Search This Blog
4.9.09
தமிழில் குடமுழுக்கு நடத்தினால் நாட்டுக்குக் கேடு வருமா?
தமிழில்...
நாகப்பட்டினத்தையடுத்த வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கருணையீசுவரர் கோயில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
கோயில் என்றால் இடிவதும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு (ஜீரணத்தோரண பூரண கும்பாபிஷேகம்) நடைபெறுவதும் வாடிக்கைதானே. இதில் என்ன விசேடம்?
இருக்கிறது விசேடம். சரவணகுமார் குருக்கள் சொன்னது சமஸ்கிருத மந்திரங்கள் அல்ல.
எல்லாம் தமிழிலேயே நடைபெற்று இருக்கிறது. மருந்துக்குக்கூட ஒரு மந்திரம் சமஸ்கிருதத்தில் சொல்லப்படவில்லை என்பது அடிகோடிட்டுக் காட்டத்தகுந்ததாகும்.
கரூரையடுத்த திருமுக்கூடலூர் மணிமுத்தீசுவரர் கோயிலில் தமிழில் குடமுழுக்குச் செய்யப்பட்டதற்காகக் கோயிலை இழுத்து மூடினார்கள் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தமிழில் குடமுழுக்கு நடத்தினால் நாட்டுக்குக் கேடு வந்து சூழும் என்றார். (கடைசியில் இப்படி சொன்னவருக்குத்தான் கேடு வந்து சூழ்ந்தது என்பது நாடு அறிந்த ஒன்றாகும்).
திருமுறைகளைப் பயன்படுத்தி குடமுழுக்கு செய்யக்கூடாது என்று சிலர் நீதிமன்றத்திற்குக்கூட சென்றனர் 2007 இல். சைவப் பழங்கள் என்ன செய்தனவே!
அதனை ஒப்பிடும்போது வடக்குபொய்கை நல்லூரில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றிருப்பது என்பது ஒரு வகை முன்னேற்றம்தானே!
இங்கு கடவுள் மத சமாச்சாரம் என்பது வெறும் ஆன்மிகமாக அல்லாமல் ஜாதி பிரச்சினையாக வருணாசிரமப் பிரச்சினையாக ஆரியன் _ திராவிடன் பிரச்சினையாக இருக்கிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆன்மிகப் போர்வையில் சமஸ்கிருதம் என்று பார்ப்பனர்கள் சொல்வது பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் குறியீடாகும்.
அவாள் கண்ணோட்டத்தில் சமஸ்கிருதம் என்றால் தேவபாஷை; தமிழ் என்றால் நீஷ பாஷை.
தமிழன் கருவறைக்குள் போனால் சாமி தீட்டுப் பட்டுவிடும்; தமிழ் மொழி உள்ளேபோனால் தோஷம் ஏற்பட்டுவிடும் என்று வைத்திருப்பதன் பொருள் என்ன?
இந்து மதத்தில் மனிதருக்குள் எப்படி தீண்டாமை இருக்கிறதோ அதே அடிப்படையில்தான் மொழிப் பிரச்சினையிலும் இன்னொரு தீண்டாமை.
சரி, தமிழில் குடமுழுக்கு நடந்தாயிற்று. கருணையீஸ்வரர் என்ன ஆனார்? கோபித்துக்கொண்டு வெளிநாடு சென்றுவிட்டாரா?
அது குந்தின இடத்தில்தானே குந்திக் கிடக்குது. அதைப் பொறுத்தவரை சமஸ்கிருதத்தில் ஓதினால் என்ன? தமிழில் ஓதினால் என்ன? கல்லும், செம்பும், இரும்பும், மரமும் என்ன பன்மொழிப் புலவர்களா?
அதல்ல பிரச்சினை. நாட்டு மக்களின் மொழிக்கு அங்கீகாரம் உண்டா, இல்லையா? என்கிற மொழி மானமும் அதன்வழி இன மானமும்தான் இதில் இழைந்தோடும் முக்கிய காரணியாகும்.
------------------- மயிலாடன் அவர்கள் 4-9-2009"விடுதலை"யில் எழுதிய கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மலேசியாவில் சொகூர் மாநிலத்தில் ஓர் ஊரில் கோயில் குடமுழுக்கு முழுக்க முழுக்க தமிழில் நடைபெற்ற செய்தி இன்று 2.9.2009 எங்கள் நாட்டு நாளிகை ஒன்றில் வெளிவந்துள்ளது.
எங்கள் நாட்டைப் பொறுத்தவரையில் இதனை மாபெரும் புரட்சி.. எழுச்சி என்பேன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment