Search This Blog

12.2.11

நீங்கள் ஆரியரா? ஆரியதாசரா? திராவிடரா?

நான்தான் அண்ணா பேசுகிறேன்!



(அறிஞர் அண்ணா அவர்கள் இன்று இருந்தால் என்ன பேசுவார்?)

என் பெயரால் ஒரு கட்சி - அண்ணா திமுக; என் உருவம் தாங்கிய கொடி _ அ.இ.அ.தி. மு.க. கொடி; அதற்கென்று ஒரு பத்திரிகை டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.

தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதை கண்டு திடுக்கிட்டுப் போனேன். மண் சோறு சாப்பிட்டீர்கள். மாள முடியாத பசி போலும் என்று நினைத்தேன். யாகம் நடத்தியதாகக் கேள்விப்பட்டேன். தோட்டத்துக்குள்தானே _ தனி நபர் பிரச்னை என்று தள்ளி விட்டேன்.

சித்ரா பவுர்ணமியன்று வீட்டில் விளக் கேற்றி இருளை விரட்டுங்கள் என்று வெளி வந்த ஓர் அறிக்கையைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டேன்.

விநாயக சதுர்த்திற்கு வாழ்த்துத் தெரி வித்தாய்; நான் எழுதிய களி மண்ணும் கையுமாக (திராவிட நாடு 12.9.1942) என்ற கட்டுரையைப் படிந்திருந்தால் அல்லவா - இந்த வாழ்த்தை எழுதும்போது தயக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக எத்தனை எத்தனைக் கூட்டங்களில் பேசி இருப்பேன், எத்தனை எத்தனை கட்டுரைகளை எழுதித் தள்ளியிருப்பேன்! - மாநாடுகள் கூட்டித் தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பேன், பேரணிகளை நடத்தியிருப்பேன் - போராட்டங்களை நடத்தியிருப்பேன்!

அந்தச் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்ற என் பெயரை வைத்துக் கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார் என்றால் தலையில்தான் அடித்துக் கொள்ள வேண்டியவன் ஆனேன். ராமர் பாலமாம். அதை இடித்தால் இந்துக்கள் மனம் புண்படுமாம். அட தங்கச்சி! என் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டா இந்த மோசடியைச் செய்ய வேண்டும்?

இராமாயணத்தைப் பற்றி தந்தை பெரியாரும், நானும் எழுதியதை, பேசியதைப் படித்து பார்த்ததுண்டா, அந்த நூல்களைக் கையால் தொட்டதுதான் உண்டா?

இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் இராமாயணத்தைக் கொளுத்துவது குறித்து நான் விவாதம் செய்த வரலாறு உமக்குத் தெரியுமா? நீதிதேவன் மயக்கம் கேள்விப்பட்டதுண்டா?

வரலாறு தெரிந்தவர்கள் யாராவது உமது பக்கத்தில் வைத்துக் கொண்டதுண்டா?

இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்பதுபற்றியெல்லாம் ஏதாவது தெரியுமா?

உமக்கு எப்படித் தெரியும்? அப்படியே தெரிந்தாலும் நீ ஆரியத்தின் பக்கத்தில்தானே நிற்பாய்? அந்த அடிப்படையில் தான் இராமன் பாலத்தை இடித்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று வழக்குத் தொடுத்திருப்பாயோ?

தங்கச்சி, உன் அறிக்கை ஒன்றை உமது கட்சி ஏட்டில் (29.10.2009 _ நமது எம்.ஜி.ஆர். பக்கம் 1-9) படித்துப் பார்த்தேன்.

ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. ராமர் பிறந்தார். ராமரின் பிறவிப் பயன் என்ன? தீய சக்தியான ராவணனை அழிப்பது தான். ராமனின் பிறவிப் பயன் கிருஷ்ணன் பிறந்தார். கிருஷ்ணனுடைய பிறவிப் பயன் என்ன? கம்சன் என்னும் அரக்கனை ஒழிப்பது தான் _ அழிப்பதுதான். கிருஷ்ணரின் பிறவிப் பயன். சத்ய பாமாவின் பிறவிப் பயன். என்ன? நரகாசுரனை வதம் செய்வதுதான் சத்ய பாமாவின் பிறவிப்பயன் அதைப்போலவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறவிப் பயன் என்ன? கருணாநிதி என்னும் தீய சக்தியை அழிப்பதும், ஒழிப்பதும்தான் அண்ணா தி.மு.க.வின் பிறவிப் பயன் என்று அந்த அறிக்கையைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

திராவிடர் இயக்கத்தின் ஆணி வேரை வெட்டுவதுபோன்ற வெட்டரிவாள் வீச்சு இது!

அசுரன் என்றும், அரக்கன் என்றும் புராணங்களில், இதிகாசங்களில் கூறப்பட்டிருப்பது எல்லாம் திராவிடர்கள் அதில் கூறப்பட்டிருப்பது எல்லாம் ஆரியர் - திராவிடர் போரே!

என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிநாதம். வரலாற்று உண்மையும்கூட!

இதன் ஆரம்ப எழுத்தைக் கூடப் புரியாத ஒரு சீமாட்டி என் பெயரையும் திராவிட என்ற வரலாற்றுப் பெயரையும் தாங்கிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆனதால் ஏற்பட்ட விபரீதம்! விபரீதம்!!

புத்தர் இயக்கத்தில் புகுந்து ஊடுருவி ஆரியம் நாசப்படுத்தியதுபற்றி நான் எழுதாததா? பேசாததா? தந்தை பெரியார் கூறாததா?

இப்படியெல்லாம் சொன்ன இயக்கத்திலேயே ஆரியம் புகுந்து தன் விஷம வேலையைச் செய்து விட்டதே என்று எண்ணுகிறபோது, எதையும் தாங்கும் இதயம் படைத்த எனக்கே நெஞ்சம் வெடித்து விடும் போலி ருக்கிறதே!

இதனை ஏற்றுக்கொண்டு உம் கட்சியில் எப்படியிருக்கிறார்கள்? கொள்கை பற்றித் தெரியாத கூட்டம் உமது பின்னால் நிற்கிறது; - பதவி என்ற தீனியைப் போட்டால் போதும் புரட்சித் தலைவியே! என்று போர்ப் பாட்டுப் பாடுவார்கள் போலும்!

இந்த ஒரே ஒரு அறிக்கை ஒன்று போதும் நீவிர் யார் என்பதற்கு!

இராமன் பக்கமும் கிருஷ்ணன் பக்கமும் நின்று திராவிடர்களை சூத்திரர்களை வீழ்த்துவதற்குப் புறப்பட்ட அணிக்குத் தலைமை தாங்குகிறாய்.

அதனால்தானே சோ இராமசாமிகளும், குருமூர்த்திகளும், தினமணிகளும் தினமலர்களும் கல்கிகளும், இந்துக்களும் உம் தலைமையை ஏற்று அணிவகுத்து நிற்கின்றன.

ஆரிய வெறியின் சனாதனத்தின், மூடநம்பிக்கையின் உச்சக்கட்டத்திலே கட்சியை நகர்த்திச் சென்று விட்டாய், மிகவும் வெளிப்படையாக ஆரிய தி.மு.க.வாக மாற்றி விட்டாய் என்பதற்கு அடையாளமாக உமது ஏட்டில் நாள்தோறும் ராசிபலன் வெளியிட ஆரம்பித்து விட்டாய்.

இது ஓர் உச்சக் கட்டமான முடிவு; கட்சியில் இனி தட்டிக் கேட்க யாராலும் முடியாது என்பதற்கான அறிவிப்பாகத்தான் இதனைக் கருத வேண்டும்.

அப்பட்டமாக அண்ணா தி.மு.க. ஆரிய மயமாகி விட்டது என்பதற்கான பிரகடனமாகத்தான் இதனைக் கருத வேண்டும்.

பார்ப்பனர்களையல்ல பார்ப்பனீ யத்தை எதிர்ப்பதுதான் எங்கள் கொள்கை என்று அறிவித்தது உண்மை தான். உம்மைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினைக்கு இடம் இல்லை. பார்ப்பனராகவும் பார்ப்பனீயத்தை திராவிட இயக்கத்தில் திணிக்கும் பேர் வழியாகவும் நீர் ஆகிவிட்டாய். திராவிட இயக்கத்துக்கு இப்படி ஒரு விபத்தா? இது சூத்திரர்களின் அரசு? என்று என் தம்பி கருணாநிதி சட்டப் பேரவையில் அறிவித்தார். அவரை ஒழிப்பதுதான் அ.தி.மு.க.வின் பிறவிப் பயன் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டாய். அதற்கொப்ப இராமாயணத்தையும் துணைக் கழைத்து விட்டாய்; ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் அரசியலாக நடக்கிறது என்பதற்கான அதிகாரப்பூர்வமான அப்பட்டமான அறிவிப்பு உமது வாயாலேயே வெளிவந்துவிட்டது!

மானமும் அறிவும் உள்ள தமிழர்கள் சிந்திப்பார்களாக! ஆரியத் தலைமையால் உருவாக்கப்பட்ட இந்த அடிப்படை மோசடியை எதிர்த்து, கொள்கை ரீதியில் வினா தொடுக்க அ.இ.அ.தி.மு.க. வில் ஒரே ஒரு தொண்டன்கூட இல்லாது போய் விட்டாரா என்ற கேள்வியோடு நான் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்

(அண்ணா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இப்படித்தானே பேசி இருப்பார்?).

*************************
இணைப்பு I

சோதிடப் பரீட்சை தாசரதி


தியாகராசனும், வேணுவும் பச்சையப்பன் கல்லூரிச் சிநேகிதர்கள். வெகு நாள் பழக்கம் இல்லாவிட்டாலும் இருவரும் மிகுந்த நட்புக் கொண்டிருந் தனர். வகுப்பில் இருவரும் சேர்ந்து வாசித்து வந்தனர். அதிகம் வளர்த்து வானேன்? இருவரும் மனமொத்த நண்பர்களாய் இருந்தார்கள்.

ஆனால், ஒரு விஷயத்தில் மாத்திரம் தியாகுவிற்கும், வேணுவுக்கும் அபிப்ராய பேதமிருந்தது. நாரதபுரம் நவீன சோதிட சாத்திரிகள் பேரில் வேணு அபாரமான அபிமானம் கொண்டிருந்தான். ஆனால், சோதிடத்தின் மேல் நம்பிக்கையற்றிருந்த தியாகுவுக்கு வேணுவின் வார்த்தைகள் வேப்பங்காய்களாய் இருந்தன. அடிக்கடி இருவருக்குள் தர்க்கம் நடக்கும்.

வார்த்தைகள் வலுத்தால் சண்டையில் முடியும் என்றறிந்த தியாகராசன் இறுதியில் சோதிட சாத்திரியாரையே பரீட்சிக்க நினைத்தான்.அன்றைய தினசரியில் கண்ட விளம்பரம் அவன் கண்ணைப் பறித்தது.

நாரதபுரம்
நவீன சோதிட சாத்திரியார்
எதிர்காலக் கேள்வி நான்கிற்கு அணா எட்டு.
எழுதும் நேரத்தையாவது எந்தப் பூவின்
பெயரையாவது குறிக்கவும்

இதைக் கண்ட தியாகு எடுத்தான் காகிதத்தை; எழுதினான் பின்வருமாறு;

அய்யா, கீழ்க்கண்ட கேள்விகளுக்குத் தயவு செய்து விடைகளைத் தெரிவிக்கவும்.


1. என் தாயார் உடம்பு சீக்கிரம் குணமாகுமா?

2. என் நண்பர் வேணுவுக்கும், அவர் மனைவிக்கும் எப்பொழுது ஒற்றுமை ஏற்படும்?

3. அவருக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?

புஷ்பம் - கனகாம்பரம்

தங்களன்புள்ள,
தியாகராசன்

இதை உடனே தபாலில் சேர்த்து விட் டான். அவசரத்தில் ஸ்டாம்பு (அஞ்சல் தலை) ஒட்ட மறந்து விட்டதால், சாத்திரியார் இரண்டணா அதிகம் கொடுக்க வேண்டியது ஆயிற்று. தியாகு தன் நண்பன் விலாசத்தையே எழுதியிருந்தான்.

ஒரு வாரம் கழிந்தது. வேணுவுக்கு சாத்திரியாரிடமிருந்து வந்த கடிதத்தில் கண்டிருந்ததாவது:

உங்கள் தாயாரின் உடம்பு இன்னும் ஒரு வாரத்தில் குணமாகும். தங்கள் நண்பருக்கு ஆண் குழந்தை பிறக்கும். அது பிறந்தவுடன்; அவர் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.


வேணு ஒன்றும் புரியாமல் விழித்தான். அருகிலிருந்து தியாகு வயிறு வெடிக்கச் சிரிக்காமல் இருக்க முடியுமா? தியாகுவின் தாயார் இறந்து அனேக வருடங்களாயின. வேணுவின் துரதிர்ஷ்டமோ, சாஸ்திரியாரின் துரதிர்ஷ்டமோ வேணுவுக்கு இன்னும் விவாகம் ஆகவில்லை!

--------------- அறிஞர் அண்ணா (திராவிட நாடு)

ராசிபலன் போடும் நமது எம்.ஜி.ஆர். சிந்தனைக்ககாக இது


இணைப்பு II

இராமன் - இராமாயணம்பற்றி அறிஞர் அண்ணா


இராமனும் இராவணனும் - உண்மை உருவங்களா? வரலாற்றுக் காலத்தவரா? அல்ல கற்பனைகள். இதனைக் கூறத் தன்மான இயக்கத்தார் தயங்குவதில்லை. ஆனால், அவர்தம் கேள்விகட்குத் தக்க விடையிறுக்க முடியாத நேரத்தில் மட்டுமே, செந்தமிழை வாணிகம் செய்வோர், இராமாயணம் ஓர் கற்பனைக் கதை என்றுரைப்பரேயொழிய, மற்றைப்போதினில், இராமனை நிஜ புருஷனாகவே எண்ணுவர், - மதிப்பர், - வணங்குவர். ஆராய்ச்சிக் கூடத் தில் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பஜனை மனப்பான்மை குறையும். மற்றப் போதெல்லாம் அவர்கள் இராமதாசர்களே.

இராமதாசர்களுக்கு இராவணதாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல இந்நூல். இராமதாசர்களுக்கு, தன்மானத் தமிழர் தரும் மயக்க நீக்க மருந்து இது. தாசர் நிலை கூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இந்நூல் வெளிவந்துள்ளது.

திராவிட இன மக்களின் எழில் மிக்க வாழ்க்கையிலே, ஆரிய இனக் கலாச்சாரம் தூவப்பட்டது என்பதை மறுப்பார் எவருமில்லை. நாம், நமது கருத்துக்கு மாறானவர்கள், இருசாராரும் இதனில் மாறுபட்டோமில்லை. ஏனெனில், இது மறைக்க முடியாது உண்மையாகி விட்டது.

இராவண காவியமும், இராமாயணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது இராவணனைத் தேவனாக்க அல்ல - தமிழனாக்க, அதாவது வீரனாக்க.

இராவண காவியத்திலிருந்து தப்ப வேண்டுமென்று விரும்பும் ஆரியர்க்கும், - ஆரிய நேசர்கட்கும் ஒரே ஒரு வழிதான் உண்டு. இராமாயணமே பொய்க்கதை. அதனை நாங்கள் ஏற்கோம் என்று அறிவித்து விடுவதுதான், வேறு மார்க்கம் இல்லை. ------------- அறிஞர் அண்ணா.


-------------நூல்: புலவர் குழந்தையின் இராவண காவியம் முன்னுரையாக அண்ணா எழுதி யது இது.

இராமாயணம், இராமன் எல்லாம் கற்பனையே என்றும், ஆரியர் - திராவிடர் பிரச்சினை என்றும் இவ்வளவு தெளிவாக அறிஞர் அண்ணா எழுத்துருவில் கல்வெட்டாகச் செதுக்கியுள்ளாரே, அண்ணா பெய ரால் கட்சி நடத்துபவரின் பதில் என்ன?

நீங்கள் ஆரியரா? ஆரியதாசரா? திராவிடரா?

அ.இ.அ.தி.மு.க. தோழனின் பதில் என்ன?

------------------- மின்சாரம் அவர்கள் 12-2-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: