Search This Blog

26.2.11

பார்ப்பன ஊடகங்களுக்கு கலைஞர் மீது ஆத்திரம் ஏன்?

அசைக்க முடியாத அஸ்திவாரம் கொண்ட கலைஞர் ஆட்சியைப் பார்த்து எதிரிகளுக்கு அதிர்ச்சி! திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

அசைக்க முடியாத அஸ்திவாரத்தைக் கொண்ட கலைஞர் ஆட்சியைப் பார்த்து எதிரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி விளக்கிக் கூறி உரையாற்றினார்.

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

திண்டுக்கல்லில் பேசி நீண்ட நாள் ஆகிவிட்டது...

திண்டுக்கல்லில் ஈசநத்தத்தில் நடைபெற்ற மணவிழாவை ஒட்டி நான் இங்கு வருகின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி தோழர்கள், நீங்கள் திண்டுக்கல்லில் பேசி நீண்ட நாளாகிறது. ஆகவே நீங்கள் பொதுக் கூட்டத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு வலியுறுத்தினார்கள்.

நானும் இங்கு மகிழ்ச்சியோடு வந்து உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக் கின்றேன். அநேகமாக ஒரு முக்கால் மணி நேரம் அல்லது அதிகமாகத் தாண்டினால் ஒரு மணி நேரம் கருத்துகளை எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆனால், அந்த நேரத்திற்குள்ளாக பல்வேறு கொள்கை விளக்கங்களை உங்களுக்குச் சொல்லி விட முடியுமா? என்று சொன்னால் நிச்சயம் முடியாது.

ஆரியர்களின் சூழ்ச்சித் திறன்

ஏனென்றால் இந்த நாட்டில் உண்மை விளக்கம் என்று சொல்லுகின்றபொழுது அது ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, பல நாள்கள் செய்ய வேண்டிய அளவுக்கு இன்றைக்கு மிகப்பெரிய பொய்யுரைகள், புனைந்துரைகள், அவதூறுகள், பழிகள் இவை எல்லாம் இந்த நாட்டிலே திராவிட இனத்தின் மீது ஆரியர்களுடைய சூழ்ச்சித்திறனாலே அவர்கள் கையிலே சிக்கியிருக்கிற ஊடகங்கள் மூலமாகவும், மற்ற பல்வேறு பத்திரிகைகள் வாயிலாகவும், திண்ணைப் பிரச்சாரத்தின் மூலமும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கலைஞரின் தனித்தமிழர் ஆட்சி

ஒரு பலூன் போல அது காட்சியளிக்கிறது. ஊரிலே பலூனைக் கட்டி விளம்பரம் செய்வது போல இன்றைக்குத் திராவிடர் ஆட்சி, கலைஞரு டைய ஆட்சி, தனித்தமிழர் ஆட்சியாக இந்த நாட்டில் அசைக்கமுடியாத அஸ்தி வாரத்தோடு அது அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கக் கூடியவர்கள், எப்படி எல்லாம் இதைப் பற்றி பொய்யுரை பரப்பி, அதன் மூலமாக நாம் வருகின்ற தேர்தலிலே இழந்த பதவியை எப்படியாவது பிடிக்கலாமா? என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏதாவது கருவிகள் கிடைக்காதா? ஏதாவது பிரச்சாரத்திற்கு மூலதனம் கிடைக்காதா? என்று தேடிக் கொண்டிருக்கின்ற நேரத்திலே ஒன்றிரண்டு கிடைக்க முடியும். அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.

சோ இராமசாமி காலம் வரை...

ஆகவே, இராமாயண காலம் தொட்டு - இன்றைக்கு சோ இராமசாமி காலம் வரையிலே மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு செய்தி என்னவென்று சொன்னால், திராவிடர் இனத்தின்மீது ஆரியர்கள் பழிபோட்டு, அவர்களை எப்படியாவது தண்டிக்கக் கூடிய அளவுக்கு ஆக்கி, பிறகு அந்த மக்களே தங்களுடைய தலைவரை இழந்துவிட்டோமே என்ற அறிவுகூட இல்லாமல் காலம், காலமாக இருந்த ஒரு சூழல் - இராமாயண காலத்திலிருந்து - புராண காலத்திலிருந்து - இதிகாச காலத்திலிருந்து இன்றைய காலம் வரையிலே இருந்து கொண்டிருக்கின்றது. இல்லாவிட்டால் தமிழன் தீபாவளி கொண்டாடுவானா? இல்லாவிட்டால் சூரபத்மனை வதம் செய்கிறோம் என்று சொல்லு வானா?

திராவிடர் இனம்

அசுரன் என்று சொன்னாலே அவர்கள் யார்?

திராவிடர் இனம் இந்தியா முழுவதும் பரவி யிருந்த ஓர் இனம். வரலாற்றுப் பெருமை மிகுந்த ஓர் இனம். இந்த மண்ணுக்குரிய இனம். மொகஞ் சதாரோ, ஹரப்பா என்று சொல்லக்கூடிய புதைந்து போன நகரங்களிலே இருந்து மிகப் பெரிய ஆதாரங்களைக் கொண்ட இனம் இது.

இது நாடோடிக் கூட்டமல்ல. பி.ஜே.பி. ஆட் சிக்கு வந்தபொழுது ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அர சியல் வடிவமான அந்த பி.ஜே.பி., அதனுடைய அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? வரலாற்றைக் காவிமயமாக்கித் தலைகீழாகப் புரட்டிப் போட்டார்கள்.

ஆரியர்கள் எல்லாம் இங்கு நிரந்தரமாகக் குடியிருந்தது போலவும், திராவிடர்கள் எல்லாம் இங்கு வந்து குடியேறியதைப் போலவும் அவர்கள் உண்மைக்கு மாறாக சித்திரித்தார்கள்.

காளையை குதிரையாக்கினார்கள்

காளையைப் பிடிப்பது, காளையை அடக்குவது கூட இன்றைக்கு ஜல்லிக்கட்டாக நிகழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். இந்த வட்டாரத்திலே கூட ஜல்லிக்கட்டு நிகழ்வதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் காளை மாட்டைப் பயன்படுத்தி இருக்கின்ற சின்னத்தை அவர்கள் எப்படி மாற்றினார்கள் என்று சொன்னால் நண்பர்களே!

பின்னாலே சொல்லக்கூடிய செய்திக்காக நான் விளக்கிச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.


முரளி மனோகர் ஜோஷி அவர்கள் பா.ஜ.க. ஆட் சியில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த நேரத்திலே வரலாற்றையே தலைகுப்புற புரட்டிப் போட்டார், உண்மைக்கு மாறாக, காளை மாட்டுக்குப் பதிலாக மொகஞ்சதாரோ ஹரப்பா வின் சின்னம் குதிரை என்று மாற்றினார்கள்.

ஆரியர்கள் வரும்பொழுது குதிரையுடன் வந்தார்கள். எனவே ஆரிய புராணங்களிலே குதிரை பூட்டிய ரதம் இருக்கும்.

காவி ஆட்சியை அகற்றி...

ஆரியர்களுடைய யாகங்கள். அசுவமேத யாகங்கள் எல்லாம் குதிரையை வைத்துத்தான் இருக்கும்.


அது புத்திர காமேஷ்டி யாகமாக இருந்தாலும், அசுவமேத யாகமாக இருந்தாலும், அந்த யாகங் களைப் பற்றி விளக்கிச் சொன்னால் தாய்மார்கள் இங்கே அமர்ந்திருக்க முடியாது. அவ்வளவு அநாகரிகம் படைத்த கூட்டம் அந்தக் கூட்டம். ஆகவே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே அவர்கள் குதிரையைப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக வரலாற்றிலே காளை மாட்டுச் சின்னத்தை குதிரையாக மாற்றினார்கள். கொஞ்சம் அசந்து போயிருந்தால் நமது தமிழ்நாடு ஒத்து ழைத்து அன்றைக்கு அந்த காவி ஆட்சியை மத்தியிலே இருந்து அகற்றி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி என்று இன்றைக்கு இரண்டாவது முறை யாகவும், தி.மு.க. உள்பட ஆண்டு கொண்டிருக் கிறார்களோ இந்த ஆட்சி வந்திருக்காவிட்டால் இந்நேரம் எல்லோரையுமே குரங்குகளாக ஆக்கி இருப்பார்கள்.

அனுமார் பரம்பரை...!

நம்மாள்களும் அதற்கு எதிர்ப்பு சொல்ல மாட்டார்கள். ஓகோ! நாமும் அனுமார் பரம்பரை போல இருக்கிறது என்று நினைப்பார்கள். பல இடங்களில் உயர, உயரமாக அனுமார் சிலைகளை வைத்திருக்கின்றார்கள்.

சின்ன குரங்கை வீட்டிற்குள் விட்டாலே ஆபத்து. ஆனால் பெரிய அனுமாரைக் கொண்டு வந்து நாட்டிற்குள் விட்டுவிட்டான். ஆகவே அது ஒரு பண்பாட்டுப் படை எடுப்பினுடைய சின்னம். அவர்கள் ஆஞ்சநேயர் கோயில் என்றுதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதற்காக அவ்வப்பொழுது அந்த பக்தியைக் கொண்டு வந்து விடுவான்.

நம்மாள் புத்தியை இழக்கவேண்டுமானால் இவனுக்கு சரியான மருந்து பக்திதான் என்று அவன் நினைத்து கொடுக்கிறான்.

அதனால்தான் பெரியார் ரொம்பத் தெளிவாகச் சொன்னார். புத்தி வந்தால் பக்தி போகும். பக்தி வந்தால் புத்தி போகும் என்று. அய்யா அவர்கள் எப்பொழுமே எளிமையாகச் சொல்வார்.

ஆஞ்சனேய ஜனன ஜெயந்தி!

மற்றவர்கள் எல்லாம் பல மணி நேரம் சொல்லக் கூடிய விசயத்தை அய்யா அவர்கள் பட்டென்று, டக்கென்று நெற்றியடி மாதிரி, பொறி தட்டுகிற மாதிரி ரொம்ப அழகாக எடுத்துச் சொல்லுவார்.

திடீரென்று ஒரு பண்பாட்டுப் படை எடுப்பை, ஒரு கலாச்சாரப் படை எடுப்பைக் காட்டுவதற்கு, ஆஞ்சனேய ஜனன ஜெயந்தி என்று சொல்லுகின்றான். குரங்கு பிறந்ததை ஜனனம் என்று சொல்லுகின்றான், ஜெயந்தி என்று சொல்லுகின்றான்.

பொறுப்பில்லாமல் சந்தேகத்துடன்...!

இது அறிவு யுகம். பகுத்தறிவு யுகம். அதுவும் 3ஜி தாண்டி, 4ஜி வந்த காலம் இது. இந்த அறிவைப் பயன்படுத்த வேண்டியவன் மூடநம்பிக்கைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்கிறான் என்று சொன்னால், ஆரியம் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் - கட்சிக்கு அப்பாற்பட்ட தமிழர்களே, இந்த இயக்கம் தேவையா? என்று பொறுப்பில்லாமல் இன்னமும் சந்தேகத்துடன் கேட்கக்கூடிய அப்பாவித் தமிழர்களே, அழைத்துச் செல்வதா?

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் - ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த இருபத் தோராம் நூற்றாண்டில் உங்களை குரங்கை கும்பிட வைத்து விட்டார்களே!

அன்றைக்கே மார்க்ஸ் சொன்னார்

குரங்கிலிருந்து தான் மனிதன் வந்திருக்கின்றான். வளர்ச்சி அய்ந்தறிவிலிருந்து ஆறறிவுக்கு முன்னேற்றம்.

இவன் என்ன செய்தான்? அதைத் திருப்பி விட்டான். மனிதன் எல்லாம் குரங்கைக் கும்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

காரல் மார்க்ஸ் ரொம்ப நாளைக்கு முன்னாலேயே, அவர் எழுதிய மூலதனம் என்ற நூலில் எழுதியிருக்கின்றார்.

இந்தியாவைப் பற்றி என்ன எழுதியிருக்கின்றார்? இந்தியாவில் இருக்கின்ற மனிதர்கள் குரங்கைக் கும்பிட்டுக் கொண்டிருப்பார்கள் என்று காரல் மார்க்ஸ் எழுதியிருக்கின்றார்.

இதுதான் நமது பண்பாடுமிக்க பாரத கலாச்சாரம். காரல் மார்க்ஸ் காலத்தில் இருந்ததை மாற்ற வேண்டும் என்று மார்க்சியம் பேசுகிற தோழர்கள் கூட, இதைப் பற்றி பேசுவதில்லை. குரங்கை கும்பிடுகின்ற கூட்டம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று மார்க்சிய நண்பர்கள்கூட தங்களுடைய அரசியல் போக்கைக் கடைப்பிடிக்க வந்து விட்டார்கள்.

எனவே, இதைத் திருத்துவதற்கு ஆள் கிடையாது. எனவே இதை கலாச்சார ரீதியால் ஆனது என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

மூளையைத் தாக்கி செயலிழக்க வைக்கும்

இது ஏதோ ஒரு சின்னம். ஒரு குரங்கு பொம்மையை விற்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். இது மூளையைத் தாக்குகிற மூளைக் காய்ச்சல். மூளையைத் தாக்கிவிட்டால் மூளை பாதிக்கப் பட்ட மனிதன் பயன்படவே மாட்டான். அது மாதிரி இந்த இனத்தினுடைய கலாச்சாரத்தை அழிக்கக் கூடிய வகையிலே அவர்கள் இது போன்ற காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதனால் அசுரன். அசுரன் என்று நம்மையே சொல்ல ஆரம்பித்துவிட்டான். எதிர் கட்சித் தலைவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டுள்ள ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன்.

அசுர குலத்தை அழிக்க வந்த...!

அசுர குலத்தை அழிக்க வந்தவர் என்று போட்டிருந்தார்கள். ரொம்ப மகிழ்ச்சி. இப்படித் தான் நீங்கள் எழுத வேண்டும். இப்படித்தான் நீங்கள் பிரச்சாரத்தை அடிக்கடி செய்ய வேண்டும்.

இப்பொழுது போராட்டமே அசுர குலத்திற்கும், தேவர் குலத்திற்கும் தான் போராட்டம் அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. அசுர குலம் என்றால் என்ன? அசுரன், அசுரன் என்றால் பயந்து கொண்டிருந்தான். பெரியார் வந்த பொழுதுதான் இழுத்துப் பிடித்து நிறுத்தினார்.

அசுரன் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டாயா? என்று கேட்டால் சுராபானமும் சோமபானமும் குடிப்பவர்கள் ஆரியர்கள். வெளியிலிருந்து வந்தவன் சதா குடித்துக் கொண்டிருந்தான். வேதத்தில் பார்த்தால் எனக்கு சுராபானம் கிடைக்காதா? சோம பானம் கிடைக்காதா? என்று இதைத்தான் வேண்டுகோளாக வைத்திருப்பான்.

வேதங்களில் உள்ளது

நல்ல சுராபானத்தைக் கொண்டு வந்து கொடு. இதைத்தான் எழுதியிருப்பான். எதிரிக்கு நோயைக் கொடு. அவனுக்கு மின்னலைக் கொடு. அவனுக்குத் தலைவலியை உண்டாக்கு அவனுக்கு வயிற்று வலியை உண்டாக்கு. யாருக்கு? தஸ்யூக்களுக்கு, கறுப்பர்களுக்கு.

இந்த இனத்தைப் பார்த்து இப்படி சாபம் கொடுத்துவிட்டு, எங்களுக்கு நல்ல சோமபானத்தை வழங்குவாயாக! நல்ல சுராபானத்தைத் தருவாயாக, இதுதான் யஜுர் வேதம், இதுதான் அதர்வண வேதம். இதுதான் எல்லா வேதமும்.

ஆனால் நம்மாள்களுக்கு அது என்ன என்றே தெரியாமல் கும்பிட்டுக் கொண்டிருக்கின்றான். அவர்கள் சொல்லி வைத்து விட்டார்கள். வேதத்தைப் படிக்கக் கூடாது. அதைக் கேட்டால் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று. அது என்ன வேத வாக்கா? வேதத்தை மாற்றவே முடியாது.

அரசியல் சட்டத் திருத்தம்

அரசியல் ஸ்டேட்டசையே மாற்றலாம். 60 வருடத்தில் நூறு தடவை அரசியல் சட்டத்தைத் திருத்தியிருக்கின்றார்கள்.

இவன் வேதவாக்கு! என்று சொல்லி அய்ந்தா யிரம் வருடமாக அப்படியே வைத்திருக்கின்றார் கள். நடைமுறையில் ஏதாவது அறிவுக்கும், வளர்ச்சிக்கும் உகந்த செய்தியா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆகவே அசுரன் என்றால் வேறொன்றுமில்லை. சுராபானத்தைக் குடித்தவன் சுரன். அசுரன் என்றால் குடிக்காதவன் என்று அர்த்தம்.

அசுர குலத்தை அழிக்க...!

அசுர குலத்தை அழிக்க வேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஒழுக்கமாக இருக்கிறவர்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்பதுதான் அதற்குப் பொருள்.

அசுரர்கள் என்றால் திராவிடர்கள். சுராபானத்தை இந்த நாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் யார்? ஆரியர்கள். எனவே இப்பொழுது நடந்து கொண்டிருப்பது வெறும் அரசியல் போராட்ட மல்ல. மாறாக அசுரர்களுக்கும் அதாவது திராவிட இனத்திற்கும், தேவர்கள் என்று நினைக்கக் கூடிய ஆரியக் கூட்டத்திற்கும்தான் இப்பொழுது நடக்கின்ற போராட்டம். இது இனப் போராட்டமாக நிற்கிறது.

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால்...

வெளி உருவத்திலே மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது அதற்கு அரசியல் வர்ணம் தீட்டப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். ஆகவே இந்த தேர்தலில் ஓட்டுப் போடுவது. இந்தக் கட்சிக்கா, அந்த கட்சிக்கா என்பது பிரச்சினையே கிடையாது.

இந்தப் பிரச்சினையா? அந்தப் பிரச்சினையா? என்பது அல்ல. ரொம்பத் தெளிவாக இருக்கக்கூடிய முன் உதாணரம் என்னவென்றால், காலம் காலமாக இருக்கின்ற இந்த மண்ணுக்குரியவர்கள் இந்த நாட்டை ஆளுவதா? அல்லது இந்த மண்ணுக்குச் சம்பந்தமில்லாத ஒரு ஆரிய தத்துவம் - மனுதர் மத்திற்கு இந்த நாட்டிலே உயிர் ஊட்டவேண்டும் என்று நினைக்கின்றார்களே அந்த மனுதர்மத்திற்கு இடம். கொடுப்பது என்பதுதான் மிக முக்கிய மானது.

ஆகவே, திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையிலே ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூக இழிவு ஒழிப்பு, சமுதாயத்திலே அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற சமதர்ம நோக்கு, பெண்ணடிமை ஒழிப்பு அனைவரும் சமத்துவத்தோடும், சுதந்திரத்தோடும் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய கருத்து - இவை அத்தனையையும் உள்ளடக்கியது. தந்தை பெரியாரின் இந்த இயக்கத்தின் கொள்கைகள்.

ஆரியக் கூட்டத்திற்கு விரோதமானது

பிரெஞ்சுப் புரட்சியின் தத்துவத்தைச் சொல்லும் பொழுதுகூட, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று சொல்லுவார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இந்த மூன்றையும் சொல்லுகிறார்கள் பாருங்கள். இந்த மூன்றும் ஆரியத்திற்கு விரோதமானது. ஆரிய தத்துவத்திற்கு, ஆரிய இனத்திற்கு இந்த மூன்றும் விரோதமானது. ஆரியக் கூட்டம் சுதந் திரத்தை விரும்பாது. நான் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளவேண்டும். உன்னுடைய அறிவு என்ன சொல்லுகிறது என்று பார்க்காதே. அறிவைப் பயன்படுத்தினால் அவனை நாத்திகன் என்று சொல்லி முத்திரைக் குத்தி கீழே தள்ளிவிடு. எனவே சொந்தமாக அறிவைப் பயன்படுத்தக் கூடாது.

கேள்வி கேட்டால் - நரகம்!

இது ஆரிய இனத்தின் தத்துவம். திராவிட இனத்தின் தத்துவம் தெரிந்து கொள்ள வேண்டுமா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வள்ளுவரின் குறளைப் பாருங்கள். இதிலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

அறிவு அற்றம் காக்கும், அறிவுதான் மிக முக்கியம் என்று இப்படி திராவிடர்களுடைய சிந்தனை இருக்கிறது.

அறிவைப் பயன்படுத்தாதே. அறிவைப் பயன் படுத்தி நீ கேள்வி கேட்காதே. கேள்வி கேட்டால் நீ போகவேண்டியது ரௌரவாதி நரகம். ஆகவே அறிவைப் பயன்படுத்தாதே என்று சொல்லுவது ஆரிய தத்துவம்.

--------------------தொடரும் -”விடுதலை” 24-2-2011

ஆரிய ஆதிக்கத்தின் மீது கை வைத்தார் கலைஞர் அதனால் ஆரியம் அவரை எதிர்க்கிறது

திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

ஆரிய ஆதிக்கப் பண்பாட்டுப் படை எடுப்பின் மீது கலைஞர் கை வைத்தார். அதனால் ஆரியக் கூட்டம் அவரை எதிர்க்கிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஆரிய தத்துவத்தில்...


எனவே ஆரிய தத்துவத்தில் சுதந்திரம் என்ப தற்கு இடமே இல்லை, சமத்துவம் என்பதற்கு இடம் இல்லை என்று சொல்லக்கூடிய தத்துவம் தான் வர்ணாசிரம தர்மம்.

சகோதரத்துவம் என்பது என்ன? நாம் எல்லோரும் ஓர் நிறை. யாதும் ஊரே யாவரும் கேளிர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், செம்மொழி மாநாட்டுக்குப் பாட்டுமில்லை இது. நீண்ட காலமாக இருந்த திராவிடர்களுடைய வாழ்க்கை முறைப் புத்தாக்கம் கொடுப்பதுதான் திராவிட பாரம்பரியம். தி.மு.க திராவிடப் பாரம் பரியத்தில் வந்த காரணத்தினாலே. பொற்கால ஆட்சி நடத்துகின்ற கலைஞர் இதனைப் புதுப்பிக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டு வருகின்றார் (கைதட்டல்).

எனவே நடப்பது வெறும் அரசியல் ரீதியான போராட்டமல்ல. அதைவிட ஆழமாகப் பார்க்க வேண்டியது என்னவென்று சொன்னால் இது லட்சிய ரீதியானது.

இனத்தின் லட்சியம்


இந்த இனத்தினுடைய லட்சியம் என்னவென்று சொன்னால் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எல்லாருக் கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்ற இந்த வாய்ப் பைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் இந்த இயக்கத்தைத் தொடங்கினார்.

தி.க-தி.மு.க இரட்டைக் குழல் துப்பாக்கி


இது பலவகையில் வளர்ந்து இன்றைக்கு தி.க. தி.மு.க. இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம், அரசியலுக்குப் போன பிற்பாடு பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி அமைத்தார். அவர் தமது ஆட்சியை எப்படிக் கொண்டு சென்றார்?

இது வெறும் பதவிக்கான வாய்ப்பு என்று அண்ணா அவர்கள் கருதவில்லை. இந்த வரலாறு தனியானது. திராவிடர் இயக்கம் என்றாலே அதன் தனித்தன்மை என்ன என்பது பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் அரசியல் பார்வையோடு பார்த்தால் நீங்கள் சரியான பார்வையோடு பார்க்கவில்லை என்ற குற்றத்திற்கு ஆளாவீர்கள்.

நமது கெட்ட வாய்ப்பு


நமது கெட்டவாய்ப்பு அண்ணா அவர்கள் ஓராண்டு-ஒன்றரை ஆண்டு காலம்தான் ஆட்சியில் இருந்தார். ஆனால் அந்த ஓராண்டிலேயே உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவுக்குப் போய் சிகிச்சை பெற்று திரும்பி வந்த நேரத்திலே கூட அண்ணா அவர்கள் பேசும்பொழுது ஓராண்டு சாதனைகளாக முப்பெரும் சாதனைகளை சுட்டிக்காட்டினார்கள்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபொழுது மட்டுமல்ல. அது ஆட்சிக்கு வந்த பிற்பாடுகூட அதனுடைய பார்வை-அதனுடைய இலக்கு- அதனுடைய போக்கு எப்படிப்பட்டது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டுமானால், புரிந்து கொள்ளவேண்டுமானால் அவர்களுக்காகப் பாடம் எடுப்பதைப் போல அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

அண்ணா சொன்னார்


ஒரு மரண சாசனத்தைப் போல அண்ணா அவர்கள் சொன்னார்கள். அந்தச் சாதனைகளை சுட்டிக்காட்டினார்கள். நான் ஆட்சியிலே ஓராண்டு காலம் இருந்தபொழுது செய்த சாதனைகள் ஒன்று என்னுடைய தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினேன்.

இது முதல் செயல். இரண்டாவதாக சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று ஆக்கினேன். (கைதட்டல்). அந்த சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்றால் ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பை முறியடித்து சுயமரியாதைத் திருமணம் ஆரியர்களுடைய கலாச்சாரப்படி மந்திரம், விவாக சுப முகூர்த்தம் இவைகளுக்கெல்லாம் இடமில்லை. வட மொழிக்கு இடமில்லை. தமிழர்கள் யார் வேண்டுமானாலும் மணவிழாவை நடத்தலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் போதுமானது.

பண்பாட்டுப் படை எடுப்பு!


ஒரு மனதாயினர் தோழி
திருமண மக்கள் நன்கு வாழி
என்ற அடிப்படையிலே இரண்டு மனங்கள் இணைந்தால் திருமணம். அவ்வளவுதான் இரண்டு மாலைகளோடு சரி என்று எளிமையாகத் தந்தை பெரியார் அவர்கள் ஆக்கினார். இந்த ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பு எங்கெல்லாம் நுழைந்ததோ - அங்கெல்லாம் தேடித்தேடி அடித்தார் தந்தை பெரியார் அவர்கள்.

அந்த பண்பாட்டுப்படை எடுப்பை முறியடிப்பது தான் சுயமரியாதைத் திருமணம். அது நடந்து பல பத்தாண்டுகள் ஆன நிலையிலே கூட, சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று உயர் நீதிமன்றத்திலே இருந்த இரண்டு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்.

நீதிபதிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அன்று முதல் இன்று வரை என்ன நடக்கிறது? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை திராவிடர் இயக்கக்குடும்பங்கள், சுயமரியாதை இயக்கக் குடும்பங்கள். சட்டப்படி திருமணம் செல்லுபடியானால் என்ன? செல்லுபடி ஆகாவிட்டால் என்ன? உன் சட்டத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அதைக்கொண்டு போய் கண்ணாடிக்குப் பக்கத்தில் போடு, அதே நேரத்திலே எங்களது சுயமரியாதை திருமணம் நடப்பது தொடரும் என்று சொல்லி அதற்குப்பிறகு பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன.

சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும்!


அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று ஆக்கினார்கள்.

மூன்றாவதாக ஆட்சியில் இருமொழிக் கொள்கைதான். உள்ளூரில் நமது பண்பாட்டைக் காப்பதற்குத் தமிழ், உலகத்தோடு தொடர்பு கொள் வதற்கு ஆங்கிலம். இந்த இருமொழி இருந்தாலே போதும். இதற்கு மேல் மூன்றாவது மொழியாக இந்தி தேவையில்லை. கட்டாய இந்திக்கு இடமில்லை என்ற அந்த உணர்வை அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள். இந்த மூன்றும் அவர் ஆட்சியில் இருந்தபொழுது செய்த சாதனைகள். இதனுடைய அடித்தளம் என்ன?

ஆரியப் பண்பாட்டை எதிர்த்தவர்கள்


இதைக் கூர்ந்து நீங்கள் கவனிப்பீர்களேயானால்-இந்த மூன்றும் சுயமரியாதை கருத்துகள்-தந்தை பெரியாரின் கொள்கை லட்சியங்கள்-சமுதாய லட்சியங்கள் ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்த்தவைகள்.

தமிழ்நாடு என்று சொல்லும்பொழுதுதான் அந்த உணர்ச்சி வருகிறது.
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!
என்று சொல்லக்கூடிய கட்டம் ஏன் வந்தது? தமிழன் ஏற்கெனவே தலைகுனிந்து நின்றான். அதனால்தான் தலையை நிமிர்ந்து நில் என்று சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கு வந்தது (கைதட்டல்).

தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயரில்லையே என்று சொன்ன பிற்பாடுதான் அந்த உணர்வு வந்தது.

கலைஞரின் பொற்கால ஆட்சி!


ஆகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த நேரத்திலே கூட ஆட்சிக்காக ஆட்சி அல்ல. லட்சியத்திற்காக ஆட்சி என்பதை எடுத்துக் காட்டி அண்ணா அவர்கள் அதை உருவாக்கி ஒரு நல்ல அடிக்கட்டுமானத்தைப் போட்டார்கள்.

அண்ணா அவர்கள் விட்ட பணிகளை தொடர்ந்து செய்திட நமக்கு ஓர் அற்புதமான தலைவர் கிடைத்தார். அவர்தான் பொற்கால முதல்வராக இருக்கக்கூடிய 87 வயதிலும் இளை ஞரைப் போல் உழைத்துக்கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

அவர் எந்தக் கட்டுமானத்தை உருவாக்கினார்களோ அந்தக் கட்டுமானத்திற்கு மேலே மாளிகைகளை எழுப்பினார். இந்தப் பண்பாட்டுப் படை எடுப்பை எங்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு போனார். ஜாதி இழிவுப்படி சூத்திரனுக்குத் திருமணம் செய்ய உரிமை இல்லை.

எங்களுக்கும் உரிமை உண்டு. நாங்கள் யார் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வோம். சுயமரியாதைத் திருமணம் சட்ட படியாக செல்லும் என்பதை அண்ணா உருவாக் கினார். விரட்டிக்கொண்டே போனார்

பெரியார் கேட்டார். நான் ஜாதி என்கிற பாம்பை எல்லா இடங்களிலும் அடித்துவிட்டேன். அதை ஒவ்வொரு இடமாக விரட்டிக்கொண்டு வந்தேன்.

ஓட்டலில் தனி இடம் என்று இருந்தது. நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களுக்குள்ளேயே தனி தண்ணீர் பானை இருந்தது. இது பார்ப்பனர்களுக்கு சூத்திரர்களுக்கு என்று.

இதை எல்லாம் ஒழித்தாகிவிட்டது. ஆனால் நான் அடித்த பாம்பு இருக்கிறதே-ஜாதிப்பாம்பு வர்ணாசிரம தர்மப் பாம்பு அது எங்கே போய் பாதுகாப்பாக ஒளிந்துகொண்டது தெரியுமா? கோவில் கருவறைக்குள் ஒளிந்து கொண்டது.

கோவில் கருவறைக்குள் ஒளிந்தது


ஏன் கோவில் கருவறைக்குள் ஒளிந்து கொண்டது என்றால்-பெரியார் இங்கு வர மாட்டார். கடவுள் சங்கதி என்றவுடன் இவர் அந்தப்பக்கம் போய்விடுவார். ஏனென்றால் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர் பாருங்கள் என்று நினைத்தார்கள்.

அப்பொழுது தந்தை பெரியார் ரொம்ப அழகாகச் சொன்னார். இல்லை, இல்லை நான் கடவுளை கும்பிடுகிறேனா-இல்லையா? என்பது பிரச்சினை இல்லை. என் தம்பி கும்பிடுகிறான். என் அண்ணன் கும்பிடுகிறான். என் மாமன் கும்பிடுகிறான். என் மைத்துனன் கும்பிடுகின்றான். அவன் முட்டாளாக இருக்கின்றான்.

பக்திப் பிரச்சினை அல்ல-
மனிதனுடைய உரிமைப் பிரச்சினை


அவனுக்குப் பக்தி இருக்கிறது. அவன் கோவிலுக்குப் போனால் அவனை சூத்திரன் என்று சொன்னால் நான் யார்? எங்கள் அம்மா யார்? என்னுடைய தாயையும் அவன் தாசி என்றுதானே சொல்லுகின்றான்? ஆகவே இது இழிவு. இது பக்திப் பிரச்சினை அல்ல. மனிதனுடைய உரிமைப் பிரச்சினை என்று சொல்லி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று உண்டாக்கினார்.

உடனே அடுத்த கட்டம். சுயமரியாதைத் திருமணத்தில் எப்படி அண்ணா புரட்சி செய்தாரோ அதற்கு மேல் கட்டுமானத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் செய்தார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லி கடைசியாக அந்தப் பாம்பு எங்கே போய் ஓடி ஒளிந்ததோ அங்கே போய் அடித்தார்.

கலைஞர் மீது ஆத்திரம்


இன்றைக்கு அவர்களால் அதைப் பார்த்துத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எல்லோரும் வரலாம் என்று சொல்லிவிட்டான். ரொம்ப காலமாக அவன் காப்பாற்றிக்கொண்டிருந்தான். அதில் கை வைத்ததால்தான் இப்பொழுது அவர்களுக்கு கலைஞர் மீது ஆத்திரம்.

ஏன் சுப்பிரமணியசாமிக்கு, ஏன் சோவுக்கு , ஏன் ஜெயலலிதாவுக்கு? ஏன் பார்ப்பன ஊடகங்களுக்கு ஏன் பார்ப்பனத் தொலைக்காட்சிகளுக்கு ஆத்திரம்? அவர்களுக்கு வேறு ஒன்றும் இல்லை.

அவர் சாதனையைவிட அடிமடியில் கைவைத்துவிட்டாரே-பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர் நிலை எங்கேயிருக்கிறது என்று சுட்டிக் காட்டினாரே-பெரியார் அடித்த அடி ஜாதி என்கிற பாம்பு கைத்தடியில் வாங்கிய அடியைப் பார்த்தார்கள். பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளோடு அய்யா அவர்களைப் புதைக்கிறோமே என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்ட மன்றத்திலே தீர்மானத்தை நிறைவேற்றினார் கலைஞர், ஜாதி ஆதிக்கத்தின் தன்மை தீண்டாமை ஒழிப்பின் தன்மை என்ன என்பது எங்களுக்குத் தெரியும்.

பண்பாட்டுப் படை எடுப்பு !


ஏன் இந்த ஆட்சியை பார்ப்பனர்கள் இன்றைக்கு வெறுக்கிறார்கள்? இந்த ஆட்சி மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்று நினைக்கிறார்கள் என்றால் காரணம் இதுதான். இந்தப் பண்பாட்டுப் படை எடுப்பினுடைய ஒரு பகுதியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

-----------------தொடரும் --------------"விடுதலை” 26-2-2011

0 comments: