Search This Blog

30.6.14

மதப் பிரசாரம் மூர்க்கத்தனத்தையும் பலாத்காரத்தையும் கொண்டதே-பெரியார்

ஈரோடு நபிகள் பிறந்தநாள் கொண்டாட்டம்


அக்கிராசனாதிபதிகளே! சகோதரர்களே!

இந்த மாதிரியான முக்கிய சந்தர்ப்பத்தில் கூட்டப்பட்ட இப்பெரியக் கூட்டத்தில் என்போன்றவர்களது அபிப்பிராயத்தையும், தெரிவிக்கச் சந்தர்ப்பமளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன் இங்கு பேசிய இருவர்களில் முதலில் பேசிய மௌலானா மௌல்வி அ. க. அப்துல் அமீது சாயபு (பாகவி) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் இதற்குமுன் பலதடவை நம் ஈரோட்டிற்கு வந்திருந்தாலும் குறிப்பாக திரு. காந்திய வர்களும், மௌலானா அசாத் சோபானி அவர்களும் நம் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது மௌலானா அவர்கள், மௌலானா அசாத் சோபானி அவர்களின் உருது உபந்நியாசத்தைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு தமிழ்நாடு முழுவதும் அவர்கள் கூடவே இருந்தவர் என்பது உங்களனை வருக்கும் ஞாபகமிருக்கலாம். அவர்கள் இதுவரை பேசியதிலிருந்து எதையும் எந்த மதத்தையும் சரித்திரத்திலிருந்து தீர்மானிக்கக் கூடாது என்றும், அதன் பலனைக் கொண்டும், அது மக்களுக்கு என்ன நன்மை அளித்தது என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டுமென்றும், மதம் என்பது வெறும் வேஷத்திலில்லையென்றும், அது மக்களின் நன்மைக் காகவே இருக்க வேண்டுமென்றும், அத்தோடு அது எவருக்கும் நம்பிக்கை யில் மாத்திரம் இல்லாமல், பகுத்தறிவிற்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத் திற்கும் ஏற்றதா யிருக்க வேண்டுமென்றும் சொன்னார்கள். இதை நான் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன். மற்றும் உலகத்திலுள்ள மதக்காரர்களெல் லாம் இதை ஒப்புக் கொள்ளும்பட்சம் நாட்டில் மத சம்மந்தமான எவ்வித சண்டையும், அபிப்பிராயபேதமும், பிரிவும் பல மதங்களும் ஏற்பட இடமே இருக்காது. தவிர மௌலானா அவர்கள் இஸ்லாம் மதத்தில் பெண்க ளுக்கும், தீண்டாதார் என்பவர்களுக்குமுள்ள பல சுதந்திரங்களையும், இந்து மதத்தில் அவை இல்லாததையும் எடுத்துச் சொன்னார்கள். அதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும் அதைப் பற்றியே இரு சமூகத்திற்கும் பயன் படுமாறு சில வார்த்தைகள் பின்னால் பொதுவாகச் சொல்லுகிறேன். மதம் என்பது மக்களின் வாழ்க்கைக்கு ஏற்பட்ட கொள்கைகள் என்பதாக எல்லா மத சம்பிரதாயக்காரர்களும் குறிப்பு எழுதி இருக்கிறார்கள்.  (டார்வின் தியரி எவுலூஷன் தியரி) என்பவையான மிருகத் திலிருந்து மனிதன் வந்த ஆராய்ச்சி, மாறுதல் முற்போக்கு ஆகிய கொள்கை களின்படி பார்த்தால் மனிதனுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி இல்லாத காலத்தில் அதாவது மனிதன் எதை எதைக் காண்கின்றானோ, எதை எதை அனுபவிக் கின்றானோ அதன் தத்துவத்தை அறிந்துகொள்ள அறிவில்லாமலிருந்த காலத்திலும்அறிந்தவர்கள் சொல்லுவதை உணர்ந்து கொள்ளப் போதிய ஆற்றலில்லாத காலத்திலும், தோன்றியத் தோற்றங்களைப் பற்றியும் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றியும் திருப்திக்கும், பயத்திற்கும் கட்டுப்பாட்டிற்குமாகப் பல கட்டுக்கதைகள் மூலம் புகுத்தி அவைகளைப் பயத்தின் பேரில் நம்பச் செய்தவைதான் இன்றையக் கடவுள் உணர்ச்சியின் ஆரம்பமும் மதக் கொள்கைகளின் உற்பவமுமாகும். அந்த ஆரம்ப முறைதான் ஒரே விதமாய் உலகமெங்கும் பரவியிருந்ததாகுமென் றாலும் பின்னால் உலகம் மாறுதலாக ஆக அனுபவம் முதிர முதிர கொள்கை களும் உணர்ச்சிகளும் மாற வேண்டியதாயிற்று. அந்த மாறுதல் கொள்கை கள்தான் இன்று நாம் பல மதங்களாகச் சொல்லிக் கொள்ளப்படுபவை களாகும்.


ஹெட்மாஸ்டர் திரு. இராஜகோபாலைய்யர் அவர்கள் சொன்னது போல் ஒரு காலத்தில் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக அநாகரீகர் களாகவும், அறிவில்லாதவர்களாகவும்தான் இருந்திருக்கிறார்கள். அதைப் பார்த்து அவ்வப்போது சீர்திருத்தஞ் செய்ய முயற்சித்தவர்கள்தான் மதத் தலைவர்களானார்கள். அவர்கள் பொதுவாக அந்தக் காலத்தில் அநேக மனிதர்களுக்கு மேற்பட்ட அறிவுடையவர்களாகயிருந்ததாகக் காணப் பட்டதால் அவர்கள் அந்த மக்களால் காலத்திற்கேற்றபடி கடவுள் அவதார மென்றும், கடவுள் புத்திரரென்றும் மற்றும் பலவாறாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் பின்னால் உள்ள ஜனங்களும் தங்களுடைய வழக்கமான மூடத்தனத்தை கொண்டும் மக்கள் மதிக்க வேண்டு மென்கின்ற ஆசையைக் கொண்டும் அப்பெரியார்கள் மீது அமானுஷிகமான கட்டுக் கதைகளைக் கட்டி அநேக “அற்புதங்கள்” செய்தார்கள் என்று பெருமைப்படுத்தி விட்டார்கள். அதனால்தான் இப்போது ஒவ்வொரு மதக்காரரும் தங்கள் தங்கள் மதத் தலைவர்களை மனிதத் தன்மைக்கு மேலாகவே மதித்து மனிதசக்திக்கு மீறினதும், அனுபவத்திற்கு ஒவ்வாததுமான குணங்களை ஏற்றிப் போற்றுகின்றார்கள். என்றாலும் காலமாறுபாட்டிற்குத் தகுந்தபடி பழைய கொள்கைகள் மாற மாற புதிய புதிய மதங்கள் ஏற்பட்டுக் கொண்டு தான் வரும். ஆனால் இனிமேல் தெய்வீகம் பொருந்தியவர்கள் மாத்திரம் ஏற்படமுடியாது.


மிகப் பழைய காலத்தில் அதாவது இந்து மத காலத்தில் கடவுள்களே நேரில் வருவதாகச் சொன்னார்கள். அதற்கடுத்த கிறிஸ்தவ மத காலத்தில் கடவுள் குமாரர் (பிதாமகன்) வந்ததாகச் சொன்னார்கள். மகமதிய மதக் காலத்தில் கடவுளின் தூதர்கள் வந்ததாகச் சொன்னார்கள். இது மாத்திரமல் லாமல் “இனி தூதர்கள் வரமாட்டார்கள்” என்றும் சொன்னார்கள். தெளிவாக இன்னுந் தெரிய வேண்டுமானால் இந்துக்களில் 10 அவதாரங்களுடனும் 12 ஆழ்வார்களுடனும் 4 சமயாச்சாரிகள் உள்பட 64 நாயன்மார்களுடனும் அநேகமாய் அவதாரங்களும், தெய்வீகங்களும் நின்றே விட்டன. எத்த னையோ தடவை எதிர்பார்த்தும் எத்தனையோ பெயர்களைப் பழையபடி பொது ஜனங்கள், அவதாரமென்று கற்பித்தும் ஒன்றும் சிறிதும் பயன் பெறாமலே போய்விட்டது. அதுபோலவே கடவுளைப் பற்றியே தெரியா தென்று சொன்ன பௌத்த “அவதாரமும்” அத்துடனேயே நின்று விட்டது. கிறிஸ்துவ மதத்திலும் கிறிஸ்துவுடனும் அவர்கள் சிஷ்யர்களுடனுமே நின்று விட்டது. அவர் மறுபடியும் வருவார் என்று சொல்லி வெகுகாலமா கியும் இப்போது எதிர்பார்ப்பதே பரிகாசத்திற்கிடமாய் விட்டது. மார்டின் லூதர் முதலியவர்களும் மனிதர்களாகவே பாவிக்கப்பட்டு விட்டார்கள். அதனால் தான் கிறிஸ்து மதத்தில் கட்சிகள் ஏற்பட்டுவிட்டன. இஸ்லாம் மார்க்கத்திலும் மகமத் நபி அவர்களோடேயே நபிகள் தோற்றம் நின்று விட்டது. திரு. மகமது நபி அவர்கள் எல்லாத் தெய்வத்தன்மை பொருந்திய வர்கள் என்பவர்களிலும் பிந்தியவராதலாலும் எல்லோரையும் விட மிக்க பகுத்தறிவும், முன் யோசனையும் அனுபவ ஞானமும் உடையவரான தினாலும் “ இனி உலகில் நபிகள் தோன்றப் போவதே கிடையாது” என்று சொல்லி விட்டார். அவர் இரண்டு காரணத்தால் அப்படி சொல்லியிருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகின்றது; அதாவது ஒரு சமயம் மறுபடியும் யாராவது புறப்பட்டு சில ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தன்னை தேவ அவதாரமென்றும், தெய்வாம்சம் என்றும் சொல்லி பழைய படி மக்களைப் பாழாக்கி விடாமலும் தனது கொள்கைகளை கெடுத்து விடாமலும் இருக்கட்டும் என்று மிக முன் ஜாக்கிரதையாகச் சொல்லி யிருந்தாலுமிருக்கலாம். அல்லது “இனி வரும் காலத்தில் மக்களை அறிவு டையவர்களாக இருப்பார்கள்; இம்மாதிரி ஒருவரை சுலபத்தில் தெய்வத் தன்மை பொருந்தியவர் என்று கருதிவிட இடமிருக்காது” என்று கருதி சொல்லியிருந்தாலுமிருக்கலாம். எப்படியிருந்தாலும் திரு. மகமது நபி அவர் கள் சொன்னது பலித்துவிட்டதுடன் அவரது கொள்கைக்கு மேலானதொரு கொள்கையை இது வரை வேறு எவரும் கொண்டு வந்து அமுலில் நடத்த வில்லை என்பது மாத்திரம் உறுதி. இதுவரைத் தோன்றிய எல்லா புது மதங் களும் கடைசியாக வந்த திரு. மகமது நபி அவர்களது கொள்கைகளுக்குப் பின் போகிறதேயல்லாமல் முன் போகவில்லை. கிறிஸ்தவர்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டுமானாலும் இந்துக்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டு மானாலும் புதியக் கொள்கைகளை திரு. நபி அவர்களிடம் தான் கடன் வாங்கியாக வேண்டும். அவரது கொள்கைகளுக்கு மேல் மக்கள் நலத்திற் குக் கொள்கைகள் வகுப்பதற்கு இப்போதுள்ள எந்த மதஸ்தருக்கும் தைரிய மில்லையென்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. இஸ்லாம் மதக் கொள்கைகளுக்கு மேலாக ஒரு கொள்கை வகுக்க வேண்டுமானால் அது இப்போதைய ருஷிய மதமாகத் தானிருக்க வேண்டும். மற்றபடி அது கூடிய வரையில் மக்களுக்குத் தாராளமாக சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் வீரத்தையும் கொடுத்திருக்கின்றது.

ஆனால் மற்ற மதங்களிலும் அவைகள் இருப்பதாய் சொல்லிக் கொள்ளலாமே தவிர அந்தப்படி கொடுக்கப்படுமாயின் - அமுலுக்கு வருமாயின் அம்மதங்களே மறைந்து போய்விடும்.

இந்து மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் கொள்கைகளில் தலைகீழ் வித்தியாசமிருக்கின்றது.

இந்து மதத்திற்கு அகராதிகளில் “மகமதிய மதத்திற்கு விரோதமான மதம்” என்று ஒரு பெயர் இருக்கின்றது. அதன் கொள்கைகள் பெரும்பாலும் இந்து மதக் கொள்கைகளைத் தான் கண்டித்திருக்கின்றன.

இன்றைய தினமும் இந்திய அரசியலில் இந்துக்களுக்கு மகமதியர் அல்லாதார் என்று தான், அதாவது பார்ப்பனீயத்திற்கு எதிரிடையான மக்க ளுக்கு பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயர் இருப்பதுபோலவே மகமதியர் அல்லாதார் என்கின்ற பெயரே ஏற்பட்டிருக்கின்றது.

இந்து மதம் என்பது உலக மக்களின் ஆதி முதல் நிலைமையாகும். அது இதுவரையில் சிறிது கூட திருந்தவில்லை.

எனக்கு முன் பேசிய எட்மாஸ்டர் திரு. ராஜகோபாலய்யர் அவர்கள் சொன்னது போல் ஒரு காலத்தில் மக்கள் அநாகரீகர்களாய் பகுத்தறிவு இல்லாமல் இருந்த காலத்தில் ஏற்பட்ட கொள்கைகள் என்பதுதான் இன்றைய தினம் இந்து மதத்தின் பேறால் அப்படியே இருக்கின்றன. மத்தியில் பலர் பல விஷயங்கள் சொல்லி இருந்தாலும் அவைகள் புத்தக அளவில்தான் இருக்கின்றன. மற்றபடி கடவுள் விஷயத்தில் பல கோடி கடவுள்களும் - தொட்டதெல்லாம் கடவுளாயும், நினைத்ததெல்லாம் கடவுள்களாயும், தென் பட்டதெல்லாம் கடவுளாயும் இனியும் விளங்குகின்றன. இஸ்லாம் மார்க்கம் சமீப மார்க்கமானதால் அதில் அந்தக் காரியம் மாத்திரம் அதாவது கடவுள் காரியம் வெகு கண்டிப்பாய் இருக்கின்றது. எப்படியெனில் ஒரு கடவுளுக்கு மேல் நினைத்தால் பாவம் என்றும் நினைத்துக் கொண்டிருப்பவனைக் கொன்றால் புண்ணியம் என்கின்றவரை கூடவும் இருப்பதாய் தெரிகின்றது. நிற்க,

இந்துக் கடவுள்கள் உருவத்தை எல்லாம் இஸ்லாமியர்கள் உடைத்து சின்னாபின்னமாக்கப்பட்டதாகவும், ஒரு கையில் வாளையும், மற்றொரு கையில் குரானையும் வைத்து மதப் பிரசாரம் செய்ததாகவும் சொல்லப் படு கின்றது. அது உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம், பொய்யாயிருந்தா லும் இருக்கலாம். ஆனாலும் அது உண்மை யாயிருந்தால் அந்த கொள்கை கொண்ட மகமதிய அரசாங்கம் இதுவரை இந்தியாவில் இருந்திருக்குமாயின் இன்றைய இந்தியாவின் நிலை எவ்வளவோ மேன்மையாய் இருந்திருக்கும். தீண்டாதார்களாக ஆறு கோடியும் பயங்காளிகளும், கோழைகளும் ஒற்று மையற்றவர்களும் சோம்பேறிகளுமாக இருபது கோடியுமுள்ள மக்கள் இன்று கண்டிப்பாய் இந்தியாவில் இருந்திருக்க மாட்டார்கள் என்பது கல்லு போன்ற உறுதி.

குழவிக் கல்லுக்கு கோடி ரூபாய்

ஒரு பக்கம் நமது மக்கள் கஞ்சிக்கில்லாமல் அலையவும் - நாட்டை விட்டு லட்சக்கணக்கான பேர்கள் கஞ்சிக்காக வெளி நாடுகளுக்கு ஓடவும் பார்த்துக் கொண்டே நமது கடவுள்கள் குழவிக் கல்லுகள் அவதாரத்தி லிருந்து கொண்டு இவ்வளவு பெரிய கோவிலுடனும், இத்தனைக் கோடி ரூபாய்கள் நகையுடனும், இத்தனை வேளை பூசையுடனும், இத்தனை தாசி, வேசி, வைப்பாட்டி, பெண்டாட்டிகளுடனும் இருந்து கொண்டு பல்லக்கு, ரதம், தேர், ஆனை, குதிரை, ஆடு, மாடு, மயில், குரங்கு, கழுகு வாகனத்தில் சவாரி செய்து கொண்டு ஊர்வலம் வந்துகொண்டே இருக்குமா? இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அல்லது இவ்வளவு பணம் நமது நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு கொள்ளை போய் கொண்டு இருப்பதற்கு நமது மக்களே அனுகூலமாய் இருப்பார்கள் என்று கருதுகின்றீர்களா?

இந்தியாவானது எத்தனையோ காலத்திற்கு முன் சுயராஜியத்துடன் உலகத்திலுள்ள நாடுகளில் எல்லாம் மேன்மையாக இருந்து கொண்டிருக் கும். ஆகையால் அதைப் பற்றி அதாவது வாள் கொண்டு இஸ்லாம் மதப் பிரசாரம் செய்ததைப் பற்றியும் நமது கோயில்களை இடித்து சாமிகளை ஊனப்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் நான் சிறிதும் வருத்தமடைய வில்லை. அன்றியும் அதுவேதான் அம் மாதிரியாகச் செய்வதுதான் மற்ற எல்லா மதத்தினுடையவும் பிரசார தர்மமாகவும் இருந்திருக்கின்றது. இன்றும் இருக்கின்றது.

எல்லா மதமும் மூர்க்கப் பிரசாரமே

சங்கராச்சாரி மதம் பௌத்த மடங்களில் நெருப்பு வைத்ததும், சைவ மதம் சமணர்களைக் கழுவேற்றினதும், வைணவ மதம் புத்த விக்கிரகங் களை உடைத்து உருக்கினதுமான காரியங்கள் எல்லாம் நினைத்துப் பார்ப் போமானால் அந்தக் காலத்தில் மகமதியர்கள் செய்ததாகச் சொல்லப் படுப வைகள் எதற்கும் இக்காரியங்கள் இளைத்ததல்ல என்று தோன்றும் ஆனாலும் மகமதிய மதம் வாள் கொண்டு பிரசாரம் செய்யப்பட்டதா இல்லையா என்பதில் இன்னமும் தகரார் இருக்கின்றது. மகமதியர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. மற்றபடி அதை தங்கள் எதிரிகளால் தங்கள் மீது கற்பிக்கப்பட்ட ஓர் பழி என்று சொல்லுகின்றார்கள்.

ஆனால் சமணர்களை சைவர்கள் கழுவேற்றியதை சைவர்களே ஒப்புக் கொண்டு தங்களாலேயே எழுதி வைத்து புண்ணிய சரித்திரமாக இன்றும் பிரசாரம் செய்வதுடன் அதன் பெருமையைக் காட்டிக் கொள்ள வருஷந் தோறும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் பல இடங்களில் உற் சவங்கள் நடத்திக் காட்டப்படுகின்றன. அக்கோயில்களில் இன்றும் கழு வேற்றிய காட்சிகள் சித்திர ரூபமாய் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.

அது போலவே வைணவர்களும் புத்த மத விக்கிரகத்தை அழித்த தற்கு ஆதாரமாய் ஸ்ரீரங்கம் கோயில் இருப்பதுடன், அவ்விக்கிரகத்தை திருடி உடைத்த திருமங்கையாழ்வாரின் சரித்திரத்தில் இதையொரு பெரு மையாகவும் எழுதி புண்ணிய சரித்திரமாகப் பாவித்து தினமும் படிக்கப் பட்டும் வருகின்றன. இவைகள் ஒரு புறமிருக்க இன்றைய தினமும் எனக்கு வரும் சில கடிதங்களையும், என்னைப் பற்றி பேசும் பல பேச்சுகளையும் பார்த்தாலும் எனது கொள்கைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் சைவ வைணவர்களின் வார்த்தைகளைப் பார்த்தாலும் அவைகளும் மகமதியர் செய்ததாய்ச் சொல்லப்படும் வாள் பிரசாரத்திற்கு சிறிதும் இளைத்ததல்ல வென்றே தோன்றும்.

கிறிஸ்து நாதர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? சாக்ரட்டீஸ் ஏன் விஷமருந்தச் செய்யப்பட்டார்? மகமது நபி ஏன் மலைக் குகைக்குள் ஒளியப்பட்டார்? என்பவைகளை எல்லாம் கவனித்தால் ஆரம்பகாலம் தொட்டே உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் மதப் பிரசாரங்களின் கதி இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றன என்பது விளங்கும். இவைதவிர இன்றைய தினமும் இந்து மத தர்மத்தில் இருக்கும் தர்மங்கள் அதாவது “நாஸ்திகர்களை நாக்கருக்க வேண்டும், கண்ணைக் குத்த வேண்டும், சித்திர வதை செய்ய வேண்டும், நாட்டை விட்டுத்துறத்த வேண்டும்” என்பன வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கின்றேன்.

மற்றும் இந்து “வேத சாஸ்திரங்களைப் படித்தால் நாக்கருக்க வேண் டும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், பார்த்தால் கண்ணைக் குத்த வேண்டும், மனதில் ஏறிவிட்டால் நெஞ்சைப் பிளக்க வேண்டும்” என்பன வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கிறேன்.

மற்றும் “பெரியோர் வாக்கை புராண இதிகாசங்களை எவன் தர்க்க புத்தியால் விவகாரம் பண்ணுகின்றானோ அவன் நாஸ்திகனாவான். அப்படிப்பட்டவனை அரசன் தண்டிக்க வேண்டும்” என்பனவாகிய வெல் லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?

மற்றும் நந்தன் நெருப்பில் பொசுக்கப்பட்டது போன்ற கதைகள் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?

ஆகவே உலகில் மதப் பிரசாரம் என்பதே மூர்க்கத்தனத்தையும் பலாத்காரத்தையும் கொண்டதே யொழிய அனுபவத்தில் அன்புமயமான மதம் உலகில் ஒன்றுமே இல்லை என்றே சொல்லுவேன்.

இந்து வேதத்தை எடுத்துக் கொண்டாலும் அந்தக் காலத்திய வேத மதக்காரர்களுக்கு தங்கள் எதிர் மார்க்கக்காரர்களை அடிக்கவும், கொல்லவும் செய்வதும், அப்படிச் செய்ய சக்தி இல்லாவிட்டால் அவர்களைக் கொல்ல வேண்டும் அழிக்க வேண்டும் என்று தங்களது கடவுள்களைத் தோத்திரம் பண்ணுவதுமான காரியங்கள் நிறையப் பார்க்கலாம்.

ஆகவே எப்பொழுதும் மத விஷயத்தில் கையிலானவர்கள் எல்லாம் பலாத்காரத்திலும் கையிலாகாதவர்கள் எல்லாம் கடவுளை வேண்டியும் சாபம் கொடுத்தும்தான் இருக்கிறார்கள். தவிர இந்து மதத்தில் உள்ள தீண்டாமையும், பெண் அடிமையும் சிறிதும் மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உலகமே சொல்லுகின்றது.

எல்லாருக்குமே அவமானம்

மனிதனை மனிதன் தொடக் கூடாது, பார்க்கக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்பதானது அந்த மத மக்களுக்கு மாத்திர மல்லாமல் உலக மக்களுக்கே அவமான காரியம் என்று தான் சொல்லுவேன். அதோடு அந்த மதத்தை ஏற்படுத்தினதாகச் சொல்லப்படும் தெய்வத்திற்கும், தெய்வீகத் தன்மைக்கும் மிக மிக இழிவு என்றும் சொல்லுவேன். இந்து மதத்தில் ஒவ்வொருவனும் மற்றவனைக் கீழ் ஜாதியான் என்று சொல்லிக் கொள்வதில் உள்ள ஆணவத்தை அனுபவிக்கின்றானேயல்லாமல் தான் மற்றொரு ஜாதிக்கு கீழ் ஜாதியாய் இருக்கின்றோமே என்கின்ற இழிவை உணரும் உணர்ச்சியே கிடையாது. பொதுவாக இந்துக்களுக்கே சுய மரியாதை கிடையாது என்று சொல்லுபவர்களுக்கு இந்த ஒரு காரியமே போதுமான ஆதாரமாகும்.

அன்றியும் இந்து என்ற ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவன் கீழ் ஜாதியாக மதித்து இழிவு படுத்துவதையும் மனித உரிமை தடுக்கப்பட்டி ருப்பதையும் ஈனமான அர்த்தம் கொண்ட சூத்திரன் என்ற பேரால் குறிக்கப் பட்டிருப்பதையும் கண்டு சிறிதும் வெட்கப்படுவதில்லை. யாராவது ஒருவர் இருவர் வெட்கப்படுவதாய் பாசாங்கு செய்தாலும் காரியத்தில் உதைத்த காலுக்கு முத்தம் வைப்பதுபோல் அந்தப்படி தன்னை இழிவு படுத்துவதற்கு அஸ்திவாரமாகவும், ஆஸ்பதமாக ஏற்படுத்தப் பட்டிருக்கும் மதத்தையும் கடவுளையும் போற்றுகின்றான். காக்கப் பாடுபடுகிறான். இப்படிப்பட்ட வர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. எவ்வளவோ அபிலாசைகளையும், பெருமைகளையும், கீர்த்திகளையும் ஆசைப்படுகின்ற மனிதன்தான் ஏன் கீழ் ஜாதியாய் மதிக்கப்படுகிறான். தன்னை ஏன் சமூக வாழ்வில் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றிய கவலையே இல்லாமலிருக்கின்றான். தன்னுடைய சொந்த இழிவை யும், கொடுமையையும் நீக்கிக் கொள்ளக் கவலையும் முயற்சியும் ஆற்றலும் இல்லாத மனிதன் மற்றவர்களுக்கு சுதந்திரம் வாங்கித் தருகிறேன் சுய மரியாதை உண்டாக்கித் தருகிறேன் என்றால் அதில் ஏதாவது நாணயமோ பொருளோ இருக்க முடியுமா? இஸ்லாமிய மதத்தைப் பற்றி மக்கள் அசூசைப் படலாம், பெறாமைப்படலாம், அவர்களைப் பற்றி இழிவாய் நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆனால் காரியத்தில் அவர்கள் எந்த விதத் திலும் நம்மை விட இளைத்தவர்கள் அல்லாமலும் அநேக விதத்தில் மேலானவர்களாகவுமே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் மதக் கொள்கைகளேயாகும். அதாவது சமத்துவமும், சகோதரத்துவமுமாகும். அந்த இரண்டும் இந்துக்களிடம் சுத்த சுத்தமாய்க் கிடையாது. ஒரு மகமதியச் சிறுவனை ஒரு இந்து பெரியவன் அடித்தால் அந்த ஊர் மகமதியர் எல்லோ ரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள். ஆனால் ஒரு இந்து பெரியவனை ஒரு மகமதிய சிறுவன் அடித்தால் ஒரு இந்துவும் திரும்பிப் பாரான். முதலில் அடிபடுகிறவன் என்ன ஜாதி, என்ன வகுப்பு என்று தன் பக்கத்தில் இருக்கும் இந்து கவனிப்பான். பிறகு நமக்கு என்ன அவன் எப்படியோ போகட்டும் என்பான். மற்றும் தனது சினேகிதர்களையும், இதரர்களையும், குழந்தை களையும் ஊர் வம்புக்கு ஏன் போகிறீர்கள் என்று சொல்லி வீட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கதவைச் சாத்துவான். இந்த குணம் தான் இந்துவுக்கு இந்து மதம் கற்பிக்கின்றது. ஆகவே மதக் கொள்கைகளின் உயர்வு, தாழ்வு களை பலனில் இருந்து பார்த்தறிகின்றதா? அல்லது நாமே எழுதிவைத்துக் கொண்டதிலிருந்து அறிகின்றதா?

இஸ்லாமிய மதம் மதிக்கப்படுவது போல் இந்து மதம் உலக மக் களால் மதிக்கப்படுகின்றதா? ஏன் நமது யோக்கியதை அப்படி இருக்கிறது? இந்துக்களில் 100-க்கு 90 பேர் வேதத்தில் சூத்திரர், சாஸ்திரத்தில் சூத்திரர், புராணத்தில் சூத்திரர், சட்டத்தில் சூத்திரர், தர்மத்தில் சூத்திரர், பழக்கத்தில் சூத்திரர், வழக்கத்தில் சூத்திரர் என்று சொல்லப்படுவர்களாய் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இனி எதில் சூத்திரராக இருக்க வேண்டியது பாக்கி இருக்கின்றது என்பது நமக்குப் புரியவில்லை. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல் இந்த யோக்கியதை உள்ள மக்கள் பெரிய விஷயங் களில் ஆசைப்படுவதில் என்ன பிரயோஜனம்? அது போலவே இந்து மதத் தில் இந்துப் பெண்களின் நிலை என்ன என்று பாருங்கள். ஒரு “வேசி”க்கு இருக்கும் சுதந்திரமும், சுயமரியாதையும், சுகமும் கூட நமது “பெண் தெய்வங்களுக்கு” இல்லை. சொத்தில்லை, படிப்பு இல்லை, விவாக சுதந்திர மில்லை, விதவை ஆகி விட்டால் மறுமண மில்லை. இதற்கு என்ன பெயர் சொல்லுவதென்று எனக்குத் தெரியவில்லை.

உயிருடன் கட்டையில் வைத்து எரிப்பதை நிறுத்தியதே அவர் களுக்கு பெரிய உபகாரம் செய்ததாய் கருதப்படுகின்றது. ஆனால் அதுவும் இப்போது அவர்களுக்கு பெரிய அபகாரமாய் முடிந்திருக்கிறது. இம்மாதிரி கொள்கைகளுடன் உலக மக்கள் முன்னால் நாமும் நம்மை எப்படி மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்? உயர்ந்த மதம் என்றால் மேலான சமூக மென்றால் உயர்ந்த கொள்கைகளும் மேன்மையான தன்மைகளும் இருக்க வேண்டும். அதில்லாமல் காட்டிமிறாண்டி நிலையில் இருந்து கொண்டு அதைத் தெய்வீகத் தன்மை பொருந்திய சடங்கு என்று சொல்லிக் கொள்வதால் உலகத்தை ஏமாற்றி விட முடியுமா? தவிர இந்த சமயத்தில் இஸ்லாமானவர்களுக்கும் சிறிது சொல்லவேண்டியிருக்கிறது. அவர்களது பழக்க வழக்கங்களிலும் இந்துக்களில் இருப்பது போலவே பல கெடுதல்கள் இருக்கின்றது. இந்துக் கோயில்களில் தப்புக் கொட்டுவது போலவும் இந்து சாமிகள் உற்சவம் செய்வது போலவும் வேஷம் முதலிய ஆபாசங்கள் இருக்கின்றன. சில இடங்களில் புரோகிதர்கள் ஆதிக்கமும் இருக்கின்றது. இதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? வேண்டுமானால் “அவைகள் எங்கள் மார்க்க கொள்கைகள் அல்ல” என்றும் “சாவகாச தோஷத்தினால் மத்தியில் வந்து புகுந்த தவறுதல்கள்” என்றும் சொல்லலாம். அது போதிய சமாதானமாகுமா? எப்படியாவது அவைகளை எல்லாம் ஒழித்தாக வேண்டும். முஸ்லீம் பணக்காரர்களும் “இந்தப் பணமெல்லாம் ஆண்டவன் நமக்குக் கொடுத்தான்; ஆதலால் நமக்கு மோக்ஷம் தேடிக் கொள்ள நாம் யாத்திரைக்கும் நேர்ச்சைக்கும் சிலவு செய்தால் போதும்” என்று இந்துக்களைப் போலவே சுயநலக்காரர்களாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஒரு முஸ்லீம் பணக்காரன் ஒரு முஸ்லீமாவது பட்டினியாகவும் தொழில் இல்லாமலும் படிப்பு இல்லாமலும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்றே சொல்லுவேன். அதுதான் யோக்கியமான பணக்காரனின் லக்ஷியமாகும். இந்தக் குணங்கள் இல்லாத பணக்காரன் கொள்ளைக்காரனுக்கு சமானமானவனே யாவான்.

தவிரவும் பணக்கார முஸ்லீம்களும் பொது ஜன சேவைக்காரர்களும் “தங்கள் மதம் உயர்ந்த மதம்” என்று சொல்லிக் கொண்டிருப்பதால் மாத்திரம் போதாது. கஷ்டப்படுகின்ற இழிவு படுத்தப்பட்ட மக்களைத் தங்கள் மார்க்கத்தில் சேர்த்து அவர்களை மேன்மைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். தாங்கள் அனுபவிக்கும் சமத்துவ இன்பத்தையும், சகோதர இன்பத்தையும் மற்றவையில்லாத - கஷ்டப்படுகின்ற மக்கள் யாவரும் அனுபவிக்கும் படி பார்க்க வேண்டும். “யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும்” என்கின்ற கொள்கை ஒவ்வொரு யோக்கியமான மனித னுக்கும் தலையாயதாகும்.

அதை விட்டவர்கள் சுயநலக்காரர்களேயாவார்கள்.

ஆகவே சகோதரர்களே! இந்த சமயத்தில் எனக்கு அளித்த சந்தர்ப் பத்தில் என் அபிப்பிராயம் என்கின்ற முறையில் ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன். நீங்கள் தயவு செய்து அவற்றை நன்றாய் யோசித்துத் தங்களுக் குச் சரி என்று பட்டதை எடுத்துக் கொண்டு மற்றதை தயவுசெய்து தள்ளி விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதோடு உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்.


         ------------------------------------ ஈரோடு முனிசபல் எலிமெண்டரி பாடசாலையில் நடந்த திரு. நபி அவர்கள் பிறந்த நாள் விழாவிலும் சத்தியமங்கலம் விழாவின் தலைவர் முடிவுரையிலும் பெரியார் அவர்கள்பேசியது.-”குடி அரசு” - சொற்பொழிவு - 24.08.1930

சங்ககாலம் பொற்காலமா?

சங்ககாலம் பொற்காலமா?

பெண்ணடிமை - மூடநம்பிக்கை - வர்ணபேதம்-ஆரியத் தாக்கம்


சிறப்பிழந்த சேரமன்னர்கள்

சேரமன்னர்கள் பார்ப்பனியத்தில் ஊறித் திளைத்தனர். பார்ப்பனர்களுக்குத் தானங்களை வாரி இறைத்தனர். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை தனக்குப் பிள்ளை இல்லை என்பதற்காக மகப்பேறு வேள்வி (புத்ரகாமேஷ்டி யாகம்) நடத்தி பிள்ளை பெற்றானாம். (பதிற்றுப்பத்து_74)

சொக்கிப்போன சோழ மன்னர்கள்!

சோழர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? கரிகால் சோழன் வேள்வித்தூண் (யூபம்) எழுப்பி வேள்வி முடித்தான். இராசசூயம் யாகம் நடத்தி இராசசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி என இவன் அழைக்கப்பட்டான்.

பறைசாற்றப் பெற்ற பார்ப்பனத் திமிர்

ஒரு பார்ப்பனப் புலவன், சோழ இளவரசன் ஒருவனோடு சூதாடும் அளவுக்கு மிக நெருக்கமாக இருந்தான். சூதாடும்போது சினம் கொண்டு சூதாடு கருவியினை இளவரசன் வீசியதால் வெகுண்ட பார்ப்பனப் புலவன் இளவரசனைப் பார்த்து, நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் (புறம்: 43: 14) என எச்சரித்துள்ளான். புலவன் என்பதைவிட, பார்ப்பனன் என்னும் வர்ணதர்மச் சிறப்பையே அவன் பெரிதாகக் கருதியுள்ளான். இது, ஆரிய_பார்ப்பன மேலாண்மையை எடுத்துக் காட்டுகிறதல்லவா? பார்ப்பன மேலாண்மை பறைசாற்றப்பட்ட சங்ககாலம் தமிழர்களின் பொற்காலம் ஆகுமா?

பணிந்துபோன பாண்டியர்கள்

பாண்டியர்கள் மட்டும் இளைத்தவர்களா என்ன? பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன், வேள்வி செய்வதில் மிகப் புகழ்பெற்ற புரோகிதப் பார்ப்பனர்களைக் கொண்டு வேள்விகள் பல செய்து பார்ப்பனப் பணியாளராக, இருந்துள்ளார். இதனால்தான் இவனுக்கு இந்த அடைமொழியைச் சங்கப் புலவர்கள் வழங்கியுள்ளனர்.
பல்யாக சாலை அமைத்து வேள்வி நடத்தப்பெற்ற காலம் தமிழர்களின் பொற்காலமா? யாருக்குப் பொற்காலம்? தமிழர்களுக்கா? இல்லை! பார்ப்பனர்களுக்கா? எண்ணிப்பார்த்தல் வேண்டும்!

தொழப்பட்டு வந்த தொன்ம (புராண)க் கடவுள்கள்

இந்து புராண இதிகாசங்களில் வரும் கடவுள்களைச் சங்ககாலத் தமிழர் தொழுது வந்தனர். அவர்களுள், சிவன் ஒருவன். ஆரியப் புராணங்களில் சொல்லப்பட்ட முக்கண்ணன். (அகம்: 181, கலி.2; 104; புறம்-_6.) முப்புரம் எரித்தவன்_(கலி_23, 26, 156; பரிபாடல்_522) உமையொருபாகன் _ (கலி_38; புறம்_17; பதிற்றுப்பத்து_1) நீலகண்டன்(நீலமணிமிடற்றொருவன் _ கலி_142; பரிபாலை, 8,9; புறம்: 55, 56, 57) இவை சிவனைப் பற்றியவை.
முருகன்: கந்தபுராணக் கருத்தில் ஆறுகார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் அறுவர் பயந்த ஆறு அமர் செல்வன் _ (முருகு: 25)
திருமால்: பாம்பணையான் (கலி_105, 123; பரி_13) திருமகள் கணவன் _ (பரிபா_3; கலி.104; பரிபா_18;2, பெரும்பாண்: 29)
திருமாலின் 10 அவதாரங்களில் மச்சம், கல்கி இரண்டும் நீங்கலாக 8 அவதாரக் கதைகள் கூறப்பட்டுள்ளன. கூர்மாவதாரம்_பரிபாடல்_3; வராக அவதாரம்_பரி_2,3,4,13; நரசிம்மாவதாரம்_பரி_4. பலராமாவதாரம்_நற்றி_32 புறம்_56, கலி_26, 105; வாமனாவதாரம்_கலி_124; பரி_3, முல்லைப்பாட்டு_1; பெரும்பாண்:29) பரசுராமாவதாரம்_அகம்_220; இராமாவதாரம்_புறம்_328; கிருஷ்ணாவதாரம்_அகம்_39; கலி_103; பரி_3, 134; புறம்_174; 201; மதுரைக்காஞ்சி_558; மேற்கண்ட ஆரியக் கடவுளை வணங்கிய காலம் பொற்காலமா?
பகுதி (4) நுண்ணிய நோக்கில் பெண்ணியக் கருத்துகள்

யாருக்கு யார் உயிர்?

ஆடவர்களுக்கு வினைபுரிதல் உயிர்; ஆனால், ஒளிபொருந்திய நெற்றியையுடைய இல்லத்திலேயே இருக்கும் பெண்டிருக்கு _ ஆடவர்தாம் உயிர்! என்ற பொருளில் அமைந்த சங்கப் பாடல் இது:

வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே! (குறுந்தொகை: 135) இந்தப் பாடல் வழி நாம் அறிவது யாது? ஆடவன் வெளியே சென்று அலுவல் பார்த்தல் வேண்டும். பெண் வீட்டைவிட்டு வெளிச் செல்லாது இல்லத்திலேயே இருத்தல் வேண்டும். அவளுக்கு உயிர் ஆடவன்; அதாவது கணவன்!. இதுதான் சங்ககாலப் பெண்ணின் நிலை! இன்னொரு கருத்து: தன் கணவன் சான்றோர் இகழும்படியாக ஒழுக்கக் கேடனாக இருப்பினும், தகைசான்ற ஒரு பெண் தன் கணவனைப் போற்றிப் புகழ்வதுதான் சால்புடையதாகும் என்னும் பொருள்பட, தகவுடை மங்கையர் சான்றாண்மை, சான்றோர் இகழினும் கேள்வனை ஏத்தி! _ (பரிபாடல்: 88_89) என்னும் சங்கப் பாடலின் உட்பொருள் எவருக்கும் விளங்காமல் போகாது! சங்ககால மங்கையின் பெருமை இதுதானா? இவ்வன்மை இருந்த காலம் பொன்னான காலமா? பெண்ணடிமைத்தனத்தின் நிலையினை இதிலிருந்து நாம் அறிகிறோம் அல்லவா?

ஒன்று உடன்கட்டை, இன்றேல் தலைமொட்டை:

மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால், மனைவிக்கு இந்த உரிமை கிடையாது! இதைவிட ஒரு கொடுமை: கணவன் இறந்தால் மனைவி அவனோடு சிதையில் படுத்து உயிர்விட வேண்டும். பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும் பெண்டு இறந்த கணவன் சிதையில் தீப்பாய்ந்த கொடுமையினைப் புறநானூறு _(216) புகல்கிறது! புகழ்கிறது.
உடன்கட்டை ஏறி உயிர் துறக்காவிட்டால் கணவனை இழந்த மனைவி கொடிய கைம்பெண் (விதவை) ஆகவேண்டும். அதாவது, கைம்மை நோன்பு ஏற்க வேண்டுமாம்!

என்ன கொடுமை! எத்தனைக் கொடுமை!!

கைம்பெண்ணான பெண்ணின் தலையை முழுதும் மழித்து மொட்டைத் தலையாக்குவர். கொய்ம்மொழித் தலையொடு கைம்மையுற _(புறம்: 261:17) கைவளையல்கள் உடைத்து நொறுக்கப்பட்டது. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி (புறம்_250;4) (தொடி_வளையல்).


இச்செயல்களால் அந்தப் பெண்ணின் அழகு குலைக்கப்பட்டது; கலைக்கப்பட்டது. கைம்பெண்டிர் பாயில் படுத்து உறங்கக் கூடாது; பருக்கைக் கற்களில் படுத்துறங்க வேண்டும்; பரல்பெய் பள்ளி பாயின்றி வதியும். வெள்ளரி விதை போன்ற சத்தற்ற நீர்ச்சோறு; எள் துவையல்; புளி சேர்த்துச் சமைத்த வேளைக் கீரை; இவைதான் அவர்கட்குரிய உணவு, உறைவிடம் (புறநானூறு: 246) இந்தச் சங்ககாலம்தான் தங்க காலமாம்!
பகுதி (5) படம் பிடித்துக் காட்டப்படும் பரத்தமை ஒழுக்கம்
இப்படியா பெண்மையை இழிவுப்படுத்துவது?
பரத்தமை ஒழுக்கம் ஒரு தொழிலாகவும், பரத்தையிடம் தங்க, தலைவியை விட்டுப் பிரிதல் ஒரு துறையாகவும், அதுவே தலைவனின் ஒரு பண்பாகவும் இருந்து வந்துள்ளது.

யாரோ? இவர் யாரோ?

பரத்தையர் என்பவர் பொதுமகளிர் எனப்பட்டனர்; வள்ளுவர் இவர்களை வரைவின் மகளிர் எனக் கூறுகிறார். பரத்தையருள், ஒரு தலைவன் மட்டுமே சென்று சிற்றின்பம் நிலையிலுள்ளவர் இல்பரத்தையர் எனப்பட்டனர். (மதுரைக்காஞ்சி: 340, 359, 379, 382) இந்தக் காலத்தில் இவர்கள் சின்னவீடு என்றும் வைப்பாட்டி (Keeper) எனவும் அழைக்கப்படுவர். சேரிப்பரத்தையர் தம்மிடம் இன்பம் துய்க்கவரும் ஆடவரிடமிருந்து செல்வம் பெற்று வாழ்ந்தனர். இவர்கள் கொண்டி மகளிர் எனவும் அழைக்கப்பட்டனர். ஆற்றுநிலப் பகுதிகளில் எல்லாம் பரத்தையர் வாழ்ந்தனர். ஆற்றங்கரை நகரங்களில் அவர்தம் எண்ணிக்கை மிகுதி.

மருதத் திணையின் மதிப்புமிகு உரிப்பொருள்:

மருதத் திணையின் உரிப்பொருளாக உள்ளது. ஊடல் _ ஊடல் நிமித்தம் (வாயில்) தலைவன், தலைவியை நீங்கி பரத்தையிடம் சென்று அவளை நுகர்ந்து வீடு திரும்பும் போக்கினையே காரணமாகக் கொண்டு ஊடுதல் (பிணங்குதல்) தலைவியின் வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. இதுபற்றி, கூச்சமோ நாணமோ எவரும் பட்டதாகத் தெரியவில்லை. இச்செய்திகளையே சங்க அகப்பொருள் இலக்கியங்கள் சிறப்பாகவும் பெருமையாகவும் கூறுகின்றன; மாண்புடன் பாடுகின்றன. பெண்ணிழிவும், பெண்ணடிமைத்தனமும் கொடிகட்டிப் பறந்தன.

உள்ளம் கவரும் ஊடற்காட்சிகள்:

பின்வரும் கூற்றுகள் எல்லாம் தலைவியுடையன. கொடியின் இயல்புடைய பரத்தையருடைய புழுகு (புனுகுப்பூனையின் மணப்பொருள்) முதலியவற்றிலே அளைந்த மயிர் முடியினின்றும் உதிர்ந்த பூந்தாதுப்பொடி நின் தோள்பட்டையில் கிடக்க, எம்மைத் தீண்டுதற்கு நீ யார்? திரும்பிப் போய்விடு  (கலித்தொகை: 88)

வலிந்து புகுந்து நெருங்கி கூடுதற்கு வரும் தலைவனிடம், எம் இல்லம் வாராதே! போய்விடு! பரத்தையிடம் இருந்துவந்த நீ என்னைத் தொடாதே!
என்னை மன்னிப்பாயா! மன்னித்து என்னை ஏற்றுக்கொள்! _ என்றான் தலைவன். சினம் தணிந்த அந்தத் தலைவி தலைவனுடன் கூடினாள் (கலி: 90)
ஏய்! என்னை ஏமாற்றாதே!

தலைவன் பொய்கூற, தலைவி கூறுகிறார்: பரத்தை தன் கைவிரல் நகத்தால் காமவெறியில் கீறிய கீறல் வடுவாக உள்ளது! எனக்கா தெரியாது? ஏமாற்றாதே போய்விடு (கலி: 91).

வழிதப்பி வந்துவிட்டாயா? ஏடா, மணம் கமழும் கருங்கூந்தல் பரத்தை இல்லம் செல்கிறாய் நீ! இப்பொழுது வழிதவறி வந்துள்ளாயா? இங்கே வாராதே! அவளிடமே போ! போ!!

மறக்க முடியுமா?

மாட்டிக் கொண்டேன் வசமாக உன்னிடம்! மறக்க முடியுமா மாதரசி உன்னை! அருள்புரிவாய் கருணைக்கடலே! அமிழ்தல்லவோ உன் உடலே!! (கலி:91)
சொல்லடா, வாய் திறந்து!

தலைவனிடம் தலைவி: எப்படி நீ இங்கு வந்தாய்?
தலைவன்: குதிரை ஏறி உன்னிடம் வந்தேன்?
தலைவி: எந்தக் குதிரை அந்தக் குதிரை? பரத்தைக் குதிரையா? அந்தக் குதிரைதான் உன் மார்பில் கீறியதோ? பிறாண்டியதோ? சொல்லடா வாய் திறந்து! (கலி: 96)

இவ்வாறான வேண்டத்தகாத பண்பாட்டுத் தவறான பரத்தமை ஒழுக்கம் பரவிக் கிடந்த சங்ககாலம்தான் பொற்காலமா?

பகுதி (6) பெயர் போன பெருங்குடி மக்கள் கூட்டம்!

பல வகைகள்

ஏழையரும் செல்வர்களும், அரசர்களும், புலவர்களும் குடிப்பழக்கம் மிகுந்தவராகக் காணப்பட்டனர். குடிக்கின்ற கள் பலவகைகளாக இருந்தன. தென்னங்கள், பனங்கள் (பெரும்பாணாற்றுப்படை:245) அரிசிக்கள் அல்லது நறும்பிழி, (பெரும்பாண்:275) தேக்கள் தேறல்_(மலைபடுகடாம்:171) மட்டு (பட்டினப்பாலை 894), மகிழ்_(பொருநராற்றுப்படை:84), மகிழ்ப்பழம் (பொருநர்_111), தினைக்கள்_(அகநானூறு:284), மாங்கள்(அகம்:27)
இவையன்றி, யவன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேனாட்டுக் கள்ளும் வழக்கத்தில் இருந்தது. பொன்கலத்தில் ஊற்றி _இளம்பெண்கள் ஊற்றித்தர களிப்புடன் அரசர்கள் உண்பர். (புறநானூறு:24; மதுரைக்காஞ்சி_778)

அவ்வையார் அருந்தியகள்

அவ்வையார் போன்ற பெண்பாற் புலவர்களும் புரவலர்களும் குடிப்பழக்கம் உடையவராக விளங்கினர். சிறிது கள் கிடைத்தால் எமக்குக் கொடுப்பான் அரசன்: நிறையக் கிடைத்தால் நாங்கள் பாடி மகிழ அரசன் மகிழ்ந்து கள் உண்பான் என்ற கருத்தில், சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே, பெரிய கள் பெறினே யாம்பாடத் தாம் உவந்து ஈயும் மன்னே! _ (புறநானூறு)
இது அதியமானை அவ்வையார் புகழ்ந்து பாடியது. கள் அருந்துவதில் ஆடவர் _ பெண்டிர் எனப் பாகுபாடற்ற நிலை இருந்திருக்கிறது. இந்த நிலையுள்ள காலம் பொற்காலம் என்பது பொருந்துமா?
பகுதி (7) பகுத்தறிவுக்கு மாறாகப் பரவிக் கிடந்த மூடநம்பிக்கைகள்

குருட்டு நம்பிக்கைகளின் கூடாரம்:

ஒரு சமுதாயம் பகுத்தறிவு மனப்பாங்கோடு, சிந்தித்துச் செயல்பட்டு வாழ்வதுதான் அதற்குச் சிறப்புத் தருவதாகும். சங்ககாலச் சமுதாயம் அப்படிப்பட்டதா? அகம், புறம் அதாவது, காதல்-_மோதல் (போர்) இவற்றினையே அடிப்படையாக, கருப்பொருளாகக் கொண்டது ஆகும். இத்தகு வாழ்வில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத, ஏன்? புறம்பாக பழமைக் கண்மூடிப் பழக்கவழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள் கோலோச்சி நின்றன. பெரியாரியல் பார்வையில், சுருங்கக் கூறின், மூடநம்பிக்கைச் சேற்றில் முங்கிக் கிடந்தது. இது உண்மையா? வீண் பழியா? பார்ப்போமே?

கண்ணால் அல்லது பொறிகளால் காணாமலும் அறிவால் ஆய்ந்து பாராமலும், காரணகாரியத் தொடர்பு பற்றிக் கவலைப்படாமல் எதனையும் மடத்தனமாக நம்புவதும், ஏற்றுக்கொள்வதும் மூடநம்பிக்கைகளாகும். சங்ககாலத் தமிழர்கள் பகுத்தறிவுக்கு விடைகொடுத்துவிட்டு மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்தனர்.
பேய்கள்-பிசாசுகள்:
பேய்கள் இருப்பதாக சங்ககாலத் தமிழர் நம்பினர். போர்க்களம், சுடுகாடு, பொது மன்றங்கள், மரங்கள் முதலான இடங்களில் வாழ்வதாகவும் _ (பதிற்றுப்பத்து 24, 69) நள்ளிரவில் நடுத்தெருவில் அவை திரிவதாகவும் (புறம்:354; 386) பிணத்தின் புண்ணைத் தோண்டித் தின்னும் என்றும் (புறம்:370); பேய், பூதம் முதலான பெயரால் அவை அமையும் என்றும் அவர்கள் நம்பினர்.

கண்ணுபடப் போகுதய்யா!

கண்ணேறு எனப்படும் நம்பிக்கையுடையவர்களாக அவர்கள் வாழ்ந்தனர். ஒருவர் பார்வை மற்றவர்க்குத் துன்பம் செய்யும் என்றும் நம்பினர்.

மூட்டைமூட்டையாக பிற மூடநம்பிக்கைகள்:

1.    திங்களைப் பாம்பு விழுங்குவதே கிரகணம்;
2.    நாளும் கோளும் நன்மை தீமை செய்யும்;
3.    பாம்புகள் மாணிக்கங்களை உமிழும்.
4.    சகுனம் பார்த்துத்தான் எச்செயலையும் செய்தல் வேண்டும்.
5.    கனவில் காணும் காட்சிகளும் கெட்ட நிமித்தங்கள் ஆகும்.
6.    பல்லி சொல்லுக்குப் பலன் உண்டு; (நற்றிணை: 189, 323, அகம் 151.)
7.    காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர்;
8.    இடக்கண் துடித்தால் நன்மை; வலக்கண் துடித்தால் தீமை வரும்.
9.    இம்மை _ மறுமையில் நம்பிக்கை;
10.    குறி கேட்டல்.
11.    தெய்வம் எவர் மீதிலேனும் வெளிப்பட்டுத் தோன்றித்தான் கூற வேண்டியதைக் கூறும்.



இவைபோன்ற, இவற்றிற்கும் மேலான பல மூடநம்பிக்கைகளைச் சங்ககால மக்கள் கொண்டிருந்தனர் என சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.
இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்த சங்ககாலம் பொற்காலம் என்று கூறுதல் எப்படிப் பொருந்தும்?

இத்தனையும் இருக்கலாம்!

சங்கத்தமிழர், வீரவாழ்வில் சிறந்து விளங்கியிருக்கலாம்; வெற்றிகள் பல கண்டிருக்கலாம்; வள்ளல்கள் வாரி வாரி வழங்கியிருக்கலாம்; பாவலர்கள் அழகிய, சீரிய பாக்களைப் பாடியிருக்கலாம்; பல நல்ல கருத்துகளை எடுத்துரைத்திருக்கலாம்; களவியல் _கற்பியல் என்னும் அகத்திணை வாழ்வை நடத்தியிருக்கலாம்; எழிற்கலைகளில்(Fine Arts) ஏற்றம் பெற்றிருக்கலாம். முத்தமிழ்த் துறைகளில் கரை கண்டிருக்கலாம்; வணிகத்தால் வளம் பல பெற்றிருக்கலாம்! இவற்றால் இவையிருந்த காலத்தை நாம் பொற்காலம் என்று சொல்லலாமா?

இல்லை என்பது ஏன்?

இத்தனை இருந்தும், பொருளியல் வாழ்வில் வர்க்கபேதம்; சமுதாய வாழ்வில் வர்ணபேதம்; ஆரியத்தின் தாக்கம், பெண்ணடிமைத்தனம்; பரத்தமை ஒழுக்கம், அமைதி தவழாத போர்ப்பண்பு, கரைகாணாத கள் குடி; முற்றிப்போன மூடநம்பிக்கைகள் இவை எல்லாம் வேரூன்றிக்கிடந்த சங்ககாலம் பொற்காலம் ஆகுமா? அறிஞர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!

-------------------- பேராசிரியர் ந.வெற்றியழகன் ---"உண்மை”பிப்ரவரி 01-15 - 2014

29.6.14

தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை

தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை


தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர்களே! மற்றும் முத்தையா முதலியார், தாவூத்ஷா முதலிய தலைவர்களே! இன்று இங்கு நீங்கள் லட்சக்கணக்காகக் கூடி, என்னை ஆடம்பரமாக வரவேற்று பல சங்கங்களின் சார்பில் வரவேற்பு அளித்து, நமது முயற்சிகள் ஈடேறத் தமிழ்நாட்டிற்கே வழிகாட்டியாக முதன் முதல் 1001 ரூபாய் பரிசளித்த உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான  நன்றியைத் தெரிவிக் கின்றேன்.


என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசி, நான் ஏதோ செய்து விட்டதாக வரவேற்பு கள் அளித்தது எதற்கு என்பது எனக்கு நன்கு தெரியும். உண்மையில் அப்புகழ்ச்சி களுக்கெல்லாம் நான் தகுதியுடைய வனல்ல. ஆனால், எனது தொண்டின் கருத்தினிடமும், அவசியத்தினிடமும், நீங்கள் வைத்துள்ள உண்மை அன்பும், ஆசையுமே இதற்குக் காரணமென எண் ணுகிறேன். மேலும் எனக்கு ஊக்கத்தைத் தூண்டவே எனக் கருதுகிறேன். இந்த நன்றி, வார்த் தையால் மட்டும் போதாது.


எனினும் கருத்திற்கிணங்க நீங்கள் இட்ட பணியை நிறைவேற்ற எனது ஆயுள்வரை தயாராக இருக்கிறேன். (கை தட்டல்) நான் உங்களுக் காகப் பல தொண்டு கள்  செய்ததாக எனக்கு முன் பேசிய தலைவர்கள் கூறி னார்கள். ஆனால், நான் தமிழர்களுக்காகச் செய்ததை விட மற்றவர்களுக்காகச் செய்ததே மிக அதிகமாகும். நீதிக் கட்சி, தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆகிய வர்களுக்காகச் செய்ததைவிட, காங்கிர சிற்கு நான் உழைத்தது கணக்கு வழக் கில்லை.


எனது வாலிபப் பருவத்தையும், ஊக்கத்தையும் காங்கிரசிற்காகவே கழித்தேன். இன்று அதன் சக்கையைத்தான் உங்களுக் காகச் செலவிடுகிறேன். நான் முன்பு சென்றது தப்பு வழி என உணர்ந்து திருந்தி சென்ற 15 வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நான் கோரிய பலனில் நூற்றில் ஒன்றுகூட இன்னும் வரவில்லை. ஓரளவுக்குத் தமிழர்களுக்கு உண் மையைத் தெரிவித்து வருகிறேனே ஒழிய, இன்னும் காரியம் கைகூடவில்லை.


சுமார் முப்பதிற்கு மேற்பட்ட சங்கங்கள் இன்று எனக்கு வரவேற்பளித்தன. அவை களில் தொழிலாளர்கள் சார்பாகவும், முஸ்லிம்கள் சார்பாகவும், விசுவப் பிராமணர்கள் சார்பாகவும் அளித்த வரவேற்புப் பத்திரங் களையே மற்றவைகளைக் காட் டிலும் நான் பெருமையாகக் கொள்ளுகின்றேன். தொழிலாளர்கள் சம்பந்தமாக இன்று சில வற்றைக் கூற ஆசைப்படுகிறேன்.

அன்பும், பக்தியும், கவலையும் தொழிலாளரிடமே!


முன்பு இரண்டொரு சந்தர்ப்பங்களில் சென்னையில் நடைபெற்ற கடற்கரைக் கூட்டங்களில் தொழிலாளர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லியுள்ளேன். எனக்குத் தொழிலாளர்களிடம் உண்மை யில் அன்பும், பக்தியும், கவலையும் வேறெதையும்விட அதிகம் என்பதை உண்மைத் தொழிலாளர்கள் 15, 16 வருட மாகத் தொழிலாளருடன் பழகுபவர் அறிவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு தொழி லாளர் சங்கத்தை அரசியல் கூட்டமும், சுயநலக் கூட்டமும் வேட்டையாடின.


அவைகளுக்குக் காட்டிக் கொடுத்தவன் நான் என்பதும் எனக்கு நன்கு தெரியும். ஆனால், பின்பு உண்மை உணர்ந்து தொழிலாளர்களை அரசியல் புரட்டுக் காரர்களிடத்திலிருந்தும், சுயநலக் கூட்டத் திலிருந்தும் விடுவிக்கப் பெரிதும் பாடுபட்டேன்; முடியவில்லை. காதினிக்கப் பேசுபவர்களைக் கண்டு தொழிலாளர்கள் மயங்குவது அறியப் பெரிதும் வருந்தி னேன்.

15 ஆண்டுகளுக்கு முன்பு நாகை யில் ரயில்வே வேலை நிறுத்தத்தை ஆரம் பிக்கக் கூடாதென்று அவர்களை எவ்வ ளவோ வேண்டியும் சில போலிகளை நம்பி வேலை நிறுத்தம் ஆரம்பித்ததால் தொழி லாளர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டனர். நான் வேண்டாமென்ற வேலை நிறுத் தத்தை மீறி நடத்துவது கண்டும் பின்னி டாது, தொழிலாளர்களுக்காக அதில் கலந்துகொண்டு பாடுபட்டு, அதற்காக நான் சிறை சென்றதை அக்காலத் தலைவர்கள் உணர்வார்கள்.

தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை

எதனால் தொழிலாளர் நன்மை அடை வார் என்பதில் எனக்கும் அரசியலாளர் கள், தொழிலாளர்களுக்கும் அபிப்பிராய பேத மேற்பட்டதால் என்னால் தொழிலாள ருடன் அதிகமாகக் கலந்து கொள்ள முடியாது போயிற்று. எனினும் தொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை - பார்ப்பனரல்லாதாரின் விடுதலையாகும்.


பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமென்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே. இயந்திரத்தின் பக்கத்தில் நிற்பவனே தொழிலாளி என்று கருதுகிறார்களே ஒழிய, நிலத்தை உழுபவன் - உழவனும் தொழி லாளிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் தான் அவ்வியக்கம் எத் தன்மையது என்பதை உணர்வர்.

இந்து மதக் கோட்பாட்டின்படி நாம் அத்தனை பேரும் தொழிலாளிகளே. பல வர்ணம், ஜாதிகள் சொல்லப்பட்டாலும் உலகத்தில் சூத் திரன், பிராமணன் என்ற இரண்டே ஜாதிதான் உண்டு என வருணாசிரமி கள் என்போரும், வைதிகர்கள் என்போரும் கூறி வரு கின்றனர். இவ்வாறு பார்க்கும்போது பார்ப்பனர்கள் அத்தனை பேரும் முதலாளி கள், நாம் அனைவரும் தொழிலாளிகள்.


பார்ப்பனர்கள் பாடுபடாமலேயே வயிறு வளர்க் கின்றனர். நாம் பாடுபட்டும் வயிறு கழுவ முடியாத நிலையிலிருக்கின்றோம். எனவே, இந்நிலை மாறினால்தான் நமது தொல்லைகள் நீங்குமே ஒழிய, ஆலையில் வேலை செய்பவனுக்கு ஒரு நாலணா கூலி அதிகமாகக் கிடைத்து விட்டதாலேயே தொழிலாளிப் பிரச்சினை முடிந்துவிடாது.

தொழிலாளரை ஆதரியுங்கள்


அந்த வழியில் எனக்கு விழிப்பேற்பட்ட காலம் முதல் சூத்திரன் என்று சில சோம்பேறிகளால் பேரிடப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வரு கிறேன். அவர்கள் வார்த்தைகளை நம்பி தொழிலாளிகள் இன்று எங்களைப் பரிகசித் தாலும், கேலி செய்தாலும் கடைசி வரை நாங்கள் தொழிலாளிகளுக்காகவே உழைப் போம். இன்று வேலை நிறுத்தத்தால் சூளை மில் முதலிய மில் தொழிலாளர்கள் கஷ்டப் படுகின்றனர்.
முன்னின்ற தொழிலாளர் தலைவர் பலர் அரசாங்கத் தலைவர் களுக்குக் கீழ்ப்படியாத காரணத் தாலேயே இன்று தொழிலாளிகள் கஷ்டப்படுத்தப் படுகின்றனர். எனவே, நாம் அத்தொழி லாளர்களுக்குச் சகாயம் செய்வதுடன், வேலையிழந்த பலருக்கும் நம்மால் ஆகும் வேலைகளைக் கொடுத்து ஆதரிக்க வேண்டுமென உங்களை வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன். இக் கூட்டத்தின் சார்பாகக்கூட தொழிலாளர்களுக்கு ஏதா வது நன்மை செய்ய வேண்டும்.


அடுத்த ஆண்டில் ரூ. 10001 பெறுவேன்!


1001 பேர் சிறை சென்றதன் அறி குறியாக நீங்கள் இன்று 1001 ரூபாய் கொடுத்தீர்கள். இது எனது சொந்தச் செலவிற்கல்ல. நமது தொண்டு, இயக்கம், எண்ணம் நிறைவேறு வதற்காகவே உதவினீர்கள். இதைப்போல் மற்ற ஜில்லாக்காரர்களும் செய்ய வேண்டுமென வழிகாட்டினர் சென்னைத் தோழர்கள்.


நாம் எண்ணுவது சரியாயிருக் குமானால், இனியும் ஒரு  வருடம் ஆச் சாரியார் நம்மீது கருணை வைத்தால் அடுத்த ஆண்டில் 10001 ரூபாய் பெறுவேன் எனக் கருதுகிறேன். முதன் மந்திரி யாரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ் வாண்டில் 10001 தொண்டர்களைப் பிடிப்பதன் மூலம் நமக்கு 10001 ரூபாய் நீங்கள் கொடுக்க வழிசெய்து  உதவ வேண்டுகிறேன்.


சிறை செல்வது பிரமாதமல்ல


சிறை சென்றதில் புகழோ, தியா கமோ ஒன்றுமில்லை. அதன் ரகசியம் எனக்குத் தெரியும். என்னுடைய வழக்கில்கூட  அய்க்கோர்ட்டு நீதிபதி முன்பு, 7 தடவை சிறை சென்றவருக்கு இது என்ன பிரமாதம்? என்று கூறிய தாகக் கேள்வியுற்றேன். ஒரு காரியத் திற்காகத்தான் தாங்கள் சிறையில் கஷ்டம் அனுபவித்ததாகச் சிலர் சொல்வது, வெளியில் வந்தால் என்ன கூலி என்ப தற்காகவே, இதை எதிரிகள்தான் சொல்லிக் கொடுத்தார்கள்.


மந்திரி வேலை முதலில் எனக்குத்தான் என உரிமை பாராட்டவே தாங்கள் கஷ்டமனுபவித்த தாகக் கூறுவ துண்டு. உண்மையில் நமது உணர்ச்சியை மாற்றக்கூடிய நிலையில் அவ்வளவு கஷ்டம் சிறையில் ஒன்றுமில்லை. சிறை செல்வதால் ஏற்படும் பலாபலனை உணர்ந்தே செல்லுகிறோம்.
இதில் என்ன தியாகம் இருக்கிறது? நான் சிறையில் அதிகம் கஷ்டப்படவில்லை. 3 சிறை அதி காரிகளும் என்னை நன்கு கவனித்தனர். ஆனால், அரசாங்கத்தின் பழிவாங்கும் எண்ணம் அங்கு தாண்ட வமாடுகிறது. உடல் நோயுற்றவர்களிடத்துச் சிறிதுகூட கருணை காட்டப்படவில்லை. அவர்களை ஒழிக்கவே டாக்டர்கள் நினைக்கின்றனர்.

சிறைச்சாலை டாக்டர்கள் போக்கு

முன்பு பேசியதுபோல இன்று நான் பேச முடியவில்லை. எனக்குச் சில பொறுப்புகள் இருக்கின்றதென சில தலைவர்கள் எனக் குப் புத்தி புகட்டுவதுண்டு. அது எனக்கு முடிவதில்லை. ஆனாலும் ஓரளவுக்கு அடக்கியே பேசுகிறேன். வெளியில் காயலா கண்ட ஒருவன் 6 மாதத்தில் செத்து விடுவான் என்றால், சிறையில் 15 நாட் களிலேயே இறந்து படுவான். இதற்கு அரசாங்கத்தாரோ, மற்ற யாரோ, யார் பொறுப்பாளி என்று என்னால் கூற முடி யாது.

அல்லது அந்த நிர்வாகத் தோர ணையோ என்னவோ தெரியவில்லை. ஒருவனுக்கு நோய் என்றால் அவன் பொய்  பேசுவதாகவே டாக்டர்கள் நினைக்கின் றனர். இன்னும் சொல்வேன்; ஒருவனுக்கு நோய் என்றால் காதிலி ருக்க வேண்டிய ஸ்டெதெஸ்கோப்பை கழுத்தில் போட்டுக் கொண்டே அவனை டாக்டர்கள் பரிட்சிக் கின்றனர். இதை ஏன் சொல்லுகிறேனென் றால் கைதிகளை அவ்வளவு மோசமாக நினைக்கின்றனர். இதைப் பற்றிச் சர்க்கார் சிறிதுகூடக் கவலை எடுத்ததாகத் தெரிய வில்லை.


சட்டம் மீறல் - சண்டித்தனம் நமது கொள்கையல்ல

இதனால் உங்களைச் சிறைக்குச் செல்லுங்கள் என நான் கூறவில்லை. ஏன்? மக்களிடம் ஒழுங்கு மீறும் எண்ணத்தையும், சட்டத்தை மறுக்கும் உணர்ச்சியையும் உண்டாக்கக் கூடாது  என்பதே எனது எண்ணம். காரணம்? அது பின்னர் நமக்கே திரும்பிவிடும். பலவற்றிற்கும் பட்டினி யிருந்த காந்தி இன்று பட்டினி இருப்பது கூடாதென் கிறார். ஏன்? பலர் சிறு காரியங் களுக்கும் அதைப் பின்பற்றுகின்றனர்.


அதேபோலச் சட்டம் மீறல், சிறை செல்லும் உணர்ச்சி, அடாவடி, சண்டித்தனம் ஆகிய வைகளை அவர்களே கற்றுக் கொடுத்தனர். இந்த 24 மாத ஆட்சியில் 100, 200 இடங் களில் சத்யாக்கிரகக் கூப்பாடு கேட்கின்றது கண்டு வருந்துகின்றனர் காங்கிரஸ்காரர் கள்.


இரண்டு பக்கங்களிலும் தொல்லை. என்ன செய்வது என்றே முடிவுக்கு வர முடியாது தவிக்கின்றனர்.  எனவேதான், காரணம் சொல்லாது இந்தி எதிர்ப்பாளர் களை வெளியில் விட்டனர்.  தொண்டர்கள் விடுதலைக்கு இதுவரை சரியான காரணம் சொல்லப்படவில்லை.


சட்டம் மீறக் கூடாதென்பதே எனது எண்ணம். ஆனால், மக்கள் உணர்ச் சியைத் தப்பாக எண்ணி அதனை அடக்க அரசாங்கத்தார் தப்பான முறைகளைப் பலவந்தமாக உபயோகித்தால் நியாயமான உரிமைகளை இழக்க எவனும் பின்னிட மாட்டான்.

மூச்சு விடுவதே சட்ட விரோதமா னால் அதற்காகத் தற்கொலை செய்து கொள்வது மேலா? சிறை செல்வது மேலா? எனவே, மக்கள் மீது அரசாங்கத்தார் மீண்டும் அடக்குமுறை உபயோகிக்க முன் வந்தால் அதனை வரவேற்பேனே ஒழிய, அதற்காகச் சிறிதும் பயப்பட மாட்டேன்.

ஏமாற்றப் பார்க்கின்றனர்!

இந்தி எதிர்ப்பைப் பற்றி ஏமாற்றிக் காரியம் செய்ய எண்ணுகின்றனர். நேற்று கூட இந்தியை எடுத்து விடுவதாக ஆச்சாரி யார் சொன்னார். எனவே, மறியல் செய்ய வேண்டாம் என இந்தி எதிர்ப்புச் சர்வாதி காரியாயிருந்த ஒரு அம்மையார் சொன்ன தாகப் பத்திரிகையில் பார்த்தேன். அது உண்மையானால் அன்று சென்ட்ரல் ஸ்டே ஷனில் காலில் விழுந்த மூர்த்தியாரிடமே ஆச்சாரியார் கூறியிருக்கலாமே இந்தியை எடுத்து விட்டேன் என்று.
அதை விட்டு யோசிக் கின்றேன் என்பானேன். எனவே, கட் டாயம் எடுபடவில்லை என்பது விளங்க வில்லையா? எனவே, மக்களை ஏமாற்றத்தானே இது. இந்தி சம்பந்தமான சர்க்கார் உத்தரவை நேற்று விடுதலை யில் நீங்கள் பார்த்திருக்கலாம். அது எல்லாப் பள்ளிக்கூட அதிகாரிகளுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறது. அதில் கட்டாயம் என்பது நன்றாக எழுதப்பட்டிருக்கின்றதே.

100 பள்ளிகளிலிருந்து இன்று 225 பள்ளிகளிலா யிற்று. இன்று 4, 5, 6ஆம் பாரங்களிலும் வைக்கப் போவதாகச் சொல்லுகின்றனர். இதில் தேசியம் ஒன்றுமில்லை. வேறெதையோ எண்ணி தமிழர்மீது கட்டாயமாகச் சுமத்து கின்றனர்.

அகராதி கூறுகிறதே!

இனி, நாங்கள் வேறு; ஆரியர்கள் வேறு என்பதைப் பல இடங்களில் கூறியுள்ளோம். பல பார்ப்பன நண்பர்கள் தனியே என்னிடத்தில் வந்து இதை மட்டும் விட்டு விடு; மந்திரிசபையை எவ்வளவு வேண்டு மானாலும் தாக்கு என்று கூறுகின்றனர். ஆனால், இந்தி என்றால் ஆரியர் மொழியென அகராதி  கூறு கின்றது. நீங்கள் எடுத்துப் பாருங்கள்.

அந்த ஆரிய மொழியைத் தமிழர் தலையில் ஏன் கட்டாயப் பாடமாகப் புகுத்த வேண் டும்? பல பத்திரிகைகள் இந்துஸ்தானி என்று கூறினாலும், சர்க்கார் உத்தரவு  இந்தி என்றுதான் கூறுகிறது; ஒரு இடத்தில் இந்தி என்பது; பின்னர் இந் துஸ்தானி என்பது; 200 வார்த்தைகள் படித்தால் போதும், கட்டாய மில்லை; பாசாகாவிட்டாலும்  பரவாயில்லை;இப்பொழுது அசட்டை செய்தால் பின்னால் உத்தி யோகங்கள் கிடைக்காது வருந்த நேரிடும் என்று இடத்திற்குத் தக்கவாறு பேசுவதன் கருத்தென்ன? எனவே, இனி உண்மை கூறாது, சூழ்ச்சியாகச் செய்யும் தந்திரங் களை நினைக்கும் போது இதில் ஏதோ பின்னால் ஆபத்து இருக்கிறதென உணரு கிறோம். எனவே, எந்த விதத்திலும் ஆரிய பாஷை கட்டாயப் பாடமாகாமல் இருப்பதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தால்தான், பின்னர் நீங்கள் தமிழர் என்று சொல்லிக் கொள்ள முடியும்.

தமிழ்க் கலையைக் காப்பது தமிழன் கடமை

ஒரு சிலர் கன்னட ராமசாமிக்குத் தமிழ் அபிமானம் ஏன் என்கின்றனர். அவர்கள் தமது தாய்மொழியை - கலையை விற்று, பிறருக்கு அடிமையாகி, தன்னையும் விற்றுப் பேசுகின்றனர்.

கன்னடன், தெலுங்கன், மலையாளி என்போர் யார்? எல்லோரும் தமிழர்களே - திராவிடர்களே. தமிழிலிருந்துதான் இவை கள் வந்தன. அம்மொழிகளில் கலந்துள்ள வடசொற்களை நீக்கிவிட்டால் எஞ்சுவது தனித் தமிழே. அப்பொழுது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற பெயர் மறைந்துவிடும். எனவே, எங்கள் மொழியி லுள்ள சீரிய கலைகளை ஒழிக்க முயல்வ தாலேயே பலத்த கிளர்ச்சி செய்கிறோம்.

இது ஒரு அற்ப விஷயமல்ல. தமிழ்க்கலை ஒழியாதிருக்க நாம் வகை தேட வேண் டுவது உண்மைத் தமிழன் கடமையாகும். எல்லாப் பள்ளிகளிலும் இந்தி வைத்து விட்டால், இந்தி வேண்டாத மாணவர்கள் எங்கு சென்று படிப்பது என்று சிலர் கேட்கின்றனர். 3ஆம் பாரம் வரை தனிப் பள்ளிக்கூடங்களை ஆங் காங்கு ஏற்படுத்தி அதில் மாணவர்களைத் தயார் செய்து 4ஆம் பாரத்தில் கொண்டு சேர்த்துவிடலாம்.

இது ஒரு பெரிய காரியமல்ல. இதற்குச் சர்க்கார் உத்தரவு தேவையில்லை. இத்தகைய பள்ளிகளை விரைவில் சென்னையில் தொடங்கச் சிலர் முயல்கின்றனர். அதற்கு நீங்கள் ஆக்கம் அளியுங்கள்.

லட்ச ரூபாய் வேண்டும்

தென்னிந்திய நலவுரிமைச் சங்க மென்பது காங்கிரஸ்காரர்களால் 500, 1000 அடி ஆழத்தில் புதைப்பட்டதாகச் சொல் லப்படும் கட்சியாகும். அக்கட்சி புதைக்கப் பட்டதா? அன்றி நாட்டில் வேரூன்றி கிளை விட்டு ஓடுகின்றதா? என்பதைக் கண்ணுற்றவர் அறிவர். சென்னையிலும், வெளி ஜில்லாக்களிலும் காங்கிரசை விட அதிக உறுப்பினர்களைச் சேர்த்து ஆங்காங்கு கிளைச் சங்கங்கள் நிறுவ வேண்டும். இதைத் தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்துவதோடு அல்லாது இதைக் கொண்டு சமுதாய முன்னேற் றத்திற்கு வேலை செய்ய வேண்டும்.
நமக்கு பணத்தைப் பற்றிக் கவலை யில்லை. நமக்கு ஆள் பலம் அதிகம் என்பது காண மகிழ்ச்சியடைகிறேன். இன்று எனக்குக் கொடுத்த 1001 ரூபாய்களும் ஒவ்வொரு ரூபாயாக வந்தது என்பது எனக்குத் தெரியும். எப்படி இதைச் சேர்க்க முடிந் ததோ, அதேபோல் தலைவர் குமாரராஜா போன்றவர்கள் வெளியில் பிச்சைக்குப் போக வேண்டும்.

அவர் மேல் துண்டை எடுத்து நீட்டிப் பிச்சை கேட்டால் பதினாயிரம், லட்சக்கணக்கில் சேர்க்கலாம். 6 மாதத்தில் லட்ச ரூபாய் சேர்த்தால் ஒழிய நமக்கு வெற்றியில்லை. எனவே, ஒவ் வொரு ஜில்லாத் தோழர்களும் இம் முயற் சியில் ஈடுபட்டு உதவ வேண்டுகிறேன்.


-----------------------------18.06.1939 அன்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு-"குடிஅரசு" - சொற்பொழிவு - 25.06.1939

பா.ஜ.க., பார்ப்பனர் கட்சியா?

அங்கும் ஆரியர் - திராவிடர்



பாரதீய ஜனதா கட்சி என்றாலே எடுத்த எடுப்பிலேயே அது பார்ப்பனர் கட்சிதான் என்று சொன்னால் பலரும் வழக்கமாகக் கூறுவது: இந்தத் தி.க.காரர்களுக்கு இதுதான் வேலை; எதைச் சொன்னாலும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பார்வைதான்! என்று  பரந்து விரிந்த மனப்பான்மையினர் போல பசப்புவார்கள்.

உண்மையைச் சொன்னால் பலருக்கு உடல் எல்லாம் பற்றிக் கொண்டு வரும்.
ஆனால், அங்கு நடப்பது என்ன? தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த   பொன் - இராதாகிருஷ்ணன் அவர்கள் மத்திய அமைச்சர் ஆகி விட்டார் இந்த நிலையில் தமிழகப் பா.ஜ.க.வுக்குப் புதிய தலைவர் தேவைப்படும் நிலையில் அந்த இடத்துக்கு யார்? என்பதில் அவர்களுக்குள் போட்டா போட்டி! ஆணா, பெண்ணா என்ற அலசல்... இதில் துக்ளக் இதழுக்கு அடங்கா ஆர்வம்.. இருக்காதா... அக்ரகாரத்தின் அதிகாரப் பூர்வமற்ற - அதிகாரப் பூர்வப் பிரதிநிதியாய் நின்று சலாம் வரிசை ஆடிக் காட்டுபவராயிற்றே திருவாளர் சோ ராமசாமி.

கடந்த வார துக்ளக்கில் (25.6.2014) எழுதினார்.

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றதால் மாற்றி அமைக்கப்படும் மாநிலத் தலைமை ஹெச். ராஜாவின் கீழ் வரும் என்று தகவல்கள் வருகின்றன (பக்.27) - என்று குறிப்பாக எழுதி இருந்தார்.

இந்த வாரம் வெளி வந்த துக்ளக்கில் அதனையொட்டியே ஒரு பெட்டிச் செய்தி.
தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் யார்?

தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநில பா.ஜ.க. தலைவர் பதவியைப் பிடிக்க பலர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஹெச்.ராஜா, மோகன் ராஜுலு, வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இந்த ரேஸில் முன்னணியில் இருப்பவர்கள். ஹெச். ராஜாவை, மூத்த தலைவர் இல. கணேசன் ஆதரிப்பதாகவும், மோகன் ராஜுலு அல்லது வானதி என்பது பொன். ராதாகிருஷ்ணனின் சாய்ஸ் என்றும் கூறப்படுகிறது.

இவர்களில் மோகன் ராஜுலு ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து கட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் பூர்த்தி அடையாததால், கட்சி விதிப்படி அவரை நியமிக்க முடியாது என்று சிலர் கூறுகிறார்கள்.

ஹெச். ராஜாவுக்கு கட்சியின் நிர்வாகி கள் பலரிடையே ஆதரவு உள்ளது. நல்ல பேச்சாளர், மீடியா விவாதங்களில் சோபிப்பவர் என்பது இவரது பலம்.
முன்னாள் தலைவரான கே.என். லட்சுமணனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்படலாம் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இல. கணேசனுக்கு, வேறு மாநிலத்தில் இருந்து  ராஜ்யசபா உறுப்பினர் பதவி தந்து, மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக பா.ஜ.க. வினர் மத்தியில் உள்ளது.  -------- துக்ளக் 2.7.2014 பக்.19


ஒன்றைக் கவனிக்கத் தவறக் கூடாது - ஹெச் ராஜாவை முன்மொழிவது திருவாளர் இல. கணேசன். வானதியை முன்மொழிவது பொன். ராதாகிருஷ்ணன்.

இதற்குப் பெரிய விளக்கம் தேவைப் படாது. இதற்குள் அடங்கி இருக்கும் நிறம் ஆரியர் திராவிடர் - புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டம்!

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யின் கடந்த கால வரலாற்று ஏடுகளைப் புரட்டினால் நாம் கூறுவது உண்மையான உண்மை என்பது எளிதிற் புரிந்து விடும்.
தமிழக பிஜேபி தலைவராக டாக்டர் கிருபாநிதி நியமிக்கப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் எந்த வகைகளில் எல்லாம் அவ மதிக்கப்பட்டார். சிறுமைக்கு உள்ளாக்கப் பட்டார் என்பதை நாம் எடுத்துரைக்கத் தேவையில்லை. அவரே மனம் வெதும்பி வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழா தமிழா (ஏப்ரல் 2003) ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டி.

கேள்வி: இந்தூரில் என்ன நடந்தது?

டாக்டர் கிருபாநிதி பதில்: தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல. கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக  போர்டிகோ அருகில் காத்திருந்தேன். அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழித்திடுவேன் என்று பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார்.

நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா, அவர் எதையும் கேட்கிற நிலையில இல்லை. நிதானம் இழந்து காணப்பட்டார். யார் கிட்டப் பேசுறோம், என்ன பேசுறோம்னு உணருகிற நிலையில் - நிலைமையில இல்லை. ஒரு கட்டத்தில் என் கையைப் பிடிச்சி முறுக்கி அடிச்சிட்டார்.

கேள்வி: இல கணேசன் உங்கள்மீது அவ்வளவுக் கோபமாவதற்கு என்ன காரணம்?

டாக்டர் கிருபாநிதி: என் பதவிக் காலம் முடியப் போகிறது அதற்கு முன் கட்சி கணக்கு வழக்குகளை சரி பார்த்து ஒப்படைக்கணும். அதனால் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது பல குளறு படிகள் நடந்திருப்பது புரிந்தது. மாநிலச் செயலாளராக இருந்த இல. கணேசன் தேசியச் செயலாளராக ஆன பிறகும் மாநில கட்சி நிதியை கையாண்டு கொண்டி ருந்தார். இதை நான் தடுத்ததால் ஆத்திரப் பட்டு என்னை அடிக்கும் அளவுக்குப் போய் விட்டார்.


கேள்வி: நீங்கள் தமிழக தலைவராக பதவியேற்றதிலிருந்தே பலவித அவமானங் களை சந்தித்து வந்தீர்கள் அல்லவா?

 டாக்டர் கிருபாநிதி: ஆமாம், தலைவர் என்கிற முறையில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எனக்கு அடிப் படை வசதிகள்கூட செஞ்சு தரலை ஃபேக்ஸ் மிஷன் நானே சொந்தமாக வாங்கினேன். டைப் அடிக்கணும் என்றால் வெளியில் கொடுத்து  அடிச்சிக்கிட்டேன். இப்படி கட்சிப் பணிகளுக்குச் சொந்த பணத்தை செலவழித்தேன். கட்சியின் மாநிலத் தலைமையகத்திலேயே (கமலாலயம்) ரங்கநாதன் மற்றும் ராஜசிம்மன் ஆகிய இருவரும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களை இயக்கும் சூத்ரதாரி இல. கணேசன்தான். கமலாலயத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் தலைவர் இருக்கிறாரா என்று கேட்டால் சரியான பதில்கூட சொல்ல மாட்டார்கள். எவ்வளவோ அவமானங்கள்.

கேள்வி: உங்கள் கட்சியில் சாதீய உணர்வு தலைவிரித்து ஆடுகிறது என்று பலமாக செய்திகள் வருகின்றன. நீங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்ப தால்தான் அவமானப்படுத்துகிறார்களா? 


 (சற்று மவுனத்திற்குப்பிறகு) நடக்கிறதை எல்லாம் பார்க்கும் போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் தலைமைப் பதவியில் இருக்கிறதை அவங்களால ஜீரணிக்க முடியல என்று கூறினார்.

இதற்குப் பதவுரை - பொழிப்புரை தேவைப்படாது - பச்சையாக பார்ப்பனர் பார்வையும் ஆதிக்கமும் தமிழக பிஜேபிக் குள் தலை விரி கோலமாய் ஆட்டம் போடுகிறது. இந்த நிலையில் தான் இல. கணேசன் அய்யர்வாள் - எச். ராஜா அய்யர்வாளை ஆதரிக்கிறார்.

பாவம் வானதி சீனிவாசன்களும் - டாக்டர் தமிழிசைகளும் தொண்டைத் தண்ணீர் வற்றிப் போக தங்களைச் சார்ந்த பா.ஜ.க.வுக்காக வறட்டுத்தனமாகக் கத்து கிறார்கள்.

பலன் என்ன? தேர்தலில்  நிற்கக்கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த அணி யிலேயே அதிகாரப் பூர்வமாக ஒரே ஒரு பெண்ணுக்குக் கூட தேர்தலில் போட்டி யிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. 

 இப்பொழுது நடக்கும் போட்டியில் ஜெயிக்கப் போவது யார்? பொன் இராதாகிருஷ்ணனா? இல.கணேசனா? அதாவது ஹெச். ராஜாவா? வானதி சீனிவாசனா?

ஆரியர் - திராவிடர் போராட்டம் - எங்கெங்கும் என்கிறபோது அங்கு மட்டும் நடக்காதா என்ன?



பா.ஜ.க., பார்ப்பனர் கட்சியாகி விட்டது உமாபாரதி பகிரங்கக் குற்றச்சாட்டு



வட இந்தியாவில் ராமன் கோயில் பிரச்சினைக்காக  தீவிர பிரச்சாரம் செய்தவர் உமாபாரதி. இவரது பேச்சுக்களை டேப்மூலம் ஒலிபரப்பித்தான் 1990 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

இப்போது அந்த உமாபாரதியே பா.ஜ.க. தலைமையின் மேல் ஜாதி ஆதிக்கத்தைப் பகிரங்கமாக எதிர்த்து இருக்கிறார்.


ராமன் கோயில் பிரச்சினையை வைத்துக் கொண்டு ஓட்டு வாங்கி விடலாம் என்று பா.ஜ.க., தலைமை நினைத்தது. ஆனால், மக்கள் ராமன் கோயிலை மட்டுமே பார்க்க மாட்டார்கள். பா.ஜ.க., ஆட்சி எப்படி இருந்தது என்றும் பார்ப்பார்கள் என்று உமாபாரதி கூறியிருக்கிறார்.


உமாபாரதி மேலும் கூறியிருப்பதாவது: பா.ஜ.க., ஆட்சியை இழந்ததுமே எங்கள் தொண்டர்கள் சோர்ந்து விட்டார்கள். தலைவர்களுக்குள்ளேயோ கடும் கோஷ்டிச் சண்டை. எனது மாநிலமான மத்திய பிரதேசத்தில் சுந்தர் லால் பட்வா, சக்லேச்சா, கைலார் ஜோஷி. வீரேந்திர குமார் என்று தலைவர்கள் ஆளுக்கொரு கோஷ்டி, மற்ற கட்சியினர் தங்கள் ஆதரவாளர்களைத் தலைவர்கள் பாதுகாப்பார்கள். ஆனால், எங்கள் கட்சியிலோ தொண்டர்கள் அனாதையாக நிற்கிறார்கள்.


பா.ஜ.க. வெறும் உணர்ச்சி அரசியல் ந;டத்துகிறதே தவிர, சமூகப் பிரச்சினைகளைப் பார்ப்பதில்லை.

எங்கள் கட்சியை மக்கள் பார்ப்பனர் கட்சியாகத்தான் பார்க்கிறார்கள். கல்யாண்சிங், வினய் கத்தியார், நான் எல்லோருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான். ஆனால், எங்களையும் மக்கள் பார்ப்பனர்களாகத்தான் பார்க்கிறார் கள். பா.ஜ. கட்சியே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வுக்குள் அடிமட்டத் தொண்டராக இருந்தாலும் கூட, ஒதுக்கப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிட பிற்படுத்தப்பட்டோருக்கு டிக்கெட் கொடுப்பதே இல்லை.
இந்த அநீதியை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தில் நான் போராடினேன்.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தேர் தலில் நிறுத்தும்படி கூறினேன். ஆனால் அது எடுபட வில்லை. இந்து மதம் என்று நாங்கள் பேசினாலே அது பார்ப்பன ஆதிக்கம் என்றுதான் மக்கள் கருது கிறார்கள். அந்த அளவுக்கு பா.ஜ.க., பார்ப்பனர் கட்சியாகி விட்டது. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினருக்காக பி.டி. சர்மா போராடினார். அவரை பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத் காரர்கள் போட்டு உதைத்தார்கள். இந்த ஒரே சம்பவத்தால் ம.பி.யில் 40 தொகுதிகளை நாங்கள் இழந்தோம்.


தோல்வி அடைந்த பிறகும்கூட ஜாதி ஆதிக்கம் போகவில்லை. ம.பி. சட்டமன்ற பா.ஜ.க., தலைவராக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விக்ரம் வர்மாவைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்காமல் ம.பி. மக்கள் ஆதரவே பறி போகக் காரணமாக இருந்த சுந்தர்லால் பட்வாரியையே கட்சித் தலைவராக்க முயற்சி நடந்தது. அவர் வேண்டாம் என்று மறுத்த பிறகுதான் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.


பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடமளிக்க வேண்டும் என்று 1996-லேயே நான் போராடினேன். பிற்படுத்தப்பட்டவர் சொன்னால் அம்பலம் ஏறுமா?
இவ்வாறு உமாபாரதி வருத்தத்துடன் கூறினார்.


உமாபாரதியின் இந்தப் பகிரங்கப் போர்க் கொடியும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கடும் எதிர்ப்பும் பா.ஜ.க. தலைமைக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை எப்படியா கிலும் கவர என்ன செய்வது என்று முழிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கான திட்டங்களை கட்சியின் முக்கிய திட்டமாக அறிவிக்கலாம் என்ற சிந்தனை கட்சித் தலைமைக்கு வந்துள்ளது.


அதே சமயம் இந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மேல் ஜாதியினரான பார்ப்பனர், தாக்கூர்கள், பனியாக்கள் ஆகியோரின் ஆதரவு போய் விடுமே என்றும் பயப்படுகிறார்கள். இதை பகிரங்கமாகவே பா.ஜ.க.வின் முக்கியத் தலைவரான சுந்தர்சிங் பண்டாரி கூறியிருக்கிறார்.


கன்ஷிராம் போல தாழ்த்தப்பட்டோர் பிரச்சினையை நாங்கள் எடுக்க முடியாது; அப்படி எடுத்தால் மேல் ஜாதி ஆதரவை இழந்து விடுவோம். எனவே, மேல் ஜாதி - கீழ் ஜாதி இரண்டுக்கும் சமமான கொள்கையைப் பின்பற்று வோம் என்றார். இனி என்ன திட்டத்தை அறிவித்தாலும் கூட தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் ஆதரவு கிடைக்கப் போவதில்லை என்று நந்தி என்ற பா.ஜ.க. தலைவர் கூறினார்.
 
-   (விடுதலை 30.12.1993)


 ---------------- மின்சாரம் அவர்கள் 28-06-2014 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

28.6.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 8

இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.



பால காண்டம்

ஆறாம் அத்தியாயம் தொடர்ச்சி

இவர்கள் வந்திருப்பதைக் கேள்வியுற்றுச் சுமதி எதிர்கொண்டு உபசரித்தான்.  அவ்விசாலை நகரத்தில் அன்றிரவைக் கழித்துவிட்டு மறுநாள் விஸ்வாமித்திர முனிவரும் அரசகுமாரர்களும் மிதிலை நகருக்கருகேயுள்ள ஒரு பூஞ்சோலையை அடைந்தார்கள்.  மேலே கண்ட வரலாற்றைப் பின்னர் ஆராய்வோம்.


கடலைக் கடைவதற்குக் காரணம் தேவர்களும் அசுரர்களும் ஒன்றுகூடித் தாம் சாவாமலிருக்கும் பொருட்டு அமுதம் பெற எண்ணிய எண்ணமேயாம்.  இவ்வால்மீகி கூற்றுக்கு மாறாகக் கம்பர் புதியதோர் கதை கட்டினார்.  அதாவது, ஒரு வித்தியாதரப் பெண் வைகுந்தமடைந்து திருமகளைப் புகழ, அவள் மகிழ்ந்து கொடுத்த மாலையை வாங்கிவந்து துர்வாச முனியிடம் கொடுக்க, அம்முனி உவந்து இந்திரனிடம் கொடுக்க, அவன் யானைத் தலையில் வைக்க, அது கையா லெடுத்துக் காலால் நசுக்க அதைக் கண்ட முனி சினந்து, உனது செல்வமெல்லாம் கடலில் விழ, நீ துயருறுக எனச் சபிக்க, அவ்வாறே இந்திரன் வளங்குன்றி வருந்தக்கண்ட தேவர்களும், சிவபெருமானும், நான்முகனும் திருமாலை யடைந்து வேண்ட, அவருத் தரவுப்படி இழந்த செல்வங் களையுடைய கடலைக் கடைந்தனர் என்பதாம்.  இப் புனை கதைக்கு ஆதாரம் வால்மீகி இராமாயணத்தில் ஓரிடத்திலும் கிடையாது.  இதனால், கம்பர் கூறுவன வற்றில் ஒரு சிலவே வால்மீகி போக்குடன் ஒத்திருப்பதும் மிகப்பல மாறுபட்டிருப்பதும் புலனாகும்.


இதனால் கம்பர் தமது மனம் போலெல்லாம் கதையைக் கொண்டு போகிறாரே ஒழிய வால்மீகியைப் பின்பற்றுகின்றிலர்.  இப்புனைகதையைப் படிப்பதால், தமக்குப் பிள்ளைப்பேறு முதலியன கிடைக்குமென மயங்கிப் படிப்போரது அறிவுதானென்னே!  கம்பருடைய கவிகளும் மிகவும் அருமையானவையாக இருந்தாலும், அவை முழுவதும் பொய்ப் புனை கதைகளாகவேயுள.  ஆதலின், அவை முழுவதும் பயனில் சொற்களே ஆகும்.  அதனால் இராமாயணத்தைப் படித்துப் பாராட்டுவதெல்லாம் பயனில் சொற்பாராட்டுதலேயாம் என்று துணிக.


கடலைக் கடைந்ததற்குக் காரணம் அதனுள்ளே புகுந்திருந்த இந்திரனுடைய செல்வங்களைத் திரும்பவும் அடைவதேயென்றால், அசுரரும் ஒருபுறம் கடைந்தன ரென்றால், அறிவிலாரும் ஒப்புமாறில்லை.  ஏனெனில், அசுரர் தேவர்களுக்குப் பிறவிப் பகைவர்.  ஆதலின், வால்மீகி முனிவர் கூறும் காரணமே அறிவுடையார் ஒப்புமாறுளது.  தேவாசுரர்கள் கடலைக் கடைந்தபோது, அவர்களுக்குச் சிவபெருமானாவது, திருமாலாவது, நான் முகனாவது உடனிருந்து உதவியவரல்லர்.


வால்மீகியார் கதைப்படி, முதலில் ஓராயிரமாண்டுகள் கடைந்தும் ஒன்றும் எழவில்லை.  அப்போது வாசுகிப் பாம்பு நஞ்சைக் கக்கிற்று.  அந்த ஆலகாலமென்ற நஞ்சால் யாவரும் வருந்தி அலறிச் சிவபெருமானை அடைந்தனர்.  அப்போது திருமாலும் அங்கே வந்து சிவபெருமானை நோக்கி, சுவாமி!  தேவரீர் தேவர்களி லெல்லாம் தலை சிறந்தவர்.  ஆதலின் முதலில் மரியாதை தமக்காம்.  எனவே, தயவு செய்து நஞ்சையுண்டு காத்தருளும் என்று வேண்டிப் போயினர்.  சிவனாரும் நஞ்சையுண்டு உலகத்தாரைக் காத்தார்.  இவ்வர லாற்றைக் கூறாது நஞ்சும் பிறையும் கடலில் தோன்றின; அவற்றைத் திருமால் மங்கைபங்கனுக்களித்தார் என்று கம்பர் கூறுகிறார்.  இவை உண்மையை மறைக்கும் தன்மைகளாம்.  இவர் வைணவ ஆரியரிடம் தயவு பெற வேண்டினமையின், இவ்வாறு மறைத்தனர் போலும்.  இவரைப் போலவே வால்மீகி மொழிபெயர்ப்பாளராகிய வைணவப் பண்டித அநந்தாச்சாரியார் இவ் வரலாற்றை மூலத்தை மட்டும் பதித்து மொழிபெயர்க்காது விட்டிருக்கிறார்.  இதுவே கம்பர் போக்குக்கும் ஒரு தகுந்த எடுத்துக்காட்டாம்.  ஆனால், பண்டித நடேச சாஸ்திரி யாரும் மன்மதநாததத்தரும் தங்கள் மொழி பெயர்ப்பில் நன்றாக இவ்வரலாற்றை மொழிபெயர்த்துள்ளார்கள்.


கடலிலிருந்தெழுந்த பெண்களில் வாருணி என்பவளைத் தேவர்கள் கைப்பற்றி மயிர்கூச்சடைந்து தழுவினர் என்றும், அசுரர் அப்பெண்ணை ஏறெடுத்தும் பார்த்திலர் என்றும் வரலாறு கூறுவதால், தேவர்கள் காமிகளென்பது புலனாகிறது.  அசுரர் காமத்தில் ஈடுபடாதவர் போலும்.  சுராபானம் செய்பவர்.  அதாவது கள்ளைக் (சுரா-கள்) குடிப்பவர்கள் சுரரென்றும் சுராபானம் செய்யாதவர்கள் அசுரரென்றும் பெயர் பெற்றதற்கொப்ப, இங்கே சுரர் காமிகளாயிருந்ததையும் காண்கின்றோம்.


அமுதமெழுந்தபோது, சுராசுரர் அதுபற்றிப் போரிட்டனர்.  அதுதான் நல்ல சமயமென்று திருமால் மோகினி யுருவெடுத்து அதைத் தூக்கிச் சென்றனர்.  இந்திரன் அசுரரையெல்லாம் கொன்று திருமாலைப் பணிந்து அமுதம் பெற்று வாழ்வடைந்தான்.  இதனால் திருமால் செய்த வஞ்சகம் புலனாகிறது.  முன்னரும் திருமால் இந்திரனுக்காகச் செய்த தீரச் செயல்களையும் கண்டோம்.  இவ்வாறு வஞ்சகச் செயலைத் திருமாலின் மேல் ஆரியர் ஏற்றினர்.


தன் மக்களாகிய அசுரர் மடிந்தமை கண்டு வருந்தி, இந்திரனைக் கொல்லத் தகுந்த பிள்ளையை அடையத் திதி தவம் புரிகின்றனள்.  அதைத் தெரிந்த இந்திரன் அவளையடைந்து அவளுக்குப் பணிவிடை செய்து, அவளை ஏமாற்றி அவளோடு உடன் வாழ்கின்றனன்.  தவம் செய்பவளாகிய திதிக்கு உடம்பு பிடித்தல் முதலிய பணிவிடைகளையும் அவன் செய்தனனாம்.  திதியும் அதற்கு இணங்கியிருந்தனளாம்.  அவள் செய்த தவத்தின் மேன்மைதானென்னே!  முழுமகனாம் இந்திரனைத் தன் உடம்பு பிடித்தல் முதலிய பணி விடை செய்யத் திதி இடங்கொடுத்தனளே.  இவளுடைய பெண் தன்மை தானென்னே!  இவள் தன் சக்களத்தி மகன் என்பதுபற்றிப் போலும், இத்தகாத செயல்களுக்கு அவள் இடங் கொடுத்தனள்.  காமியும் வஞ்சகனுமாகிய இந்திரன், கருப்பமுற்றிருக்கும் தன் பெரிய தாயாராகிய போது, ஒரு நாள் அவள் தலைமாடு, கால்மாடாக, கால்மாடு தலைமாடாக மாறிப் படுத்தனளாம்.  அதனால், அவள்தான் ஒழுக்கங் கெட்டவளாம்.  என்னே இவ்வாரியார் தம் ஒழுக்கத்தைப் பற்றிய கோட்பாடு!  இதனை ஒரு பெரிய ஒழுக்கக் கேடாகக் கொள்கின்றனரே!


உடனே இந்திரன் தனது பெரிய தாயாராகிய திதியின் பெண் குறிக்குள்ளே நுழைகிறான்.  என்னே இப்பாதக னின் இழி செயல்!  தன் பெரிய தாயாரின் குறிக்குள்ளே நுழைந்து கருப்பையை யடைகிறான்.  அங்கிருந்த சிசுவை இரக்கமில்லாமல் அது அழ அழ ஏழு துண்டு களாக வெட்டுகிறான்.  இவ்வாறு சிசுக் கொலை, கருவழித்தல் முதலிய மனத்தினாலும் நினைக்கமுடியாத பெரும் பாதகங்களை இந்திரன் செய்கிறான்.  தலைமாறிப் படுத்ததைப் பெரிய குற்றமாகக் கருதும் ஆரியர், இந்திரனுடைய இவ்விழி செயல்களைக் குற்றமாகக் கருதாது இந்திரனைப் பாராட்டுகின்றனர்.  இவ்விந்திர னுக்காக நான்முகனும், திருமாலும் பலவுதவிகளைச் செய்கின்றனர் என்றும் கதைகளெழுதுகின்றனர்.  தனது தந்தைக்கு முதல் மனைவியாகிய திதியின் பெண் குறியை அவள் தூங்கும்போது பார்த்து அதன் வழியாகக் கருப்பையில் நுழைய இப்பாவி இந்திரனின் மனம் எவ்வாறு துணிந்ததோ?  இவ்வளவு ஆபாசமான கதைகளையெல்லாம் கம்பர் எவ்வாறு தமது பாடலில் எழுதுவார்?  அவர் தமிழ் மகனாதலின் இவைகளை யெல்லாம் ஒழித்துச் சுருக்கமாக ஒரே பாடலில், திதி தவம் செய்வதை உணர்ந்த இந்திரன் அவளையடைந்து பணிந்திருந்து, அவள் வயிற்றிலிருந்த குழந்தையை ஏழு கூறுகளாக வெட்டினன் என்று கூறிவிடுகிறார்.  

அப்பாடல் வருமாறு :-

கேட்ட வாசவன் அன்னவட் கடிமையிற் கிடைத்து
வாட்ட மாதவத் துணர்ந்தவள் வயிற்றுறு மகவை
வீட்டி யே யெழு கூறுசெய் திடு தலும் விம்மி
நாட்ட நீர்தர மருத்தெனும் நாமமு நவின்றான்.

இப்பாற்கடல் கடைந்ததும், திதி தவம் செய்ததும் இந்திரன் கருவழித்ததுமாகிய வரலாறெல்லாம் கங்கை வரலாறு கூறுமுன், சோனை நதிக்கரையிலுள்ள ஒரு சோலையில் நடந்ததாகக் கூறுகிறார்.  இது பெரிய பிழை.  முதல் நூலாசிரியராகிய வால்மீகி முனிவரோ, இக்கதை விசாலை என்னும் நகரம் உண்டாவதற்கு முன், அங்கிருந்த சோலையில் நடந்ததாகக் கூறுகிறார்.  இது ஒரு முக்கியமான மாறுபாடே.  விசாலை நகரத்திற்குக் கங்கையைக் கடந்து கோசிப முனிவரும் வந்தனர்.  அவ்வூர் மன்னன் உபசரிக்க அங்கு அன்று தங்கி மறுநாள் மிதிலை கண்டனர் அம்மூவரும் என்று கம்பர் கூறுகிறார்.  விசாலையைப் பற்றி விசாரித்ததும் அதன் பழைய வரலாறு கூறியதுமாகிய ஒன்றும் அவர் குறித்திலர்.


இவ்வாறு கம்பர், வால்மீகி கூறுவதை மாற்றி மாற்றியும், மறைத்து மறைத்தும், புதுவது புதுவது புனைந்தும் தம் பாடல்களைப் பாடிப் போகின்றனர்.  இனி, மேற்செல்லுதும்.

                                       ----------------------- ”விடுதலை” 28-06-2014

27.6.14

இதுதான் வால்மீகி இராமாயணம் -7

இதுதான் வால்மீகி இராமாயணம்





("இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.")


பால காண்டம்

ஆறாம் அத்தியாயம் தொடர்ச்சி

ஸ்வாமித்திரன் பின்னரும் சொல்லத் தொடங் கினான் :-

அயோத்தியில் அரசாண்ட சகர மன்னனுக்குக் கேசினி வயிற்றில் அசமஞ்சன் என்றொரு பிள்ளை பிறந்தான்.  சுமதி ஒரு கருப்பிண்டத்தைப் பெற, அது வெடித்து அதிலிருந்து அறுபதினாயிரம் கருக்கள் வெளியாயின.  அந்தக் கருக்கள் நெய்க்குடங்களில் இட்டு வளர்க்கப் பெற்றன.  வெகு காலஞ் சென்றபின், அந்தக் கருக்கள் அறுபதினாயிரம் குழந்தைகளாயின.  அசமஞ் சனுக்கு அஞ்சுமான் என்று ஒரு மகன் பிறந்தான்.  அச மஞ்சன் தீயவனானதால், ஊரிலிருந்து துரத்தப்பட்டான்.  ஒருகால் சகரன் அசுவமேதயாகம் செய்யத் தொடங்கினான்.  யாகக் குதிரையைக் கெட்ட எண்ணம் கொண்டவனாகிய இந்திரன் ஒரு நாள் இராக்கத உருவங்கொண்டு ஒருவருக்கும் தெரியாமல் திருடிக் கொண்டு போய்விட்டான்.
அதைத் தேடத் தொடங்கிய அறுபதினாயிரவரும், கண்டவர் களையெல்லாம் திருடரென நினைத்து அடித்துத் தொந் தரவும் செய்தார்கள்.  அதுகண்ட தேவர்களும், அசுரர்களும் மிகவும் பயங்கொண்டு நான்முகனைப் பார்த்து, பூமி முழுவதும் சகர புத்திரரால் பிளக்கப்படுகிறது.  யாவரும் துன்புறுகின்றனர் என்றனர்.  நான்முகன், அஞ்சாதீர்!  அவர்கள் கபிலமுனியால் சாம்பராக்கப்படுவார் என்றனுப் பினன்.  அறுபதினாயிரவரும் பூமியைத் தோண்டிக் கீழ்ப் பூமிக்குப் போய், அங்கே கபில முனிவரருகே குதிரையைக் கண்டு அவரைத் துன்புறுத்த, அவரது சினத் தீயால் சகரர்கள் சாம்பராயினர்.  அதனையறிந்த அஞ்சுமான் கபிலரை தன் பிள்ளைகள் இறந்த வருத்தத்தால் வாடி அவர்களை உய்விக்கும் வழியைத் தேடிச் சகரன் முப்பதினாயிரம் ஆண்டுகள் ஆண்டபின் இறந்தான்.  கருடனால் தன் சிறிய தந்தையாரை உய்விக்க வழி, கங்கையைக் கொண்டுவருவதே என அறிந்த அஞ்சுமான், சில காலம் அரசாண்டுத் தனது மகன் திலீபனுக்குப் பட்டங்கட்டி முப்பத்தீராயிரமாண்டு தவம் புரிந்தும், கங்கையைக் கொணராமலே இறந்தான்.  திலீபன் முப்பதினாயிரமாண்டுகள் ஆண்டான்.  அவனாலும் கங்கையைக் கொண்டுவர முடியவில்லை.  அவன் மகன் பகீரதன் பட்டத்துக்கு வந்தான்.  அவன் நான்முகனை நோக்கி ஆயிரமாண்டுகள் தவம் புரிந்தான்.  நான்முகன் பகீரதன் முன் தோன்றி, இதோ கங்கை உன் எண்ணப்படி நடக்கக் காத்துக் கொண்டிருக்கிறாள்.  கங்கையைத் தரிப்பதற்குச் சிவபிரான் ஒருவரே வல்லவர்.  ஆதலின் அதுபற்றி அவரைக் கேட்டுக் கொள் என்று கூறிக் கங்கையையும் பகீரதன் விருப்பப்படி நடக்கச் சொல்லி விட்டு மறைந்தான்.  உடனே பகீரதன் சிவபிரானை நோக்கி ஓராண்டு தவம் புரிந்தான்.  அவரும் மகிழ்ந்து தோன்றி யருளினார்.  கங்கை சிவபிரானது சடையில் மறைந்தனள்.  பின் பகீரதன் வேண்டுதலால், ஒரு சிறிது விடப்பட்ட கங்கை ஏழு நதிகளானாள்.  அவற்றில் மூன்று கிழக்கு முகமாகவும், மூன்று மேற்கு முகமாகவும் ஓடின.  ஏழாவதாகிய கங்கை பகீரதன் பின் சென்று சகரபுத்திரர் அறுபதினாயிரவரையும் நற்கதிக்கேற்றினாள்  இவ்வாறு கோசிகன் கூறக் கேட்டு மகிழ்ந்து, இராமனும் இலக்குவனும் தூங்கினர்.  விடிந்தவுடன் அவர்கள் கங்கையைக் கடந்து, வடகரையடைந்து, விசாலை என்ற நகரைக் கண்டனர்.
மேலே கண்ட வரலாற்றை ஆராயுமிடத்துச் சுமதி என்ற பெண் வயிற்றிலிருந்து வெடித்த அறுபதினாயிரம் கருக்களும் நெய்க்குடத்தில் போடப் பெற்று வணங்கப் பெற, அவை அறுபதினாயிரம் குழந்தைகளாயின என்ற வரலாறு மிகவும் வியப்பாகவும், இயற்கைக்கு மாறாகவும் இருக்கிறது.  அறிஞர் மேலே காட்டப்பெற்ற விந்தையைச் சிந்திப்பாராக!  அறிஞராகிய கம்பரோ, இவ்வியற்கைக்கு மாறான வரலாற்றைக் குறிக்காது அறுபதினாயிரம் குழந்தைகள் பிறந்தனர் என்று மட்டும் குறித்தனர். 



இக்கதையில் இந்திரன் இவ்வாறு சகரன்மீது பொறாமை கொண்டு அதன் பயனாக மிக்க இழிந்த செயலாகிய திருட்டை, வேற்றுருக்கொண்டு செய்வானானால், அவனுடைய குடிகளான தேவர்கள் எவ்வளவு கள்ளத்தனமுடையவர்களாக இருக்கவேண்டும்?  இவர்களை ஒறுக்காது தெய்வம் அருளிற்றென்றால், அத்தெய்வத்தின் பெருமையை என்னென்பது?  பஞ்சமா பாதகங்களில் ஒன்றாகிய கொலையை இந்திரன் செய்ததை முன்னர்க் கண்டோம்; இப்போது மற்றொன்றாகிய களவு செய்ததைப் பார்த்தோம்.  இனி இவன் என்னென்ன செய்கிறானோ?  மேலே காண்போம்.  இந்திரன் செய்த இக்களவு அறுபதினாயிரம் பேர்களின் அழிவில் முடிகிறது.  அறுபதினாயிரவரும் கண்ட கண்ட பேர்களை யெல்லாம் துன்புறுத்தினர்.  அதுகண்டு களவில் கைதேர்ந்த தேவர் களும் இந்திரனும், அஞ்சி நான்முகனையடைந்து காக்க வேண்டுகின்றனர்.  இத்தேவர்களின் வீரந்தானென்னே!  இத் தீயோர்களுக்கு நான்முகன் தேறுதல் கூறுகின்றானாம்!  இதனால் இந்த நான்முகனைப் பற்றித்தான் யாது கூறுவது?
வால்மீகி முனிவர் சகரன் முப்பதினாயிரம் ஆண்டுகள் ஆண்டானென்றும், அஞ்சுமான் சில காலம் ஆண்டு, பின் 32,000 ஆண்டுகள் தவம் புரிந்தானென்றும், திலீபன் 30,000 ஆண்டுகள் ஆண்டானென்றும் கூறுகின்றனர்.  இவை நம்ப முடியாதவைகளாயுள்ளன.  யோகிகளாயிருப்போர் யோக மகிமையால் நெடுங்காலம் வாழலாம்.  போகிகளாகிய இம்மன்னர் இவ்வளவு காலம் எவ்வாறு வாழ்ந்தனரோ!  இவ்வாறு இவர்கள் நெடுங்காலம் ஆண்ட வரலாற்றைக் கம்பர் அஞ்சுமானுக்குப் பின் அவன் வழியில் பகீரதன் தோன்றினன் என்கின்றனர்.

பகீரதனைப் பற்றிக் கம்பர் கூறும் வரலாறு வால்மீகி யோடு மாறுபடுகிறது.  பகீரதன் 1000 ஆண்டுகள் நான்மு கனைக் குறித்துத் தவம் செய்தான்.  நான்முகன் கங்கைக்கு உத்தரவு தந்தபின், பகீரதன் ஓராண்டு சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தனன் என்றார் வால்மீகி.  கம்பரோ, அவன் நான்முகனை நோக்கி 10,000 ஆண்டுகளும், சிவபெருமானை நோக்கி 10,000 ஆண்டுகளும், கங்கையை நோக்கி 5000 ஆண்டுகளும், திரும்பவும் சிவ பெருமானை நோக்கி 2000 ஆண்டுகளும், மறுபடியும் கங்கையை நோக்கி 2000 ஆண்டுகளும் ஆக 30,000 ஆண்டுகள் தவம் புரிந்தானென்கிறார்.  வால்மீகி 1001 ஆண்டுகளென்றதை இவர் 30,000 மாகப் பெருக்கினார்.  ஒன்றை 1000, 10,000 ஆகப் பெருக்கிக் கூறுவது கம்பர் போன்ற கவிகளின் திறமை போலும்!  நான்முகனை நோக்கி 1000 ஆண்டு தவம் செய்தானென்று வால்மீகி கூறியதைப் பதினாயிரமாண் டென்றும், சிவபெருமானை நோக்கி ஓராண்டு தவம் செய்தானென்பதை இரண்டு தடவையாகப் பன்னிரண்டரை யாயிரமாண் டென்றும் கம்பர் கூறுகிறார்.

மேலும், கங்கையை நோக்கித் தவம் செய்ததாகவே வால்மீகி கூறவில்லை.  அப்படியிருக்க அவளை நோக்கி முதன் முறை 5000 ஆண்டுகளும் பின் 2000 ஆண்டுகளும் தவம் செய்தான் பகீரதனெனக் கூறுகிறார்.  மேலும், கங்கையிலே சகர புத்திரருக்கு உய்வெனக் கருடன் அஞ்சுமானிடங்கூற, அவன் அறிந்தனனென வால்மீகி கூறுகிறார்.  இதற்கு மாறாகக் கம்பர், அஞ்சுமானுடைய பேரனாகிய பகீரதன் தனது குருவாகிய வசிட்டனுடைய சொல்லின்படி நான்முகனை நோக்கித் தவம் செய்ய, நான்முகன் தோன்றி அவனிடம் கங்கையாலேயே சகர புத்திரர் உய்யவேண்டுமெனக் கூறினானெனப் புதுக் கதை கட்டினார்.  கங்கை பாதாளஞ் சென்று அறுபதினாயிரம் பேர் நற்கதி அடையச் செய்தவுடன், நான்முகன் தோன்றிப் பகீரதனைப் பாராட்டி அவனூருக்குப் போகும்படி கூறுகிறான் என்று வால்மீகி முனிவர் கூறுகிற கதையைக் கம்பர் கூறவில்லை.  சிவபெருமான் கங்கையில் ஒரு பகுதியை ஜடையிலிருந்து கீழே விட்டவுடனே, அது ஏழு நதிகளாக ஆயிற்று.  அவற்றில் ஒன்றே கங்கையென்று வால்மீகி கூறுகிறார்.  கம்பரோ, கங்கை ஒன்றே சடையி லிருந்து வந்ததென்றார்.  இனி மேற்சொல்லுவோம்.  இதுவரை கூறிய சகரவரலாறும், வால்மீகி முனிவருடைய பாலகாண்டம் 38, 39, 40., 41, 42, 43, 44 ஆகிய ஏழு சருக்கங்களில் கூறப்பெறுவது, இனி 45, 46, 47 ஆம் சருக்கங்களின் கதையைக் கவனிப்போம்.  அது வருமாறு :-

விசாலை நகரத்தை விஸ்வாமித்திர முனிவன் அரசகு மாரருடனடைந்ததும், இராமன் அவ்வூரின் வரலாற்றைக் கூற வேண்டினன்.  உடனே முனிவன் அவ்வரலாற்றைக் கூறினன்.
                                     

இந்திரன் சம்பந்தமாக நடந்த கதையைச் சொல்லுகிறேன் கேள்.  இராமா!  முன்பு கிருதயுகத்தில் திதி என்பவளுக்கு அசுரர்களும், அதிதி என்பவளுக்குத் தேவர்களும் பிறந் தார்கள்.  தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் என்ன செய்தால் சாவில்லாமலும் கிழத்தனமில்லாமலும் இருக்கலாமென்ற எண்ணமுண்டாயிற்று.  அவர்கள் ஒன்றுகூடி அவ்வாறு எண்ணிப் பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரும் அமுதத்தை உண்டால், அவ்வெண்ணம் முற்றுப்பெறுமெனத் தீர்மானித்துக் கடையத் தொடங்கினர்.  கடலிலிருந்து முதலில் தன்வந்திரியும், பின் அறுபது கோடி அப்ரசப் பெண்களும் தோன்றினர்.  அவர்களை ஒருவரும் கைப்பற்றவில்லை.  பின் வாருணி என்ற பெண் என்னை யாராவது கைப்பற்றுங்கள் என்று கூவித் தோன்றினாள்.  அவளைத் தேவர்கள் கைப்பற்றினர்.  அவளைக் கைப்பற்றினதால், அவர்கள் மயிர்க்கூச்சடைந்து மிக மகிழ்ச்சியுடைவர் களாயினர்.

பிறகு ஒரு குதிரையும் கவுத்துபம் என்னும் மணியும் தோன்றியபின் அமுதமும் தோன்றிற்று.  அவ்வமுதத்தை எடுத்துக் கொள்வதைப் பற்றித் தேவர்களும், அசுரர்களும் சண்டை தொடங்கினர்.  அசுரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.  திருமால் மோகினி உருவெடுத்து அமுதத்தைக் கொண்டு போய் விட்டார்.  இந்திரன் அவரைப் பணிந்து அமுதத்தை வாங்கிக் கொண்டு அசுரர்களையும் கொன்று அரசு செலுத்தினான்.  பிள்ளைகளை இழந்த திதி, வருந்தித் தனது கணவனாகிய காசிபனை யடைந்து தன் வருத்தங்களைக் கூறி இந்திரனைக் கொல்ல ஒரு மகனைத் தர வேண்டினள்.  அம்முனி அவளைத் தொட்டுத் தேறுதல் கூறி, நீ ஆயிர மாண்டு நல்லொழுக்கத்தோடு தவம் செய்தால் இவ்வேண்டு தல் நிறைவேறும் என்றதும், மகிழ்ந்து தவம் செய்தாள்.  அவள் தவம் செய்கையில், இந்திரன் அவளுக்குத் தக்க பணிவிடை செய்தான்.

அவன் அவளுக்கு வேண்டிய தீ, பழம், தருப்பை முதலியவற்றைத் தந்தான்.  அவன் அவளுக்குச் சிரமத்தைப் போக்கும்படியான உடம்பு பிடித்தல் முதலிய பணிவிடை யாவும் எக்காலத்திலும் செய்து கொண்டிருந்தான்.  அவள் தவம் முடியப் பத்து ஆண்டுகளிருக்கும்போது, உனக்குத் தம்பியுண்டாகப் பத்து ஆண்டுகளே உள.  அவன் உன்னை வெல்வதிலேயே எண்ணமுள்ளவனாயினும், உன்னோடு ஒற்றுமையா யிருக்கும்படி சொல்வேன்.  அவனோடு நீ நீடுவாழ்க என்றனள்.  ஒரு நாள் அவள் நடுப்பகலில் தலைமாட்டில் காலை வைத்துத் தூங்கினாள்.  அவள் தலை மாட்டில் காலும், கால்மாட்டில் தலையுமாகப் படுத்துத் தூங்கியதால், ஒழுக்கந் தவறியவளாயினாள்.  அதுகண்ட இந்திரன் அவளுடைய கருவை அழிக்க நல்ல தருணமாயிற் றென மகிழ்ந்தான்.  அவன் அவளுடைய பெண் குறி வழியாக உள்ளே புகுந்து கருப்பத்திலிருந்த குழந்தையை ஏழு துண்டுகளாக அறுக்கத் தொடங்கினான்.  அக்குழந்தை அழத் தொடங்கிற்று.  அதனால், திதி விழித்துக் கொண்டாள்.  இந்திரன் அழ வேண்டாம் அழ வேண்டாம் என்று சொல்லிக் கொஞ்சமும் மனமிரங்காமல் மிகக் களிப்போடு அதைத் துண்டித்து விட்டான்.  பின் இந்திரன் பெண் குறி வழியாக வெளியே வந்துவிட்டான்.  அந்த ஏழு துண்டுகளும் ஏழு மருந்துகளாயின.  இதுதான் திதியின் கருவை இந்திரன் அழித்த இடம்.  வெகு காலத்தின் பின், விசாலன் என்ற ஓர் அரசன் இவ்விடத்தில் விசாலை என்று ஒரு நகரையுண்டாக் கினான்.  அந்நகரே இது.  இதில் அம்மன்னவனின் வழியில் வந்த சுமதி என்ற மன்னன் அரசாள்கிறான்  இவ்விதமாகக் கோசிக முனிவன் கூறினான்.

                        ------------------------"விடுதலை” 24-06-2014

Read more: http://viduthalai.in/page-3/82814.html#ixzz35c5aBJUU

26.6.14

அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் திறனாய்வு

ஆசிரியரின் அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம்-4) கழகத் துணைத் தலைவர் திறனாய்வு
 

சென்னை, ஜூன் 26_ அய்யாவின் அடிச்சுவட்டில்  பாகம்_4  நூல் திறனாய்வுக் கூட்டம் பெரியார் நூலக வாசகர் வட்டம் 19.6.2014 அன்று நடைபெற்றது. பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சுப்பிர மணியம் வரவேற்றார். அய்யாவின் அடிச்சுவட்டில்  பாகம்_-4  நூல் திறனாய்வுக் கூட்டத்தின் இரண்டாம் சொற்பொழிவாக திராவிடர்கழகத்துணைத்தலைவர் பெரியார் பேருரையாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தன் உரையில் நூலில் இடம்பெற்றுள்ள பல்வேறு அரிய தகவல்களை ஆய்வுரையாக எடுத்து விளக்கினார்.

திமுகவின் 40 ஆண்டுகால நகரச் செயலாளராக...

அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம்_4 நூலாசிரி யரைப்பற்றிக் குறிப்பிடும்போது, சிறுவயதிலேயே இயக் கத்தின் பேச்சாளராக இருந்தவர். இயக்கத்திலிருந்து திமுக பிரிவு ஏற்பட்ட காலத்தில், குடும்பத்தில் வழி காட்டியாக, தன்னைவிட  மூத்தவரான சுயமரியாதை சுடரொளி கி.தண்டபாணி கடலூர் திமுகவின் 40 ஆண்டுகால நகரச் செயலாளராக இருந்தவர்.

அடுத்தது தன்னுடைய ஆசிரியர் பொன்னேரி  திராவிடமணி குருநாதர் அவரும் திமுகவுக்கு சென்று விட்டவர். ஆக, குடும்பத்தில் வழிகாட்டி, வெளியே வழிகாட்டி என்று இருவரும் திமுக சென்று விட்டபோது தந்தைபெரியாரின் இயக்கத்திலேயேதான் தொடர்ந்து இருப்பேன் என்று முடிவு செய்தார். சிறு வயது மற்றவர்களைச் சார்ந்து இருக்கும் வயது. தனியே முடிவெடுக்கும் வயதோ, சூழ்நிலைகளோ இல்லாத போதும் உறுதியான முடிவு எடுத்தவர்தான் இன்று திராவிடர் கழகத் தலைவராக உள்ளார் என்று குறிப்பிட்டார்.

உனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்....

கடலூர் வீரமணி என்றுதான் அன்று அழைப் பார்கள். சிறு வயதிலேயே பள்ளி வேலை நாட்கள் போக விடுமுறை நாட்களில் தொடர்ச்சியாக கூட்டங்களுக்கு அழைப்பார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது பொருளாதாரம், நாட்டுநடப்பு, விவசாயம் என்று மூன்று தங்க மெடல்கள் பெற்றுள்ளார்.சிதம்பரம் நடராசர் கோயில் சார்பிலும் தங்க மெடலைப் பெற்றவரும் இவரே. அய்யா ஒருமுறை திருச்சிக்கு வருமாறு தந்தி அனுப்பினார்கள். இவரும் சென்றார்.

அப்போது உனக்கு என்ன வயது என்று கேட்டார் அய்யா. 24 என்று இவர் கூறினார். உனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், வீட்டில் கேட்டு வாருங்கள் என்று கூறினார். நீங்கள் சொன்னால் சரிதான் அய்யா. வீட்டில் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார். பெண் யார் என்று கேட்கவில்லை. பெண்ணைப் பார்க்கவில்லை. அய்யா சொன்னால் சரிதான் என்று அப்படியே ஏற்றுக்கொண்டார். அய்யா நடத்திவைத்த திருமணம் விதவைத்திருமணம். (ரெங்கம்மாள் _ சிதம்பரம்) அவர்களுக்குப் பிறந்த பெண்ணைத்தான் அய்யா கூறினார். அந்த சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று  சட்டப் பாடத்தில் படித்தாரே தவிர அது அவருடைய மாமனார், மாமியார் திரு மணம்தான்  இப்படித்தான் ஆசிரியர் திருமணத்தை அய்யா ஏற்பாடு செய்தார். கடலூரில் நண்பர்களுடன் சேர்ந்து வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டிருந்தார். கடலூரில் வழக்கறிஞர் பணியில் முதன்முதலாக தனியாக வழக்கு எடுத்து நடத்தி அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார்.  ஒரு நாள், அய்யாவிடமிருந்து தந்தி உடனே புறப்பட்டுவருமாறு இருந்தது. 

சிந்தாதிரிப்பேட்டை வீட்டில் சந்திப்பு.

விடுதலை நடத்துவதில் சிரமமாக உள்ளது நிறுத்திவிட்டு திருச்சிக்கு சென்று வாரப் பத்திரிகையாக நடத்தலாம் என்று இருக்கிறேன் என்று கூறியபோது, விடு தலையை நிறுத்த வேண்டாம் என்று விடுதலைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

50 ஆண்டுகாலமாக விடுதலையின் பொறுப்பை ஏற்று நடத்தி வந் துள்ளார். கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதைப் பாராட்டி விடுதலை சந்தாக்களை அளித்தோம். மருத்துவர்களே மருத்துவத்தில் சாத்தியமில்லாதது என்று வியந்தனர்

ஈரோட்டில் அய்யா சிலை திறப்பு விழாவில் முதல் வராக கலைஞர் கலந்துகொள்கிறார். வரலாறு காணாத வகையில் ஏராளமான கூட்டம். முக்கிய மருத்துவர்கள் எல்லாம் கலந்துகொண்டனர். அம்மாவுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். மறுநாள் காலையில்தான் அய்யாவுக்குத் தெரியும். அய்யா மிகவும் துடித்துப்போனார். மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லை. என்னைப் பாதுகாப்ப தற்காக திருமணத்தை ஏச்சு பேச்சுகளுக்கிடையே நடத்தினேன். அதற்குத்தான் கவலைப்படுகிறேன் என்று அய்யா கூறினார்.  அதற்குப் பிறகு  அம்மா வுக்கு நெஞ்சுவலி 7, 8 முறை வந்துள்ளது. மருத்துவர் களே மருத்துவத்தில் சாத்தியமில்லாதது என்று வியந்தனர்.

அய்யாவின் மரண சாசனம் என்று சொல்லக்கூடிய கடைசிப் பொதுக்கூட்டம் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. அய்யாவின் மறைவுக்குப்பிறகு அம்மா தலைவர். பொதுக்குழு 6.1.1974 அன்று நடைபெற்றது. முக்கிய தீர்மானங்கள் ஏழு நிறைவேற்றப்பட்டன. உறுதிமொழி எடுக்கப் படுவதும் அந்தத் தீர்மானத்தில் உள்ளதுதான். அய்யா போட்டுத்தந்த பாதையில் எந்தவித சபலத்துக்கும் இடமின்றி, அவர் விட்டுச்சென்ற பணிகளை வென்று முடிப்போம் என்கிற உறுதிமொழியை அம்மாதான் அளித்தார்கள்.

ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருந்தவர் அய்யா. அதேபோல்தான் ஆசிரியரும்....

அய்யாவால் சும்மா இருக்க முடியாது. உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர்கள் கூறினார்களே என்றால், தேதி கேட்டு வரும் தோழர்களிடம் பேசப் போவது நான்தானே? என்று கேட்பார். 1965 இந்தி போராட்டத்தின்போது 144 தடை உத்தரவு 6 மாதத்துக்கு. குழந்தைபோல் அடம்பிடித்தார் அய்யா. எங்கேயும் போக முடியவில்லையே என்று. ஏனென்றால், ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருந்தவர் அய்யா. அதேபோல்தான் ஆசிரியரும். மருத்துவர்கள் கூறுகிறார்கள் என்று ஓய்வெடுக்க சொல்வார்கள். சிறிது கேட்டுவிட்டு மீண்டும் பேசப்போய்விடுவார். அய்யா ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளுக்கு, அய்யா மறைவுக்குப்பிறகு  அம்மா சென்றார்கள் சூளுரைக் கூட்டங்கள் என்பதுதான் கூட்டத்தலைப்பு. முதல் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கக் கோரும் போராட்டம் அம்மா அறிவித்தார்கள். அஞ்சல் நிலையங்கள் முன்பாக எல்லா இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் அம்மாவும், திருச்சியில் ஆசிரியரும் கலந்துகொண்டார்கள்.

முதல்வர் கலைஞர் சட்டசபையில் இந்தப் போராட்டம் குறித்து பேச்சு வந்தது. ஏற்கெனவே சட்டம் போட்டோம். இப்போதும் மத்திய அரசுக்கு கோரிக்கை அரசு சார்பில் அனுப்புவோம் என்று அனுப்பி இன்னமும் உள்துறையில் உள்ளது. மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் கருப்புக்கொடி காட்டுவது என்று அம்மா முடி வெடுத்து, மத்திய  இராணுவ அமைச்சராக இருந்த ரகுராமய்யா வந்தபோதும், அப்போதைய உள்துறை அமைச்சர் ஒய்பி சவான் வந்தபோதும் கருப்புக்கொடி காட்டப்பட்டது. மூன்றாம் முறையாக ஒரு மத்திய அமைச்சர் போலோ பஸ்வான் சாஸ்தா வரும்போது, முதல்வராக இருந்த கலைஞர் இப்போது வருபவர் ஒரு தாழ்த்தப்பட்டவர், நம் கொள்கையில் உள்ளவர். அவருக்கு கருப்புக்கொடி காட்டவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் காட்டவில்லை.  அய்யாவின் வீட்டை, அரசு சார்பில்  நினைவு இல்லமாக்குவதற்கு அந்த வீட்டை அம்மா எந்தப் பணமும் வாங்காமல்தான் கொடுத்தார்கள். பெயர் வைக்கும்போது, அய்யா, அண்ணா நினைவு இல்லம் என்று பெயர் வைக்குமாறு கூறினார். அய்யாவுடன் சிறிது காலம் அங்கேயே தங்கியிருந்து அண்ணா பணியாற்றினார் என்பதால் அம்மா அப்படிக் கேட்டுக்கொண்டார். ஈரோட்டில் நினைவு இல்லம் திறப்பு விழாவில் கலைஞர்பேசும்போது, ஒரு பெண் தன் கையில் உள்ள கரண்டியில் ஏதுமின்றி உள்ளார். அடுத்த பெண் கையில் உள்ள கரண்டியில் உளுந்து உள்ளது. வெறும் கரண்டியுடன் உள்ள பெண் வேகமாக சுழற்றுகிறார்.

உளுந்து உள்ள கரண்டியை அடுத்த பெண் மெது வாகத்தான் சுழற்ற முடிகிறது. அதுபோல், நானும் வேகமாக இருக்க வேண்டுமானால் இருந்துவிடு கிறேன் என்று பேசினார். அம்மா அப்படி எல்லாம் ஒன்றும் செய்து விடா தீர்கள் என்று கேட்டுக்கொண்டார். 

தருமபுரி மாவட்டத்தில் நாகரசம்பட்டி என்கிற ஊர் முழுவதுமாக அய்யாவுக்கே கொடுத்துவிட்ட ஊராக அப்படி இருக்கும். அண்ணா முதல்வர் பொறுப்பேற்று அய்யாவுடன் நாகரசம்பட்டியில் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இதேபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது அண்ணா ஆட்சியை கவனிக்கட்டும் என்று பெரியார் கூறினார். ஈரோடு அய்யா-அண்ணா நினைவு இல்லம் திறப்புவிழாவுக்கு மறுநாள்  திரு வண்ணாமலையில் அய்யா சிலை திறப்பு நிகழ்ச்சி. அதிலும் கலைஞர் கலந்துகொண்டார். அய்யா கூறியதுபோலவே அம்மாவும் கூறி உள்ளார் என்று சுட்டிக்காட்டிப் பேசினார்.

அய்யா இருக்கும்போது, சிந்தாதிரிப்பேட்டை வீட்டை அம்மாவின் பெயருக்கு எழுத வேண்டும் என்று எண்ணிய அய்யா ஆசிரியரின் அடையாறு வீட்டில் இருந்தார். அப்போது பதிவு செய்வதற்கு அதிகாரி வந்து விடுவார் என்று சொன்னபோது, அவர் இங்கு வந்தால் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்குமே என்று கேட்டபோது, ஆம் என்றார். பதிவு அலுவலகத்துக்கே சென்று பதிவு செய்தார். பிற்பாடு அம்மாவுக்குத் தெரிந்து ஆசிரியர் ஏன் என்னிடம் கூறவில்லை என்று கேட்டபோது, அவர் தலைவர், அவர் கூறியபடி நடந்துகொண்டேன். தலைவருக்குக் கட்டுப்பட்டவன்தானே  நான் என்றார்.

கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி ஆசிரியர் முயற்சியால்தான்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மா அவர்கள், தம் பெயரில் இருந்த சொத்துக்களை அறக் கட்டளை ஆக்கினார். அதன் நிரந்தர செயலாளராக ஆசிரியரை நியமித்தார்.

அம்மாவுக்குப் பிறகு அந்த அறக்கட்டளைமூலம் ஏராளமான கல்வி நிறு வனங்கள் செயல்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங் கள் வளர்ச்சி ஆசிரியர் முயற்சியால்தான். நான் இங்கு வந்தபோது ஓராண்டு என்றுதான் ஆசிரியர் கூறினார். ஆனால், இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

நான் இங்கு வந்தபோது வாட்ச்மேன் உட்பட 15 பேர்தான் பணியில் இருப்பார்கள். அனைவருமே வயதானவர்களாக இருப்பார்கள். நான் ஒருவன்தான் இளைஞன். இப்போது பல்வேறு பணிகள் நடை பெறுகின்றன. 200 பேர் பணியாற்றுகிறார்கள். இது வளர்ச்சியின் அறிகுறி!

இரண்டு பேருந்துகள் மூலம் நடமாடும் புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் நம் நூல்கள் என்று கடந்த ஆண்டு புத்தக விற்பனை ஒரு கோடிக்குமேல்.

பெரியார் இருந்த காலத்தைவிட மறைவுக்குப்பிறகுதான் அதிகம் பேசப்படுகிறார்

ஜெர்மனிக்கு ஆசிரியர் சென்றபோதுகூட புத்தகங்களுடன்தான் சென்றார்.
அங்குள்ள பேராசிரியர்கள் புத்தகங்களை விற்றுள்ளனர்.

பெரியார் இருந்த காலத்தைவிட மறைவுக்குப்பிறகுதான் அதிகம் பேசப் படுகிறார்.

இப்போதுதான் நம்முடைய பணிகள் அதிகமாக தேவைப்படுகிறது. இந்தியில்தான் தொடர் புகள் இருக்க வேண்டும் என்று செய்திகள் வருகின்றன.
நம் பணிகள் அதிகம் ஆகின்றன. காலத்தின் மாறுதலுக்கேற்ப வளர்ச்சிக்கேற்ப களப்பணிகள், பயிலரங்குகள் ஆசிரியர் செய்து வருகிறார். 

அய்யா வுக்கு அஞ்சல் தலை வெளியிட பத்து நாட்கள் இருக்கும்போது, ரத்து செய்துள்ளதாக செய்தி. தொடர்பு கொண்டு கேட்டபோது, நூற்றுக்கணக்கான தந்திகள் சென்றனவாம்.

அவர் அரசமைப்புச் சட்டத் தைக் கொளுத்தியவர், தேசத்துக்கே எதிரானவர் என்று தந்திகளில் இருந்தது. ஆசிரியர்தான் மிக நுண்மாண்நுழைபுலத்துடன் தந்தி அனுப்பியவர்களின் முகவரியைக் கேட்டார். முகவரியே இல்லாமல் எதிரிகள் அனுப்பிய விவரம் தெரிந்தது. அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. நீதிபதிகள் கலந்துகொண்டு வெளியிட்டனர். பிற்போக்கு அமைப்புகள் முற்போக்கு கருவிகளைப் பயன்படுத்தி வந்து விடுகிறார்கள். 

நெருக்கடிக்காலத்தில் வாசகர் வட்டம் தொடங் கப்பட்டது. டில்லி, மும்பை தமிழ்ச்சங்கங்களில் தினமணி போய்ச் சேருகிறது. தினமணி, சாஸ்திரா, சென்னை பல்கலைக்கழகம் இணைந்து நிகழ்ச்சி நடக் கிறதாம். தமிழுக்கும் தினமணி வைத்தியநாதய்யர் களுக்கும் என்ன தொடர்பு?  இந்த ஆட்சி வந்ததுமே முதல் கையெழுத்து நூலகங்களில் விடுதலை கூடாது என்பதுதான். ஒரு முதல்வருக்கு வேறு வேலை இல் லையா? அவர்கள் சரியாக இருக்கிறார்கள். நாம்தான் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

-_ இவ்வாறு திராவிடர் கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.

கூட்டத்தில் பேராசிரியர் மங்களமுருகேசன், புலவர் வெற்றியழகன், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை வீரபத்திரன், மருத்துவர் க.வீரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பெரியார் நூலக வாசகர் வட்ட ஆயுள் உறுப்பினர் மனோரஞ்சிதம் அம்மையாருக்கு எழுத்தாளர் சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளைமூலம் விருது வழங்கப்பட்டமைக்கு அறக்கட்டளையினருக்கு நன்றியும், விருது பெற்ற மனோரஞ்சிதம் அம்மை யாருக்குப் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது

                      --------------------------”விடுதலை” 26-06-2014