Search This Blog

12.7.09

உலக நாடுகள் தூரப்பார்வை-மங்கோலியா-மான்டநெக்ரோ-மொராக்கோ-மொசாம்பிக்-


மங்கோலியா

4 ஆம் 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் துருக்கி மொழி பேசுபவர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்து ஆதிக்கம் செலுத்தினர். வரலாற்றில் பெருமையாகப் பேசப்படும் செங்கிஸ்கான், மங்கோலியர்களை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அந்த வலிமையால் மத்திய ஆசியாவின் பெரும் பகுதியை வெற்றி கொண்டான்.

மங்கோலியா நாடு சீனாவின் ஒரு பகுதியாக 1644 இல் ஆனது. சிங் பேரரசு வீழ்ச்சி அடைந்த பிறகு மங்கோலியர்கள் சீனாவிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தனர். 1911 இல் இம்மாதிரி அறிவித்த பின்னரும் ரஷியாவின் உதவியுடன் 1921 இல் சீனர்கள் ஆதிக்கத்தை முற்றிலுமாக அகற்ற முடிந்தது.

சீனாவுக்கும் ரஷியாவுக்கும் இடைப்பட்ட இந்நாட்டின் பரப்பு 15 லட்சத்து 64 ஆயிரத்து 116 சதுர கி.மீ. ஆகும். இதில் பெரும்பரப்பு பாலை நிலமாகும். கோபி பாலைவனம் நாட்டின் மத்திய தென் பகுதியில் அமைந்துள்ளது. மக்கள் தொகை 28 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

லாமாயிச பவுத்தக் கொள்கையை 50 விழுக்காட்டினர் பின்பற்றுகின்றனர். மிகக் குறைந்த அளவினர் முசுலிம், கிறித்துவர்களாக உள்ளனர். 98 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள்.

அதிபருக்கே அதிகாரங்கள் அளிக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயக முறையும் கலந்த அரசியல் அமைப்பு கொண்ட நாடு. அதிபரும் உள்ளார். பிரதமரும் இருக்கிறார். 36 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 7 விழுக்காடு மக்கள் வேலை கிட்டா-தோர். கல்கா மங்கோல் எனும் மொழி 90 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழியாகும்.

மான்டநெக்ரோ

16ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை கிறித்துவ பிஷப்களால் ஆட்சி செய்யப்பட்ட மதம் சார்ந்த நாடாக விளங்கியது. 1852 இல்தான் இந்நாடு மதச்சார்பற்ற நாடாக மாற்றம் பெற்றது. முதல் உலகப் போரின் முடிவில் இந்நாடு யுகோஸ்லேவியாவுடன் சேர்க்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் யுகோஸ்லேவிய சமதர்மக் கூட்டாட்சிக் குடியரசின் உறுப்பு நாடாக ஆகியது. 1992 இல் சோஷலிச நாடுகள் உடைந்தபோது, மான்ட-நெக்ரோ செர்பியாவுடன் இணைந்து யுகோஸ்லேவியக் கூட்டாட்சிக் குடியரசு என்று ஆனது. 2003க்கும் பிறகு செர்பிய மான்டநெக்ரோ ஒன்றியமாக ஆனது. அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் வகுத்துத் தந்த விதிமுறைகளின்படி, வாக்கெடுப்பு நடத்தியது. அதன் முடிவுகளின்படி செர்பியாவுடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று 55 விழுக்காட்டுக்கு மேல் மக்கள் வாக்கு அளித்த நிலையில் 3-.6.-2006இல் மான்டநெக்ரோ தனது விடுதலையைப் பிரகடனம்செய்தது.

செர்பியாவுக்கும் அட்ரியாடிக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு 13 ஆயிரத்து 812 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள் தொகை 6 லட்சத்து 31 ஆயிரம் ஆகும். இவர்கள் பழமை வாதக் கிறித்துவம், ரோமன் கத்தோலிக்க, முசுலிம் மதங்களைச் சேர்ந்தவர்கள். செர்பிய மொழி பேசுபவர்கள்.

அதிபரும் பிரதமரும் உண்டு. 28 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர். 12 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர்.

மொராக்கோ

பெர்பெர் இனத்தவரின் நாடாக மொராக்கோ பொது ஆண்டுக்கு 2000ஆண்டுகள் முற்பட்ட காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. 685 ஆம் ஆண்டில் அரேபியர்கள் படையெடுத்து வந்தனர். 1660ஆம் ஆண்டில் அலவைட் வமிசத்தினர் ஆட்சியைப் பிடித்தனர். இந்நாள் வரை அந்த வமிசத்தினர்தான் மொராக்கோவை ஆண்டு வருகின்றனர்.

19ஆம் நூற்றாண்டில், அய்ரோப்பிய நாடுகள் மொராக்கோவில் குடியேற்றப் பகுதிகளை அமைக்கத் துடித்தன. 1904இல் பிரான்சும் ஸ்பெயினும் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு மொராக்கோவைப் பல பகுதிகளாகப் பிரித்தன. ஒரு பகுதியை பிரான்சும் ஒரு பகுதியை ஸ்பெயினும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டன.

1912இல் பெஜ் ஒப்பந்தப்படி, மொராக்கோ பிரான்சு நாட்டின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்ட பகுதியானது. இந்த ஏற்பாடு 1956 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கு நாட்டில் ஏற்பட்ட தேசிய எழுச்சியும் கலவரங்களுமே காரணம். தற்போது நாட்டில் குடிக்கோனாட்சி நடக்கிறது. 2-3-1956 இல் விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டின் தலைமைப் பொறுப்பில் மன்னர் ஆறாம் முகமது 1999 முதல் இருந்து வருகிறார். ஆட்சித் தலைவராக பிரதமர் உள்ளார்.

வடஆப்ரிக்காவில், வட அட்லான்டிக் பெருங் கடலுக்கும் மத்திய தரைக் கடலுக்கும் எல்லையில் அர்ஜீரிய நாட்டுக்கும் சகாரா பாலைவனத்தின் மேற்குப் பகுதிக்கும் இடையில் அமைந்த மொராக்கோவின் பரப்பு 4 லட்சத்து 46 ஆயிரத்து 550 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள் தொகை 3 கோடியே 33 லட்சம். மக்களில் 99 விழுக்காடு இசுலாமியர்கள். அரபி மொழி ஆட்சி மொழி. 19 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 10 விழுக்காடு மக்களுக்கு மேல் வேலை கிட்டாதோர்.

மொசாம்பிக்


3 ஆம் நூற்றாண்டில் இன்றைய மொசாம்பிக் பகுதிகளுக்கு பான்ட்டு மொழி பேசம் பழங்குடியினர் குடியேறி வாழ்ந்து வந்தனர். அரேபியர்களும் சுவாஹிலியர்களும் பிற்பாடு வந்தனர். 1498 இல் வாஸ்கோடகாமா இந்தப் பகுதிகளைக் கண்டறிந்தார். 1505 இல் போர்த்துகீசியர்கள் தம் குடியேற்ற நாடாக ஆக்கிக் கொண்டனர். இந்திய நாட்டின் கோவாவுடன் சேர்த்துப் போர்த்துகீசியர் மொசாம்பிக்கையும் நிருவாகம் செய்து வந்தனர்.

18,19 ஆம் நூற்றாண்டுகளில் அடிமை வணிகத்துக்கு முக்கிய இடமாக மொசாம்பிக் ஆக்கப் பட்டது. 1878 இல் மொசாம்பிக்கின் பெரும் பகுதிகளில் வேற்று நாட்டினர் வணிகம் செய்வதற்குக் குத்தகைக்கு விட்டனர் போர்த்துகீசியர். 1975 ஜூன் 25 ஆம் நாள், மொசாம்பிக் விடுதலை பெற்றது. ஒரு கட்சி ஆளும் நாடாக உருவெடுத்துள்ளது. தென் கிழக்கு ஆப்ரிக்கப் பகுதியில் தென் ஆப்ரிக்க நாட்டுக்கும் தான்சானியாவுக்கும் இடையில் அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு 8 லட்சத்து ஓராயிரத்து 590 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை ஒரு கோடியே 97 லட்சம்.

கத்தோலிக்கர்கள் 24 விழுக்காடு, சியோனிச கிறித்துவர்கள் 17 விழுக்காடு, முசுலிம்கள் 18 விழுக்காடு உள்ளனர். 18 விழுக்காட்டினர் வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். எந்த மதமும் இல்லை என 23 விழுக்காட்டினர் பதிவு செய்துள்ளனர்.

ஆப்ரிக்க மொழிகளைப் பேசுவோர் நிறைய. 27 விழுக்காடு மக்களால் பேசப்படும் பேர்த்துகீசிய மொழி இரண்டாம் ஆட்சி மொழியாக உள்ளது. 48 விழுக்காடு மக்களே படிப்பறிவு பெற்றவர். 70 விழுக்காடு வறுமைக்கோட்டுக்குக் கீழேயும், 21 விழுக்காடு வேலை கிட்டாமலும் உள்ளனர்.

-------------------"விடுதலை" 9-7-2009

0 comments: