Search This Blog

16.2.11

பருப்பில் ஊற்ற வேண்டிய நெய்-நெருப்பில் ஊற்றலாமா?உலையில் போட வேண்டிய அரிசியை தலையில் போடலாமா?

ச.இன்பலாதன் குடும்பத்திற்கு ஒரு பாரம்பரிய வரலாறு உண்டு!
ராஜராஜன்-கலைவாணி மணவிழாவில் தமிழர் தலைவர் விளக்கம்

தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் அவர்களுடைய குடும்பம் சுயமரியாதை உணர்வு கொண்ட பாரம்பரிய குடும்பம். அதற்கென்று ஒரு வரலாறு உண்டு என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சிவகங்கை மாவட்ட தி.க தலைவர் தலைமைச் செயற்குழு உறுப்பினர், பார்க் கவுன்சில் மெம்பர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், மலர்க்கண்ணி ஆகியோரின் மகன் டாக்டர் இ.ராஜராஜன், டாக்டர் கலைவாணி ஆகியோரின் வாழ்க்கை இணை ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து 23.1.2011 அன்று தேவகோட்டையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

எங்கள் குடும்ப விழா

இது எங்கள் குடும்ப விழா. நான் இந்த வாழ்க்கை இணை ஏற்பு விழாவில் தலைமை தாங்கி நடத்துவதைவிட, அதற்கு முன்னாலே மிகப்பெரிய கடமை இருக்கிறது என்று கருதுகின்றேன்.

மறைந்த சுயமரியாதைச் சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர், வழக்குரைஞர் சண்முகநாதன் அவர்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்குத் தலைவராகவே இருந்தவர். அன்னை மணியம்மையார் காலத்திலே நம்பிக்கைக்கு உரியவராக அவர்கள் என்றைக்கும் திகழ்ந்தார்கள்.

எனவே, அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தி னுடைய வழி வழித் திருமணமாக இந்தத் திருமணம் மூன்றாவது தலைமுறையாக இப் பொழுது நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே அந்த வகையிலே நான் தலைமைதாங்கி இந்த மணவிழாவை நடத்தக்கூடிய நிலையிலே இருக்கிறேன்.

வருக! வருக! என வரவேற்கிறேன்

நான் தலைமை தாங்கி இந்த மணவிழாவை நடத்துவதற்கு முன்னாலே, இது எங்கள் குடும்ப இல்லத்து மணவிழா என்ற காரணத்தினாலே, வந்திருக்கின்ற அனைவரையும் வருக! வருக! என அன்போடு நான் வரவேற் கின்றேன்.

ஒருவருக்குப் பதிலாக இரண்டு பேர் வர வேற்பது தவறல்ல. அதிலும் இந்த செட்டிநாட்டுப் பகுதியிலே, உள்ளே ஒருவரை வரவேற்கும் பொழுது, ஒருவர் வரவேற்றவுடனே அடுத்தவர்கள். வாங்க! வாங்க! என்று வரவேற்கின்ற பண்பு இயற்கையாகவே இந்த மண்ணுக்கு உண்டு.

ஆகவே, அந்த அடிப்படையிலே அனைவரை யும் வரவேற்பதிலே நாங்கள் பெருமிதம் அடைகின்றோம். (கைதட்டல்). அதைவிட மிகவும் பாராட்டு-மணமக்களுக்கு. மணவிழாவை முதலில் நடத்தி வைத்து விடுகிறேன்.

பெரியார்-அண்ணாவை நினைத்து...

நாங்கள் யார் தலைமை தாங்கினாலும், யார் முன்னிலை வகித்தாலும் இந்த மணமுறையைப் புகுத்தியவர் அறிவுஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியார் அவர்கள் இல்லையானால் நமக்கு இப்படிப்பட்டஒரு மான வாழ்வு, உரிமை வாழ்வு கிடைத்திருக்காது.

அவ்வளவு பெரிய எதிர்ப்புக்கிடையில் அய்யா அவர்கள் 80 ஆண்டுகளுக்கு முன்னாலே இந்த மணமுறையைப் புகுத்தினார்கள். சட்டம் ஒப்புக்கொள்ளுகிறதா இல்லையா? என்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இன்றைக்கு நீதிய ரசர்களே வந்து நடத்து கின்றார்கள். அப்படிப் பட்ட வாய்ப்பை இன் றைக்கு நாம் பெற்றிருக் கின்றோம்.

1967-தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு...

ஒரு காலத்திலே உச்சநீதிமன்ற நீதியரசர் வந்து நடத்தினாலும் கூட, செல்லாது என்ற நிலை இந்த மணவிழாவிற்கு இருந்தது. அதை அறிஞர் அண்ணா அவர்கள் 1967இல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைத்து, அந்த அமைச்சரவையே தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கை என்று சொல்லி; சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தவைகளும் செல்லும், நடப்பவைகளும் செல்லும், இனி நடக்க இருப்பவைகளும் செல்லும் என்று ஆக்கிய பெருமை அண்ணா அவர்களையே சாரும்.

ஆகவே இதுபோன்ற மணமுறைகளுக்கு நாங்கள் யார் தலைமை தாங்கினாலும், யார் முன்னிலை வகித்தாலும் தத்துவரீதியாக தந்தை பெரியார் தலைமையிலேதான் எல்லா சுயமரியாதைத் திருமணங்களும் என்பது பொருள்.

அதே போல அறிஞர் அண்ணா அவர்களது முன்னிலையிலேதான் இந்த மணவிழா நடைபெறுகின்றது என்று பொருள் என்பதை இங்கே சொல்லி, அந்த இருபெரும் தலைவர் களுடைய தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்தி, அவர்களை நினைத்து இப்பொழுது மணமக்கள் தங்கள் உறுதிமொழிகளைக் கூறுகிறார்கள்.

இதற்காக முதலிலே மணமக்கள் இருவரும்-அன்பு செல்வர்கள் ராஜராஜன்-கலைவாணி ஆகிய இருவரும் இப்பொழுது வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறி , நம் அனைவர் முன்னிலை யிலே வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்கிறார்கள். (வாழ்க்கை ஒப்பந்த விழா நடைபெற்றது)

அன்பு நண்பர்களே! பெரியோர்களே! தாய் மார்களே! உங்கள் எல்லோருக்கும் மீண்டும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்து என்னுடைய உரையைத் தொடருகிறேன்.

எங்கள் வீட்டு மணவிழா

முதலாவதாக இது எங்கள் வீட்டு மணவிழா என்றுநான் முதலிலே சொன்னேன். சம்பந்தியாரைப் பாராட்டுகின்றோம்

குறிப்பாக நம்முடைய வழக்குரைஞர் ச.இன்பலாதன், டாக்டர் மலர்க்கண்ணி ஆகியோருடைய சம்பந்தியார் திருவாளர்கள் சோனைமுத்து, கலா ஆகிய இருவரையும் நாங்கள் அவர்களைப் பாராட்டுவதைவிட, இயக்கத்தின் சார்பிலே சம்பந்தி குடும்பத்தாரான இவர்களை முதலில் பாராட்டுகின்றோம். நன்றி செலுத்துகிறோம் (பலத்த கைதட்டல்). ஏனென்றால் எங்கள் கட்சியினர் இவர்கள். பாரம்பரியமாக எங்கள் கொள்கையில் ஊறியவர்கள். இந்த மணவிழா இப்படி நடப்பதிலே நம்முடைய மணமகன் ராஜராஜன் உள்பட எல்லாமே இந்தக் குடும்பத்தில் நடப்பது இது ஒன்றும் அதிசயமோ, வியப்போ கிடையாது.

ஆனால் சோனைமுத்து அவர்களுக்கும், கலா அம்மா அவர்களுக்கும் இந்த மாதிரி திருமணம் நடக்கிறதே இது சரியாக இருக்குமா? இது என்ன? இருந்தாலும் நல்ல மாப்பிள்ளை, இருந்தாலும் நல்ல குடும்பம். நல்ல குடும்பத்து சம்பந்தம் இருக்கிறது. ஆகவே இதை ஏற்றுக்கொள்வோம் என்ற சிந்தனையில் வந்திருக்கிறார்கள்.

வழக்கத்திற்கு மாறாக...

வழக்கமாக எல்லோரும் பேசிவிட்டு, கடைசியாகத்தான் பேசுவேன். இந்தத் தத்துவங்கள் புரிய வேண்டும் என்பதற்காக வாழ்த்துரை எல்லாம் முடிந்த பிறகு இறுதியிலேதான் நான் நடத்தி முடிப்பேன். ஆனால் இன்றைக்கு வழக்கத்திற்கு மாறாக முன்னரே திருமணத்தை நடத்தினோம்.

உரிய நேரத்தில் நடத்தவேண்டும்

காரணம் வேறு ஒன்றுமில்லை. அவர்களுக்கு இந்த நேரத்தில் நடத்த வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை நியாயமா? தவறா? என்பதை விளக்கிச் சொல்லவேண்டிய அவசிய மில்லை. அது தவறோ சரியோ, சம்பந்தி வீட்டுக்காரர்கள் இந்தக் கொள்கைக்கு இவ்வளவுதூரம் அவர்கள் இறங்கி வந்ததற்காக, இவர்கள் இன்னும் கொஞ்சம் விட்டுக்கொடுப்பதில் தவறில்லையென்று கருதுபவர்கள் இன்பலாதன்-மலர்க்கண்ணி குடும்பத்தினர். இதுதான் பெரியார் கொள்கையின் அணுகுமுறை.

டாக்டர் மலர்க்கண்ணி

ஆகவே, அந்த அடிப்படையில் நாங்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டோம். நான் ரயிலில் வரும்பொழுது நினைத்தேன். முதலிலே முடிவு பண்ணினேன். மணவிழாவில் நான் 9 மணிக்கு இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள் என்று டாக்டர் மலர்க்கண்ணி அவர்கள் தயங்கிக் கொண்டே என்னிடத்தில் ஃபோனில் சொன்னார்கள். நான் சீக்கிரமே வந்துவிட்டேன்.

நல்லதாகப் போய்விட்டது. இப்பொழுது திருமணம் முடிந்தது. இதைப்பற்றி விளக்கிச் சொல்லாம். ஆனால் இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், மற்றவர்களுடைய உணர்வுகளை நாங்கள் மதிக்கிறவர்கள்- சுயமரியாதை இயக்கத்தவர்கள், பெரியாருடைய தொண்டர்கள் (பலத்த கைதட்டல்).

எங்களை மாற்ற நினைப்பார்கள்

அவர்களை மாற்ற வேண்டும் என்று நினைப்போம். அது வேறு செய்தி. அவர்கள் எங்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களை கொள்கை ரீதியாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் நினைப்போம். இது காலம்காலமாக இருந்துகொண்டு வருகின்ற முயற்சி.

இன்பலாதனின் சம்பந்தியார் குடும்பம் வைதீக உணர்வு காலம் காலமாக ஊறியிருப்பதினாலே நல்ல நேரத்தில் திருமணத்தை நடத்தியாக வேண்டும், நேரம் போய்விடக்கூடாது என்று நினைப்பார்கள். நாங்கள் ஒரு கேலண்டர் விடுதலையின் சார்பாக வெளியிட்டிருக்கின்றோம்-பெரியார் நாள்காட்டி.

பெரியார் காலண்டரில் நல்லநேரம்

அந்தக் காலண்டரில் அதில் நல்ல நேரம் என்று போட்டிருக்கும். என்னைப் பார்த்து ஒருவர் இந்த கேலண்டரைப்பற்றிக் கேட்டார். என்ன சார், நீங்கள் கூட உங்களுடைய கொள்கைகளை விட்டு விட்டு நல்ல நேரம் என்று காலண்டரில் போட்டிருக்கிறீர்களே என்று கேட்டார்.

பெரியார் நாள்காட்டியில் போய் நல்லநேரம் போட்டிருக்கின்றீர்களே இது பெரியாடைய கொள்கைக்கு விரோம் இல்லையா?என்று கேட்டார். நான் சொன்னேன். கொஞ்சம் அதற்கு கீழ் படித்துப் பாருங்கள் என்ன போட்டிருக்கிறது என்று சொன்னேன். நல்ல நேரம் 24 மணிநேரமும் என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. (கைதட்டல்).

தூங்குகிற நேரத்தைத் தவிர...

ஏனென்றால் உழைக்கிறவர்களுக்கு எல்லா நேரமும் நல்லநேரம்தான். தூங்குகிற நேரத்தைத் தவிர. தூங்குகிற நேரமும் நல்ல நேரம்தான். உடலுக்குத் தேவையான தூக்கமும் மிக முக்கியம். பசி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தூக்கம் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

பெரிய வரலாறே உண்டு!

நம்முடைய சகோதரன் இன்பலாதன் அவர்களுடைய தந்தையார் அய்யா சண்முகநாதன் அவர்கள் பெரியார் அறக்கட்டளைக்குத் தலைவர். அதற்கு முன்பு பார்த்தீர்களேயானால் அண்ணன் ராஜசேகரன் குடும்பமாக இருந்தாலும், இராமச் சந்திரனார் காலத்திலிருந்து இன்றைய கற்பூர சுந்தரபாண்டியன் அவர்கள் வரை-சுயமரியாதை இயக்கத்திற்குப் பெரிய வரலாறே உண்டு. ஒரு பெரிய ஆலமரம்-அதனுடைய விழுதுகள்தான் இங்கே இருக்கின்றன. அதனுடைய வேர்கள் ரொம்ப பலமானது.

எல்லோருக்குமே பெரியார்தான் வழிகாட்டி!

அய்யா ராஜசேகரன் அவர்கள் ஆனாலும், சத்தியேந்திரன் அவர்கள்ஆனாலும், அவர் களுடைய பிள்ளைகள் ஆனாலும், அய்யா இராமசுப்பிரமணியம் அவர்கள் ஆனாலும் இந்த குடும்பத்தைச் சார்ந்த எல்லோருமே தந்தை பெரியாரை வழிகாட்டியாகக் கொண்டு அவர் களையே தங்களுடைய காவலர்களாகக் கொண்டு வாழ்ந்து, வளர்ந்து முன்னேறியவர்கள்.
அப்பேர்ப்பட்ட சுயமரியாதைக் குடும்பத்தில் இன்றைக்கு இன்பலாதன் அவர்களுடைய மகன் டாக்டர் ராஜராஜனுக்கு மணவிழாவை நடத்தி வைப்பதிலே நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒரு சம்பவம் சொல்ல வேண்டும்

உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். அய்யா சண்முகநாதன் அவர்கள் எதைச் செய்தாலும் ரொம்பத் தனித்தன்மையோடு, ரொம்ப ஆழமாகவும் செய்வார். எதையும் யோசனை பண்ணிச் செய்வார்.

இன்றைக்கு அவரைப் போலவேதான் இன்பலாதனும் இருக்கின்றார். எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஒரு முறை வீட்டுத் திறப்பு விழாவிற்கு வரவேண்டுமென்று என்னை அழைத்திருந்தார்கள். மதுரையிலிருந்து நாங்கள் வருகின்றோம். நான் சொல்லுவது அய்யா, அம்மா அவர்களுக்குப் பிறகு நடந்த சம்பவம். நாங்கள் வீட்டுக்கு வந்தவுடனே அய்யா சண்முகநாதன் அவர்களும், இராமலக்குமி அம்மா அவர்களும் நின்றார்கள். என்.ஆர்.சாமி அவர்களும் சரி, அதே போல அவருடைய மகன் திராவிடமணி அவர்களும் இருப்பார்கள்.

இருவரையும் என்னிடம் ஒப்படைத்தார்கள்

சண்முகநாதன் அவர்களும், அய்யா என்.ஆர். சாமி அவர்களும் தங்களுடைய பிள்ளைகள் இன்பலாதன், அதேபோல சாமி.திராவிடமணியை ஒப்படைக்கிறோம் என்று சொன்னார்கள்.

அதற்குப் பிறகு அய்யா சண்முநாதன் அவர்களும், இராமலக்குமி சண்முகநாதன் அவர்களும் அவர்களுடைய பேரப் பிள்ளைகளான ராஜராஜன் அவர்களையும், தேம்பாவணியையும் கைகளைப் பிடித்து, அவர்கள் இருவரையும் என்னிடம் ஒப்படைத்தார்கள்.

இன்பலாதன்-மலர்க்கண்ணி ஆகியோருடைய பிள்ளைகளை இயக்கத்துக்கு ஒப்படைக்கிறோம் என்று சொன்னார்கள். சிறுபிள்ளையாக இருந்த ராஜராஜன் டாக்டராகி, இன்றைக்கு மண விழாவினை நடத்திக்கொள்கிறார். டாக்டர் ராஜராஜன்-டாக்டர் கலைவாணி மணவிழாவைப் பெரிய மாநாடு போல இந்த தேவகோட்டையில் நடத்துகிறார்கள் என்றால். எங்களுக்கு அதிலே மிகப்பெரிய மகிழ்ச்சி, பெரிய வாய்ப்பு!

நீதி, நிருவாகம், சட்டம்

ஏனென்றால், இந்தத் தேவகோட்டையில் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக நடந்து கொண்டி ருக்கிறது இந்த மணவிழா. அய்யா நீதியரசர் அவர்கள் இருக்கின்றார். அதேபோல அய்.ஏ.எஸ். அவர்களும் இருக்கிறார்கள். வழக்குரைஞர்களும் இருக்கிறார்கள். நீதித்துறை, நிருவாகத்துறை, சட்டத்துறையினரும் வந்திருக்கிறார்கள்.

அதே மாதிரி எம்.எல்.ஏக்கள், மற்றவர்கள் எல்லாம் இங்கு இருக்கிறார்கள். ஆகவே, எல்லா துறையில் இருக்கிறவர்களும் இந்த மணவிழாவிற்கு வந்திருக்கிறார்கள்.

ஆரம்பமே இந்த தேவகோட்டைதான்!

சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்ற வழக்கே இந்த தேவகோட்டை நீதிமன்றத்திலிருந்துதான் ஆரம்பித்தது. தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் என்னுடைய மண விழாவை நடத்தி வைத்தனர். அவர்கள்தான் அழைப்பிதழே போட்டார்கள். இங்கே வந்திருக் கின்ற சில தோழர்களுக்குத் தெரியும். என்னுடைய வாழ்விணையர் திருமதி மோகனா அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்.

நாங்கள் எங்கள் குடும்பத்தோடுதான் வந்திருக்கின்றோம். பல பேருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகச் சொல்லுகின்றோம்.

நேரம், காலம்-பயப்படக்கூடாது

எனவே நேரம், காலம் இதைக் கண்டு பயப்படும் படியாக நமக்கு மூளையில் மிகப்பெரிய விலங்கு போட்டு வைத்துவிட்டார்கள். அந்த விலங்கு சாதாரணமான விலங்கு அல்ல. அதை உடைப்பது அவ்வளவு சுலபமாக முடியாது. ஈரோட்டுச் சம்மட்டியால் மட்டும்தான் உடைக்க முடியுமே தவிர, வேறு எதனாலும் உடைக்க முடியாது.

என்னுடைய மணவிழாவை அய்யா நடத்திவைத்தார்

அய்யா அவர்கள் இந்தத் திருமணத்தை நடத்திவைத்தார். என்னுடைய மணவிழாவிலே சண்முகநாதன் அய்யா அவர்கள் சொல்லும் பொழுது, இது எங்கள் குடும்பத் திருமணம் மட்டுமல்ல; இது எங்கள் கொள்கைக் குடும்பத் திருமணம் என்று சொன்னார்கள். என்னுடைய திருமணம் குறுந்தகடாக இருக்கிறது. அய்யா சண்முகநாதன் அவர்கள் பேசியதையேகூட எடுத்துப் போடலாம். அந்த அளவுக்கு ஆதாரத் துடன் இருக்கிறது. நமது தாய்மார்களுக்கும், வயதானவர்ளுக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ராகுகாலத்தில்தான் நடைபெற்றது

என்னுடைய மணவிழாவை தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் நடத்தியது 1958ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம்தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை அய்ந்தரை மணிக்குத்தான் நாங்கள் மாலை மாற்றிக்கொண்டோம். தாலி கிடையாது. இன்னமும் என்னுடைய துணைவியார் பொட்டு வைக்கமாட்டார்கள். அதற்குக் காரணம் இந்து மதத்திலே பொட்டுக்கு இருக்கிற தத்துவத்தைக் கேட்டால் ரொம்பப்பேர் வைக்க மாட்டார்கள். (சிரிப்பு).

மற்ற விசயங்கள் தெரியுமோ, தெரியாதோ- ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியா? என்னய்யா அக்கிரமமாக இருக்கிறது. தாய்மார்கள் பலபேர் சொல்லுவார்கள், இது கொழுத்த ராகுகாலம் ஆயிற்றே!

ராகுகாலத்தில் இரண்டு கேட்டகிரி

ராகுகாலத்திலேயே நம்மாள் இரண்டு கேட்டகிரி வைத்திருக்கிறார்கள். ஒன்று கொழுத்த ராகுகாலம். இன்னொன்று இளைத்த ராகுகாலம். அந்த ராகுகாலத்தில்தான் எங்களுக்குத் திருமணம் நடந்தது. இதோ உட்கார்ந்திருக் கின்றார்கள். எங்களுடைய திருமணம் 52 ஆண்டுகள் முடிந்து 53ஆம் ஆண்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று சொல்லும் பொழுது இந்த நேரம், காலம் இவை எல்லாம் மூடநம்பிக்கை என்பதற்கு வேறெங்கும் உதாரணம் தேடத் தேவையில்லை. எங்களைப் பார்த்தாலே அந்த உதாரணத்தை தெரிந்துகொள்ளலாம்.

நிம்மதியான வாழ்க்கை!

எங்களுக்கு குழந்தை இருக்கிறதா? என்ற புதிதாக வந்திருக்கின்ற தாய்மார்கள் எண்ணக்கூடும். ராகு காலத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்களே. இவர்களுக்குக் குழந்தை குட்டி இருக்கிறதா என்று கேட்பார்கள். நமது நாட்டில் குழந்தை பெறுவது மட்டுமல்ல, குட்டியும் போடவேண்டும். உங்களுக்குக் குழந்தை குட்டி ஏதாவது இருக்கிறதா என்று கேட்பார்கள்.

எங்களுக்குப் போதும் என்று சொல்லுகிற அளவுக்குக் குழந்தைகள் உள்ளனர். எங்களுக்கு எந்தக் குறைவும் இல்லை. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கக் கூடிய அளவுக்கு இருக்கிறோம். வாழ்க்கையில் பெரியார் கொள்கையைப் பின்பற்றியதால் நிம்மதியாக இருக்கின்றோம். ஆகவே நேரம், காலம் இவைகளைப் பார்த்து நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

ஒன்றரை மணிநேரத்தை நாம் ராகுகாலம் என்று வீணாக்குகிறோம். இன்னொரு ஒன்றரை மணிநேரத்தை எமகண்டம் என்று வீணாக்கு கிறோம்.

இரவில் எமகண்டம் வருவதில்லையே!

அது மட்டுமல்ல. எல்லா எமகண்டமும் பகலில்தான் வருகிறது. இரவில் வரவில்லை. இரவில் வந்து விட்டுப்போய் விட்டால் பரவாயில்லை. மூன்று மணி நேரம் இப்படி போய்விட்டதே என்று கருதலாம்.

ஆனால், நேரத்தை யார் மதிக்கிறார்களோ, அந்தச் சமுதாயம்தான் வளரமுடியும். நேரத்தை யார் பாதுகாக்க வேண்டுமென்று நினைக்கின்றோமோ, அந்த மக்கள்தான் முன்னேற முடியும். அந்த வகையிலே பொருத்தமாக இரண்டு நல்ல குடும்பங்கள் இணைகின்றன. ஏனென்றால் ரொம்பப் பாராட்ட வேண்டி குடும்பம் இது.

பண்புள்ள குடும்பம்

நான், அய்யா தொழிலதிபரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ரொம்பப் பண்புள்ள குடும்பம் என்று கேள்விப்பட்டேன். ரொம்ப மகிழ்ச்சி. இது தேவகோட்டைக்கும், சிவகங்கைக்கும் மட்டும் நடந்த சம்பந்தமல்ல. அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், இரண்டு நல்ல குடும்பங்கள் இணைந்திருக்கின்றன. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள். அதுபோல நல்ல எண்ணம் கொண்ட குடும்பங்கள் இணைகின்றன.

தடுக்கி விழுந்தாலே டாக்டர்தான்!

இன்பலாதன்-மலர்க்கண்ணி திருமணத்தையும் நான் நடத்தி வைத்திருக்கின்றேன். அவருடைய மகன் டாக்டர் ராஜராஜன்-டாக்டர் கலைவாணி திருமணத்தையும் இன்றைக்கு நடத்தி வைக்கக் கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன். ராஜராஜன் டாக்டர். அவருடைய தங்கை தேம்பாவணியும் டாக்டர். தடுக்கி விழுந்தால் இந்தக் குடும்பமே டாக்டர் குடும்பம். மருமகள் டாக்டர், மகன் டாக்டர். எல்லாமே டாக்டர்கள்தான்.

டாக்டர் சோம.இளங்கோவன்

பெரியார் பிறந்திருக்காவிட்டால் நம்மவர்கள் டாக்டர்கள் என்பதை நினைத்தே பார்க்க முடியாது. (கைதட்டல்) ஏன் என்று நீங்கள் நினைக்கலாம். நண்பர்களே!, ஜஸ்டிஸ் கட்சி, நீதிக்கட்சி, வராவிட்டால் திராவிடர் இயக்க ஆட்சி வந்திருக்காவிட்டால் தமிழர்கள் டாக்டர்களாக வரக்கூடிய வாய்ப்பே இல்லை. பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கின்றார். அவர் சொன்னார், நம்ம குடும்பத்து மணவிழா நடைபெறுகிறது; அழைப்பு என்ன வேண்டியிருக்கிறது; தாராளமாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் சொன்ன உணர்வு இருக்கிறது பாருங்கள், இது இரத்த பாசத்தைவிட கொள்கைப் பாசம் ரொம்ப ஆழமானது (கைதட்டல்).

நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னாலே என்ன நிலை? இங்கே மணமக்கள் இருவருமே டாக்டர்கள் என்று இருக்கும்பொழுது, டாக்டர் நண்பர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

------------தொடரும் --"விடுதலை” 14-2-2011

இல்லறத்தையும் தாண்டியது தொண்டறம் தொண்டறம் செய்ய முன் வாருங்கள்!
சமுதாய மாற்றத்தை விளக்கி தமிழர் தலைவர் கி.வீரமணி பேச்சு


இல்லறத்தையும் தாண்டி தொண்டறம் ஒன்று உள்ளது அந்தத் தொண்ட றத்தைச் செய்ய அனைவரும் முன் வாரீர் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

சிவகங்கை மாவட்ட தி.க தலைவர் தலைமைச் செயற்குழு உறுப்பினர், பார்கவுன்சில் மெம்பர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், மலர்க்கண்ணி ஆகியோரின் மகன் டாக்டர் இ.ராஜராஜன், டாக்டர் கலைவாணி ஆகியோரின் வாழ்க்கை இணை ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து 23.1.2011 அன்று தேவகோட்டையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அந்தத் தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். சாமி குடும்பத்தைச் சார்ந்த பெரியார் லெனின் டாக்டர். இப்படி நிறைய பேர் நம்முடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் டாக்டர் களாக இருக்கிறார்கள்.

எம்.பி.பி.எஸ். படிக்க சமஸ்கிருதம் வேண்டுமாம்!

நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்னாலே டாக்டர் படிப்புக்கு மனு போட வேண்டும் என்றாலே சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும். சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான் எம்.பி.பி.எஸுக்கே போக முடியும். 1920-க்கு முன்னாலே இருந்த நிலை இது. 90 ஆண்டுகளுக்கு முன்னாலே இந்தச் சமுதாயம் இருந்த நிலை இதுதான்.


அதனால் நம்மவர்கள் யாரும் டாக்டர்களாக வரமுடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தது. மனுதர்மப்படி சூத்திரன் படிக்கக் கூடாது என்று இருந்தது.

ஒரு காலத்திலே நம்மவர்கள் படிக்கக் கூடாது என்ற நிலை இருந்தது. இன்றைக்குத் திறந்த போட்டி என்பதில்கூட, 98 சதவிகித டாக்டர்கள் நம்மவர்கள்தான் வரக்கூடிய மிகப்பெரியதொரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, இது சாதாரண ஒரு மாற்றமல்ல.

மாற்றம் தொடர்கிறது

எனவே, இந்த மாற்றம் தலைமுறை தலைமுறையாக வளர்ந்துகொண்டிருக்கின்ற மாற்றம். இந்த மாற்றத்திற்கு அடிப்படை திராவிடர் இயக்கம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, இன்றைய முதல்வர் கலைஞர், அதற்கு முன்னால் ஆண்ட எம்.ஜி.ஆர் இப்படி திராவிட இயக்கப் பாரம்பரியத்தை எடுத்துப் பார்த்தால் மிகப்பெரிய மாறுதலை சமுதாயத்திலே, கல்வித் துறையிலே ஏற்படுத்தியதினுடைய விளைவாகத் தான் இன்றைக்கு பெரிய வாய்ப்பு நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது.

அதோடு மணமகளாக இருக்கின்ற டாக்டர் கலைவாணி அவர்கள் எம்.டி. டி.ஜி.ஓ., படித்திருக்கிறார். ஒரு காலத்திலே எம்.பி.பி.எஸுக்கு மேலே போக முடியாது. இன்றைக்குப் பெண்கள் படித்திருக்கின்றார்கள்.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?

ஒரே ஒரு செய்தியைச் சொல்லி, மற்றவர்கள் வாழ்த்த வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். பாட்டிமார்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மூன்று தலைமுறைக்கு முன்னாலே அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட் டார்கள். நம்முடைய நாட்டுப் பழமொழி இது. நம்முடைய பெண்களுக்கு என்ன வேலை வைத்தி ருந்தார்கள் என்றால் பெண்கள் அடுப்பூதும் வேலையைத்தான் வைத்திருந்தார்கள்.

நல்ல வாய்ப்பாக இப்பொழுது கலைஞர் ஆட்சியில் ஊதுகிற அடுப்பு இல்லை. கேஸ் அடுப்பு இலவசமாகவே கொடுத்துவிடுகின்றார். அதனால் அடுப்பு ஊதுவதற்கு வேலையே கிடையாது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப் பெதற்கு என்று கேட்டார்கள்.

இரத்தம் சிந்தாப் புரட்சி!

சரசுவதி என்று அந்த அம்மாவுக்குப் பெயர் இருக்கும். அவருக்கு 80, 90 வயது இருக்கும். சரசுவதி பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் பேத்தி சரசுவதி டாக்டராக இருக்கின்றார். இது சரசுவதி பூஜை கொண்டாடியதால் அல்ல. தந்தை பெரியாருடைய உழைப்பினால், இந்த இயக்கம் செய்த மிகப்பெரிய அமைதிப் புரட்சியி னால், இரத்தம் சிந்தாத சமுதாயப் புரட்சியின் விளைவாகத்தான் இன்றைக்குப் படித்து டாக்டராகி யிருக்கின்றார்.

சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் டாக்டர் ஆக முடியும் என்பதை பெரியார் கண்டித்தார். நீதிக்கட்சி ஆட்சி. பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தார். உடனே அதை அவர் ரத்து செய்தார். நாங்கள் எல்லாம் பிறக்காத காலத்தில் அதை ரத்து செய்தார். நாமெல்லாம் பிறக்காத காலத்தில் இந்தப் புரட்சி நடந்தது.
சமுதாய மாற்றம்

இன்றைக்கு அது தொடர்ந்த காரணத்தால்தான் ஏராளமான டாக்டர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு எஞ்சினீயர்கள் வந்திருக்கிறார்கள்.

நமது சாதாரண குப்பன் மகன் சுப்பனைக் கேட்டால்கூட, கிராமத்திலே இருக்கிறவரைக் கேட்டால்கூட எங்கேயிருக்கிறார் உங்களுடைய பையன் என்று கேட்டால், என் பையன் வாஷிங்டனில் இருக்கிறார். என் பையன் சிகா கோவில் இருக்கிறார். என் பையன் ஆஸ்திரேலி யாவில் இருக்கிறார். என்னவாக இருக்கிறார்? என்று கேட்டால், கம்ப்யூட்டர் எஞ்சினீயராக இருக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சமுதாய மாற்றம் வந்திருக்கிறது என்று சொன்னால், சுயமரியாதை இயக்கம் செய்த மிகப்பெரிய அரும்பெருந்தொண்டு. சமுதாய மாற்றம். ஒரு துளி ரத்தம்கூட சிந்தாமல் அமைதிப் புரட்சியின் மூலமாக இது நடந்திருக்கிறது.

அந்த அமைதிப் புரட்சியின் இன்னொரு வடிவம்தான் இந்த சுயமரியாதைத் திருமணம். ஆகவே இந்த மாதிரி திருமணத்தில் நெருப்புக் குண்டம் வளர்க்கவில்லையே, மாங்குச்சி சுள்ளியைப் போடவில்லையே, அரிசியை எடுத்து அட்சதை போடவில்லையே என்று யாரும் நினைக்காதீர்கள்.

உலையில் போட வேண்டிய அரிசியை தலையில் போடலாமா?

தந்தை பெரியார் கேட்டார். இரண்டு கிலோ அரிசியில் மஞ்சளைத் தடவி, அட்சதை என்ற பெயரில் எல்லோரும் மணமக்கள் தலையில் போடவேண்டும். மணமக்கள் தலையில் விழ வேண்டும் என்றால் மண்டபத்தின் கடைசியில் இருக்கிறவர் அட்சதை போட்டால் எங்கே வந்து விழும்? முன்னாலே இருக்கிறவர் தலையில்தான் விழும்.

அந்த அரிசி மற்றவர்கள் தலையில் விழுந்திருக்கும். அல்லது கீழே விழுந்திருக்கும். பெரியார் கேட்டார். அந்த இரண்டு கிலோ அரிசியை உலையில் போட்டு அதை சோறாக்கினால் பசி என்று வருகிறவர்களுக்குச் சாப்பாடு போடலாம். அது பயன்படும்.

பருப்பில் ஊற்ற வேண்டிய நெய்-நெருப்பில் ஊற்றலாமா?

உலையில் போடுகிற அரிசியை எடுத்து தலையில் போடலாமா? என்று தந்தை பெரியார் கேட்டார். பருப்பிலே ஊற்றுகின்ற நெய்யைப் போய் ஏன் நெருப்பிலே ஊற்றவேண்டும் என்று தந்தை பெரியார் கேட்டார். இங்கே இந்த சங்கடங்கள் எல்லாம் இல்லை. மணமக்கள் இரண்டு பேரும் ரொம்ப மகிழ்ச்சியாக உட்கார்ந்திருக்கின்றார்கள். பழைய திருமணத்திலே மாங்குச்சி சுள்ளியைப் போட்டுக் கொளுத்தி மணமகள் இவர் கண்ணை கசக்க, மணமகன் அவர் கண்ணை கசக்க, மணவிழாவைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களோ இரண்டு பேருக் கும் இடையில் ஏதோ இருக்கும் என்று சொல்ல, இப்பொழுது இந்தப் பிரச்சினைக்கு இடம் இல்லை.

அறிவுரையை விரும்புவதில்லை...

இவ்வளவு மகிழ்ச்சியான மணவிழாவாக இந்த மணவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மணவிழாவில் மணமக்களுக்கு ஒன்றும் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமில்லை.

இப்பொழுது இருக்கின்ற தலைமுறை அறிவுரையை விரும்புவதில்லை (சிரிப்பு-கைதட்டல்). தாத்தாக்கள் பேரப்பிள்ளைகள் மீது இருக்கிற ஒரு ஆசையினாலே, என்னப்பா என்று ஆரம்பித்தால், ஆரம்பித்து விட்டாரய்யா என்று எல்லா வீடுகளிலும் சொல்லுவது ஒரு நடைமுறை பழக்கம் (கைதட்டல்).

ஏனென்றால் நாங்கள் எல்லா குடும்பங்களோடும் தொடர்புள்ளவர்கள். ஆகவே நான் அறிவுரை எதையும் மணமக்களுக்குச் சொல்லவிரும்பவில்லை. மணமக்கள் தேர்ந்தவர்கள், ரொம்ப விவரம் தெரிந்தவர்கள். அவர்கள் பத்து பேருக்கு அறிவுரை சொல்லுவார்கள்.

அளவான குடும்பம் என்றுகூட சொல்லத் தேவையில்லை. அதில் தெளிவாக இருக்கக் கூடிய வர்கள்.

ஒரே ஒரு வேண்டுகோள்!

ஆனால் ஒன்றே ஒன்று, நான் வேண்டுகோளாக வைக்க விரும்புவது-இப்பொழுது படித்து வளர்ந் திருக்கிறவர்களின் மணவிழாக்களில் மண மக்களுக்குச் சொல்லுகின்ற செய்தி-ஒன்றுதான்.

அன்புள்ள மணமக்களே! நீங்கள் வாழ்க்கையில் நன்றாக உணர்வீர்கள். இன்னும் மேலே மேலே வளருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கை நிறைய சம்பாதிப்பீர்கள். பணம் சேரும். நன்றாக இருப்பீர்கள்.

எவ்வளவு நீங்கள் வளர்ந்தாலும், எவ்வளவு பொறுப்புகள், பதவிகளில் நீங்கள் உயர்ந்தாலும் தயவு செய்து ஒன்றை மட்டும் நீங்கள் மறந்து விடக்கூடாது.

தாய்-தந்தையருக்கு நன்றி காட்டுங்கள்!

உங்கள் தாய் தந்தையருக்கு-உங்களுடைய பெற்றோர்களுக்கு நன்றிகாட்டுகிறது இருக்கின்றதே. அதை அருள்கூர்ந்து நீங்கள் என்றைக்கும் மறந்துவிடாதீர்கள்.

அவர்களுடைய உழைப்புதான் உங்களை உயர்த்தியிருக்கிறது. அவர்களால்தான் நீங்கள் உருவாகியிருக்கின்றீர்கள். ஆகவே அவர்களும் உங்களிடமிருந்து பணத்தை எதிர்பார்க்கவில்லை. பாசத்தை, அன்பை-வற்றாத அன்பையும்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இன்றைக்குப் பல குடும்பங்களில் பார்த்தீர்களேயானால் அப்பாயின்ட்மென்ட் வைத்துதான் அப்பாவே பிள்ளையைச் சந்திக்கின்றார். இது மாதிரி ஒரு சூழல்.

ஒருவர், நான் என் அம்மாவை ரொம்பப் பிரியத்தோடு வைத்திருக்கிறேன் என்று சொன்னார். அதற்காகவேதான் நான் புதுவீடு கட்டியிருக்கின்றேன். அதற்கு கிரகப் பிரவேசம். புதுமனை புகுவிழா என்றுகூட சொல்லமாட்டார்கள். கிரகப் பிரவேசம் என்றுதான் சொல்லுவார்கள்.
அன்னையோ...

முதியோர் இல்லத்தில்!

அவர் வங்கியில் வேலை செய்தார். எங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு வந்து அந்த இல்லத்தைக் காட்டினார். அதுமட்டுமல்ல; அந்த இல்லத்திற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தார்.

அடடா! இவர் தாயார் மேல் எவ்வளவு பற்றுதல் கொண்டவர். அதற்கு அன்னை இல்லம் என்றே பெயர் வைத்திருக்கின்றார் என்று சொல்லி வீடு திறப்பு விழா அன்றைக்கு உள்ளே எல்லாம் அழைத்துக்கொண்டு வந்து எங்களிடம் காட்டினார்.

இதுதான் மாஸ்டர் பெட்ரூம், இது கிச்சன், இது டைனிங் ஹால் என்று காட்டினார். இப்படி எல்லாம் வந்து அவர் காட்டிக்கொண்டு வந்த பொழுதுகூட இருக்கிற பணியாளர்கள் கேட் டார்கள்,

எல்லாவற்றையும் காட்டினீர்கள். உங்கள் அம்மாவைக் காட்டவில்லையே என்று கேட்டார்கள். அதற்கு அந்த வீடு கட்டின-அன்னை இல்லத்துக்குச் சொந்தக்காரர் சொன்னார். அவர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார் என்று சொன்னார். இதுதான் இன்றைய சமுதாய நிலை.

முதியோர் இல்லம் பெருகலாமா?

இன்றைக்கு குழந்தைகள் இல்லத்தைத் தொடங்குவதைவிட, அநாதை இல்லங்களைத் தொடங்குவதைவிட முதியோர் இல்லங்கள் பெருகி வருவது இருக்கிறதே, அது ஒரு நல்ல போக்கு அல்ல.

சமுதாயம் விரும்பக் கூடியதல்ல. அதற்குக் காரணம் என்னவென்றால் பல இளைஞர்கள் சரியான பாதை தெரியாமல் இருக்கிறார்கள்.
ஆனால், எங்கள் குடும்பம் அப்படி இருக்காது. காரணம், இது ஒரு பண்பட்ட குடும்பம். கொள்கையில் ஊறிய குடும்பம்.

இல்லறத்தைத் தாண்டி தொண்டறம்

இவர்களுக்கு அது தேவைப்படாது என்று சொன்னாலும்கூட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வந்திருக்கின்றவர்களுக்கு, மற்ற இளைஞர்களுக்கு இது போய்ச் சேர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கின் றேனே தவிர, வேறொன்றும் இல்லை. எனவே, சிறப்போடு வாழுங்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழுங்கள். இல்லறம், துறவறம் என்கிற இரண்டு அறங்களைப் பற்றிச் சொன்ன நாட்டில் மூன்றாவது அறம் ஒன்று இருக்கின்றது. அதுதான் தொண்டறம் என்று காட்டிய பெருமை தந்தை பெரியார் அவர்களைச் சாரும். ஆகவேதான் நீங்கள் இல்லறத்தைத் தாண்டி தொண்டறத்திலும் ஈடுபடுங்கள்.

தன்பெண்டு, தன்பிள்ளை, தன்வீடு என்று சின்னதோர் கடுகு உள்ளத்தைப் பெறாமல் தொல்லுலக மக்கள் எல்லாம் என்னுடைய மக்கள், என் குடும்பம் முக்கியம். என்னுடைய உற்றார் உறவினர்களுக்கு உதவவேண்டியது முக்கியம். ஆனால், அந்த வட்டத்தைத் தாண்டி இன்னொரு பெரிய வட்டம் இருக்கிறது. அந்த வட்டம்தான் சமுதாயத் தொண்டு.


சமுதாயத்திற்கு நன்றி செலுத்த வேண்டாமா?

இந்தச் சமுதாயத்தால்தான் நான் வளர்ந்திருக்கிறேன். எனக்கு சமுதாயம் தொண்டாற்றியிருக் கிறது. எனவே அதற்கு நான் திருப்பி நன்றி செலுத்த வேண்டாமா? என்கிற உணர்வோடு சமுதாயத் திற்கும் நீங்கள் தொண் டாற்றுங்கள் என்று கேட்டு, வாழ்க மணமக்கள்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! என்று கூறி முடிக்கிறேன். வணக்கம் (கைதட்டல்).

-இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

------------------ “விடுதலை” 15-2-2011

0 comments: