Search This Blog

28.9.09

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் - ஈரம் கசிந்த தீர்மானம்


ஈரம் கசிந்த தீர்மானம்

ஈழத்தில் தமிழர்கள் திட்டமிட்ட முறையில் கொடுமைப்படுத்தப்படும் நிலையைப் பார்த்தவர்களுக்கு அறிவார்ந்தவர்களுக்கு உணர்ந்தவர்களுக்குத்தான், காஞ்சிபுரம் விழாவில் தி.மு.க. நிறைவேற்றிய எட்டாவது தீர்மானத்தின் அருமை என்னவென்று புரியும் அதன் அவசியத்தையும் உணர முடியும்.

அரச பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை ஏட்டளவில் படித்தவர்கள், நிதர்சனமாகத் தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை சிங்கள அரசு தங்கத் தாம்பாளத்தில் வைத்து உலகத்திற்கே பிரகடனப்படுத்தி விட்டது என்றே கருதவேண்டும். இந்தச் செயலுக்காக அது கூச்சப்படவில்லை கூனிக் குறுகிடவும் இல்லை.

சிங்களப் பேரினவாத அரசின் இந்தக் குரூர செயல்பாடுகளுக்குப் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்கக்கூடிய ஒரு கூட்டம் இருக்கிறது என்றால், அது உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடிய பார்ப்பனர்கள்தான் அவர்களின் கைகளில் குவிந்திருக்கும் ஊடகங்கள்தான்.

ஈழத்தில் தமிழர்களின் அவல நிலையைச் சுட்டிக்காட்டுவது சிங்களப் பத்திரிகையாளராகவிருந்தாலும் கூட அவர்களின் கழுத்துகளையும் சீவி எறிந்திட சற்றும் தயங்கிடவில்லை. இட்லரை இரு நூறு மடங்கு பெருக்கினால் கிடைக்கும் கூட்டுத் தொகையான மகிந்த ராஜபக்சே!

பல லட்சம் மக்களை முப்படை கொண்டும், வெளிநாட்டு இராணுவ உதவிகள் கொண்டும் கொன்று குவித்தும் இன்னும் தாகம் அடங்கவில்லை இந்த அதிபருக்கு.

முள்வேலி முகாமுக்குள் மக்களை முடக்கி, அவர்கள் நொடிதொறும், நொடிதொறும் அனுபவிக்கும், துடிக்கும் அவலங்களைக் கண்டு ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார் இந்த இடிஅமீன்.

உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்துப் பார்த்துவிட்டன. ஒப்புக்காவது அய்.நா.மன்றமும் வேண்டுகோள் விடுத்துப் பார்த்தது.

இன்னும் சொல்லப்போனால், இலங்கையின் தலைமை நீதிபதியான சரத் என் சில்வாவே முகாமில் முடங்கிக் கிடக்கும் ஈழத் தமிழர்களின் நிலையைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்தார். அதன் அவலத்தை ஒரு நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைத்த விழாவிலேயே எடுத்துக் கூறினார். இந்த உண்மைகளைக் கூறுவதால், தாம் தண்டிக்கப்படலாம் என்று தலைமை நீதிபதியே அச்சப்பட்டுக் கூறும் அளவுக்கு அங்கு நிலைமைகள் நெருப்பாய்த் தகிக்கின்றன!

இன அழிப்பு என்கிற சூரசம்ஹாரங்கள் நாளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அங்கு நிலவும் பரிதாபகரமான நிலையை என்னால் விளக்க முடியவில்லை. ஈழத் தமிழர்கள் கடுமையான மன அழுத்தத்திலும், விவரிக்க முடியாத துயரத்திலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உடல் கழிவை வெளியேற்றுவதற்குக்கூட நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். அவர்களைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. அவர்களிடம் எனது உணர்வுகளைத் தெரிவிக்க முயன்று தோற்றுப் போனேன். அவர்களின் துயரத்தைக் கண்டு நாங்களும் அழுகின்றோம் என்று கூற முயன்றேன், முடியவில்லை என்று மனந்திறந்து ஒரு தலைமை நீதிபதியே (அவரும் சிங்களவர்தான்) மனம் வெடிக்கிறார் என்றால், இன்னும் சாட்சிகளைத் தேடிச் செல்ல வேண்டுமா?

இந்த நிலையில் உலகம் முழுவதும் ஏதிலிகளாகச் சிதறிக் கிடக்கின்ற ஈழத் தமிழர்கள் மீண்டும் தங்கள் தாயகம் திரும்பவேண்டும் என்பதை மனதளவில் நினைத்துப் பார்க்கவே பயந்து சாகும் நிலைதான் இருந்து வருகிறது.

உள்நாட்டில் வாழும் தமிழர்களே தங்களின் சொந்த ஊர்களுக்கு சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை இருக்கும்போது, வெளிநாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள், ஈழம் திரும்ப எப்படித்தான் எண்ணிப் பார்ப்பார்கள்?

இவற்றையெல்லாம் மனிதநேயக் கண்ணோட்டத்தில் நெஞ்சில் கசியும் ஈர உணர்வோடு காஞ்சிபுரம் முப்பெரும் விழாவில் இறுதித் தீர்மானமாக ஒரு முத்தாய்ப்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க.வின் பொருளாளர் துணை முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் மூலமாக அத்தீர்மானத்தின் முக்கியத்துவம் கருதி முன்மொழியச் செய்யப்பட்டுள்ளது.

நிறைவுரையாற்றிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அந்த எட்டாவது தீர்மானத்தைத்தான் முதல் முக்கிய தீர்மானமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஏதிலிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் எண்ணத்திற்கு மாறாக, அவர்களை இந்தியாவிலேயே நிரந்தரக் குடிமக்களாக அமர்த்தும் வகையில் இந்திய அரசு சட்ட ரீதியான வகையில் முடிவெடுக்கவேண்டும் என்ற அந்த வேண்டுகோள் தீர்மானம் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மனிதாபிமானிகள், மானிட உரிமை ஆர்வலர்கள் அனைவராலும் இருகரம் கூப்பி வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.

இத்தீர்மானம் குறித்து முதலமைச்சர் அவர்கள் கருத்துகள் கூறியபோது, என்னையே நான் கேட்டுக்கொண்டிருக்கும் தீர்மானம் என்று குறிப்பிட்டதன்மூலம் இந்தத் தீர்மானத்தின் சகல பரிமாணங்களையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

உலகம் முழுவதும் ஒரு பேரலையை இந்தத் தீர்மானம் உருவாக்கும். இந்திய அரசு மிகவும் கருத்தூன்றிச் செயல்படுத்தவேண்டிய தீர்மானம் இது.

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்திய அரசின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கக் கூடியவைகளாகவே இருந்து வந்திருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் கழுவாயாக தி.மு.க. தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும்! கொடுக்கவேண்டும்!! கொடுக்கவேண்டும்!!!

உலகமே இதனை எதிர்பார்க்கிறது, அலட்சியம் வேண்டாம்!

-------------------நன்றி:-"விடுதலை"தலையங்கம் 28-9-2009

5 comments:

சுதாகர் said...

தங்களுக்கு மந்திரி பதவி வேண்டும்-னா மட்டும் டில்லியில் 3 நாள் டேரா போட்டு காத்திருப்பாங்க.

மத்ததுக்கு, அறிக்கை, கடிதம், தந்தி, தீர்மானம், பேட்டி அவ்ளோதான்... அதுக்கு மேல ஒரு துறும்பு கூட நகராது.

ம்ம்ம்... எல்லாம் அரசியலுப்பா (கேட்டா அந்த கட்சி என்ன பண்ணிச்சி? இந்த கட்சி தலைமை என்ன சொல்லுச்சின்னு நானே கேள்வி-நானே பதில் தான் வரும்.)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அப்படியா!?

வியப்பாக மட்டும் இல்லை.

நகைச்சுவை ததும்பக்கூடிய தீர்மானம்!

இதிலிருந்து ஒன்று தெரிகிறது!

இனமானம் தேவையில்லை அல்லது இல்லாவிட்டாலும் பரவாயில்லை!

தீர்மானம் இருந்தால் போதுமென்று!

Unknown said...

i tagree mr jothi barathi comment.karunanidi next plan is t cver tamil people in various countries so,that he told world tamil meeting but evry body opposedit.so h started the next move.

Suresh Kumar said...

சட்ட மன்றத்தில போட்ட தீர்மானத்தையே நிறைவேற்ற தெரியாத கையாலாகாத முதல்வரை என்ன சொல்ல ?

www.mdmkonline.com said...

ஆம் தீர்மானம் போட்டாகிவிட்டது.. இனி கவலை இல்லை எல்லா ஈழ தமிழனும் நிம்மதி பெற்று விடுவான்.. !!!

இன்னும் எத்தனை வடிவில் ஈழ துரோக நாடகங்களை நடத்த போகிறார்களோ

கருணாநிதிக்கு ஈழ தமிழனை பற்றி எப்போதும் நல்லதாய் சிந்திக்க வராது.. அவர் செய்யும் எதுவும் நாடகம்தான்..
www.mdmkonline.com