Search This Blog

26.1.09

இழிவுக்கும், மடமைக்கும் காரணமான கடவுள்களையும், மதத்தையும் ஒழிக்க வேண்டும்!




நாம் மற்றவர் சொன்னதைச் சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டதன் காரணமாகத்தான் இந்தக் காட்டுமிராண்டி நிலையில் இருக்கின்றோம்.

இது பகுத்தறிவுக் கழகம். பகுத்தறிவு என்பது மனிதனுக்கு இயற்கையிலே இருக்கின்றது, ஒருவன் சொல்லி ஏற்பட்டதல்ல.

மற்ற ஜீவராசிகளுக்கு ஓரறிவு முதல் அய்ந்து அறிவுவரை எப்படி இயற்கையில் இருக்கின்றதோ அது போல, மனிதனாகப் பிறந்த எல்லா மக்களுக்கும் ஆறறிவு இருக்கின்றது.

மற்ற உயிர்களுக்கு இல்லாத ஆறாவது அறிவான பகுத்தறிவு மனிதனுக்குத் தான் இருக்கின்றது.மனிதர்கள் எல்லோரும் பகுத்தறிவுப்படி தான் நடக்கின்றனர். சாப்பிடுவது, ருசிபார்ப்பது, வேட்டி கட்டிக் கொள்வது எல்லாம் பகுத்தறிவுப்படியே தான் ஆகும்.

இப்படியிருக்க ஏன் பகுத்தறிவுக் கழகம் ஏற்படுத்துகிறோம் என்றால், மனிதன் சில விஷயத்தில் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டு உள்ளதில், பகுத்தறிவினைச் செலுத்திச் செய்யவே பகுத்தறிவுக் கழகம் ஏற்படுத்துகின்றோம்.

அப்படிச் சிந்திக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டவை தான் கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய துறைகள் ஆகும். நேற்று வரைக்கும் ஆண்ட அரசர்கள் அனைவரும் இதுபடி நடக்கவேண்டும், மீறக்கூடாது என்று கட்டிக் காத்து வந்தார்கள்.

இந்தத் துறையிலும் பகுத்தறிவினைச் செலுத்திச் சிந்திக்கச் செய்ய எவருமே தோன்றவில்லை.தோன்றியவர்கள் எல்லாம் மக்களைச் சிந்திக்கச் செய்யாமல் இருக்கவே பாடுபட்டார்கள். சாஸ்திரங்களிலும் புகுத்தி விட்டார்கள்.

எவன் ஒருவன் பகுத்தறிவு கொண்டு சாஸ்திரங்களைச் சிந்திக்கின்றானோ அவனை அரசன் நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கின்றது.

இது இராமாயணத்திலும் இருக்கின்றது. மனுதரும சாஸ்திரத்திலும் இருக்கின்றது. இதன் காரணமாக எவருமே பகுத்தறிவு கொண்டு கடவுள், மதம், சாஸ்திரங்களைச் சிந்திக்கத் துணியவில்லை.

இந்த நாட்டில் முதல் முதல் பகுத்தறிவினைப் பயன்படுத்தி எதையும் சிந்திக்கவேண்டும் என்று சொன்னவர் புத்தர்தான்.புத்தியைக் கொண்டு சிந்தித்ததனால் புத்தன் என்று பெயர் பெற்றார். பார்ப்பனர்கள், மன்னர்கள் தயவு கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டிவிட்டார்கள். அந்த மதம் இந்த நாட்டில் இன்று அருகிவிட்டது; வெளிநாட்டில் தான் உள்ளது.

அதற்கு அடுத்து எவரும் இந்தத்துறையில் சிந்திக்க முன்வரவில்லை. நான்தான், நாங்கள் தான் முன் வந்தோம்; தொண்டாற்றுகின்றோம்.

நாம் ஏன் இழி சாதி, பார்ப்பான் எப்படி உயர்ந்த சாதி என்று கேட்க முற்பட்டவர் நாங்கள் தான்.

நம் சாதி இழிவுக்கும், மடமைக்கும் காரணமான கடவுள்களையும், மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்று மக்களுக்கு விளக்கி வருகின்றோம்.


மாட்டிலே பல சாதி இல்லையா? நாயில் பல சாதி இல்லையா? அது போலத்-தான் மனிதரிலும் பல சாதி இருக்கின்றது என்று கூறி ஏமாற்றி வந்தார்கள்.

நாங்கள் தான் கூறினோம். உன் வாதப்படியே எடுத்துக் கொள்வோம். பல சாதி மாடுகளினை எடுத்துக் கொண்டால் இது நெல்லூர் மாடு, இது காங்கேயம் மாடு, இது மணப்பாறை மாடு, இது பர்கூர் மாடு என்று பிரித்து அடையாளம் காட்ட முடியும்.

னால் மனிதரில் எதைக் கொண்டு கூறமுடியும்.

பார்ப்பனப் பெண், செட்டியார் பெண், நாயுடு பெண், பறையர், சக்கிலி பெண் இவர்களை எந்தவித அடையாளமும் இன்றி அம்மணமாக நிறுத்தினால், செட்டியார்ப் பெண் யார், நாயுடு பெண் யார், பறையர் சக்கிலிப் பெண் யார் என்று எதைக் கொண்டு அடையாளம் காட்டுவார் என்று கேட்டவர்கள் நாங்கள் தான். பிறகுதான் வாயடைத்தார்கள்.


ஜாதியின் பெயரால் நம்நாட்டில் உள்ளவர்கள்தான் கீழ் மக்களாக முட்டாள்களாக இருக்கிறோம்.இந்த ஜாதி கடவுள் பேரால், மதத்தின் பேரால் சாஸ்திரங்களின் பேரால் இந்த நாட்டில் தானே ஏற்றத்தாழ்வு இருக்கின்றது.வேறு எந்த நாட்டிலும் இல்லையே!

இன்றைய ஆட்சியானது நமக்குக் கொஞ்சம் அனுகூலமாக இருக்கின்றபடியால், இதனை ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும், அவர்களின் கூலிகளும் கட்டுப்பாடாகப் பாடுபடுகின்றார்கள்.


-----------------------30.6.1972 அன்று சிவகிரியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் மன்றத் தொடக்க விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு -"விடுதலை", 11.7.1972

2 comments:

Unknown said...

//ஜாதியின் பெயரால் நம்நாட்டில் உள்ளவர்கள்தான் கீழ் மக்களாக முட்டாள்களாக இருக்கிறோம்.இந்த ஜாதி கடவுள் பேரால், மதத்தின் பேரால் சாஸ்திரங்களின் பேரால் இந்த நாட்டில் தானே ஏற்றத்தாழ்வு இருக்கின்றது.வேறு எந்த நாட்டிலும் இல்லையே!//

உண்மை தான்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்