Search This Blog

7.9.09

பெண்கள் தாலி அணியவில்லை என்றால் திருமணம் ஆகாதவர்களா?


தாலிபற்றிய இரு செய்திகள்

தமிழ்நாட்டுப் பெண்கள் அணியும் தாலிபற்றி இரு செய்திகள் வெளிவந்துள்ளன.
விருதுநகரைச் சேர்ந்த கண்மணி தாக்கல் செய்த ரிட் மனுவில்,
நான் சென்னை பல் மருத்துவ கல்லூரியில் பி.டி.எஸ். படித்து வருகிறேன். எனக்கு இந்து ஆதிதிராவிடர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

என் ஜாதி சான்றிதழின் உண்மை நிலை குறித்து மருத்துவக் கல்லூரி டீன் சந்தேகம் எழுப்பினார். இதுகுறித்து, விசாரித்து அறிக்கை வழங்கும்படி மாவட்ட ஜாதி சரிபார்ப்பு குழுவை கேட்டுக்கொண்டார். 2008 மே 13 இல் என் ஜாதி குறித்து சரிபார்ப்பு குழு விசாரணை நடத்தியது.

என் பெற்றோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஏற்கெனவே உதவி கலெக்டர் விசாரித்து, எனக்கு இந்து ஆதிதிராவிடர் என ஜாதி சான்றிதழ் வழங்கினார். இருப்பினும், சரிபார்ப்பு குழு, என் தாயின் தாலி செயினில் இந்து கடவுள் படம் இல்லை எனக் கூறி, என் ஜாதி சான்றிதழை ரத்து செய்தது.

அதை ரத்து செய்து எனக்கு ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடவேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், துரைசாமி கொண்ட பெஞ்ச், தாலி செயினை வைத்து ஜாதியை முடிவு செய்யக்கூடாது. தாலி செயினில் கடவுள் படம் இருக்கவேண்டியது அவசியம் இல்லை. இதுகுறித்து சரிபார்ப்பு குழு, முதலில் விழிப்புணர்வு பெறவேண்டும்.
மனுதாரர் மனுவை ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பு குழு நான்கு வாரங்களுக்குள் விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றது.

தாலியை வைத்துதான் ஜாதியை அடையாளம் காணவேண்டும் என்று ஓர் அதிகாரி நினைக்கிறார் என்றால், அது அவரின் பிற்போக்குத்தன்மையையும், தமிழ்நாட்டு மண்ணின் நடைமுறையையும் அறியாத பொது அறிவுகூட இல்லாதவர் என்றுதான் முடிவுக்கு வரவேண்டும்.


தமிழ்நாட்டில் தாலியே அணியாமல் திருமணம் செய்துகொள்ளும் லட்சோப லட்சம் சுயமரியாதைக்காரர்கள், கருப்புச் சட்டைக்காரர்கள் இருக்கிறார்களே, அவர்கள் வீட்டுப் பிள்ளைக்கு இதுபோன்ற அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்கமாட்டார்களா? இட ஒதுக்கீடு மீது கோபம் கொண்டவர்கள் எதையாவது காரணம் காட்டி தள்ளுபடி செய்யும் ஒரு வேலையில் இறங்குகிறார்கள் என்பதுதான் இதன் உட்பொருளாகும்.

இன்னொரு சேதி- தொலைக்காட்சிகளில் செய்திகள் வாசிக்கும் பெண்கள் தாலி அணிவதுபற்றியதாகும்.

திருமணம் ஆன பெண்கள்கூட தாலியைக் கழற்றி வைத்துவிட்டுதான் செய்தி வாசிக்கிறார்கள் என்றும், சில பெண்கள் தங்களின் தாலியை மறைத்துக்கொள்கிறார்கள் என்றும், இது இந்தியக் கலாச்சாரத்துக்கு விரோதம் என்றும் பிரச்சினையை சூடாக்குகிறார்கள்.ஏடுகள் எழுதவும் செய்கின்றன.

நெற்றிப் பொட்டிட்டு பட்டுச்சேலை கட்டி லட்சுமிகரமாக தோற்றமளிப்பதுதான் தமிழச்சிகள் அடையாளமாம். இதை நேயர்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

பெண்கள் தாலி அணியவில்லை என்றால், அவர்கள் திருமணம் ஆகாதவர்கள்; இளமையானவர்கள் என்ற நினைப்பு நேயர்களுக்கு ஏற்படுகிறதாம். இது இன்னொரு சாராரின் எதிர்பார்ப்பு!

ஆக, எதற்கும் கவர்ச்சி தேவைப்படுகிறது என்கிற கீழான பொருள் இதில் புதைந்து கிடக்கிறது.
செய்தியைப் புரியும்படிச் சொல்கிறார்களா? தமிழைக் கொலை செய்யாமல் சொல்கிறார்களா என்பதெல்லாம் முக்கியமில்லை; மாறாக, பெண்ணின் தோற்றம், உடை, தாலி இது போன்றவைகளுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதெல்லாம் பெருமைக்குரியதுதானா?

ஒரு பெண் திருமணம் ஆனவரா? இல்லையா? என்பது தனிப்பட்ட அந்தப் பெண்ணின் பிரச்சினை. அதில் தலையிட அடுத்தவருக்கு உரிமை எங்கிருந்து வந்தது? ஒரு பெண் திருமணம் ஆனவரா? என்று தெரிந்துகொள்ள மற்றொரு ஆண் ஏன் விரும்புகிறார்? அந்த விருப்பத்திலேயே ஒழுக்கம் இல்லையே!

பெண்ணுக்குத் திருமணம்பற்றி அக்கறை செலுத்துவோர், ஓர் ஆண் திருமணம் ஆனவரா? இல்லையா? என்பதற்கு என்ன அடையாளம்?

திருமணம் ஆன ஆணின் நுனி மூக்கைக் கொஞ்சம் வெட்டிக் கொள்ளச் சொல்வார்களா? அல்லது ஆண்களும் ஒரு தாலியைக் கட்டிக் கொண்டு, சட்டைக்கு வெளியிலே தொங்கவிடவேண்டும் என்று வற்புறுத்துவார்களா?

ஆணின் உடைமை பெண் என்பதற்கு அடையாளம்தானே இந்தத் தாலி? இந்தத் தாலி என்ற ஒன்றுக்கு திரைத்துறையினரும், எழுத்தாளர்களும் கொடுக்கும் மூடத்தனமான உணர்வுகள் (செண்டிமென்ட்) கொஞ்சமா, நஞ்சமா?

கணவன் என்ன கொடுமை செய்தாலும் ஒரு பெண் சகித்துக் கொள்வது. மஞ்சள் கயிறான தாலிக்கே என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது?

பெண்கள்பற்றி இப்படிப் பிரச்சினைகளை எழுப்புவதெல்லாம் பெரும்பாலும் இந்த ஆண்களே! இந்த நேரத்தில் பெண்கள் முன்வந்து அதிரடியாக பதிலடி கொடுக்காதவரை, ஆண்கள், பெண்கள் பிரச்சினையில் மூக்கை நுழைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

------------------"விடுதலை"தலையங்கம் 22-9-2009

2 comments:

சுரேஷ்குமார் said...

//ஒரு பெண் திருமணம் ஆனவரா? இல்லையா? என்பது தனிப்பட்ட அந்தப் பெண்ணின் பிரச்சினை. அதில் தலையிட அடுத்தவருக்கு உரிமை எங்கிருந்து வந்தது? ஒரு பெண் திருமணம் ஆனவரா? என்று தெரிந்துகொள்ள மற்றொரு ஆண் ஏன் விரும்புகிறார்? அந்த விருப்பத்திலேயே ஒழுக்கம் இல்லையே!//

பிறர் மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்பதுதான் நமது கலச்சாரம்.எனவேதான்
பெண்கள் தாலி அணிய வேண்டும்.
ஒழுக்கத்துடன் இருக்கதான் தாலி இருக்கா என்று ஆடவர்கள் கேட்கிறார்கள்.

//பெண்ணுக்குத் திருமணம்பற்றி அக்கறை செலுத்துவோர், ஓர் ஆண் திருமணம் ஆனவரா? இல்லையா? என்பதற்கு என்ன அடையாளம்?
//

ஆண்கள் காலில் மெட்டி அணிய வேண்டும்.நாகரிகம்,பகுத்தறிவு என்று நாம் தான் அந்த அடையாளத்தை தொலைத்து விட்டோம்.

இது என்னுடைய கருத்து.

நம்பி said...

Blogger சுரேஷ்குமார் said...
//பிறர் மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்பதுதான் நமது கலச்சாரம்.எனவேதான்
பெண்கள் தாலி அணிய வேண்டும்.
ஒழுக்கத்துடன் இருக்கதான் தாலி இருக்கா என்று ஆடவர்கள் கேட்கிறார்கள்.//

அப்ப, தாலி இல்லாத பெண்களை கண்டமேனிக்கு நோக்கலாம்...ஆனால் இப்ப களி திங்கணுமே...ஆடவர்கள் கேட்கிறார்களோ! இல்லையோ சட்டம் கேட்கும்! முட்டிக்கு முட்டி தட்டிடும்.

Blogger சுரேஷ்குமார் said...

//ஆண்கள் காலில் மெட்டி அணிய வேண்டும்.நாகரிகம்,பகுத்தறிவு என்று நாம் தான் அந்த அடையாளத்தை தொலைத்து விட்டோம்.

இது என்னுடைய கருத்து.//

அந்த நாகரிகம், பகுத்தறிவு எல்லாப் பெண்களுக்கும் இருக்குமே! அவர்களும் தாலியை அணியாமல் இருக்கமுடியுமே! அதை தடுக்க எவருக்கும் உரிமையில்லையே!