Search This Blog

24.9.09

ஜாதி உணர்வுபற்றிப் பேசும் சோ கூட்டம் பதில் சொல்லுமா?


ஜாதி கண்ணோட்டமா?

"நீதிபதிகள் தெய்வங்களாக மதிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது; இன்றோ அரசியல்வாதிகளுக்குச் சமமாக அவர்களில் பலர் இறங்கிவிட்டனர் என்பதுதான் மக்கள் கருத்து.

இந்த நிலையில், உண்மையிலேயே மாற்றம் தோன்று வதற்கு, நீதிபதிகளின் நியமனம் சரி செய்யப்படவேண்டும். இன்றைய மோசமான சூழ்நிலையில்கூட, நேர்மையாகவே இருக்க முனைகிற திறமையானவர்கள் உண்டு. அப்படிப் பட்டவர்கள்தான் நீதிபதிகளாக நியமிக்கப்படவேண்டும். வேண்டிய ஜாதியைச் சார்ந்தவர்; சமாதானப்படுத்தப்பட வேண்டிய வகுப்பைச் சார்ந்தவர்; வேண்டிய அரசியல் வாதிக்கு வேண்டியவராக இருப்பவர்; வளைந்து கொடுத்து செயல்படக் கூடிய இயல்பு படைத்தவர்; ஆட்சியாளர்களுக்கு உதவக் கூடியவராக இருப்பவர்... போன்ற காரணங் களுக்காக சிலர் நீதிபதிகளாக நியமனம் பெறுகிறவரையில், நீதித் துறையின் சீரழிவு தடைபடாது. அதுவரை, சொத்துக் கணக்கு, வெறும் சொத்தைக் கணக்காகத்தான் இருக்கும்."

இவ்வாறு துக்ளக் (16.9.2009) இதழில் திருவாளர் சோ ராமசாமி தலையங்கம் தீட்டியுள்ளார்.


ஜாதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் என்று சோ கூறுவது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களிலிருந்து நீதிபதிகள் நியமனம் என்பதைத்தான் இப்படி சுற்றி வளைத்து, அவாளுக்கே உரிய முறையில் எழுதியுள்ளார்.

உண்மையைச் சொல்லப்போனால் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு என்ற கேள்விக்கே இடமில்லை. பெரும்பாலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான் அங்கு கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பார்க்கப் போனாலும் திருவாளர் சோவின் கூற்றுப்படி நீதித்துறையில் நேர்மை தவறுதலுக்குக் காரணம் யார் என்பது வெளிப்படையானதே!

அதேநேரத்தில், உச்சக்கட்ட அதிகாரப் பீடமான நீதிமன்றத்தில் ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லையாயின், அதன் நிலைமை என்னவாகும் என்பதை மக்கள்நாயகப் போக்குடனும் சமூகநீதிச் சிந்தனையுடனும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டாமா?

ஜாதி உணர்வு கண்ணோட்டத்துடனும், மனுதர்மக் கண்ணோட்டத்துடனும் நடந்துகொண்டு வந்திருக்கிற நீதிபதிகள் யார்?

முதல் வருடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய பார்ப்பனர்கள் அடுத்த வருடம் உயர்நீதிமன்ற நீதிபதியானதெல்லாம், பார்ப்பனர் அல்லாதார் மறந்து விடுவார்கள் என்கிற எண்ணமா?

முதல் இந்திய நீதிபதி என்று பெருமை அடித்துக்கொள்ளும் ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர், கணவன் மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று மனுதர்ம வழி தீர்ப்பினை வழங்கிடவில்லையா? பெண்கள்பற்றிய கருத்தில் இந்த வகையில் திருவாளர் சோ நீதிபதி முத்துசாமி அய்யரின் கொடுக்குத்தான்.

காஞ்சிபுரம் சங்கர மட மேலாளர் கொலை வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் பார்ப்பனர், நான் சங்கராச்சாரியாரின் சீடன். எனவே, இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று பகிரங்கமாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தாரே _ அந்த உணர்வுக்கு என்ன பெயர்? திருவாளர் சோ கூட்டம் இதற்குப் பதில் சொல்லுமா?

நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு இருப்பதன் பொருள் இதுதானா? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொஞ்சம்கூட கூச்ச நாச்சம் இல்லாமல் காஞ்சி சங்கர மடத்துக்கு வந்து சங்கராச்சாரியார்களின் பாதங்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் வாங்கியதில்லையா? அப்படியென்றால், அத்தகு நீதிபதிகளின் நீதி பரிபாலனம் எந்தத் தரத்தில் இருந்திருக்க முடியும் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சி தேவையா?

நீதித்துறையில் நேர்மைபற்றி எல்லாம் நீட்டி முழங்குகிறார்களே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த திருவாளர் இராமச்சந்திர அய்யர் தனது பதிவேட்டில் வயதைத் திருத்தி மோசடி செய்து பதவியை நீட்டித்துக் கொண்டாரே, அதற்கு என்ன சமாதானம்? தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரே இப்படிப்பட்ட மோசடியைச் செய்திருக்கும்போது, கடுமையான தண்டனை அளித்து, நீதித்துறையில் ஒரு நெருப்புப் போன்ற நேர்மையை நிலைநாட்ட அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கவேண்டாமா?

டாக்டர் இராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர் குடியரசுத் தலைவராக இருந்த நிலையில், காதும் காதும் வைத்தாற்போல குற்றவாளிமீது ஒரு தூசு துரும்புகூட விழாமல், ஒரு பைசா காசுகூட இழப்பு இல்லாமல் ஒன்றுமே நடவாததுபோல வெளியில் செல்ல அனுமதித்த கூட்டமா நீதித்துறையில் ஜாதி புகுந்துவிட்டது _ நேர்மை கெட்டுவிட்டது என்று நீலிக் கண்ணீர் வடிப்பது?

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் தமிழராக சோமசுந்தரம் அவர்களை நியமிக்க அன்றைய முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி (ரெட்டியார்) பரிந்துரைத்தபோது, இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உறுப்பினர் கோபால்சாமி அய்யங்கார் தலையிட்டு தம் மருமகன் திருவேங்கடாச்சாரிக்குக் கிடைத்திட, பிரதமர் நேரு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தது எந்த உணர்வில்? ஜாதி உணர்வுபற்றிப் பேசும் சோ கூட்டம் பதில் சொல்லுமா?

சென்னை மாகாண பார்ப்பனர்கள் முழுக்க முழுக்க வகுப்புவாதிகளாகவே இருந்துகொண்டு, மற்றவர்களைப் பார்த்து வகுப்புத் துவேஷிகள், வகுப்புத் துவேஷிகள் என்று கூறுவார்கள் என்று கூறினாரே, லாலாலஜபதி அவர் வாய்க்கு எவ்வளவு சர்க்கரையைக் கொட்டினாலும் தகும், தகும்!

-----------------"விடுதலை"தலையங்கம் 24-9-2009

4 comments:

பித்தனின் வாக்கு said...

ஆமாம் ஜயா, நீங்கள் சொல்வதுதான் சரி,
வங்கியல்,அரசியல்,பொதுத்துறை, அரசாங்கம் என அனைத்தும் சீரழிந்த பின்னர் நீதித்துறை மட்டும் புனிதமாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன நியாயம். மக்கள் தங்களின் கடமைக்கு(ஓட்டு) பணம் வாங்கும் காலத்தில் ஒரு சாராரை மட்டும் உத்தமமாக இருக்க சொல்லுவது ஜனனாயக அநீதி.
அதுவும் நாறீப்போகட்டும். வாழ்க இந்தியா, வளர்க பகுத்தறிவு.

தமிழ் ஓவியா said...

அனைத்துத் துறைகளுன் நியாயமாக நடக்க வேண்டும். நேர்மையாக நடக்க வேண்டும் பித்தன்.

Unknown said...

What Cho said is correct only.
You only making this as cast biased statement. For teling this do not blame me , bcaz I am not brahmin. People like you should think in rightway and do not take everything cast biased.

நம்பி said...

Blogger பித்தன் said...

//மக்கள் தங்களின் கடமைக்கு(ஓட்டு) பணம் வாங்கும் காலத்தில் ஒரு சாராரை மட்டும் உத்தமமாக இருக்க சொல்லுவது ஜனனாயக அநீதி.///

அது மக்களின் குற்றமா? அப்படி என்றால் பணம் வாங்கும் நிலையில் மக்களை தள்ளியது யார் குற்றம்..?

50 பேர் வேலை செய்யும் நிறவனத்தில் 100 பேர் வேலை செய்வதாக அரசுக்கு கணக்கு காட்டி நாட்டை மோசடி செய்கிறானே அது யார் குற்றம்?

8 மணிநேர வேலைக்கு ஊதியம் வழங்கிவிட்டு 14 மணிநேரம் வேலை வாங்குகிறானே திருட்டு கோட்டு முதலாளி! அவனை எதிர்க்க முடியாமல் வாய்மூடி தன் ரத்தத்தை சிந்துகிறானே தொழிலாளி...அது யார் குற்றம்?

இந்த ஊழலை செய்தவர்களை தெரிந்தும் காட்டிக்கொடுக்காமல் அங்கேயே உழன்று கொண்டு, அடுத்தவனை குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறோமே! இது யார் குற்றம்?

தன் வருமானத்தை திருட்டு கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்வது யார் குற்றம்? அந்த வரிப்பணம் மக்களுக்கு செல்கிறது..தனக்கும் பயன்படுகிறது என்று தெரிந்தும் வரி ஏய்ப்பு செய்கிறானே?அது யார் குற்றம்..?

தனிமனிதன் தினம் தினம் ஊழல் புரிகிறானே!...தன்னை சுற்றியுள்ள ஒவ்வொரு கடமையிலும் (குண்டுசி வாங்குவது முதல் சிறிய அளவில் சொத்து சேர்ப்பது வரை அனைத்திலும் ஊழல் இருக்கிறது)....அவன் செய்தால் சாமர்த்தியம் பிறர் செய்தால் ஊழல் என்று கூறுகிறானே! அது யார் குற்றம்?

இந்த குற்றங்களையெல்லாம் தனிமனிதன் செய்துவிட்டு வருவாய் இழப்பை பற்றி கவலைப்படுகிறானே! அது யார் குற்றம்?

இத்தனைக்கும் இவன் செய்வது மிகப்பெரிய ஊழல்! இந்த தொகை தான் அதிகம். இதை மறைத்துவிட்டு, வருவாய் இழப்பை பற்றி மிக அக்கறையுடன் கவலைக் கொள்கிறானே!

இந்த குற்றங்களை எல்லாம் புரிந்து கொண்டேயிருந்துவிட்டு, அவனை மட்டும் காசு வாங்காமல் உத்தமனாக இருக்க சொல்வது என்ன? நியாயம்?