Search This Blog

24.2.11

மதச் சார்பின்மைக்கு மரணவோலையா? பூஜை, புனஷ்காரத்தால் ஏற்பட்ட பலன் என்ன?


கருநாடக மாநிலத்தில் அரசு தலைமைச் செயலகத்திலும், சட்டமன்றம் நடக்கும் அலுவலகத்திலும் நாள்தோறும் அர்ச்சகர்ப் பார்ப்பனர் ஒருவர் பூஜை நடத்தி வருகிறாராம். இப்பொழுது ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் எடியூரப்பா காலத்திற்கு முந்தைய குமாரசாமி முதல்வராக இருந்தபோதே இந்தக் கேடுகெட்ட நிலை தொடங்கப்பட்டுவிட்டதாம்.

ஒவ்வொரு வாரமும் தம் சொந்த செலவில் இந்த அர்ச்சகப் பார்ப்பனர் பூஜை நடத்துகிறாராம். விலைவாசி ஏறிக் கொண்டேயிருப்பதால், அதிக செலவாகிறதாம்.

மாதம் 40 ஆயிரம் ரூபாய் சொந்த செலவு செய்யும் அளவுக்கு இந்த அர்ச்சகர்ப் பார்ப்பனர் என்ன அவ்வளவுப் பெரிய பணக்காரரா?

அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மாதம் ஆயிரம் ஆயிரம் கொடுக்கிறார்களாம் - அதிகாரிகள் கொடுக்கும் வெகுமதிகள் வேறு. அப்படியென்றால், வெகுமதி என்ற பெயரில், பக்திக் காணிக்கை என்ற பெயரில் இலட்சக்கணக்காகத் தொகை புரளா விட்டால், இந்த வேலையில் இறங்கி இருக்கவே மாட்டார் அந்த அர்ச்சகர்ப் பார்ப்பனர். ஆதாயம் இல்லாமலா அய்யர்வாள் ஆற்றைக் கட்டி இறைப்பார்?

இவர் இப்படி பூஜை செய்வதால், அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்யும் மாபெரும் பணிகளைக் கண்டு மேலுலகில் உள்ள கடவுள்கள் சிரித்து மகிழ்ச்சி அடைவார்களாம்! ஆமாம், கட வுளுக்கும், இந்த அய்யருக்கும் தனி அலைவரிசை யில் நேரடித் தொடர்பு (கனெக்ஷன்) இருக்கிறது போலும்!

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனர்கள் இப்படிப் புரூடா விடுவதை நம்பித் தொலைக்கும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்கின்றனர் என்றால், இந்த முட்டாள்தனத்தை எண்ணி எதில் போய் முட்டிக் கொள்வது?

குமாரசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் இந்த சாஸ்திரி வந்ததாகச் சொல்லப்படுகிறது - அப்பொழுதே இந்தப் பூஜைகள் நடக்க ஆரம்பித்தன. குமாரசாமியின் ஆட்சி ஏன் தொடர வில்லை? பூஜையின் பலன் குமாரசாமிக்கு ஏன் போய்ச் சேரவில்லை?

சரி, இப்பொழுது எடியூரப்பா முதல்வராக உள்ளார். நாள்தோறும் பூஜை புனஷ்காரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும், ஒவ்வொருநாளும் எடியூரப்பா ஆட்சி செத்து செத்து அல்லவா பிழைத்துக் கொண்டிருக்கிறது - மனுஷன் நிர்வாணமாக அல்லவா படுத்துக் கிடக்கிறார். பூஜை, புனஷ்காரத்தால் ஏற்பட்ட பலன் என்ன?

சட்டமன்ற உறுப்பினர்களில், அமைச்சர்களில், அதிகாரிகளில், அலுவலர்களில் இந்து மதத்தைச் சாராதவர்கள் இல்லையா? அவர்களுக்கும் சேர்த்து இந்த சாஸ்திரி பூஜை செய்கிறார். இஸ்லாமியர் களாக உள்ளவர்களுக்கு உருவ வழிபாடு கிடையாதே - கிறித்தவர்களுக்காக எந்த உருவத்தை வைத்துப் பூஜை செய்கிறார் இந்த சாஸ்திரி?

பல்வேறு மதக்காரர்களும், மத நம்பிக்கை யற்றவர்களும் பணியாற்றும் ஒரு தலைமைச் செயலகத்தில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சாஸ்திரி ஒருவர் குறிப்பிட்ட இந்து மதத்தின் முறைப்படி இந்துக் கடவுள்களின் உருவப் படங்களை ஒவ்வொரு அறையில் வைப்பதும், இந்து மத முறைப்படி பூஜை புனஷ்காரம் நடத்துவதும் சரியானதுதானா?

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியா மதச் சார்பற்ற நாடு (செக்குலர் ஸ்டேட்) என்று தெளி வாகவே பிரகடனப்படுத்தியுள்ளது. அப்படி இருக் கும்போது குறிப்பிட்ட மதப் பூஜை, புனஷ்காரங்களை அனுமதிப்பது எப்படி?

மதச் சார்பின்மை என்றால், அரசுக்கும், மதத் துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பது பொருள்.

ஆனால், கருநாடகத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான காரியம் நாள்தோறும் நடக்கிறதே - அதுவும் அமைச்சர்களின் ஆசீர்வாதத் தோடு.

இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றால், அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளை மதிக்கும் நீதிபதியாக இருந்தால், இதனைக் கண்டித்துத் தானே தீர்ப்பு எழுதுவார்?

கருநாடக மாநில சட்டப் பேரவையில் பகுத்தறிவுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லையா? மதச் சார்பின்மை பேசும் இடதுசாரிகள் ஏன் இந்தப் பிரச்சினையை எழுப்புவதில்லை? இதில் வர்க்கப் பிரச்சினை எதுவும் இல்லை என்று சொல்லுவார்களோ!


கருநாடக மாநிலத்தில் உள்ள திராவிடர் கழகத் தோழர்கள் - பகுத்தறிவாளர்கள் இதுகுறித்துப் பிரச் சினை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

-------------------”விடுதலை” தலையங்கம் 24-2-2011

0 comments: