காதலர் தினம்
காதலர் தினம் என்று ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் நாள் உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. வேறு எந்த நாட்டிலும் எதிர்ப்பு இல்லை. பாரதப் புண்ணிய பூமியில் மட்டும் அதற்கு எதிர்ப்பு தலை தூக்கி நிற்கிறது. குறிப்பாக இந்துத்துவா பேர் சொல்லி அலைகிறதே ஒரு கூட்டம், அந்தக் கூட்டம்தான் இதனை எதிர்த்து கூப்பாடு போடுகிறது.
அன்றைய நாளில் காதலர்கள் பொது இடங்களில் சந்திக்கக் கூடாது; தங்கள் அன்பைப் பரிமாற்றம் செய்து கொள்ளக் கூடாது; மீறினால் அதே இடத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டச் செய்வோம் என்று எல்லாம் இந்து மதத்துக்கே உரிய வன்முறை வெறியாட்டங்களை வெளிப்படுத்துகின்றனர் - எச்சரிக்கின்றனர்.
சட்ட ரீதியான திருமண வயதை அடைந்த இருபாலரும் சந்திக்கவோ, பேசவோ உரிமை படைத்தவர்கள் ஆயிற்றே. அதனைத் தடுக்க அடுத்தவர்களுக்கு உரிமை ஏது? அந்த உரிமையை அவர்களுக்குத் தந்தவர்கள் யார்? உண்மையைச் சொல்லப் போனால் இப்படி அடுத்தவர்களின் உரிமைகளில் தலையிடுபவர்கள்தான் சட்டப்படி தண்டனைக்கு உரியவர்கள் ஆவார்கள்.
ஒரு கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளனர். இந்து மதத்தில் காதலுக்கு இடம் இல்லையா? காதலையும் கடந்து களியாட்டங்களில் குளியலாட்டம் போட்ட கிருஷ்ணனைக் கடவுளாக வைத்துக் கொண்டு எந்த யோக்கியதையில் காதலர் நாளைக் கடுமையாக எதிர்க்கின்றனர்?
தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளைக் கற்பழித்தவனையே முதல் கடவுளாக சிவனைக் கருதிப் போற்றுபவர்கள். காதலைக் கண்டிப்பது கயவாளித்தனம் அல்லவா!
கடவுள்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கும் பரமாத்மாவும் - ஜீவாத்மாவும் இணைகின்றன என்றெல்லாம் வியாக்கியானங்கள் செய்பவர்கள் காதலர் தினத்தை மட்டும் மடைமாற்றிப் பேசுவானேன்?
கடவுள்களையும், காமத்தையும் விபச்சாரத்தையும் ஏற்றுக் கொள்பவர்கள் மனிதர்களின் இயல்பு உணர்ச்சியான காதலைக் கண்டிப்பது ஏன்?
காதல் என்பது உயிரியற்கை - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ!
- என்ற புரட்சிக் கவிஞரின் அறிவியல் சிந்தனையைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா? புரட்சிக் கவிஞர் என்றாலே அவர் பெரியாரின் சீடர் என்று ஒதுக்கிய பார்வையில் பார்ப்பவர்கள் இந்த உயர் எண்ணங்கள்மீது கருத்தைச் செலுத்துவார்களா, என்ன?
காதல் மனிதர்களிடத்தில் மட்டுமல்ல; மற்ற மற்ற உயிரினங்களிடத்திலும்கூட இயல்பாக ஏற்படக் கூடிய மென்மையான இயல்புத் தன்மை.
இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு அறிவியல் மனப்பான்மையும், பகுத்தறிவுச் சிந்தனையும் தேவை. காதலையும் காமவெறியையும் பிரித்துப் பார்க்கும் அறிவின்றி, வெறும் வெறி உணர்வில் ஒன்றை அணுகுபவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.
காதலர் தினத்தை எதிர்ப்பதில் இன்னொரு முக்கியமான உட்பொருள் இவர்களிடத்தில் பதுங்கி இருக்கிறது. அது என்ன? காதல் என்பது ஜாதியைக் கடந்தது. இந்துத்துவாவாதிகளுக்கோ ஜாதி என்பது மிக முக்கியமானது. எக்காரணம் கொண்டும் ஜாதிக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது - அதனை ஒழிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வருணா சிரமம், ஜாதிமுறை ஒழிக்கப்பட்டுவிட்டால், அந்த நொடியே இந்து மதம் ஒழிக்கப்பட்டதாக ஆகிவிடுமே!
ஜாதி இருக்கும்வரைதான் இந்து மதம் உயிர் வாழும்; எனவே இந்து மதத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் கடும் தவம் செய்பவர்கள், ஜாதியை ஒழிக்கும் காதலர் தினத்தை ஒழித்துக் கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். காதலர் தின எதிர்ப்பு என்பது இந்த அடிப்படையில்தான் நடந்து கொண்டு இருக்கிறது.
இவர்கள் என்னதான் கச்சை கட்டி நின்றாலும் காதல் என்பது நாளும் வளர்ந்தே வருகிறது. காதல் திருமணங்கள் நாளும் பெருகியே வளர்கின்றன. இதன் மூலம் ஜாதி ஒழிப்புத் திருமணங்கள் நாட்டில் ஏராளம் நடந்த வண்ணமே உள்ளன.
சில ஆண்டுகளுக்குமுன் காதல் திருமணத்தை எதிர்த்து வந்த பெற்றோர்களும்கூட, இப்பொழுதெல்லாம் அதனை அங்கீகரிக்கும் மனப்பான்மைக்கு - பக்குவத்துக்கு வந்து விட்டார்களே. இதுதானே எதார்த்தம்!
இதில் இன்னொரு கூடுதல் சிறப்பு - வரதட்சணை என்னும் வன்கொடுமை ஒழிக்கப்பட்டு விடுகிறது. ஜாதி ஒழிப்பு, வரதட்சணைக்கு இடமில்லாத இந்தத் திருமணப் போக்கு மூலம் புதிய சிந்தனைகளும், மாற்றங்களும் சமூகத்தில் மலர்ந்துவருவது நயத்தக்க நாகரிகத்திற்கான வழி நடையாகும்.
கல்விக் கூடங்களில் ஆண்களுக்குத் தனி, பெண்களுக்குத் தனி என்ற நிலை இருக்கக் கூடாது - இருபால ருக்கும் பொதுவாகவே இருக்கவேண்டும் என்ற கருத்தினையும் தந்தை பெரியார் வரவேற்றுள்ளார். (விடுதலை 22.5.1967) இதன்மூலம் ஜாதி ஒழிக்கப்படுவதற்கான கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் காதல் என்பது வெறும் உடல் சம்பந்தப் பட்டதல்ல- அது உணர்வு சம்பந்தப்பட்ட நுண்ணிழையாகும் என்பதை சம்பந்தப்பட்ட இருபாலரும் மறந்து விடக் கூடாது.
திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் இந்த உண்மைக்கு மாறான உணர்வை ஒருவகையில் இளைஞர்கள் மனதில் நாளும் திணித்துக்கொண்டு இருக்கின்றன.
காதலர் தினத்தைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் காவிகள், சின்னத்திரை - பெரிய திரைகளில் காதலைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஒளிபரப்பும் போக்கை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யட்டுமே - களம் இறங்கிக் குரல் கொடுக்கட்டுமே. இந்தத் திசையில் சிந்திக்காமல் காதலர் தினத்தைக் கண்டிப்பது அசல் பிற்போக்குத்தனமாகும்.
காதலர் தினம் வாழ்க! ஜாதி ஒழிப்பு மலர்க!
--------------- "விடுதலை” தலையங்கம் 14-2-2011
2 comments:
காதலர் தினம் சிந்தனைக்கு
புழுக்களுக்குப் பூவின் மணம் தெரியுமா?
புழுக்களுக்குப் பூக்களின் மணத்தைப்பற்றி விமர்ச்சிக்க இப் புவியில் இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது...? எப்படி இருப்பினும் ஒரு புறம் ஜாதிய ரீதியாக காதலுக்கு எதிர்ப்புத்தன்மை நிலவும் நிலையில் - இந்துத்துவா காதலுக்குக் கடுமையான எதிர்ப்புகளைக் காட்டுகின்ற நிலையில் - காதலர்கள் தங்கள் காதலை பொது இடங்களில் மிகவும் கண்ணியத்தோடு கையாள வேண்டும். இல்லையெனில் மக்களின் பேராதரவு காதலர் களுக்குக் கிடைக்காமல் - காதல் திருமணங்களுக்கு ஆதரவு கிடைக்காமல் போய் விடும். அப்புறம் முற்போக்காளர்களின் ஆதரவையும் இழந்து விட்டு காதலர்கள் தங்கள் காதலை வெற்றியுடையதாக மாற்றிக் கொள்ள மாற்று வழியில்லாமல் திண்டாடும் நிலையே ஏற்படும்.
தமிழர்களின் பொதுமறையாக உள்ள திருக்குறள் மட்டுமே - காதல் வாழ்க்கையின் மகத்துவத்தை அக்குவேறு, ஆணி வேறாக அழகுடன் பிரித்து இன்பத்துப் பாலில் கூறியிருக்கிறது.
திருக்குறளில், காதல் துவங்கும்போது காதலன் காதலியின் காதல் முன்னுரையைப் பற்றி இவ்விதமாக திருவள்ளுவர் கூறுகிறார்..! அதாவது,
யான்நோக்கும் காலை நிலம் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும். (குறள் - 1094) என்கிறார்.
அதாவது ... அவளை நான் பார்க்கும்போது, அவள் என்னை பார்க்கமாட்டாள் - ஆனால்
அவளை நான் பார்க்காத போது, அவள் என்னைப் பார்த்து சிரித்துக் கொள்வாள் என்று
ஒரு பெண்ணுக்குள் ஒளிந்து கிடக்கும் காதல் தன்மையை அப்படியே படம் பிடித்துக் காண்பிக்கிறார்....
இப்படி வள்ளுவமே தமிழர் வாழ்க்கை காதலோடு பிறந்து, காதலோடு வளர்ந்து, காதலோடு சிறப்பது என்று கூறுகின்ற வகையில் தமிழரின் காதல் வாழ்க்கை பண்பாட்டிற்கு எந்தக் கொம்பனும் தடைபோட முடியாது. இதைத் தடுக்க எந்த இந்துத்துவா சக்தியும் பாம்பு பிடித்த குரங்காய்க் குதித்தாலும், கூச்சலிட்டாலும் தந்தை பெரியார் பிறந்த சுயமரியாதை மண்ணில் காதலை வேர் அறுக்கும் வேலையில் இந்துத்துவா சக்தியால் வெற்றி கொள்ளமுடியாது. மாறாக இந்துத்துவா சக்திகள் மூக்கு அறுபட்டுத்தான் ஓடும்...!
இன்றைய காதலர் தினத்தில் காதலர்கள் பரிசுப் பொருள்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டாலும். - இருபத்து நான்கு மணிநேரமும் நாம் உயிர் வாழத்துடிக்கும் இதயத்தைக் காதலிப்பவருக்கு பரிசாகக் கொடுப்போம்...! காதலிக்கும் முன் யோசிப்போம்..! காதலை நேசிப்போம்! காதலராக வசிப்போம்! காதல் அன்பை சுவாசிப்போம்..! என்று கூறி...! காதலர்கள் எதிர்நோக்கும் காதல் வெற்றியடைய காதலர்கள் முழுத் தகுதியைப் பெற்றுக் கொள்ள வழி வகுப்போம்...! என்ற சூளுரையோடு முற்போக்கு சக்திகள்... காதல் இதயங்களை இணைத்து மானுட வாழ்க்கையை அழகுபடுத்த வேண்டும்... காதலில் தோற்றுக் காயப்பட்ட மனத்திற்கு காயம் ஆற களிம்பு பூசும் அன்பைப் பொழிய வேண்டும்... என்கிற தீராத நினைவுகளோடு, எண்ணங்களோடு,
நன்றி...!! நன்றி...!! வணக்கம் வளர்க காதல்...!! வாழ்க காதலர் தினம்!
- ஏ.ஜூலியாஸ், சட்டக் கல்லூரி மாணவர், ஈரோடு.
நாய்க்கும் நாய்க்கும் கலியாணமாம்! சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் எப்போதாம்?
காதலர் தினத்தைக் கொச் சைப்படுத்துவதற்காக இந்து முன் னணியினர் நாய்க்கும் நாய்க்கும் சென்னையில் புளியந்தோப்பு குட்டிதம்பிரான் தெருவில் விவாஹ சுப முகூர்த்தம் (கல்யாணம்) செய்து வைத்தார்களாம். நாய் களைக் குதிரைகள்மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனராம்.
நாய் என்றால் அலட்சியம், கேவலம் என்று நினைத்துக் கல்யாணம் செய்து வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்பு வோமாக.
நாய் என்பது இந்து மதத் தத்துவப்படி வேதத்தின் உருவ மாகும். பைரவனின் வாகன மாகும்.... (சவுநக முனிவர் நாய்க்குத்தான் பிறந்தார் என்பது கூடுதல் தகவல்)
நாய் மட்டுமா? நேரம் கிடைக் காத காரணத்தால் கழுதைக்கும் கழுதைக்கும்கூட கல்யாணம் கட்டி வைத்திருப்பார்கள். கார ணம், காங்கேய முனிவர் கழுதைக்குப் பிறந்தவராக்கும். தவளைக்குக்கூட ஜாம் ஜாமென்று வேத மந்திரங்கள் முழங்க, கன்னியாதானம் (கல்யாணம்) செய்து வைத்திருப்பார்கள். தவளை என்றால் சாதாரணமா? மாண்டவியர் தவளைக்குத் தானே பிறந்தார்!
நரி சிக்கியிருந்தால் நரிக்கும் நரிக்கும்கூட புரோகிதரை அழைத்து, அக்னி குண்டம் வளர்த்து, சப்தபதி வைத்து தாரா முகூர்த்தம் நடத்தி வைத்திருப் பார்கள். காரணம் ஜம்புக முனி வர் இந்து மத புராணப்படி ஜம்புக முனிவர் நரிக்குப் பிறந்தவராக்கும்.
கோட்டான் கிடைத்திருந்தால் கோட்டானுக்கும் கோட்டானுக் கும் கோலாகலமாக பாணிக் கிரகம் செய்து வைத்திருப்பார்கள். காரணம் கணாதர் முனிவர் கோட்டானுக்குப் பிறந்த புத்திரர் ஆயிற்றே!
கரடிக்கும் கரடிக்கும் கலி யாணம் நடத்தி, சாந்தி முகூர்த் தமும் நடத்தி இருப்பார்கள். கரடி கையில் சிக்கினால் உயிரைக் காவு கொடுக்க நேருமோ என்ற பயம்தான்.
கரடி என்றால் சாதாரணமா? ஜாம்புவந்தர் முனிவர் கரடிக்கு க்ஷணித்தவர் ஆயிற்றே!
குதிரைக்கும் குதிரைக்கும் குஷியோடு கல்யாண மண்ட பத்தை வாடகைக்கு எடுத்துக்கூட நடத்தியிருப்பார்கள். இத்தாண்டு நடத்தாவிட்டால் என்ன, அடுத்த ஆண்டு நடத்தினால் போச்சு. குதிரைக்குப் பிறந்த அஸ்வத் தாமனைக் கவுரவிக்க வேண் டாமா?
கிளிக்கும் கிளிக்கும்கூட கில்ட்டுக் கலரில் பத்திரிகை அடித்து கின்னரர், கிம்புருடர், அட்டதிக்கு பாலர்கள் சாட்சியாக கல்யாணம் செய்யலாமே. சுகர் முனிவர் கிளியின் சேஷ்ட புத்திரனாயிற்றே!
காதலர் தினத்தை அவமானப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம் நடத்தியிருந்தால் அது இந்து மதத்தைக் கேவலப் படுத்துவதாகும். இந்து மக்களின் மத உணர்வையும் புண்படுத்து வதாகும். இந்து முன்னணிக்காரர் களும் தி.க.வில் சேர்ந்து விட் டார்களோ!
இதனை நாங்கள் சும்மா விடப் போவதில்லை என்று விசுவ ஹிந்து பரிஷத்காரர்கள் போராட் டம் நடத்தினாலும் நடத்தலாம். யார் கண்டது?
அது சரி, சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் சிங்காரம் செய்து எப்பொழுது திருக்கல் யாண உற்சவத்தை நடத்தப் போகிறார்களாம்!
நல்ல விருந்து கிடைக் கும் அல்லவா! (விருந்து பக்தர் களுக்கா - சிங்கத்துக்கா?)
பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
--கருஞ்சட்டை -"விடுதலை” 15-2-2011
Post a Comment