Search This Blog

27.1.09

`இந்தி கட்டாயமாகப் புகுத்தப்படுமானால், தேசியக் கொடியையே எரிப்பேன்’’




தோழர்களே! இந்த இராஜாஜி வந்து என்னை வேண்டிக் கொண்டார். ``நாயக்கரே விட்டுவிடாதீர். பதவியை ஒத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவோ இந்த நாட்டுக்காகப் பாடுபட்டவர். காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பார்கள் என்று நீங்கள் அஞ்சவேண்டாம். நான் காந்தி இடம் கூறி சரிப்படுத்தி விடுகின்றேன்.’’

``நீங்கள் இஷ்டப்பட்டால் எனக்கும் ஒரு மந்திரி பதவி கொடுங்கள். நான் இருந்து உங்களுக்கு உதவி செய்கின்றேன்’’ என்று கூறினார். நம் திரு. டி.டி. கிருஷ்ணமாச்சாரியாருக்கும் இது தெரியும்.

நான் மறுத்துவிட்டேன். பிறகு தான் வெள்ளைக்காரன் வேறு ஆள்களை வைத்து ஆட்சியை ஏற்படுத்தினான். நானும் ``என்னால் ஆன உதவியைச் செய்கின்றேன்’’ என்றேன். அதன்படி செய்தேன். ஆச்சாரியாருக்கு அடுத்து வந்த மந்திரிசபை இந்தி கட்டாயம் என்பதை மாற்றியது.

தோழர்களே, 1955-இல் காமராசர் முதன் மந்திரியாக இருக்கும்போது ``இந்தி கட்டாயமாகப் புகுத்தப்படுமானால், தேசியக் கொடியையே எரிப்பேன்’’ என்றேன். அதற்காகத் தேதி குறிப்பிட்டு நாட்டில் மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்து வந்தேன்.

அதுபோது, ``தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாகப் புகுத்தப்படமாட்டாது’’ என்று முதலமைச்சராக இருந்த காமராஜர் தமது சர்க்கார் சார்பாகவும், இராஷ்டிரபதியாக இருந்த திரு. இராஜேந்திரபாபு சார்பாகவும், பிரதமராக இருந்த நேரு சார்பாகவும் எனக்கு உறுதிமொழி எழுதிக் கொடுத்து இருக்கின்றார்கள்.பிறகுதான் கொடி கொளுத்துவதை ஒத்திப் போட்டேன்.

அதில் இருந்து நானும் கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். இந்தி எங்கே எப்போது புகுத்தப்பட்டது? சொல்ல வேண்டாமா?காங்கிரஸ் சர்க்கார் மேற்கொண்டு உள்ள சோஷ்யலிச திட்டத்தை முறியடிக்க பார்ப்பனர்களும், பணக்காரர்களும், மில் முதலாளிகளும் கூடிச் செய்த கூட்டுச் சதி காரணமாக ஏற்பட்டது தான் இந்தக் கலவரம் ஆகும்.

இவர்களுக்கு இந்தக் கண்ணீர்த் துளிகள் நாளைக்கு இந்த ஆட்சி ஒழிந்தால், நமக்குப் பதவி கிடைக்காதா என்ற கருத்தில் நல்ல வண்ணம் உதவி செய்து இருக்கின்றார்கள்.

ஒன்றும் அறியாத மாணவர்களைத் தூண்டி விட்டுக் கலவரத்தை ஆரம்பிக்க வைத்து காலித்தனம், கொலை, கொள்ளை, தீ வைப்புப் போன்ற நாச வேலையினை நல்ல அளவுக்குச் செய்யத் தூண்டி விட்டுவிட்டனர்.

பார்ப்பனர்கள் தங்கள் இன நலனுக்குக் கேடாக எதாவது சீர்திருத்தங்கள் நாட்டில் நடைபெற்றபோதெல்லாம் நம்மவர்களைத் தூண்டி விட்டுக் கலவரம், குழப்பம் விளைவித்தே வந்துள்ளர்.

இப்போது நடைபெற்ற காலித்தனம், குழப்பத்துக்கு ``மாணவர்களின் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி’’ என்று பெயர் கொடுத்துப் பார்ப்பனர்கள் திரைமறைவில் இருந்து தூண்டி விட்டு நடத்துகின்றார்களே, அதுபோலவே, 1857-இல் சிப்பாய்க் கலவரம் என்ற ஒன்றையும் தூண்டி விட்டார்கள்.

பொய்யாக இந்தி எதிர்ப்பு என்ற பேரில் நடைபெறும் காலித்தனத்துக்குப் பார்ப்பனர்களும், பத்திரிகைக்காரர்களும் மாணவர் போராட்டம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி என்று பெயர் சூட்டியுள்ளார்களே, அதுபோலத்தான் 1857 இல் சிப்பாய்க் கலவரம் பற்றியும், அது முதல் முதல் ஏற்பட்ட சுதந்திரக் கிளர்ச்சி என்று பெயர் சூட்டியுள்ளர்.


தோழர்களே, 1857-இல் நடந்த சிப்பாய்க் கலவரமானது சுதந்திர உணர்ச்சியின் பேரில் ஏற்பட்ட கலவரம் அல்ல; அன்று ஆட்சி செய்த வெள்ளைக்காரன் செய்த சில சமுதாயச் சீர்திருத்தங்கள் காரணமாகப் பார்ப்பனர்கள் தூண்டிவிட்ட கலவரமாகும்.

அன்று இந்த நாட்டில் புருஷன் இறந்தால் அவனுடன் அவன் மனைவியையும் உயிருடன் பாடையில் வைத்துக் கயிறு போட்டுக் கட்டி, கொளுத்தும் வழக்கம் இருந்தது.

இந்தப் பழக்கத்தை பல்வேறு காலங்களில் பல முஸ்லிம் அரசர்கள் எதிர்த்துப் பார்த்து, தோல்வியே கண்டார்கள்.

வங்கத்தில் தோன்றிய இராஜாராம் மோகன்ராயின் அண்ணன் இறந்தபோது, அவருடைய மனைவியை உயிருடன் பிணத்துடன் சேர்த்துக் கொளுத்தப் பார்ப்பனர்கள் முற்பட்டார்கள். அது கண்டு அந்த அம்மாள் திமிறிக்கொண்டு ஓட ஆரம்பித்தார், பார்ப்பனர்கள் விடவில்லை; விரட்டிப் பிடித்துக் கொடூரமாகத் தாக்கி நெருப்பில் தூக்கிப் போட்டுக் கொளுத்தினர்.

இந்த நிகழ்ச்சி சிறந்த கல்விமானான இராஜாராம் மோகன்ராய் மனதை வாட்டியது. அவர் இந்தக் கொடிய உடன்கட்டை ஏறும் வழக்கத்தை முறியடிக்க முயற்சி செய்தார்.

வெள்ளைக்கார அரசாங்கத்தை அணுகி, ``என்ன நாகரிகம் வாய்ந்தவர்கள் நாங்கள் என்று பறைசாற்றிக் கொள்ளுகின்றீர்கள். உங்கள் ஆட்சியில் தானே ``சதி’’ என்ற இந்தக் கொடுமை நடக்கின்றது? இதனைத் தடை செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு `சதி’ என்று உடன்கட்டை ஏறும் பழக்கத்தையும் சட்ட விரோதமாக்கியது.

வைதீகப் பார்ப்பனர்களும், மதவாதிகளும் எதிர்த்துப் பார்த்துத் தோல்வியே அடைந்தனர். இதுதான் இந்திய வரலாற்றிலேயே ஏற்பட்ட முதல் சீர்திருத்தமாகும்.

அடுத்து இந்த நாட்டில் பெண் குழந்தை பிறந்தால் கழுத்தைத் திருகிக் கொன்றுவிடும் பழக்கம் அன்று இருந்து வந்திருக்கின்றது. அதனையும் ஆங்கில அரசாங்கம் சட்ட விரோதமாக்கித் தடுத்து விட்டது.

அந்தக் காலத்தில் விவசாயத் தோட்டங்களுக்கு நரபலி கொடுத்து திருஷ்டி கழிக்கும் வழக்கம் ஆங்காங்கு நடந்து இருக்கின்றது. அதனையும் வெள்ளைக்கார ஆட்சி ஒழித்தது.

அடுத்து அது செய்த `பாவம்’ பெண்களுக்குப் பள்ளி ஏற்படுத்தியதும், ஆஸ்பத்திரி ஏற்படுத்தியதும் ஆகும்.

இதனால் பார்ப்பனர்கள் கொதிப்படைந்து, தந்திரமாகப் பட்டாளத்துக்காரன்களைத் தூண்டி விட்டுக் குழப்பம் பண்ணச் செய்தார்கள்.

முஸ்லிம் தோழர்களிடம் சென்று, ``நீங்கள் உபயோகப்படுத்தும் துப்பாக்கியில் பன்றிக் கொழுப்பு தடவி இருக்கின்றார்கள். உங்கள் மதத்துக்குப் பன்றி கூடாது. உங்கள் மத உணர்ச்சியைக் குலைக்கவே பன்றிக் கொழுப்புத் தடவி இருக்கின்றார்கள்’’ என்று தூண்டிவிட்டார்கள்.

இந்துக்களாக இருக்கின்ற சோல்ஜர்களிடம் சென்று, நீங்கள் உபயோகிக்கும் துப்பாக்கியிலும், தோட்டாவிலும் பசுமாட்டுக் கொழுப்பல்லவோ தடவி இருக்கின்றார்கள். இந்துக்கள் கடல் தாண்டுவது என்பது சாஸ்திர விரோதமானதாகும். உங்களை எல்லாம் கப்பலில் ஏற்றிக் கொண்டு போய் வெளி இடங்களுக்குச் சென்று சண்டை போடச் சொல்லுகின்றார்கள்’’ என்று தூண்டி விட்டார்கள்.

அன்று பட்டாளத்தில் பார்ப்பனர்களும் அதிகமாக இருந்தபடியால் கலகம் பண்ணினார்கள்.அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு வெள்ளைக்காரர்கள் மீது துப்பாக்கியை நீட்டவும் ஆரம்பித்தார்கள். ஏராளமான வெள்ளைக்காரர்களும், பெண்களும் குழந்தைகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.

வெள்ளைக்காரர்கள் பயந்து அங்குமிங்குமாக ஓடினார்கள். ஓர் இடத்தில் என்ன பண்ணினார்கள் தெரியுமா? ஒரு படகைக் கொண்டு வந்து நிறுத்தி ``இதில் ஏறிக்கொள்ளுங்கள்; உங்களைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு விடுகின்றோம்’’ என்று ஏற்றிச் சென்று, நடுக்கடலில் கொண்டு போய்ப் படகைக் கவிழ்த்துவிட்டு அத்தனை பேர்களையும் கொன்று விட்டார்கள்.

வெள்ளைக்காரனால் கட்டுப்படுத்த முடியாமல் போகவே பார்ப்பனர்களைக் கூப்பிட்டு ஏன் இப்படிக் கலகம் பண்ணுகின்றீர்கள் என்று ராசி பேசினான்.

பார்ப்பனர்கள் ``நீங்கள் எங்கள் மதத்திலே, பழக்க வழக்கங்களிலே தலையிடக் கூடாது’’ என்று உறுதி கேட்டார்கள். அதன்படி எழுதிக் கொடுக்கப்பட்டது. அதுதான் விக்டோரியா மகாராணியின் மகாசாசனம் ஆகும். பிறகு எக்கேடு கெட்டாவது போங்கள் என்றும், ஆட்சி சரியாக நடைபெற்றால் போதும் என்றும் எண்ணிக் கொண்டு நமது சமுதாய முன்னேற்றத்தில், மாறுதலில் நாட்டம் செலுத்தவில்லை.

தோழர்களே, பார்ப்பனர்கள் இப்படியாக நமது சமுதாயத்தில் சில மாறுதல்களை மேற்கொண்டதற்காக எப்படி பட்டாளத்துக்காரர்களைத் தூண்டி விட்டுக் கலவரம் செய்யச் சொன்னார்களோ அதுபோலத்தான் இன்றைய ஆட்சியின் சமதருமத் திட்டத்தினால் ஏற்படும் மாறுதல்களை ஒழிக்க மாணவர்களையும், காலிகளையும், கூலிகளையும் தூண்டிவிட்டுக் காலித்தனம் பண்ணச் சொல்லுகின்றார்கள்.


இன்றைய ஆட்சியானது மேற்கொண்டு உள்ள சமதருமத் திட்டத்தினால் சாதி ஏற்றத் தாழ்வு ஒழிந்து எல்லோரும் சமுதாயத்தில் ஒரே மாதிரியாக ஆகிவிடுவார்களே, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒழிந்து எல்லோரும் பொருளாதாரத் துறையிலும் சமமாகி விடுவார்களே, என்ற ஆயாசப்படுகின்றார்கள்.

இதுவரை கல்வித் துறையிலே, உத்தியோகத் துறையிலே மற்ற மற்றத் தங்களுக்கு இருந்து வந்த ஆதிக்கமானது காங்கிரசில் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் எல்லா உத்தியோகங்களிலும் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டதன் காரணமாக மணல் வீடு சரிவதுபோல் அல்லவா சரிகின்றது? என்று வயிற்றெரிச்சல் அடைகின்றனர்.

எனவே, இந்த ஆட்சியினை என்ன பண்ணியாவது, எந்த வழியினைக் கையாண்டாவது, யாருடன் கூட்டுச் சேர்ந்தாவது ஒழித்துக் கட்டுவது என்று முன்வந்து காரியம் ஆற்றுகின்றார்கள்.

இந்த நிலையில், பொது மக்களாகிய உங்கள் கடமை என்ன?
100க்கு 97 பேர்களாக உள்ள உங்கள் நலனில் அக்கறை கொண்டு ஆட்சி நடத்தும் இந்த ஆட்சியைப் பாதுகாப்பதா? அல்லது ஆச்சாரியாருடனும், கண்ணீர்த் துளிகளுடனும்,பணக்காரர்களுடனும் சேர்ந்து கொண்டு இந்த ஆட்சியை ஒழிப்பதா? நன்கு சிந்தியுங்கள்.



-------------------18, 19, 20.3.1965 ஆகிய நாள்களில் சென்னைக் கூட்டங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை -"விடுதலை" 21-3-1965 - நூல்:- "பெரியார்களஞ்சியம்" தொகுதி 16 (ஜாதி-தீண்டாமை, பாகம் -10) பக்கம் 191-196

3 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

பெரியாரின் போராட்டங்கள் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக மக்களுக்கு தொந்திரவு இல்லாத வகையில் இருக்கிறது. ஆனால் அரசாங்கத்தை நடுங்க வைக்ககூடியதாக இருக்கிறது.

இது போல் போரட்டங்களை கையிலெடுக்க துணிச்சல் அதிகம் வேண்டும் . பெரியாருக்கு மற்றவர்களைக் காட்டிலும் துணிச்சல் அதிகம் உண்டு.

பெரியார் வியக்க வைக்கிறார்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்