Search This Blog

20.7.09

இராமாயண நூல் வெளியீடா? அதிலே கருணாநிதி பங்கேற்பதா?

பெரியார், அண்ணா கொள்கைகளைக் கொண்டு ராமாயணத்தை விமர்சிப்பவன் நான்
பெரியார் விதைத்த பகுத்தறிவு விதை
காயாமல், கருகாமல், என்றைக்கும்
முளை விட்டுக் கொண்டே இருக்கும்

கலைஞர் உரை


முதல்வர் கலைஞர் அவர்கள், மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி எழுதிய இராமாயணப் பெருந்தேடல் எனும் நூலை சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் தலைமை ஏற்று வெளியிட்டார்.

அவ்விழாவில் உரையாற்றிய முதல்வர் கலைஞர் அவர்கள், பெரியார் என்னுடைய உள்ளத்தில் விதைத்த பகுத்தறிவு விதை என்றைக்கும் முளை விட்டுக் கொண்டேயிருக்கும். அது காயாமல், கருகாமல் இன்றைக்கும் இருக்கிறது என்றைக்கும் இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் தமது உரையில், எரிமலை போல பல கருத்துகளை பெண்ணுரிமையை நிலைநாட்டுகிற கருத்துகளை, ஏழை எளிய மக்களின் வாழ்வில் இருக்கும் கஷ்டங்களை வர்ணித்திருக்கிற கருத்துகளை எழுதிய வீரப்பமொய்லியை, பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:

நம்முடைய வீரப்ப மொய்லி அவர்கள் எழுதிய இராமாயணப் பெருந்தேடல் என்ற தலைப்பமைந்த இந்த நூலின் முதல் பாகத்தை வெளியிடுகின்ற வாய்ப்பு பெற்றமைக்காக நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் விளம்பரத்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்து இருப்பீர்கள், செய்தி கேட்டு ஓரிருவர் திகைத்தும் இருப்பீர்கள் - என்ன இராமாயண நூல் வெளியீடா? அதிலே கருணாநிதி பங்கேற்பதா? என்று ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். ஆமாம், இராமாயண வெளியீடுதான், அதில் கருணாநிதி பங்கேற்றது மாத்திரமல்ல, அதை வெளியிட்டும் உரையாற்றி இருக்கிறார் என்பதுதான் இன்றைய செய்தி. இதில் ஒன்றும் முரண்பாடில்லை. இராமாயணத்தை இளமைக்காலம் முதல் இன்று வரையில் விமர்சித்துக் கொண்டு இருப்பவன் நான். பெரியாரின் கொள்கைகளை உள்ளத்திலே பதிய வைத்துக் கொண்டு அண்ணாவின் கருத்துகளை இதயத்திலே பதிய வைத்துக் கொண்டு இராமாயணத்தை இதுவரையில் விமர்சித்துக் கொண்டிருந்தவன், இனியும் விமர்சிக்க இருப்பவன். இதை நான் இங்கே வெளியிட வந்தது ஆச்சரியமில்லை. இதை வெளியிட என்னை வீரப்ப மொய்லி அழைத்ததுதான் ஆச்சரியம்.

தி.மு.க. காங்கிரசிடையே ஏற்பட்ட அலையன்ஸ் எப்படி இது முடிந்தது என்று பார்த்தால், இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருப்பவர்கள் அலையன்ஸ் பதிப்பகத்தார். எனக்கும் வீரப்பமொய்லிக்கும் அய்ந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த அலையன்ஸ் அதன் அடையாளம்தான் இந்த விழா என்று சொன்னால் அது மிகையாகாது. அலையன்ஸ் என்றாலே காங்கிரஸ் - தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த அலையன்ஸ் தான் ஞாபகத்திற்கு வரும். அதை வெளிப்படுத்துகின்ற வகையில் புத்தக வெளியீட்டாளர்கள், அந்த அலையன்ஸ்ஸின் பெயரால் என்னை அழைத்து இதை வெளியிடச் செய்திருக்கிறார்கள்.

வெளியிட்டிருக்கின்ற புத்தகத்தில் முதல் பாகத்தின் பெயர் - இராமாயணப் பெருந்தேடல் என்பதாகும். தேடல்கள் என்றால், கண்டுபிடிக்க முடியாமல், இந்த நூலிலே புதைந்து கிடக்கின்ற கருத்துகளைத் தேடியெடுத்து மக்களுக்கு உணர்த்துகின்ற அந்தப் பணியை வீரப்ப மொய்லி அவர்கள் இந்த நூலின் மூலமாகச் செய்திருக்கிறார்கள். அவர்கள் கன்னட மொழியிலே எழுதிய இராமாயண மகான்வேஷனம் என்ற காவியம் 5 தொகுதிகள் கொண்ட கவிதை நூலாக வெளிவருகிறது. அதிலே முதல் தொகுதிதான் இன்று இந்த மண்டபத்திலே வெளியிடப்பட்டுள்ளது.

இலக்கியப் படைப்புகளுக்காக 2000 ஆம் ஆண்டில் அமீன் சத்பவனா விருது பெற்றவர் நம்முடைய வீரப்ப மொய்லி அவர்கள். 2002 ஆம் ஆண்டில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பெயரால் அமைந்த விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த பன்முகத் தன்மை கொண்ட அரசியலிலும், இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கும் திரு. வீரப்ப மொய்லி அவர்கள் படைத்துள்ள இராமாயணக் காவியத்தின் முதல் பாகம் இன்று தமிழில் ஆற்றல் மிகு இருவரால் மொழி பெயர்க்கப்பட்டு உங்கள் முன்னிலையிலே வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த முதல் பாகத்தில், இராமாயணக் கதையின் தொடக்கம் முதல், இராமன் அயோத்தி நகர் விட்டுக் கானகம் சென்றபின், பரதன் இராமனைத் தேடி வந்து நாட்டுக்குத் திரும்ப அழைத்தபொழுது,இராமன் மறுத்துவிடவே, அவனது பாதுகையைப் பெற்று பரதன் நாடு திரும்பியது வரை எடுத்துரைக்கப் படுகிறது. அதைத்தான் நம்முடைய அவ்வை நடராஜன் அவர்கள் சொல்லும்போது, எங்களுடைய கலைஞர் பரதாயணம் எழுதியவர் என்று சொன்னார். பரதாயணத்தின் கதைக் குறிப்பு என்னவென்றால், ராமன் காட்டுக்குப் போனால், காட்டில் கடும் வெயிலில் துன்பப்படுகின்ற நேரத்தில், அவன் காலுக்கு அணியக் கூடிய பாதுகையையும பரதன் போய் பிடுங்கிக் கொண்டு வந்துவிட்டான் என்று நான் பரதனை குறைகூறி எழுதிய அந்தப் புத்தகத்திற்குப் பெயர்தான் பரதாயணம். இராமாயணம், பரதாயணம் என்ற அந்தப் பெயரிலே வெளிவந்தவை. அந்த நூல்கள் அதைத்தான் அவ்வை அவர்கள் இங்கே சுட்டிக் காட்டினார்கள்.


வீரப்ப மொய்லியின் சிந்தனைகள் புரட்சி எரிமலையாக வெடித்திருக்கின்றன


வீரப்ப மொய்லி அவர்களின் சிந்தனைகள் இந்த நூலில் எப்படி இழையோடி புரட்சி எரிமலையாக வெடித்துச் சிதறியிருக்கின்றன என்பதை ஓரிரு பாடல்களில் அல்ல, பல பாடல்கள் வாயிலாக அவரே இயற்றி, மொழி பெயர்க்கப்பட்ட பல பாடல்களின் வாயிலாக என்னால் உணர முடிந்தது.

தசரத மன்னன் தனக்குப் பிறகு நாட்டை ஆளுவதற்கு வாரிசு இல்லையே என ஏங்கி, ரிஷிய சிருங்க முனிவரைக் கொண்டு யாகம் நடத்துகிறான். அந்த யாகத்தின்போது வந்தோர்க்கெல்லாம் உண்ணும் உணவோடு, பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்கினான். அவ்வேளையில் கிழிந்த உடையோடு கடும்பசியால்

வறுத்தெடுத்த வயிறுடன், பசியால் சோர்ந்தழுகிற மகனோடும், கசிந்த கண்ணீரோடும் இரவலன் ஒருவன் யாகசாலைக்கு வந்தனன். சேவகன் பாய்ந்து வந்து அவர்களைப் பிடித்து வெளியே தள்ளினான். மகனோடு தரையில் வீழ்ந்த அந்த இரவலன் எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்தபடியே அருகில் கிடந்த எச்சில் இலைகளில் கிடைத்த மிச்சம் மீதிகளை உண்டு தன் மகனுக்கும் ஊட்டினான்.

இக்காட்சியை வீரப்பமொய்லி அவர்கள் இந்த நூலில் பக்கம் 58 இல் எழுதியிருக்கிறார். அந்தக் காட்சியைக் கண்டு அவர் அடைந்த அதிர்ச்சியை தசரதன் மீது வைத்து, தசரதன் அதிர்ச்சி அடைந்து கூறுவதாக எழுதியுள்ளார். அந்தக் கவிதை வரிகள் என் உள்ளத்தையும் கவர்ந்த காரணத்தால் உங்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன்.

களைகள் மண்டியுள எங்கெங்கும், ஏனிந்த களங்கமிகு வர்க்க வேறுபாடு? கட்டியதார் துளைக்க முடியாத வறுமைக் கோட்டை? துரிதமாய் அழித்துவிடுங்கள்; சுட்டெரியட்டும் வேற்றுமையின் சமாதிகள் மீட்டெழக்கூடாது யாகம் செய் வேதியர் முதல் சூத்திரர் வரை யோகமுடை கோடி மாந்தர் அனைவரும் நிகர், நிகர், நிகர், எல்லோரும் நிகர்தான் என்று தசரதன் கூறியதாக வீரப்ப மொய்லி கூறுகிறார். இதுதான் பழைய இராமாயணங்களுக்கும், இன்று வீரப்ப மொய்லி எழுதிய இராமாயணத்திற்கும் உள்ள வித்தியாசம். இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கு நான் ஏன் வந்தேன் என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறதா?

இப்படிப்பட்ட அற்புதமான விளக்கங்கள், கவிதை வாயிலாக பொதுவுடைமைத் தத்துவங்களை, ஏழைகளின் வாழ்விலே ஏற்படுகிற இன்னல்களை - அவன் ஒரு வேளை சோற்றுக்குத் திண்டாடுவது மாத்திரமல்ல, ஒரு கவளம் சோற்றுக்கும் திண்டாடி, எச்சில் இலைகளிலே பொறுக்குகின்ற அந்த அநியாயத்தை வீரப்ப மொய்லி அவர்கள் இதிலே கண்டித்திருக்கிறார்.

குற்றவாளி அகலிகையா? இந்திரனா?


குறிப்பாக இந்த இராமாயணக் காதையில் அவர் தனக்குள் எழுந்த பல கருத்துகளை வெளியிட அஞ்சாமல், அவைகளை கவிதைகள் வாயிலாக வெளியிட்டிருக்கிறார். இராமாயணம் ஒரே கதை என்று சொல்லப்பட்ட போதிலும் அதில் சில குறிப்பிட்ட அம்சங்களை வேறுபாடாக ஒவ்வொரு நூல் ஆசிரியர்களும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக வால்மீகி ராமாயணத்தைத் தொடர்ந்து தமிழிலே எழுதிய கம்பர், தனது கம்ப ராமாயணத்தில், கவுதம முனிவரின் மனைவி அகலிகையைப் பற்றிக் கூறும்போது, இந்திரன் அகலிகையின் அழகில் மயங்கி, கவுதவ முனிவராக உருமாறிச் சென்று வஞ்சகமான முறையில் அகலிகையைக் கூடுகிறான் என்றும், இதனை அறிந்த கவுதம முனிவர் அகலிகையைக் கல்லாகச் சபிக்கிறார் என்றும் அந்தக் காதை முடிகிறது. அப்போது கல்லாக மாறிய அகலிகை, இராமன் காட்டுக்கு வந்தபோது அவன் கால்பட்டு மீண்டும் தனது உருவை அடைந்து கவுதம முனிவரோடு சேர்ந்து வாழ்ந்தாள் என்றும் கூறியுள்ளார். இது நம்முடைய வீரப்ப மொய்லி அவர்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய சம்பவமாக இல்லை. ஒரு பெண் எந்த அளவிற்கு இழிவு படுத்தப்படுகிறாள் என்ற ஆத்திரம் பீறிடுகின்ற காரணத்தால், அவர் இதை மாற்றி எழுதுகிறார். எப்படி மாற்றி எழுதுகிறார் என்றால், அகலிகை சாபம் பெற்று கஷ்டப்பட்டாள். ஏனென்றால் அவளுக்குரிய தண்டனை அது என்று முனிவரால் சபிக்கப்பட்ட அந்தச் செய்தியை அவர் அப்படியே விட்டுவிட்டு, இதிலே குற்றவாளி அகலிகையா, தேவேந்திரனா என்று கேட்டு, இந்திரன்தான் குற்றவாளி என்று ஆண் வர்க்கத்தையே சாடுகிறார் நம்முடைய கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் வீரப்ப மொய்லி அவர்கள். ஒரு நீதியை பெண்ணுக்கு வழங்குகிறார். அந்தப் பெண் கையறு நிலையிலே இந்திரனிடம் தவறு இழைக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளானாள் என்று இவர் எழுதுகிறார். வால்மீகி ராமாயணத்தில் வந்த அகலிகை வேறு கம்பராமாயணத்தில் காட்டுகின்ற அகலிகை வேறு ராஜாஜி எழுதிய ராமாயணத்திலே காட்டப்படுகின்ற அகலிகை வேறு ஆனால் நான் இதோ காட்டுகின்ற அகலிகை தவறு இழைக்குமாறு செய்யப்பட்ட பெண் என்று இந்திரன் மீது கடும் கோபத்தைக் காட்டுகிறார்.

அகலிகை தவறு செய்ய தூண்டப்பட்டு சபிக்கப்பட்டவள் என்றார் துளசிதாசர்

கவுதம முனிவர் வேடம் போட்டு வந்தவர் இந்திரன்தான் என்பதை அகலிகை பிறகு உணர்ந்தும் கூட அகலிகை அதற்கு சம்மதித்தாள் என்பது கம்ப இராமாயணம். கம்ப இராமாயண பக்தர்கள் யாராவது இருந்தால் என்மீது கோபித்துக் கொள்ளக்கூடாது. உள்ளதைத்தான் சொல்கிறேன். இந்த விவரங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டு, சபிக்கப்பட்டாள் என்ற அளவோடு துளசிதாசர் இராமாயணம் முடிகிறது. வால்மீகி இராமாயணத்தை மூதறிஞர் இராஜாஜி அவர்கள் சக்ரவர்த்தி திருமகன் எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள இராமாயணத்தில், அகலிகைக்குத் தீங்கிழைத்த இந்திரன் மீது கோபம் கொண்டு, கவுதம முனிவர், மூடனே! என் வேஷத்தைத் தரித்துக் கொண்டு ஆசிரமத்திற்குள் புகுந்து தகாததைச் செய்தாய்! நீ நபும்சகனாய் போவாய்! என்ற சாபமிட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.

அதே போல, அகலிகைக்கு கவுதம முனிவர் இட்ட சாபம் குறித்து, அகலிகையே நீ இங்கே நீண்ட காலம் காற்றே உணவாக, ஏதொரு ஆகாரமுமின்றிச் சாம்பல்மேல் படுத்து, யார் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்து வசிப்பாயாக. பல காலம் கழித்து இவ்விடம் தசரதன் மகன் ஒருநாள் வருவான். அந்த வீரன் இந்த ஆசிரமத்தில் கால் வைக்கும் போது உன் பாவம் நீங்கும். நீ அவனை அதிதியாக வரவேற்று உபசரிப்பாய். அப்போது உன்னுடைய இயற்கை குணத்தையும், காந்தியையும் (அழகையும்) மறுபடியும் அடைந்து என்னுடன் வாழ்வாய்என்று அகலிகைக்கு கவுதம முனிவர் சாபமிட்டுவிட்டு, இமயமலைக்குச் சென்று தவம் இருந்தார் என்று மூதறிஞர் இராஜாஜி எழுதியுள்ளார். இதைப் பார்த்தால், இரண்டுக்கும் ஆண்தான் காரணம். அவளைக் கற்பழித்து, அவளை ஒழுக்கமற்றவளாக ஆக்கி, அகலிகை புனிதமானவள் அல்ல என்று செய்ததும் ஆண். பிறகு அந்த அகலிகையின் ஆசிரமத்திற்குள் நுழைந்து, காலை வைத்து, சாபவிமோசனம் செய்ததும் ஆண். ஆக சாபம் கொடுக்கக் காரணமானவன் ஆண், விமோசனத்திற்கும் காரணமானவன் ஆண் ஆகவே அங்கே ஆண்மைதான் கொடி கட்டிப் பறக்கிறது. இதை நம்முடைய வீரப்ப மொய்லி அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவேதான், ஆண்மைக்கு தரப்படுகின்ற பெருமையை அவர் ஏற்றுக் கொள்ளாமல் இந்திரன் செய்ததுதான் கொடுமை என்பதை எடுத்துரைத்து மொய்லி கவிதை எழுதியிருக்கிறார்.


நல்லோர்நிறை சபையிது அறம்மீறியோனுக் களிப்பீர்

நடுவுநிலை மையோடு தண்டனை; பாரில்

பல்லோர் போற்றும் தேவ அரியணை உரித்தன்று.

பதவி விலகவேண்டும் அவன்

நல்லவர்கள் நிறைந்த இந்தச் சபையில் தர்மம் மீறிய இந்திரனுக்கு நடுநிலையோடு தண்டனை அளிப்பீர் - பதவி விலகவேண்டும் என்கிறார். வீரப்ப மொய்லி அவர்கள் அமைச்சராக பல பொறுப்புகளிலே இருந்த காரணத்தால், அவர் இடுகின்ற சாபம், உடனடியாக அவன் பதவி விலக வேண்டும் என்று இந்திரனுக்கு தண்டனை அளிக்கிறார். ஆனால் அவையில் அகலிகை மீது குற்றம் சுமத்தி,

அகலிகை தண்டத்துக் குரியவள். இந்திரன்

அப்பாற்பட்டவன் தண்டனைக்கு மன்னிப்போம்!

என்று அந்த அவையிலே சிலர் கூறுகிறார்கள். ஆனால் வீரப்ப மொய்லி எழுதும்போது,

கெட்டவனால் நடந்துளது கொடுமை; எப்படி

களங்கமடையும் ஆசிரமம்? எங்ஙனமவள் கெட்டனள் ஒழுக்கத்தில்? என்று மொய்லி அவர்கள் வாதமும், எதிர் வாதமும் நடத்தி அகலிகையைக் குற்றமற்றவள் பெண்மைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் இதுவும் ஒன்று என்பதை எடுத்துக் காட்டுகிறார்.


இவ்வாறு பல புரட்சிகரமான பாடல்கள் நம்முடைய மொய்லி அவர்களின் தீவிரமான கருத்துகள் பெண்களுக்கு அவர் தருகின்ற உரிமை அவர்கள் சார்பாக இவர் முழங்குகின்ற உரிமை முழக்கம் - பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்பதற்காக அதனைச் சொல்கின்ற நேரத்தில் அகலிகை கையறு நிலையிலே இருந்தாள் என்று எழுதி அகலிகையைக் காப்பாற்றுகிறார்.

கிருபானந்த வாரியாரைப் புகழ்ந்து பேசியிருக்கிறேன்

வீரப்பமொய்லி அவர்களுக்கு பெண்ணுரிமையிலே கொண்ட அந்த ஆர்வத்தின் காரணமாக அவர் அகலிகையைக் காப்பாற்ற முனைகிறார். ராஜாஜி காப்பாற்றவில்லை. - என்னைப் பொறுத்த வரையில் காப்பாற்ற முடியவில்லை. நான் இங்கே இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டது விவாதப் பொருளாக ஆகிய நேரத்தில் நான் எண்ணிக் கொண்டேன்.

நான் முன்னுரையாக, முகவுரையாக என்னைப் பற்றி சில சொல்ல வேண்டுமென்று நினைத்தாலும், அதை முடிவுரையிலேதான் இப்போது சுட்டிக் காட்ட விரும்புகிறேன். என்னுடைய பால பருவத்தில் நான் தீவிரமான பகுத்தறிவு வாதி. இப்போது இல்லை என்று அர்த்தமல்ல. தொடர்கிறது அது, தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட இளமையிலே பகுத்தறிவு வாதியாக இருந்த நான் இன்றைக்கு தமிழ் ஞாலம் போற்றுகிற - ஞானப் பழம் என்று என்னாலேயே ஒரு முறை வர்ணிக்கப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியாரிடத்திலேயே வாதிட்டிருக்கிறேன்.

வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேலூருக்கு அருகேயுள்ள காங்கேய நல்லூரில் அவருடைய சிலையைத் திறந்து வைத்து அவர் பெயரால் உள்ள மண்டபத்தைத் திறந்து வைத்து - அதைப் போலவே சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரிக்கு முன்னால் அவருடைய மாபெரும் சிலையைத் திறந்து வைத்து அவரைப் பற்றி புகழ் பாடியவன்தான் நான். இன்றைக்கும் அவருடைய தமிழ் அறிவுக்கு மதிப்பு அளித்து ஒரு திருப்புகழில் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டால், ஒரு மாதம் அந்தச் சொல்லுக்கு விளக்கம் அளிப்பாரே, அந்தஆற்றலை வியந்து போற்றக் கூடியவன் நான். ஆனால், என்னுடைய உள்ளத்திலே பெரியார் விதைத்த பகுத்தறிவு விதை அது என்றைக்கும் முளை விட்டுக் கொண்டே இருக்கும் அது காயாமல் கருகாமல் இன்றைக்கும் இருக்கிறது. இளமைப் பருவத்தில் அந்த விதை முளைத்துக் கொண்டே இருந்த காரணத்தால் நான் பள்ளியிலே பயிலும்போது நம்முடைய ஜி.கே.வாசன் அவர்களின் தந்தை மூப்பனார் என்னுடைய தோள் மீது தோள் போட்டுக் கொண்டு பழகுகின்ற நண்பர் அவர். இன்றைக்கு இவர் பெரிய பிள்ளையாகி மத்தியில் மந்திரியாகிவிட்டார். நான் முதலமைச்சராக ஆகிவிட்டேன். மூப்பனார்தான் குமரியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் - குமரிக் கடல் நடுவே 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலையைத் திறந்தபோது ஒரு புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார். நீ வெற்றி பெறுவாய் என்பது புத்தகத்தின் தலைப்பு. என்ன நேரத்தில் என்ன நோக்கத்தோடு கொடுத்தாரோ தெரியவில்லை வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறேன். அது மூப்ப-னார் தந்த வாழ்த்து. அதை யாரும் மாற்ற முடியாது என்பதற்கு அடையாளமாக அந்தப் புத்தகம் என்னிடத்திலே இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. ஏன் இதைச் சொல்கிறேன் தெரியுமா? நான் கிருபானந்தவாரியார் பற்றி சொன்னேன் அல்லவா? அவர் ஞானப்பழம், அறிவுக் களஞ்சியம். அவர் படிக்காத நூல் இல்லை. அவரிடத்திலே வந்து கற்காத சான்றோர் இல்லை, பெரியோர் இல்லை, புலவர்கள் இல்லை. அப்படிப்பட்டவர் நான் இளைஞனாக, பள்ளி மாணவனாக இருந்தபோது அடிக்கடி திருவாரூருக்கு வருவார். திருவாரூரில் ஆலையத்தில் ஆயிரக்கால் மண்டபத்தில் அவருடைய நிகழ்ச்சி நடைபெறும். ஒரு முறை அப்பர் திருவிழாவிற்காக பேச வந்திருந்தார். நாங்கள் மாணவர்கள் எல்லாம் என் தலைமையிலே சென்று அங்கே அமர்ந்திருந்தோம்.

பேசும்போது அவர் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசினார். அப்பர் திருநாள் என்பதால், புலால் சாப்பிடக் கூடாது, உயிர்களைக் கொல்லக்கூடாது என்று அவர் பேசிக்கொண்டு வரும்போதே, நான் எழுந்து அப்படியானால் மனிதர்களுக்கு நீங்கள் இந்த உபதேசத்தைச் செய்கிறீர்கள். இது எல்லா உயிர்களுக்கும் பொதுவானதா என்று கேட்டபோது, அவர் ஆமாம் என்று சொன்னார். சாப்பிடுவதற்காக எந்த உயிரையும் ஆண்டவன் படைக்கவில்லை. ஆடு மாடு கோழி போன்றவைகளையெல்லாம் சாப்பிடுவதற்காக ஆண்டவன் படைக்கவில்லை என்றார். நான் எழுந்து சிங்கம், புலி சாப்பிடுவதற்காக ஆண்டவன் எந்த விலங்கைப் படைத்தான் என்று கேட்டேன். அவ்வளவு பெரிய அவையிலே ஒரு சின்னப் பையன் எழுந்து அப்படி கேட்டது தவறுதான். ஆனால் கேட்ட கேள்வியிலே இருந்த தத்துவம் தவறானது அல்ல. அதைப் புரிந்து கொண்ட வாரியார் அவர்கள் உட்கார், உட்கார் பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுஅப்போது சொல்ல முடியவில்லை முடியாது யாராலும் அதனால் அப்போது சொல்லவில்லை சொல்லிவிட்டு தொடர்ந்து சொல்லும்போது, அந்த உயிர்கள் வாழ்வதற்காக எந்த உயிரையும் ஆண்டவன் படைக்கவில்லை என்று சொன்னேன். சில குறும்புக்கார பையன்கள் குறுக்கிட்டு ஏதோ கேட்டு விட்டார்கள். அவர்கள் எல்லாம் வேறு ஆள்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் நான் பதில் சொல்லவில்லை என்று சொல்லிவிட்டு பிறகு சொன்னார். சின்னப்பையன் அப்படிக் கேட்பான், தாவரங்களிலே முருங்கைக்காய், கத்திரிக்காய் என்றெல்லாம் இருக்கிறது. தாவரங்களைச் சாப்பிடுவதால் உயிர்களுக்கு ஆபத்தில்லையா என்று கூட பையன் கேட்பான். அப்படி தாரவங்களை சாப்பிடுவதால் உயிர்களுக்கு ஆபத்தில்லை. ஏனென்றால் முருங்கைக் காயைச் சாப்பிடுவதால் மரம் சாகாது; கத்திரிக்காயைச் சாப்பிடுவதால் செடி சாகாது, ஆகவே அது பாவம் இல்லை என்றார். நான் விடவில்லை. எழுந்து கீரைத் தண்டை அப்படியே பிடுங்கி, அடியோடு சாப்பிடுகிறார்களே, முழுதும் சாகவில்லையா என்று கேட்டேன். (பலத்த கைதட்டல்) இப்படித்தான் அன்றைக்கும் எல்லோரும் கைதட்டினார்கள். சிலர் கெக்கலி கொட்டினார்கள். இருந்தாலும் நான் அந்தப் பெரியவர் மீது வைத்திருந்த மரியாதையை இன்றளவும் இழக்காமல், மாற்றிக் கொள்ளாமல் அவர் என்ன செய்வார், நிலை அப்படி இருக்கிறது. கருத்துகள் அப்படி இருக்கின்றன. பழைய ஏடுகள் அப்படி இருக்கின்றன. இப்படித்தான் அவர் நடந்துகொள்ள வேண்டும், அப்படி நடப்பதில் அவர் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார் என்ற அளவில் கிருபானந்தவாரியார் மீது கொண்ட மதிப்பை நான் இன்றளவும் மாற்றிக் கொள்ளவில்லை. இப்போதும் மாற்றிக் கொள்ளவில்லை. இனியும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

ஏன் இவற்றை சொல்லு கிறேன் என்றால், இளமையிலேயே ஊறிய பகுத்தறிவு, அதன் காரணமாக எழுகின்ற சில கேள்விகள், அந்தக் கேள்விகள் இராமாயணத்தைப் பற்றியும் வெளி வந்திருக்குமேயானால், அதிலே முதல் பாகத்தை எழுதிய நம்முடைய வீரப்ப மொய்லி அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, நான் அவர் எழுதிய இராமாயணம் என்ற நூலைப் பொறுத்துக் கொண்டிருப்ப தற்குக் காரணம் எரிமலை போன்ற கருத்துகளை பெண்ணுரிமைகளை நிலை நாட்டுகின்ற கருத்துகளை ஏழை எளிய மக்களுடைய வாழ்விலே இருக்கின்ற கஷ்டங்களை, அவர் வர்ணித்திருக்கின்ற அந்தக் கருத்துகளை நான் பாராட்டுகிறேன்
. அதற்காக நான் அவரை வணங்குகின்றேன், வாழ்த்துகின்றேன். இந்த நூலை வெளியிடுவதிலே பெருமை அடைகிறேன் என்று கூறி, இந்த அளவிலே நிறைவு செய்கிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.


------------------நன்றி:- "விடுதலை" 20-7-2009

3 comments:

ttpian said...

ஆகா!
நோகாமல் நோண்பு!
பிழைக்க வழி தெரிந்த பெரியார் பேரன்!

கருத்து: said...

innumaa ivarai nallavannu namburae?tamil oviyaa.aiyyo!aiyyo!

தமிழ் ஓவியா said...

// நெருப்பு said...

innumaa ivarai nallavannu namburae?tamil oviyaa.aiyyo!aiyyo!//

"உன்னுடைய கருத்துகளில் ஒன்றுடனோடுகூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அக்கருத்துகளைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்” வால்டயர்.

நன்றி நெருப்பு