Search This Blog

24.1.09

பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்களா?


கூடுகிறார்களாம் பார்ப்பனர்கள்!



பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்கள்.

பாவம் அவர்களை எதிர்ப்பது என்ன நியாயம்?

இப்பொழுதெல்லாம் யார் ஜாதியைப் பார்க்கிறார்கள்?

காலம் எவ்வளவோ மாறிவிட்டது!

முனியாண்டி ஓட்டலில் அவர்கள் சாப்பிடுகிறார்கள்.

இன்னும் ஏன் அவர்களைப்பற்றிப் பேச வேண்டும்? எதிர்க்க வேண்டும்? இப்படிப் பேசும் மேதாவிகள் (மேல் தாவிகள்) இப்பொழுதும் நம் தமிழர்களில் உண்டு.

அவர்களுக்குத் தெரியாது. பார்ப்பான் - ஆவணி அவிட்டம் என்ற பெயரில் ஒவ் வொரு ஆண்டும் பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறான்.

பார்ப்பான் வீட்டில் -பூணூல் கல்யாணம் (சோ அய்யர் வீட்டில் உட்பட) இன்னும் விசேஷமாய் நடந்து கொண்டுதானிருக்கிறது.

இந்துவும், தினமலரும் தினமணியும் துக்ளக்கும் காமகோடியும் இன்னோரன்ன ஏடுகளும், இதழ்களும் பூணூலில் மையைத் தொட்டுக் கொண்டுதான் எழுதிக் கொண்டு இருக்கின்றன. இடஒதுக்கீடு என்றால் ஏளனம்!

சமூகநீதி என்றால் ஒரு எரிச்சல்!

தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்றால் தணலில் விழுந்ததுபோல துடிப்பு!

தமிழ் செம்மொழி என்றால் இதனால் கத்தரிக்காய் விலை குறையுமா என்ற எகத்தாளம்!

தமிழ் வழிபாட்டு மொழி என்றால் தணியா கோபம்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் நீதிமன்றத்தில் படை யெடுப்பு!

- இதுபோல ஒரு நீளமான பட்டியலே உண்டு.


இப்பொழுதுகூட அ.இ.அ.தி.மு.க. - மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய எஸ்.வி. சேகர் என்ற பார்ப்பனர் தென்னிந்திய பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தப் போகிறாராம்.

அதன் தொடக்க விழா வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. சென்னை நாரதகான சபாவில் அதே தேதியில் நடைபெற உள்ளதாம்.

அதுபற்றி அதன் அமைப்பாளர் எஸ்.வி. சேகர் வெளியிட்ட அறிக்கை தினமலரில் (18.1.2009) வெளி வந்துள்ளது - வருமாறு:

எஸ்.வி. சேகர் அறிக்கை

"இறைவனால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் சமம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பிராமணர்கள். இவர்கள் என்றுமே ஜாதிக் கலவரங்களில் ஈடுபட்டதில்லை. வன்முறையை நம்புகிறவர்களும் இல்லை. கடவுள் நம்பிக்கையையும், தனி உழைப்பையும், திறமையையும், மத நெறிகளையும் நம் நாட்டின் இறையாண்மைக்குரிய அனைத்து சட்ட திட்டங்களையும் மதித்து அதன் வழி நடப்பவர்கள்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் அனைவரும் சமம் என்ற நியாயமான குறிக் கோளுடன் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களுக்கான சமூகநீதி போராட்டங்களின் பலன் இன்று 69 சதவீத இடஒதுக்கீடு கிடைத்துள்ளது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப் பட்டவர்களுக்கும், வாய்ப்பில்லாதவர்களுக்கும் முன்னேறுவதற்கு பிராமண சமுதாயம் தடையாக இருந்ததில்லை. அதே சமயம், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு சரியான சதவீதம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதிலும் நமக்கு மாற்று கருத்து இல்லை.

தமிழகத்தில் வாழும் 40 இலட்சம் பிராமணர்களில் பெரும்பாலோர் தினசரி வருமானத்திற்கு, புரோகிதம், அப்பளம் இடுவது, சமையல் வேலை, பிணம் சுமப்பது, ஈமச் சடங்குகள் செய்வது என அடிப்படை வாழ்வாதாரத்திற்கே போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பிராமண சமுதாயத்தின் கரங்களை வலுப்படுத்தவும், கல்வி, வேலை வாய்ப்பில் சமூக நீதி கிடைக்கவும், தமிழக பிராமணர்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் முன் சமர்ப்பிப்போம்.

இந்த முயற்சியை நம் அரசும் பகிர்ந்துகொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த 7 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் என நம்புவோம். ஒருமித்த கருத்து உள்ள அனைத்து பிராமணர்களும், பிராமண சங்கங்களும் இணைவோம்.

இதற்காகவே தென்னிந்திய பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு துவங்கப்படுகிறது. இக்கூட்டமைப்பின் துவக்க விழாவில், பிராமணர்கள் முன்னேற்றம் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட உள்ளது".

- இதுதான் திரு. எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ.யின் அறிக்கை.

1) இறைவனால் படைக்கப்பட்டவர்கள் அனைவரும் சமம் என்று பிராமணர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்.

எந்தச் சுவரில் போய் முட்டிக் கொள்வது? முதலில் சேகர் தன் முதுகில் தொங்கும் பூணூலை அறுத்து எறியத்தயாரா?

பூணூல் வருணாசிரம ஜாதியின் அடையாளம் என்பதை மறுக்க முடியுமா?

அனைவரும் சமம் என்றால், சங்கராச்சாரியாராக பார்ப்பனர் அல்லாமல் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் வர முடியுமா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, தமிழில் வழிபாட்டு உரிமைகளை எதிர்த்து பார்ப்பனர்கள் நீதிமன்றத்திற்குப் படை எடுப்பது ஏன்?


பிப்ரவரி 7-ஆம் தேதி அவர்கள் கூட்டும் கூட்டமைப்பில் மேற்குறித்த வினாக்களுக்கு விடை தரும் முறையில் உரிய முடிவுகளை எடுப்பார்களா? எங்கே பார்ப்போம்!

2) பார்ப்பனர்கள் ஜாதி கலவரங்களைத் தூண்டுவதில்லையாம்.

ஜாதியின் மூல ஊற்றே பார்ப்பனர்தானே -அவர்களின் வேதங்களும், சாத்திரங்களும் தானே! ஜாதியில் நம்பிக்கை இல்லை என்றால் ஜாதியை - (வருணாசிரமம்) காப்பாற்றும், நியாயப்படுத்தும் - சதுர்வர்ணம் மய சிருஷ்டம் என்று கூறும் கீதையை, நாரத கான சபாவில் நடக்கும் மாநாட்டில் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொளுத்தத் தயார்தானா?


3) பார்ப்பனர்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லையாம்!

அப்படியா? பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள் சிலைகளின் கைகளில் எல்லாம் கொலைகார ஆயுதங்கள் இருப்பது ஏன்? இந்துக் கடவுள் கொலை செய்தது, சண்டை போட்டது, ராமன் சம்பூகனைக் கொன்றான், சுப்பிரமணியன் சூரபத்மனைச் சாகடித்தான் என்ற புராணங்கள் ஏன்?

தருமத்தை (வருணாசிரம தர்மத்தை) காப்பாற்ற பிராமணர் ஆயுதம் எடுத்துச் சண்டை செய்ய வேண்டும் (மனு தர்மம் அத்தியாயம் 8 - சுலோகம் 348) என்கிற மனு தர்மத்தை மக்கள் மத்தியில் சாம்பலாக்கத் தயார்தானா?


சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற பார்ப்பன - சங்க வெள்ளி விழா மாநாட்டில் (2006 டிசம்பர் 24,25) அரிவாளைத் தூக்கிக் காட்டி ஆரியர்கள் நாங்கள் என்று மார்தட்டினார்களே அதன் பொருள் என்ன?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பிராமணன் முதற்றே உலகு


என்று புதுக்குறள் தீட்டி புளகாங்கிதம் அடைந்தனரே! அதற்கு என்ன புதுவிளக்கம் கூறப் போகிறார் இந்த எஸ்.வி. சேகர் வகையறாக்கள்?

ஆண்டவனுக்கும் மேலே இருப்பவர்கள் பிராமணர் என்று காஞ்சி சங்கராச்சாரியார் அறிவித்தாரே - பார்ப்பனர்கள் நூல் வெளியீட்டு விழாவில் - அந்த ஆணவத்துக்குப் பொருள் என்ன?

சமத்துவத்தின் சங்கீர்த்தனமா அது?

4) பிற்படுத்தப்பட்டவர் களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வாய்ப்பில்லாதவர்களுக்கும் முன்னேறுவதற்குப் பிராமண சமுதாயம் தடையாக இருந்ததில்லையாம்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு சரியான சதவீதம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதிலும் பார்ப்பனர்களுக்குக் கருத்து வேற்றுமையில்லையாம்.

கோணிப் புளுகன் கோயபல்ஸ் இதனைப் படித்தால் தூக்கு மாட்டிக் கொண்டு செத்துப் போய் விடுவான். நம்மையும் மிஞ்சும் ஆசாமிகள் இருக்கிறார்களே என்று அதிர்ச்சி அடைந்திருப்பான்.


பார்ப்பன சேகரின் கூற்று உண்மையில்லை என்பதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் கூற முடியும்.

16.11.1988 அன்று சென்னையையடுத்த சின்னமலை அருணா மண்டபத்தில் செங்கற்பட்டு மாவட்ட பார்ப்பனர் மாநாடு நடைபெற்றது.

அதில் இடஒதுக்கீடு என்பது ஒரு கருப்புச் சட்டம். அது ஒரு கருப்பு மனிதனால் எழுதப்பட்டது. அதை உடைத்தெறிய வேண்டும். அதுவரை நமக்கு ஓய்வில்லை என்று பேசினார்கள்.

என் உடம்பில் ஆரிய ரத்தம் ஓடுகிறது என்று டெல்லிகணேஷ் என்ற பார்ப்பனர் நடிகர் ஓங்காரக் கூச்சலிட்டார்.

அந்த மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட பார்ப்பனர்கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணியில் போட்ட முழக்கங்கள் என்ன தெரியுமா?

ஏர் ஓட்டும் தோழரே இடஒதுக்கீட்டின் மூலம் நீ, ஏற்றம் பெற்றாயா? கார் ஒட்டும் டிரைவரே, இடஒதுக்கீட்டின் மூலம் உன் மகன் கலெக்டர் ஆனாரா? ரிக்ஷா ஓட்டும் தோழரே, இடஒதுக்கீட்டின் மூலம் உன் மகன் என்ஜினியர் ஆனாரா?

- இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்ன பொருளாம்?

இடஒதுக்கீட்டை வரவேற்பதுதான் இதன் ஆழமான பொருள் என்று பதவுரை பகரப் போகிறாரா?

அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரக் கூடாது: இதற்கான பதிலை இம்மாதம் 27-ஆம் தேதிக்குள் பிரதமர் தெரிவிக்காவிட்டால், மத்தியில் உள்ள பார்ப்பன அமைச்சர்களை முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று அகில இந்தியப் பார்ப்பன சங்கத் தலைவர் மதன்லால் சர்மா புதுடில்லியில் கூறினாரே - (21.4.2000) இல்லை என்று மறுக்க முடியுமா?

மத்திய அரசைச் சேர்ந்த அகில இந்திய முதல் நிலை அதிகாரிகளின் சங்கம் (40 ஆயிரம் அரசு அதிகாரிகளின் சங்கம் இது) 21.9.1990 அன்று புதுடில்லியில் கூடி மண்டல் குழுப் பரிந்துரைகளை மட்டுமல்ல; நடைமுறையில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு உட்பட அத்தனையையும் நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே இதையும் மறுக்க முடியுமா?

மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்தக் கூடாது என்று பார்ப்பன சங்கத்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனரே (1.10.1990) மயிலாப்பூர்வாசி அப்பொழுது பிறக்கவேயில்லையா?

9.3.1946 அன்று சேலம் பார்ப்பனர்கள் மாநாட்டில் சர். சி.பி. இராமசாமி அய்யர் ஆற்றிய தலைமை உரையில் ஒன்றை குறிப்பிட்டார்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால், அரசியல் நிர்வாகத்தில் தகுதியும், வினைத்(Merit and Efficiency)திட்டமும் கெடலாயின என்ற பல்லவியை நீங்கள் பாடப்பாட பிராமணரல்லாதாரின் மனதைப் புண்படுத்துவது மட்டுமன்றி அவர்கள் பகைமையையும் பெருக்கிக் கொள்கிறீர்கள் என்று அறிவுரை கூறி 63 ஆண்டுகள் ஆகிவிட்டனவே - அறிவு வந்ததா ஆரியபுரத்தாருக்கு?

20 சதவீதம் வரை இடஒதுக்கீடு எங்களுக்குத் தேவை என்று இதுவரை கூறி வந்தவர்கள், மாநாடு போட்டு தீர்மானம் நிறைவேற்றியவர்கள் இப்பொழுது ஏழு விழுக்காட்டுக்கு இறங்கி வந்துள்ளனர்.

அப்படியென்றால் பார்ப்பனர் அல்லாதாருக்கு 93 விழுக்காடு இடங்கள் அளிக்கலாம் என்பதை ஒப்புக் கொள்கிறார்களா?

மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினராக இருக்கக் கூடிய இந்த சேகர் இந்நாள் வரை அஇஅதிமுகவில் தான் இருக்கிறார்.

இவர் எடுத்துள்ள முடிவுக்கு கட்சியின் அனுமதி உண்டா?

அஇஅதிமுகவில் உள்ளவர்கள் எந்த ஜாதி சங்கத்திலும் இருக்கக் கூடாது என்று கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். தெரிவித்த அந்த முடிவு இன்னும் அக்கட்சியில் இருக்கிறதா? அவரது கட்சியின் பொதுச் செயலாளராகவே இருக்கக் கூடியவர் - நான் ஒரு பாப்பாத்தி தான் என்று சட்டப் பேரவையில் பிரகடனப்படுத்திய அய்யங்கார் அம்மையார் ஆயிற்றே. அவர் எம்.ஜி.ஆர். முடிவைத் தூக்கி எறிந்து விட்டாரா? நாரத கான சபா மாநாட்டை நாமும் எதிர் நோக்குவோம்!


---------------- மின்சாரம் அவர்கள் 24-1-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

Unknown said...

//ஜாதியின் மூல ஊற்றே பார்ப்பனர்தானே -அவர்களின் வேதங்களும், சாத்திரங்களும் தானே! ஜாதியில் நம்பிக்கை இல்லை என்றால் ஜாதியை - (வருணாசிரமம்) காப்பாற்றும், நியாயப்படுத்தும் - சதுர்வர்ணம் மய சிருஷ்டம் என்று கூறும் கீதையை, நாரத கான சபாவில் நடக்கும் மாநாட்டில் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொளுத்தத் தயார்தானா?//

இதைச் செய்து காட்டட்டும் அப்புறம் பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்களா?
என்ற விவாதிப்போம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி