Search This Blog

13.7.09

உலக நாடுகள் தூரப்பார்வை-மியான்மா-நமீபியா-நாவ்ரு


மியான்மா

பர்மா என முன்பு அழைக்கப்பட்ட நாடு மியான்மா. 16,17 ஆம் நூற்றாண்டுகளில் இந்தப் பகுதிக்குள் நுழைந்த பிரிட்டிஷ், போர்த்துகீசிய, டச்சு நாட்டினர் பெருமளவில் வணிகம் செய்தனர். 18 ஆம் நூற்றாண்டில் தற்போதைய மியான்மா நாடு பர்மா என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. 1885 இல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டு, இந்திய நாட்டின் ஒரு மாகாணமாக ஆக்கப்பட்டது.

1935 இல் பிரிட்டிஷ் அரசால் நிறைவேற்றப்பட்ட இந்தியா சட்டம் 1935 இன்படி பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டு தனி நாடாகியது. பாரதமாதா என்கிற படத்தின் இடது கையாகவும் சேலையின் முன்தானை தொங்குவதாகவும் வரையப்பட்ட பாகம் பர்மாதான். பிரிக்கப்பட்ட காரணத்தால் பாரதமாதா வின் இடது கை அற்றுப் போய்விட்டது எனலாம்.
இரண்டாம் உலகப் போரின்போது இந்நாடு ஜப்பானின் கைவசம் போய், அவர்களின் ஆட்சியில் அடங்கியது. போரில் நேசநாடுகள் வெற்றி பெற்று, அச்சு நாடுகளில் ஒன்றான ஜப்பான் தோற்கடிக்கப் பட்டு பர்மா மீண்டும் பிரிட்டன் ஆட்சியில் வந்து சேர்ந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு இலங்கையைப் போலவே பர்மாவும் விடுதலை பெற்றது. 4.-1-.1948 இல் பிரிட்டிஷார் பர்மாவுக்கு விடுதலை அளித்தனர்.

விடுதலை பெற்றும் பர்மா சுதந்திரமாக விளங்க முடியவில்லை. பிரதமராக ஆங்சான் ஆட்சி நடத்திய போது ராணுவப் புரட்சியின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டு ராணுவத் தளபதிகளின் ஆட்சி நடந்து வருகிறது. காலஞ்சென்ற பிரதமர் ஆங்சானின் மகள் சூகிய் என்பவர் விடுதலை உணர்ச்சியைத் தூண்டி மக்கள் எழுச்சிக்குக் காரணமாக இருக்கிறார் என்பதால்தான் அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது இராணுவ ஆட்சி.

நாட்டுக்கோட்டை நகரத்தார் பர்மா நாட்டுக்குச் சென்று வணிகத்திலும் வட்டித் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர். வெளி நாட்டுக்காரர்களால் பர்மாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதால் அவர்களை வெளியேற்றிவிட்டனர் பர்மியர்கள்.

6 லட்சத்து 78 ஆயிரத்து 500 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 4 கோடியே 75 லட்சம். மக்களில் 85 விழுக்காட்டினர் பவுத்தர்கள். கிறித்துவர் களும், முசுலிம்களும் தலா நான்கு விழுக்காடு உள்ளனர். பர்மிய மொழி பேசப்படுகிறது.

85 விழுக்காடு மக்களே படிப்பறிவு பெற்றவர்கள். நாட்டின் தலைநகர் ரங்கூன் என அழைக்கப்படும் யாங்கோன். நாட்டின் அதிபர் ராணுவத் தளபதி ஆட்சித் தலைவராகப் பிரதமர் உள்ளார்.

நாட்டில் வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ள மக்கள் 25 விழுக்காடு. 5 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

நமீபியா

15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நமீபியா நாட் டுக்கு வந்த அய்ரோப்பியர்களில் போர்த்து கீசியர்கள்தான் முதலில் குடியேறியவர்கள். நமீபியா நாட்டின் தற்போதைய எல்லைக் கோடுகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் போர்த்துகல், பிரிட்டன், ஜெர்மனி நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி வரையறுக்கப்பட்டன.

அதன் பிறகு தென்மேற்கு ஆப்ரிகா எனும் பெயரில் ஜெர்மனி இதனை தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. விடுதலை உணர்வுடன் தொடங்கிய மக்களின் எழுச்சியையும் கிளர்ச்சிகளையும் ஜெர்மனி அரசு இரும்புக் கரம் கொண்டு வன்முறைகளைக் கையாண்டு அடக்கி ஒடுக்கியது. அதன் விளைவாக ஹெரெரோ மற்றும் நாமா இனத்தவர்களில் 90 விழுக்காட்டினர்க்கு மேல் அழிய நேரிட்டது.

முதல் உலகப் போரின்போது, தென்ஆப்ரிக்க நாடு படையெடுத்து, தென்மேற்கு ஆப்ரிக்காவை 1914-15 இல் கைப்பற்றிக் கொண்டது. 1920 இல் தென்மேற்கு ஆப்ரிக்காவை ஆளும் பொறுப்பை தென் ஆப்ரிக்க நாட்டுக்கு உலக நாடுகள் அமைப்பு வழங்கியது.

1961 இல் உலக நாடுகள் மன்றத்தில் பொது அவை தென் ஆப்ரிக்க நாட்டின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றமுடிவை எடுத்து தென்மேற்கு ஆப்ரிகாவின் ஆளுகையை அகற்றி விடுதலை அளிக்கப்படப் போவதாக அறிவித்தது. 1968_இல் தென்மேற்கு ஆப்ரிக்கா எனும் பெயரை அதிகார பூர்வமாக அகற்றிவிட்டு நமீபியா எனும் பெயரைச் சூட்டியது.
1990 மார்ச் மாதம் 21 ஆம் நாள் நமீபியாவுக்கு விடுதலை அளிக்கப்பட்டது.

அங்கோலாவுக்கும் தென்ஆப்ரிகாவுக்கும் இடையில் தென் அட்லான்டிக் மாக்கடலில் கரையில் ஆப்ரிகக் கண்டத்தின் மேற்குக் கரையில் அமைந்துள்ள நமீபியாவின் பரப்பு 8 லட்சத்து 25 ஆயிரத்து 418 சதுர கி.மீ. இதன் மக்கள் தொகை 2 கோடியே 45 லட்சம் ஆகும். மக்களில் 80 முதல் 90 விழுக்காட்டினர் கிறித்துவர்கள். மீதிப் பேர் ஆப்ரிக்கப் பழங்குடி நம்பிக்கைகளைக் கொண்டவர்கள். ஆப்ரிக்கான் மொழி பேசுபவர்கள் 60 விழுக்காட்டினர். வெள்ளையர்களும் இம்மொழி பேசுபவர்கள். இங்கிலீசு பேசுபவர்கள் 7 விழுக்காடுதான். ஆனால் அதுதான் ஆட்சி மொழி. ஜெர்மன் மொழி பேசுபவர்கள் 32 விழுக்காட்டினர்.
84 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள். குடியரசு நாடான இந்நாட்டில் குடியரசுத் தலைவரும் ஆட்சித் தலைவராகப் பிரதமரும் உள்ளனர். 35 விழுக்காடு மக்கள் நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் என அய்.நா. மன்றக் குழு ஒன்று ஆய்வு நடத்தி அறிவித்துள்ளது. 35 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாமல் உள்ளனர்.

நாவ்ரு (Nauru)

ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கே பசிபிக் மாக் கடலில் உள்ள நாவ்ரு தீவை மார்ஷல் தீவுகளுடன் சேர்த்து பாதுகாக்கும் பொறுப்பினை ஜெர்மனி 1888 இல் எடுத்துக் கொண்டது. முதல் உலகப் போரில் ஆஸ்திரேலியப் படையினர் தீவைக் கைப்பற்றி ஜெர்மனியர்களை விரட்டியடித்தனர். 1920 இல் உலக நாடுகள்அமைப்பின் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறி-விக்கப்பட்டது. ஆஸ்திரேலியா பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நாடுகள் இதற்கான பொறுப்பு நாடுகளாக அறிவிக்கப்பட்டன.1968 ஜனவரி 31 இல் விடுதலை அளிக்கப்பட்டது.
இத்தீவின் பரப்பளவு 21 சதுர கி.மீ. மக்கள் தொகை 14 ஆயிரம். அனைவரும் கிறித்துவர்கள். நவ்ருவன் மொழிதான் ஆட்சி மொழி. இங்கிலீசு பரவலாகப் பேசப்படும் மொழி. குடியரசு நாடு. குடியரசுத் தலைவர் ஆட்சித் தலைவராகவும் உள்ளார். ஆஸ்திரேலிய நாட்டு டாலர்தான் இங்கும் நாணயமாக உள்ளது.

------------------ "விடுதலை" 10-7-2009

0 comments: