Search This Blog

17.1.09

கலைவாணருக்கு பெரியார் கொடுத்த அஸ்திவார அறிவு




கலைவாணர் நூல்கள் வெளியீடு
மற்றும் இணையதளத் தொடக்க விழா


தமிழன் தன்வரலாறு எழுத மறந்ததால் தமிழனுக்கு வரலாறில்லை -
கலைவாணரின் ஆசான் "குடிஅரசு" ஏடுதான்

கலைவாணர் அவர்களுடைய விழா அடுத்து
நாகர்கோயிலில் கழகம் சார்பில் நடைபெறும் சென்னையில்
தமிழர் தலைவர் அறிவிப்பு - அறிஞர்கள் எம்.எஸ். உமர்,

சென்னையில் தமிழர் தலைவர் அறிவிப்பு -
அறிஞர்கள் எம்.எஸ். உமர், மறைமலை
இலக்குவனார் பங்கேற்றுப் பாராட்டு


கலைவாணர் அவர்களுடைய விழா அடுத்து நாகர்கோயிலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் - தமிழர்கள் தன்வரலாறு எழுத மறந்ததால் தமிழனுக்கென்று வரலாறு இல்லை என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நேற்று நடைபெற்ற கலைவாணர் நூல்கள் வெளியீட்டு விழாவில் அறிவித்தார்.

கலைவாணர் அவர்களின் நூல் வெளியீட்டு விழா, மற்றும் இணையதளம் தொடக்க விழா கலைவாணர் குடும்பத்தின் சார்பில் 12-1-2009 அன்று மாலை 6-15 மணிக்கு சென்னை எழும்பூர் கன்னிமரா நூலக அரங்கில் மிகச் சிறப்பானதொரு குடும்ப உறவு விழாவாக கொள்கைப் பிரச்சார விழாவாக, கலைவாணர் அவர்களுடைய புகழைப் பரப்பும் உணர்ச்சி மிக்க பெருவிழாவாக நடைபெற்றது.

பாரதி மனோகரன்

இந்நிகழ்ச்சியில் வெலிங்டன் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியை பாரதி மனோகரன் தொடக்கவுரையையும், இணைப்புரையையும், அறிமுகவுரையையும் நிகழ்த்தினார்.

என்.எஸ்.கே.கிட்டப்பா

அடுத்து, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் மகன் என்.எஸ்.கே. கிட்டப்பா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது. 17 வயதில் என் தந்தை இறந்துவிட்டார். என் தந்தையின் பெருமையை நாங்கள் அறிந்தவற்றைவிட, மற்றவர்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

பெரியாரின் அஸ்திவார அறிவு

பண்டிகைக் காலங்களில் உடன் பணியாற்றுபவர்கள், மற்றும் நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வார். காரில் செல்லும்போது கூட டிராபிக் கான்ஸ்டேபினை அழைத்து பணம் கொடுத்து பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்துக் கூறி விட்டுச் செல்வார். என் தந்தையாரின் தனித்தன்மையே தந்தை பெரியார் கொடுத்த அஸ்திவார அறிவுதான் காரணம்.

என் தந்தையார் இறந்த செய்தி கேட்டு

என் தந்தை இறந்த செய்தியைக் கேட்டு கூட்டம் அலை மோதியது. 36 அடி - 40 அடி சுவரை உடைத்துக் கொண்டு மக்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுத காட்சியை என்னால் மறக்க முடியவில்லை. நாங்கள் இருக்க நீ இறந்துவிட்டாயே. இந்த உயிர் எதற்கு? என்று என் தந்தையின் உடலை ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும்பொழுது மக்கள் கதறிய காட்சியை மறக்க முடியவில்லை.

எல்லாம் முடிந்துவிட்டது

எல்லாம் முடிந்துவிட்டது. உம் பாடியை வண்டியில் ஏற்றுங்கள் என்று சொன்னவர் அந்த நடிகர் - யார் என்பது உங் களுக்குத் தெரியும். அவர்தான் எம்.ஆர்.ராதா. அவருடைய காரில் தான் என்னுடைய தந்தையார் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

என்னுடைய தந்தையார்தான் அந்தக் காலத்தில் நாகர்கோவில் நகரத்தில் காந்தியாருக்கு ஒரு நினைவுத் தூணையே அமைத்தவர் என்று கூறினார்.

கலைமாமணி டாக்டர் எஸ்.எம்.உமர்

கலைவாணருடன் நீண்ட காலம் நெருங்கிப் பழகிய நண்பர் டாக்டர் எஸ்.எம். உமர் - தமது உரையில் குறிப்பிட்டதாவது:

கலைவாணர் என்று இன்றைக்கு அழைக்கிறார்கள். அந்தக் காலத்தில் என்.எஸ்.கே. என்றுதான் அழைப்பார்கள். என்.எஸ்.கே. அவர்கள் அந்தக் காலத்திலிருந்து தான் மறையும் இறுதி நாள் வரை அதே மரியாதையோடு இருந்து மறைந்தார்.

தனக்கென சொத்து சேர்க்கவில்லை

அவர் எல்லோருக்கும் தானம் வழங்கினார். தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு இன்முகத்தோடு தானம் வழங்கினார். அவர் தனக்கென எந்தச் சொத்தையும் சேர்க்க வில்லை.

ஒன்றே ஒன்று அவர் செய்த காரியம். தன் பிள்ளைகள் எல்லோரையும் நன்றாகப் படிக்க வைத்து ஆளாக்கினார். தியாகராஜ பாகவதர் இருந்தார். பி.யு. சின்னப்பா இருந்தார். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் யாரும் படிக்கவில்லை.

மிருகங்கள் மீதும் இரக்கம் கொண்டவர் கலைவாணர் அவர்கள் மனிதர்களிடம் மட்டும்தான் அன்பு காட்டினாரா என்றால் - இல்லை மிருகங்களுக்கும் இரக்கம் காட்டினார் ஒருமுறை அவர் காரில் போய்க்கொண்டு இருந்தபொழுது கொளுத்தும் வெயிலில் ஒரு குதிரை வண்டியில் ஒரு மனிதன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். ஆனால் அந்த கொளுத்தும் வெயிலில் குதிரை நின்று கொண்டிருந்தது.

இதைப் பார்த்தவுடன், உடனே அவர் - குதிரைகள் நிழலில் நின்று இளைப்பாறுவதற்கென்றே ஒரு பெரிய நிழற்குடையை திருச்சியில் கட்டிக் கொடுத்தார். அதை இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம்.
எந்த நடிகரும் செய்யாத காரியத்தை செய்த மாபெரும் மனிதர்.

என் தலையில் நெருப்பை வைடா!

ஒரு முறை நாகூர் பாட்சா பத்து இருபது பேரை வைத்து நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். நாடகம் நலிந்த நிலையில், நடத்திக் கொண்டிருந்தார். என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களை நாடகம் பார்க்க அழைத்தால் நல்ல விளம்பரம் கிடைக்கும், வசூல் ஆகும் என்று நினைத்து என்எஸ்.கே.வை நாடகத்தைப் பார்க்க அழைத்தார். என்.எஸ்.கே.வும் நாடகத்தைப் பார்த்தார். அதில் ஒரு காட்சி - நாகூர் பாட்சா தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார். ஒரு சிறுவன் நெருப்புடன் அவரிடம் வருவான். இதை என்ன செய்வது? என்று கேட்பான். என் தலையில் வைடா! என்று சொல்லுவார். அந்தக் காட்சி சிறப்பாக இருந்தது.

உடனே 500 ரூபாய் கொடுத்தார்.

உடனே என்.எஸ்.கிருஷ்ணன், பாட்சாவை அழைத்து இந்தக் காட்சியை நாடகத்தில் புகுத்தப் போகிறேன். இந்தக் காட்சியின் அனுமதிக்காக அய்ந்நூறு ரூபாய் பிடி என்று கொடுத்தார். அவர் காட்சியைத் திருடவில்லை. நேர்மையாக நடந்து கொண்டார். ஆனால் இன்றைக்கு அவருடைய நகைச்சுவைக் காட்சிகளைத் திருடியவர்கள் நன்றி என்று கூட போட மறுக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் பாராட்டியிருக்கின்றார். நாங்கள் பல நாள் செய்கின்ற பிரச்சாரத்தை கிருஷ்ண நீ ஒரு நாடகத்தின் மூலம் அவ்வளவு கொள்கைகளையும் பிரச்சாரம் செய்கின்றாயே என்று பாராட்டியிருக்கின்றார். திராவிடர் கழக மேடையில் அவரைப் பற்றிச் சொன்னால் கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதையாகும். அவர் வாழும்பொழுது எப்படி சிரித்துக் கொண்டே வாழ்ந்தாரோ அதே போல சாகும் பொழுதும் சிரித்துக் கொண்ட மறைந்தார். இவ்வாறு மேலும் ஏராளமான செய்திகளை கூறினார்.

மறைமலை இலக்குவனார்

கலைவாணர் அவர்களைப் பற்றி ஏறத்தாழ 22 ஆயிரத்து 300 களங்களில் குறிப்புகள் இருக்கின்றன. இது சரியா? தவறா? என்பதைச் சொல்ல முடியாது.

122 படங்களில் ஒன்றாக நடித்த தம்பதியினர்

122 படங்களில் கலைவாணர் அவர்களும் அவருடைய துணைவியார் மதுரம் அம்மையார் அவர்களும் இணைந்து நடித்திருக்கின்றனர்.

உலக வரலாற்றிலேயே இப்படி ஒரு தம்பதியினர் ஒற்றுமை யாக இவ்வளவு படங்களில் நடித்தது வேறு எங்குமே கிடையாது. கலைவாணர் தான் மட்டும் சம்பாதித்த சொத்துக்களை கொடுக்கவில்லை. டி.ஏ.மதுரம் அவர்களும் அத்தனையையும் மற்றவர்களுக்கே வழங்கினார்.

கதாநாயகர்கள் அஞ்சி நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கதாநாயகர்களை விட அஞ்சாமல் நடித்து நல்ல பல கருத்துக்களைச் சொன்னவர் கலைவாணர். 1940 ஆம் ஆண்டிலேயே பனிச்சறுக்கு (ஸ்கேட்டிங்) விளையாட்டை மக்களுக்கு நடித்துக் காட்டியவர் கலைவாணர்.

எஸ்டேட்டுகளை வாரி வழங்கியவர்

நாஞ்சில் நாட்டில் நன்செய் பயிர்கள் விளையும் பல நூறு ஏக்கரா எஸ்டேட்டுகளை மற்றவர்களுக்காகக் கொடுத்தவர். கல்வி, ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை, பொதுவுடைமைக் கருத்துகளை நாட்டு மக்களிடத்திலே பரப்பியவர்.

இன்றைக்கும் கலிஃபோர்னியாவில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படும் பொழுது கலைவாணர் அவர்களுடைய கருத் துக்களை வைத்திருக்கிறார்கள் என்றால் அவருடைய அறிவு ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள முடி கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது: இந்த விழா ஒரு கொள்கை விழாவாக, குடும்ப விழாவாக, கல்விக் குடும்ப விழாவாக, உறவுக் குடும்ப விழாவாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழா ஒரு சிறிய அரங்கத்தில் நடைபெற்றாலும் உலகளாவிய அளவிலே அவருடைய புகழைப் பரப்பக்கூடிய பணியைச் செய்திருக்கின்றார்கள். அத்தகைய வாய்ப்பை அன்புக் கொடி - நல்லதம்பி அவர்கள் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

கலைவாணருடைய ஜீன்ஸ்

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அய்ந்தாயிரம் ரூபாயை நன்கொடையாக கொடுத்திருக்கின்றார்கள். கலைவாணருடைய ஜீன் என்பதை உதவி செய்யும் மனப்பான்மையைக் காட்டியிருக்கின்றார்கள். அதற்காக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பி.எச்.டி. ஆய்வுக்குரிய நூல்

சமூக விஞ்ஞானி கலைவாணர் என்ற நூலை அன்புக்கொடி நல்லதம்பி அவர்கள் கொடுத்தார்கள். தனித்தனியே இருந்த செய்திகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பி.எச்டி. ஆய்வுக் குரிய நூலாக இதை அவர்கள் தயாரித்து வெளியிட்டிருக்கின்றார். கலைவாணர் அவர்களைப்பற்றி வேறு எந்த நூலிலும் இவ்வளவு செய்திகள் வரவில்லை.

இந்த நூலை மட்டும் படித்தால் போதும்

அவர் எழுதிய இந்த ஒரு நூலை மட்டுமே படித்தேன் - கலைவாணர் அவர்களைப் பற்றி அவ்வளவு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு இந்த நூலை மிகச் சிறப்பாகத் தயாரித்திருக்கின்றார்கள்.

பொதுவாக நம்மைப் போன்றவர்களுடைய சிந்தனை என்றைக்கும் ஒன்றாக இருக்கும். இந்த நூலின் தலைப்பே சமூக விஞ்ஞானி கலைவாணர் என்பதுதான். 2 மணிநேரம் அல்ல இரண்டு நாட்கள் வரை இந்த நூலைப் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம் (மற்றொரு நூல் கலைவாணர் சிந்தனைத் துளிகள்)

எனக்கு மன அழுத்தமோ, அல்லது மனச் சங்கடமோ ஏற்படும் பொழுது கலைவாணர் அவர்களுடைய நகைச்சுவைகளை என் குடும்பத்தார் உட்பட பார்ப்பது வழக்கம். ரிலாக்சேஷன் எனக்குத் தேவை என்று மருத்துவர்கள் சொன்ன அறிவுரையாகும்.

சிரிப்புதான் உடலுக்கு நல்ல மருந்து

சிரிப்புதான் உடலுக்கு நல்ல மருந்து. சிரிப்பில் எத்தனை வகையான சிரிப்பு என்பதையே அவர்கள் நடித்துக் காட்டியி ருக்கின்றார்கள் திரைப்படத்தில் வஞ்சகச் சிரிப்பு எப்படியிருக்கும், கேலிச் சிரிப்பு எப்படி இருக்கும் மகிழ்ச்சிச் சிரிப்பு எப்படியிருக்கும் என்பதை நடித்துக் காட்டியிருக்கிறார்.

தேன் தெவிட்டாது அல்லவா?

கலைவாணரின் நகைச்சுவைக்காட்சிகள் - செய்திகள் தலை முறை இடைவெளி இல்லாதது. மக்களை வென்றவர் அவர். அன்புக்கொடி நல்லதம்பி அவர்கள் எழுதிய நூலை முழுவது மாகப் படித்தேன், சுவைத்தேன், முடித்தேன். தேன் தெவிட்டாது அல்லவா? அதுபோல இந்த நூலில் உள்ள அவ்வளவு செய்திகளும் தெவிட்டாத செய்திகள். இங்கே வந்திருக்கின்றவர்கள் நூல்களை வாங்க வேண்டும்.

மேலே மேலே படிக்க வேண்டும். ஒரு முறை படித்த பொழுது ஒரு செய்தி விளங்கும். அடுத்து முறை படிக்கும் பொழுது இன்னும் ஆழமான செய்திகள் நமக்கு விளங்கும். டாக்டர் உமர் அவர்கள் கலைவாணர் அவர்களைப் பற்றி நிறைய செய்திகளைச் சொன்னார். நான் அவரிடம் கூடக் கூறினேன். வாய்ப்பு கிடைக்கும்பொழுது, அல்லது ஓய்வாக இருக்கும் பொழுது அல்லது காரில் பயணம் செய்யும்பொழுது, இவைகளை எல்லாம் டேப் ரிகார்டரில் பதிவு செய்யுங்கள். இன்றைக்கே மிகச் சிறிய டேப் ரெக்கார்டர் எல்லாம் வந்துவிட்டது. இது போன்ற டேப் ரெக்கார்டர் மூலம் அந்த செய்திகளை எல்லாம் பதிவு செய்து நூலாகக் கொண்டு வரலாம்.

தமிழன் தன் வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும்

தமிழன் தன்னுடைய வரலாற்றைப் பதிவு செய்ய மறந்த காரணத்தால்தான் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு இல்லாத கொடுமையான சூழ்நிலை ஏற்பட்டது. நம்மவர்கள் நம்முடைய பிள்ளைகள் யாரைக் கேட்டாலும் வெளிநாட்டுக்காரரான எட்டாம் ஜார்ஜ் பெயரைச் சொல்லு கிறார்கள். ஏழாம் எட்வர்டு பெயரைச் சொல்லுகிறார்கள். உன்னுடைய தாத்தா பெயர் என்ன? என்று கேளுங்கள். நம்முடைய பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை.

குடிஅரசு எனது ஆசிரியர்

தந்தை பெரியார் அவர்களை ஈர்த்தவர் என்.எஸ்.கே. அவர்கள் இவ்வளவு சிறப்பாக நடிக்கிறீர்களே. இவ்வளவு ஆற்றலோடு திகழுகின்றீர்களே. உங்களுடைய ஆசிரியர் யார் என்று கேட்ட பொழுது தந்தை பெரியார் அவர்களின் குடி அரசு ஏடுதான் எனக்கு ஆசிரியர் என்று சொன்னார். தந்தை பெரியார் அவர் களுடைய பகுத்தறிவுக் கருத்துக்களை, கொள்கைகளை, நாடகங் கள் மூலமாகவும் திரைப்படங்களின் மூலமாகவும் பரப்பிய பெரும் துணிச்சல்காரர்.

அய்யோ கிருஷ்ணா உனக்கா 14 ஆண்டுகள் தண்டனை?

கலைவாணர் அவர்களுக்கு 14 வருட தண்டனை கிடைத்த பொழுது செய்யாத குற்றத்துக்கு ஜென்ம தண்டனையா? அய்யோ கிருஷ்ணா உனக்கா 14 ஆண்டுகள் தண்டனை? என்று தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு இதழில் எழுதிய உணர்ச்சி பூர்வமான தலையங்கம் நமக்குக் கண்ணீரை வரவழைக்கக் கூடிய தலையங்கமாகும்.

அது மட்டுமல்ல. கலைவாணர் அவர்கள் சிறைச்சாலையில் இருந்த பொழுது அவரை சந்தித்து வழக்கு நடத்த பத்தாயிரம் பணம் கொண்டு வந்திருக்கின்றேன் என்று பெரியார் சொன்னார்.

1940-களில் ரூபாய் பத்தாயிரம் என்பது . .

தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொரு காலணாவையும் முடிச்சுப் போட்டு, முடிச்சுப் போட்டுதான் இவ்வளவு நிறுவனங் கள் வளர்ந்திருக்கின்றன. மீண்டும் அந்தப் பணம் பொது மக்களுக்கே சென்று கொண்டிருக்கின்றன.

அப்படிப்பட்ட பெரியார் அவர்கள்தான் கலைவாணரைச் சந்தித்து உருக்கமாகச் சொன்னார். இதோ பத்தாயிரம் ரூபாய் கொண்டு வந்திருக்கின்றேன். இன்னும் பணம் தருகிறேன்.

பெரிய, பெரிய வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வெளியே வாருங்கள் என்று 1940 ஆம் ஆண்டு அந்தக் காலத்திலே பெரியார் அவர்கள் இப்படிச் சொன்னார் என்றால் கலைவாணர் அவர்கள் மீது எத்தகைய அன்பை, பற்றை வைத்திருந்தார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

1931-ஆம் ஆண்டுகளில் கிராமியக் கலைக்கு வில்லுப்பாட்டு களின் மூலம் புத்துயிர் ஊட்டினார் விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி என்று அந்தக் காலத்திலேயே பாடினார்.

சுயமரியாதைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்

கலைவாணர் அவர்கள் சுயமரியாதைக்கு ஒரு இலக்கணமாகத் திகழ்ந்தார். கலைவாணர் அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார். கலைவாணர் அவர்கள் ஆங்கிலத்தில் சொல்ல, இன்னொருவர் ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தச் செய்தியை கலைவாணர் அவர்களே சொல்லி இருக்கின்றார்.

இந்தியாவைப் பற்றி மேலும் சொல்லிக் கொண்டு வரும் பொழுது, நம் டைரக்டர் சுப்பிரமணியம் அவர்கள் எங்கள் இந்தியாவிலே கம்யூனிசமும், காந்தியமும் ஒன்றுதான் என்று சொன்னவுடன் மொழி பெயர்ப்பாளன் இல்லை (நோ) என்று சொன்னார். சொல்கிறாயா? இல்லையா?

நான் சொல்வதெல்லாம் பொய் என்று அவன் சொன்னான். நம் டைரக்டர் சுப்பிரமணியம் அவர்கள் கம்யூனிசம் ஏரோப் பிளேனில் பறக்கிறது. காந்தியம் கட்டை வண்டியில் செல்கிறது. அதைச் சொல் என்றார். உடனே முடியாது என்று சொன்னான். சொல்கிறாயா? இல்லையா? நான் சொல்வதை நீ சொல்லவேண்டியது உன் கடமை என்று சொன்னார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. அடக்க முடியவில்லை. சொல்கிறாயா என்ன? என்றேன். இவ்வளவும் நல்ல ஆங்கிலத்தில் கேட்டேன். அப்படி நான் சொல்ல முடியாது என்றான். எனக்குக் கோபம் வந்துவிட்டது.

உங்கள் சாப்பாடும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டேன். இதெல்லாம் தமிழில்தான் பேசினார். எழுந்து போனவுடன் மாஸ்கோ விஸ்கி என்ன என்று கேட்டார். அவருக்கு விவரம் சொல்லப்பட்டது. அந்த ஆளைக் கொண்டு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்க வைத்தனர் என்று கலைவாணரே சொல்லுகின்றார்.

இந்தச் செய்தி அன்புக்கொடி நல்லதம்பி எழுதிய சமூக விஞ்ஞானி கலைவாணர் என்ற நூலில் உள்ளது. இப்படி தனது சுயமரியாதையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காதவர் கலைவாணர் அவர்கள்.

அண்ணா அவர்களின் கடைசி பொது நிகழ்ச்சி

1969 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கின்ற நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளில் சென்னை தியாகராய நகர் வாணிமகால் அருகேதான் - கலைவாணர் அவர்களுடைய சிலையைத் திறந்து வைத்தார். இதுதான் அண்ணா அவர்களின் கடைசிப் பொது வாழ்வு நிகழ்ச்சி.

1947-ஆம் ஆண்டு வானொலி நிலையம் கலைவாணரைப் பேச அழைத்தது. விடுதலைக்காக உழைத்த தலைவர்களைப் பற்றி கலைவாணர் அவர்கள் சொல்லிக் கொண்டே வந்தார். தந்தை பெரியார் பெயரை கலைவாணர் சொன்னவுடன் வானொலி நிலையத்தார் தந்தை பெரியார் பெயரைச் சொல்லாதீர்கள் என்று சொன்னார்கள்.

வானொலி நிலையத்திலிருந்து திரும்பிவிட்டார்

பெரியார் பெயர் இதில் இடம் பெறவில்லை என்றால் இந்த நிகழ்ச்சியே எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு அப்படியே வெளியே வந்தவர்தான் கலைவாணர் அவர்கள்.

அன்புக்கொடி நல்லதம்பி எழுதிய இந்தப் புத்தகம் அறிவியல் பூர்வமான, சரித்திர பூர்வமான புத்தகம் என்பதைச் சொல்லி அவர்களைப் பாராட்டுகிறேன். அதேபோல கலைவாணர் அவர்களைப் பற்றி தெரிந்து இணைய தளம் தொடங்குவதற்குக் காரணமாக இருந்த கலைவாணர் அவர்களுடைய பெயர்த் தியையும் பாராட்டுகிறேன்.

அடுத்து - நாகர்கோவிலில் கலைவாணர் விழா

கலைவாணர் அவர்களுடைய விழா அடுத்து நாகர்கோவிலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும். இவ்வாறு பேசிய தமிழர் தலைவர் மேலும் ஏராளமான கருத்துக்களைக் கூறினார்.

இறுதியாக அன்புக்கொடி நல்லதம்பி ஏற்புரை ஆற்றினார். நல்லதம்பி அவர்களுக்கு 60-ஆவது பிறந்தநாள் விழாவை தமிழர் தலைவர் அவர்கள் பரிசுப் பொருட்களை வழங்கி நல்லதம்பி - அன்புக்கொடி தம்பதியினரை வாழ்த்தினார்.

விழாவில் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை, கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு முதலியோர் கலந்துகொண்டனர். இறுதியாக அன்புக்கொடி - நல்லதம்பி ஏற்புரை ஆற்றினார்.

கலைவாணரின் மகன் பொறியாளர் என்.எஸ்.கே. நல்லதம்பி நன்றி கூறினார்.

1 comments:

த மி ழ் இ னி யா said...

காலத்தால் அழிக்கமுடியாத, மறக்க முடியாதவர்களில் கலைவாணர் அவர்களும் ஒருவர்.