Search This Blog

7.1.09

கலைஞருக்கு பெரியார் கொடுத்த இன்ப அதிர்ச்சி


14.8.1971 அன்று சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு விழா - அவர் டாக்டர் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அளித்தமைக்காக நடைபெற்றது.

தந்தை பெரியார் தலைமையில் அப்பெருவிழா பெரியார் திடல் இராதா மன்றத்தில் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், உணவுத்துறை அமைச்சர் ப.உ. சண்முகம், வேளாண்துறை அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் க. ராசாராம், தவத்திரு குன்றக்குடி அடிகளார் எம்.எல்.சி., துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு, திரு. ஏ.என். சட்டநாதன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்ட அந்த விழாவில், முதல்வர் கலைஞர் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.

அன்று காலையில், சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி அவர்களது மறைவுக்கு அவரது துணைவியார் திருமதி கல்யாணி இராமசாமி மற்றும் பிள்ளைகள், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அவர்களுடன், நானும் சென்றேன்.

அய்யா, அம்மா - அவர்களுக்குத் தைரியம் ஆறுதல் கூறிடும் வகையில், சிறிதுநேரம் தங்கி உரையாடிவிட்டு திரும்பி எனது (அடையாறு கஸ்தூரிபாய்) இல்லத்திற்கு வந்து தங்கினார்கள்.

சென்னையில் பகுத்தறிவாளர் கழகச் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில், டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டதற்காக புத்தக வடிவில் கலைஞருக்குத் தந்தை பெரியார் அவர்கள் மிகுந்த பூரிப்புடன் அளித்தார்கள்.

அவ்விழாவில் தந்தை பெரியார் அவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தருவது-போன்று கலைஞர் அவர்களுக்குத் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் முக்கிய இடத்தில் சிலை நிறுவவேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டதோடு, சிலை அமைப்புக் குழுவினரையும் அறிவித்ததோடு, அன்பளிப்பாக முதலில் தவத்திரு அடிகளார் அவர்கள் ஓராயிரத்து ஒரு ரூபாய் என அறிவித்ததோடு, ஏ.என். சட்டநாதன் 501 ரூபாய், திருமதி ரெங்கம்மாள் - சிதம்பரம் ரூ.501 இப்படி பலரும் அறிவித்து, மேடையில் ரூ.2,756 வசூலானதுடன், அந்த சிலை அமைப்புக் குழுவிற்கு என்னையே செயலாளராகவும் அய்யா அவர்கள் அறிவித்துவிட்டார்கள்!

பலருடைய பாராட்டுரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய முதல்வர் கலைஞர், தனது நிலைபற்றி வர்ணிக்கையில், தேன் குடத்தில் ஈ விழுந்துவிட்டால் என்னவாகும் என்று பழமொழி கூறுவார்கள். இன்றைய நிலை அதுகூட இல்லை. ஒரு குடத்தில் ஈயை எடுத்துப்போட்டு, அதன்மீது தேனை ஊற்றிக்கொண்டேயிருந்தால் அது என்னவாகும்? அதுபோலத்தான் என் நிலையும் என்று தொடங்கி, மிக அருமையான, அதைவிட மிக முக்கியமானதொரு கருத்தை தனது உள்ளந்திறந்து உரைத்தார் முதல்வர் கலைஞர் அவர்கள்.

(முழு உரை 17.8.1971, விடுதலை)

பெரியார் அவர்கள் எங்களைப் பாராட்டுகிறார்கள்; வாழ்த்துகிறார்கள். நாங்கள் வந்து அந்தப் பாராட்டைப் பெற்றுச் செல்கிறோம் என்றால், அதில் பெரிய ரகசியம் அடங்கியிருக்கிறது என்பதையும் இந்த மாமன்றத்தில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் அடிக்கடி வேறு ஒரு காரியத்திற்காகச் சொல்வதுண்டு.

கீரியும், பாம்பும் சண்டையிட்டுக் கொண்டால், கீரிதான் வெல்லும் என்றாலும், பாம்பின் விஷப் பற்கள் கீரியின் உடம்பில் பதிந்து புண்படுத்தியிருக்கும். விஷத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, பாம்பை வென்ற அந்தக் கீரி தனக்குத் தகுந்த மூலிகை உள்ள புதருக்கு ஓடி தன் உடம்பை அதில் புரட்டிக் கொள்வதன்மூலம் உடலில் பாய்ந்த நஞ்சிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்-கொள்ளும். ஆண்டுதோறும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பாம்புக் கடியால் ஏற்பட்ட விஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக இந்தக் கீரியும் அதற்கான மூலிகை இருக்கிற இடம் தேடி வந்திருக்கிறது. இதுதான் ரகசியம்.

சுயநலத்திற்காக என்றாலும், இது பொதுநலத்திற்குப் பயன்படும் என்பதற்காகத்தான் அவர்கள் மூலிகையாக இருந்து எங்கள்மீது பதிந்திருக்கிற விஷப் பற்கள்மூலமாக உள்ளே சென்றிருக்கின்ற விஷத்தை எடுக்கிற முறையில் பெரியார் அவர்கள் வாழ்த்துகிறார்கள் என்றார்!

இங்கே பேசிய பலரும் குறிப்பிட்டவாறு பெரியார் அவர்களுடைய திருக்கரங்களால் ஒரு பரிசைப் பெறுகிற இந்தப் பேறு எனக்குக் கிடைக்கும் என்று என்னைப் பெற்றெடுத்தவர்கள் கருதியிருக்க மாட்டார்கள். நானும்கூடக் கருதியதில்லை.

ஆனால், பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு, பெரியார் அவர்களுடைய பாசறையில் பயின்று பெரியார் அவர்களாலேயே இந்தப் பெரும் பேற்றினை, பெருமையைப் பெறுகின்ற நிலையை நான் அடைந்ததை எண்ணும்போது தவத்திரு அடிகளார் அவர்களது மொழியில் கூறுவதென்றால், இதைவிட வேறு மோட்சமோ, சொர்க்கமோ இருப்பதாகத் தெரியவில்லை என்றுதான் நான் கூறுவேன்.

ஆரம்பத்தில் பள்ளிக்கூடத்திலே பிள்ளைகளைச் சேர்க்கிற நேரத்தில் முன்பெல்லாம் அரி நமோத்துச்சிந்தம் என்றுதான் மண்ணிலே எழுதிக் காட்டுவார்கள்.

ஆனால், என்னுடைய கையைப் பிடித்து, அறிவே துணை என்று எழுதிக் காட்டிய ஆரம்ப ஆசிரியரும், இன்றளவும் இருந்து என்னை வாழ்த்துகின்ற ஆசிரியரும், தந்தை பெரியார் அவர்களே ஆவார்கள்.

அறிவே துணை என்பதை நான் கற்றுக்கொண்ட பிறகு, அடக்கமே உயிர் எனக்குக் கற்றுத் தந்தது காஞ்சிக்கல்லூரி.

பல்கலைக்கழகத்திலே மாணவர்கள் ஏழு, எட்டாண்டு காலம்தான் பழகுவார்கள். நான் 30 ஆண்டுகாலம் பல்கலைக்கழகத்தோடு பழகியிருக்கிறேன் - நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியனோடு!

ஆகவே, கல்லூரிப் படிப்போ, பல்கலைப் பழக்கமோ எனக்கு இல்லையென்று யார் சொன்னார்கள் என்றுதான் எனக்குத் தெரியவில்லை.

தந்தை பெரியார் அவர்களே திடீரென்று அறிவித்த கலைஞர் சிலைக் குழுவின் விவரம் அறிவிக்கப்பட்டது - அங்கேயே!

புரவலர்: - தந்தை பெரியார் அவர்கள்

தலைவர்: - தவத்திரு குன்றக்குடி அடிகளார் எம்.எல்.சி.

துணைத் தலைவர்கள்: நெ.து. சுந்தர-வடிவேலு (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)

மேயர் சா. கணேசன்,

ஏ.என். சட்டநாதன்,

செயலாளர் - கி. வீரமணி.

இந்தச் சிலை அமைப்பினை அய்யா அறிவித்த நிலையில், மீற முடியாது சிக்கிக் கொண்டார் கலைஞர் அவர்கள்!

ஏற்புரையில் பதில் அளிக்கும்போது, தந்தை பெரியாருக்கு நாங்கள் தி.மு.க. சார்பில் சிலை அமைத்த பிறகுதான் எனக்கு சிலை வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை ஒரு முன் நிபந்தனையாக வைத்தார்.


-------------------- கி.வீரமணி அவர்கள் உண்மை ( டிசம்பர் 16-31 2008) இதழில் எழுதிவரும் "அய்யாவின் அடிச்சுவட்டில்" இருந்து ஒரு பகுதி ... இரண்டாம் பாகம் (10) -

2 comments:

கிறுக்குப்பையன் said...

நல்ல பதிவு ,,,வாழ்த்துக்கள் அன்பரே ....அன்புடன் கிருக்குபையன் ..

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்