Search This Blog

1.7.09

ஈழப் பிரச்சினையில் இரண்டு அணிகள் தேவையா?




ஈழ மக்கள் ஆடுமாடு போல் அடைப்பு - தொடர் துயரம்!
ராஜபக்சே மற்றும் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை

திருச்சி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் வேதனையுரை


ஈழப் பிரச்சினையிலே தவறான நிலை எடுத்து நடந்துகொண்டு வருகின்ற இலங்கை ராஜபக்சே அரசுக்கு கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் அதே போல காங்கிரஸ் அரசும் அதே மயக்க நிலையில் இருப்பதற்கு கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் விடுத்து விளக்கமளித்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.


திருச்சியில் 23.6.2009 அன்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

இது மகிழ்ச்சிக் கூட்டமல்ல

இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப் போல இந்தக் கூட்டம் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான அல்லது நாமெல்லாம் பெருமிதம் கொள்ளக்கூடிய ஒரு வெற்றிக் கொண்டாட்டக் கூட்டமல்ல.

மாறாக நம்முடைய இனத்தின் நிலையை எண்ணி எண்ணி இங்கும் வேதனைப்பட்டு, அதன் காரணமாக உலகத் தமிழர்கள் மத்தியிலே இந்த இனத்திற்கு எவ்வளவு பெரிய அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது என்பதை எல்லாம் சுட்டிக்காட்டி, இனிமேலும் இருக்கக் கூடிய தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் அவர்களுடைய வாழ்வுரிமை மீட்பு இயக்கமாக இந்த இயக்கம் கட்டப்பட வேண்டும். அந்த வகையிலே கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதே போலத்தான் அங்கே நம்முடைய தொப்புள் கொடி உறவுள்ள ஈழத்தமிழர்கள் எவ்வளவு இன்னல்களை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு தமிழ்நாட்டிலே கட்சி வேறுபாடு இல்லாமல் மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, அரசியலை சற்றுப் புறந்தள்ளி சரியான பார்வையோடு அணுகவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம். இந்த மேடையிலே இருக்கக் கூடிய அத்துணை பேரும் ஒருங்கிணைந்த ஒரு குடும்பமாக ஒரே சிந்தனையினாலே இருக்கிறார்கள்.

எனக்கு முன்னாலே அவர்கள் மிகத் தெளிவாக பல்வேறு விளக்கங்களைத் தந்திருக்கின்றார்கள். பெருங்கவிக்கோ அவர்கள் ஆனாலும், பொன்.குமார் அவர்கள் ஆனாலும் அது போல நம்முடைய பேராசியர் சுப.வீ அவர்கள் ஆனாலும் என்னுடைய அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆனாலும், எல்லோருமே தந்திருக்கின்ற அந்த செய்தியிலே ஒன்றை அடிக்கோடிட்டுக் காட்ட நான் விரும்-புகின்றேன்.

இரண்டு அணிகள் தேவையா? நல்ல கேள்வி...!

தமிழர்களுக்கு இவ்வளவு பிரச்சினைகள் வந்த பிற்பாடு கூட, இன்னமும் உள்ளபடியே ஈழத்தமிழர்களைக் காக்க வேண்டும் என்ற கவலையும் பொறுப்பும் நமக்கு இருக்குமே-யானால் இரண்டு அணிகள் தேவையா? என்று ஒரு நல்ல கேள்வியை அவர்கள் வைத்தார்கள்.

திருச்சியிலே இவ்வளவு அருமையாகக் கூடியிருக்கின்றீர்கள். திருச்சி தமிழர்களின் உண்மையான தலைநகரம் போன்ற ஒரு மாநகரம் ஆகும்.

எனவே திருச்சியிலே ஏற்பட்டிருக்கின்ற இந்த எழுச்சி, ஒரு புதிய செய்தியை மத்திய அரசுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. அங்கே ஏதோ முடிந்துவிட்டது. அதே போல நமக்கும் தேர்தல் முடிந்துவிட்டது. ஆகவே நாம் இனிமேல் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்பதைப் போல இருக்கலாமென்றால், தயவு செய்து டெல்லியிலே இருக்கக் கூடிய ஆட்சியர்களே நீங்கள் என்ன ஆவீர்கள்?

தமிழின உணர்வு என்பது செத்துவிடவில்லை. தமிழின உணர்வு என்பது மறைந்து விடவில்லை. இன்னும் கேட்டால் இதற்காகத் தேர்தலுக்கு முன்னாலே நாங்கள் சொன்னோம்.

சகோதரர் தொல்.-திருமாவளவன் அவர்கள் ஆனாலும், சுப.வீ அவர்கள் ஆனாலும் மற்ற நண்பர்கள் ஆனாலும் நாங்கள் சொன்ன கருத்துகளை கேட்டார்கள்.

தேர்தல் வரும்_அந்த தேர்தல் இந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு ஆனாலும் அந்தத் தேர்தலிலே ஈழத்தமிழர் பிரச்சினையை மய்யப்படுத்தாதீர்கள்.

அந்த அரசியலை இங்கே வந்து குழப்ப வேண்டாம். நம்முடைய ஈழத் தமிழர்களுக்கு நாம் ஆதரவு கொடுப்பதை விட்டுவிட்டு அதைத் தேர்தல் பிரச்சினையாக ஆக்கக் கூடாது.

லாபம் ராஜபக்சேவுக்கு-டில்லிக்கு


இதிலே ஒத்த கருத்துள்ளவர்கள் இரண்டு அணிகளாக இருக்கிறார்கள் என்று காட்ட வேண்-டிய அவசியமில்லை. காட்டினால் அது நம் இனத்தின் பகைவனான ராஜபக்சேவுக்குத்தான் இலாபம்.

அதே போல டில்லிக்கும் அது இலாபம். ஆகவே அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெளிவாக நாங்கள் சொன்னோம்.

அது மட்டுமல்ல. மிக அழகாக நம்முடைய சகோதரர் திருமா அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். இங்கே நம்முடைய இனத்தின் எதிரி யார் என்று பார்ப்பது தான் மிக முக்கியம்.

ஒரு பெரிய தவறு செய்திருக்கின்றார்கள்

இந்த இனம் வீழ்ந்திருக்கிறது என்று சொன்னால் பல நேரங்களிலே, வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தமிழினத்திற்கு வீழ்ச்சி ஏற்பட்ட கால கட்டங்களை எல்லாம் எண்ணிப் பார்த்தீர்களேயானால் அடிப்படையிலே ஒரு பெரிய தவறை அவ்வப்பொழுது இந்த இனத்தவர்கள் செய்திருக்கின்றார்கள்.

என்ன அந்தத் தவறு என்று சொன்னால், எதிரியை நண்பனாகக் கருதுவது; நண்பனை எதிரியாகக் கருதுவது. உண்மையான எதிரிகள் நமக்கு யார்? உண்மையான நண்பர்கள் யார்? என்று இனம் பிரித்துப் பார்க்கத் தெரியாத காரணத்தினாலே தான் நண்பர்களே! நம் இனம் பல நேரங்களிலே வீழ்ந்திருக்கிறது.

அதே வரலாற்றுத் தவறைத் தான் மீண்டும் இப்பொழுது செய்து கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்ட காரணத்தால் இவ்வளவு பெரிய வீழ்ச்சி, சங்கடங்கள் ஏற்பட்டன.

கலைஞரை எதிர்த்து அரசியல் நடத்துவதா முக்கியம்?

தமிழர்கள் ஒன்று சேர்ந்திருக்க வேண்டாமா? நண்பர்கள் கேட்டார்களே, கலைஞரை எதிர்த்து அரசியல் நடத்துவதற்கா இலங்கை பிரச்சினை? அதற்காகவா ஈழத்தமிழர் பிரச்சினை? ஈழத்திலே இருக்கின்ற தமிழன் உரிமை பெற வேண்டுமானால் இப்படிப் பட்டவர்களில் பலர் பிறக்காத காலத்தில் இந்த இயக்கம் திராவிடர் இயக்கம் 1939 இலே தீர்மானம் போட்ட இயக்கம். அப்பொழுது அவர் பிறந்ததில்லை.

எனவே இந்த இயக்கத்தினுடைய வரலாறு என்பது கிள்ளுக்கீரை அல்ல. இந்த இயக்கத்-தினுடைய வரலாறு ஈழத்தமிழர்களுடைய பாதுகாப்பு உரிமையைப் பற்றித் தீர்மானம் 1939 ஜஸ்டிஸ் கட்சியாக இருந்த காலத்திலே போடப்பட்டு 1954 இலே நம்முடைய கலைஞர் அவர்கள் தான் ஈழத்தமிழர்களுடைய பிரச்சினைக்காக _ இலங்கை வாழ் தமிழர்களுடைய பிரச்சினைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தீர்மானமாகப் போட்டவர்கள்.

அதற்காக கலைஞர் அவர்கள் இரண்டு முறை ஆட்சியை இழந்தவர்கள். எத்தனையோ இழப்புகளைச் சந்தித்தவர்கள்.

எனவே இங்கே சுப.வீ. அவர்கள் சொன்னதைப் போல ஆட்சியிலே ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கமல்ல.

ஆட்சியை விட்டு வெளியே வரக்கூடாது

நீங்கள் ஆட்சியை விட்டு வெளியே வந்துவிடக்கூடாது என்று சொல்பவர்கள் எங்களைப் போன்றவர்கள். இருக்க வேண்டுமென்று சொல்பவர்கள் நாங்கள். ஏன் என்று சொன்னால் இங்கே சகோதரர் திருமா அவர்கள் ரொம்ப அழகாக விளக்கினார்கள். ரொம்பத் தெளிவாக ஒரு அரசியல் படத்தை வரைந்திருக்கின்றார்கள். இன்னும் கூட அவர் வரைந்த படத்தை நான் கூட கலைத்துவிடக்கூடாது அதிகம் பேசி என்று நினைக்கின்றேன். அந்த அளவிற்கு அவர் தெளிவாக பேசினார்.

இந்த ஆட்சியை விட்டு விட்டால், முதலில் இந்தக் கூட்டம் நடக்குமா? தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.

இந்த ஊர்வலம் நடந்திருக்குமா? இந்தக் குரல் கேட்டிருக்குமா? வேறு யார் வந்தாலும் இந்த ஆட்சி இருக்கும் பொழுதே டெல்லி இவ்வளவு அலட்சியமாக நடந்துகொண்டிருக்கிற-தென்றால் இந்த ஆட்சி இல்லாமல் இருந்தால் டெல்லிக்காரன் என்ன நினைப்பான்?

ராஜபக்சேவுக்கு மட்டுமல்ல டெல்லிக்கும் எச்சரிக்கை!

இது ராஜபக்சேக்களுக்கு மட்டும் எச்சரிக்கை அல்ல. டெல்லிக்கும் சேர்ந்து தான் எச்சரிக்கை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆழமாகக் கோடிட்டுக்காட்ட விரும்புகின்-றோம்.

தேர்தலிலே வெற்றி பெற்றுவிட்டோம். ஆட்சி அமைத்துவிட்டோம். மத்தியிலே 322 பேர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து விட்டார்கள். எனவே எங்களை அசைக்க முடியாது என்று ஒரு மயக்கம் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு ஏற்படலாம்.

ஆனால் ஒன்றைச் சொல்லிக்கொள்கின்றோம். தமிழ்நாட்டை முற்றாகப் பெற்றுவிட்டோம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். இன்றைக்கு இந்த அளவுக்காவது உங்களுக்குத் தமிழ்நாட்டிலே கால் ஊன்றக் கூடிய அளவுக்கு வாய்ப்பிருக்கிறது என்று சொன்னால், கலைஞர் அவர்கள் தூக்கிப் பிடித்திருக்கின்ற காரணத்தால் என்பதை மறந்து விடாதீர்கள்.

கலைஞரின் அருகில் இருக்கின்ற காரணத்தால்

எங்களைப் போன்றவர்கள் கலைஞர் அவர்களுடைய அருகிலே இருக்கின்ற காரணத்தால் சில நண்பர்கள் கூட தனியாகப் பிரிந்து போய் பிரச்சாரம் செய்தார்கள். திருமாவளவன் காங்கிரஸ் கூட்டணியிலே இருக்க வேண்டும் என்று தான் எங்களைப் போன்றவர்கள் நினைத்தோம். ஏனென்றால், கூட்டணி என்று வரும் பொழுது ஒருவரே உரிமை கொண்டாடுவதற்கு உரிமை இல்லை.

இதிலே உண்மையாக இலாபம் அடைந்தவர்கள் யார்? நட்டம் அடைந்தவர்கள் யார்? என்று அரசியலிலே விளக்கப்பட வேண்டிய ஒரு செய்தி இந்த மேடையிலே அல்ல. ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மக்கள் வாக்களித்தார்கள் என்றால், இரண்டு காரணங்களுக்காக வாக்களித்தார்கள்.

ஈழத்தமிழர் பிரச்சினையிலே அலட்சியம் காட்டவில்லை. மாறாக கலைஞர் ஆட்சியினுடைய சாதனை என்பது முன்னாலே நின்றிருக்கிறது.

இரண்டாவது காரணம் மத்தியிலே மதவெறி ஆட்சி வந்துவிடக் கூடாது என்கின்ற கவலை.

சிறியகோடு - பெரிய கோடு

சிறிய கோடு, பெரிய கோடு இதைப் பார்த்தாலே போதும் வேறொன்றையும் பார்க்கத் தேவையில்லை. எனவே மத்தியிலே மதவெறி ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் உங்களுக்கு ஓட்டே தவிர-உங்களைப் பதவியில் அமர்த்தினார்களே தவிர வேறு கிடையாது.

ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை மத்தியிலே நிர்ணயம் செய்த காரணத்தாலே தான் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.

ஏன் இவ்வளவு வேதனையோடு சொல்லுகிறோம் என்றால், காரணம் என்ன? இங்கு சொன்னார்களே, உலகத் தமிழர்கள் உணவு, மருந்துப் பொருள்கள் மனிதாபிமானத்தோடு அனுப்புகிறார்கள்.

கப்பல் நடுக்கடலில்

இங்கே பேசிய பொன்.குமார் சொன்னார். சுப.-வீரபாண்டியன் சொன்னார். அந்தக் கப்பல் நடுக்கடலிலே இன்னும் எத்தனை நாளாக நின்று கொண்டிருக்கின்றது? அங்கே இன்னமும் எங்கள் சொந்தங்கள், எங்கள் தொப்புள்கொடி உறவுகள் என்ன நிலையிலே இருக்கிறார்கள்? போர் முடிந்துவிட்டது என்று சிங்கள அரசு சொல்லுகிறது. போர் முடிந்து விட்டிருந்தால் உண்மையிலேயே நீ பிரபாகரனைக் கொன்றிருந்தால் இவ்வளவு ஏன் பயப்பட வேண்டும்?

இன்னமும் அங்குள்ள அப்பாவித் தமிழர்களை, முகாம்களில் உள்ள தமிழர்களை எல்லாம் அழிக்க வேண்டும். ஏனென்றால் சிங்கள அரசுக்கு தமிழர்கள் என்றால் அத்துணை பேரும் விடுதலைப்புலிகள் என்கிற கணக்கிருக்கிறது.

ஆகவே அவர்களை எல்லாம் முள்வேளிக்குள்ளே போட்டு அவர்களைப் பட்டினியால் கொல்ல வேண்டும் என்று கருதுகின்றான். தமிழர்கள் மீது கொத்து குண்டுகளை வீசி, விஷப் புகைகளை வீசி, அழித்தீர்களோ, அதே போல இப்பொழுதும் அழிக்கலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.

உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதா?

உலக நாடுகள் அதைப் பார்த்துக்கொண்டிருக்கலாமா? இந்திய அரசு அதற்கு முன்னாலே என்ன சொல்லிற்று? இராணுவத் தீர்வு பயனில்லை. அதற்கு முன்னால் அரசியல் தீர்வு வரவேண்டும் என்று சொன்னார்களே! அந்த அரசியல் தீர்வு தொடங்கி விட்டதா? கேட்க வேண்டாமா? காங்கிரஸ்காரர்களே நாடாளுமன்றத்தில் சொன்னீர்கள்; குடியரசு தலைவர் உரையிலே சொன்னீர்கள்.

இவை எல்லாம் சொன்ன பிற்பாடும் இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு உரிய தீர்வு தொடங்கியிருக்கிறதா? தீர்வு தொடங்குவது அப்புறம் இருக்கட்டும்.

இலங்கையிலே யுத்தம் முடிந்து விட்டது என்று சொன்னீர்கள். எந்த நாட்டிலாவது சொந்த நாட்டு மக்கள் அகதிகளாக இருந்ததுண்டா? தமிழர்களை எல்லாம் சிங்கள அரசு பட்டியில் ஆடு, மாடுகளைப் போல அடைத்து வைத்திருக்கிறது. சிறைச்சாலையில் கூட ஒரு மனிதனுக்கு சுதந்திரம் உண்டு. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இந்த மூன்றும் சிறைச்சாலையில் உத்தரவாதம் உண்டு. ஆனால் இலங்கையிலே இருக்கின்ற தமிழனுக்கு அது உண்டா? அது மட்டுமல்ல, இன்னும் வெட்கமாக இருக்கிறது; வேதனையாக இருக்கிறது. எங்கள் நெஞ்சங்-களிலே இரத்தம் வடிகிறது. எங்களுடைய சகோதரிகள், எங்களுடைய தாய்மார்கள் பாலியல் வன்கொடுமைக்கு இன்னமும் ஆளாக்கப்படுகின்றார்கள் என்று சொன்னால் இது எவ்வளவு பெரிய கொடுமை?

கோத்த பய்ய திடீர் பேச்சு...?

இராணுவத் தளபதியாக இருக்கக் கூடிய இராணுவ அமைச்சராக இருக்கக் கூடிய கோத்த பய ராஜபக்சே என்பவன் அங்கே பேசுகிறான். இலங்கையிலே இருக்கின்ற தமிழ்ப் பெண்களை சூறையாடுங்கள்-பெண்களுடைய கற்பை சூறையாடுங்கள். தமிழ் இளைஞர்களைக் கொன்று குவியுங்கள் என்று சொன்ன செய்தி சர்வதேச ஊடகங்களிலே வெளி வந்தது.

என்னதான் ஒரு நாடு அடிமை நாடாக இருந்தாலும், இந்த நிலை என்று சொன்னால் இதற்கு யார் காரணம்? மூலகாரணம் என்ன?

-----------தொடரும்....."விடுதலை"30-6-2009