Search This Blog

29.9.09

திராவிடர், ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவர் அனைவரும் ஓரினத்தவரே !

திருவாரூர் போகாமல் இருப்போமா?

* சென்னை மாகாண 2 ஆவது சுயமரியாதை மாநாடு (30.8.1931)
* சென்னை மாகாண 15 ஆவது ஜஸ்டிஸ் கட்சி மாநாடு (24, 25.8.1940)


சுயமரியாதை இயக்க நிலையிலும் சரி, நீதிக்கட்சி என்ற அமைப்பிலும் சரி, திராவிடர் கழகம் என்ற முறையிலும்கூட திருவாரூரில் நடைபெற்ற மாநாடுகளும், விழாக்களும், நிகழ்ச்சிகளும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியவை.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்கள் திருவாரூர்,நாகைவட்டாரங்களில் ஒவ்வொரு குக்கிராமத்திலும், ஒவ்வொரு குடிசையிலும் கோலாகலமாக இன்றுவரை கொண்டாடப்படும் கோலத்தை, குதூகலிப்பைக் காணலாம் - கண்டு களிக்கலாம்.

அதுவும் 1940 ஆகஸ்ட் 24 ஆம் நாளன்று தந்தை பெரியார் தலைமையில் திருவாரூரில் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) 15 ஆவது மாகாண மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றால், ஒவ்வொன்றும் ஒரு கோடி பெறும் என்று சொன்னாலும், அது சாதாரணமானதுதான். அதற்கு மேலான விலை மதிப்பிட முடியாத அருஞ்செல்வங்கள் அவை.

அடடா, இப்பொழுது நினைத்தாலும் மயிர்க்காம்பெல்லாம் சிலிர்க்கின்றன. இன்றைக்குக்கூட அவை அசாதாரணமானவை என்றால் அன்று...

முதல் தீர்மானமோ கண்களைக் குளமாக்கக் கூடியது! தந்தை பெரியார் தம் எண்ணத்தில் தனிப்பீடம் கொடுத்து வைத்திருந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செல்வமாகச் சேகரித்து வைத்திருந்த _ அந்தப் பன்னீர்செல்வம் பாழும் விமான விபத்தில் கண நேரத்தில் பலியாகி தந்தை பெரியார் அவர்களையே கதறச் செய்த அந்தக் காலத்திலேயே பார்அட்லா படித்த ஏ.டி. பன்னீர்செல்வத்தின் மறைவு குறித்து முதல் தீர்மானம்தான் அது.

கண்ணீரில் ஆரம்பித்த தீர்மானம் அடுத்தடுத்தவை ஒவ்வொன்றும் தமிழர்களின் கண்ணீரைத் துடைத்து கவுரவமான இடத்திற்கு உயர்த்தும் உன்னதமான ஒப்புயர்வற்ற தீர்மானங்கள்.

இந்தி ஒழிப்புக்கு நன்றி, ஆதிதிராவிடர்க்குத் தனித் தொகுதி கோரல், பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனித் தொகுதி கோரிக்கை.

(தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை உணர்வை தம் உண்ணாவிரதத்தால் காந்தியார் ஒடுக்கியதற்கு எதிரான தீர்மானம்) கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்லூரி குழுவை காங்கிரஸ் ஒழித்ததற்கு எதிர்ப்பு, மீண்டும் கோருதல், ஸ்ரீ என்ற வார்த்தைக்குப் பதில் திரு என்ற சொல்லைப் பயன்படுத்தக் கோரல், அரிஜனன் என்ற பெயருக்குப் பதிலாக ஆதிதிராவிடர் என்று அழைத்திட வேண்டுதல். கைத்தறித் துணிக்குக் கைலாகு, மக்கள் கணக்கெடுப்பில் இந்துக்கள் என்று கூறக் கூடாது வேண்டுமானால் திராவிட சமயம் என்று கூறுதல், வகுப்புவாரி உரிமை வெறும் ஆணையாக மாத்திரம் இல்லாமல் சட்டமாக ஆக்கப்படவேண்டும் என்ற வலியுறுத்தல், மக்கள் தொகைக்கேற்ற பிரதிநிதித்துவம் கோருதல், மாநில அரசிடம் மட்டுமின்றி இந்திய அரசுத் துறைகளிலும் இட ஒதுக்கீடு வற்புறுத்தல், இந்து சட்டத்தை திராவிடர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என்ற மறுப்பு, (திராவிட லா தேவை) உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி அமைப்புக்குக் கல்தா, இந்து முசுலிம் ஒற்றுமை என்பதை திராவிடர் முசுலிம் என்று சொல்லப்படல், திராவிட மாகாணத்தில் உள்ள 18, 21 வயதினரான ஆண்கள் யாவருக்கும் இராணுவப் பயிற்சி அவசியம், மார்வாடி வட்டிக்கடைகளின் வட்டிகளைக் குறைத்தல், ஒரு மாநாட்டில் இத்தனை உயிர்த்துடிப்பான தீர்மானங்கள் என்றால் நம்ப முடிகிறதா?

ஆனாலும், நம்பித்தான் தீரவேண்டும். திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானங்கள் மட்டுமே போதும். திராவிட இயக்கம், தன்மான இயக்கம், தமிழர்களின் அனைத்து வகையான வளர்ச்சியில், உரிமைகள் அனைத்திற்குமே கட்டியங் கூறிய வரலாற்றுச் சிறப்புமிக்க உதயம் . அவற்றைச் செயல்படுத்திட சர்வபரித் தியாகம் செய்திருக்கும் சீர்மை இவற்றிற்கெல்லாம் காரணம் திராவிட இயக்கமல்லாமல் வேறு எது? வேறு யார்?

அந்த மாநாட்டின் தலைவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். அத்தகு மாநாட்டில் புரட்சிகள் பூக்காமல் பூஞ்சைக் காளான்களா புறப்பட முடியும்?

திராவிடர், ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவர் அனைவரும் ஓரினத்தவரே என்ற கருத்து அம்மாநாட்டிலேயே இன்றைக்கு 69 ஆண்டுக்கு முன்பே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைக்குத் தோள்தட்டும் ஆரியம் அதன் மாற்று வடிவங்களான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., சங் பரிவார்க் கும்பலுக்கு எதிரணியில் இருக்கவேண்டியவர்களை கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பே அடையாளம் காட்டிய அந்தத் தொல்லறிவை நினைக்க நினைக்க நெஞ்சு நெக்குருகிப் போகிறது. அணுக்கள் எல்லாம் சிலிர்த்து நிற்கின்றன.

இத்தகைய சிந்தனைகள் வடிக்கப்பட்ட ஊரிலே ஆம் அந்தத் திருவாரூரிலே சிந்தனைச் சிற்பியாம் தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை நிறுவாமல் வேறு எந்த ஊரிலே நிறுவுவது?

அந்த மாநாடு நடந்தபோதெல்லாம் 16 வயதுடைய துருதுரு சுறுசுறு மாணவர்தான் அன்றைய திருவாரூர் மு. கருணாநிதி.

அப்பொழுது தந்தை பெரியார் அவர்களுக்கோ வயது 61. 16 அய் திருப்பிப் போட்டால் 61 தானே!

காலத்தின் விசித்திரச் சுழற்சியின் வேடிக்கை, வினோதங்கள் தாம் என்னே, என்னே!

அந்த மாணவர் பிறகு கலைஞராகி, மானமிகு மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சராகி, அந்தத் தத்துவ ஆசான் அய்யாவின் சிலையைத் திறக்கிறார் என்றால், சாதாரணமா?

நாளை மாலை தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்கொள்ளாக் காட்சி.

தம் சொந்த ஊரிலே தந்தை பெரியார் சிலையைத் திறக்கிறோம் என்று நினைக்கும்போது மானமிகு கலைஞர் அவர்களின் சிந்தனையில்தான் எத்துணை எத்துணை எண்ண அலைகள் கரை புரண்டு ஓடும் அந்த உணர்வுகளையெல்லாம் அங்கு வெளிப்படுத்திட உள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கூட சிறுவயதில் வீரமணியும், தாமும் பட்டி தொட்டிகளில் எல்லாம் பம்பரமாய்ச் சுற்றி அலைந்து பிரச்சாரம் செய்த மலரும் நினைவுகளையெல்லாம் பசுமையாக நினைவுபடுத்தினார்.

மூன்று நாள் இடைவெளியிலே மீண்டும் அந்தப் பழைய நினைவுகளின் சங்கமத்திலே தமிழர் தலைவரும், தமிழக முதல்வரும் சங்கமிக்க யிருக்கின்றனர்.

கருஞ்சட்டையின் மகாசமுத்திரத்தை பிரவாகத்தை நமது முதல்வரும், நமது தலைவரும் கண்டு களிக்கவேண்டும்.

தமது பாடி வீட்டில் பகுத்தறிவுப் பாசறையின் வீச்சைப் பார்த்து மகிழவேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கருங்கடலாகக் காட்சி அளிக்கவேண்டும்.

கழகத் தோழர்களே, குடும்பம் குடும்பமாகக் கரங்களில் கழகக் கொடி ஏந்தி, கலந்துகொள்ளுங்கள். நமது அறிவு ஆசான் அய்யா அவர்களுக்குச் சிலை திறக்கப்படும் விழாவிலே நமது அருமைத் தலைவர்களுக்கு நமது அளப்பரிய அன்பைக் கழகக் கொடி அசைவுகள்மூலம் காட்டுவோம், வாரீர்! வாரீர்!!

95 வயதை நெருங்கும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு எஸ்.எஸ். மணியம் அவர்களும், கழகப் பொறுப்பாளர்களும் களப் பணிகளிலே மூழ்கி இருக்கிறார்கள்.

நாம் செய்யவேண்டியதெல்லாம் மிகச் சிறிய பணிதான் ஆம், அவ்விழாவிலே உற்றார், உறவினர், நண்பர்களுடன் சங்கமிப்பதுதான்!

என்ன சரிதானே!


---------------மயிலாடன் அவர்கள் 30-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

12 comments:

நல்லதந்தி said...

//திராவிடர், ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவர் அனைவரும் ஓரினத்தவரே என்ற கருத்து அம்மாநாட்டிலேயே இன்றைக்கு 69 ஆண்டுக்கு முன்பே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.//

69 ஆண்டுகளுக்கு முன்பேயே ஆராய்ச்சி பண்ணி வெளிப்படுத்திட்டாங்களா?... அப்போ பகுத்தறிவை உபயோகப் படுத்தாமலே ஒத்துக் கொள்ள வேண்டியதுதான்!..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ அப்பா முடியலே!

குடுகுடுப்பை said...

திராவிடர் என்பது ஒரு இனம்.

இஸ்லாம்
கிறிஸ்தமெல்லாம் மேற்கு ஆசியாவில் உருவான மதங்கள். அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவர், அரபு நாட்டில் உள்ள முஸ்லீம் எல்லாம் திராவிடர்களா?

இனம் வேறு மதம் வேறு என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

தமிழ் நாடில் வசிக்கும் தமிழர்கள் அது கிறித்துவர்களாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும் ஆதிதிராவிடர்களாக இருந்தாலும் அனைவரும் ஒரே இனத்தவரே என்று பொருள்.

இங்கு இருந்த அம்மாவாசை தான் இழிவு ஒழிப்பதற்காக அப்துல் காதராக மதம் மாறிவிட்டார்.

இங்கு இருந்த அருக்கானி தான் இழிவு ஒழிப்பதற்காக ஆரோக்கிய மேரியாக மதம் மாறிவிட்டார்?

மதம் மாறிய வுடனேயே இஸ்லாமியர்,கிறித்துவர் என்ற பேத நிலை உண்டாகியது . அது சரியல்ல
என்று எடுத்துக் காட்டுவதற்காக
இங்கு இருக்கும் இஸ்லாமியரும் கிறித்துவரும், நேரே ஆப்கானிஸ்தானிலிருந்தும் ,பெத்தலகேமிலிருந்து குதித்தவர்கள் அல்ல.
நம்முடைய இனம் தமிழ் இனம் அனைவரும் ஓரினத்தவரே ,நமக்குள் பேத நிலை தேவையில்லை என்பதைக் குறிப்பிட்டு தீர்மானம் இயற்றினார்கள் குடுகுடுப்பை.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நல்ல தந்தி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்போட்டுக்கிட்டே இருக்கட்டும்

குடுகுடுப்பை said...

தமிழ்பேசும் அனைவரும் தமிழன் அவன் ஆரியன், திராவிடன் என்ற பேதம் எனக்கு கிடையாது.


ஒரு ஆரியத்தமிழர் கிறிஸ்தவராகவோ/முஸ்லீமாகவோ மாறினால் அவரும் திராவிடரா?

கபிலன் said...

அது தானே பார்த்தேன்...பிரித்து ஆள்வது தான் திராவிட இயக்கங்களின் நிலை என்று மறுபடியும் உறுதிபடுத்துகிறீர்கள் !
முன்பு பிராமணர் Vs பிராமணர் அல்லாதவர். இப்பொழுது இந்து Vs இந்து அல்லாதவரா. நடத்துங்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள். திராவிடனுக்கும், பெரியாரிசத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியத் தொடங்கிவிட்டன தோழரே!

தமிழ் ஓவியா said...

//தமிழ்பேசும் அனைவரும் தமிழன் அவன் ஆரியன், திராவிடன் என்ற பேதம் எனக்கு கிடையாது.//

உங்களின் பெருந்தன்மை புரிகிறது ஆனால் ஆரியனின் பெருந்தன்மை எப்படிப்பட்டது. இது குறித்து பேரறிஞர் அண்ணா தரும் விளக்கம் இதோ:-

தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழியில் பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டப் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய, சமஸ்கிருதத்தின்மீதுதான்

----(திராவிடநாடு 2.11.1947)

தமிழ் செம்மொழி ஆனால் எல்லாம் கிடைத்து விடுமா? என்று எகத்தாளம் பேசிய பார்ப்பன ஏடுகளையும் பார்ப்பனர்களையும் நினத்துப் பாருங்கள் உண்மை புரியும். உங்கள் அய்யம் நீங்கும். குடுகுடுப்பை.

ஒசமா பின்லேடன் தமிழ் பேசினால் தமிழன் என்று ஒப்புக் கொள்வீர்களா? குடுகுடுப்பை.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களை வெறுப்பது சரியா?

அண்ணா சொன்னார்!

1953-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பூதான இயக்கத் தலைவர் ஆச்சாரிய வினோபாவேயை சந்தித்தார்.

வினோபா: வேதியர்களை ஏன் வெறுக்க வேண்டும்? சர்ச்சிலுள்ள ஆண்டவனைத் தொழுது பூசை செய்யும் கிறித்துவ பாதிரியார் களைப் போன்றவர்களே இவர்களும்!

அண்ணா: அய்யா! வேதியரும் பாதிரியாரும் ஒன்றல்ல. அங்கே எவரும் பாதிரியாராக ஆகலாம் இங்கே யாரும் வேதியராக முடியாது

தமிழ் ஓவியா said...

அண்ணா பார்வையில் பார்ப்பனர்களின் குணம்



"ஆரியன் கூத்து காரியமின்றி நடவாது இந்து அரசர்கள் சிலர் சுதந்திரமிழந்தனரே தவிர ஆரியன் வாழ்வுக்குக் குறை ஏதும் வரவில்லை. யார் அழிந்தாலென்ன; கோட்டைகள் தூளானாலென்ன; தமது வாழ்விற்கு வழிகிடைத்தால் போதும் என்ற எண்ணம் ஆரியனின் மாற்ற முடியாத சுபாவம். சிறுத்தையின் புள்ளி மாறினாலும் இந்தச் சிலரின் வாழ்வுப் பற்று மாறாது பாம்பு சீறிட மறந்தாலும் இந்தப் பண்டாக்கள் தம் பண்பை மறவார்."

----------------------- "திராவிட நாடு" - 28.06.1942


"சிறுத்தையின் புள்ளி, செந்நாயின் வெறி, குரங்கின் குறும்பு, பூனையின் துடுக்கு குணம் போகாது என்பார்கள். ஆரியர்களின் குணாதிசியமும் அது போன்றதே."

---------------- "தேன் சுரக்கப்பேசி" கட்டுரை - 26.04.1942

குடுகுடுப்பை said...

வெளிநாடுகளில் தமிழைப்படிப்பவர்களும் , பேசுபவர்களும் பார்ப்பனர்களே அதிகம்.பார்ப்பனர்களோடு கொள்கை ரீதியான முரண்பாடுகளை களையவேண்டுமே தவிர வெறுப்பு அரசியல் ஒன்றுக்கும் பலன் தராது.
இதற்கும் நீங்கள் அந்தக்காலத்தில் பெரியார் சொன்ன பதிலைத்தருவீர்கள்.பெரியார் அன்றைக்கு செய்த கலகம் முற்றிலும் சரி. ஆனால் அதே முறையை இன்றைக்கு கையாள முடியாது, புதிய முறைகளை கண்டுபிடித்து சமத்துவம் காணுவது, அறிவினை பகிர்ந்து கொள்வதுதான் பகுத்தறிவு.
கருத்துக்கள் மாறிக்கொண்டேதான் இருக்கும். அது பகுத்தறிவின் பரினாம வளர்ச்சி.



ஒரு வட இந்தியன் உருது முஸ்லீம்/இந்து/கிறிஸ்தவன்/ தமிழ்நாட்டில் வசித்தால் நான் தமிழராக ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் எப்படி?

குலசேகரன் said...

//தமிழ்பேசும் அனைவரும் தமிழன் அவன் ஆரியன், திராவிடன் என்ற பேதம் எனக்கு கிடையாது. //

குடுகுடுப்பை,

சென்னையில் மார்வாடிகள் நன்றாகத் தமிழ் பேசி, எழுதி, வியாபாரம் பண்ணுவார்கள். அவர்கள் தமிழர்களா?

தமிழ்பேசுபவனெல்லாம் தமிழனல்ல.

தமிழை மனமாற நேசிப்பவன்; தமிழா வடமொழியா, என்றால் தமிழே என்பவன்; தமிழுக்காக போராடுபவன்; அல்லது போராளிகள ஊக்குவிப்பவன் - இவர்களே தமிழர்கள்.

தமிழ்பார்ப்பனர்கள் சமசுகிருதத்தையே முதலில் வைத்து அம்மொழிககாக இன்றும் போராடுபவர்கள். தமிழர்கள் அல்ல. அன்னியர்கள்.

தமிழ் ஓவியா said...

//பார்ப்பனர்களோடு கொள்கை ரீதியான முரண்பாடுகளை களையவேண்டுமே தவிர வெறுப்பு அரசியல் ஒன்றுக்கும் பலன் தராது.//

குடுகுடுப்பை இன்று வரை தாங்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்காக பார்ப்பனர்கள் ஆவணிஅவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப்பித்து வருகிறார்கள் .

பார்ப்பனர் சங்கங்கள் ஒன்று கூடி இதுதான் கடைசியாக பூணூலைப் புதுப்பிக்கும் ஆவணி அவிட்டம் கொண்டாடியது. அடுத்த ஆண்டு முதல் அதை கொண்டாட மாட்டோம் என்று அறிவிப்பார்களா? கேட்டுச் சொல்லுங்கள் குடுகுடுப்பை.

வெறுப்பது நாங்களா? பார்ப்பனர்களா?

அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசு அறிவித்தும் பயிற்சி கொடுத்தும் அனைத்துச் ஜாதி மக்களும் ஒத்துக் கொண்டபோது பார்ப்பனர்கள் மட்டும் வழக்குத் தொடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்களே

வெறுப்பது நாங்களா? பார்ப்பனர்களா?

இது போல் பல இருக்கிறது.

குறைந்தது இந்த பூணூல் போடுவதையாவது அடுத்த ஆண்டு முதல் நிறுத்திவிடுவோம் என்ற உறுதி மொழியைப் பார்ப்பன சங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுங்கள் குடுகுடுப்பை

எங்களுக்கு இழிவு ஒழிந்தால் போதும் சக மனிதனாக மதிக்கப்பட்டால் போதும் குடுகுடுப்பை

செய்வீர்களா?

முரண்பாடுகளை களைய நாங்கள் தயார். பார்ப்பனர்கள் தயாரா?

கேட்டுச் சொல்லுங்கள் குடுகுடுப்பை.

உங்கள் மூலமாவது விடிவு பிறக்கட்டும்

நன்றி

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
காளவாசல்