Search This Blog

3.2.11

திருப்பதி போகின்ற பார்ப்பனரல்லாத சகோதரர்களே

திருப்பதி செல்லும் பார்ப்பனர் அல்லாதார்!

திருப்பதி போகின்ற பிராமணரல்லாத சகோதரர்களே சற்றுப் பகுத்தறிவை உபயோகப்படுத்துங்கள்!

திருப்பதிக்கு நீங்களும் போகின்றீர்கள். பிராமணர்களும் போகின்றார்கள்! பிராமணர்கள் ஒழுங்காக நாகரிகத்தோடு ரயிலேறி நேரே திருப்பதிக்குப் போகின்றார்கள்!

பிராமணரல்லாத நீங்களோ! சடை வளர்த்துக் கொண்டு, தாளை குத்திக் கொண்டு, குடும்பத்தோடு மஞ்சளுடை உடுத்திக் கொண்டு, மேளதாளத்தோடு ஊர்ஊராக வீதிவீதியாக கோவிந்தா! கோவிந்தா என்று கூவிப் பிச்சை தட்டேந்தி இரந்து நடந்து திருப்பதிக்குச் செல்லுகின்றீர்கள்! பார்ப்பனர்களை மாத்திரம் நாகரிகமா வரும்படி அந்த வெங்கடாஜலபதி லைஸன்ஸ் கொடுத்திருக்கின்றாரா? உங்களை இந்த இழிகோலத்தோடு வந்தாலொழிய காட்சி கொடேனென்கிறாரா? யோசியுங்கள்! பகுத்தறிவோடு நடந்து கொள்ளுங்கள்!

பார்ப்பனரும் பார்ப்பனரல்லாத நீங்களும் சாமியைத் தரிசித்து விட்டு வருகின்றீர்கள்! அவர்கள் வீட்டில் புறப்பட்டது போலவே கடவுளைத் தரிசித்து விட்டுத் திரும்பி விட்டார்கள்! நீங்களோ, மொட்டை அடித்துக் கொண்டீர்கள். தாலியை அறுத்துக் கொடுத்தீர்கள். கையிலுள்ள காசை எல்லாம் உண்டியலில் போட்டு விட்டீர்கள்! எல்லாம் இழந்து விட்டு உராங். உடாங் (ஒரு வகைக் குரங்கு) மாதிரி கோவிந்தா! கோவிந்தாவென்று கூவிக் கொண்டே மொட்டைத் தலையோடு பல நாமங்களைப் போட்டுக் கொண்டு திரும்புகின்றீர்கள்! அந்தோ உங்களைப் பார்த்து பார்ப்பனப் பெண்கள் நகைக்கின்றார்கள். நீங்கள் கோவிந்தம் போடுகின்றீர்கள்!

அய்யா! அந்த மலையில் வாழ் வெங்கடேசன் பிராமணரல்லாததாராகிய உங்கள் மயிரைத்தானா பிடிங்கித் தரச் சொல்லுகின்றார்! உங்கள் மனைவிகளின் தாலிகளைத் தானா அறுத்துப் போடச் சொல்லுகின்றார்! பிராமணத்தி மயிரும், பிராமணத்தி தாலியும் அந்த வெங்கடேசனுக்கு வேண்டாமா? அய்யய்யோ பிராமணரல்லாத சகோதரர்களே, நன்கு யோசித்து இந்த புரட்டாசியிலிருந்து ஒழுங்காய் நடந்து கொள்ளுங்கள்! இதுவரை மூட பக்தியில் அழுந்தியிருந்ததற்குக் காரணம் பிராமண புரோகிதர்களின் துர்ப்போதனையேயாகும்! ஆகையால் கண் விழியுங்கள்! மூட பக்தியை ஒழியுங்கள்! பிராமணரல்லாதாரின் மானத்தைக் காப்பாற்றுங்கள்.

-----------------------திராவிடர் கழகம், சின்னக்காஞ்சிபுரம்.

------------------அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு, 19.9.1943, பக்கம் 3

1 comments:

Unknown said...

vara vara unga ayya veeramani koduththa kasukku mela moova vendamu sollunga....