Search This Blog
9.9.09
ஆத்திக உலகிற்கும் வழிகாட்டிய நாத்திகத் தலைவர் பெரியார்!
தேவத்தானக் கமிட்டியின் செயலாளராகவும் தலைவராகவும் பெரியார் பொறுப்பேற்றிருந்த பொழுது சாத்தானி இனத்தாரைக் கோயில் பூசை செய்வதற்கு நியமித்திருக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதியாகவே தேவத்தானக் கமிட்டிப் பொறுப்புகளை ஏற்றிருந்தாலும், தம் சொந்தக் கொள்கைகளைப் பொதுப் பணிக் களங்களில் நுழைத்துக் கெடுக்கும் அநாகரிகப் போக்கு அவரிடம் இல்லை.
ஈரோடு மட்டிலுமல்லாமல், பவானி, திருப்பூர், கோபி வட்டங்களுக்கான தேவத்தானக் கமிட்டிகளுக்கும் பெரியார் ஒருவரே தலைவர் பொறுப்பு வகித்துச் சிறப்புடன் பணி செய்திருக்கிறார். பெரியாரின் முயற்சியிலும் முன்னேற்றத்திலும் பொறாமை கொண்ட எதிரிகள் `ஈ.வெ.ரா. ஒரு நாத்திகர்; அவர் கடவுள் மத சம்பந்தப்பட்ட குழுக்களில் பொறுப்பு வகிப்பது கூடாது’ என்று அரசுக்குப் புகார் எழுதித் தெரிவித்தனர். கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் இப்புகார் அறிக்கையைக் கண்டு வியந்தார்.
பெரியார் நாத்திகராகவும், கடவுள் மத நம்பிக்கை யற்றவராகவும் தனிப்பட்ட முறையில் தோன்றினாலும், அவர் அப்பொறுப்பை ஏற்றதால் எந்த விதத்திலும் அதற்கு அவமதிப்பு ஏற்படாத வகையிலேயே பொதுப் பணி நடத்தி வருவதை மாவட்ட ஆட்சித் தலைவரும் நன்கு உணர்ந்திருந்தார். அதனால் பெரியார் மீது சிலர் குறிப்பிட்ட புகாருக்கு ஆட்சித் தலைவர் செவி சாய்க்கவில்லை.
பின்பு ஒரு முறை பெரியார் அவர்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் `நீர் நாத்திகரா?’ என்று வினவினார். `ஆம்’ என்று பெரியாரும் ஒப்புக் கொண்டார். `இந்துதானே’ என்று விசாரித்துவிட்டுச் சும்மா இருந்து விட்டார் ஆட்சித்தலைவர். கோயில் நிர்வாகப் பொறுப்பேற்றுப் பெரியார் செய்த பணிகள் அவரை நாத்திகரா, ஆத்திகரா என்று பகுத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாமல், அவருடைய ஒத்துழைப்பு மிகவும் தேவையே என்று மற்றவர்களைக் கருதுமாறு செய்துவிட்டன.
-----------------------"இவர்தாம் பெரியார்" என்ற நூலிலிருந்து
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
பைசா கொடுத்தால், அர்ச்சனை செய்ய கூட வாய்ப்புகள் உண்டு!
Post a Comment