Search This Blog

5.1.09

ஓ! இந்தியா! நினது தலைவிதி! " ஸர்வம் பிராமண மயம்!"


(1917 ஆம் ஆண்டு இந்தியாவில் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் ஆதிக்கம் செய்து வந்துள்ளார்கள் என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளது இக்கட்டுரை. அருள் கூர்ந்து அந்தக்காலகட்டத்தையும், இந்த்க் காலகட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பார்ப்பனர்கள் அன்றிலிருந்து இன்று வரை திருந்தவில்லை அப்படியே தான் இருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரையில் சொல்லியுள்ள இடஒதுக்கீடு பிரச்சினை மூலம் அறியலாம். எனவே வாசகர்கள் ஊண்றிப் படித்து உண்மையை உணரவும்.)

****************************************
இந்தியா என்னும் சுதந்திரத் தேசமே! உந்தன் தலைவிதி என்னவென்றுரைப்போம்! எங்கும் பிராமண மயம்! உல்லா விடங்களிலும் பார்ப்பார் அதிகாரம்! உத்தியோகசாலைகளில் அகப்படக்கூடும் உத்தியோகங்களெல்லாவற்றிற்குமே ஏகபோகமிராசாய் இவர்கள் ஏகாதிபத்தியம் செலுத்துகிறார்கள்! அட்டெண்டர் வேலை முதல் அக்கவுண்டண்ட் ஜெனரல் வேலை வரைக்கும் ஆனவரைக்கும் வேலைகளை யெல்லாம் ஆக்ராணித்துக் கொள்ள வேண்டுமென்பதே சுயநலப் பிரியர்களாகிய நயவஞ்சகப் பிராமணர்களின் நோக்கமாயிருக்கின்றது, அவர்களுடைய நடவடிக்கையா யிருக்கின்றது.


இப்பொழுது நாம் தாம் இதனைக் கூறுகின்றேமென்பதில்லை! நம் இயக்கமானது நாட்டில் தோன்றுவதற்கு முன்னேயே இந்த உண்மையைப் பத்திரிகைகளில் எடுத்தெடுத்துக் காட்டியிருந்தார்கள்! பிராமணர்கள் வேலைக் கென்று வந்தால் தாவி அணைத்துக் கொள்ளுகிறது; மற்றவர்கள் வந்தால் மாய வித்தை செய்து விடுகிறது! கோயிலில் சடகோபம் கொடுப்பதை நேயர்கள் பார்த்திருக்கிறார்களே! அய்யங்காருக்குச் சடகோபம் அன்புடனே சாதிக்கிறார்கள்; மற்றவர்களுக்குச் சடகோபம் முற்றிலும் வெறுப்போடே தான்! பெறுவதற்கு சடகோபம் அய்யங்காரொருவர் வெகு அமர்த்தலாய் வந்து நிற்கின்றார்! கோயில் அய்யங்கார் குதூகலமாய் வருகின்றார்! வாய் நிறைய நகைப்பும், அவருக்கு முகம் நிறையக் களிப்பும்! குளிர்ந்த முகத்தோடே கோயில் அய்யங்கார், அன்பாகச் சடகோபத்தை அய்யங்காருக்குச் சாதிக்கின்றார். அணைத்துக் கொள்ளாத குறையாய் அய்யங்காருக்குக் கொடுக்கின்றார். தலையில் வைக்கின்றார், தோளில் அமைக்கின்றார்! மற்றவர்களெல்லாரும் சூத்திரப் பயல்கள் நாடகத் தோற்றம் போல், ஒரு நிமிஷத்தில், நகைமுகம் மாறிவிடுகின்றது. அய்யங்காருக்கு, ஆத்திரக் கோலமும் கோபாவேஸமும் அதிகமாய் வந்து விடுகின்றன! தீர்த்தத்தை எடுத்துச் சூத்திரர் மேலூற்றுவதும், திருத்துழாயை எடுத்துத் தலையின்மேற் போடுவதும், குட்டமாட்டாத குறையாய் சடகோபத்தால் பட்டென்று குட்டுவதும் கோயிலிற்காணும் குரூ வழக்கங்களாயிருக்கின்றன! சாதியை ஒழிக்கவந்த சடகோபப் பிரானைக் கொண்டே, பேத புத்தி காட்டிப் பிழை விளைத்து நடப்பது என்ன கொடுமை, என்ன அவிவேகம்! உத்தியோகங்களிலும் இப்படியே ஊறு நேர்ந்து கொண்டு வருகின்றது! எல்லா வேலைகளையும் பிராமணர்களே எடுத்தெடுத்து ஆக்ராணிக்கிறார்கள்! எல்லோர் தலையிலும் ஸ்ரீசடகோபம் சாதிக்க சுய ஆட்சியை இப்போது வெகு மாட்சியாய்க் கேட்கிறார்கள்! சுய ஆட்சி அவர்களுக்குக் கண்காட்சியாய்க் கிடைத்து விட்டால் ஸர்வம் பிராமண மயம் ஜகத் என்பது சரிவர நிறைவேறிவிடும்! முக்கால்வாசி இப்போது பிராமண மயமாயிருப்பது முழுவாசியும் பார்ப்பார மயமாய்விடும்! சூத்திரர்களெல்லோரும், அப்புறம், பாத்திரம் துலக்க வேண்டியதுதான்!


கோயில் அக்கிரமங்கள்! மற்ற கெடுதிகள்!

எங்கு பார்த்தாலும் பிராமணர்களின் ஏகாதிபத்தியமே மிகுத்திருக்கின்றது! உத்தியோக சாலைகளில் அதிகாரம், கோயில் முழுவதும் கோவிந்தம், வீடுகளெங்கும் ஆரவாரம் ஹோ வென்ற கூச்சலும் ஹாவென்ற ஆரவாரமும், பணத்தைத் தட்டலும் பையிற் கொட்டலும் சூத்திரத்தைத் திட்டலும், எங்கெங்கும் நாம் காணும் ஏளனமான தோற்றமா யிருக்கின்றது! கூரத்தாழ்வார் செட்டியார் வருகிறார், கோயிலில் தளிகை விடுகின்றார்! கோதண்டபாணி முதலியார் வருகின்றார்! கூடை கூடையாய்ப் பிரசாதம் செய்யச் சொல்கின்றார்!
கூடைகளெல்லாவற்றையும் கோயிலில் நிரப்புகிறார்கள்! சர்க்கரைப் பொங்கல், சாதாரண வெண்பொங்கல், புளியோ தரைத் தியோதனம், வடை தோசை, வாகான கடலை சுண்டல் - எல்லாவற்றையும் வைத்து எம்பெருமானுக்குக் காட்டு கிறார்கள்! விநியோகம் செய்யத் தொடங்குகிறார்கள்! வேடிக்கை இப்போதுதான் வேண்டிய மட்டும் காணலாம்!


பிரமணர்களுக்குக் கோயிலார் பிரசாதம் கொடுக்கும்போது, கைகொள்ளாத உருண்டைகளாய்ப் பிரசாதத்தை உருட்டி யெடுத்து, அன்பு நிறைந்து அகத்தில் வழியவும், முகத்தில் நகைப்புமிகுத்துப் பெருகவும், மெய்யை வளைத்துக் கையைநீட்டி அள்ளி அள்ளி அவர்கள் மெள்ள மெள்ளக் கொடுப்பார்கள்! மற்றையோரெல்லாரும் வேற்று மனிதர்கள்!
பிராமணரல்லாதவர்களுக்குப் பெருமை என்னவிருக்கின்றது! பணம் கொடுக்கும் போது பெரிய மனிதர்கள் பணம் கொடுத்தானபிறகு சிறிய மனிதர்கள்! பணம் கொடுப்பவர்கள் மாத்திரம் பெரிய மனிதர்களாயிருக்கலாம், பணம் கொடுப்பவர்களின் இனத்தார் சாதாரண மனிதர்களே! இந்த எண்ணத்தைக் கொண்ட பிராமணர்கள் எப்படிப் பிரசாதம் கொடுக் கிறார்கள் பாருங்கள்!
பார்ப்போருக்கெல்லாம் பிரசாதங்கள் பரம் பிரீதியாய்க் கொடுக்க, மற்றவர்களுக்குப் பிரசாதம் கொடுத்தல் மெத்தவும் சுலபமான காரியமாயிருக்கிறது தட்டிலிருந்து பிரசாதம் எடுப்பது எட்டுச் சாதம் கையில் வருவது போல் காணும்! எடுக்கும் எட்டு சாதத்திலும் நாலு சாதம் தட்டிலேயே விழுந்து விடும் கோபம் பெருத்து விடும், அவசரம் மிகுந்து விடும்! கையில் எடுக்கும் எட்டுச் சாதத்திலும் நாலு சாதம் தட்டில் விழ, இரண்டு சாதம் தரையில் விழ, இரண்டும் சாதமே கையில் விழ, இதற்குள்ளாக அய்யங்காருக்கு இருபது கோபம் எழுந்துவிட, பிராமணரல்லாதவர்கள் கோயிலில் படும் பேரவஸ்தையை யாதெனச் சொல்லுவோம்!

கொடுப்பது ஒருவர், இடிப்பது ஒருவர்! பண்டைக் குலத்தைத் தவிர்த்துப் பல்லாண்டு கூறுதுமே என்று பெரியாழ்வார் பாடியதைப் பிராமணர்கள் பின்பற்றுவது இப்படித்தான்! ஆபீஸ்களில் அப்படி, கோயில்களில் இப்படி, வீடுகளில் எப்படி? கலியாணத்திற்கும் அய்யர், கருமாந்திரத்திற்கும் அய்யர், திவசத்திற்கும் அய்யர், நோன்பிற்கும் அய்யர்! ஆபீஸ்களில் புகுவார்கள், வீடுகளில் நுழைவார்கள், கோயில்களில் மறைவார்கள்! எங்கெங்கும் பார்ப்பாரே, எல்லா லாபமும் அவர்களதே! வந்த லாபத்தோடிருக்காமலும், அடைந்த பெருமையோடு நிற்காமலும், மற்றையோரெல்லோரையும் சுத்தக் கேவலமாய் நடத்துவதாலேயே பிராமணரல்லாத நமது இயக்கம் பெரிதும் வேரூன்றி விட்டது! சாதி வித்தியாசம் அடியோடு மறையாமல், பேதபுத்தியென்னவோ மாறப்போகிறதில்லை! அந்த நிலைமை நமக்கு வருகிறவரைக்கும் சுய ஆட்சி நமக்கு வேண்டுவதே இல்லை.


தற்காலம் பொய்யாகத் தோன்றும் தனிப்பெரும் உண்மை!
ஒற்றுமையென்பது உறழ்வுடையது


பஞ்சமர்களென்னும் திராவிடச் சகோதரர்கள் பார்ப்பாரல்லாதாருடைய இயக்கத்திற் சேருவது எல்லோருக்கும் களிப்பைத் தரும் இயல்புடையதா யிருக்கின்றது! பார்ப்பாரல்லா தார் மாத்திரம் பஞ்சமர்களுக்கென்ன செய்து விட்டார்கள் என்னும் கேள்வி சரியான தாகாது. பிராமணரல்லாத மற்றவர்கள் மாத்திரம் தமக்குத் தாம் என்ன செய்து கொண்டார்கள்? எல்லாரும் பிராமண உபதேசத்தில் மயங்கிக் கிடந்தார்கள், கற்பித்துள்ள பேதங்கள்படி காலங்கழித்து வந்தார்கள்! வேற்றுமை உண்டாக்கினார்கள், ஒற்றுமையை அழித்தார்கள், ஒருவர்க்கொருவர் ஒருவிதமாய் நடக்கச் செய்தார்கள்! அப்படிச் செய்த பிராமணர்கள் பேச்சின்படியே அனேக நாள் விஷயங்கள் நடைபெற்று வந்தன!


சுய நலத்தைப் பிராமணர்கள் பெற, மனஸ்தாபத்தையே மற்றவர்கள் கொண்டிருந்தார்கள்! உண்மைக் காரணம் சிறிது சிறிதுதாய் வெளியாயிற்று! பிராமணர்கள் செய்கை பெரிது பெரிதாய்த் தெரியவந்தது! மனக் குழப்பம் பிராமணரல்லாதவர்கள் மனதில் புகைப்பெருக்காய் இருந்து கொண்டிருந்தது! கடைசியாய் வந்தது நம்மனோரியக்கம், பிராமணரல்லாத மற்றையோரின் முயற்சி! நம் இயக்கத்தைக் கலைத்துவிட என்னென்னவோ செய்தார்கள்! சிரித்துக் காட்டினார்கள், சினத்தைக் காட்டினார்கள், நகைத்துக் காட்டினார்கள், பகைத்துக் காட்டினார்கள்! ஒன்றும் பலிக்காது நம்மனோரி யக்கம் நன்றாயோங்கிக் கிளைத்து விடவே, நமக்குள்ளே வித்தியாசங்கள் மிகக் கற்பித்துவிட முயலுகின்றார்கள்! இதுவரைக்கும் ஏமாந்திருந்தது போதாமல் இன்னும் சிலர் ஏமாந்து கொண்டேயிருக்கின்றார்கள்! பிராமணரல்லாத வருக்கு எண்ணிக்கைபடி உத்தியோகங்கள் கொடுக்கமாட்டோமென்றார்கள், சுதந்திரங்கள் தரமாட்டோமென்றார்கள்!


இப்போது தருகிறோம், தருகிறோமென்று நமக்காகப் பாடுபடுகிறார்களாம்! நாம் நன்றாகப் பல்லையிளித்து, அற்ப சந்தோஷத்தில் அகமதுகளித்து, நமது காரியத்தைக் கெடுத்துக் கொண்டு நமது கட்டைக் கலைத்துக் கொண்டு, நெல்லிக்காய் மூட்டைகள் போல் நிலைதெரியா தான பின்னர், இல்லாத ஆக்ஷேபணைகளை எண்ணில்லாமற் கொண்டு வந்து நம்தம் கதியை அதோகதியே ஆக்கி விடுவார்கள்! இப்பொழுதே, இரண்டொரு பிராமணர், ஜனத்தொகைப்படி உரிமை கொடுப்பது, சரிப்படுமா, சாத்தியப்படுமா, வாட்டப்படுமா, நீட்டப்படுமா என்று கல்லைப் போட, பத்திரிகைகளில், மெல்லப் பார்க்கிறார்கள்?
பஞ்சமச் சகோதரர்களே, இவர்களை நம்பாதீர்கள்! பிராமணரல்லாதார் இதுவரைக்கும் என்ன செய்து விட்டார்கள் என்று பிராமணர்களும் அவர்களைப் பின் பற்றிய மற்றையோரும் கேட்பது தவறான கேள்வி, வெளிப் பகட்டான கேள்வி, பார்வைக்கு உண்மைபோற் காட்டிப் படுபொய்யாயிருக்கும் கேள்வி - அந்தக் கேள்வியை நம்பி, பஞ்சமச் சகோதரர்களே, அகம் மருளாதீர்கள்! பஞ்சமருக்கு உள்ளிட்ட பிராமணரல்லாதார் முன்னேற்றத்திற்கு என்று முன்வந்து உழைத்து இவ்வளவு செய்ததும் யாவரென்று இதயத்தில் நீங்கள் இரண்டு நிமிஷம் நினைத்துப் பாருங்கள்! தென்னிந்திய ஜன சங்கத்தார்கள் எவ்வளவோ செய்ததன் பின்தான் அக்கறையோடு சிலர் அதிக உழைப்பு எடுத்துக் கொள்ள வந்திருக்கிறார்கள்!

ஆகையினால், பஞ்சமச் சகோதரர்களே, நம்மவர்களுக்காக முனைந்து பாடுபட்டவர்கள் தென்னிந்திய ஜன சங்கத்தா ரென்று ஏற்கனவே நீங்கள் எண்ணத்தில் பதித்திருப்பது உண்மையே யாதலால் அந்த எண்ணத்தினின்றும் நீங்கள் அணுவளவும் மாறாதீர்கள்! நம்மவர்களை மற்றைப்படிப் பிரிக்க முயன்று பெரிதும் பேசுவது விபரீத ஆபாஸமேயன்றி சரியானதென்று ஒருபோதுமாகாது.


---------------------------- "திராவிடன்", 13.10.1917

2 comments:

Unknown said...

இப்பவரைக்கும் எங்கும் பார்ப்பன மயம். என்று தீரும் இந்த அவலம்?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்