Search This Blog

15.2.11

சு.சாமியே, ஓடாதே, நில்! யார் இந்த சு.சாமி? - 6


சு.சாமியே, ஓடாதே, நில்! (6)

சு.சாமியின் ஜனதா கட்சியின் செயலாளர் வேலுச்சாமி குமுதம் ரிப்போர்ட்டரில் குற்றம் சுமத்தினாரே - அதையும் தாண்டி ஜெயின் கமிஷனிலும் சொல்லியிருக்கிறார். அதைப் படித்துப் பார்த்தால் ராஜீவ் காந்தி படுகொலையில் சு.சாமி தலைமையில் சதி நடந்திருக்கிறது என்று சந்தேகிப்பதற்கு நிறைய காரணங்கள் கிடைக்கின்றன.

ஜெயின் கமிஷன்முன் வேலுச்சாமி என்ன சொன்னார்? என்று தெரிந்து கொள்ள ஆவலா? இதோ தோழர் வேலுச்சாமி ஜெயின் கமிஷன் முன் பேசுகிறார்:

”சுப்பிரமணியசாமியை தேசிய தலைவராகக் கொண்ட ஜனதா கட்சியின் தமிழகக் கிளை பொதுச் செயலாளராக நான் பணியாற்றி இருக்கிறேன். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் சாமியுடன் தான் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டு இருந்தேன். சாமி மத்திய அமைச்சராக இருந்தபோது அவரின் தமிழகச் சுற்றுப் பயணங்களில் நான் அவரின் ஆங்கில உரையைத் தமிழாக்கிப் பேசி வந்தேன். அந்தத் தேர்தல் காலகட்டத்தில் நான் ஜனதா கட்சியின் சார்பில் திருச்சியில் வேட்பாளராக நின்றேன்.

ராஜீவ் படுகொலைக்குப் பிறகு நடந்த தமிழக தேர்தலில் ஜனதா கட்சி போட்டியிடவில்லை என்று சாமி கூறி இருக்கிறார். இது தவறு. நானும், வரதராஜன் (அணைக்கட்டு), வரதராஜன் (எழும்பூர்), ராமச்சந்திரன் (திருவெறும்பூர்), நாகராஜன் (பேரூர்) ஆகியோர் ஜனதா கட்சி சார்பில்தான் போட்டியிட்டோம்.

சுப்ரமணிய சாமி ஜெயின் கமிஷனில் சாட்சியம் அளித்தை நான் பத்திரிகைகளில் படித்தேன். அதில் அவர் முக்கியமான அம்சங்களை மறைத்து இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். இதனால் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. எனவே, உண்மையை வெளிப்படுத்த நான் முன்வந்தேன்.

1991ஆம் ஆண்டு மே 26இல் தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பிரச்சாரம் மே 24இல் முடிய இருந்தது.
ராஜீவ் படுகொலை மே 21இல் நடந்தது. இந்த தேதிகளில் சுப்ரமணியசாமியின் நடமாட்டம், நடவடிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரணை செய்தால் முக்கியமான பல உண்மைகள் வெளிவரும்.


மே 19இல் சாமி டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். நான் வரவேற்றேன். இருவரும் காரில் திருபெரும்புதூர் வழியாக காஞ்சிபுரம் சென்றோம். அங்கு பகல் 12.30 மணிக்கு உணவு உட்கொண்டோம். பின் வாலாஜாபாத் சென்று ஜனதா வேட்பாளர் மனோகருக்காக பிரசாரம் செய்தோம். பின்னர் 5 மணிக்கு காஞ்சிபுரம் வந்து பொதுக்கூட்டத்தில் பேசினோம். பின்னர் திருத்தணி அருகே பள்ளிப்பட்டு சென்று 8.30 மணிக்கு பிரசாரம் செய்தோம். பின்னர் 12 மணிக்கு வேலூர் போனோம். காரிலேயே சாமி தூங்கிக் கொண்டார்.

20ஆம் தேதி காலை 6 மணிக்கு சேலம் அடைந்தோம். அங்கு இருந்து நான் திருச்சி சென்று இரவு 8.30 மணிக்கு சேலம் வந்து சாமியுடன் சேர்ந்து கொண்டேன். பின் ஆத்தூர் சென்றோம். அங்கு இருந்து நான் திருச்சி சென்று விட்டேன். சாமி சென்னை சென்றார். 21ஆம் தேதி காலை அவர் விமானம் மூலம் டில்லி செல்வது என்பதே திட்டமாகும். 21ஆம் தேதி பகலில் டில்லியில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. எனவே அதை முடித்துக் கொண்டு 22ஆம் தேதி சென்னை வந்து திருச்சி வழியே மதுரைக்கு சுற்றுப்பயணம் செய்கிறேன் என்று என்னிடம் பயணத் திட்டத்தை சாமி வகுத்துக் கொடுத்தார்.

ஆனால், 21ஆம் தேதி அவர் நடந்துகொண்ட விதம் பெரும் அதிர்ச்சிக்கும் வியப்புக்கும் உரியதாக இருந்தது. 21ஆம் தேதி சாமி டில்லி செல்லவில்லை. அவரின் அன்றைய அனைத்து நடவடிக்கைகளும் மர்மமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தன. அந்த நாளில் அவர் யார் யாரைச் சந்தித்தார் என்ற விவரங்களும் ரகசியமாகவே இருக்கின்றன. 21ஆம் தேதி காலை அவர் சென்னை விமான நிலையம் அருகே உள்ள டிரைடென்ட் ஓட்டலில்தான் தங்கி இருந்தார். அங்கு அவர் ஏன் சென்னையில் ரகசியமாக தங்கி மர்மமான முறையில் நடந்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. தன் கட்சியின் நெருங்கிய சகாக்களுக்குக்கூட தகவல் தராமல் திடீர் என்று டில்லி பயணத்தை சாமி ஏன் ரத்து செய்தார் என்பது பெருத்த சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது.

மே 21இல் நான் டில்லிக்கு, காலையில் சாமி வீட்டுக்குப் போன் செய்தேன். சாமி சென்னையில்தானே இருக்கிறார் என சாமியின் மனைவி கூறினார். பின் சென்னையில் கட்சிப் பிரமுகர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். சாமி எங்கு இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. 21ஆம் தேதி காலை சாமி டில்லி பயண டிக்கெட்டை ரத்து செய்தார். பின் அவர் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார். அங்கு இருந்து அன்றே அவர் டில்லி சென்றார். அவர் அன்று கார் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பெரும்புதூர் வழியேதான் பெங்களூர் சென்றார். அங்கு இருந்துதான் விமானம்மூலம் டில்லி போனார். சுப்ரமணிசாமி சென்னை பெங்களூர் மார்க்கத்தில் திருப்பெரும்புதூர் -வழியே காரில் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இதை தன் கட்சி சகாக்களிடமும் மறைத்தது ஏன்? பெங்களூரில் யாரைப் பார்க்க அவர் அவசரமாகப் போனார். ராஜீவ் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு இருக்கலாம். ராஜீவை படுகொலை செய்த பின்பு, பெங்களூர் வழியே அயல்நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றிருக்கலாம். இந்த நிலையில், பெங்களூருக்கு யாரையோ அவசரமாக சந்திக்க சாமி சென்றார்.

1991 மே 21இல் அவர் மத்திய அமைச்சராக இருந்தார். அவருக்கு அமைச்சர் பதவிக்கு உரிய பல்வேறு ஏற்பாடுகள் உண்டு. 21ஆம் தேதி அவருக்கு என செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்னென்ன? பாதுகாப்பு வசதித் திட்டப் பதிவுகள் எவை எவை? இதுபற்றிய தஸ்தாவேஜுகளை தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து ஜெயின் கமிஷன் கேட்டுப் பெறவேண்டும். இதன் மூலமாக பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.


1991 மே 21இல் சாமி டிரைடெண்ட் ஓட்டலில்தான் தங்கினார் என்பதை சாமியின் மிக நெருங்கிய நண்பர் மோதிலாலின் சகோதரர் ராஜ்குமார்தான் தெரிவித்தார். 23ஆம் தேதி சாமி திருச்சி வர பயணத் திட்டம் இருந்தது. இதை உறுதிப்படுத்திக் கொள்ள 21ஆம் தேதி இரவு 10.25 மணிக்கு நான் டில்லிக்கு சாமி வீட்டுக்குப் போன் செய்தேன். போனை எடுத்த சாமி, என் குரலைக் கேட்டதும், ஓ... ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தியை சொல்லத்தானே போன் செய்தீர்கள் என்று கேட்டார். வேறு யாருக்கும் எதுவும் தெரிந்து இருக்காத அந்த அளவுக்கு விரைவில் சாமிக்கு மட்டும் எப்படி தகவல் கிடைத்தது என்பது மர்மமாக இருக்கிறது. இதுபற்றி ஜெயின் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும். மிகச் சாதாரணமான குரலில் சாமி ஒரு அதிர்ச்சியான தகவலைச் சொன்னது என் மனதை வாட்டியது.

சிறிது நாட்கள் கழித்து சாமி எனக்கு டில்லியில் இருந்து போன் செய்து, சென்னை அழைத்தார். திருச்சியில் இருந்து நானும் வந்தேன். இருவரும் அப்பல்லோ மருத்துவமனை சென்று, மரகதம் சந்திரசேகரைக் கண்டு நலம் விசாரித்தோம். மரகதத்துக்கு துளி காயம்கூட ஏற்படவில்லை. உடல் நலம் குன்றி இருப்பது போன்று மரகதம் பாசாங்கு செய்ததாகவே எனக்குப் பட்டது. மரகதம் பற்றி நான் சாமியிடம் பேச முனைந்த போது, சாமி என் கையை இழுத்து பேச்சைத் தடுத்தார். பேசாமல் இருங்கள். ரூமுக்கு வந்த பின்பு சொல்கிறேன். நிறைய விஷயம் இருக்கு என்றார். பில்டஸ் நிறுவனம் ஒன்று பெரும் தொகையை செலவு செய்துள்ளது. மரகதத்துக்கே தெரியாமல் அவர் திருப்பெரும்புதூர் தலத்தை பொதுக் கூட்டத்துக்கு தேர்வு செய்யும்படி சிலர் செய்து விட்டனர். சதிகாரர்களுக்கு சாதகமாக இது அமைந்து விட்டது என்று சாமி என்னிடம் கூறினார்.

இந்த அளவுக்கு துல்லியமான தகவல்கள் சாமிக்கு எப்படி தெரிந்தன என்று நான் வியந்து போனேன். இதுபோன்ற தகவல்களைப் பற்றி ஆழமாக விசாரணை செய்யவேண்டும். 1993ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜனதா கட்சியில் சந்திரலேகாவைக் கொண்டு வந்தார் சாமி. அப்போதில் இருந்து எனக்கும், சாமிக்கும் இடையே மன வருத்தங்கள் தோன்றின. சந்திரலேகாவை அவர் தமிழக ஜனதா தலைவர் ஆக்கினார். காலம் காலமாக உழைத்த தொண்டர்களை சாமி புறக்கணித்துவிட்டாரே என்று வருந்தி நான் ஜனதா கட்சியை விட்டு வெளியேறிவிட்டேன். இப்போது நான் எந்தக் கட்சியிலும் இல்லை. பிரதமருக்குத் தெரிவிப்பதற்கு முன்பே எனக்கு ராஜீவ் மரணச் செய்தி கிடைத்து விட்டது என்று சாமி கூறி இருப்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.
- இவ்வாறு வேலுசாமி கூறியிருக்கிறார்.

இதனைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
சுப்ரமணியசாமியின் சாட்சியத்தைப் பார்த்தோம். அதில் அவர் 4 முக்கிய விஷயங்களை மறைத்து இருக்கிறார். மூன்று பெரும் விவரங்களைத் தவறாகக் கூறி உள்ளார். எனவே, உண்மையை நிலை நாட்ட இந்த வாக்குமூலத்தை தாக்கல் செய்கிறோம். - இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து நீதிபதி ஜெயின் கூறியதாவது:


வேலுசாமியின் வாக்குமூலத்தில் சாமி பற்றிய குற்றச் சாற்றுகள் உள்ளன. எனவே, இந்த வாக்குமூலம் சாமிக்கு வழங்கப்படும். அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுக் களுக்கான பதில் வாக்குமூலம் தாக்கல் செய்யவும் சாமிக்கு அனுமதி அளிக்கப்படும். 2 வார காலத்தில் சாமி தன் பதில் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவேண்டும்.


சாமி: ஏற்கெனவே வேலுசாமியின் வாக்குமூலத்தின் பிரதிகள் அ.தி.மு.க.வினர் மூலமாக பத்திரிகைகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே, என் பதில் வாக்குமூலத்தையும் பத்திரிகைகளுக்கு தர அனுமதி தர வேண்டும்.


நீதிபதி: பல பேர் முதலில் பத்திரிகைகளில் வாக்குமூலப் பிரதிகளைக் கொடுத்துவிட்டு பிறகுதானே ஜெயின் கமிஷனுக்கே வருகிறார்கள்.

-இவ்வாறு சாமி மீதான பிரச்சினை பற்றி ஜெயின் கமிஷனில் விவாதம் நடந்தது.
சு.சாமி பற்றி அவரின் நெருக்கமான சகா அப்படியே ஸ்கேன் ரிப்போர்ட் போல படம் எடுத்துக்காட்டியுள்ளாரே!

இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? புரியாத புதிராக இருக்கிறதே!

-------------------மின்சாரம் அவர்கள் 15-2-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை



0 comments: