Search This Blog

23.2.11

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு


மகளிர் பணிகள் மகத்தானதாக இருக்கட்டும்!

"பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது " -------------- (குடிஅரசு 16.6.1935)

- என்றார், புரட்சிப் பெண்ணைப் படைக்க விரும்பும் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.

மற்ற கட்சிகள், அமைப்புகளில் உள்ள மகளிர் அமைப்பு களைவிட திராவிடர் கழகமும், மகளிரணியும் பெண்ணுரிமையில் அதிகக் கவனமும், கவலையும், ஈடுபாடும் காட்டுவதற்கு முக்கியக் காரணமே, தந்தை பெரியார் கூறியுள்ள மேற்கண்ட கருத்தேயாகும்.

திருச்சியில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மகளிர் கருத்தரங்கத்திலும் இந்தக் கருத்தினை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வலியுறுத்தவே செய்தார்.

முன்னேற்றம் அடைந்த காலகட்டமாக இந்தக் கால கட்டத்தை நாம் கூறிக் கொண்டாலும், நம் முதுகை நாமே தட்டிக் கொண்டாலும், சில வளர்ச்சிப் போக்குகள் தலைகாட்டு கின்றன என்றாலும்கூட, பெண்களின் உரிமை விடயத்திலும் முற்போக்குத்தடத்திலும் இன்னும் பிற்போக்குத் தன்மை கோலோச்சத்தான் செய்கின்றது என்பதில் இரு கருத்துகளுக்கு இடமே யில்லை.

எடுத்துக்காட்டாக உச்சநீதிமன்றம் என்ற நிலையில் உள்ள பெரும் அதிகாரம் படைத்த மய்யங்களில் வீற்றிருக்கும் நீதிபதிகள் பெண்கள் உரிமைப் பிரச்சினையில் எத்தகைய தீர்ப்புகளை வழங்குகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியவையே!

திருச்சி - திராவிடர் கழகம் மகளிர் கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம்: 7 மாமியார் தனது மருமகளை எட்டி உதைத்தாலோ, அல்லது தன் மகன் விவாகரத்து செய்துவிடுவான் என்று மிரட்டினாலோ இந்தியக் குற்றவியல் பிரிவு 498இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதக்கூடாது என்று உச்சநீதிமன்றம் 2009 ஜூலை 27இல் தீர்ப்பு வழங்கியது. (நீதிபதிகள் எஸ்.பி.சின்கா, சிரியாக் ஜோசப்) கணவன் மனைவியை அடிப்பது குற்றமாகாது என்று ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் அந்தக்காலத்தில் தீர்ப்பு வழங்கினார் என்றால் 21ஆம் நூற்றாண்டிலும் இதுபோல தீர்ப்பு வழங்கியது கண்டிக்கத்தக்கதாகும். இந்தத் தீர்ப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தந்தையாரின் ஜாதியின் கீழ்தான் வருவார்கள் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டாரால் கேட்கப்படும் வழக்கமான வெகுமதிகள் - வரதட்சணை என்கிற வரை முறையின் கீழ் வராது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு - ஒரு வகையில் வரதட்சணை என்பதற்குப் பதிலாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் ஏமாற்று முறை என்று இக்கருத்தரங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இது போன்ற சட்டங்கள் - பெண்கள் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஆண் ஆதிக்கத்திற்குக் கீழ்தான் இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் ஆகும்.

இந்தியாவில் உயர்நீதிமன்றங்களில் 647 நீதிபதிகள் இருக்கின்றனர் என்றால், அதில் பெண்கள் வெறும் 19 தான். நீதித்துறையிலும் பெண்களுக்குச் சட்டரீதியாக 50 சதவிகித அளவுக்கு இடங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்துகிறது.

21ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் உயர் அதிகாரம் படைத்த ஒரு மய்யத்தின் கருத்து எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இந்தத் தீர்மானத்தில் கண்டுள்ள விவரங்கள் வெகு முக்கியமானவை.

நீதிபதிகளாக இருந்தாலும் ஆண்கள்தானே? ஆண் நீதிபதிகள் தானே இத்தகைய தீர்பபுகளை வழங்கியுள்ளனர். சாத்திரங்களை எழுதியவர்கள் பெண்களாக இருந்தால் பெண்களை இவ்வளவுத் தாழ்மைப்படுத்தி எழுதி இருப்பார்களா என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவை நீதிபதிகள் விடயத்திலும் பொருத்திப் பார்ப்பது பொருத்தமானதே!

ஒரு பக்கத்தில் நீதிமன்றங்கள் இந்த மனப்பான்மையோடு இருக்கின்றன என்றால், ஊடகங்கள் அதற்கு மேலும் மகளிர் உரிமைக்கும், முற்போக்குக்கும் மரண வோலை எழுதுபவைகளாகத்தான் இருக்கின்றன. இதுகுறித்தும் மகளிர் அணி கூட்டத்தில் மகளிர் பொறுப்பாளர்கள் விரிவாகவே பேசியுள்ளனர்.

இந்த நிலையில் திராவிடர் கழக மகளிரணியினர் முன் இருக்கக் கூடிய பணிகளும், கடமைகளும் மிகப் பெரிய அளவிலேயே இருக்கின்றன.

பிரச்சாரம் என்கிற அளவில் மட்டுமே இல்லாமல், களப்பணியிலும் அவர்கள் இறங்கித் தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். குறிப்பாகக் கல்வி பயிலும் மாணவிகள் மத்தியில் தந்தை பெரியார் அவர்களின் மகளிர் பற்றிய சிந்தனைகளை எடுத்துக் கூற வேண்டியது கட்டாயம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களின் துணையோடு கழகப் பாசறை அமைப்பினர் இந்தக் கடமையைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட உள்ளனர்.

பெண்ணுரிமைத் திசையில் தந்தை பெரியார் சிந்தித்த அளவுக்கு - அதன் சிகரத்தை எட்டுவதற்கு இதுவரை எந்தச் சிந்தனையாளரும் பிறக்கவே இல்லை.

ஏதோ தமிழ்நாட்டு மகளிர் மறுமலர்ச்சிக்கு மட்டுமல்ல; உலகம் முழுவதிலும்கூட ஏதோ ஒரு வகையில் மகளிர் ஆண்களின் அடக்கு முறைகளுக்கு ஆளாகித்தான் தீருகிறார்கள். எனவே தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் உலகம் முழுவதும் தேவைப்படுபவையே! அதனால்தான் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், பெரியார் கருத்துகள் உலகமயமாவது பெண்கள் கையில்தான் இருக்கிறது என்ற கருத்தினை எடுத்துக் கூறினார்.

இந்தப் பணிகள் சரியான திசையில் ஏறுமுகத்துடன் நடைபெற வேண்டுமானால், நமது மகளிர் அமைப்புக்குத் தக்க பயிற்சிகள் தேவை. கருத்துகளை எடுத்துக்கூறும் பிரச்சாரகர்கள் மகளிர் மத்தியில் உருவாக வேண்டும். அதற்காகத் தனிப் பயிற்சிப் பட்டறை அமைப்பது- பெண்களைத் தயார் செய்வது என்ற முடிவு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியதாகும்.

கழக மகளிர்க்கு தக்க வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு மிகச் சரியாகத் தயாரிக்கப்படும் நிலையில் தான் இந்தத் திசையில் வெற்றிச் சிகரத்தை எட்ட முடியும்.

மகளிர் பெரியார் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செ()ல்லும்போது அதற்கு ஒரு தனியீர்ப்பும், கம்பீரமும் எதிர்பார்ப்பைவிட அதிகமான நல்விளைச்சலும் ஏற்பட முடியும். அந்த வகையில் திருச்சி மகளிர் கூட்டம் நல்லதோர் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக் கூடியவர்களாகப் புதிய பொறுப்பாளர்கள் அர்ப்பணிப்புத் தன்மையுடனும், ஒற்றுமை உணர்வுடனும், இலட்சிய உறுதியுடனும், திட்டமிட்ட வகையில் செயல்படுவார்களாக!

இந்தப் பணியை மட்டும் அவர்கள் செவ்வனே நிறைவேற்றி முடிப்பார்களேயானால் இவர்கள் வரலாற்றில் தக்க இடம் பெறுவார்கள் என்பதில் அய்யமில்லை.

பயணம் தொடரட்டும் - பலன்கள் விளையட்டும்!

வெற்றி நமதே! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

------------------------------”விடுதலை” தலையங்கம் - 22-2-2011

0 comments: