தமிழ் என்றால் என்ன? மக்களா? நாடா? மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப் பொறுத்து நாட்டுக்கும் மக்களுக்கும் தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா? என்ற கேள்விகள் தமிழைப் பொறுத்தவரை வித்து முந்தியா? மரம் முந்தியா? என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றைக் காணாதவர்-களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும்படியாகத் திராவிடம், திராவிடர், திராவிட மொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியும், அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும் நாடுகளும்கூட தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும்; ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன. நாட்டிலும் இதை வெகு காலமாகவே ஒப்புக்கொண்டு வழக்கத்திலும் கொண்டு வந்திருக்கிறோம். வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும் மக்களையும் குறிக்கப் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேச சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் நாம் காண்கிறோம். ஆனால், தெலுங்கு நாட்டாராகிய ஆந்திரர்களும் கன்னட நாட்டாராகிய கன்னடியர்களும், மலையாள நாட்டாராகிய மலையாளிகளும் இதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பதுபோல், தமிழும் ஒரு மொழி என்றுதான் சொல்கிறார்களே ஒழிய, இவையாவும் தமிழ்தான் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். சிலர் மறுக்கவும் செய்கிறார்கள். காரணம் அவர்களது மொழியில் ஆரியச் சொற்கள் பெரும்பான்மையாகக் கலந்துவிட்டன. ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இட நெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கு குடிவாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்தியப் போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும், மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமற் போனதால் நாளடைவில் அந்தந்த இடத்தில் வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மகத்துவங்களை எடுத்துக்கூறி, அந்தந்தப் பிரதேச மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும்படிச் செய்து, அதன் மூலம் தமது கலை ஆச்சார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்திவிட்டனர். அந்த வடமொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும், அந்தந்த மக்களுக்குத் தமது மொழி தமிழ் அல்லாத வேறு மொழியேயாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு பொருளுக்குப் பல சொல்
ஆனால், என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு, தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழிஅதாவது தமிழ்தான் நாலு இடங்களில் நாலுவிதமாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன். உதாரணமாக, இங்கு தோட்டத்திற்குப் போகிறேன் என்றால் வயலுக்கு, விளை நிலத்திற்குப் போகிறேன் என்று அர்த்தம். கொல்லைக்குப் போகிறேன் என்றால் கக்கூசுக்குப் போகிறேன் என்று அர்த்தம். சோழ நாட்டில் தோட்டத்திற்குப் போவதென்றால். கக்கூசுக்குப் போவதாகவும், கொல்லைக்குப் போவதென்றால் வயலுக்குப் போவதாகவும் அர்த்தம் செய்து கொள்வார்கள். ஒரே தமிழ்ச் சொல் இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருளில் வழங்குகிறது. இதேபோல் தமிழில் வீடு என்பதைத் தெலுங்கில் இல் என்றும், கன்னடத்தில் மனை என்றும் மலையாளத்தில் பொறை என்றும் கூறுவார்கள். இந்த நான்கையும் தமிழ் அகராதியில் வீட்டிற்குரிய பல பெயர்களாகக் காணலாம். இதே போல் நீர் என்ற, தண்ணீர் என்று பொருள்படும் தமிழ் வார்த்தைக்கு, கன்னடத்தில் நீரு என்றும், தெலுங்கில் நீள்ளு என்றும், மலையாளத்தில் வெள்ளம் என்றும் கூறுவார்கள். மலையாளத்தில் மழை அதிகம். ஆதலால், தண்ணீரை அவர்கள் எப்போதும் பெருத்த அளவில்தான் பார்ப்பார்கள். ஆதலால், தமிழில் பெருந்தண்ணீர்ப் போக்குள்ள பெயரை அங்கு நீருக்கு வழங்குகிறார்கள். இந்த மாதிரித் தமிழ் வார்த்தைகள் அந்தந்த இடத்திலுள்ள சீதோஷ்ண நிலைக்கேற்ப, பேச்சுப் பழக்கத்துக்கு ஏற்ப உச்சரிப்பில் சிறிது மாற்றமடைந்திருக்கிறதே தவிர வேறில்லை. இதனால் வெவ்வேறு மொழியாகிவிடமுடியுமா? ஒரு பொருளுக்குப் பல சொல் இருந்தால் ஒவ்வொரு சொல்லும் ஒரு மொழியாகிவிடுமா?
நாலு மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அநேகமாகத் தமிழ்ச்சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும். அகராதிகொண்டு மெய்ப்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும்கூட அவற்றுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை, தமிழ்ச் சப்தத்தில்தான் நாலாயிரப் பிரபந்தங்களையும், திருப்பாவையையும் தெலுங்கு எழுத்தில் படித்துப் பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில் தமிழ்ச் சப்தத்தில்தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர்களுக்கும், மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது. வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளி-களும், கன்னடியர்களும் தம் தாய் மொழி தமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுநர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக்கொண்டு உள்ளார்கள் என்பது நமக்கு, மேலும் நம் கருத்துக்கு வலிமையை ஊட்டுகிறது. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது, தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில் ஹிந்தியைப் புகுத்தக்கூடாது என்று கிளர்ச்சி செய்தேன்.
இந்தியை ஏன் எதிர்த்தேன்?
அது என் தாய் மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனியால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திரச் சக்தி நிறைந்தது, எலும்புக்கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல, பின் எதற்காக? தமிழ், இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்நாட்டு நல்வாழ்வுக்கு, பண்புக்கு ஏற்ப அமைந்துள்ளது. மூடநம்பிக்கையை உண்டாக்கும் கருத்துகளுக்குத் தமிழ் மொழியில் இடம் இல்லை. இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும்விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூயதமிழ் பேசுவதால், மற்ற வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் பல நன்மையடை-வோம் என்பதோடு; நம் பழக்கவழக்கங்களுக்கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக்கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடைப் புகுந்து, நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்-தான். வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழைவிட, மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்-பதற்காக அல்ல.
-------------------தந்தை பெரியார் “ எழுத்துச் சீர்திருத்தம்” நூலிலிருந்து...
1 comments:
Mikka nandri! Ungalukku endrendrum kadamaippattullom.
THIRUMUGAM, MALAYSIA
Post a Comment