Search This Blog

21.2.11

பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சிக்கும் ஆளாகாமல் எச்சரிக்கையாயிரு!


எப்படி மறக்கமுடியும்?

இந்நாட்டில் ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவும், இப்பிரிவினருள் ஒருவருக்கொருவர் காட்டும் வேற்றுமையுணர்ச்சியும், துவேஷத்தன்மையும் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகின்றன.

இது எவ்வளவுதான் இன்று ஒருசுயநலக்கூட்டத்தினரின் பிரசாரங்களால் மறைக்கப்பட்டாலும் எவ்வளவுதான் இப்பிரிவினை கூடாது என்று "இதோபதேசம்" செய்யப்பட்டாலும் இந்தப் பிரிவு மற்றெல்லாப் பிரிவுகளைவிட சரித்திர சம்மந்தமானதாகவும், முன் பின் பழிவாங்கித் தீரவேண்டிய உணர்ச்சியுடையதாகவும், இருந்து வளர்ந்து கொண்டே வருகிறது.

இப்பிரிவைப்பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இன்று மனிதசமூகத்தில் உள்ள சகலவித பிரிவிலும் இந்த ஆரியர் (தமிழர் அல்லது) திராவிடர் என்கின்ற பிரிவே மிகக் கொடுமையுள்ளதாகவும், இவ்விரு பிரிவினரும் எந்தக் காலத்திலும் ஒன்றுபடுவதற்கில்லாத வேற்றுமையுடைய தாகவும் இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏனெனில் பல்வேறு மதங்களின் பேரால் இந்திய மனித சமூகம் பிரிக்கப்பட்டோ பிரிவினைப்பட்டோ இருந்தாலும் அவைகளை யெல்லாம்விட இந்து மதத்தினர் என்பவர்களுக்குள்ளாகவே இருந்து வரும் இந்த ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவானது எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒன்று படுத்தப்பட முடியாத மாதிரியாய் அமைந்தும் இருந்தும் வருவதேயாகும்.

உதாரணமாக இந்து சமூகம், முஸ்லீம் சமூகம், கிருஸ்தவ சமூகம் என்பவைகளுக்குள் ஒன்றுக்கொன்று இருந்துவரும் பிரிவுகள் எவ்வளவு பிரதானமாகவும், பெரியதாகவும் காணப்பட்டாலும் கூட அவை ஒரு சிறு மனமாறுதலால் அடியோடு மறைந்து ஒழிந்து போகும்படியானதாக இருக்கின்றன. ஆனால் இந்துக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஆரியர் திராவிடர் என்றோபார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்றோ இருந்துவரும் சமூகங்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிரிவினை எப்படிப்பட்ட மனமாற்றத்தாலும் மாறுவதற்கோ மறைவதற்கோ வழியில்லாமல் பிறவி முதல் சாவுவரை இருந்தே தீரும்படியானதாக இருந்து வருகிறது. காரணம் என்னவென்றால் மற்ற மதப்பிரிவு மதபேதம் ஆகியவைகளுக்கு மனிதனுடைய உணர்ச்சிகள் அல்லது எண்ணங்கள் மாத்திரமே ஆதாரமாய் இருப்பதும் ஆரியர் திராவிடர் அல்லது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற பிரிவுக்குப் பிறவியே காரணமாய் கற்பிக்கப்பட்டிருப்பதும் தான் முக்கிய காரணமாகும்.

மற்றும் மேல்கண்ட மத சம்மந்தமான பிரிவுகளுக்கு மக்களின் வேஷத்தில் ஏதோ சில வித்தியாசங்கள் மாத்திரம் கற்பிக்கப்பட்டிருக் கின்றதே அல்லாமல் ஒரு மதத்துக்கும் மற்றொரு மதத்துக்கும் புழங்கிக் கொள்வதில் எவ்வித வித்தியாசமும் ஆக்ஷேபணையும் இருப்பதில்லை. ஆனால் இந்து மதத்தில் உள்ள ஜாதி சம்மந்தமான பிரிவுகளில் பார்ப்பானுக்கும் பார்ப்பான் அல்லாதவனுக்கும் குறிப்பாக பார்ப்பானுக்கும் தீண்டப்படாதவன் என்பவனுக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இருந்துவரும் பேதங்கள் அறிவும் ரோஷமும் உள்ள எந்த மனிதனும் சகிக்க முடியாத தன்மையில் இருந்து வருகின்றன என்பதுடன் அதை மாற்றுவது அல்லது தணிப்பது என்பது கூட மகா பாதகமான காரியமாய் கருதப்படுவது மாத்திரமல்லாமல் இப் பேதங்களுக்கும் நடப்புகளுக்கும் "கடவுள்" வாக்குகளாகவே ஆதாரங்களும் இருப்பதாகவும் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவானது மாற முடியாததும் மாற்ற முடியாததுமாக இருந்து வருகையில் அதை எப்படி ஒருவன் மறக்கவோ, மறைக்கவோ முடியும் என்று கேட்கிறோம். இதை நன்றாய் உணர்ந்து இந்த பிரிவின் பயனாய் பலனை அனுபவிக்கும் கூட்டத்தாராகிய ஆரியர்களே இந்தப் பிரிவினைக்காகத் துக்கப்படுவதாகவும், இந்தப் பிரிவினையைப்பற்றி யாரும் இனி பேசக்கூடாதென்றும், அதைப்பற்றி பேசுவது தேச நன்மைக்கும் மனித சமூக நன்மைக்கும் கேடு என்றும் மாய அழுகை அழுது மக்களை ஏய்க்கிறார்கள். உண்மையாகவே பார்ப்போமானால் இன்று இந்த ஆரியர் திராவிடர் அல்லது பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிரிவினை கூடாதென்றும், அது ஒழிக்கப்பட வேண்டும் என்றும், மனப்பூர்வமாக பாடுபடுபவர்கள் திராவிட மக்கள் என்னும் பார்ப்பனரல்லாதாரேயாகும். இந்தப் பிரிவினை இருந்துதான் ஆகவேண்டும் என்று பாடுபடுபவர்கள் ஆரியர் என்னும் பார்ப்பனர்களேயாகும்.

உதாரணம் வேண்டுமானால் சுலபத்தில் பார்த்துக் கொள்ளலாம். அதாவது வருஷந்தோறும் பார்ப்பனர்கள் பிராமண மகாநாடு, சநாதன மகாநாடு, வர்ணாச்சிரம தர்ம மகாநாடு, ஆரியர் தர்ம பரிபாலன மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகளை ஆங்காங்கு கூட்டுவித்து வேதங்களையும், மனுதர்மம் முதலிய சாஸ்திரங்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும், மனுதர்ம சாஸ்திரப்படி நடக்கவேண்டும் என்றும், வருணாச்சிரமங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் செய்து வருவதுடன் மடாதிபதிகள் சங்கராச்சாரிகள் குருமார்கள் முதலியவர்களைக் கொண்டு பிரசாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவை மாத்திரமல்லாமல் இந்த பிரிவினைகளை அதாவது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவினையை காட்டுவதற்கு ஆகவும், காப்பாற்றுவதற்காகவும் கோவில், குளம், சத்திரம், காப்பிக்கடை, ஓட்டல் முதலிய ஜனங்கள் அவசியமாயும் அடிக்கடியும் கூடும்படியாயும் உள்ள இடங்களில் பார்ப்பனர்களுக்கு என்று வேறு இடமும் பார்ப்பனரல்லாதார்க்கு என்று வேறு இடமும் ஒதுக்கப்பட்டு விளம்பர பலகை போட்டு பாதுகாத்து வரப்படுகிறது. பார்ப்பனரல்லாதார்களோ இதற்கு நேர்விரோதமாக பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவு இருக்கக்கூடாதென்றும், அம்மாதிரி வித்தியாசமும் பிரிவும் இருப்பது நாட்டுக்கு மாத்திரம் கெடுதியல்லாமல் மனித சமூகத்தின் சுயமரியாதைக்கே கேடானது என்றும் சொல்லி வருகிறார்கள். பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியும், அவர்களது கூட்டத் தீர்மானங்களும் இதை அனுசரித்தே வருகின்றன. இந்தப்படி பார்ப்பனரல்லாதார் செய்து வருவதில் இந்தப் பிரிவு அடியோடு ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் குறிப்பாக எந்த எந்த காரியம் எந்த எந்த பழக்க வழக்கம் ஒழியவேண்டும் என்று சொல்லி அவைகளை எடுத்துக் காட்டி வருவதையே நமது பார்ப்பனர்கள் ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவினை எது எதில் இருக்கிறது என்று எடுத்துக்காட்டுவதே கூடாது என்றும், அப்படிக் காட்டுவதையே ஆரியர் திராவிடர் என்று பிரிக்கிறதாக ஆகின்றதென்று அதற்கு பெயர் கொடுத்து அதை ஒரு பழியாகச் சொல்லி விஷமப் பிரசாரம் செய்தும் அம் முயற்சியையே அடக்கி ஒழிக்கப்பார்க்கிறார்கள்.

இன்று இத்தென்னாட்டில் ஆரியர் திராவிடர் என்கின்ற பிரச்சினையால் தென்னாட்டு மக்கள் இரண்டு துறையில் துன்பம் அனுபவிப்பதாகக் கருதி அத்துன்பத்தில் இருந்து விடுபடவே ஆரியர் திராவிடர் அல்லது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒன்று சமுதாய வாழ்க்கையில் மதம் என்பதை ஆதாரமாய் வைத்து பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களை இழிவும் கீழ்மையும் படுத்துதல். இரண்டு அரசியல் வாழ்க்கையில் தேசியம் என்பதை ஆதரவாய் வைத்துக்கொண்டு பார்ப்பனர், பார்ப்பனரல்லாத மக்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்துதல்.

இந்த இரண்டு துறையிலும் பார்ப்பனரல்லாத மக்கள் தாழ்த்தப்பட்டு இழிவடைந்திருப்பது மாற்றப்பட்டால் ஒழிய இந்த நாட்டில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவு உணர்ச்சியோ அல்லது ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவு உணர்ச்சியோ ஒரு நாளும் மாறாது. மாறுவதற்கு அனுமதிப்பதும் ஒரு நாளும் நியாயமாகாது. ஏனெனில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவை ஆதியில் உண்டாக்கிக் கொண்டதின் பயனாய் பார்ப்பனர்கள் (ஜன சமூகத்தில் 100க்கு 3 பேர்களாய் உள்ளவர்கள்) தங்கள் "கடவுளுக்கு" சமமாய் மதிக்கப்படும் படியாய் செய்துகொண்டு உலக வழக்கிலும் சுவாமி என்று தங்களை மற்றவர்கள் அழைக்கும்படியும் செய்து கொண்டு பொருளாதாரத் துறையில் எல்லோருக்கும் மேலாகவே சுகபோகமாயும் இருந்துகொண்டு வருகிறார்கள். மற்ற 100க்கு 97 மக்களாய் உள்ள பார்ப்பனரல்லாதார் என்பவர்களோ பெரும்பாலும் 100க்கு 75 பேர்களுக்கு மேலாகவே சமூக வாழ்வில் இழிவான மிருகத்திலும் கடையாயும், பொருளாதாரத் துறையில் சரீரப் பிரயாசைப் படும்படியாகவும் பெரும்பான்மை மக்கள் பட்டினியினால் வாடி உலக சுக போகத்தை நினைக்கவும் அருகதை அற்றவர்களாகவும் செய்யப்பட்டிருக்கும் போது இந்த கொடுமையும் இழிவும் ஒழிக்கப்படாமல் பேத உணர்ச்சியை மாத்திரம் மறந்திருக்கும்படி எப்படித்தான் அனுமதிக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

ஆரியர் திராவிடர் பிரிவு வேண்டாம் என்றும், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பேத உணர்ச்சி வேண்டாம் என்றும் இந்த 10, 20 வருஷகாலமாக பார்ப்பனர்கள் அதாவது சமூக இயலில் பிரதானப்பட்ட பார்ப்பனரும், அரசியலில் புகழும் தலைமையும் பெற்ற பார்ப்பனரும் கூப்பாடு போட்டும் குறைகூறியும் வந்திருக்கிறார்களே ஒழிய ஒரு பார்ப்பனராவது அப்பேத உணர்ச்சிக்கு ஆதாரமான காரியங்களில் ஒரு கடுகளவையாவது ஒழிக்கவோ மறைந்து போகும்படி செய்யவோ முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியின் பயனாய் அதுவும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவில் கஷ்டமும் இழிவும் அடைந்து வருவதை விளக்கி விளக்கிக்காட்டி கூப்பாடுபோட்டு வந்ததின் பயனாய் ஏதாவது ஒரு சிறிதாவது அப்பேதக்கொடுமையில் இருந்து மீள வகை கண்டிருக்கக்கூடுமே ஒழிய மற்றப்படி எந்த விதத்திலும் வழியில்லாமலே கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இன்னமும், இன்றும் பொது ஸ்தாபனங்களில் அதாவது ரயில்வே, கோவில், சத்திரம், குளம் முதலிய இடங்களில் கூட பார்ப்பனர் பார்ப்பனரல்லதார் பிரிவு பார்ப்பனர்களாலேயே ஏற்படுத்தப்பட்டு பார்ப்பனராலேயே காப்பாற்றப்பட்டு வருகிறது. இன்னமும் நாளையும் பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆணும் பெண்ணும் பார்ப்பனரல்லாதார்களில் இருந்து பிரித்துக்காட்டும் படியான வேஷத்தையும் வேஷச் சின்னத்தையும் அணிந்து தங்களை பிரித்துக்காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இருந்து கொண்டு இருக்கும் பார்ப்பனர்கள் மற்றவர்களைப் பார்த்து அதுவும் கஷ்டமும் இழிவும் அடைந்து கொண்டிருக்கின்றவர்களைப் பார்த்து பேத உணர்ச்சியை விட்டுவிடுங்கள் என்று சொன்னால் அதில் நாணயமோ யோக்கியமோ இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

சமீப காலத்தில் பார்ப்பனர்களால் கூட்டப்பட்ட பல பிராமண மகாநாடுகளிலும், வருணாச்சிரம தர்ம பாதுகாப்பு மகாநாடுகளிலும் செய்யப்பட்ட தீர்மானங்களில் முக்கிய தீர்மானங்கள் என்னவென்று பார்ப்போமானால் முன் குறிப்பிட்டது போல் "சனாதன தர்மத்தை காப்பாற்ற வேண்டும்" என்றும் "வருணாச்சிரம தர்மத்தை காப்பாற்ற வேண்டும்" என்றும் "மனுதர்ம சாஸ்திர திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரும்படி ஒவ்வொரு பார்ப்பனரும் நடந்து கொள்ள வேண்டு"மென்றுமே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.

சனாதன தர்மம், வருணாச்சிரம தர்மம், மனுதர்மம் என்றால் என்ன என்பது தெரியாதா என்று கேட்கின்றோம். மனுதர்மம் என்பதை கீழே உபதலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறோம்.

இந்த மாதிரி நிலையில் பார்ப்பனர்கள் இருந்துகொண்டு "மத உணர்ச்சி வேண்டாம்" என்று நமக்கு புத்தி சொல்ல வருவதென்றால் இது "நான் அப்படித்தான் அடிப்பேன் நீ அழுகக்கூடாது உடலைக்கூட அசைக்கக் கூடாது" என்பது போன்ற நீதியாக இருக்கிறதா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஆகவே வரப்போகும் அரசியல் போட்டிகளில் பார்ப்பனரல்லாதார் ஒரு சமயம் தோல்வியடைந்து விட்டாலும்கூட இந்த மேல் கண்ட பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவினையை சகல துறைகளிலும் அழிந்து ஒழிந்து போகும்படி செய்ய வேண்டிய வேலைகளையாவது தக்கபடி கவனித்து வந்தால் அரசியல் துறை போட்டியில் வெற்றி ஏற்படுவதின் மூலம் கிடைக்கும் நன்மையைவிட கூடுதலான நன்மை கிடைக்கும் என்றே கருதுகிறோம்.

ஆகையால் பார்ப்பனரல்லாத மக்கள் பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சி போதனைக்கும் ஆளாகாமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டுகிறோம்.

------------------- தந்தைபெரியார் - "குடி அரசு" தலையங்கம் 05.04.1936

0 comments: