Search This Blog

11.6.14

பார்ப்பான் என் காலில் விழும்படி மகான் ஆகிவிட முடியாதா?-பெரியார்

அரசமைப்புச் சட்டம் மட்டுமல்ல; இந்துலாவையே கொளுத்த வேண்டும்!

நம் நாட்டுப் பத்திரிக்கைக்காரர்கள் முதல் நம்பர் அயோக்கியர்கள். மக்களைக் காட்டுமிராண்டிகளாக, முட்டாள்களாக வைத்திருக்கத்தான் அந்த பத்திரிகைக்காரர்கள் செய்கிறார்கள். மக்களுக்குக் கேடான சோதிடம், ராசிபலன் இவைகளைத்தான் பிரசாரம் செய்து காட்டு காட்டுமிராண்டிகளாகத்தான் வளர்க்க கட்டுப்பாடாகப் பாடுபடுகிறார்கள். நாங்கள் கத்துகிறோம். அது கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரி. நாங்கள் கொஞ்ச நஞ்சம் செய்யும் பிரச்சாரத்தையும் ஒழிக்கவே பத்திரிக்கைக்காரர்கள் இருக்கிறார்கள். சாதியென்பது உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு கொடுமை. சாதி ஒழிந்தாலல்லது நாம் தலைதூக்க முடியாது என்பதுதான் முக்கியமான பிரச்சனை. இந்த நாட்டில் உள்ள 100-க்கு 97-பேராக உள்ள பெரும்பான்மையான மக்களைப் பொறுத்த காரியம். இந்தக் காரியத்திற்கு எங்களைத் தவிர வேறு நாதியில்லை!

எவனாவது நான் சொல்வதைக்கேட்டு வேறு மேடையில் அதை வாந்தியெடுத்து அதை ஓட்டுக்குப் பயன்படுத்துவான். அது தவிர உண்மையாக, இலட்சியத்திற்காகப் பாடுபட ஆள் கிடையாதா? நான் கீழ்சாதியென்றழைக்கப்பட்டாலும் நான் நினைத்தால் பார்ப்பான் என் காலில் விழும்படி நாளைக்கு மகான் ஆகிவிட முடியாதா? காந்தி என்னை விட முட்டாள். கடவுள், உண்ணாவிரதம் என்ற ஜாலம் செய்தே அவர் பெரிய மகாத்மா ஆனவர்! நான் வேஷம் போட்டால் மகாத்மா ஆகிவிடுவேன்! முடியாதா? சாயிபாபா, ரமணரிஷி - இப்படி யார் யாரோ மகான் ஆகும்போது  நான் நினைத்தால் ஆக முடியாதா?

இந்தப் பித்தலாட்டம் ஒழிந்து, மூட நம்பிக்கை ஒழிந்து மனிதர்களாக நம் சமுதாயம் வாழவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டுக் கொண்டு, அந்த முயற்சியில் சாவது என்று இருக்கிறோம். இன்று 4000-பேர் சிறைக்குச் சென்றோம். என்னைப் பொறுத்த வரையில் நான் சுகமாகத்தான் இருந்தேன். என்னைக் கண்டால் பலருக்குப் பயம். எங்கும் தூற்றிக் கொண்டு திரிவேன் என்று பலருக்கு மரியாதை. காரணம் ஏதோ இவன் இருக்கக்கொண்டு தானே தமிழர்கள் என்று நாம் சிலராவது உத்தியோகத்திற்கு வரமுடிந்தது என்ற மரியாதை. எப்படியோ நான் சங்கராச்சாரி போல சவுகரியமாகத்தான் இருந்தேன். மற்றத் தோழர்களும் சிறைக்கு வந்து விட்டோமே என்று வேதனைப்பட வாய்ப்பில்லாமல் மகிழ்ச்சியுடன் தான் அனுபவித்தார்கள்.

லால்குடியில் சிறைசென்ற ஒருவர் இறந்து போய்விட்டார். அவருடைய மனைவிக்குச் சமாதானம் சொல்வதற்காக மணியம்மையார் சென்று ஆறுதல் சொல்லும் போது 'எனக்கென்ன வருத்தம்? நல்ல காரியத்திற்குத்தானே என் புருடன் செத்தார்? அய்யாவிடம் சொல்லி அடுத்த கிளர்ச்சி ஆரம்பிக்கச் சொல்லுங்கள். என் மகன் இருக்கிறான்; அனுப்புகிறேன். அடுத்து நான் இருக்கிறேன்; வருகிறேன்" என்று பதில் சொன்னார்கள். நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வேலூர் சிறைக்கு கவர்னர் போனார். அங்கு ஒரு அம்மாளைக் கூப்பிட்டு உங்களை விட்டுவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்தம்மாள் 'நான் வெளியே போனால் பெரியார் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்வேன்' என்று சொன்னார்கள்.

ஒரு சின்ன பையனைக் கூப்பிட்டுக் கேட்டார். அவன் சொன்னான். 'என்னை வெளியே' விட்டால் மீண்டும் சட்டத்தைக் கொளுத்துவேன்' என்று பதில் சொன்னான். பத்திரிகையில் வந்தது அவ்வளவு உறுதியுடன் இருந்தார்கள்.

டாக்டர் அயோக்கியத்தனத்தால் எட்டுப்பேர் செத்தார்கள். ஆனால் எதற்குச் சிறைக்குச் சென்றார்கள்? நாளைக்கு உங்களிடம் ஓட்டு கேட்கவா? நீங்கள் நினைக்கிறீர்கள் ஒட்டுக் கேட்போம் என்று.

எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல் பாடுபடுகிறோம்; நீங்கள் ஆதரவு காட்டாமலிருந்தாவது சலிப்பு ஏற்பட்டுவிடும்; அப்படியில்லையே! நல்ல ஆதரவு அளிக்கிறீர்கள்; பெருமைப்படுத்துகிறீர்கள். நான் என்ன அதிசய மனிதனா? இல்லை அடுக்குமொழி பேசுகிறவனா? இல்லை, கூத்தாடி சினிமாக்கதை எழுதுகிறவனா? நான் சாதாரணமானவன். பிள்ளையார் உடைக்கிறவன்; சட்டத்தை எரிக்கிறவன்; இராமனைக் கொளுத்துகிறவன்; கடவுளே இல்லை யென்பவன் என்கிற பேரு! அப்படியிருந்தும் ஏன் ஆதரிக்கிறீர்கள்? "என்னமோ அப்பா நீ எதைச் செய்தாலும் எங்களிடம் எதுவும் வாங்கி உலையில் போடவில்லை. ஏதோ உண்மையாய் பாடுபடுகிறாய்" என்று எண்ணி நீங்கள் ஆதரவளிப்பது தானே தவிர வேறு என்ன? நான் தினம் தினம் வீதியில் போகிறவன்; ஒன்றும் அதிசயமான மனிதன் அல்ல; மக்கள் கூடுகிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்றால் நாங்கள் செய்கிற காரியத்தை உத்தேசித்தே தவிர வேறு என்ன?

இப்படி நீங்கள் காட்டுகிற ஆதரவைப் பார்க்கும் போது எனக்கு 80-வயது என்று கணக்கு. ஆனால் உற்சாகத்தில் வயது குறைகிறது. 80-வயதான நான் ஊர்ஊராகப் போகிறேன். 2-மணி, 3-மணி என்றால் என்ன காரணம்? எப்படி முடிகிறது? நீங்கள் காட்டுகிற உற்சாகமும், ஆதரவும், அன்பும்தான். இவற்றையெல்லாம் பார்க்கிறபோது ஏதாவது செய்துவிட்டுச் சாகலாம் என்கிற எண்ணம் வருகிறது.

தோழர்களே! நம்முடைய முயற்சியெல்லாம் திராவிடர் கழகக் கொள்கைகளை அமலுக்குக் கொண்டு வரவேண்டியது என்பதுதான்.

திராவிடர் கழக இலட்சியங்கள் மூன்று.

சாதி ஒழிய வேண்டும்.

நமக்கு விகிதாச்சார உரிமை வேண்டும்.

நம் நாடு பிரிந்து சுதந்திரமாக வேண்டும்.

இந்த மூன்று இலட்சியங்களுக்காகவே 38-ஆண்டுகளாக நான் காங்கிரசிலிருந்தே சொல்லிப் பாடுபட்டு வருகிறேன்.

இன்று ஊர்வலம் நடத்தும் போது மேல்சாதி என்பவர்கள் தெருவிலும், கீழானசாதி என்பவர்கள் தெருவிலும் நடந்து வரும் போதே தலைவரிடம் சொல்லிக் கொண்டு வந்தேன்.

சேரி என்று ஒன்று இருக்கிறது; அங்குள்ள மக்கள் கீழானநிலையில் வாழ்கிறார்கள்; ஏதோ அந்த இனத்தில் முன்னேற்றுகிறோம் என்று சொல்லி "அரிசனம்" என்று பெயர் வைத்து ஏதோ 2-பேருக்கு உத்தியோகம் தந்துவிட்டு மற்றப்படி அந்தச் சாதித்தன்மை, கீழ்நிலைமை அப்படியே வைக்கத்தான் முயற்சி செய்கிறார்கள். பார்ப்பனத் தெருவிலும் ஊர்வலம் சென்றது. அவர்கள் மேலான வாழ்க்கையில் பட்டுச்சேலை, மொடா போல வயிறு, ஒரு வேலையும் செய்யாமல் சொகுசாக இருக்கிறார்கள். அவர்களுக்கத்தான் மேல் உத்தியோகம் மேல் பதவி.

கடவுள் இருக்கிறது என்கிறான். கடவுள்தான் எல்லோரையும் படைத்தது என்கிறான். அந்தக் கடவுள் இப்படி கீழான நிலையில் பல மக்களையும் ஒரு சிலரை சொகுசான வாழ்விலும் இருக்கும்படி ஏன் படைக்க வேண்டும்? ஏன் இந்த நிலை? உழைக்கிற ஒரு இனம் கீழ்ஜாதி; உழைக்காத ஒரு இனம் மேல்ஜாதி என்றால் என்ன நியாயம்? மனித சமுதாயத்திற்கு வேண்டிய காரியமெல்லாம் சோறு, துணி, வீடு முதலிய எல்லாமும் நாம்தான் உழைத்துத் தருகிறோம். மனித சமுதாயத்திற்குப் பாடுபடும் நாம் கீழ் சாதியாம்? தீண்டப்படாதவர்களா? சோம்பேறிப் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களா? தைரியமாக மனு சொன்னார் என்று சொல்லி இன்றும் அதை நிலைக்க வைக்கப் பாடம் சொல்லித் தருகிறானே?

ஏதோ தொலைகிறது என்று இருப்பதா? அல்லது ஏதோ நம் காலத்தில் கீழ் சாதியாக இருந்துவிட்டாலும் நமது சந்ததியாவது மனிதனாக வாழவேண்டுமே என்று எண்ணி இந்த இழிவை ஒழிக்கப் பாடுபடுவதா? நாம் யாரையும் கொள்ளையடிக்கப் பேசவில்லை. எந்த நாட்டையும் பிடித்து ஆள ஆசைப்படவில்லை. நாம் கீழ்ச்சாதியாக இருக்கக்கூடாது. நமது நாட்டை நாமே ஆள வேண்டும் என்கிறோம். இது தவறா?

நம் தமிழ் நாட்டை நாம் ஆள வேண்டும் என்றால் வட நாட்டானுக்கு ஆபத்து, நஷ்டம்! அவனுக்கு ஆபத்து என்பதற்காக நாம் அடிiமாக இருப்பதா? அப்படியானால் வெள்ளைக்காரனை வெளியே போகச் சொன்னதும் தப்புதானே? நான் ஏண்டா கீழ்ஜாதி என்றால் சாமிக்கு விரோதம், சாஸ்திரத்திற்கு விரோதம் என்றால் அதற்கு பயந்து கொண்டு கிடப்பதா?

இன்று எவ்வளவு அதிசய அற்புதம் வந்துவிட்டது! இன்று விமானத்தில் ஏறினால் 6000-மைலுக்குக்கப்பால் உள்ள இங்கிலாந்தில் போய் டீ சாப்பிடலாமே! பறையனும் பஞ்சமனும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள் என்று மனுதர்மத்தில் இல்லை யென்பதற்காக இதை அனுபவிக்காமல் விட்டது யார்? இந்த விஞ்ஞானக் காலத்தில் நாம் ஏன் கீழ்ச்சாதி என்று கூடச் சிந்திக்காவிட்டால் என்ன அர்த்தம்? இந்த 2000-ஆண்டு காலத்தில் புத்தர், வள்ளுவர் இவர்களைத் தவிர சாதி ஏன் என்று கேட்டவர்களே கிடையாதே? புராணத்தில் வேண்டுமானால் இருக்கிறது. இராவணன் கேட்டான் ஏன் பார்ப்பான்? என்று. இரணியன் கேட்டான். அதுவும் அவனே எழுதிய கதை. பார்ப்பான் எழுதியது அந்தக் கதை! இராவணன் என்றோ இரணியன் என்றோ ஒருவன் உண்மையில் இருந்திருக்க முடியாது.

அந்தக் கதையில் சொல்கிறான். இதோ பாகவதம், பார்ப்பான் எழுதியது; அதில் இரணியன் சொல்கிறான்; 'நான்' சொன்னால் அல்லவோ தூக்கில் போட வேண்டும், என்கிறான்; மற்றவைகளில் வேண்டுமானால் ராட்சதர், தேவர் என்று பெயர் வைத்து எழுதியிருக்கிறான்.

இதில் பச்சையாகப் பார்ப்பான் என்றே எழுதியிருக்கிறான்.

"பிராமணர்களை ஒழியுங்கள்! கோவில் கோபுரங்களை இடித்து நொறுக்குங்கள்! பார்ப்பனச் சேரிகளில் நெருப்பு வைத்துக் கொளுத்துங்கள்!"

இது பாகவதம், 7-வது ஸ்கந்தம், 2-வது அத்தியாயம்; இஞ்சிக் கொல்லை பண்டிட் சிவராம சாஸ்திரியார் மொழிபெயர்ப்பு; புரோகிரசிவ் அச்சுக்கூடப் பதிப்பு 751, 716-வது பக்கத்தில் உள்ளது. பார்ப்பான் எழுதிய கதையிலேயே இப்படி உள்ளது.

கதையில் ஏன் இப்படி எழுதினான் என்றால் நீ நாளைக்கு அப்படிச் சொன்னால் இரணியனைப் போல், இராவணனைப் போல் கெட்டுப் போவாய் என்று மிரட்டுவதற்காகவே தான்.

ஆகவே புத்தரைத் தவிர, வள்ளுவரைத் தவிர, சாதி ஒழிய வேண்டும் என்று சொன்னவனையே காணவில்லையே? இல்லாமலா இருந்திருப்பான்? எனக்கும் சந்தேகம் தான். இருந்திருப்பான் அவன் பெயர் வெளிவராதபடி ஒழித்துக் கட்டிவிட்டான்! சாதி இருக்க வேண்டும் என்று சொன்னவனைப் பெரிய ஆளாக்கி வைத்திருக்கிறான்.

இராமன் படத்தை எரிக்கச் சொன்னேன்; எதற்கு? அதைவிட்டு விட்டு என் படத்தைக் கும்பிட வேண்டுமென்றா? சாதியைப் பொறுத்த வரையில் இதை நிலை நாட்ட இருக்கும் அயோக்கியன் இராமன்; வால்மீகி இராமாயணத்தில் இராமன் பிராமண கண்டகர்களை ஒழித்துக்கட்டவே அனுப்பப்பட்டேன் என்றே சொல்கிறான். ஒரு சூத்திரன் தபசு செய்கிறான்; அதனால் ஒரு பார்ப்பான் பிள்ளை செத்துப் போய்விட்டானாம்; நாரதர் வருகிறார்! நீ ஏண்டா இந்தப் பார்ப்பான் செத்தான் என்றால் அது சூத்திரன் தபசு செய்தால் என்கிறான். இராமன் போய் அந்தச் சூத்திரனைக் கண்டதுண்டமாக வெட்டுகிறான்; உடனே பார்ப்பான் பிழைத்துக் கொள்கிறான்; கதை இப்படி.

இராமாயணப்படி இராமன் இன்ன இடத்தில், இன்ன நல்ல காரியம் செய்தான்; இன்ன இடத்தில் யோக்கியமாய் நடத்தான் என்று சொல்ல முடியுமா? பார்ப்பான் எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் அவன் பெரிய மனிதன்; மற்றவன் எவ்வளவு நேர்மையாக நடந்தாலும் அரக்கன், ராட்சதன். அந்தக்கதை அந்தக் கீழ்மக்களைக் கேலி செய்ய, கீழ்தன்மையை எடுத்துக்காட்டவே எழுதப்பட்டதைப் போன்று அதில் உள்ளது. அதைப் புண்ணிய கதையாகத் தெய்வக்கதையாக ஆக்கிவிட்டான். இதைத்தான் தெய்வக்கதையாக ஆக்கினானே தவிர நாணயம், ஒழுக்கம் இவற்றிற்கு எதுவும் இல்லை.

இனியும் இராமயணத்தின் பின்னால் போனால் ஒழிந்தோம். இன்று பார்ப்பானுக்கு இராமாயணப் பிரச்சாரம் செய்வதே வேலை. நமது இழிவு நீங்க வேண்டும் என்பதற்காக ஒரு குப்பைக் காகிதத்தைக் கொளுத்தியதற்கு 3-வருட கடுங்காவல். எங்களுக்கு இந்தக் கதியென்றால் மற்றவன் இதைப் பற்றி நினைப்பானா?

நியாயத்திற்குக் கொளுத்த வேண்டுமென்றால், 'இந்து லா' வையே நெருப்பு வைத்துக் கொளுத்த வேண்டும். இன்றும் சூத்திரன் அவனுக்கு இன்ன நியாயம், இப்படி யக்ஞவல்கியர் சொன்னார்; நாரதர் சொன்னார்; என்று எழுதுகிறானே? நீங்கள் நினைக்க வேண்டும். இதுதான் நாங்கள் கொளுத்திய சட்டம்.

அதில் இரண்டொரு ஷரத்துக்களை மாத்திம்தான் எடுத்துப்போட்டுக் கொளுத்தினோம். இதில் பண்பு, பழக்க வழக்கம், இவற்றைச் சிதையாமல் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று போட்டிருக்கிறான். இதைத்தான் பார்ப்பான் வைத்துக் கொண்டு இன்று பேசுகிறான். இதுதான் பழக்கவழக்கம்; நாங்கள் இதுவரை உங்களை நடத்தியது போலத்தான் நடத்த வேண்டும் என்கிறான். அதனால்தான் இப்படிப் பார்ப்பனர்களுக்கும், சாதிக்கும் பாதுகாப்பு அளிக்கிற இந்தச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று சொன்னோம். அதற்கு வாய்தா கொடுத்துத்தான் கொளுத்தினோம்; தண்டித்தார்கள்.

இதை இப்படியே விட்டு விடலாமா? விட்டுவிட்டு ஓடி விட்டால் நாளை காமராசரைக் கொண்டே நெற்றியில் இன்ன சாதியென்று பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு போடச் சொல்லுவானே?

சிரிப்பதற்குச் சொல்லவில்லை; ராசாகக்கள் காலத்தில் இருந்தே இன்னின்ன சாதி இன்னின்ன அடையாளம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று இருந்ததே; இன்ன சாதி பித்தளையில் நகை இன்ன சாதி சங்குதான் போடலாம்; இன்னசாதி புடைவை இப்படிக் கட்டவேண்டும் என்று பார்த்ததும் இன்னசாதி என்று தெரியும்படி அடையாளம் இருக்கும்படி தானே வைத்திருந்தனர்.

-------------------------------- சின்னசேலத்தில் 01.07.1958-ல் தந்தை பெரியார் சொற்பொழிவு-"விடுதலை", 04.07.1958

8 comments:

தமிழ் ஓவியா said...

“நான் எதற்காகச் சிறை செல்கிறேன்...?


“நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?

“சூதாடிய குற்றத்துக்காகவா?

கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்கா கவா?

கொள்ளைக் குற்றத்துக்காகவா?

கொலைக் குற்றத்துக்காகவா?

மோசடிக் குற்றத்துக்காகவா?

பல வந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா?

பதுக்கல் – கலப்படம் குற்றத்துக்காகவா?

சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?

என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?

சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்!

மறியல் செய்தேன்!

சிறை சென்றேன்!

சர்க்கார் கண் விழிக்கவில்ல.

ஆகவே,

சாதிக்கு ஆதாரமான சட்டத்தை கிழித்துத் தீயிலிட்டாவது

இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா,

என்று கருதி அதைச் செய்தேன்.

இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா ?

எந்தப்பொருளுக்கேனும் நாசமுண்டா?

இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால்,

இதை நான் மகிழ்ச் சியுடன் வரவேற்க வேண்டாமா?

‘சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ்செய்தான்’

என்பதைவிடப் பெரும்பேறு, முக்கியக் கடமை,

வேறென்ன இருக்கிறது?

இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும்

உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

– பெரியார், (விடுதலை 09-11-1957)

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......


வால்மீகி ராமாயணத் தில் பாலகாண்டம் 18 ஆவது சர்க்கத்தில் இராமன் பிறந்த நாள்,

நட்சத்திரம் அப்போதி ருந்த கிரக நிலைகள் ஆகியவற்றைக் குறிப் பிட்டு ஜாதகம் கணித் திருக்கிறார் வால்மீகி.

சித்திரை மாதம் வளர் பிறை நவமியில் ஆதித்ய வாரத்தில், மாத்யானிக வேளையில், புனர் வஸு நட்சத்திரம் 4 ஆம் பாதம் சந்திரன் ஆட்சியி லும், குரு உச்சத்திலும் அமைந்த கடக ராசியில், கடக லக்னத்தில் ஸ்ரீராமன் ஜனனம்.

கிரஹமாலிகா ஜாத கம், குரு, சந்திர யோகம், சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி உச்சம், இத் தகைய ஜாதகர்கள் மனி தருள் தெய்வமாக மதிக் கப்படுவார்கள் என்று பிர ஹத் ஜாதகம் கூறுகிறது.

- சக்தி, விண்மணி,

இந்த ஜாதகப்படி இராமன் தெய்வமாக மதிக்கப்படுவார் என்று கூறுவது உண்மை என் றால், இராமன் ஏன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்றான்? சராயு நதி யில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான்?

Read more: http://viduthalai.in/e-paper/81950.html#ixzz34Nn4cgPc

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை- பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

- (குடிஅரசு, 25.3.1944)

Read more: http://viduthalai.in/page-2/81958.html#ixzz34NnOi5Gx

தமிழ் ஓவியா said...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கூடாதா?



வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தி யாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படும் பட்டியலினத்த வருக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறை கள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை ஆய்வு செய்ய இளையபெருமாள் என்பவரது தலைமையில் ஒரு குழுவை நாடாளுமன்றம் அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1989 இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995 இல்தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.

இவ்வளவுக் காலதாமதமாக இந்தச் சட்டம் நடை முறைக்கு வந்தபோதிலும் இன்றும் இதனை நடைமுறைப் படுத்துவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர்.

மக்கள் தொகையில் 20 விழுக்காடு இருக்கும் தாழ்த்தப்பட்டோர், அதிக எண்ணிக்கையில் இருக்கும் உயர்ஜாதியினரின் கொடுமைகளைப்பற்றி புகார் கொடுக்கும்போதுகூட அதை தங்களது ஜாதிக்கு எதிரானதாக புகார் பெறும் அதிகாரிகள் பார்க்கின்றனர்.

இதன் காரணமாக பல்வேறு தளங்களில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் வெளியுலகிற்கு வராம லேயே போகின்றன. நேர்மையான அதிகாரிகளை நியமித் தாலும் அரசியல் தலையீடு அந்த அதிகாரிகளைத் தங் களின் பணிகளைச் சரிவர செய்ய அனுமதிப்பதில்லை.

கிராமங்களில் மட்டுமா? மதுரை அரசு மருத்துவ மனையில் குறிப்பிட்ட சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருக்கும் மருத்துவப் பேராசிரியர், சக மருத்துவர்களால் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானதை டி.என்.ஏ. என்ற ஆங்கில நாளிதழ் மே 30 ஆம் தேதி செய்தியாக வெளியிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கர்ணன் அவர்களே, தான் அவமதிக்கப்படுவது குறித்து கூற வில்லையா?

தீண்டாமை ஒழிக்கப்படுகிறது - எந்த வடிவில் அது கடைப்பிடிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் (17 ஆவது பிரிவு).

இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்துகொண்டுதானிருக்கின்றன. இன்னும் தேநீர்க் கடைகளில் இரண்டு கண்ணாடித் தம்ளர்கள் இருக்கத்தான் செய்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஒரு பள்ளியின் கல்வெட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் பெயர் இருந்ததால், ஆத்திரப்பட்ட உயர்ஜாதி ஆணவக்காரர்கள் அந்தப் பெயரைத் தார் கொண்டு அழித்திருக்கின்றனர்.

இந்தியா முழுமையும் எடுத்துக்கொண்டால்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தீண்டாமைக் கொடுமைபற்றிய புள்ளி விவரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் 8061, ராஜஸ்தானில் 5235, மத்தியப் பிரதேசத்தில் 4503, தமிழ்நாட்டில் 3505, ஆந்திரப்பிரதேசத்தில் 2088, குஜராத்தில் 1452, கருநாடகாவில் 1409, ஒரிசாவில் 1100, பிகாரில் 955, மகராஷ்டிராவில் 573, அரியானா 243.

இவை 2011-2012 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம் - எடுத்துக்காட்டுக்காகக் குறிப்பிட்டுள்ளோம்.

உண்மைகள் நிதர்சனமாக இவ்வாறு இருக்க, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதன் நோக்க மென்ன?

இந்தச் சட்டம் சுயநலத்துக்காகப் பயன்படுத்தப்படு வதாகக் கூறப்பட்டுள்ளது; எந்தச் சட்டத்தையும் இந்த வகையில் பயன்படுத்தலாம். கொலைக்கே சம்பந்த மில்லாதவர்களைக்கூட பழிவாங்கும் நோக்கத்தோடு சாட்சிகளைப் புனைந்து வழக்குத் தொடுக்கப்படுவது கிடையாதா?

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் அவர்களாலும், அவர் கண்ட இயக்கத்தாலும் விழிப்புணர்வு உண்டாக்கப்பட்ட தமிழ் மண்ணில்கூட, தருமபுரிகள் நடந்திருக்கின்றன. தாழ்த் தப்பட்ட ஒருவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதற்காக ஒரு கிராமமே எரிக்கப்படவில்லையா?

உண்மையிலேயே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த - தேவையில்லாத அளவுக்கு மக்களிடத்தில் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தை ஆக்க ரீதியான செயல்பாடுகளை முன்னிறுத்துவதுதான் முற்போக்கான சிந்தனையாக, தீர்வாக இருக்க முடியும்.

அதை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போடுவது புத்திசாலித்தனம் ஆகாது.

இன்னும் தாழ்த்தப்பட்டவர்களும் சரி, பிற்படுத்தப் பட்டவர்களும் சரி, பார்ப்பனர் அல்லாதாரில் உயர் ஜாதியினரும் சரி நம் நாட்டுக் கோவில்களில் அர்ச்சகர் ஆக முடியுமா? இது இன்னொரு வகை தீண்டாமை அல்லவா?

மிகவும் அவசியமான இதுபோன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், தீண்டாமையை விசிறிவிடும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

Read more: http://viduthalai.in/page-2/81960.html#ixzz34NnYGQr9

தமிழ் ஓவியா said...





காலங் கடந்த ஞானோதயம்!

பிஜேபிவெற்றிபெற்றதுஎப்படி?

சமூகம் பிளவுபட்டதால் ஏற்பட்ட விளைவு!

டில்லி, ஜூன் 12-_ வகுப்புரீதியில் சமூகம் பிளவுபட்டதால் மக்க ளவைத் தேர்தலில் பாஜக நல்ல பலனை அறுவடை செய்தது என மாநிலங் களவையில் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள் ளது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன் னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் பேசிய தாவது:

தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சி யானது திட்டமிட்டு மத ரீதியில் சமூகத்தை பிளவு படுத்தியது. மேம்பாட்டுக் கொள்கைகளை முன் வைத்து அது தேர்தலில் வெற்றி பெறவில்லை. சமூகம் பிளவுபட்டதால் பாஜக நல்ல பலன் பெற்றுள்ளது. நல்ல நிர்வாகம் வழங்குவதிலும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என் றார் ஜெய்ராம் ரமேஷ்.

திரிணாமுல் காங்கிரஸ்

மக்கள் நல கொள் கைகளிலிருந்து அரசு விலகிச் சென்றால் அதை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கும் என்றார் அக் கட்சியின் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய். முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை மறு ஆய்வு செய்வது அரசின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

சந்தன் மித்ரா (பாஜக):

அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் யோச னைகளை மோடி அரசு அப்படியே காப்பி அடிப் பதாக கூறுவது தவறா னது. சாமானியர்களின் கனவுகளை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது மோடி அரசு

டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்)

காவிரி உள்பட நதி நீர் பிரச்சினைகளுக்கும் மாநிலங்களுக்கு இடையே யான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண எல்லா மாநிலங்களையும் அழைத் துப் பேச அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங் கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண் டும். இதை செய்யாமல் மீனவர் பிரச்சினையில் நியாயம் கிடைக்க வழி காண முடியாது.

இலங்கைத் தமிழர் களுக்கு நியாயம் கிடைக்க முயற்சி செய்யவேண்டும். ஒரு கட்சியின் கொள்கை அடிப்படையில் அல்லா மல் தேசிய அளவில் கருத் தொற்றுமை கண்டு அதனை அடித்தளமாக கொண்டு வெளியுறவு கொள்கையை வகுக்க வேண்டும்.

இந்தியாவில் கல்வி தனியார் மயமாக்கப்படு கிறது. தனியார், அரசு பங்கேற்புடன் கல்வித்திட் டத்தை அறிமுகப்படுத்து வது வியாபாரமாகும். இதை 12-ஆவது அய்ந் தாண்டுத்திட்டத்தில் அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். நவீன தாரா ளமய கொள்கைகள் அமல்படுத்தப்படுவதால் நாட்டில் தனியார் துறை யிலும் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண் டும்.

திருச்சி சிவா (திமுக)

நதிநீர் பங்கீடு தொடர் பான பிரச்சினை, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர் கள் வேதனை போன்றவை பற்றி குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடாதது ஏமாற்றம் தருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் மறுவாழ்வு நடவடிக் கைகள் பற்றிய கொள்கை எதுவும் இந்த உரையில் அறிவிக்கப்படவில்லை.

தில்லுமுல்லு செய்து குறுக்கு வழியில் மக்கள வைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதாக இந்த விவாதத்தில் சிவா குறிப்பிட்டதற்கு அதிமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சைபுதீன் சோஸ் (காங்கிரஸ்), அஸ் வனி குமார் (காங்கிரஸ் ) ஜி.என்.ரத்தன்புரி (தேசிய வாத காங்கிரஸ்), பிர மோத் மகாபாத்ரா (சுயேச்சை), ரண்பீர்சிங் பிரஜாபதி (இந்திய லோக் தளம்)உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்ற னர்.

Read more: http://viduthalai.in/e-paper/82013.html#ixzz34Taes2w9

தமிழ் ஓவியா said...

திருவவதாரம்

வைகையாற்றங்கரையில் மதுரை மாநகரத்திலி ருந்து ஏழு கி.மீ. தொலை வில் திருவாதவூர் என்ற தலம் உள்ளது. இத்தலத் தில் இறைவன் வாதபுரீசு வரர் என்னும் திருநாமத் தோடு எழுந்தருளியுள் ளார். இத்தலம் வாயு பூசித்த காரணத்தால் வாதபுரம் என வழங்கப் பெறுகிறது. இந்நகரில் அமாத்திய அந்தணர் குலத்தில் சிவநெறி பிற ழாச் சிந்தையாளராகிய அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் சம்புபாதா சிருதர்.

அவர் மனைவியாரின் பெயர் சிவஞானவதி என் பதாகும். இவ்விருவரும் இல்லறம் வழுவாது ஒழுகி வரும் நாளில் தென்னாட்டில் புறச் சமய மாகிய புத்தம் மேலோங்கி இருந்தது. சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறை வன் திருவருளால் இவ்விருவருக்கும், சைவம் தழைக்கவும், வேத சிவாகம நெறிகள் விளங்கவும் திருமகனார் ஒருவர் திரு அவதாரம் செய்தருளினார். தாய் தந்தையார் மனம் மகிழ்ந்து அம்மகனார்க்கு திருவாதவூரர் என்னும் திருப்பெயர்ச் சூட்டினாராம்.

மத மாற்றம் உள் ளிட்ட பிரச்சினைகளில் கூட கடவுள் தலையிடு வாரோ!

மதத்தைத் தாண்டி கடவுள் இல்லை என்கிறபோது கடவுள் மதத்தின் கைக்கருவி ஆகி விடவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/82012.html#ixzz34TarP8u0

தமிழ் ஓவியா said...


இராணுவ தளபதி சர்ச்சை சூடு பறக்கிறது!


மத்தியில் பிஜேபி ஆட்சி அமைந்த நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி வி.கே. சிங்குக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பதவி ஓய்வுக் குப்பின் பிஜேபி.யில் சேர்ந்தவருக்குத் தேர்தலில் நிற்கவும் வாய்ப்புக் கொடுக் கப்பட்டது.

இராணுவம் போன்ற அதி முக்கிய துறைகளில் மிக உயர்ந்த பதவியை வகித்தவர் ஓர் அரசியல் கட்சியில் சேர்வதும், அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பு அளிப்பதும், தேர்தலில் வென்றபின் அமைச்சர் பதவி கொடுப் பதும் ஒழுங்குமுறைதானா? இராணுவத் துறைமீது அரசியல் வண்ணம் படியும் நிலை ஏற்படலாமா என்ற சர்ச்சை ஒரு பக்கம். (இவர் வயதுப் புகாரில் சிக்கிய வரும்கூட!)

அமைச்சரவையில் இடம் பெற்ற வி.கே. சிங் சும்மா இருக்கவில்லை; முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் போது இந்தியாவின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட தல்பீர்சிங் சுஹாக்கைப்பற்றி டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இதனை மிகவும் மோசமான நிலைப்பாடு என்று குற்றஞ் சாட்டினர். வி.கே. சிங் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லியோ அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி பதவியில் தொடர் வார்; மாற்றம் என்ற பேச்சுக்கே இட மில்லை என்று கூற முடிந்ததே தவிர, இந்தியாவின் இராணுவத் தளபதி பற்றி கடுமையான விமர்சனம் செய்த அமைச் சரின் நிலைப்பாடு குறித்து ஏதும் பேச வில்லை.

இதற்கிடையே இராணுவத் தளபதி தல்பீர்சிங் சுஹாக் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத் திரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத் தில் தயாரிக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் இது. இது எப்படி நடந்தது என்று இராணு வத்துறை செயலாளர் ஆர்.கே. மாத்தூர் உட்பட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளாராம், பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி.
தொடக்கமே குழப்பக் கூத்து சும்மா தூள் பறக்கிறது - போகப் போக என்னென்ன நடக்குமோ - யார் கண்டது?

Read more: http://viduthalai.in/e-paper/82016.html#ixzz34Tb47Ek5