Search This Blog

15.9.09

வாழ்க அறிஞர் அண்ணா!


அண்ணா வாழ்க!

இன்று அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா. தந்தை பெரியார் அவர்களின் சீடராக திராவிடர் இயக்கச் சித்தாந்தத்துக்குள் அடிபதித்த அண்ணா அவர்கள் தன் இறுதி மூச்சு அடங்கும்வரை அந்தத் தத்துவத்திலிருந்து விலகினார் இல்லை.

இடையில் தந்தை பெரியார் அவர்களை விட்டு அவர் பிரிந்திருந்தார்; அரசியல் கட்சி கண்டார் என்பதெல்லாம் உண்மைதான் என்றாலும், எந்த நிலையிலும் தான் வரித்துக்கொண்ட பகுத்தறிவுத் தடத்திலிருந்தும் சறுக்கினவர் இல்லை.

ஆட்சிப் பொறுப்பேற்று குறுகிய காலத்தில்தான் கடமையாற்ற வாய்ப்பினைப் பெற்றார் என்றாலும், அந்தக் குறுகிய காலத்தில் நெடுநாள் ஆட்சி புரிந்தோர் ஆற்ற முடியாத வரலாற்றுச் சாதனைகளைக் கல்வெட்டாகச் செதுக்கினார் என்பதை மறுப்பார் உண்டா?

அந்த முத்தாய்ப்பான மூன்று சாதனைகள்கூட தாம் நாணயமாக ஏற்றுக்கொண்ட திராவிடர் இயக்கச் சித்தாந்தத்தின் செயல்பாடுகள்தாம்.

சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டல். சுயமரியாதைத் திருமணத்துக்குரிய சட்ட ரீதியான அங்கீகாரம், தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை; இங்கு இரு மொழிதான் என்ற அறிவிப்பு
. எண்ணிப் பார்க்கையில், இன்னும் ஆட்சியில் தொடர்ந்திருக்கக் கூடாதா _ அறுபது ஆண்டு நிறைவதற்கு முன்பே காலம் அவரைக் கொத்திக் கொண்டு போயிற்றே என்று நெஞ்சம் கனக்கிறது.

அவர் மாநிலங்களவை உறுப்பிரனாக ஆன நிலையிலும் தான் யார் என்பதை அழகிய ஆங்கிலத்தில் பதிவு செய்தாரே!

நான் திராவிட மரபு வழியைச் சேர்ந்தவன். நான் என்னைத் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இதற்குப் பொருள்_ நான் ஒரு வங்காளிக்கோ அல்லது மராட்டியனுக்கோ அல்லது குஜராத்திக்கோ எதிரானவன் என்பதல்ல. ராபர்ட் போன்ஸ் குறிப்பிடுவதுபோல, என்னவாக இருந்தாலும் மனிதன் மனிதன்தான்! திராவிடர்களிடம் திண்ணியமானதும், தனித்தன்மை பெற்றதும், வித்தியாசமானதுமான ஒன்று நாட்டிற்கு வழங்குவதற்கு இருக்கிறது என்பதுதான். நான் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதற்கான ஒரே காரணமாகும் (1962, ஏப்ரல்) என்று எவ்வளவு கம்பீரமாக தன் அடையாளத்தை திராவிடர் இயக்க உணர்வோடு அண்ணா அன்று பேசினார். அவருடைய உரையை பிரதமர் நேரு உள்ளிட்ட அனைவரும் உன்னிப்பாகக் கேட்டனரே!

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் தி.மு.க. கண்ட நிலையிலும்கூட, ஜாதி ஒழிப்புக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த நேரத்தில், அதற்குத் தண்டனை தரும் வகையில் மூன்றாண்டுவரை கடுங்காவல் தண்டனை அளிக்கும் ஒரு சட்டத்தை தமிழ்நாட்டில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டபோதுகூட, தாம் தந்தை பெரியாரிடமிருந்து விலகியிருக்கிறோம் _ திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்துவிட்டோம் என்கிற குரோத உணர்வுக்கு ஆட்படாமல், தந்தை பெரியார் போராட்டத்தை ஒடுக்கவேண்டும் என்பதைவிட அவர் என்ன காரணத்துக்காக இந்தப் போராட்டத்தை நடத்தும் நிலைக்கு ஆளானார் என்பதை ஆளவந்தார் சிந்திக்கவேண்டும் என்றுதானே சட்டப்பேரவையில் முழங்கினார்.

18 ஆண்டுகாலம் அய்யாவைப் பிரிந்த அண்ணா, ஆச்சாரியாரோடு தேர்தலில் கூட்டணி சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சிப் பீடம் ஏறிய அண்ணாவின் கண் பஸ்சுல்லா சாலையை நோக்கவில்லை; மாறாக பல நூறு கல்தொலைவில் உள்ள திருச்சி பெரியார் மாளிகையைத்தானே துழாவியது.

காரணம், அவர் கண்ட கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார். அவர் கண்ட ஆட்சியை, தமது தலைவர் தந்தை பெரியார்க்கே காணிக்கையாக்கிய கொள்கையாளர்.

பெரியார் பெயரை உச்சரிப்போர், திராவிடர் இயக்க முத்திரையை முன்னொட்டாகப் பொறித்திருப்போர் வரலாம் போகலாம். ஆனால், அண்ணா அவர்கள் போதித்த பாடம் என்பது, தந்தை பெரியார் சிந்தனை வழிபட்ட திராவிடர் இயக்க சுயமரியாதைப் பாதையாகும்.

அதனைத்தான் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நமது ஆணிவேர் என்பது தன்மான இயக்கம் என்று பிரகடனப்படுத்தியுள்ளார்.

அந்த உணர்வு மேலும் மேலும் தழைக்க இன உணர்வு கொப்பளிக்க பகுத்தறிவுச் சிந்தனையே அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவோம். இளைய தலைமுறைக்கு இந்த உணர்வுகளை ஊட்டிடத் திட்டமிடுவோம். அதுதான் அறிஞர் அண்ணாவுக்கு நாம் காட்டும் உயர்ந்தபட்ச மரியாதையாக இருக்க முடியும்.

வாழ்க அறிஞர் அண்ணா!

--------------------"விடுதலை"தலையங்கம் 15-9-2009

3 comments:

பித்தனின் வாக்கு said...

அண்ணா என்ன என்ன திட்டங்கள் (காமராஜர் போல்) என்பதை பட்டியல் இடுங்கள், அதை விட்டு வெற்றுகதைகளை(மேடையில் போசுவது) பதிவில் இடாதீர்கள்.படிக்கும் ஈங்களுக்கு நேரம் விரயம். எங்களுக்கு அண்ணா அவர்கள் ஆற்றிய பணிகள் எதுவும் தெரியாது.அதை பற்றி எளுதினால் நல்லா இருக்கும்.

பித்தனின் வாக்கு said...

// மனிதன் மனிதன்தான்! திராவிடர்களிடம் திண்ணியமானதும், தனித்தன்மை பெற்றதும், வித்தியாசமானதுமான ஒன்று நாட்டிற்கு வழங்குவதற்கு இருக்கிறது என்பதுதான். நான் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதற்கான ஒரே காரணமாகும் (1962, ஏப்ரல்) என்று எவ்வளவு கம்பீரமாக //
கடைசீ வரைக்கும் அந்த ஒன்னு என்னனு சொல்லலையா? அப்படி சொல்லியிருந்தார்னா அந்த ஒன்னு என்ன? இன்னும் அது இருக்குதா? தெழரே.

பித்தனின் வாக்கு said...

இன்று அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா. தந்தை பெரியார் அவர்களின் சீடராக திராவிடர் இயக்கச் சித்தாந்தத்துக்குள் அடிபதித்த அண்ணா அவர்கள் தன் இறுதி மூச்சு அடங்கும்வரை அந்தத் தத்துவத்திலிருந்து விலகினார் இல்லை.

இடையில் தந்தை பெரியார் அவர்களை விட்டு அவர் பிரிந்திருந்தார்; அரசியல் கட்சி கண்டார் என்பதெல்லாம் உண்மைதான் என்றாலும், எந்த நிலையிலும் தான் வரித்துக்கொண்ட பகுத்தறிவுத் தடத்திலிருந்தும் சறுக்கினவர் இல்லை.

//ஆட்சிப் பொறுப்பேற்று குறுகிய காலத்தில்தான் கடமையாற்ற வாய்ப்பினைப் பெற்றார் என்றாலும், அந்தக் குறுகிய காலத்தில் நெடுநாள் ஆட்சி புரிந்தோர் ஆற்ற முடியாத வரலாற்றுச் சாதனைகளைக் கல்வெட்டாகச் செதுக்கினார் என்பதை மறுப்பார் உண்டா?//

//சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டல். சுயமரியாதைத் திருமணத்துக்குரிய சட்ட ரீதியான அங்கீகாரம், தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை; இங்கு இரு மொழிதான் என்ற அறிவிப்பு.//
சென்னை மானிலத்துக்கு கழுதை என்று பொயர் வைத்து இருந்தால் கூட இன்னிக்கு இருக்கர மாதிரிதான் இருக்கும், அது என்ன சிங்கப்பூர் அல்லது நியுயார்க் மாதிரியா மாறும்? (மக்கள் மாறவேண்டும்).
எப்படி கல்யாணம் பன்னா என்ன நல்லா குடும்பம் நடத்த வேண்டும், அதான் முக்கியம்.

இருமொழி கொள்கை மட்டும் இல்லாமல் ஹிந்தியை விருப்பப்பாடமாக அனுமதித்து இருந்தால் தமிழ் நாடு இதை வீட இன்னமும் மும்பைக்கு இணையாக முன்ணேறி இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.