Search This Blog

20.1.09

பிள்ளையார் சிலையை உடைத்தேன்




நான் மாணவனாக இருந்தபொழுது
கீவளூரில் பிள்ளையார் சிலையை உடைத்தேன்

மயிலாடுதுறை மாநாட்டில் தமிழர் தலைவர் உரை


நான் மாணவனாக இருந்தபொழுது கீவளூரில் பிள்ளையார் சிலையை உடைத்தேன் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

மயிலாடுதுறையில் ஜனவரி 3 அன்று நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நீண்ட இடைவெளிக்குப் பின்னால்

இங்கே எனக்கு முன்னால் பேசிய கழகத்தவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல இந்த மயிலாடுதுறை நகரத்திலே ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னாலே ஒரு அற்புதமான, ஒரு சிறப்பான, மூடநம்பிக்கை ஒழிப்பை நெருப்பு மிதியல் மூலமாக எடுத்துக் காட்டக்கூடிய ஒரு அற்புதமான விளக்கத்தை இங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து உண்மையைப் புரிந்து கொள்ளக்கூடிய அளவிலே, நெருப்பிலே இறங்கி வருவதற்கும், அதே நேரத்திலே தெளிவாக பக்திக்கும் சம்பந்தமில்லை - இது சாதாரண செய்தி. இதை யாரும் நடத்திக் காட்ட முடியும். இதற்கு ஆத்தாள் அருள் தேவையில்லை.

தீ மிதித்துக் காட்டியிருக்கின்றார்கள்

ஆண்டவனுடைய உதவி தேவை, பக்தி தேவை என்பதெல்லாம் இல்லை. அது மூட நம்பிக்கை என்று சொல்லி ஒரு சிறிய அளவிலே தீக்குண்டம் ஏற்படுத்தி நெருப்பு மிதித்துக் காட்டியிருக்கக் கூடிய ஒரு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியை மாலையிலே நடத்தியிருக்கின்றார்கள்.

காலையிலே நல்ல கருத்தரங்கங்கள். பிற்பகலிலும் அற்புதமான கருத்து விருந்துகள். எனவே இந்த நகரம் பயனுள்ள ஒரு காற்றை நல்ல மூச்சுக் காற்றை, பகுத்தறிவுள்ள மூச்சுக்காற்றை, இன உணர்வு மூச்சுக்காற்றை, சமூகநீதி மூச்சுக்காற்றை சுயமரியாதை உணர்வினைப் பெறக்கூடிய, ஒரு அற்புதமான ஏற்பாடுகளைச் செய்த மாவட்டக் கழகம், நகரக் கழகம் சார்பாக ஒத்துழைத்த அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும், குறிப்பாக இதிலே ஆர்வம் காட்டிய இளைஞர்களுக்கும், அனைவருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களை முதற்கண் நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றேன் (கைதட்டல்).

திருமருகலிலிருந்து பிரச்சாரம்

அதேபோல, இந்த மாவட்டத்திலே நம்முடைய இளைஞர்கள் திருமருகலிலேயிருந்து நம்முடைய நாத்திகன் பூபேஷ் குப்தா, இன்னும் மற்றும் பல நண்பர்கள் அவர்களோடு இணைந்த திராவிடர் கழக இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு அறிவுச் சுடரை வழியெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டு வந்திருக் கிறார்கள்.

மகிழ்ச்சிகரமான பாராட்டுதல்கள்

அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சிகரமான பாராட்டுதல்கள் (பலத்த கைதட்டல்). எனவே இந்த இயக்கத்தை பொறுத்த வரையிலே இது எங்களுக்காக செய்யப்படுகின்ற பிரச்சாரமல்ல. உங்களுக்காக, உங்கள் சந்ததிகளுக்காக, உங்கள் சந்ததியின் எதிர்காலத்திற்காக. எங்களுக்காக என்று நாங்கள் எதையுமே கேட்காதவர்கள். இன்னும் கேட்டால் எங்களுக்காக என்று சொன்னால் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

பழியை ஏற்பதற்குத் தயாராக இருந்தாலும்

என் பின்னாலே வரக்கூடிய யாராக இருந்தாலும், கெட்டப் பெயர் எடுப்பதற்குத் தயாராக இருந்தால் வா. பழியை ஏற்பதற்குத் தயாராக இருந்தால் பின்பற்றிவா.

இங்கே வந்தால் புகழ் கிடைக்கும், பெருமை கிடைக்கும், அது கிடைக்கும், இது கிடைக்கும் என்று நினைக்காதே என்று அய்யா அவர்கள் சொன்னார்.

பாதை இல்லாத ஊருக்கெல்லாம் ஈரோட்டுப் பாதை

அதை ஏற்றுத்தான் அந்தக் கசப்பு மருந்தை ஏற்றுத்தான் பாதை இல்லாத ஊருக்கெல்லாம் ஈரோட்டுப் பாதை அமைக்கக் கூடிய பணியை இந்த இயக்கம் தொடர்ந்து செய்து கொண்டிருக் கிறது (கைதட்டல்).

எனவே, இப்பொழுது எது தேவை? நன்றாக நினைத்துப் பாருங்கள். எந்த அளவுக்கு நாம் மக்களைப் பக்குவப்படுத்தியிருக் கின்றோம். பெரியார் வென்றிருக்கின்றார். பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? இருக்கலாமா? என்ற இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நமது பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும், துணைப் பொதுச்செயலாளர் மற்றும் பலர் பேசியவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள்.

நகரப் பூங்காவில்தான் எல்லோரும் பேசியிருக்கின்றார்கள்

உங்களுக்கே தெரியும். நாங்கள் விளக்க வேண்டிய அவசியமில்லை. எந்த அளவுக்கு மக்கள் இங்கே பக்குவமாகியிருக்கின்றார்கள். எங்கள் கருத்தை அருமைச் சகோதரர் கல்யாணம் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, நேரடியாக கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள், கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்குப் பெரியார் கருத்தை ஏற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு - பெரிய வெற்றியைக் காணுவதற்கு வேறு எங்கும் போகவேண்டிய அவசியமிகல்லை. உங்களுக்குத் தெரியும். வழக்கமாக மாநாடுகள், இந்த ஊரிலே நடைபெற்றால் இதற்கு முன்னாலே தந்தை பெரியாரிலிருந்து, பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற எல்லா தலைவர்களும் - ராஜகோபாலாச்சாரியார் உட்பட வந்து பேசியிருக்கின்ற ஒரு இடம் இருக்கிறதென்று சொன்னால், அது நகரப் பூங்காதான்.

நானும் பேசியிருக்கின்றேன் - நகரப் பூங்காவில்

நானும் என்னுடைய இளம் வயதிலிருந்தே நகரப் பூங்காவில் பேசியிருக்கின்றேன். இன்னும் பல்வேறு இடங்களிலே கூட இந்த நகரத்திலே பேசியிருக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன். ஆனால், இந்த மயிலாடுதுறை நகரப் பூங்காவில்தான் பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆனால், இப்பொழுது அந்த நகரப் பூங்காவிலே நடைபெறக் கூடிய வாய்ப்பு இல்லை என்ற காரணத்தினாலே கடந்த முறையும் சரி, இப்பொழுது நான் வந்த இரண்டாவது முறையும் சரி, இங்கே நகராட்சிக்கு முன்னாலே இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

சித்தி விநாயகருக்கு ஆபத்தில்லை

நகராட்சிக்கு முன்னாலே நடைபெறுவது என்பது இயல்பானது. அதிலே ஒன்றுமில்லை. ஆனால், சித்தி விநாயகர் கோவிலுக்கு முன்னாலே நடைபெறுகிறது (கைதட்டல்).

இங்கே சித்தி விநாயகருக்கும் ஆபத்தில்லை. சித்தி விநாயகருடைய கருத்தை பக்தர்களாக இங்கே வந்து போகிறார்களே, அவர்களுக்கும் தொந்தரவில்லை. அதே நேரத்திலே அவர்களைச் சிந்திக்க வைக்கக்கூடிய ஆற்றலோடு நடத்துகிறோமே , எங்களுக்கு அந்த ஆற்றல் இருக்கிறதென்று சொன்னால், இந்தப் பக்குவம் வட புலத்திலே உண்டா? தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா?

பிள்ளையாரை உடைத்தவர் தந்தை பெரியார்

எங்களால் பிள்ளையாருக்கு ஆபத்து வர முடியாது. பிள்ளையாரை உடைத்தவர் தந்தை பெரியார். அந்த நேரத்தில் கூட பண்பாடு எப்படியென்றால், ஒரு நாத்திகன் என்றால் - ஒரு பகுத்தறிவாளன், ஒரு தலைசிறந்த மனித நேயன் எப்படி நடந்துகொள்வான் என்பதற்கு வழிகாட்டும் நெறிமுறைகளை, நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் கலங்கரை விளக்கமாக இருந்து காட்டியிருக்கின்றார்.

நான் மாணவனாக இருந்தபொழுது கீவளூரில் உடைத்தேன்!

நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள கீவளூரில் நான் மாணவனாக இருந்தபொழுது பிள்ளையார் சிலையை உடைத்தேன் - 1932-லே. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள்கூட மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னார். அந்த நேரத்திலே கூட தந்தை பெரியார் சொன்னார் - ஆற்றங்கரையிலோ, குளத்திலோ, அநாதையாகத்தானே இருக்கிறார் - பிள்ளையார் என்பதற்காக அங்கே போய்விடாதீர்கள்.

களிமண் பிள்ளையாரை வாங்கி...

அல்லது கோவிலுக்குள்ளே போய்விடாதீர்கள். நாம் நம்முடைய செலவிலே களிமண் பிள்ளையாரை வாங்கி அதை உடைத்துக் காட்டுகிறோம் என்று சொன்னார். நமக்கு ஒன்றும் பிள்ளயைர்மீது கோபமில்லை. இருப்பவர் மீதுதானே கோபம் வரும். இல்லாதவர் மீது நமக்கு எப்படி கோபம் வரும்?

ஆனால், அதைக் களிமண்ணாக வைத்து அதில் ஏதோ பெரிய சக்தி இருக்கிறது என்று சொல்லுகின்றார்களே - ஒரு சக்தியுமில்லை என்று சொல்லி உலகத்திலேயே சிலை உடைப்பை மக்கள் இயக்கமாக நடத்திய ஒரே நாத்திகத் தலைவர் உண்டென்றால், அவர்தான் தந்தை பெரியார் அவர்கள் (கைதட்டல்).

நெருப்பு மிதித்தோம்!

அப்பொழுதுகூட நாங்கள் இன்னொருவருடைய உரிமையில் தலையிடவில்லை. நெருப்பு மிதித்தோம். தோழர்கள் பார்த்தீர்கள். மற்றவர்கள் நெருப்பு மிதிக்கின்ற நேரத்திலே அவர்களிடம் ரகளை செய்துகொண்டு கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று நாங்கள் சொல்லுவதில்லை.

பக்திக்கு இடமில்லை - மனச் சக்திக்கு இடமுண்டு

எங்களுடைய பணத்திலேயே நெருப்பைப் போட்டு, எங்களுடைய தோழர்கள் கருப்புச் சட்டை அணிந்து நடத்துகிறார்கள் என்று சொன்னால் நெருப்பு மிதிப்பதற்கும், பக்திக்கும் சம்பந்தமில்லை. மனச் சக்திக்குத்தான் இடமுண்டு என்று சொல்லக்கூடிய நிலை.

இன்றைக்கு கடவுள் நம்பிக்கை என்பது கேலிக்குரியதாக ஆக்கப்பட்டுவிட்டது. அதை ஒப்புக் கொள்வதற்குப் பக்தர்களுக்குத் துணிவில்லாமல் இருக்கலாம். ஆனால், கடவுள் நம்பிக்கையில் இந்த நாடு கேலிக்குரியதாகிவிட்டது.

என்ன இப்படி சொல்லுகிறார்களே, எங்கள் வேலை சுலபமாக ஆகிவிட்டது -எப்பொழுது? ஏ.கே. 47, பாதுகாப்பிலே எல்லா கடவுள்களும் இருக்கவேண்டிய கட்டாயம் (கைதட்டல்).

நாங்கள் வென்றோம்

தீவிரவாதிக்கு பயப்படக்கூடிய ஒரு நெருக்கடி கடவுளுக்கு எப்போது ஏற்பட்டதோ, அன்றைக்கே பெரியார் வென்றார், நாங்கள் வென்றோம், திராவிடர் கழகம் வென்றது (கைதட்டல்). பகுத்தறிவுக் கொடி உயர்ந்தது என்று அதற்குப் பொருள். கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்பதற்காகத்தான் கடவுளிடம் நீங்கள் போகின்றீர்கள்.

டாடா - பிர்லாவோடு போட்டி போடக் கூடியவர்கள்

ஆனால், அப்படிப் போகும்பொழுதே பக்தர்களுக்கு மெட்டல் டிடக்டர். மீனாட்சி அம்மன் கோவிலாக இருந்தாலும் சரி, இருப்பதிலேயே ரொம்ப முதலாளித்துவக் கடவுள் ஒன்று உண்டென்றால் டாடா - பிர்லாவோடு போட்டி போடக்கூடிய கடவுள் திருப்பதி ஏழுமலையான் - ஏழுகொண்டலவாடு. தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பான் கோவிந்தன்.

செல்ஃபோனுக்கு அனுமதி இல்லை

அப்பேர்ப்பட்ட கோவிந்தனைப் பார்ப்பதற்கு மலைமீது ஏறுவதற்கு முன்னால், செல்ஃபோனுக்கு அனுமதியில்லை - ஏன்? ஒருவேளை கோவிந்தன் செல்ஃபோனிலே கூப்பிட்டு விடுவான் என்ற பயமா? இல்லை. செல்ஃபோனிலே எங்கே தீவிரவாதி வெடிகுண்டு வைத்துவிடுவானோ? என்பதற்காக ஏழுமலை யானைத் தரிசிப்பதற்கு முன்னாலே செல்ஃபோனுக்கு அனுமதி யில்லை.

எப்படி உன்னைக் காப்பாற்றுவான்?

செல்ஃபோனையே தடுக்க முடியாத எழுமலையான் எப்படியப்பா உன்னைக் காப்பாற்றுவான்? என்று சிந்தித்துப்பார் என்று சொல்வதற்கு எவ்வளவு சுலபமாக எங்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். எவ்வளவு பெரிய பிள்ளை விளையாட்டு இது - இன்னமும்! நெருப்பு மிதிப்பதைப் பற்றி நாங்கள் பல இடங்களிலே விளக்கிச் சொல்லியிருக்கின்றோம்.

தியரி - பிராக்டிகல் போல

நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கின்றோம். வகுப்பிலே எப்படி தியரி - பிராக்டிகல் என்று சொல்லுகிறோமே அது மாதிரி நடத்திக் காட்டக்கூடிய ஒரு வாய்ப்பை இன்றைக்கு பெற்றிருக் கின்றோம். நம்முடைய தாய்மார்கள் - சாதாரணமாக விறகை அடுப்பிலே வைத்திருக்கும்பொழுது நெருப்புத் துண்டு அடுப்பை விட்டு கீழே விழுந்தால் அதைத் தாய்மார்கள் கையிலே எடுத்துப் போடு வார்கள். இப்பொழுது அந்த வாய்ப்பு இல்லை.

கலைஞர் அரசின் இலவச எரிவாயு அடுப்பு

காரணம், கலைஞர் அரசு இலவச காஸ் ஸ்டவ் என்பதை வழங்கிவிட்டார்கள். அடுப்பையும் கொடுத்தார். அதோடு அரிசியையும் கொடுத்தார். அதோடு மளிகைப் பொருள்களையும் கொடுத்தார்.

இலவசமாக பொங்கல் பொருள்கள்

பத்தாததற்கு பொங்கலுக்கு பொங்கி சாப்பிடுவதற்கு இலவசமாக எல்லாப் பொருள்களையும் கொடுத்திருக்கின்றார். அப்படிக் கொடுத்ததுமட்டுமல்ல, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியையும் சேர்த்து அலுப்பு - சலிப்பு இல்லாமல் பாருங்கள் என்று சொல்லிக் கொடுத்திருக்கின்றார். பெண்கள் பழைய காலத்து ஊது குழலைத் தேடவேண்டிய அவசியமில்லை.

நெருப்புக் குண்டத்திலே நடக்கிறார்கள்

ஆனால், பழைய காலத்து சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். இன்னமும் வீட்டிலே அடுப்பெரியும் பொழுது பழைய அடுப்பாக இருக்கும்பொழுது நெருப்புத் துண்டு அடுப்பை விட்டுக் கீழே விழுந்தால் டப்பென்று கையில் எடுத்து அடுப்புக்குள் போடுவார்கள் தாய்மார்கள்.

இது தாய்மார்களுக்குத் தெரியும். சகோதரிகளுக்குத் தெரியும். அதுபோல அந்த விறகை உடைத்து நெருப்புக் குண்டமாக வ்ததிருக்கின்ற நேரத்திலே வேகமாக நடக்கிறார்கள் - எல்லோருக்கும் தெரியும்.

பழுக்கக் காய்ச்சிய இரும்புத் தகட்டின்மீது

ஒரு நான்கடிக்கு நான்கடி இரும்புத் தகட்டை நன்றாகக் காய்ச்சி அதிலேபோய் காலை வைத்தால் பக்தர்களாக இருக் கிறவர்களும் நிற்கமுடியாது, நாங்களும் நிற்க முடியாது.

ஏனென்றால், இயற்பியல் தத்துவப்படி மரம் அந்த வெப்பத்தை விடுவதற்கும், இரும்பு அந்த வெப்பத்தை வைத்துக் கொள்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. எனவேதான் நிச்சயமாக எவ்வளவு பெரிய பக்தனாக இருந்தாலும், அந்த பழுக்கக் காய்ச்சிய இரும்புத் தகட்டின்மீது ஒரு அய்ந்து நிமிடம் நின்று காட்டு என்று சொன்னால் அவரும் நிற்க முடியாது, பகுத்தறிவாளரும் நிற்க முடியாது. எங்களுடைய ஊர்வலத்தில் தாய்மார்கள் தீச்சட்டியைத் தூக்கிக் கொண்டு வருகின்றார்கள். நின்று ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற நான்கூட அந்தத் தீச்சட்டியை கையிலேந்தி காட்டுவேன் - தீச்சட்டி கடவில்லை என்று. அதைக்கூட நாங்கள் ஒளிப்படம் எடுத்து போடுவோம்.

கலைஞரின் மகள் கவிஞர் கனிமொழி

நம்முடைய கலைஞர் அவர்களுடைய அன்பு மகள், பகுத்தறிவுச் செல்வியாகவே வளர்ந்து இன்றைக்கு ஒரு நல்ல பகுத்தறிவு கொள்கையை பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் நம்முடைய கவிஞர் கனிமொழி அவர்கள் எங்களுடைய மாநாட்டுக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காக பெரியார் திடலுக்கு வந்தார்.

அங்கே இந்த தீச்சட்டியை மாணவிகள் ஏந்திக் கொண்டு வந்தார்கள். அந்தத் தீச்சட்டியை எப்படி கையிலேந்திக் காட்டுகிறார்கள் என்பதை விளக்கிச் சொல்லுகின்றபொழுது நான் எடுத்துக் காட்டினேன்.

இந்தப் படத்தை நிரந்தரமாக மாட்டினோம்!

பிறகு கனிமொழி அவர்களும் எடுத்துக் காட்டினார்கள். ஒன்றும் சுடாதா? என்று கேட்டார். சுடவே சுடாது. யார் கைகளில் எடுத்தாலும் சுடாது என்று சொன்னோம். கனிமொழி அவர்கள் தீச்சட்டி கையிலேந்துகின்ற படத்தைப் பார்த்து பாராட்டி அருமையான வாய்ப்பு - இந்தப் படத்தை நிரந்தரமாக மாட்டி வை என்று சொன்னார்.

குறுகிய காலம் என்பதினாலே நம்முடைய தோழர்கள் ஊர்வலம் நடத்தவில்லை. ஒரு மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்தியிருந்தால் எங்களுடைய தோழர்களைப் பார்த்திருந்தீர் களேயானால், பூபேஷ் குப்தாவோ, அல்லது மற்றவர்களோ அலகு குத்தி அம்பாசிடர் காரை இழுத்துக் கொண்டு வருகின்றார்கள். அடுத்து பெரிய வேனையும் இழுத்து வருகின்றார்கள். அலகு குத்தி ஊர்வலமாக வந்த பின்பு முதுகில் குத்திய ஊக்கை எங்கள் முன்னாலே கழற்றி கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு காட்டுவார்கள்.

காட்டுமிராண்டிகளைத் திருத்த

அதைப் பார்க்கின்ற எங்களுக்கே கூட கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். காட்டுமிராண்டிகளைத் திருத்துவதற்கு நாமும் காட்டுமிராண்டிகளாகி சொல்லிக் கொடுக்கவேண்டியிருக்கிறதே. இது என்னய்யா விசித்திரமான ஒரு கொடுமை? என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு.

அப்படிப்பட்ட ஒரு சூழல் இன்றைக்கு இருக்கிறது. அந்தக் கடவுள் நம்பிக்கையினாலே மனிதன் பயன்பெற்றிருக்கின்றானா? எங்களுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்? அல்லது என்ன சண்டை?

-------------------------தொடரும்


---------------"விடுதலை" -20-1-2009

3 comments:

Unknown said...

பிள்ளையார் சிலை உடைப்புப் போரட்ட வரலாற்றை தெளிவாக விளக்கி உண்மையை உணர வைத்தது கி. வீரமணி அவர்களின் பேச்சு.நன்றி.

தமிழ் ஓவியா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்

தமிழ் ஓவியா said...

பெரியாரின் போராட்டத்தின் நோக்கம் பற்றி அறிந்து கொள்ள பெரியார் சும்யமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகளைப் படியுங்கள் தமிழ்.