Search This Blog

5.2.11

நிர்வாணமாகப் படுத்து உறங்கும் எடியூரப்பா -இடையூறப்பா

எடியூரப்பாவா, இடையூறப்பாவா?


எனக்கு எதிராக பில்லி சூனியம் : இப்படியும் எடியூரப்பா அச்சம்

மைசூர் : "முதல்வர் பதவியில் இருந்து என்னை வெளியேற்றும் நோக்கில், பில்லி சூனியம் வைக்கும் முயற்சி இன்னும் தொடர்கிறது' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய பகுதியில் முதல் முறையாக, பா.ஜ.க., ஆட்சியைக் கொண்டு வந்த எடியூரப்பா, 2008இல் முதல்வர் பதவியேற்றார். அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் செய்த "உள்ளடி' வேலைகள் காரணமாக இரண்டு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டு, அதில் வெற்றியும் பெற்றார்.

இருந்தாலும், ஆட்சி கையை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் அவரை விட்டபாடில்லை.கடந்தாண்டு அக்டோபரில், கர்நாடக தலைமை செயலகம் முன், அறுபட்ட நிலையில் உள்ள கோழித் தலைகள் மற்றும் தாறுமாறாக சிதறிக் கிடந்த பூஜைப் பொருள்களாலும் அதிர்ச்சி அடைந்த எடியூரப்பா, "தன்னைக் கொல்ல சதி நடக்கிறது என்றும், எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் எந்த சதிக்கும் நான் பயப்பட மாட்டேன்' என்றும் கூறினார்.

அடிக்கடி கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாராள நிதி உதவியும் செய்து வந்தார். சமீபத்தில் கூட, அவர் காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்தார். தொடர்ந்து, நிலபேரம் தொடர்பான ஊழல் புகாரில் சிக்கியவர், பில்லி, சூனியம் தான் தன் பிரச்சினைகளுக்குக் காரணம் என சொல்லி வருகிறார்.

இந்நிலையில், மைசூரில் உள்ள தும்கூர் பகுதியில், 31.1.2011 அன்று நடந்த திருமண விழாவில் பங்கேற்ற எடியூ ரப்பா, செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்றும் விதமாக, எனக்கு எதிராக தொடர் சதி நடக்கிறது. ஏற்கனவே, ஒருமுறை பில்லி சூனியம் வைத்து, தோற்றுப் போனாலும் மீண் டும், மீண்டும் அதற்கான முயற்சியில் எதிர்க் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், விதான் சவுதா (தலைமைச் செயலகம்) சென்றுவிட்டு, உயிரோடு வீடு திரும்ப முடியும் எனும் உறுதி எனக்கு இல்லை. மாநிலத்தில் உள்ள ஆறு கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள என்னையும், எனது பதவியையும் அவமதிக்கும் விதமாக, கவர்னர் பரத்வாஜ் மேற்கொண்டு வரும் பொய்த் தகவல்கள் பற்றி பிரதமருக்கு விரைவில் கடிதம் ஒன்றும் எழுதுவேன்.என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. பா.ஜ., தலைமை எனக்கு முழு ஆதரவு தரு கிறது. அதனால், கட்சியில் உள்ளவர் களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் நான் சொல்வது, எஞ்சிய இரண்டு ஆண்டு களுக்கும் பா.ஜ., அரசே தொடரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. யாரும் எங்களை ஆட்சியை விட்டு துரத்த முடியாது.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

-------------------(தினமலர் 1.2.2011)

நிர்வாணமாகப் படுத்து உறங்கி
பரிகாரம் காணும் எடியூரப்பா


மைசூர்: அரசியல் எதிரிகள் தனக்கு எதிராக பில்லி சூனியம் வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் அதை பலனிழக்கச் செய்வதற்காக, அமாவாசை இரவில் நிர்வாணமாகப் படுத்து உறங்கி பரிகாரம் செய்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா."முதல்வர் பதவியில் இருந்து என்னை வெளியேற்றும் நோக்கில், பில்லி சூனியம் வைக்கும் முயற்சி தொடர்கிறது' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு அக்டோபரில், கர்நாடக தலைமைச் செயலகம் முன், அறுபட்ட நிலையில் உள்ள கோழித் தலைகள் மற்றும் தாறுமாறாக சிதறிக் கிடந்த பூஜை பொருள்களால் அதிர்ச்சி அடைந்த எடியூரப்பா, "தன்னைக் கொல்ல சதி நடக்கிறது என்று தெரிவித்திருந்தார். நில பேரம் தொடர்பான ஊழல் புகாரில் சிக்கியதற்கும், பில்லி சூனியம் தான் காரணம் என சொல்லி வருகிறார்.கேரளாவில், பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று கழுதையை பலி கொடுத்து, "சத்ரு சம்ஹார பரிகாரம்' செய்தார். சமீபத்தில், காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று ராகு - கேது பரிகார பூஜை நடத்தினார்.

மைசூரில், 31.1.2011 அன்று எடியூரப்பா குறிப்பிடுகையில், "முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்ற தொடர் சதி நடக்கிறது. ஏற்கெனவே, ஒருமுறை பில்லி சூனியம் வைத்து, தோற்றுப் போனாலும் மீண்டும் அதற்கான முயற்சியில் எதிர்க் கட்சியினர் ஈடுபட் டுள்ளனர். இதனால், விதான் சவுதா (தலைமைச் செயலகம்) சென்றுவிட்டு, உயிரோடு வீடு திரும்ப முடியும் என்ற உறுதி எனக்கு இல்லை' என்றார்.

எடியூரப்பாவின் விருச்சிக ராசியில் விரைவில் ராகு பிரவேசிக்க உள்ளதால், இன்னும் கெடுதல்கள் ஏற்படலாம் என்பதால், முதல்வரின் ஆன்மிக ஆலோசகர் பானு பிரகாஷ் சர்மா சில பரிகார உத்திகளை பரிந்துரை செய் துள்ளார். "தை அமாவாசையையொட்டி, மூன்று நாட்கள் இரவில் வெறும் தரையில் ஆடையில்லாமல் படுத்து உறங்க வேண்டும். காலையில், ஆற்றில் நின்ற படி 12 முறை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். மைசூர் சாமுண் டீஸ்வரி கோவிலில் சகஸ்ர சண்டி யாகமும், ஒரு லட்சம் கொழுக்கட்டை களை பிள்ளையாருக்கு படைத்து பூஜை செய்ய வேண்டும். இதன் மூலம், எதிரி களின் பில்லி சூனிய சூழ்ச்சியிலிருந்து காத்துக் கொள்ள முடியும்' என, பானு பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இவரது ஆலோசனையை ஏற்று, தற்போது எடியூரப்பா ஆடை அணி யாமல் தரையில் படுத்து உறங்கி வருகிறார். அடுத்த வாரம் அவர் ஆற்றில் நின்று நிர்வாணமாக சூரிய நமஸ்காரம் செய்யவும் முடிவு செய்துள் ளார். எடியூரப்பாவின் ஷிகாரிபுரா தொகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பரிகார யாகம் நடந்து வருகிறது.கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமைய்யா குறிப்பிடுகை யில், "இது போன்ற மூடநம்பிக்கை களால் முதல்வர் இந்த மாநிலத்தை இருளில் மூழ்கடிக்கிறார்' என்றார்.

--------------------(தினமலர் 2.2.2011)

காளஹஸ்தியில் எடியூரப்பா பரிகார பூஜை


நகரி:கர்நாடக மாநில மக்களின் முழு ஆதரவு இருக்கும் வரை எனது ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கே இடமில்லை என, கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா காளஹஸ்தியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சிக்கு, அங்கு நிலவும் அரசியல் பிரச்சினைகளினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் விதத்தில், பரிகார பூஜை செய்ய அவர் 25.1.2011 அன்று காளஹஸ்தி கோவிலுக்கு வந்தார்.

பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி விமான நிலையம் வந்த எடியூரப்பா, பின், கார் மூலம் பிற்பகல் 3 மணிக்கு காளஹஸ்தி வந்து சேர்ந்தார்.பின், கோவிலில் நடந்த ராகு-கேது தோஷ நிவாரண பரிகார பூஜையில் அவர் கலந்து கொண்டு பூஜை செய்தார். மாலை 3.30 முதல் 4.30 மணி வரை எடியூரப்பா ராகு-கேது பூஜை செய்தார். பின், கோவிலில் வாயுலிங்கேசுவர சுவாமி, ஞானபிர சூணாம்பிகை தாயார் சன்னிதிக்கு சென்றும் தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,"கர்நாடக மாநிலத்தில் ஆட்சி கவிழும் வாய்ப்பில்லை. மாநில கவர்னர் பரத்வாஜ், டில்லியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட் டீலை சந்தித்து புகார் செய்தாலும், பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள், மாநில மக்களின் முழு ஆதரவு எனது ஆட்சிக்கு உள்ளது. தொடர்ந்து எனது பதவிக்காலம் முடியும் வரை ஆட்சியில் இருப்பேன்' என்றார்.பின்னர், திருப்பதி விமான நிலையத்திலிருந்து பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

-----------------------(தினமலர் 26.1.2011)

கோவிலைக் கவனித்தால் தப்புமா முதல்வர் பதவி?


பதவி ஆசை யாரைத்தான் விட்டது... ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து எடியூரப்பா எதிர்கொண்ட சவால்கள், சோதனைகள் தான் எத்தனை... ரெட்டி சகோதரர்கள் பிரச்சினை, அமைச்சர்கள் மீதான பல்வேறு குற்றச்சாற்றுகள் என, பல பக்கங்களிலும் அவருக்கு பிரச்சினை தான்.

போதாக் குறைக்கு, ஆளுநர் பரத்வாஜ் வேறு. எப்படா வாய்ப்பு கிடைக்கும், எடியூரப்பா காலை வாரி-விடலாம் என காத்துக் கொண்டிருக்-கிறார்.

என்னைப் பாடாய்படுத்துகின்றனர் என்று, எடியூரப்பா கண்ணீர் விடத் தயாராக இருக்கிறாரே தவிர, பதவியை விடத் தயாராக இல்லை.

அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்ட, அவருக்கு நெருங்கிய #திடர் ஒருவர், குறைந்தது அய்ந்து கோவில்களையாவது புதுப்பித்து குடமுழுக்குச் செய்தால், முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியும் என, ஆலோசனை கூறியுள்ளார்.

உற்சாகமான எடியூரப்பா, முதலில் தேர்ந்தெடுத்தது, எடியூரில் உள்ள, தொன்மை வாய்ந்த சித்தலிங்கேஸ்வரர் கோவிலைத் தான். ஆனால், அங்கேயும் அவரைப் பிரச்சினை ஒரு பக்தர் வடிவில் பின் தொடர்ந்தது... அது, விஜய-நகரப் பேரரசர்கள் காலத்தில் கட்டப்-பட்ட கோவில் என்பதால், தற்போது அக்கோவில், பாதுகாக்கப்பட்டு வரும் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்-டிருக்கிறதாம், அதனால், அக்-கோவிலைப் புதுப்பிக்கக் கூடாது என்று பக்தர் போட்ட வழக்கில், நீதிமன்றம் தடை உத்தரவு போட்டு உள்ளது.

ஆனாலும், தன் முயற்சியில் தளராத முதல்வர், கி.பி., 12 ஆம் நூற்றாண்டில், உல்சூரில் கட்டப்பட்ட சோமேஸ்வரர் கோவிலைத் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், நம்மூர் காரைக்காலில் உள்ள ஒரு கோவிலுக்கும், 40 லட்ச ரூபாய் நன்கொடை அளிப்பதாக உறுதி அளித்-துள்ளார் எடியூரப்பா-.

-----------------------(தினமலர் 15.9.2010)

இந்திய அரசமைப்புச் சாசனம் எப்படி தொடங்குகிறது?


பாரத தேசத்தை மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு இந்திய மக்களாகிய நாங்கள் உறுதி பூண்டு, இந்திய மக்கள் அனைவருக்கும், சமூக, பொருளாதார, அரசியல் நீதி, எண்ண, எழுத, எடுத்துச் சொல்ல, நம்பிக்கை வைக்க, வழிபாடு செய்ய சுதந்திரம், தரத்திலும், தகுதியிலும், வாய்ப்பிலும், சமத்துவம் ஆகியவற்றை அளிப்பதற்கும், எங்களிடையே தனி மனிதரின் கவுரவம் மற்றும் தேசிய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியளிக்கத்தக்க சகோதரத்துவத்தை வளர்க்கவும் எங்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.

பாகம் 4(ஏ) 51(ஏ) பிரிவு ஏ என்ன கூறுகிறது? விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம் மற்றும் ஆராய்வு, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது, காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று பறைசாற்றுகிறது.

சங்பரிவாரத்தின் அரசியல் முகமான பா.ஜ.க. தேர்தலில் நின்று பதவிப் பொறுப்பு ஏற்கும் போது இந்திய அரசமைப்பு சாசனத்தின் மீது சத்தியம் செய்தே, அதன் சரத்துகளின்படி நடப்பதாக உறுதி கூறுகிறது.

நடப்பில் என்ன? இது மதச் சார்பற்ற தன்மையிலோ, சீர்திருத்த எண்ணத்திலோ, விஞ்ஞான மனப்பான்மையிலோ எந்த அளவுக்கு நம்பிக்கை உடையவர்கள், கண்ணுள்ளவர்கள் அறிவார்கள்; கருத்துள்ளவர்கள் சிந்திப்பார்கள்.

ராம ராஜ்ஜியத்தை அமைப்போம் என்பவர்கள் எப்படி அரசமைப்புச் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள மதச் சார்பற்ற அரசைச் சமைப்பார்களா?

இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்பவர்கள் எப்படி சீர்திருத்த உணர்ச்சி உள்ளவர்களாக இருப்-பார்கள்?

இந்த வகையறாக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு ஓர் அடையாளம்தான் கருநாடக மாநில முதல் அமைச்சரான திருவாளர் எடியூரப்பா.

அவர் முதல் அமைச்சரானவுடன் பிறப்பித்த முதல் உத்தரவே எல்லாக் கோயில்களிலும் தம் பெயரால் அர்ச்சனை நடக்க வேண்டும் என்பதுதான். கடும் எதிர்ப்புப் புயல் கிளர்ந்தெழுந்த காரணத்தால் வாலை சுருட்டிக்கொண்டு பின் வாங்கினார்.

ஒரு வாரத்திற்குள் ஆட்சி கவிழ்ந்தது - அதற்குள்ளேயே ஒரு கல்லில் போய் முட்டிக் கொண்டார்.

இப்பொழுது என்ன நடக்கிறது? அவர்மீது கடுமையான ஊழல் குற்றச் சாற்றுகள்; நேர்மை திறன் இருந்தால், நெஞ்சில் உரம் இருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? ஆ. இராசா போல விசாரணையைச் சந்திக்க வேண்டும் - மாறாக அங்கே என்ன நடக்கிறது? அவர்மீது எப்படி வழக்குத் தொடுக்க ஆளுநர் அனுமதிக்கலாம் என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

தன்மீது பில்லி சூன்யம் வைக்கிறார்கள் தமது அரசியல் எதிரிகள் என்று புலம்புகிறார். விஞ்ஞான ரீதியாக பில்லி சூன்யம் என்றால் என்ன என்று நிரூபிக்க முடியுமா? எதிரியை ஒழிக்க பில்லி சூன்யம் போதும் என்றால் நாட்டில் ஒரு மனிதன்கூட உயிர் வாழ முடியாதே!

தேர்தலில் நின்று போட்டியிட்டு, எதிர் வேட்பாளரை வெற்றி பெற வேண்டிய அவசியம் இருக்காதே!

ஒவ்வொரு கட்சியும் இன்னொரு கட்சியின் தலைவர்களுக்கும் பில்லி சூன்யம் வைத்துத் தீர்த்துக் கட்டி விடலாமே!

ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் சண்டை ஏன்? களங்கள் ஏன்? போர்க்களங்கள் ஏன்? துப்பாக்கி ஏன்? பீரங்கிகள் ஏன்? போர் விமானங்-கள் ஏன்? இதற்காகக் கோடி கோடி-யாக பணத்தை வாரி இறைப்பதேன்? பனிமலையின்மீது இராணுவ உடையணிந்து வீரர்கள் விறைத்துக் கிடப்பானேன்?

பாகிஸ்தானும் சீனாவும் எதிரி என்றால் அந்நாடுகளின் ஆட்சித் தலைவர்கள், இராணுவத் தளபதிகள்மீது பில்லி சூன்யத்தை ஏவி விடுவதுதானே?

இந்த 2011-லும் இது போன்ற குப்பை மனிதர்கள் இருக்கிறார்கள்; அதுவும் முதல் அமைச்சராகக்கூட இருக்கிறார்-கள் என்றால், இந்த வெட்கக்கேட்டை எங்கு போய்ச் சொல்லுவது, எந்தச் சுவரில் போய்தான் முட்டிக் கொள்வது?

எதிரிகள் தனக்குப் பில்லி சூன்யம் வைப்பதால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, பரிகாரம் தேடி அமாவாசை இருளில் நிர்வாணமாகப் படுத்து உறங்குகிறாராம். கேட்பதற்கே அருவருப்பாக இல்லையா? ஒரு நாகரிக உலகத்தில்தான் நாம் வாழ்கிறோமா?

கருநாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமய்யா நறுக்கென்று சொல்லியிருக்கிறார்:

இது போன்ற மூடநம்பிக்கைகளால் முதல்அமைச்சர் இன்று மாநிலத்தை இருளில் மூழ்கடிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

சரி, இவ்வளவுப் பூஜைகள், யாகங்கள் நேர்த்திக் கடன்கள் எல்லாவற்றையும் கிழிக்கிறாரே, இவ்வளவு தூரம் கடவுள் பக்தியால் கசிந்துருகுகிறாரே நடப்பில் யோக்கியராக இருக்கிறாரா?

தாம் யோக்கியமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்கு அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளாரே!

மறைந்த கருநாடக முதல் அமைச்சர் அனுமந்தய்யாவின் நூறாம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (பெங்களூரு தலைமைச் செயலகத்தில்) கலந்து கொண்ட எடியூரப்பா என்ன பேசினார்?

பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம். இதில் நானும் அடக்கம். மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல், தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலை தூக்கிய போதும், பெண் அமைச்சர் ஷோபாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டபோதும் நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது.

தொலைநோக்குப் பார்வை இல்லாமல், சுய நலத்திற்காக அரசியலில் மூழ்கி உள்ளதால் மக்களின் நலனை முழுமையாக மறந்து விடுகிறோம்

-------------------(தினமலர் 14.12.2009). என்று புலம்பினாரே!

கடவுள் பக்தி அவரை யோக்கியமாக வைத்திருக்கவில்லை என்பது அவரின் ஒப்புதல் வாக்குமூலமே ஒப்புக் கொள்கிறதே!

பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச் சொத்து என்று சொன்னாரே, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அதை நினைத்துப் பார்க்கட்டும்!

எந்தத் தவறையும் செய்துவிட்டுப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம், பாவ மன்னிப்பு வாங்கிவிடலாம் என்ற நிலையும், நினைப்பும் இருக்கும் வரை நாட்டில் ஒழுக்கம் நிலைக்குமா? நேர்மை மணக்குமா? ஒருகணம் உள்ளபடியே சிந்தித்தால் போதும்- கடவுள், மத, சம்பிரதாய சீட்டுக் கட்டுகள் கலைந்து போய் விடுமே!

சங்பரிவார்க் கும்பல் என்ற நாசகார அமைப்பு _நாட்டை நாசப்படுத்தும் நச்சுக் கும்பல் _ அது நாட்டை கற் காலத்-துக்குத்தான் அழைத்துச் செல் லும்,. தற்கால மக்கள் சிந்திப்பார்களாக!

(குறிப்பு: ஆதாரங்கள் எல்லாம் தினமலரிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளதற்குக் காரணம் - தினமலர் அதிகாரப் பூர்வமற்ற சங்பரிவார் - பா.ஜ.க.,வின் ஏடாயிற்றே - அதனால் அந்த நம்பகத் தன்மையால் தான்)

---------------- மின்சாரம் அவர்கள் 5-2-2011"விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: