Search This Blog

26.2.11

எய்ம்ஸ் மருத்துவமனையில் பார்ப்பனர்களின் ஆதிக்கம்


எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்மீது நடவடிக்கை

டில்லியில் எய்ம்ஸ் என்ற சிறப்பு மருத்துவமனை இருக்கிறது. அது பெரும்பாலும் உயர் ஜாதியினரின் கூடாரமாகவே இருந்து வந்திருக்கிறது. இடஒதுக்கீடு, சமூகநீதி என்றாலே ஒவ்வாமை தான்!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்களிலும் 27 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்தது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர்களும், மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதேபோல அந்த மருத்துவமனையின் இயக்குநராக இருந்தவர் வேணுகோபால் என்ற பார்ப்பனர் - பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில், மருத்துவத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் என்ற பார்ப்பன அம்மையார் சட்ட விரோதமாக அந்த அய்யருக்கு அய்ந்து ஆண்டு காலம் பதவி நீட்டிப்புச் செய்துள்ளார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மருத்துவத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ். சட்டப்படி நடந்து கொண்டார். இயக்குநர் வேணுகோபால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

27 சதவிகித இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டபோதும், பார்ப்பன இயக்குநர் வேணுகோபால் சட்டப்படி பதவி நீக்கம் செய்யப்பட்ட போதும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மாணவர்களைத் தூண்டினார்கள்; அதற்கு இயக்குநர் வேணு கோபால் தூபம் போட்டார்.

ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை செய்யப்பட்ட பகுதி எய்ம்ஸ் மருத்துவமனையும், அதன் வளாகமும்; அவற்றைப் பற்றியெல்லாம் சிறிது பொருட் படுத்தவில்லை. சட்ட விரோதமாக வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்ட விரோதச் செயலுக்கு மருத்துவமனையின் பொருள்கள் (மின்சாரம் உட்பட) பயன்படுத்தப்பட்டது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளிகள் புறக்கணிக்கப்பட்டனர்.

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த நாள்களுக்குக்கூட சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விசித்திரமான தீர்ப்பு ஒன்றை நீதிமன்றம் - அளித்தது. நான்கு ஆண்டுகள் கழித்து டில்லி உயர்நீதிமன்றம் - காலம் கடந்தாலும் சரியான தீர்ப்பினை வழங்கியுள்ளது. சட்ட விரோதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட எய்ம்ஸ் நிறுவனத்தின் மருத்துவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு அந்த வேலை நிறுத்தம் நீதிமன்ற அவமதிப்பு என்றும் டில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதற்காக ஓர் உயர்நிலைக் குழு அமைத்து, அவர் களால் அடையாளம் காணப்படுபவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் டில்லி உயர்நீதிமன்றம் கறாராகவே கூறிவிட்டது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொது நல மனுவின்மீது விசாரணை நடத்தியே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சில உருப்படியான பொது நல வழக்கு அரிதாக எப்பொழுதாவது வருவதுண்டு - நீதிமன்றங்களும் அரிய தீர்ப்பினை வழங்குவதுண்டு. அந்த வகையில் டில்லி உயர் நீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பினை வழங்கியமைக்காக அதனை வரவேற்கிறோம். எய்ம்ஸ் சிறப்பு மருத்துவமனையில் உயர் ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக்கம் எப்பொழுதுமே கொடி கட்டிப் பறந்து வந்திருக்கிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அங்கு இடஒதுக்கீடு கிடையாது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்டு என்றாலும், அவர்களுக்கு உரிய (தாழ்த்தப்பட்டோர் 15 சதவிகிதம் மலைவாழ் மக்கள் 7.5 சதவிகிதம்) அளவில் இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை. தேர்வுகளில் மதிப்பெண்கள் அளிப்பதில்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதாக அங்கு பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தெரிவித்திருந்தனர் என்றால், அந்த மருத்துவமனையின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மருத்துவமனையில் அகில இந்திய அளவில் எழுதப்படும் நுழைவுத் தேர்வு மூலமாகவும் சேர முடியாது; ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்குத் தனி நுழைவுத் தேர்வாம். அந்த அளவுக்கு அசல் நெய்யில் பொரிக்கப் பட்டவை இவை. மக்கள் பணத்தில் மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு மருத்துவமனை இப்படி மனுதர்மம் கோலோச்சும் மருத்துவ மனையாக நடைபெறுவது கண்டு தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மாணவர்கள் மத்தியில் போராட்ட உணர்வு வெடித்துக் கிளம்ப வேண்டாமா?

சட்ட விரோதமாக உயர் ஜாதிப் பார்ப்பனர்களுக்கு போராடும் போது, சட்டத்தில் உள்ளதை நிறைவேற்றக் கோரி நாம் போராடக் கூடாதா?

தந்தை பெரியார் இப்பொழுது தான் டில்லியில் மய்யம் கொண்டுள்ளார். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர். அந்த உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக பரவிட பரவிட சமூகநீதிக்கொடி எய்ம்ஸ் மருத்துவமனை விதானத்திலும் பறக்கத்தான் போகிறது. அதில் ஒன்றும் அய்யமில்லை.

வாழ்க பெரியார்!

---------------------"விடுதலை” தலையங்கம் 26-2-2011

0 comments: