எடுத்துக் கொடுத்து விடும் பண்டமா ஜாதி ஒழிப்பு என்பது?

இந்த நாட்டில் எங்களைத் தவிர ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று எந்தக் கட்சிக்காரனும் பாடுபட முன்வரமாட்டான். வந்தாலும் அவனால் வாழ முடியாது.

தங்களுக்கு இருந்து வரக் கூடிய ஜாதி இழிவை ஒழிக்க வேண்டுமானால் ஆதிதிராவிடர் மக்கள் எல்லோரும் ஒரு பெரிய மாநாடு கூட்ட வேண்டும். ஜாதிக்கு ஆதாரமான கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் பழக்கவழக்கங்களை எல்லாம் விட்டொழிக்க முற்பட வேண்டும்.

உங்களை இழிநிலையில் வைத்துள்ள கடவுளை எல்லாம் நடுவீதியில் போட்டு உடைக்க வேண்டும். புராணங்கள், சாஸ்திரங்கள் எல்லாம் வீதியில்வைத்துக் கொளுத்த வேண்டும். அப்போது தான் பார்ப்பான் இறங்கி வருவான். ஏதாவது பரிகாரம் பண்ணாவிட்டால் காரியமே கெட்டுப் போகும் என்று உணருவான்.


சும்மா "மைனா பிடித்தால்" ஒன்றும் நடக்காது!


இந்திய அரசமைப்புச் சட்டம் ஜாதியைப் பாதுகாக்கின்றது என்பதைக் கண்டு, ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். இப்படி நீக்காவிட்டால் நாங்கள் ஜாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தையே கொளுத்துவோம் என்று எச்சரிக்கை செய்தோம். அரசாங்கம் ஆட்சேபகரமான பகுதியை விலக்க முற்படாததோடு கொளுத்தினால் மூன்றாண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனை என்று சட்டம் செய்து கொண்டு மிரட்டியது.

இதைக் கண்டு நாங்கள் பயந்தா போனோம்? அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தினால் மூன்றாண்டு தண்டனை உண்டு என்று தெரிந்தும் கூட அஞ்சாமல் கொளுத்தினோம். ஆறு மாதம், ஒரு வருஷம், இரண்டு வருஷம், மூன்று வருஷம், இப்படியாகக் கடினகாவல் தண்டனை 40000- க்கு மேற்பட்ட கழகத் தோழர்கள் அனுபவித்தோமே! சிலர் சிறையிலேயே செத்து மடிந்தார்கள்!!
ஆனால், "கண்ணீர்த்துளிகள்" போல மன்னிப்புக் கேட்கவில்லை!!! தண்டனையை அனுபவித்து வெளியே வந்த பிறகு ஜாதியைப் பாதுகாக்கவே நடந்து வந்த காங்கிரசையே ஒரு திருப்பு திருப்பி விட்டதே!

அதற்குப் பிறகு தான் காமராசரும், நேருவும் "ஜாதியை ஒழிக்க வேண்டியது தான். ஜாதி இருப்பது என்பது நமது நாட்டுக்கே அவமானம். ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்" என்று பேசிக் கொண்டே வருகிறார்கள்.

வாயினால் மட்டும் பேசவில்லை. சென்ற ஆண்டு மதுரையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வெளியிட்ட, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலேயே ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று பல இடத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள்!

இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லோரும் ஜாதிக்கு ஆதாரமான கடவுள், மதம், சாஸ்திரங்களையும் பலவித கட்சி உணர்ச்சிகளை எல்லாம் விட்டு விட்டு பலமாக இன்றைய ஆட்சியை ஆதரிக்க வேண்டும். அரசாங்கம் ஜாதியை ஒழிக்க எவ்வளவோ முயற்சிகள் எல்லாம் செய்துக் கொண்டு வருகின்றது. இந்த முயற்சி வெற்றி பெற நீங்கள் எல்லாம் அரசாங்கத்தை ஆதரித்தால் தானே முடியும்?

இந்தியாவிலேயே ஜாதி ஒழிப்புக்காக உண்மையான கவலை எடுத்துக் கொண்டு பாடுபட ஒரு கட்சி இருக்கிறது என்றால், இந்த திராவிடர் கழகம் தான்.

நாங்கள் தான் மக்கள் வீதியில் நடக்கும் உரிமை பெற கிளர்ச்சி செய்து சிறை சென்றவர்கள். மக்கள் கோயில் நுழைவுக்காகவும், கிளர்ச்சி செய்து சிறை சென்றவர்களும் நாங்கள் தான். நான் முன் குறிப்பிட்டது போல ஜாதியைப் பாதுகாக்கும் சட்டத்தைக் கொளுத்தி ஆறு மாதம், ஒரு வருஷம், இரண்டு வருஷம், மூன்று வருஷம், சிறை சென்றதும் நாங்கள் தான். சிறையிலேயே 7,8- பேர்கள் செத்து மடிந்ததும் எங்கள் இயக்கத்தார் தான்!

இன்னும் எவ்வளவு கஷ்ட, நஷ்டங்கள் ஏற்பட்டாலும் கூட ஜாதியை ஒழித்தே தீருவோம். இது தான் எங்கள் இயக்கத்தின் இலட்சியமும் ஆகும்.
இத்தனை நாள் நாம் வாய்ப் பேச்சில் இருந்தது போல இனி இருந்தால் காரியம் நடக்காது. ஆதிதிராவிடர் சமூதாயத்துக்கு ஒரே அரசியல் கட்சி தான் இருக்க வேண்டும். அரசாங்கத்தை ஆதரிப்பவர்களாக இருக்க வேண்டும். மாறாக இருப்பவர்களைச் சமூதாயத்தில் இருந்து விலக்க வேண்டும். எதிர்காலம் நல்லவண்ணம் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்றைய ஆட்சி உங்கள் நலனில் அக்கறை கொண்டு எவ்வளவோ காரியங்களை எல்லாம் செய்து வருகிறது.

ஆதிதிராவிடர் "தப்பட்டை - கொம்பு" முதலியவற்றை விட்டு ஒழித்து விடுவது என்று முன்வந்ததை நான் பாராட்டுகின்றேன். இந்தத் தொழிலின் காரணமாகத் தானே நீங்கள் கேவலமாக மதிக்கப்படுகிறீர்கள்?

இன்றைய காமராசர் ஆட்சியில் எல்லோருக்கும் கல்வி, உத்தியோகம் கொடுப்பது மூலம் ஜாதியானது ஒரளவு ஒழிக்கப்பட்டு வருகின்றது. காமராசர் ஆட்சி மட்டும் இன்னும் பத்து ஆண்டுகள் நிலைத்து விடுமானால் நாட்டில் ஜாதியற்ற சமூதாயம் ஓர் அளவுக்கு ஏற்பட்டடே தீரும். 100-க்கு 100- நாமும் பார்ப்பான் போல படித்து விடுவோம்.

-------------------21-02-1963- அன்று வைரவன்பட்டியில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை"- 05-03-1963.

2 comments:

சுரேஷ்குமார் said...

என்று சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுகிறோமோ அன்று தான் சாதி என்னும் சாத்தான் நம் மனதை விட்டு ஒழியும்.கடவுள் இல்லை என்று சொல்வதால் சாதி ஒழியாது.

//ஆதிதிராவிடர் சமூதாயத்துக்கு ஒரே அரசியல் கட்சி தான் இருக்க வேண்டும்.
சாதி அடிப்படையிலான கட்சியை ஆதரிக்க வேண்டுமா....?

நம்பி said...

Blogger சுரேஷ்குமார் said.

//என்று சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுகிறோமோ அன்று தான் சாதி என்னும் சாத்தான் நம் மனதை விட்டு ஒழியும்.கடவுள் இல்லை என்று சொல்வதால் சாதி ஒழியாது.//

என்று ஜாதியில்லை என்று ஜாதியை அடிமனத்திலிருந்து தூக்கி எரிந்து, ஜாதிய எண்ணத்துடன் ஒருவரும் இல்லை என்று அனைவரும் சமத்துவம் நிலை பெறுகிறோமோ? அன்று ஜாதி அடிப்படையிலான இடவொதுக்கீடு ஒழியும்.

இந்த ஆரியக் கடவுள் இருக்கிறவரை அப்படி நடைபெற சாத்தியமில்லை...ஆரிய இந்துக் கடவுள் தான் இந்த ஜாதியை உருவாக்கியது.

அந்த இந்துக்கடவுளை உருவாக்கியப் பார்ப்பனன் தான் இந்த ஜாதியத்திற்கு காரணம். கடவுள், பார்ப்பனீயம் இது இரண்டும் இருக்கும் வரை ஜாதி ஒழியாது.


Blogger சுரேஷ்குமார் said...

//ஆதிதிராவிடர் சமூதாயத்துக்கு ஒரே அரசியல் கட்சி தான் இருக்க வேண்டும்.
சாதி அடிப்படையிலான கட்சியை ஆதரிக்க வேண்டுமா....?

September 7, 2009 4:16 PM

இதை ஆதிதிராவிடர் சமூகத்தில் பிறந்தவராக இருந்து கொண்டு இந்த சொல்லமுடியுமா?

நிச்சயம் முடியாது?

அப்படியென்றால் இட ஒதுக்கீடு பெறாத பார்ப்பன, முற்பட்ட ஜாதியிலிருந்து கொண்டு இந்த (போலிப்)புரட்சி கருத்தை சொல்லமுடியுமா?

நிச்சயம் சொல்ல முடியும்?

ஏன்?

ஏனென்றால் இட ஒதுக்கீடு கண்ணை உறுத்துவதால். இட ஒதுக்கீட்டினால் ஆதிதிராவிடன், பிற்படுத்தப்பட்டவன் மேலே நமக்கு சமமாக வந்து விடுவதால்.

அதனால் ஏற்பட்டது தான் இந்த (போலிப்)புரட்சி வாசகங்கள்.