இதிகாச காலத்திலும் புராண காலத்திலும்- வெள்ளையர் ஆட்சியில் நாடு முழுவதும் கல்விக் கூடங்கள் முறையாக அமைக்கப்பட்ட காலத்திலும்- குருகுலங்கள் இருந்திருக்கின்றன!
இதிகாச காலத்து, புராண காலத்து குருகுலங்கள் ஒழுக்கக் கேட்டிற்கும் - ஜாதி ஆதிக்கம் - சமூகத்தின் கடைக்கோடிப் பிரிவினருக்குக் கொடுமை இழைத்தல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்திருக்கின்றன! வெள்ளையர் ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் என்று அறியப்பட்ட வ.வே.சு. அய்யர் நடத்திய குருகுலம் போன்றவையும் ஜாதி பேதம் வளர்ப்பனவாகவும் உயர் ஜாதிக்காரனுக்குத் தனிப் பந்தி, மற்றவர்களுக்கு வேறு பந்தி என்று வித்தியாசம் காட்டி - அவமதிப்பின் - ஜாதித் துவேஷத்தின் அடையாளமாகவே செயல்பட்டு வந்ததையும் வரலாறு பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கிடையிலும் -
குருகுலம் என்றால், - பகுத்தறிவுப் பாசறை; கட்டுப்பாடு, சிக்கனம், வாழ்க்கையில் எக்காலத்திலும் குருகுலத்தில் பயின்றவர்களுக்கு முன்னேற்றம்தானே தவிர - பின்னடைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிற அளவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக ஒரு குருகுலம் எக்காலத்திலும் நினைவை விட்டு நீங்காததாக - மறக்க முடியாததாக அமைந்தது என்றால் அது ஈரோட்டுக் குருகுலம் ஒன்றுதான்!
ஈரோட்டுக் குருகுலத்தில் பயின்று - அதாவது அந்தப் பகுத்தறிவுப் பல்கலைக் கழகத்தின் குருவாகத் திகழ்ந்த பேராசான் பெரியாரிடம் நேரடியாகவே பழகி, பயின்று, குருகுலத்தின் பெருமைக்கே அடையாளமாக விளங்குகின்ற மூன்று பேர் உண்டு என்றால் அவர்கள்,
அண்ணா
கலைஞர்
வீரமணி
ஆகியோர்தாம்!
ஈரோட்டு குருகுலம் என்ற பெயரையே நாட்டு மக்களிடம் நாள்தோறும் சொல்லிப் பிரபலப் படுத்தியவர்கள் இந்த மூவருமே!
அய்யாவிடம் ஈரோட்டிலேயே தங்கி அவரது நேரடி மேற்பார்வையில் பயின்றவர்கள் என்ற பெருமைக்குரியவர்களாக இந்த மூவர் இருப்பினும் இவர்களுக்கு முன்பே - இவர்கள் காலத்திலேயே பெரியாரோடு நெருங்கிப் பழகி - அவரோடு தோளோடு தோள் இணைந்து பணியாற்றியவர்கள் பல பேருண்டு! இயக்க வரலாற்றை நன்கறிந்தவர்களைக் கேட்டால்,
- பெரியாரிடம் பிணக்கு ஏற்பட்டு
அவரிடமிருந்து பிரிந்து போனவர்கள்
- அவரை எதிர்த்துப் பார்த்தவர்கள்
- தனிக்கட்சி நடத்தியவர்கள்
என்று ஒரு பெரிய பெயர் பட்டியலையே வெளியிட்டுக் காட்டுவார்கள்.
அவர்களும் இயக்கத்தின் தொடக்கம் முதல் ஒரு காலகட்டம் வரையில் தங்களது அறிவு, ஆற்றல், தொண்டு ஆகியவற்றால் - அய்யா அவர்களுக்குத் துணை நின்று - இயக்க வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் கள்தாம் என்பதால் - அவர்களது பெயர் பட்டியலை இங்கே வெளியிட வேண்டிய அவசியமில்லை.
ஒரே ஒரு உதாரணம் -
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்! இவர் பெரியாரின் நம்பிக்கைக்குரிய தளபதியாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்களில் ஒருவர். ஒரு கட்டத்தில் பெரியாரோடு இவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெரியாரை விட்டு விலகி வெளியேறினார்!
பெரியாரைக் கண்டித்து, காட்டமாக, காரசாரமாக கண்டித்து அறிக்கைகள் விட்டார். அத்தோடு நின்றாரா?
பெரியாரின் இயக்கம் போகாத ஊருக்கு இல்லாத வழியை இருட்டில் காட்டும் இயக்கம் என்று கூறி, இதோ ஒரு புதிய தமிழ் அமைப்பு; தமிழுக்காக - தமிழருக்காக தமிழரால் நடத்தப்படும் தமிழியக்கம் என்ற பிரகடனத்தோடு தமிழர் கழகம் என்ற அமைப்பினை தோற்றுவித்தார்.
தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோஷத்துடன் முத்தமிழ்க் காவலர் அவர்கள் தொடங்கிய தமிழர் கழகத்தின் பிரச்சார பீரங்கியாக தமிழர் நாடு என்ற பெயரில் ஓர் ஏட்டினையும் தொடங்கினார். பெரியாரையும், அவரது கொள்கைகளையும் இதழ் தவறாது கனல் பறக்க விமர்சித்தார்.
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுக் காலத்திற்குப் பிறகு - தமிழர்நாடு ஏட்டின் முதல் பக்கத்தில்,
கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டேன்
என்ற தலைப்பில் - பெரியாரின் இயக்கத்தை எதிர்த்து - புதுக்கட்சி - புது ஏடு நடத்துவதில் தமக்குத் தோல்வியே கிட்டியது என்பதை நேர்மையோடும், நாணயத்தோடும், பெருந்தன்மையோடும் ஒப்புக் கொண்டு எழுதியதோடு, இந்த இதழோடு தமிழர்நாடு ஏடு நிறுத்தப்படுகிறது; தமிழர் கழகத்தின் செயல்பாடும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.
இந்த உதாரணத்தின் மூலம் - பெரியாரை எதிர்த்து யாரும் இயக்கம் கட்ட முடியாது என்பதை அனுபவ ரீதியாக எடுத்துக் காட்டினார் முத்தமிழ்க் காவலர்.
எனினும், -
விதி என்றிருப்பின் எந்த விதியானாலும் அதற்கு ஒரு விலக்கு விதிவிலக்கு என்பது ஒன்று இருக்குமல்லவா? அந்த விலக்குதான் பேரறிஞர் அண்ணா!
தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்துதான் புதியதோர் அமைப்பைத் தொடங்கினார் அண்ணா. - ஆனால் பெரியாருக்கு எதிராக அந்த இயக்கத்தைச் செயல்படுத்தவில்லை; பெரியார் கொள்கைகளே தி.மு.க.வின் கொள்கைகள் என்று பிரகடனம் செய்தார்.
பெரியாரிடம் பணியாற்றியபோதும், பெரியாரை விட்டுப் பிரிந்தபோதும் - தாம் தமது வாழ்க்கையில் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்தான் என்று அந்த வசந்தம் என்ற கட்டுரையில் எழுதிய அண்ணா, பெரியாரின் பெருமைகளை - தலைமைப் பண்புகளை அந்தக் கட்டுரை முழுவதும் விளக்கியிருக்கிறார்.
பெரியார் அவர்களோடு கருத்து வேறுபாடு சமயங்களிலும் கூட பெரியாருக்கு எதிர்ப்பு என்று மற்றவர்களைப் போல - கண்மூடித்தனமாக எதிர்க்காமல் - பெரியாரின் ஆற்றல் - அஞ்சாமை ஆகியவைகளை விவரமாக எழுதி
அவரால் முடியும் நம்மால் முடியாது.
அவர் செய்திடும் காரியங்கள் எல்லாம் - அவரைப் போல் நம்மால் செய்ய முடியாது
- என்று கூறிவிட்டு தமது இயலாமையை ஒப்புக் கொண்டு எதிர்ப்புக்குக் காரணம் சொல்லுவார்.
அய்யா அவர்கள் தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்திருந்த நேரம்! அண்ணாவால் அதனை ஆதரிக்க முடியவில்லை.
ஏன் ஆதரிக்க முடியவில்லை என்பதை அண்ணா விரிவாக விளக்குகிறார். அந்த விளக்கம்தான் அய்யாவிடமிருந்து பிரிந்து போய் அவரைக் கடுமையாக எதிர்த்து அரசியல் நடத்தியவர்களுக்கும் அண்ணாவுக்கும் என்ன வித்தியாசம் என்பதை பட்டாங்கமாக எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.
பெரியாரைப் பற்றியும் - அவரது போராட்ட முறை பற்றியும் பெரியாரின் பலம் பற்றியும் - தனது பலகீனம் பற்றியும் கட்டுரை முழுவதும் எடுத்துக் காட்டி விட்டு அய்யா அவர்களது போராட்டத்தில் தம்மால் கலந்து கொள்ள முடியாத இயலாமையைக் குறிப்பிட்டிருக்கிறார். அதன் சில பகுதிகள் வருமாறு:
நாட்டு மக்களிடம், குறிப்பாக
இன்னும் காங்கிரசிலுள்ள திராவிட மக்களிடம் கொள்கையைப் புகுத்துவதிலே பெறுகிற வெற்றியையே நான் பெரிதும் விரும்புகிறவன். அப்படிக் கூறுவதால் போரே கூடாது என்பவனல்லன்;
காங்கிரஸார் மனத்தில், வேதனை, வெறுப்புணர்ச்சி, பகை உணர்ச்சி மூட்டிவிடக் கூடிய வகையிலே கிளர்ச்சிகள் அமைவதை, நான் இன்றல்ல, எப்போதுமே விரும்பியதில்லை; இந்த என் எண்ணத்தை எடுத்துரைக்க என்றும் தயங்கினதுமில்லை.
ஆகஸ்ட் முதல் நாள் அய்யா அவர்கள் சொன்னபடி கொடி கொளுத்தப்பட்டிருந்தால், அவரைப் பொறுத்தமட்டில் எத்தகைய எதிர்ப்பும் பகையும் துரும்பே. எனவே, அவருக்கு ஒரு சிறு குறைபாடும் ஏற்படாது.
ஆனால், பரவாயில்லை அவர்கள் கூறுவதிலும் நியாயம் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள், நாம் கூறும் எதையும் ஏற்றுக் கொள்ளலாகாது என்ற அளவுக்கு நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.
தம்பி! ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்துப் பணியாற்றும்போது நாளாக ஆக எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக அந்தக் கொள்கை சிலரிடம் பதிந்து விடுகிறது என்பது மட்டுமன்று; வெற்றிக்கு வழி, நாளாக நாளாக எவ்வளவுக் கெவ்வளவு விரிவடைகிறது, பரவுகிறது, மாற்றாரை உற்றார் ஆக்குகிறது என்பதுதான் வெற்றிக்குப் பெரிதும் துணை செய்யும்.
இந்த முறையில்தான், நான் பலகாலமாகவே, காங்கிரஸ் கட்சியில் இன்று உள்ள திராவிடத் தோழர்களில் அந்தக் கட்சியாலேயே வாழ்ந்து தீர வேண்டியவர்கள் தவிர மிகப் பலரை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வகையான கிளர்ச்சி வேண்டும் என்று கூறிவருகிறேன் . . .
காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும், அந்தச் சம்பவம் நடைபெறவில்லை. கடைசி நேரத்தில், கொடி கொளுத்துவதைப் பெரியார் நிறுத்திக் கொண்டார்.
பெரியாருக்கு இன்று உள்ள பெரும் செல்வாக்கு சாமான்யமானதன்று. அதைக் குறைத்து மதிப்பிடும் கயவனல்லன் நான். காங்கிரசிலே உள்வர்களிலேயே சிலருக்கு இன்று செல்வாக்கு இருப்பதை - உதாரணமாகக் காமராஜருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதை ஒப்புக் கொள்ளும் நான், பெரியாருக்கு உள்ள செல்வாக்கையா குறைத்து மதிப்பிடுவேன்? அவருக்கு இன்றுள்ள செல்வாக்கும், அதனை ஈட்டிட அவர் ஆற்றியுள்ள அரும்பெரும் பணியும் அபாரம். எதற்கும் அஞ்சுபவரல்லர். எதிர்நீச்சலில் பழகியவர். கொடி கோட்டை வாசலில் உள்ளதைக் கொளுத்த வேண்டுமென்றாலும், அதனால் ஏற்படக் கூடிய ஆபத்தைப் பற்றித் துளியும் கவலைப்படமாட்டார். அது அவருக்கு சேவையால் கிடைத்தது மட்டுமல்ல, அவருடைய சுபாவமே அத்தகையது. அந்தக் குறுகுறுப்பான கண்களிலே நான் பல சமயங்களில் கோபம் கொந்தளிக்கக் கண்டிருக்கிறன். அடிக்கடி அலட்சியத்தைக் கொட்டக் கண்டிருக்கிறேன். சில வேளைகளில் பரிவு, பச்சாதாபம் தோன்றிடக் கண்டிருக்கிறேன்.
ஒரு போதும் அந்தக் கண்களிலிருந்து பயம் கிளம்பக் கண்டதில்லை.
நானொன்றும், தம்பி, பத்து கெஜத் தொலைவிலே இருந்து அவரைப் பார்த்துப் பழகியவனல்லன்; பல கோணங்களிலே இருந்து பார்த்தவன் பல பிரச்சினைகள் குறித்த அவருடைய பிரத்யேகக் கருத்துகளை அறிந்தவன்.
எனவேதான், திராவிட இயக்கத்தில் வகுக்கப்படும் போர்த் திட்டம், பரவலான அளவில் செல்வாக்குப் பெறத்தக்கதும், பகைக் கூடாரத்தில் உள்ளவர்களின் உள்ளத்திலும் பரிவு ஊட்டக் கூடியதுமான திட்டமாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். பிரிந்த பிறகு ஏற்பட்ட பித்தமல்ல இது. ஒன்றாக இருந்த நாள்தொட்டு எனக்குள்ள கருத்து.
அவர் அத்தகைய விரோதப் பெரு வெள்ளத்தை எதிர்த்து நிற்கவல்லவர்.
பெரியாருக்கு உள்ள அஞ்சாமையும், எதிர் நீச்சுத் தன்மையும், எத்தகைய நிலைமையையும் சமாளிக்கும் திறமையும், எவருடைய விரோதம், குரோதம், பகையாயினும் சரி, எத்தகைய பூசலாயினும் சரி, அவற்றைத் துச்சமெனக் கருதிடும் நெஞ்சழுத்தமும், இந்த இயக்கத்தில் நிரம்பி, ததும்பி இருக்கிறது என்று நான் நம்பவில்லை . . .
தம்பி! நாம் மேற்கொண்டுள்ள காரியம் எளிதுதான். நமக்கு அந்தக் காரியத்தை முடித்துக் காட்டும் ஆற்றல் ஏராளமாக இருக்கிறது என்ற எண்ணம் நம்மில் யாருக்கும் எழுந்ததில்லை. எனவே தான் நம்மால் எவ்வளவு சாதாரணமாக வெற்றி பெற முடிகிறபோதும், மனத்தில் அலாதியான ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது.
சுடு சோறும், சுவையான குழம்பும், பாட்டாளிக்கு இனிக்கிறது. பாதாம் அல்வா, பதிர்பேணி பங்களாவில் கசப்பாகக்கூட ஆகிவிடுகிறது. நாம், அரசியலில், பொது வாழ்வுத் துறையில் தீண்டப்படாதவராக ஒதுக்கப்பட்டோராக விரட்டப்பட்டவர்களாக ஆக்கப்பட்டவர்கள். எனவே நமக்குக் கிடைக்கும் மிகச் சாமான்யமான வெற்றியும், மனத்தில் மகிழ்ச்சி யூட்டுகிறது. மேலும் பல வெற்றிக்கான வாய்ப்பினையும் வலிமையும் தருகிறது.
இவ்விதமின்றி நாம்; நமது ஆற்றலைக் குறித்து மிகஅதிகமான கணக்கிட்டுக் கொண்டு, நாம் சாதிக்க வேண்டிய காரியம்பற்றி மிகக் குறைவாக கணக்கிட்டிருந்தால், எத்துணை மனவேதனை ஏற்பட்டிருக்கும் தெரியுமா?
நமக்கு இருக்கும் திறமையும் குறைவு; அதைவிடக் குறைவு நமக்கு அமைந்துள்ள வாய்ப்புகளும் வசதிகளும். நாம் எதை எதை மாற்ற வேண்டும் என்று பாடுபடுகிறோமோ, அவற்றைக் கட்டிக் காப்பவர்களும், அதனால பலன் பெறுபவர்களும் அறிவிலிகளல்லர். அவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பும்; வசதியும் நமக்கு உள்ளதை விட அதிகமானது. எனவே நமது பணியின் பலன் வேகமாக உருவெடுக்க முடியாது என்பதை உணருகிறேன். எனவே உள்ளத்திலே, அமைதியே கூட ஏற்படுகிறது. சிறு உருவில் பலன் தெரியும்போது மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது. நம்மால் இவ்வளவாவது முடிகிறதே என்ற மகிழ்ச்சி! ...
விலக்கியவர்கள்- விலக்கப்பட்டவர்கள் அந்தந்தக் கால கட்டத்துக்கு ஏற்றபடி கசப்பும், காரமும் காட்டியும், கண்ணீர் வடித்துக் கை பிசைந்து நொடித்துப் போயும் வேறிடம் தேடிக் கொண்டும், அல்லது வாழ்க்கைக்கலையில் ஈடுபட்டும் பல்வேறு வழியில் சென்றுவிட்டனர். நாம் மட்டுந்தான் தம்பி! கொள்கையை மாற்றிக் கொள்ளாமல், மாற்றாருடன் கூடிக் குலவிடாமல், முக்காடிட்டு மூலைக்குச் சென்றிடாமல் வீண் வம்புக்குப் பலியாகாமல், கலத்திலிருந்து வீசி எறியப்பட்டவர்கள், சுழலுக்கும், சுறாவுக்கும் தப்பி, தெப்பத்தின் துணை கொண்டு, எங்கோ ஒரு திட்டைத் தேடி அலைந்து அங்கு தங்கி, சிறியதொரு சிங்காரத் தோணி அமைத்துக் கொண்டு அதிலேறிப் பயணம் செய்வோர் போல நமது பயணத்தை, அதே பாதையில் தொடர்ந்து நடத்துகிறோம்.- என்பதே அண்ணா தந்த அந்த கண்ணியமும்- குருபக்தியும் ததும்பும் விளக்கம்!
பெரியாரது கொள்கைகளில் எப்போதும் ஈடுபாடு எள்முனையளவும் குறையாதவராக, பெரியாரின் பிரதான சீடராக, விசுவாசமிக்க தலைமகனாக இருந்த காரணத்தினால்தான். -
1967 இல் முதல்வர் பதவி ஏற்பதற்கு முன்பே திருச்சி சென்று அய்யாவிடம் ஆசி பெற்றார். சட்ட மன்றத்திலேயே இந்த அரசு பெரியாருக்கு அளிக்கப் பட்ட காணிக்கை என்று பிரகடனம் செய்தார். பெரியாரின் உயிர்க்கொள்கைகளில் ஒன்றான - சுயமரியதைத் திருமணங்களை முன் தேதியிட்டு செல்லுபடியாகும் வகையில் சட்டமியற்றினார்.
அது மட்டுமா?
பெரியாரின் கொள்கைகளை- ஆட்சி மூலம் படிப்படியாக அமல் நடத்தி சாதனைச் சரித்திரம் படைத்திட
வரலாற்றின் முதல் பகுதியை மட்டுமே நான் எழுதியிருக்கிறேன். அடுத்த பகுதியை தம்பி கருணாநிதி எழுதுவார்
என்று தொலைநோக்குப் பார்வையோடு குறிப்பிட்டு கழகத்தைப் பாதுகாத்து வளர்த்திடவும் கழக ஆட்சியில் ஏழை எளியவர்களுக்கான நலத் திட்டங்களை அமல்படுத்தவும்- பெரியாரது கொள்கைகளை நிறைவேற்றவும் தலைவர் கலைஞர் அவர்களை அடையாளம் காட்டி விட்டுப் போனார்.
அவர் கண்ட கனவான
இரட்டைக் குழல் துப்பாக்கியென
வீரமணி தலைமையிலான
திராவிடர் கழகமும்
கலைஞருடன் கைகோத்து
செயல்பட்டு வருகிறது.
அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவில் தலைவர் கலைஞருக்கு அண்ணாவிருதும், ஆசிரியர் வீரமணிக்குப் பெரியார் விருதும் வழங்கப்படுவது என்ன பொருத்தம்! என்ன பொருத்தம்!! என்று கேட்டு ஆடிப்பாடி மகிழ்ந்திடும் வகையில் இல்லையா?
(நன்றி: முரசொலி 26.9.2009)