Search This Blog

4.2.11

திருடர்க்கு அழகு திருநீறணிதல்!


திருநீறு என்றால் என்ன? எதற்காக அதை நெற்றியில் இடுவது? இடுகிறவர்கள் அதை என்ன கருத்தோடு இடுகிறார்கள்? என்கின்ற விஷயங்களை யோசித்துப் பார்த்தால் திருடர்க்கு அழகு திருநீறடித்தல் என்பது நன்றாய் விளங்கும்; இல்லாவிட்டால் மூடர்க் கழகு திருநீறடித்தல் என்பதாவது விளங்கும்.

எப்படியெனில், திருநீறு என்பது சாம்பல். அதை இடுவதால் கடவுளின் அருளைப் பெறலாம் என்று அதை இடுகின்றவர்கள் கருதுவதும், தாங்கள் எவ்வளவு அக்கிரமக்காரர் ஆனாலும் திருநீறிட்ட மாத்திரத்திலே சகல பாவமும் போய்க் கைலாயம் சித்தித்து விடும் என்று நினைப்பதுமேயாகும்.

இதற்கு ஆதாரமாக திருநீறின் மகிமையைப் பற்றிச் சொல்லுகின்ற பிரமோத்திர காண்டம் என்னும் சாஸ்திரத்தில் ஒரு பார்ப்பனன் மிக்க அயோக்கியனாகவும், கொலை, களவு, கள், காமம், பொய் முதலிய பஞ்சமாபாதகமான காரியங்கள் செய்து கொண்டே இருந்து ஒருநாள் ஒரு புலையனான சண்டாளன் வீட்டில் திருட்டுத்தனமாய் அவன் மனைவியைப் புணர்ந்ததாகவும், அந்தச் சண்டாளன் இதை அறிந்து அந்தப் பார்ப்பானை ஒரே குத்தாகக் குத்திக் கொன்று அப்பிணத்தை சுடுகாட்டுக்குப் பக்கத்தில் கொண்டு போய் எறிந்து விட்டதாகவும், அந்தப் பார்ப்பனனை அவன் செய்த பாவங்களுக்காக எமதூதர்கள் கட்டிப் பிடித்து கும்பிபாகம் என்னும் நரகத்தில் தள்ளிக் கொண்டு போனதாகவும், அந்தச் சமயத்தில், சிவகணங்கள் இரத்தின விமானத்துடன் வந்து அந்தப் பார்ப்பனனை எமதூதர்களிடமிருந்து பிடுங்கி இரத்தின விமானத்தில் வைத்து, கைலாயத்திற்குப் பார்வதியிடம் கொண்டு போனதாகவும், எமன்வந்து, இவன் மகாப்பாவம் செய்த கெட்ட அயோக்கியப் பார்ப்பனனாயிருக்க நீங்கள் கைலாயத்திற்கு எப்படி கொண்டு போகலாம்? என்று வாதாடினதாகவும், அதற்கு சிவகணங்கள் இந்தப் பார்ப்பான் மீது சற்றுத் திருநீறு பட்டுவிட்டதால் அவனுடைய பாவம் எல்லாம் ஒழிந்து அவன் மோட்சத்துக்கு அருகனானதனால் பரமசிவன் எங்களை அனுப்பினார் என்று சொன்னதாகவும், அதற்கு எமன் சித்திரபுத்திரன் கணக்கைப் புரட்டிப் பார்த்து இந்தப் பார்ப்பான் ஒரு நாளும் திருநீறு பூசவில்லை, ஆதலால் இவனுக்கு மோட்சத்தில் இடமில்லை என்று சொல்லி வாதிட்டதாகவும், அதன் மீது சிவகணமும் எமகணமும், எமனும் சிவனிடம் சென்று இவ்வழக்கைச் சொன்னதாகவும், பிறகு சிவன் இந்தப் பார்ப்பான் உயிருடன் இருக்கும் வரை மகாபாதகங்கள் செய்திருந்தாலும் இவனைக் குத்திக் கொன்று சுடுகாட்டில் இவன் பிணத்தை எறிந்த விட்டபோது, மற்றொரு பிணத்தைச் சுட்ட சாம்பலின்மீது நடந்து வந்த ஒரு நாய் இவனது பிணத்தைக் கடித்துத் தின்னும் போது அதன் காலில் பட்டிருந்த அந்தச் சாம்பலில் கொஞ்சம் பிணத்தின் மீது பட்டுவிட்டதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியதாயிற்று என்று சொல்லி எமனைக் கண்டித்து அனுப்பி விட்டுப் பார்ப்பானுக்கு மோட்சம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதலால் திருநீறு எப்படியாவது சரீரத்தில் சிறிது பட்டுவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கியர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்று சிவன் சொல்லி இருப்பதைப் பார்த்து நமது சைவர்கள் திருநீறு அணிகின்றார்கள். அந்த சாஸ்திரத்தின் அடுத்த அத்தியாயத்தில் திருநீறு அணியும் விதம், இடங்கள் எல்லாம் குறிப்பிட்டு இதில் எழுதக் கூடாத படுபாதகங்கள் செய்வதனால் ஏற்படும் பாவங்கள் எல்லாம் நீங்குமென்றும் அவன் பிதுர்க்கள் செய்த பாவங்கள் கூட நீங்கி நரகத்திலிருந்தாலும் சிவனிடத்தில் சேர்வார்கள் என்றும் எழுதப்பட்டிருக்கின்றது.

இவை பிரமோத்திர காண்டம் 14ஆவது 15ஆவது அத்தியாயத்தில் உள்ளது. இந்த ஆதாரத்தை நம்பி மோட்ச ஆசையால் திருநீறு அணிகின்றவர் திருடராகவாவது, அதாவது பேராசைக்காரராகவாவது, மூடராகவாவது இருக்காமல் வேறு என்னவாக இருக்கக் கூடும்? என்பதை யோசித்துப் பார்க்கக் கோருகிறோம்.

----------------- ”விடுதலை” 29.12.1950

3 comments:

Unknown said...

திசாபுத்திக்கு ஏற்றவாறு சால்வை அணிவதும் கூடத்தான்!? பல வர்ண போர்வைகளை, மடித்து தோளில் சார்த்தித் திரிபவர்கள், பகல் தொழிலாளர்கள்!

நம்பி said...

முன்னேற்பாடா பார்ப்பனன் செய்யப்போகிற தவறுக்கெல்லாம் அப்போதே ஜட்ஜ்மென்ட் எழுதிவைச்சுகிட்டாங்க...பார்ப்பான் கண்டிப்பா இந்த தவறெல்லாம் செய்வான்....அதான் தொடர்ந்து வருகுதோ...?

thulasi victus said...

Ennai Poruthavarai Kadavul peyarai solli oru koottam pilaikirathu,Kadavul Ellai endru solli oru koottam pilaikirathu entha erandu kootathalum nattukku oru 0.10 paisa payanillai. entha rendu kootthaalaum ethuvaraikkum enna sathikka mudinthathu.tamilanai melum muttalkalaki konduthan erukirathu.Tamil,tamil,Tamil, Tamilai mattum vaithukkonnu eppothaya ulakil nakku kooda valikka mudiyathu pothum ethanai nall ungal pakutharivaum,purana, sampirathayankalaum nambi engalai pondra elya thalaimurai muttalkal akkathinga.neegan solra entha rendume entha genrationkku help pannathu.nanparkale tamilanukku neenkal nallathu seiya ninaithal thayavusenchu neengla renduperum vaya moodikkidu erunkal athu pothum.