Search This Blog

19.2.11

முல்லை பெரியாறு அணைப் பிரச்சினைக்கு எப்பொழுது தீர்வு கிடைக்கும்?


அணை உடையாது - ஆனால்.... தேசியம்?

முல்லை பெரியாறு அணைப் பிரச்சினைக்கு எப்பொழுது தீர்வு கிடைக்கும்? அந்த அணையின் பாசனத்தை நம்பி உயிர் வாழும் விவசாய மக்களின் வாழ்க்கையில் என்றைக்கு வசந்தம் மலரும் என்பது பெருங் கேள்விக் குறியாக இருக்கிறது.

எது எதற்கெல்லாமோ அதிகாரம் செய்யும் உச்சநீதிமன்றம்கூட, தனது தீர்ப்புக்குக் கட்டுப்படாமல் தான் தோன்றித்தனமாக நடந்து வரும் கேரள அரசைப் பணிய வைக்க முடியாதது பரிதாபமே.

142 அடி அளவுக்கு அணையில் தண்ணீரை உயர்த்தலாம் என்ற நீதிமன்ற ஆணை இதற்கு முன்பே இருக்கத்தான் செய்கிறது (27.2.2006). தொழில் நுட்ப வல்லுநர்களின் அறிக்கையும் இதற்குமுன் உள்ளது.

அதிலும் அணை பலமாகவே உள்ளது; 142 அடி தண்ணீரைத் தாராளமாகத் தேக்கலாம் என்று வல்லுநர்கள் கூறித்தான் உள்ளனர்.

இவற்றையெல்லாம் மறந்துவிட்டோ, புறந்தள்ளியோ மறுபடியும் அ னா முதல் பிரச்சினையைத் தொடங்குகிறது என்றால் இதன் பொருள் என்ன? நாட்டில் நீதித்துறை இருக்கிறதா? நிருவாகத்துறை இருக்கிறதா? சட்ட ஆட்சி என்ற முறையின் கெதி என்னவாயிற்று என்ற கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முடக்கும் வண்ணம் கேரள மாநில அரசு தனக்குத் தானே ஒரு சட்டத்தை இயற்றிக் கொண்டுவிட்டது.

கருநாடக மாநில அரசுகூட காவிரி நீர்ப் பிரச்சினை யில் இதே போல ஒரு சட்டத்தை இயற்றியதுண்டு. ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது வேறு விடயம்.

அதற்குப் பிறகும் இது போன்ற ஒரு சட்டத்தை இயற்றிட கேரள மாநில அரசுக்கு எப்படி துணிவு வந்தது? இதுபற்றி உச்சநீதிமன்றம் கடுமையாக நடந்துகொண்டு இருக்க வேண்டாமா?

ஏற்கெனவே நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து, அதன் அறிக்கையைப் பெற்றுக் கொண்ட நிலையில் மறுபடியும் ஓர் அய்வர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்ததானது தனது ஆணையைத் தானே புறந்தள்ளிய விசித்திர நிலை.

இந்த அய்வர் குழுவைப் பற்றியும் கேரள அரசு குறை கூறியிருக்கிறது.

இவ்வளவுக்கும் இந்தக் குழுவில் கேரள மாநில அரசின் சார்பில் உறுப்பினர் ஒருவர் உள்ளார். குழுவின் தலைவரோ உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. இதனையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் கேரள அரசு இல்லை என்பது தெளிவாகி விட்டது.

இப்பொழுது அடுத்த கட்டத்துக்குக் கேரள அரசு தாவி விட்டது. முல்லை பெரியாறு அணையிலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் புதிய அணை ஒன்றை எழுப்புவதற்குத் திட்டமிட்டு விட்டது.

எந்த ஒரு மாநில அரசும் இதுபோன்ற அணையைக் கட்டுவதாக இருந்தாலும், அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்; அதற்கான அனுமதிகளையெல்லாம் பெற வேண்டும் என்ற நடைமுறைகளை கேரள மாநில அரசு பின்பற்றுவதாகத் தெரியவில்லை.

இந்தச் சட்ட விரோதமான செயலுக்கு மத்திய அரசும் துணை போவது வெட்கக் கேடாகும்.


புதிய அணையைக் கட்டுவதற்கு ஆய்வினை மேற்கொள்ள மத்திய அரசின் காட்டு வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதியும் அளித்திருக்கிறது என்றால் - இதனை என்னவென்று சொல்லுவது? வேலியே பயிரை மேயும் ஆபத்தான போக்கு இது அல்லவா!


1895ஆம் ஆண்டில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டதாம். நீர்க் கசிவு ஏற்பட்டு வருகிறதாம். அதனால் அணை உடையும் ஆபத்து இருக்கிறதாம். இடுக்கி மாவட்டம் முழுவதுமே வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு விடுமாம். அம்மாவட்ட மக்களையும் இந்த வகையில் அச்சுறுத்தி வருகிறது கேரள அரசு. சாதாரண தேசியம் அல்ல - சர்வதேசியம் பேசும் மார்க்சிஸ்டுகளின் அரசுதான் பொய்யையும், புனை சுருட்டையும், அவிழ்த்துக் கொட்டி வருகிறது. பக்கத்து மாநில மக்களின் குடிநீர்ப் பிரச்சினையிலும், விவசாயப் பிரச்சினையிலும் மனிதாபிமானமின்றிக் கை வைத்து வருகிறது. அணையின் கசிவு நிமிடத்துக்கு அதிகபட்சமாக 49 லிட்டர் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் 1972 ஆம் ஆண்டில் கேரளாவில் கட்டப்பட்டுள்ள குட்டியாடி அணையின் நீர்க்கசிவு என்ன தெரியுமா? நிமிடத்துக்கு 249.77 லிட்டராகும். 1966ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பம்பா அணையின் நீர்க்கசிவு நிமிடத்துக்கு 96 லிட்டராகும். கேரளாவில் உள்ள இரு அணைகளில் - முல்லை பெரியாறு அணையில் ஏற்படும் நீர்க்கசிவைவிட பல மடங்கு இருந்தும், அவையெல்லாம் பாதுகாப்பானவை என்று கேரள அரசு கூறுவது வல்லடி வழக்கு என்பதல்லாமல் வேறு என்ன?

இதில் மத்திய அரசும், நீதிமன்றமும் நடந்து கொள்ளும் போக்குகள்தான் முக்கியம். ஆனால், அவை சரியாக நடந்துகொள்ளவில்லை என்பது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை. இந்திய தேசியத்துக்கு விபத்து வேறு யாராலும் ஏற்படாது என்பது மட்டும் உண்மை!

------------------- "விடுதலை” 18-2-2011

0 comments: