Search This Blog

28.1.09

தந்தைபெரியார் யாரைப் "பெரியவர்" என்று அழைப்பார்?



பெரியாரிடம் பெற்ற பெரு ஊதியம்


முதல்வர், டாக்டர் கலைஞர் அவர்களுக்குச் சிலை அமைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் அறிவித்ததோடு சில நாள்களில் சில தனி நபர்கள் - பற்றாளர்களும் நன்கொடை அளிக்கவே செய்தனர். அப்படிப் பெயர் கூற விரும்பாத ஓர் ஆர்வலர் ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்ததையும் விடுதலை நாளேட்டில் (21.8.1971) பெட்டிச் செய்தியாக வெளியிட்டு மகிழ்ந்தோம்.

சிலைக்குழுவின் செயலாளராகவும், பொருளாளராகவும் என்னை தந்தை பெரியார் அவர்கள் நியமித்து அறிவித்த நிலையில், முறையான கணக்குத் தேவை என்பதற்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் கதீட்ரல் கிளையில் ஒரு தனிக் கணக்கே துவங்கினோம்.

அதிலிருந்துதான் சிலை வடிக்கும் சிற்பி முதலியவர்களுக்குரிய தொகை, மற்ற செலவினங்களைச் செய்தோம்.

சிலை தயாராகியது என்றாலும் தனக்கு உடனே சிலை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற அடக்க உணர்ச்சியினால், முதல்வர் கலைஞர் அவர்கள் கூறிய நிபந்தனையான - சென்னையில் தி.மு.க. சார்பில் பெரியாருக்கு சிலை வைப்பதை, காலந்தாழ்த்திக் கொண்டே காலத்தைக் கடத்தினார்!

என்னைப் பொறுத்தவரை நான் எந்தச் செயலுக்காகவும் தந்தை பெரியார் அவர்களின் கடுஞ்சொல்லுக்கோ, கண்டனத்திற்கோ, தண்டனைக்கோ, கோபத்திற்கோ, தவறுக்கான தண்டனைக்கோ ஆட்பட்டவனாக பொது வாழ்வில் இல்லை என்ற மன நிறைவுதான் நான் எனது ஆசான் அய்யாவிடம் பெற்ற பெரு ஊதியம் ஆகும்!

அப்படிப்பட்ட நிலையில் எதனையும் கட்டுப்பாட்டுடன் செய்து, தலைவர் தம் நோக்கம் அறிந்து செயல்பட்டு வந்த என்னைக்கூட (செல்லமாக) கோபித்துக் கொண்டார் அய்யா அவர்கள்.

என்னப்பா, நான் அறிவித்து எத்தனை மாதங்கள் ஆகிவிட்டன? கலைஞருக்குச் சிலை வைப்போம் என்று! நீங்கள் இப்படி அலட்சியமாய் இருந்தால் எப்படி? பொறுப்புணர்வு வேண்டாமா? என்று சற்று குரலை உயர்த்தி தனது விருப்பம் விழைவு ஆசை கலந்த ஆவேசத்தை வெளிப்படுத்தினார் அய்யா அவர்கள்.

நான் உடனே, சிலை எல்லாம் செய்து முடித்தாகி விட்டதய்யா; கலைஞர் அவர்களின் அனுமதி கிட்டவில்லை. அவர் முன்பே அறிவித்தபடி தங்களது சிலையை அவர்களது (தி.மு.க.) கட்சியின், சார்பில் வைத்து முடித்த பிறகுதான் என்பதால், அதற்காக நாமும் பொறுத்து இருக்க வேண்டியுள்ளது, என்ன செய்வது என்று நாம் தயங்க வேண்டியுள்ளது என்று விளக்கியவுடனே எனது சங்கடமான சூழ்நிலையை அய்யா அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

சீக்கிரம் நான் சொன்னதாக பெரியவரிடம் சொல் என்று (முதல்வரை அய்யா அப்படிதான் பற்பல நேரங்களில் உரையாடல்களில் குறிப்பிடுவது வழக்கம்)- சொல்லி, வற்புறுத்தினார்கள்!

பெரியாருக்கும் அவர்தம் தொண்டர்களுக்கும் எப்படிப்பட்ட இக்கட்டான நிலை (Tight corner) பார்த்தீர்களா? அய்யாவுக்குச் சிலையை சென்னையில் வைக்க வற்புறுத்து என்றார் கலைஞரைப் பார்த்து; அவருக்காகவா? அல்ல! அல்ல!! அதன்பிறகுதானே ஒப்பந்தப்படி ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைப்படி கலைஞர் சிலையைத் திறக்க முடியும் என்பதால், அதை வலியுறுத்தி சீக்கிரம் நடத்திடச் சொல்லுங்கள் என்றார்.

என்னே காலத்தின் கோலம்!

கொள்கையின் வாஞ்சை!!

சொன்னதைச் செய்தாக வேண்டும்

என்ற வேட்கையின் வேகம்!!!

தனக்கு என ஒருவர் பொது வாழ்வில் செய்வது என்றாலும் உண்மையில் அது பிறருக்காகவே என்ற தத்துவத்தை அய்யா அவர்கள் அடிக்கடி பொது வாழ்வில் எடுத்துரைப்பார்கள்; அதன் முழுப் பொருள் - உண்மை அர்த்தம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள இச்சம்பவமும்கூட எனக்குப் பாடமாக அமைந்தது.

தந்தை பெரியார் அவர்களின் அடிச்சுவட்டில் நடைபோடும் என்னைப் போன்ற தொண்டர்கள் எண்ணற்றோர் தந்தை பெரியார் என்ற பேராசானின் தத்துவத்தை இத்தகைய சிறு சம்பவங்களானாலும் தெரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் நிகழ்வுகள் எத்தனை! எத்தனையோ!

அது மட்டுமா?

அய்யா மறைவுக்குப் பின்னர்தான் தந்தை பெரியார் சிலை அண்ணாசாலையில் 17.9.1974 அன்று திறந்து வைக்கப்பட்டு, அதில் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரும் நானும் கலந்து கொள்ள திமுகவால் அழைக்கப்பட்டு, கலந்து கொண்டோம்!

கலைஞர் சிலை, அன்னை மணியம்மையார் அவர்களால் திறக்கப்பட, அச்சிலை அண்ணாசாலையின் முக்கியமான பகுதியில் ஜெனரல் பேட்டர்ஸ்ரோடு பிரியும் சந்திப்பு பகுதியில் முக்கியமான இடத்தில் நிறுவப்பட்டது.

வாழ்நாளில் கலைஞர் எத்தனையோ முறை எதிர்நீச்சல் அடித்தே வெற்றி பெற்றவர், சிறப்பு டாக்டர் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அளித்தபோதுகூட அவரது அரசியல் எதிரிகள், அப்பாவி மாணவர்களில் ஒரு சாராரை ஆயுதமாக்கி, வீண் பழி தூற்றி, எதிர்ப்புக்காட்டி நிறுத்தி விட முயன்றனர். ஆனால் இறுதிவெற்றி என்றைக்குமே பெரியார் தொண்டர்களுக்குத்தான் என்பதுபோல கலைஞர் அவர்கள் பட்டம் பெற்று, தந்தை பெரியார் என்ற குருகுலப் பல்கலைக் கழகப் பாசறையின் பாராட்டுக் கடலிலும் குளித்து, மகிழ்ந்த நிலையில், அவருடைய ஆசான் அய்யா அவர்களாலேயே அவருக்கு, தலைநகர் சென்னையில் சிலை வைக்க வேண்டுமென்ற திட்டத்தையும் தந்தை பெரியார் முன்மொழிந்து செயல்படத் துவங்கிய நிலையில் - அம்மா அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை தலைமையில் இயக்கம் இயங்கிய அந்த முக்கியமான காலகட்டத்தில் சிலை வைக்க முயன்றபோது, கலைஞர் சிலை வைக்கவும் அண்ணா திமுக தரப்பில் ஒரு வழக்கறிஞர் (பின்னாளில் அவர் சபாநாயகரானவர்) உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கி திடீரென திட்டமிட்ட ஒரு திட்டமே தீட்டி வெற்றி பெறலாம் என்ற அவர்தம் எதிர்ப்பை எப்படி முறியடித்தோம் என்பதை அடுத்தவருக்கு சிலையாக நிற்பதற்கும் எதிர்நீச்சல்தான்!

--------------- நினைவுகள் நீளும்.


-------------------- கி.வீரமணி அவர்கள் உண்மை ( ஜனவரி 01-15 2009) இதழில் எழுதிவரும் "அய்யாவின் அடிச்சுவட்டில்" இருந்து ஒரு பகுதி ... இரண்டாம் பாகம் (11)

4 comments:

Unknown said...

அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள் அடங்கிய கட்டுரை.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்

Senthilkumar said...

பார்பனர் இல்லாதோர் கூட தமிழ் ஈழத்தை எதிர்ப்பதற்கான
முக்கிய காரணம் - மூட நம்பிக்கையில் ஊறியதால். பெரியாரின் கருத்துக்களை பரப்புவதன் மூலமாக மட்டுமே, தமிழன் என்ற உணர்வை ஊட்ட முடியும்.
உங்களின் பதிவு மிகவும் அருமை.
நான் விரும்பி படிக்கும் Blogger களில் நீங்களும் ஒருவர்.

தமிழ் ஓவியா said...

மிக்க நன்றி செந்தில்குமார்