Search This Blog

1.7.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - ஜோர்டான்-கஜகஸ்தான்-கென்யா

ஜோர்டான்

பைபிள் கதைகளில் குறிப்பிடப்படும் டேவிட் மன்னனும் சாலமோன் மன்னனும் ஆண்ட பகுதியாக விளங்கிப் பின்னர் செலுசியர் பேரரசில் இருந்தது ஜோர்டான். அதன்பிறகு அரபியர்களின் ஆட்சிக்கு வந்தது. 16 ஆம் நூற்றாண்டில் துருக்கி ஒட்டோமான் வம்சப் பேரரசில் ஜோர்டான் இருந்தது.

டிரான்ஸ் ஜோர்டான் என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட இந்நாடு 1920இல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டது. 1927இல் சுதந்திர நாடாக்கப்பட்டது. 1949இல் மேற்குக் கரைப் பகுதியைத் தன் நாட்டுடன் சேர்த்துக் கொண்டதை இசுரேல் எதிர்த்து மீட்டுக் கொண்டது. பின்னர் 1994இல் இசுரேல் நாட்டுடன் ஜோர்டான் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது.

சவூதி அரேபியாவுக்கு வடமேற்குப் பகுதியில் உள்ள இந்நாடு 92 ஆயிரத்து 300 சதுர கி.மீ. பரப்புள்ளது. 59 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். சன்னி முஸ்லிம்கள் 92 விழுக்காடும் கிறித்துவர்கள் 6 விழுக்காடும் உள்ளனர். அரபி ஆட்சிமொழி. 91 விழுக்காடு மக்கள் கல்வி அறிவு பெற்றவர்கள்.

குடிக்கோனாட்சி முறை நாடு. மன்னர் அப்துல்லா ஐஐ அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதமராகவும் உள்ள நாடு. 30 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 13 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.


*************************************************************************************

கஜகஸ்தான்

முதல் எட்டு நூற்றாண்டு காலத்தில் துருக்கி மொழி பேசிய பழங்குடியினரும் மங்கோலியர்களும் இப்பகுதியில் வந்து குடியேறினர். 8 ஆம் நூற்றாண்டில் வந்த அரபியர்கள் இசுலாமிய நெறியை இப் பகுதிக்குக் கொண்டு வந்தனர். 15 ஆம் நூற்றாண்டு காலத்தில் கஜகஸ்தானியர் தனித்ததொரு இனக் கூட்டமாகி கஜகஸ்தானை அமைத்தனர்.
மங்கோலியர்களின் படையெடுப்புகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவுடன் சேர்ந்து கொண்டது. சோவியத் புரட்சியின் வெற்றிக்குப் பின் 1920இல் தன்னாட்சி பெற்ற குடியரசாக சோவியத் ஒன்றியத்தில் கஜகஸ்தான் விளங்கியது. சோவியத் ஒன்றியம் உடைபட்ட பிறகு 1991 இல் தனிநாடாகத் தன்னை விடுவித்து அறிவித்துக் கொண்டது.

அய்ரோப்பா கண்டத்தின் கிழக்குப் பகுதியில் ஊறல் நதிக்கு மேற்கேஅமைந்த இந்நாட்டின் பரப்பு 27 லட்சத்து 17 ஆயிரத்து 300 சதுர கி.மீ. ஆகும். ஒரு கோடியே 53 லட்சம் மக்கள் தொகை கொண்டது. 47 விழுக்காடு மக்கள் இசுலாமியர். ரஷியப் பழமை வாதிகள் 44 விழுக்காடு. மற்றையோர் கிறித்துவத்தின் பல பிரிவினர்.

கசக் மொழியும் ரஷ்ய மொழியும் பேசும் மக்களில் 99 விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர். குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 19 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ்உள்ளோர். 8 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

*********************************************************************************

கென்யா

மனித குலம் தோன்றிய நாடு கென்யா என ஆதாரங்கள் உள்ளன. இந்த நாட்டின் முதலில் தோன்றிய தாயின் வழிவந்தோர்தான் உலகத்தின் எல்லா மனிதர்களும் என்பதற்குத் தொடர்ச்சியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மனிதன் படைக்கப் பட்டான் எனும் மதக்கதை மாண்டுபடுகிறது. அதிலும் ஆண்தான் முதலில் படைக்கப்பட்டான் எனும் கதையும் அடிபடுகிறது.

அத்தகைய கென்யா நாடு 1890இல் பிரிட்டிஷ் கிழக்கு ஆப்ரிக்கப் பாதுகாப்பகம் என்பதில் ஒரு பகுதியாக இருந்து பிறகு 1920இல் பிரிட்டிஷ் அரசுக் குடியேற்ற நாடாகியது. 1944இல் கென்ய ஆப்ரிக்க யூனியன் என ஒன்று அமைக்கப்பட்டு ஆப்ரிக்க விடுதலைக்குப் போராடியது. 1947இல் ஜோமோ கென்யாட்டா என்பவர் இந்த அமைப்பின் தலைவரானார். 1952இல் ஓர் இரகசிய போர்ப்படை உருவானது. கிகியு கொரில்லாக்கள் என்வர்கள் மாவ்மாவ் எனும் பயங்கரவாத அமைப்பின் மூலம் வந்தேறிகளான வெள்ளையர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தொடங்கினர்.

அடுத்த ஆண்டே. மாவ் மாவ் இயக்கத்தை உருவாக்கியவர் எனக் குற்றம் சாற்றப்பட்டு ஜோமோ கென்யாட்டா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது விடுதலை இயக்-கமும் தடை செய்யப்பட்டது. ஆயிரக் கணக்கானவர்-களைக் கொன்று குவித்து மாவ்மாவ் இயக்கத்தை பிரிட்டிஷ் அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது.

1960 இல் கென்ய ஆப்ரிக்க தேசிய யூனியன் அமைக்கப்பட்டது. இதன் தலைவர் பொறுப்பை 1961 இல் ஜோமோ கென்யாட்டா ஏற்றார். 1963 இல் கென்யா விடுதலை பெற்றது. ஜோமோ கென்யாட்டா பிரதமர் ஆனார். 1964இல கென்யா குடியரசு நாடானது. கென்யாட்டா அதிபரானார்.

ஆப்ரிக்காவின் கிழக்குக் கரை நாடான கென்யா 5 லட்சத்து 82 ஆயிரத்து 650 சதுர கி.மீ. பரப்புள்ளது. 3 கோடி 75 லட்சம் மக்கள் தொகை கொண்டது. 45 விழுக்காடு மக்கள் புரொடஸ்டன்ட் கிறித்துவர்கள். 33 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்கர்கள். முசுலிம்கள் 10 விழுக்காடு. ஆப்ரிக்கப் பழமைவாதிகள் 10 விழுக்காடு.

இங்கிலீசு ஆட்சி மொழி. கிஸ்வாஹிலி எனும் மக்கள் மொழியும் ஆட்சி மொழி. 85 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். 12-.12.-1963இல் விடுதலை நாள் கொண்டாடும் இந்நாட்டின்அதிபர் ஆட்சித் தலைவராகவும் உள்ளார். மக்களில் பாதிக்குமேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் 40 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.
கிரிபாட்டி (Kiribati) பசிபிக் பெருங்கடலில் 33 பவழத் தீவுகளின் கூட்டமான கிரிபாட்டி முதல் நூற்றாண்டிலேயே மக்கள் வசிக்கும் பகுதியாக இருந்தது. 1892இல் கில்பர்ட் தீவைத் தன் பாதுகாப்புப் பகுதி என அறிவித்த பிரிட்டன், பிறகு 1900இல் பனபா தீவையும் அவ்வாறே அறிவித்து இணைத்துக் கொண்டது. இவை இரண்டும் எல்லிஸ் தீவுகளுடன் சேர்ந்து மூன்றுமாக 1916இல் எல்லிஸ் தீவு குடியேற்ற நாடுகள் என அழைக்கப்பட்டு வந்தன. 1979 ஜூலை 12இல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றன.

பூமத்திய ரேகை (நிலநடுக்கோடு)க்கு அருகில் உள்ள இத்தீவுகளின் மொத்தப் பரப்பே 811 சதுர கி.மீ.தான். இதில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 52 விழுக்காடு ரோமன் கத்தோலிக்கர். புரொடஸ்டன்ட்கள் 40 விழுக்காடு. மீதிப்பேர் சிறுசிறு மதங்களைச் சேர்ந்தோர். இங்கிலீசுதான் ஆட்சி மொழி. அதிபராகவும் ஆட்சித் தலைவராகவும் அதிபரே உள்ளார். ஆஸ்திரேலிய டாலர்தான் நாட்டு நாணயம்.


-----------------------"விடுதலை"30-6-2009

0 comments: