Search This Blog

13.2.11

பெரியாரிடம், தமிழர் தலைவரிடம் கொடுப்பது அத்தனையும் மீண்டும் மக்களுக்கே !

பெரியாரிடம், தமிழர் தலைவரிடம் கொடுப்பது அத்தனையும் மீண்டும் மக்களுக்கே பயன்படுகிறது!

உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் அ.இராமசாமி பேச்சு

பெரியார் இயக்கத்துக்கு தமிழர் தலைவர் அவர்களுக்குக் கொடுப்பது மீண்டும் மக்களுக்கே பயன்படுகிறது என்று உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி தனது உரையில் கூறி விளக்கமளித்தார்.

மேலவன்னிப்பட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி 30.1.2011 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் இராமசாமி ஆற்றிய உரை வருமாறு:-

கலி.பூங்குன்றன் சிறப்பாகச் சொன்னார்


இந்த நல்ல விழாவிலே நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.


கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பேசுகின்ற பொழுது மிகச் சிறப்பாகச் சொன்னார். தந்தை பெரியார் சிலை திறப்பு விழா, மணியக்காரர் துரைராஜ் நினைவு பெரியார் படிப்பகம் - தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழா, மானமிகு தமிழர் தலைவர் அவர்களுக்கு எடைக்கு எடை ரூபாய் நோட்டு வழங்கும் விழா என்று மூன்று பெரும் விழாக்களை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து இங்கே நடத்தி முடித்திருக்கின்றார்கள்.
பேசத்தான் வேண்டுமா?

கவிஞர் பாராட்டியதைப் போல, நானும் பாராட்ட விரும்புகின்றேன். ஆனால் பேசத்தான் வேண்டுமா? என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் உரத்தநாட்டிலே செயல் வீரர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இங்கு பேச்சே தேவையில்லை. ஏற்கெனவே சிந்தனை கிளம்பி எழுகின்ற இந்த உரத்தநாட்டில் நாம் என்ன பேசவேண்டும் என்றுதான் நினைத்தேன். அதிலும் எனக்கிருக்கின்ற மகிழ்ச்சி எல்லாம் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். அத்தனை பேரும் இளை ஞர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு காட்சியை நான் கண்டதில்லை.

இளைஞர் அணியும் - கிழவர்அணியும்!


நான் ஏற்கெனவே ஓர் இயக்கத்தில் இருக் கின்றேன். பல கூட்டங்களுக்கெல்லாம் சென்றிருக் கின்றேன். கட்சி மேடைகளையும் பார்த்திருக் கின்றேன்.

சில பேர் இளைஞரணி என்று வைத்துக் கொண்டு அகில இந்திய அளவிலே கிழவர்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இன்றைக்கு என்னவென்றால் இளைஞரணி என்ற ஒன்று இல்லை. ஆனால் உரத்தநாட்டிலே இருக்கின்ற தோழர்கள் அனைவருமே இளைஞர்களாக இருக்கின்றார்கள். (கை தட்டல்). அதிலும் உரத்தநாட்டில் என்னைப் போன்ற வயதானவர்கள் இருந்தாலும் இளைஞர்கள் என்ற எண்ணத்தோடு தான் இருப்போம். அப்படி இருக்கின்றார்கள். (கைதட்டல்).

ஆகவே அவர்களை எல்லாம் நாம் மனமார பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். இன் னொரு அற்புத காட்சியைப் பார்த்தேன். நீங்களுமா படம் காட்டுகிறீர்கள்?

இங்கே வந்தவுடனே நான் கேட்டேன். மேடையில் டீபாய்இருக்கும் அது இங்கே வைக்கவில்லையே என்று கேட்டேன்.

அதற்கு இவர்கள் சொன்னார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த நாற்காலியை எல்லாம் அகற்றிவிட்டு மேடையில் படம் காட்டப் போகிறோம் என்று சொன்னார்கள். நீங்களுமா படம் காட்டுகிறீர்கள் என்று சொன்னேன். ஆமாம் என்று சொன்னார்கள். அப்புறம் ஒலி, ஒளிக் காட்சி காட்டப்பட்டது. அப்பொழுதுதான் பார்த்தேன், இங்கே அவர்கள் காட்டியது படமல்ல;. ஒரு வீரவரலாறு, வெற்றி வரலாறுகளைக் காட்டி னார்கள். உள்ளபடியே பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்து, துணைவேந்தராக இருந்து இன்றைக்கும் தலைவனாக இருக்கின்றேன்.

தொகுத்துத் தந்தால் டாக்டர் பட்டம்


அந்த நிலையிலே சொல்லுகின்றேன். யாராவது பல்கலைக்கழகத்திலே உள்ள ஒரு மாணவன் இதை எல்லாம் தொகுத்துத் தந்தால் அவனுக்கு நிச்சயம் டாக்டர் பட்டம் உறுதியாக வழங்கப்படும் (பலத்த கைதட்டல்). அப்படிப்பட்ட ஆவணப் படமாகத் தயாரித்திருக்கின்றார்கள்.

அத்துணைத் தோழர்களையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஆசிரியரிடம் பகிர்ந்து கொண்டேன்


இன்னொரு செய்தியை கூட நான் ஆசிரியரிடம் பகிர்ந்து கொண்டேன். நான் சிறுவனாக இருந்த பொழுது மதுரை மாநகரில் திராவிடர் கழக பொதுக்கூட்டங்களுக்குப் போயிருக்கின்றேன். அய்யா அவர்கள் பேசிய கூட்டத்திற்குச் சென்று அவருடைய பேச்சை நான் கேட்டிருக்கின்றேன்.

அப்பொழுதெல்லாம் மேடை இப்படி இருக்காது. இவ்வளவு மின்னலங்காரமெல்லாம் கிடையாது. ஏதோ ஒரு ஓரத்தில் டேபிள் இருக்கும். உடைந்து போன ஒரு நாற்காலி இருக்கும். அதில்தான் தலைவர் உட்கார்ந்திருப்பார். நாமெல்லாம் பாவப்பட்ட கூட்டமாக இருந்து அப்படித்தான் கூட்டங்களை எல்லாம் நடத்தியிருக்கின்றோம்.

திராவிடர் கழகம் வளர்ந்திருக்கிறது


இன்றைக்கு எவ்வளவு வண்ணவிளக்குகள்? இது மாதிரி ஒலி, ஒளிக் காட்சியை சிறப்பாக காட்டி யிருப்பது திராவிடர் கழகம்தான். அந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள் என்று நான் ஆசிரியர் அவர்களிடம் சொன்னேன்.

ஆகவே மிகப் பிரமாதமாக, அருமையாக ஏற்பாடு செய்த தோழர்களை குறிப்பாக தம்பி குணசேகரனை அவரோடு இணைந்து பணியாற்றுகின்ற அத்துணை பேரையும் பாராட்டக் கடமைப் பட்டிருக்கின்றோம். இன்றைக்கு நாம் தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை எடுத்திருக்கின்றோம்.

டாக்டர் சோம.இளங்கோவன்


இங்கே பேசிய டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் ஒரு கருத்தை சிறப்பாகச் சொன்னார். நம்முடைய பாட்டன், முப்பாட்டனெல்லாம் எப்படியிருந்தார்கள் என்று பார்த்தீர்களேயானால் பெரியாருடைய தொண்டு நமக்குத் தெரியும் என்று சொன்னார்.

நான் நினைத்துப் பார்த்தேன். உண்மைதான். இடுப்பில் துண்டு கூட கட்ட முடியாமல், வெறும் கோவணத்தை மட்டுமே கட்டிக்கொண்டு நம் மாள்கள் எல்லாம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த நிலைமை மாறி இன்றைக்குப் பேண்ட், சர்ட் போட்டு கம்பீரமாக வலம் வருகிறார்கள் அல்லவா? அதற்கெல்லாம் காரணம் தந்தை பெரியார் அவர்கள் தான். பள்ளிக்கூடத்தை எட்டிக்கூட பார்க்க முடியாது.

காரணம் - பெரியார்!


அப்படித் தடுக்கப் பட்டவர்கள் எல்லாம் பள்ளிக் கூடத்தில் மட்டுமல்ல பல்கலைக் கழகத்திலேயே பட்டம் பெற்றது மட்டுமல்லாமல் அந்தப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் களாக நம்மவர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள்தான். இன்னும் சொல்லப் போனால் கையைக் கட்டி, வாயைப் பொத்தி அடிமைகளாகவே இருந்து கொண்டிருந்த நம்மவர்கள் எல்லாம் இன்றைக்கு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக மாறியிருக் கிறார்கள். கம்பீரமாகப் பவனிவருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள்தான்.

நன்றியோடு சிலை எடுத்திருக்கிறோம்!


எனவேதான் தந்தை பெரியார் அவர்களுக்கு நாம் நன்றியோடு சிலை எடுத்திருக்கின்றோம். இதைப் பார்க்கின்ற இளைஞர்கள் உணர்வு பெறவேண்டும் என்ற காரணத்தினால்தான் இன்றைக்குத் தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை வைத்திருக்கின்றோம்.

பெரியாருக்கு சிலை வைக்கின்ற காரியத்தோடு இன்னொரு காரியத்தையும் செய்திருக்கிறார்கள் நம்முடைய தோழர்கள். பெரியார் படிப்பகம்- ஆசிரியர் பெயரில் நூலகம் இந்த இரண்டையும் இங்கே திறந்து வைத்திருக் கின்றார்கள். அதற்காகவும் பாராட்ட நான் கடமைப் பட்டிருக்கின்றேன்.

இங்கே அறிவை வளர்க்கின்ற பணி


திராவிடர் கழகத் தோழர்கள் சேர்ந்தால் படிப்பகத்தைத்தான் திறப்பார்கள். பின்ன என்ன சினிமா கொட்டகையையா திறப்பார்கள் அல்லது ஒயின் ஷாப்பா திறப்பார்கள்? அதற்கெல்லாம் வேறு ஆள் இருக்கிறார்கள்.

இங்கே அறிவை வளர்க்கின்ற பணிமட்டும்தான் நடக்கும். அதிலே ஒரு சிறப்பாக என்ன பண்ணியி ருக்கிறார்கள் என்றால், பெரியார் படிப்பகத்தையும் திறந்தார்கள். கி.வீரமணி நூலகத்தையும் திறந் தார்கள்.

இரண்டுக்கும் வேறுபாடு


இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. படிக்க இடம் இருந்தால்தான் உட்கார்ந்து படிக்க முடியும். நான் உள்ளே போய்ப் பார்த்தேன். நூலகமும் இருந்தது. உட்கார்ந்து படிப்பதற்கு இடமும் இருந்தது.

ஒரே ஒரு வருத்தம். புத்தகத்தை எடுத்து ஒரு பத்து நிமிடம் படிக்கலாம் என்று நினைத்தேன். அதற்கு நேரமில்லாமல் கூப்பிட்டுக்கொண்டு வந்து விட்டார்கள்.

ஆக இப்படி அருமையாக ஒரு நூலகம், படிப்பகம் இன்னொரு அதிசயமான செய்தி. ஒளி, ஒலிக் காட்சி பார்த்ததினால் தான் தெரிந்தது. இது ஏதோ தஞ்சை மாவட்டத்தில் அல்லது உரத்தநாடு வட்டத்தில் ஒரு இடத்தில்தான் நூலகம் இருக்கிறது என்பதல்ல.

ஒவ்வொரு கிராமத்திலும் படிப்பகம்


ஒவ்வொரு கிராமத்திலேயும் இருக்கிறது என்று ஆசிரியர் அவர்கள் சொன்னார்கள் (கைதட்டல்). அதிலேயும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகுதான் சொன்னேன்.

இல்லிங்க, ஒரு கிராமத்தில், ஒரு தெருவில் இரண்டு நூலகங்கள் இருக்கின்றன என்று சொன்னார். ஆக இதெல்லாம் அற்புதமான செய்திகள்.

உள்ளபடியே ஊருக்கு நான்கு சினிமா கொட்டகைகள் நம்மை நாசமாக்குவதற்கு வந்திருக்கின்றன. இந்த உரத்தநாடு பகுதியில்தான் ஊருக்கு ஊர், கிராமத்துக்கு கிராமம் பகுத்தறிவை வளர்க்கின்ற படிப்பகங்களை நிறுவியிருக் கின்றார்கள். அதற்காகப் பாராட்டுகின்றேன்.

ஆசிரியர் செய்தால் பொருள் இருக்கும்!


உள்ளபடியே நம்முடைய ஆசிரியர் அவர்கள் எதைச் செய்தாலும் அதில் பொருள் இருக்கும். சொன்னாலும் பொருள் இருக்கும். அவர்தான் உரத்த நாட்டைப் பெரியார் நாடு என்று சொன்னார்கள். அது உள்ளபடியே இது பெரியார் நாடுதான். அதிலே எந்த விதமான சந்தேகமும் இல்லை.

ஏனென்றால் இங்கே கிராமத்துக்குக் கிராமம் படிப்பகமும், நூலகமும் இருக்கின்றது. இங்கே இருக்கின்ற இளைஞர்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது. இந்த நூலகத்தை, படிப்ப கத்தை நல்ல முறையிலே பயன்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

மூன்றாவதாக இன்னொரு காரியம் செய்திருக் கின்றார்கள் - அது சிறப்பான காரியம். நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு எடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் வழங்கியிருக்கிறீர்கள்.

மீண்டும் மக்களுக்கே !

நான் ஆசிரியர் அவர்களிடம் கேட்டேன். அண்ணே இதுவரைக்கும் நீங்கள் எத்தனை முறை எடைக்கு எடை நின்றிருக்கின்றீர்கள்? என்று. ரொம்ப கவனமா நான் கேட்கிற மாதிரி நினைப்பு. அவர் சொன்னார், எனக்கு நினைவு இல்லை ராமசாமி என்று.

கிட்டத்தட்ட ஒரு 50 தடவையாவது இருக்குமா? என்று கேட்டேன். இருக்கும் என்று சொன்னார். ஆக 50 தடவை எடைக்கு எடை போட்டிருக்கிறார்கள். இங்கே இன்றைக்கு எடை போட்டிருக்கிறார்கள். இந்தப் பணமெல்லாம் என்னாச்சு என்று கேட்டேன். நம்முடைய கவிஞர் பூங்குன்றன் ரொம்ப அருமையாகச் சொன்னார்.

இது பூராவும் மக்களிடம் இருந்தே வந்த பணம்; மீண்டும் மக்களுக்கே போகப் போகிறது என்று சொன்னார். தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை கொடுத்தோம். வெங்காயம் கொடுத்தோம், வெள்ளிக் கட்டியையும் கொடுத்தோம். அதுபோல ஆசிரியர் அவர்களுக்கு வெள்ளிக் கட்டியும் கொடுத்தோம், தங்கமும் கொடுத்தோம். எல்லாமே மக்களுக்கே - பெரியாருடைய கருத்துகளைப் பரப்புவதற்கே நம்மை எல்லாம் மனிதனாக ஆக்கி அதிலும் சுயமரியாதை உள்ள மனிதனாக ஆக்கி, தமிழன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகத் தான் தேவைப்படுகிறதே தவிர, நமது கவிஞர் சொன்னது போல அவர் தனிப்பட்ட முறையில் இந்தப் பணத்தை எடுத்துச் செல்லுவதில்லை. இது தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்து இன்று வரை தொடர்கின்ற ஒரு நிகழ்ச்சி.

துலாபாரம் கொடுப்பது யாருக்காக?


ஆகவே எடைக்கு எடை வழங்குவதிருக்கின்றதே இது இன்னொரு இடத்திலேயும் நடக்கிறது. கோவிலிலும் நடக்கிறது. எடைக்கு எடை கொடுப்பதற்கு துலாபாரம் என்று பெயர். துலாம்னா தராசு.; பாரம்னா எடை போடறது. துலாபாரம் செய்து அங்கேயிருக்கிற பார்ப்பனர் களுக்குக் கொடுப்பது. செஞ்ச பாவமெல்லாம் போய்விடும் என்று நீங்கள் கவனிக்க வேண்டும். இங்கே எடைக்கு எடை தருவது மக்களுக்குப் போகிறது. ஆனால் கோவிலில் துலாபாரத்தில் எடைக்கு எடை போடுகின்ற பொருள்கள் எல்லாம் அக்கிரகாரத்துப் பெருச்சாளிகளுக்கு மட்டும்தான் போகிறது. அங்கே அவர்கள் பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

---------------- “விடுதலை”-தொடரும் 11-2-2011


மன்னன் சுந்தரபாண்டியனிடம் எடைக்கு எடை தங்கம், வைடூரியத்தை வாங்கிக்கொண்டு

கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டனர் பார்ப்பனக் கூட்டம்

உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி விளக்கம்

மன்னன் சுந்தரபாண்டியனிடம் எடைக்கு எடை தங்கம், வைரம், வைடூரியம் இவைகளையெல்லாம் வாங்கிக்கொண்ட பார்ப்பனர்கள் மன்னனுடைய சிலையைவைக்க அனுமதி இல்லை என்று சொல்லி கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டனர். பார்ப்பனர்களின் சுயநலத்தை பாரீர் என்று விளக்கி பேசினார் உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள்.


மேலவன்னிப்பட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை ரூபாய்நோட்டு வழங்கும் நிகழ்ச்சி 30.1.2011 அன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு உயர் கல்வி மன்ற துணைத் தலைவர் இராமசாமி ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

13ஆம் நூற்றாண்டில் ஒரு சம்பவம்


பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஒரு துலாபாரம் நடந்தது. நான் சொல்லுவது வரலாற்றுச் செய்தி. அந்த துலாபாரம் எங்கே நடந்தது என்றால் உங்கள் ஊர் பக்கத்தில், திருச்சியில் நடைபெற்றது.

திருச்சிக்குப் பக்கத்தில் சிறீரங்கத்திற்குப் பக்கத்தில் ஒரு கோயில் இருக்கிறதில்லையா அங்கேதான் நடந்தது. அங்கே துலாபாரம் கொடுத்தவர் யார் தெரியும்களா? -சுந்தர பாண்டியன். சுந்தரபாண்டியனை நம்முடைய ஆள்களுக்குத் தெரியாது.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்றால் தெரியும். ஏனென்றால் நம்மாள்களுக்கு சினிமாவோடு லிங்க் பண்ணிதான் தெரியும்.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்


அந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ன செய்தார் என்றால் ஒரிசா வரைக்கும் படைஎடுத்துக்கொண்டு போனான். தெற்கே இலங்கை வரைக்கும் படை எடுத்துக்கொண்டு போனான்.

இந்த நாடு முழுவதையும் அவனுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்து பெரிய பேரரசாக-சக்கரவர்த்தியாக ஆண்டான். ஒரு அய்யர் வருவார். இந்த மாதிரி இடத்தில் அய்யர் எப்பொழுதும் வருவார். நீ பல போர்களை செய்திருக்கிறாய். பல உயிர்களைக் கொன்றிருக்கிறாய். அந்தப் பாவத்தைப் போக்கத் துலாபாரம் செய்ய வேண்டும் என்றார்.

பெருமாளுக்கு துலாபாரம்


சரி, துலாபாரம் செய்யலாம். எங்கே செய்யலாம்? சிறீரங்கத்தில் போய் பெருமாளுக்கு செய்வோம் என்று சொன்னார்கள். சரி என்று வந்தார். உடனே பயம் வந்திடுமில்ல. யாருக்கு வரும்? பணத்தை அதிகமாக சேர்த்தவனுக்கு, அல்லது ஆசை அதிகமாக இருக்கிறவனுக்கு வரும்.

இந்தப் பயமும், ஆசையுமே பக்திக்கு அடிப்படை காரணம். அவர்களுக்கும் ஆசை வந்தது. பெருமாளுக்குத் துலாபாரம் செய்யலாம் என்று வந்தார்கள்.

கோயிலில் தராசு கட்டினார்கள். பட்டுச் சட்டை வேட்டியோடு துண்டை எல்லாம் அணிந்து கொண்டு வந்தான். மகாராஜா அல்லவா? சக்ரவர்த்தி அல்லவா? வந்து தராசில் உட்காரப் போனான். அப்பொழுது ஒரு பட்டர் கேட்டார், எடைக்கு எடை என்ன தரப் போகிறீர்கள்? என்று.

அவன் வெள்ளரிக்காய் தருகிறேன், கத்தரிக்காய் தருகிறேன் என்றால் வாங்கிக்கொண்டு போயிருப் பார்கள். வாழைப்பழம் தருகிறேன். முருங்கைக் காய் தருகிறேன். என்றால் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள்.

ஆனால், அவன்-சுந்தரபாண்டியன் சொன்னான், நான் எடைக்கு எடை பணம் தரப் போகிறேன், வைரம் தரப் போகிறேன் இங்கே யாரோ ஒரு தோழர் சொன்னார், எடைக்கு தங்கம் தந்துவிட்டோம். அடுத்து வைரம் தருவோம் என்று சொன்னார்கள்.

இந்த மாதிரி எடைக்கு எடை தங்கம், வைரம், வைடூரியம், மரகதம் எல்லாம் தருகிறோம் என்று சொன்னார். உடனே பார்ப்பன மூளை வேலை செய்தது. எப்படி கெட்டிக்காரத்தனமாக செய்கிறார் பாருங்கள். நம்மாள்கள் இவைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மாள்கள் முன்னேற முடியாததற்குக் காரணமே இது தான்.

மன்னன் பட்டு வேட்டி கட்டி உட்காரக் கூடாது


அவர்கள் என்ன செய்தார்கள்? ஓகோ, எடைக்கு எடை கொடுக்கப்போனால் தங்கம்- வைரம் எல்லாம் கொடுக்கப் போகிறான். அதுவும் நம்மவர்களுக்குத்தான் தரப் போகின்றான். அவன் வெறும் பட்டு வேட்டி கட்டி உட்காரக் கூடாது. ஒரு பட்டர் மன்னரைப் பார்த்து, மன்னா!என்று கேட்டார். இவன், என்ன? என்று கேட்டான்.

எதற்காக மன்னன் துலாபாரம் செய்வது?


நீங்கள் எதற்காக துலாபாரம் செய்கிறீர்கள்? போர்க்களத்திலே பெற்ற வெற்றிக்காகவும், அங்கே செய்யப்பட்ட படுகொலைக்கு பாவ சாந்திக் காகவும்தான் என்று சொன்னான்.

ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் துலாபாரம் செய்யுங்கள். அந்தத் தங்கத்தை எல்லாம் கொடுங்கள். ஆனால் ஒன்று. நீங்கள் போர்க் களத்திற்கு எப்படி போனீர்களோ அந்த மாதிரி உடை, பொருள்களை அணிந்து கொண்டு உட்காருங்கள் என்று சொன்னார்கள்.

போர்க்களத்திற்குப் பட்டு வேட்டியையும் துண்டையுமா கட்டிக்கொண்டு போவான்? போர்க்களத்திற்கு எப்படி போவான்? பெரிய இரும்பு உடைவாள், ஈட்டி, கேடயம் இரும்புக் கவசம், தலைப்பாகை இவைகளை எல்லாம் கட்டிக்கொண்டு செல்வான்.

இதுவே ஒரு 50 கிலோ சேர்ந்து போகும். அப்பொழுது இருந்த சுந்தரபாண்டியன் எல்லாம் என்னை மாதிரி இல்லிங்க. நல்ல குண்டான ஆள். இந்த உடைகளைப் போட்டால் இன்னும் 50 கிலோ வைரம் வரும். இன்னும் 50 கிலோ தங்கம் வருமல்லவா?

பார்ப்பானின் வேலையைப் பாருங்கள்


பார்ப்பான் எப்படி வேலை செய்கிறான் பாருங்கள். நம்மாள்களும் என்ன செய்வார்கள்? செயலாளராக பார்ப்பானைத்தான் வைத்துக் கொள்வார்கள். மந்திரியாக ஒரு பார்ப்பானைத்தான் வைத்துக்கொள்வார்கள்.

போரிலே செய்கின்ற படுகொலைப் பாவங்களைப் போக்கத்தானே வந்திருக்கிறீர்கள்? அதனால் போருக்கு போகிற மாதிரியே உட்காருங்கள் என்று சொன்னார்கள். சுந்தரபாண்டியன் பார்த்தான்-பயந்து போய் விட்டான்.

பகைவரைக் கண்டு நடுங்காத சுந்தரபாண்டியன் இந்த பட்டரைக் கண்டு நடுங்குகின்றான். உடனே தளபதியை மன்னன் அழைத்தான். உடைவாள், கவசம் எல்லாம் வந்தது. போய் தராசில் உட்காரப் போகிறான்.

பெரிய எம்ப்டன் பட்டர்


இன்னொரு பட்டர் இவனைவிட எம்ப்டன். அவன் என்ன சொன்னான்? மன்னா என்று சொன்னான். இவன் என்னான்னான். கொஞ்சம் நில்லு! நீ எதற்காக துலாபாரம் இப்படி செய்யப் போகிறாய்? நான் தரப்போகிறேன். போர்க்களத்திலே பெற்ற வெற்றிக்காக அங்கே செய்யப் பட்ட படுகொலை பாவங்களைப் போக்குவதற்காக செய்கிறேன் என்று சொன்னார்.

சரி, நல்லா பண்ணுங்கோ; திவ்யமா பண்ணுங்கோ. ஆனால் ஒன்று, போர்க்களத்திற்கு எதன்மீது போனீர்கள் என்று கேட்டான். இப்பொழுது புரிந்துகொண்டீர்கள் அல்லவா? சின்னக் குழந்தைகள் எல்லாம் சிரிக்கிறது. சுந்தரபாண்டியன் சிரிக்கவில்லை.

போர்க்களத்திற்கு யானை மீது தானே போனாய்?


போர்க்களத்திற்கு யானை மீது போனேன் என்று சொன்னான். யானை என்றால் சாதாரண யானை என்று நினைக்காதீர்கள்.

எனது சொந்தக்காரர் ஊர் மதுரை. மதுரையில் உள்ள ஒரு பெருமாள் கோயிலுக்காக யானையை வளர்க்கிறார். நான் கேட்டேன். ஏண்டா நம்மாள்கள் எல்லாம் ஆடுதானே வளர்ப்பார்கள். நீ யானை வளர்க்கிறாயே என்று கேட்டேன். இல்லை இல்லை; கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்பதற்காக செய்கிறேன் என்று சொன்னார். தெருவிலே போகிற யானை என்ன மாதிரி இருக்கும்? சுந்தரபாண்டியன் போர்க்களத்திற்குப் போன யானை பட்டத்து யானை. திருச்சி மலைக்கோட்டை அளவுக்கு உயர்ந்து நிற்கக் கூடிய பட்டத்து யானை. நல்ல ஓங்கி வளர்ந்துள்ள யானை.

யானையினுடைய ஒவ்வொரு தந்தமும் 25 கிலோ எடை கொண்டது. பட்டத்து யானையோ ஆயிரம் கிலோ. யானையோடு வந்து மன்னன் சுந்தர பாண்டி யன் உட்கார வேண்டும். யானையோடு மட்டுமல்ல; யானை மீது உட்கார்ந்திருந்த அம்பாரி-அது ஒரு 100 கிலோ.

இவ்வளவோடும் நீ வந்து உட்கார்ந்து செய்தால்தான் உன்பாவம் போகும் என்று சொல்லிவிட்டான்.

யானை மீது வாருங்கள்


பக்கத்திலே இருந்த அய்யர், ஆமாம் மகாராஜா. நீங்கள் அவர் சொல்லுகிற மாதிரி யானைமீது வாருங்கள் என்று சொன்னார்.

இன்னொருத்தன், இவன் எப்படி துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம். யானை மீது அம்பாரி கொடுக்கிற அளவுக்கு இவன் எப்படித் துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம் என்று சொன்னார்.

மன்னனும் அப்படியே கொடுப்பது என்று சொல்லிவிட்டான். தராசா இல்லை? நான் கண்டு பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, எல்லோரும் அம்மாமண்டபத்திற்கு வந்தார்கள். அந்த மண்டபத்தில் இப்பொழுது சீட்டாடுகிறார்கள். அப்பொழுது இல்லை.

அம்மாமண்டபத்திற்குப் போனார்கள். அப்பொழுதெல்லாம் காவிரியில் நிறையத் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இரண்டு பரிசலைப் பெரிதாகச் செய்தார்கள். யானை ஏறி நிற்கிற மாதிரி ஒரு பரிசல்.

இன்னொன்று அதே அளவுக்குப் பரிசல். இரண்டையும் கயிற்றிலே கட்டி காவிரி ஆற்றிலே மிதக்கவிட்டார்கள்.

தண்ணீரில் யானையைப் பரிசலில் நிற்க வைத்து, அதற்குச் சமமாக இன்னொரு பரிசலில் தங்கத்தை, வைடூரியத்தை கொட்டு என்று சொன்னார்கள். அப்படி எல்லாவற்றையும் கொட்டினார்கள்.

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு...!


அதனால்தான் சொன்னார்கள் போலிருக்கிறது- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்று. இப்படி கொட்டி நிறுத்து, சுந்தரபாண்டியன் மலை அளவு செல்வத்தை அவன் வாரி வழங்கினான்.

எல்லாமே பார்ப்பானுக்குப் போய்விட்டது. ஆக துலாபாரத்தை சுந்தரபாண்டியன் கொடுத்து விட்டான். அதற்கப்புறம் சுந்தரபாண்டியனை பார்ப்பனர்கள் மேளதாளத்துடன் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

மன்னன் வைத்த ஒரு கோரிக்கை


கோயில் வாசலிலே சுந்தரபாண்டியன் நிற்கிறான். அப்பொழுது அந்த தலைமை பட்டரைப் பார்த்து கேட்கிறான். எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது என்று மன்னன் சொன்னான் சுந்தரபாண்டியன். யார்? மன்னாதி மன்னன். தென்னாட்டு சக்ரவர்த்தி, பேரரசன். அவனுடைய கண் அசைவுக்கும், கை அசைவுக்கும் மன்னர்கள். கைகட்டி காத்திருக்கின்றார்கள். அவ்வளவு பெரிய இந்த சக்கரவர்த்தி பட்டரிடம் சாமி, எனக்கு ஒரு கோரிக்கை என்று கேட்டான்.

கோயில் வளாகத்தில் என்னுடைய சிலை


என்ன கேட்டான் தெரியும்களா?இந்தக் கோவில் வளாகத்திற்குள்ளே என்னுடைய சிலை ஒன்றை வைத்துக்கொள்கிறேன் என்று கேட்டான். உடனே அந்த பட்டர் சொன்னார், இல்லை, இல்லை. ஆண்டவனுடைய ஆலயத்தில் சாதாரண மனித னுடைய சிலை வைப்பதற்கு இடம் இல்லை என்று சொன்னார். மறுத்துவிட்டான்.

மன்னன் நினைத்திருந்தால் கோயிலை தரைமட்டமாக்கியிருப்பான்


சுந்தரபாண்டியன் நினைத்திருந்தால் இந்தக் கோவிலையே இடித்து தரைமட்டமாக்கி யிருக்கலாம். அவனுடைய ஆதிக்கத்தில் கோவில் இருக்கிறது. இந்த பட்டரெல்லாம் அவன் போடுகின்ற பிச்சையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்தப் பெருமாளே அவன் போடுகின்ற பிச்சையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்த அளவுக்கு இருக்கிறது நிலைமை.

ஆனால் அவன் இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தானல்லவா? ஒரு ஓரத்தில் அவனுடைய சிலையை வைப்பதில் என்ன குறைந்து போய்விட்டது?

கடைசி வரைக்கும் வைக்கவில்லை. அதன் பிறகு ஒரு கட்டப்பஞ்சாயத்து பண்ணினார்கள். நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் உங்களுக்கு ஒரு பூஜை பண்ணுகிறோம், அர்ச்சனை பண்ணுகிறோம் என்று பட்டர்கள் சுந்தரபாண்டியனுக்காகச் சொன்னார்கள். அந்த அர்ச்சனை இன்றைக்கும் நடக் கிறது.

நான்கணா கொடுத்தாலே இந்த அய்யர் அர்ச்சனை பண்ணுவான். மலைபோல் இந்த செல்வத்தைக் கொடுத்துவிட்டு ஒரு அர்ச்சனைக்காக மன்னன் அங்கே கைகட்டி நின்றான்.

நான் சொல்லுவது கதை அல்ல!

நான் சொல்லுவதெல்லாம் கதை அல்ல. ஏதோ தொலைக்காட்சியில் வருகின்ற தொடர் இல்லை. எல்லாமே கல்வெட்டில் இருக்கிறது. சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம். ஆதாரம் இல்லாமல் நாங்கள் யாரும் இந்த மேடையில் பேசமாட்டோம். அடுத்தாற் போல 50, 60 ஆண்டுகளில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு சித்திராபவுர்ணமி நிகழ்ச்சிக்கு சீரங்கத்திலிருந்து பெருமாள் கொள்ளிடத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

சித்திரைத் திருவிழா நடக்கிறது. அந்த நேரம் டில்லியில் முகமது பின் துக்ளக் என்ன பண்ணுகிறான்? அவனுடைய படைகளை அனுப்பி வைக்கிறான். அவனுடைய தளபதி தலைமையில் ஒரு படை வருகிறது.

கொள்ளிடம் வரை வருகிறது. இவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்தப் பட்டருக்கு அங்கே இருப்போமா, திருவிழா நடத்துவோமா, இல்லை கோவிலுக்குத் திரும்பிப் போவோமா என்று ஒரு யோசனை.

திருவிழா நடத்தலாமா?


கடைசியில் பெருமாளிடமே கேட்போம் என்று சொல்லிவிட்டு சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். இந்த மாதிரி முகமதியர் படை வருகிறது. நாங்கள் இங்கேயே இருந்து திருவிழா நடத்தலாமா? இல்லை போய்விடலாமா? என்று சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்தார்கள். ஒரு பார்ப்பன சிறுமியைக் கூப்பிட்டு சீட்டை எடுக்கச் சொன்னார்கள். எடுத்துக் கொடுத்தது- இந்த மாதிரி. முகமதியர் படை வராது. நீங்கள் இங்கேயே இருந்து திருவிழாவை நடத்துங்கள் என்று சீட்டில் எழுதப்பட்டிருந்தது. இவர்கள் எல்லாம் அதற்குப் பிறகு திருவிழாவை மகிழ்ச்சியாக நடத்துகிறார்கள். ஆனால் என்ன தப்பு நடந்து போச்சுன்னா-பெருமாள் எடுத்துக்கொடுத்த சீட்டு முஸ்லிம் படைத்தளபதிக்குத் தெரியாமல் போய்விட்டது.

படை எடுத்து வந்து விட்டான்


அவன் அங்கிருந்து படை எடுத்து வந்துவிட்டான். கொள்ளிடக்கரைக்கு வந்தார்கள் என்று தெரிந்த பின்னாலே இவர்கள் அந்த சாமி சிலையைத் தூக்கிக்கொண்டு சீறீரங்கம் கோவி லுக்கு ஓடிப் போய்விட்டார்கள்.

பிறகு அந்தப் படை சீறீரங்கம் கோவிலுக்குச் சென்று சூறையாடினார்கள். அதற்கப்புறம் ரெங்கநாதர் ஓடினார், ஓடினார், ஓடிக்கொண்டே யிருந்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பத்தூர் என்ற ஊருக்குப் போனார்.

ரங்கநாதப் பெருமாள் காணவில்லை


பிறகு அங்கேயிருந்து திருவனந்தபுரம், அதற்கப்புறம் திருமலை திருப்பதியில் ஓடிப்போய் ஒளிந்துகொண்டார். ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு ரங்கநாத பெருமாள் கோவிலிலேயே இல்லை. காணாமல் வெளியே போய்விட்டார். அதுதான் அவருடைய சக்தி.

ஆகவே தோழர்களே, நீங்கள் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் சாமி இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லுவதன் உண்மை இதுதான்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் என்ன நடந்தது? 40 நாள்கள் விரதம் இருந்து எல்லோரும் போனார்கள். போனவர்கள் எல்லாம் திரும்பி உருப்படியாக வந்தார்களா? ஒரு ஜீப்பில் சென்று விபத்துக்குள்ளாகி இறந்து போனார்கள். இது வேதனையான வேடிக்கை.

மனித உயிரை மதிக்கிறோம்


ஆசிரியர் பகுத்தறிவுவாதி, நாத்திகவாதி. இறந்து போனவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். நாங்கள் மனித உயிரை மதிக்கிறோம். அப்படிப்பட்ட நிலைமையிலே உயிர் பிழைத்த நான்கு பேர் சொல்லுகிறார்கள் என்ன செய்தி என்று சொன்னால், அய்யப்பன் புண்ணியத்தில் நாங்கள் எல்லாம் பிழைத்துவிட்டோம் என்று சொல்லு கிறார்கள்.

அய்யப்பன் காப்பாற்றவில்லையே!


நான் கேட்கிறேன்-நீங்கள் பிழைத்தது அய்யப்பன் புண்ணியம் என்றால், சபரிமலைக் கோவிலில் இப்பொழுது ஏராளமான பேர் இறந்து போனார்களே, இது யாருடைய புண்ணியத்தில் இறந்து போனார்கள்? சொல்லுங்கள். இதற்குத் தர்க்க ரீதியாகப் பதில் சொல்ல வேண்டாமா?

செத்தவர்களை அய்யப்பன்தான் கொன்றான் என்று ஒத்துக்கொள். சரி, இது நடந்து முடிந்துபோய்விட்டது. பத்திரிகையில் செய்தி போடுகிறார்கள். நூற்றுக்கணக்கான பேர் செத்துப் போனதற்குப் பக்தர்கள் பதில் சொல்லுகிறார்கள்.

போலீஸ் பாதுகாப்புத் தரவில்லை


அதில் ஒருவன் சொல்லுகிறான், போலீஸ் போதிய பாதுகாப்புத் தரவில்லை என்று. கண்டுபிடித்துச் சொல்லிவிட்டான். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை- இதை இன்னொருத்தன் கண்டுபிடித்து சொல்லிவிட்டான்.

இன்னொரு பக்தனுடைய கண்டுபிடிப்பு-அந்தக் கோவில் நிறுவனம் ஒழுங்காக நடக்கவில்லை. எவனாவது, அய்யப்பன் எங்களை காப்பாற்றி யிருக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டுமல்லவா? அதை ஏன் சொல்ல மாட்டேங்கிறீங்க?

உயிர் பிழைத்தால் அய்யப்பன்; செத்துப் போனால் அய்யப்பன் இல்லையா? இது என்ன நியாயம்? வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிமன்றத்தில் என்ன சொல்லுகிறார்கள்? இந்த மகர ஜோதி என்பதை கடவுள் கொண்டு வந்து வைக்கிறாரா? அல்லது மனிதன் கண்டுபிடித்ததா?

நல்ல அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? ஒரு விபத்தாகி செத்துப்போயிருந்தால் ஏன் செத்துப்போனார்கள் என்று ரிப்போர்ட் கொடுக்க வேண்டுமல்லவா?

காரல் மார்க்ஸ், லெனின்


காரல் மார்க்ஸும், லெனினும் சொன்னது- கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற கொள்கை. இங்கேயிருக்கின்ற கம்யூனிஸ்ட்டுகள் அப்படி இல்லை. மாரியாத்தாள் கோவிலுக்கு உண்டியல் தூக்குகிறவர்கள் அல்லது உண்டியலை எடுக்கின்றவர்கள்.

மகரஜோதி பற்றி...


அந்த மாதிரி அங்கே என்ன பண்ணுகிறார்கள்? இந்த மகர ஜோதியைப் பற்றி நாங்கள் விசாரிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். விசாரிக்க வேண்டாம். குறைந்த பட்சம் இந்த அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? அறிஞர்களைக் கூட்டி வைத்து நாங்கள் விசாரிக்கிறோம் என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படியும் சொல்லவில்லை. விசாரிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்.

சரி, சுஷ்மா சுவராஜ் என்று ஒரு அம்மா, பாரதீய ஜனதா கட்சியின் மிகப்பெரிய தலைவி. அடுத்து அந்த அம்மதான் பிரைமினிஸ்டராக வரப் போகிறார்.

நாற்காலி அடியில் அந்தம்மா....!


நாற்காலி அடியில்தான் அந்த அம்மாவைத் தேடிப்பார்க்க வேண்டும். அவ்வளவு உயரம் அந்தம்மா. அந்த அம்மாவுக்கு கடவுளைப் பற்றி நன்றாகத் தெரியும்.

ராமர் எங்கே பிறந்தார்?


ராமர் எங்கே பிறந்தார் என்று அந்த அம்மாவுக்குத்தான் தெரியும். அவ்வளவு விவரமானவர் அந்த அம்மா. அந்த அம்மா எல்லாவற்றையும் வந்து பார்த்தார்கள். பார்த்து விட்டு அவர்கள் சொன்னார்கள்-

இந்த விபத்து ரொம்ப மோசமான விபத்து. இதை நான் இப்படியேவிடப்போவதில்லை. நாடாளுமன்றத்தில் நான் கேள்வி கேட்கப் போகிறேன் என்று சொன்னார். முதல்ல நாடாளுமன்றத்தில் இப்பொழுதெல்லாம் பேசவேமாட்டேன் என்கிறார்கள். இப்பொழுது வேறு மாதிரி நடக்கிறது.

அய்யப்பன் சன்னதியில் கேட்க வேண்டும்


இந்த சுஷ்மா சுவராஜ் உள்ளபடியே கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?அய்யப்பன் சன்னிதானத்தில் அல்லவா போய் கேட்டிருக்க வேண்டும்?

அய்யப்பா, உள்ளபடியே நீ பொய்யப்பா. அதனால் தானப்பா எல்லோரும் மண்டையைப் போட்டுவிட்டார்கள் என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்! அதைவிட்டுவிட்டு நாடாளுமன்றத்தில் போய் கேட்டீர்களேயானால் என்ன நியாயம்?

ஆக, கடவுள் இல்லை என்பது இரண்டு பேருக்குத்தான் தெரியும். ஒன்று எங்களுக்குத் தெரியும். இன்னொருத்தர் கோவிலுக்கு போகிறாரே பட்டர்- அய்யர் குருக்கள்-அவர்களுக்குத் தெரியும்.

ஏனென்றால், இந்தக் கோவிலுக்குள் உருப்படியாக என்ன இருக்கிறது என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அதுவும் காஞ்சிபுரம் கோவிலில் இருக்கிறவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

சங்கராச்சாரிகளின் யோக்கியதை


அதனாலேதான் சங்கராச்சாரியாரிலிருந்து சாதாரண ஆச்சாரியார் வரைக்கும் எல்லா தப்பும் செய்கிறார்கள். கொலை பண்ணுகிறார்கள், கொள்ளை அடிக்கின்றார்கள், கற்பழிக்கின்றார்கள்.

கோயில் கர்ப்பக்கிரகத்தையே கற்பழிக்கும் இடமாக மாற்றியிருக்கின்றார்கள். அம்பாள் பேசாது. எந்தக் காலத்திலடா அம்பாள் பேசினாள் என்று 1952இல் கலைஞர் கதை வசனம் எழுதினார்.

எனவே, பார்ப்பனர்களுக்கு கடவுள் இல்லை என்று நன்றாகவே தெரியும். நம்மாள்களுக்குத்தான் தெரியமாட்டேங்கிறது. ஆகவேதான் நாங்கள் சொல்லுகின்றோம்-கடவுளை மற; மனிதனை நினை என்று சொல்லுகிறோம். அந்த வகையிலே இந்த வட்டாரத்து இளைஞர்கள் புரட்சிகரமாக சிந்திக்கின்றார்கள்.

அதன் செயல்பாடுதான்-வெற்றிகரமான இந்த விழா என்று கூறி, அனைவருக்கும் எனது வாழ்த்துகளைக் கூறி முடிக்கிறேன். நன்றி, வணக்கம்.

இவ்வாறு பேராசிரியர் அ.இராமசாமி பேசினார்.

----------------“விடுதலை” 12-2-2011

0 comments: