Search This Blog

25.2.11

திராவிடர்களை பார்ப்பனர்களின் இதிகாசங்கள் கேவலப் படுத்தவில்லையா?


அரசியல் நாகரிகம்!

வாசகர் அரங்கம் என்ற பெயரில் தினமணி என்னும் ஆர்.எஸ்.எஸ். ஏடு - பார்ப்பனர் சங்க ஏடு, திராவிட இயக்கங்களை, தலைவர்களைக் கொச்சைப்படுத்தி எழுதுவோர்க்கு விஸ்தீரமான இடத்தைக் கொடுத்துக் குதூகலிக்கிறது.

தமிழ்நாட்டில் அரசியல் நாகரிகம் மட்டும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப் பதுபற்றி... என்ற கடிதத்துக்கு வாசகர்களிட மிருந்து வந்த கடிதங்களில் சில என்று கூறி அக்கடிதங்களை வெளியிட்டுள்ளது (தினமணி 23.2.2011)

அண்ணா, கலைஞர் போன்றவர்கள்தான் எதிர்க் கட்சிக்காரர்களைக் கேவலமாக எழுதினர், கொச்சைப்படுத்தி எழுதினர் என்று ஆசிரியரின் கடிதங்களோ, ஆசிரியருக்குக் கடிதங்களோ இடம் பெற்றுள்ளன.

இப்படியெல்லாம் எழுதுவதற்கோ அல்லது மற்றவர்கள் எழுதுவதற்கு ஏட்டில் இடம் கொடுத்து எழுதச் செய்வதற்கோ பார்ப்பனர்களுக்கு அடிப்படைத் தகுதி கிடையாது.

இன்றுவரை பார்ப்பனரல்லாத மக்களைச் சூத்திரர்கள் என்று கூறும் சாத்திரங்களை, சுருதிகளை, ஸ்மிருதிகளை, கீதை போன்ற நூல்களைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு கூட்டம் அரசியல் நாகரிகத்தைப் பற்றிக் கூற கிஞ்சிற்றும் அருகதை உடையதுதானா என்பது நமது முதற் கேள்வியாகும்.

சூத்திரன் என்றால் பொருள் என்னவாம்? பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்றுதானே பொருள்? மறுக்க முடியுமா தினமணிகள்? திராவிடர்களைக் கரடிகள் என்றும், குரங்குகள் என்றும் பார்ப்பனர்களின் இதிகாசங்கள் கேவலப் படுத்தவில்லையா?

அப்படிக் கேவலப்படுத்தும் இராமாயணம் போன்ற நூல்களைப் பக்திப் பரவசம் சொட்டச் சொட்ட தினமணிகள் பரப்புரை செய்வதில்லையா? நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லும் முக்கால் நிர்வாணப் பேர்வழிதானே தினமணி பார்ப்பனர் வட்டாரத்தின் ஜெகத் குரு? இவர்களின் மூதறிஞர் ராஜாஜியின் யோக்கியதை தான் என்ன?

மதுரை டி.வி.எஸ். கட்டடத் திறப்பு விழாவில் பேசிய ராஜாஜி சூத்திரன் செய்ய வேண்டிய மோட்டார்த் தொழிலை பிராமணராகிய டி.வி.எஸ். அய்யங்கார் செய்கிறார் என்று பேசவில்லையா? அவர் பேச்சைத் தொடர்ந்து பேசிய காமராசர் அவர்கள் ஆச்சாரியாரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லையா?

(ஆதாரம்: முருகு தனுஷ்கோடி எழுதிய காமராசர் ஒரு சரித்திரம்)

நாகர்கோயில் மக்களவை இடைத் தேர்தலில் போட்டியிட்ட காமராசர்பற்றி ராஜாஜியின் வியாக்கியானம் என்ன?

அகில இந்திய காங்கிரஸ் ஆபீசில் ஒரு குமாஸ்தா வேலைக்குத்தான் காமராஜர் லாயக் கென்று சொன்னாரே - அதுதான் தரமிக்க விமர்சனமா?

ஒரு நாட்டின் பிரதமரையே உருவாக்கக் கூடிய ஆற்றல் படைத்த ஒரு பச்சைத் தமிழரைக் கேவலப் படுத்துவதுதான் அரசியல் நாகரிகமோ!

சென்னைக் கடற்கரையில் உரையாற்றிய ராஜாஜி இந்தியாவிலேயே ஒரு கருப்புக் காக்கை இங்குதான் இருக்கிறது; அதனைக் கல்லால் அடித் துக் கொல்ல வேண்டும் என்று காமராஜரை ஜாடை காட்டிப் பேசியதன் கண்ணியம் என்னவாம்?

இவர்களின் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த சுதர்ஷன், உமாபாரதியின் குடிப் பிறப்புப் பற்றிக் கொச்சைப்படுத்திப் பேசியதில்லையா? அதை எதிர்த்து, உமாபாரதியின் சகோதரர் கண்டனக் கணைகளை வீசவில்லையா?

காமராசர் மறைந்த நிலையில் அவர் உடலை அடக்கம் செய்யும் இடத்தினை இரவோடு இரவாகத் தானே நேரில் சென்று ஆய்வு செய்து, ஏற்பாடு செய்து அரசியலில் தமது எதிர்ப்புறத்தில் இருந்த கட்சியின் தலைவரான காமராசருக்கு மணி மண்டபம் கட்டினாரே கலைஞர் - அதில் கலைஞர் அவர்களின் கண்ணியத்துடன் கூடிய கடமை உணர்வு பளிச்சிடவில்லையா?

குல்லுகப்பட்டர் என்று திராவிடர் இயக்கத் தவரால் வருணிக்கப்பட்ட இன எதிரியான ராஜாஜிக்கேகூட - ராஜாஜி விரும்பும் ராமன் மணி மகுடத்துடன்கூடிய மணிமண்டபம் எழுப்பியவர்தான் மானமிகு கலைஞர் அவர்கள்.

இதுபோல எத்தனை எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் குவிக்க முடியும். வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்ற போக்கில், அடக்க முடியாத பார்ப்பன இனவெறி உணர்வோடு திராவிட இயக்கத்தவர்களைக் கொச்சைப்படுத் தும், இழிவுபடுத்தும் வேலையில் தினமணி எழுதுமேயானால், அவாளின் சங்கராச்சாரியாரின் திருவிளையாடலிலிருந்து பலவற்றையும் அம்பலப் படுத்த நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.

---------------------"விடுதலை” தலையங்கம் 25-2-2011

0 comments: