Search This Blog

7.2.11

சைனா, ஜப்பான் எந்த நாட்டிலாவது விபூதி பூசுகிறானா?


பார்ப்பான் சமுதாய குஷ்டரோகி!


இப்போது நான் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்று வந்தேன். டாக்டர்கள் ஒரு மாதத்திற்கு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஓய்வில் இருக்கும் போது செத்துவிட்டால் என்ன செய்வது? நான் பேச வேண்டியதெல்லாம் என்னாவது என்று கருதி டாக்டர் பேச வேண்டாம் என்று கூறிவந்தாலும் இப்போது ஒரு வாரமாகச் சுற்றி வருகிறேன். வண்டியிலே போகும் போது நெஞ்சுவலித்து உயிர் போனாலும் போச்சு. ஒரு மாத ஓய்வின்போது செத்தாலும் போச்சு. அதனால் தான் இருக்கிற நாள் வரையிலும் பேசித் தீர்த்துவிடுவோம் என்று கிளம்பிவிட்டேன். அப்படி என்ன எனக்கு மட்டும் இந்த ஆத்திரம்? இந்த வேலையை எங்களைத் தவிர வேறு யாரும் செய்ய மாட்டேன் என்கிறானே? பொறுக்கித்தின்னத்தானே எவனுமிருக்கிறான்? நாங்கள் மட்டும்தானே இதைப் பற்றிப் பேசுகிறோம் - புத்தகம் முன்னுரை எழுதுவான்! சினிமாக் கதை எழுதிச் சம்பாதிப்பான்! அவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்தாலும்கூட எழுதுவதில்லை. ஏன்? வயிற்றுப் பிழைப்புக்காகத்தான்! நாங்கள்தான் துணிந்து பச்சையாக உண்மையை எழுதுகிறோம்; பேசுகிறோம்.

திராவிடர் கழகத்திற்கு இரண்டு முக்கியக் கொள்கைகள். முதலாவது சாதி ஒழிப்பு; இரண்டாவதாகத் தமிழ்நாடு சுதந்திரமாக இருத்தல்; சாதி ஒழிய வேண்டும்; இந்த நாட்டில் பார்ப்பான் உண்டு பண்ணிய சாதி பூண்டோடு அழிய வேண்டும். உலகத்திலே எங்குமே இல்லாத சாதி இங்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும்? மனிதன்தான் இங்கு இருக்க வேண்டும்.

அதுபோலவே நாம் இன்னொருவனுக்கு அடிமையாக இருக்கிறோம்; அதுவும் வேறு சாதிக்காரனுக்குப் பார்ப்பானுக்கு - நம்மைத் தொட்டால் தீட்டு என்று கூறி நம்மைக் கீழ்சாதியாக வைத்திருப்பவனுக்குப் புரோகிதப் பார்ப்பானுக்கு அடிமையாக இருக்கிறோம். ஜனநாயகம் என்கிறான். 100 க்கு 97 பேர் அடிமையாக இருப்பதா ஜனநாயகம்?

தமிழர்களாகிய நாமே நம் நாட்டை ஆளவேண்டும். நமக்கு எல்லாவித உரிமையும் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் எங்களைத் தவிர கேட்க யார் முன் வருகிறார்கள்? ஓட்டு வாங்கி ஏய்க்கத்தான் வருவான். நாங்களும் அப்படிப்பட்ட கொள்கையுடையவர்கள் தான் என்று.

தமிழ்நாட்டை அல்லாதவன் இங்கு வந்தால் அவன் மடியைப் பிரித்துப் பார்க்க வேண்டும். உலகத்திலே எங்கும் பார்ப்பான் மேல்சாதி, மற்றவர்கள் கீழ்சாதி என்பது இல்லை. அந்த மாதிரி இங்கும் ஆகவேண்டும். 30, 40 ஆண்டுகளாக நான் இதற்காகப் பாடுபட்டு வருகிறேன்.

பாடுவது நம் திராவிட இனம். மனித சமுதாயம் வாழ்வதற்கு வேண்டிய உணவு உற்பத்தி செய்வது நாம். தங்குவதற்கு வீடு கட்டுவது நாம். மானத்தோடு வாழ ஆடை உண்டாக்குவது நாம். மற்றும் சமுதாயம் நன்மை பெற சிரைப்பது, வெளுப்பது, கக்கூஸ் எடுப்பது போன்ற அவசியமான முக்கிய வேலைகளையெல்லாம் செய்வது நாம். அப்படியிருக்க உணவு உண்டாக்கித்தரும் இனம் இன்று அரை வயிற்றுக்குக் கூட உணவு கிடைக்காது பஞ்சம் பட்டினி என்று இருப்பதேன்?

குடியிருக்க வீடும் இல்லை; கட்டுவதற்குத் துணி இல்லை; அம்மணமாகத் திரியுது. இப்படிச் சமூதாயத்திற்கு முக்கிய தொண்டாற்றும் நாம் கீழ்சாதி. படிக்கக்கூடாது. நமக்குப் பியூன் வேலைதான். உழைக்காது நம் உழைப்பைக் கொண்டு உயர்சாதி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் பார்ப்பான் மட்டுமே படிக்கலாம். உயர்ந்த வேலைகள் பார்க்கலாம் என்றால் என்ன அர்த்தம்? இம்மாதிரி அநியாயம் உலகத்தில் இருக்கலாமா? நீதியா? சிந்திக்க வேண்டாமா இவற்றையெல்லாம்? நம் சமுதாயத்திற்குப் பார்ப்பான் குஷ்டரோகம் போன்றவன் ஆகும். நம்பிள்ளைக்கு 100 க்கு 10, 15, 5 என்றுதான் படித்திருக்கும். ஆனால் அவன் பெண்டு பிள்ளைகள் 100 க்கு 100 படித்து பெரிய உத்தியோகமாகப் பார்ப்பார்கள். பார்ப்பாத்திகள் எல்லோரும் கலைவாணி என ஆகிவிடுவாள். நமக்குத்தான் பஞ்சமாச்சே. எங்கே படிக்க வைக்கிறோம்? மக்களை மாடுமேய்க்கத் தானே அனுப்புகிறோம்?

அதனால்தான் இன்றையதினம் காமராசர் முதலமைச்சராக வந்து 5 லட்சத்து 20 ஆயிரம் பிள்ளைகட்குமேல் ஒரு வேளை சோறு இலவசமாகப் போட்டுப் படிக்க வைக்கிறார். இந்த 5 லட்சத்து 20ஆயிரம் பேரிலே ஒரு பார்ப்பனப்பையன் வீட்டிலேயே பச்சை அரிசி சோறு இருக்கும்போது நான் உன்னிடம் சாப்பிட மாட்டேன் என்கிறான். பார்ப்பான் என்றுமே ஆண்டவன் பரம்பரையினன் அல்ல. பிச்சை எடுத்த பரம்பரையாவான். நாம் ஆண்ட பரம்பரை கன்னியாகுமரி முதல் திருப்பதி வரைக்கும் ஆண்டிருக்கிறோம் நாம்! என்ன இல்லை நம் நாட்டில்? ஏன் தனித்து இயங்கி சுதந்திரமாக வாழ முடியாது? அப்படி ஏதாவது வெளியில் இருந்து கொண்டு வர வேண்டுமென்றால் கடல் இருக்கிறது கொண்டுவர. டில்லியில் இருந்து என்ன கொண்டுவர வேண்டியிருக்கின்றது? 250 கோடிக்குப் பட்டாளம் வைத்திருக்கிறாய்! அப்படியிருக்கும் உன்னை (பாகிஸ்தான்) மிரட்டுகிறான்.

கொஞ்சம் கொஞ்சமாக இடம் எடுத்துக் கொள்கிறான். அதைக் கூடத் தடுக்க முடியவில்லை உன்னால்! எங்களைத் தனித்திருக்கக் கூடாது என்றால் என்ன அர்த்தம்? மலையாளி, கன்னடக்காரன், தெலுங்கன் எங்களை என்ன செய்யமுடியும்? எதற்காகப் பார்ப்பானிடம் டில்லி ஆட்சியிடம் நாங்கள் அடிமையாக இருக்க வேண்டும்? எனவே தான் அடுத்து யூனியன் (இந்தியநாடு) நிலப் படத்தையே தமிழ்நாடு நீங்களாகக் கொளுத்தப் போகிறோம்.

சிலர் கூறுவார்கள். இவன் இதெல்லாம் கூறுகிறான். இருந்தாலும் இவன் காமராசரை காங்கிரசை ஆதரித்தானே என்று. ஆம் காமராசரை ஆதரித்தேன்! ஆட்சியில் நம் உணர்ச்சியுள்ளவர் இருந்தால் நலம் என்பதால் ஆதரித்தேன். நான் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும். மெஜாரிட்டியாக வராது. 75 பேர் வந்தாலும் துரோகிகளைச் சேர்த்துக் கொண்டு மந்திரிசபை அமைத்து விடுவான். எனவேதான் அந்தப்படி ஒரு பார்ப்பான் அல்லது அவனது அடிமை வருவதை விட நம்மினத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர் எதிர்நீச்சல் போடும் தைரியம் உடையவர் வந்தால் நலமாயிருக்கும் என்றுதான் அவரை ஆதரித்தேன்.

சி.ஆர்.(சி.இராசகோபால ஆச்சாரி) அல்லது அவரது அடிமை வந்திருந்தால் நம் நிலை என்னவாகியிருக்கும்? காமராசர் வந்தார். நம்மின மக்களின் கல்வியைப் பாழ் ஆக்கும் குலக் கல்வித் திட்டத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டார். ஆச்சாரியார் மூடிய 5000 ஆரம்பப் பள்ளிகளைத் திறந்ததோடு அல்லாமல் மேலும் 5000 புதிய பள்ளிகளைத் திறந்ததோடு அல்லாமல் மேலும் 5000 புதிய பள்ளிகளைத் திறந்தார். சி.ஆர். ஹைஸ்கூல் தேவையில்லை என்றார். இவர் 1,100 (ஆயிரத்து நூறு) உயர் நிலைப் பள்ளிகளைத் திறந்து சட்டத்தில் இனி ஹைஸ்கூலே தேவையில்லை என்று எழுதும் படியான அளவு செய்தார். இலவசக் கல்வி வசதியுடன் மதியம் சோறும் போட்டு வருகிறார். இருக்கின்ற தலைமைப் பதவிகளில் பாதிக்குமேல் நம்மவர்கள் (தமிழர்கள்) இடம்பெறும்படி செய்தார். இன்னும் இதுபோன்று செய்துவருகிறார். கண்ணீர்த்துளி, கம்யூனிஸ்ட் இவர்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், சூடு, சுரணை, மானம் இருந்தால் காமராசர் ஒழியணும் என்று கூறுவார்களா?

ஒரு மேல் அதிகாரி நம்மவனாக இருந்தால் கீழுள்ள எத்தனை நம் தொழிலாளர்களுக்குப் பயமில்லாமல் இடைஞ்சல் இல்லாமல் வேலை பார்க்கலாம்! மற்ற இராஜ்ஜியங்களில் (மாநிலங்களில்) எல்லாம் ரகளை - நம்பிக்கையில்லாத் தீர்மானம், செருப்பு வீச்சு, கல்லடி, ஊழல் இப்படியாக சந்தி சிரிக்கிறதே! சென்னை இராஜ்ஜியம் ஒன்றுதான் நல்லவிதமாக ரகளை (கலகம்) இல்லாமல் இருந்து வருகிறது. பார்ப்பான் வயிறு வெந்து கிடக்கிறானே தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை அவனால்! ஆரிய ஏடான 'ஆனந்த விகடன்' "சபாஷ் தமிழ்நாடு" என்று புகழ்ந்து கூறி எழுதும் அளவுக்கு நம் சென்னை மாநில ஆட்சி காமராசர் ஆட்சி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்குகிறது. அவனே (ஆனந்த விகடன்) எழுதுகிறான். "இத்தனைச் சிறப்புக்கும் காரணம் திறமையும் நல்ல அனுபவமும் மிக்க சிறந்த முதல் மந்திரியை அடைந்திருப்பதுதான்" என்று.

அடுத்தபடியாக முன்பு திராவிட நாடு கேட்டேன்! இப்போது தமிழ்நாடு கேட்கிறேன் என்பார்கள் நான் தமிழ்நாடு கேட்கிறபோது தமிழர்கள் மெஜாரிட்டியாக (பெரும்பான்மை) இருக்கிறார்கள். மற்றவர்கள் மைனாரிட்டி (சிறுபான்மை) இன்று தெலுங்கன்கள் 31/2 கோடி. நாம் 3 கோடி. இந்த ஒரு நாடே நம்மை மைனாரட்டி ஆக்கிவிடுகிறது. மைசூர் 2 கோடி கன்னடம் 11/2 கோடி; ஆக மொத்தம் (திராவிட நாட்டில்) 63/4 கோடி. நாம் 3 கோடி தான். நம்மைவிட மற்ற மொழியினர் 2 பங்கு அதிகம்; உன்னை முதல் மந்திரியாக வரவிடுவானா? அவன் 600 M.L.A நீ 200 M.L.A தான். யாருக்கு முதல் மந்திரி? அவனுக்குத் தானே வரும்?

புத்தர் ஒருவர்தான் 2000 ஆண்டுகட்கு முன் தோன்றி, "எந்தச் சங்கதியானாலும் சரி, அது யார் சொன்னாலும் சரி, அதை அப்படியே நம்பாதே! உன் புத்தி என்ற உரைகல்லில் தேய்த்துப் பார் ஆராய்ச்சி செய் புத்தி என்ன சொல்லுகிறதோ அதன்படி நட!" என்றார்.

புத்தியை உபயோகப்படுத்துபவன்தான் புத்தன் என்பதாகும். புத்தியை ஆதாரமாகக் கொண்டதால் புத்தன் எனப் பெயர் வந்தது.

இந்த புத்தர்தான் பார்ப்பான் கடவுள் சாதி கோயில்கள் இவையெல்லாவற்றையும் ஒழிக்கப் பாடுபட்டார். இந்தப் பார்ப்பனர்கள் அவரை ஒழித்துக்கட்டி விட்டார்கள். அதற்குப் பிறகு யாருமே அறிவுப் பிரச்சாரம் செய்யவில்லை.

அவதாரம் கடவுள், சாஸ்திரம், புராணம் என்று கூறுபவையெல்லாம் நம்மை அடிமைப்படுத்திப் பார்ப்பானை உயர்த்தவேயாகும்.

விபூதி பூசுகிறார்களே அதனால் என்ன பயன்? சைனா, ஜப்பான் எந்த நாட்டிலாவது பூசுகிறானா? வெள்ளைக்காரன் பூசுகிறானா? நீ மட்டும் ஏன் பூச வேண்டும்? அதைச் சிந்திக்க வேண்டும்.

உலகத்திலே சரிபாதி கிட்டத்தட்ட கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் இருக்கிறார்கள். துலுக்கனும், கிறிஸ்தவனும் கடவுள் உண்டு என்கிறார்கள். அவன் கடவுள் எப்படி உள்ளது? உருவம் இல்லாதது; அன்பானது; அருளானது; அவனுடைய இராஜ்ஜியம் (நாடு) சிறிதாக இருப்பினும் அவனவனே ஆள்கிறான். உலகத்தில் எங்குப் பார்த்தாலும் ஒவ்வொரு நாடும் அதன் மக்களாலேயே ஆளப்படுகிறது. அதை ஜனநாயகம் என்றாலும் பொருந்தும். நீ இங்கு நடப்பது ஜனநாயகம் என்றால் பொருந்துமா? சிந்திக்க வேண்டும். எங்கள் வேலையே அறிவுப் பிரச்சாரம்தான்.

தலையில் கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொள்வது போன்றதுதான் திராவிட நாடு கேட்பது.

(ஏனென்றால் பழைய சென்னை மாகாணம் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடாகா என்று மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டு விட்டது)

நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன். திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பது போல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன் திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுதனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான் பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப்பாடுபடுகிறேன்.



------------------------ சிதம்பரத்தை அடுத்த கண்ணன்குடியில் 31-08-1959 அன்று பெரியார் ஈ.வெ.ரா.சொற்பொழிவு- “விடுதலை” 11-09-1959

0 comments: