Search This Blog

11.2.11

சு.சாமியே, ஓடாதே, நில்! யார் இந்த சு.சாமி? - 2

சு.சாமியே, ஓடாதே, நில்!

விகடகவி, அக்கப்போர் ஆசாமி, அகாசுகா ஆளு, டுப்பாக்கூர் பேர்வழி, கோமாளிராயன், விளம்பரப் பிரியன்-என்று நாட்டு மக்களால் பட்டம் சூட்டப்பட்ட அக்கிரகார அபிஷ்டுதான் இந்தச் சு.சாமி! கிறுக்கராக இருந்தாலும், அல்லது கிறுக்கர் போல பாவனை பண்ணினாலும் தான் ஓர் அக்கிரகார அம்பி என்பதில் மட்டும் கில்லாடிதான்!

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா யிருக்கும் ஜாலக்காரர்தான்.

தமிழர்களில் முன்னணியாக இருக்கக் கூடியவர் மீது திடீரென்று வெடிகுண்டைத் தூக்கிப் போடுவார்.

செல்வாக்கானவர்கள் பற்றி விமர்சனம் செய்தால் செங்கல்லுக்குக்கூட விளம்பரம் கிடைக்குமே!. அந்தக் கலையைக் கற்ற கெட்டிக்காரர்!

தி.மு.க., - பா.ம.க., பிரச்சினை ஒரு புறமிருக்க, ராஜீவ் காந்தி படுகொலையில், வெளிநாட்டுச் சதிவலை தொடர்புகள் உள்ளதா என்பதை விசாரிக்க, சி.பி.அய். யின் டீம் ஒன்று, ஜெர்மன் நாட்டுக்குப் பயணிக்க உள்ளது.

இந்த கே.பத்மநாபன் வேறு யாருமல்ல; சர்வதேச நிதி நிருவாகப் பொறுப்பாளர். கே.பி. என்று புலிகளால் அன்போடு அழைக்கப்படுபவர். அவ்வளவு எளிதில் நெருங்கமுடியாத நபர்!

இப்படிப்பட்ட கே.பி.யைத்தான் டாக்டர் ராமதாஸ் ரகசியமாகச் சென்று சந்தித்துப் பேசினார். தாய்லாந்து சென்று கே.பி.யை டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் சந்தித்துப் பேசினார்கள். ராமதாசையும், திருமாவளவனையும் சி.பி.அய். விசாரிக்க வேண்டும் என்றார் சு.சாமி.
-------------------- ( குமுதம் ரிப்போர்ட்டர் 22-6-2008 - பக்கம் 10).

இதுபற்றி மானமிகு திருமாவளவனிடம் கேட்டபோது, சுப்பிரமணியன் சுவாமி ஓர் அகாசுகா பேர்வழி என்பதை அவ்வப்போது இப்படித்தான் காட்டிக் கொள்கிறார் என்று முகத்தில் அறைந்தது போல பதில் கூறினார். அந்தத் தகவல் முற்றிலும் பொய் என்று முகத்திரையைக் கிழித்தார். (அதே குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்).

அதெல்லாம் எங்கே உறைக்கப் போகிறது உளுத்துப் போன பேர்வழிக்கு?

ஆதாயம் பெறுவதற்கு அவ்வப்போது சிலருக்கு வலையை வீசுவார் - அவர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து தள்ளுவார். அப்படித்தானே ஒருமுறை மதுரைத் தொகுதி எம்பியானார்.

திடீர்னு டீ பார்ட்டிக்கு அழைப்பார். அதில் கண்டிப்பாக வில்லங்கம் இருக்கும்.

அ.தி.மு.க.வின் ஆதரவோடு இரண்டாவது முறையாகப் பிரதமராகியிருந்தார் வாஜ்பாய். அப்போது முன்னாள் கடற்படைத் தலைவர் விஷ்ணு பகவத் சுமத்திய குற்றச்சாற்றுகளின்படி, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் ஜார்ஜ் ஃபெர்னாண்டசை, இலாகா மாற்றம் செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார் ஜெயலலிதா.

ஆனால் அதற்கு வாஜ்பாய் செவிசாய்க்காததால், ஜெயலலிதா ஆதரவை மறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு வந்திருந்தார். அப்பொழுதுதான் இந்த சு.சுவாமி குறுக்கே புகுந்து டீ பார்ட்டி நடத்தி அதில் பா.ஜ.க. அல்லாத தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த டீ பார்ட்டிக்குப் பிறகே வாஜ்பாய் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் வாங்கினார். ஆட்சியும் கவிழ்ந்தது. அத்தனையும் சுவாமி புண்ணியம்.

உண்மையில் ஃபெர்னாண்டசை இலாகா மாற்றுவது மட்டுமே ஜெயலலிதாவின் கோரிக்கை அல்ல; மதுரை தொகுதி எம்.பி.யான சுவாமியை நிதியமைச்சராக்க வேண்டும் என்பதுதான். இது முழுமையாக நடக்காவிட்டாலும் வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் பரம திருப்தி!

------------------------(கல்கி 6-4-2008 பக்கம் 47)

எழுதி இருப்பது விடுதலை ஏடு அல்ல; முர சொலியும் அல்ல. நக்கீரனும் அல்ல. அவாள் ஆத்துக் கல்கிதான் இப்படி உண்மையைக் கக்கியுள்ளது.

பதவிக்காக எந்தப் பித்தலாட்டத்தையும் செய்ய கிஞ்சிற்றும் தயங்காத தரகர் என்பதை கல்கியே கணித்து விட்டதே. அதற்கு மேல் ஆதாரம் எதற்குக் குதம்பாய்? என்று பாடவேண்டியதுதான்.

மதுரைப் பதிப்பு தினத்தந்தியில் (8-10-2001) ஒரு செய்தி வெளியாகியிருந்தது. பெங்களூரில் அல்சூர் சென்னில்ஸ்ட்ன் சாலையில் நீச்சல் குளத்துடன் கூடிய அடுக்குமாடிக் கட்டடத்தை 1994 இல் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு சு.சுவாமி வாங்கியிருந்தார். அதனுடைய இப்போதைய (1996) மதிப்பு ரூ 60 லட்சம். ஆனால் ரூபாய் 14 லட்சம் 50 ஆயிரத்துக்கு விற்றதாகக் கூறுகிறார்.

பத்திரப் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று அ.இ.அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தி பெங்களூர் 10 ஆவது கூடுதல் மாஜிஸ்டிரேட் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தாரே!

இதில் கடைந்தெடுத்த பித்தலாட்டம் ஒன்று அரங்கேறியிருக்கிறது - அதுதான் முக்கியம்.

இந்த வீட்டை வாங்கியவர் ஆலன் பிண்டோ. அவர் பெயரில்தான் விற்பனைப் பத்திரமும் தயாரிக்கப்பட்டது.

பிண்டோவுக்குக் குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே அந்தக் குழந்தை சார்பிலும் முன் பணம் கொடுத்துள்ளதாக விற்பனைப் பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபார்ட்மென்டை பிரித்து விற்கப்பட முடியாத நிலையில் மூன்று பேருக்கு விற்றதாகக் குறைந்த மதிப்புகளைக் காட்டி அரசுக்குச் சேரவேண்டிய முத்திரைப் பணம் கிடைக்க விடாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. விற்பனை செய்யப் பட்ட மூவரில் ஒருவர் யார் தெரியுமா? பிறக்காத - தாயின் வயிற்றுக்குள் இருக்கும் சிசு.

இப்படிப்பட்ட கில்லாடியை இதுவரை யாரும் கேள்விப்பட்டு இருக்கிறோமா?

இந்தச் செய்தியை வெளியிட்ட ஏடு மதுரைப் பதிப்பு தினத்தந்தியும் (8-10-2001) , தி. இந்து ஏடும் (7-10-2001)

முத்திரை ஸ்டாம்பு மோசடி, பிறக்காத பிள்ளைக்கு விற்றதாகப் பொய்த் தகவல் - இப்படிப்பட்ட மோசடி மஸ்தான்தான் மற்றவர்கள் ஊழல் செய்தார்கள் - லஞ்சம் வாங்கினார்கள் என்று கூரை ஏறிக் கொக்கரிக்கிறார்.

தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியாக மனிதனைக் கடித்த கதையாக, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீரமணி அவர்களையும் சீண்டிப்பார்த்தார் - விளைவு முதுகுத் தோல் உரிந்தது தான் மிச்சம்.

இந்து ஏட்டில் (5-10-2000) சு.சுவாமியின் பேட்டி ஒன்று வெளிவந்தது. (சு.சுவாமி தும்மினாலும் முதல் பக்கத்தில் மூன்று பத்தியில் செய்தி போட அக்கிரகார ஏடுகள் முண்டியடித்துக் கொண்டு கிளம்பிவிடுமே!)

வீரமணி யாழ்ப்பாணம் போய் பிரபாகரனைச் சந்தித்ததாக வழக்கமாக அவர் பாணியிலே குண்டைத் தூக்கிப் போட்டார். பிரபாகரனைச் சந்தித்து இருந்தால், ஆமாம், சந்தித்தேன்; அதில் என்ன தப்பு? என்று கூறக் கூடியவர்தான் தமிழர் தலைவர். ஆனால் உண்மைக்கு மாறாக அவிழ்த்துவிட்ட அந்தக் கரடியின் மூக்கை உடைத்தது போல மறுத்து அறிக்கை வெளியிட்டார் (விடுதலை 10-10-2000)

அந்தப் பேட்டியில் அக்கப்போர் சாமி அதோடு நிறுத்திவிடவில்லை.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் திராவிடர் கழகத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று கூசாமல் கூறினார்.

அதற்கும் ஆதாரப் பூர்வமாகப் பதில் அடி கொடுத்தார் ஆசிரியர் - அதுவும் ஜெயின் கமிஷன் அறிக்கையிலிருந்தே எடுத்துக்காட்டி!

திராவிடர் கழகத்தின் பங்கு என்ன என்பது குறித்து Part III Vol. IV, Chapter VII என்ன கூறுகிறது?

விடுதலைப் புலிகளை இன்றும் ஆதரிக்கும் திராவிடர் கழகச் செயல் வீரர்கள் (D.K.Activists) பலர் உள்ளனர். ஆனால் திரு. ராஜிவ் காந்தி படுகொலையில் அவர்களில் எவர் ஒருவராவது சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டக் கூடியது எதுவுமே இல்லை என்றுதானே கூறப் பட்டுள்ளது என்று எடுத்துக்காட்டி சு.சுவாமியின் முகத்திலே கரியைத் தடவினார் கருஞ்சட்டை இயக்கத்தின் தலைவர்.

அத்தோடு விடுதலை அறிக்கையை முடிக்கவில்லை. கருஞ்சட்டைப் பட்டாளத்தின் தலைவர். ஓ, சு.சாமியே, உம்மைப் பற்றி ஜெயின் கமிஷன் அறிக்கை என்ன கூறுகிறது தெரியுமா? என்ற வினாவை எழுப்பி விலாவாரியாக எடுத்துக்காட்டி அங்குலம் அங்குலமாகச் சூடு போட்டாரே நினைவிருக்கிறதா?

அடுத்து, அதற்கும் வருவோம் !


-------------------மின்சாரம் அவர்கள் 11-2-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: