Search This Blog

16.1.09

கொதிக்கிறது தமிழர்கள் உள்ளம்! குமுறுகிறது மனிதநேயம்!




இலங்கைத் தமிழர்க்கு ஏற்படும் இழப்பைத் தடுத்து
நிறுத்திடுவது மனிதநேயக் கடமை காசா பகுதித் தாக்குதலைக்
கண்டிப்போர், இலங்கைக் குண்டுவீச்சுகள்பற்றி மவுனம் ஏன்?

மத்திய அரசே, மவுனம் கலைத்திடுக!

இலங்கைக்குக் கிரிக்கெட் குழுவை அனுப்புவது
"நீரோ மன்னனின்" செயல் போன்றது!

காங்கிரசுக் கட்சியின் எதிர்காலம் கருதியாவது
தடுத்திடுக - சோனியா காந்திக்குத் தமிழர் தலைவரின்
உருக்கமிகு மனிதநேய வேண்டுகோள்!


ஈழத்தமிழர் படுகொலைப் பிரச்சினையில், மத்திய அரசு மவுனம் கலைக்கவேண்டும் என்றும், காங்கிரசுக் கட்சியின் எதிர்காலம் கருதியாவது தடுக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:-

ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பலி பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேதனையில் இன உணர்வுள்ள தமிழர்கள் - உலக முழுவதும் உள்ள தமிழினம் மட்டுமல்ல, மனிதநேயம் உள்ள அனைவருமே- கட்சி, ஜாதி, மதம், தேசம் என்ற எல்லைகளைக் கடந்த வெந்து நொந்து கொண்டுள்ள வேளையில்,

போர் நிறுத்தம் ஒன்றே...

இதைத் தடுத்து நிறுத்திட வேண்டிய மனிதநேயக் கடமை மகத்தானது; மத்திய அரசிற்கு முதன்மையானது. மத்தியில் ஆண்டு, மீண்டும் 3 மாதங்களில் மக்களைத் தேர்தல் களத்தில் சந்திக்க ஆயத்தமாகும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் மரியாதைக்குரிய திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் முக்கிய மானது. போர் நிறுத்தம் ஒன்றே காடுகளில் வாழும் அப்பாவித் தமிழர்களான 4 லட்சம் பேர்களான எம் தமிழினத்தை, சிங்கள இராணுவத்தின் குண்டு மழையிலிருந்து காப்பாற்றிட உதவிடும்!

உலகத் தமிழர்கள் கேட்கும் கேள்வி

பாலஸ்தீன காசா பகுதியில் நடைபெறும் குண்டுவீச்சுபற்றிக் கண்டித்த இந்தியப் பிரதமர் அவர்கள் இலங்கையில் நடைபெறும் குண்டுவீச்சுக்குக் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி கேட்ட கேள்வி - உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள்வரை தொடர்ந்து கேட்கும் கேள்வி ஆகும்.

மத்திய அரசின் மவுனம் கலைக்கப்பட்டாக வேண்டும்.

தமிழ்நாட்டின் 40 தொகுதிகளால்தான் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உருவானது என்பது மறுக்க முடியாத மறக்க முடியாத உண்மை.

உடனடி செயல்பாடு தேவை!

தமிழ்நாட்டு முதலமைச்சர், தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம், நேரில் பல கட்சித் தலைவர்களை அழைத்துச் சென்று பார்த்து வற்புறுத்திய பின்னரும், குமுறும் எரிமலையாய் தமிழர் உணர்வுகள் தமிழ்நாட்டில் உச்சத்திற்குச் சென்றுள்ள நிலைமைக்குப் பின்னரும், மத்திய அரசின் உடனடி யாக செயல்பாடு தேவை அல்லவா?

இந்த நிலையில் இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் விளை யாட்டுக் குழுவை அனுப்பி, ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையை இங்கே நிகழ்த்தலாமா?

அவசியம்தான் என்ன?

இதன் பார, தூர விளைவு அரசியலில் பிரதிபலிக்காமலா போகும்? தமிழ்நாட்டுக் காங்கிரசின் எதிர்காலம்பற்றி, மதிப்பிற்குரிய அதன் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் ஆழ்ந்து யோசித்து, முதல்வர் கலைஞர் அவர்களுடன் பேசி, இப்படி கிரிக்கெட் விளையாட்டுக் குழுவை அனுப்பி, தமிழர்களின் இழப்பைப் பொருட்படுத்த மாட்டோம் என்பதுபோல நடக்கும் இந்திய அரசின் செயலைத் தடுத்து போர் நிறுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்வது நமது கடமையாகும்!

பாகிஸ்தானுக்கு அனுப்பமாட்டோம் என்று சொன்ன மத்திய அரசு, இலங்கைக்கு அனுப்பலாமா? சிங்கள அரசுக்கு அப்படி ஒரு தனிச் சலுகை தரவேண்டிய அவசியம்தான் என்ன?

கொதிக்கிறது தமிழர்கள் உள்ளம்! குமுறுகிறது மனிதநேயம்!

தமிழ்நாட்டுக் காங்கிரசின் எதிர்காலம்

இதன் விளைவு இரண்டு மாதங்களில் வரவிருக்கும் தேர்தல் களத்தில் பிரதிபலிக்காமலா இருக்கும்?

எனவே, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைக் கருதியாவது இத்தகைய தமிழர் விரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். சிந்திப்பார்களாக!

----------------"விடுதலை" 16.1.2009

2 comments:

Thamizhan said...

தமிழர்களையும்,தலைவர்களையும் ஏமாற்றியது மட்டுமல்லாமல் அவமானப் படுத்தியுள்ளார்கள்.
மேனன் அங்கே போய் அவர்களைப் பாராட்டியுள்ளதாகவும்,ஒத்துழைப்போம் என்று கூறியுள்ளதாகச் சிங்கள அரசு மேனன் பெய்ரிலேயே வெளியிட்டுள்ளது.

சோனியாவின் பழி வாங்கும் படல்ம அற்ங்கேறுகிறது.கைக்கூலிகள் நாடகம் ஆடுகிறார்கள்.

தமிழினம் தக்க பாடம் புகட்ட வேண்டியதுதான்.மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டந்தான் வழி.
அவர்களுக்குத் தெரியாது.தெரிந்த தங்கபாலு எடுத்துச் சொல்லட்டும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி