Search This Blog

21.1.09

மனிதனும் உயிர்களும் படைக்கப்பட்டவையா?படிப்படியாக உருவானவையா?




மனிதன் தோன்றிய கதை

--------------------------------------------------------------------------------------

(12.2.2009 இல் சார்லஸ் டார்வின்அவர்களின் 200 ஆம் பிறந்த நாள். அறிவியலாளர்களாலும், பகுத்தறிவாளர்களாலும் கொண்டாடப் படவிருக்கும் நாள். சென்னை பெரியார் திடலில் 17-02-2009 இல் மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார், தமிழர் தலைவர்.
மனிதனும் உயிர்களும் படைக்கப்பட்டவை எனும் மதக்கருத்தை அடித்து நொறுக்கி, அவை படிப்படியாக உருவானவை எனும் உருமலர்ச்சிக் கொள்கையை உலகுக்கு அளித்த அறிஞரைப்பற்றி கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எஸ்.கே. எழுதிய கட்டுரை இது.)
--------------------------------------------------------------------------------------


மனிதக் குரங்கின் பரிணாம வளர்ச்சியின் உச்சக் கட்டத்தில் மனிதன் தோன்றுகிறான் என்று சார்லஸ் டார்வின் (Charles Darwin) அவருடைய பிரசித்தி பெற்ற மனித வமிசமும், பால் உறவு தெரிந்தெடுத்தலும் (The Descent of Man & Selection in relation to sex -1871) என்ற நூலில் விளக்கினார்.
இந்த நூல் வெளிவந்ததும், ஜீவநூல் அறிஞர்கள் இடையே பெரியதோர் பரபரப்பை ஏற்படுத்தியது. கடவுள் மனிதனைச் சிருஷ்டித்தார் என்று கூறி வந்த ஜீவநூல் அறிஞர்கள் பொய்யாக்கப்பட்டனர். கடவுள் வழிபாட்டையும், மூடப்பழக்க வழங்களையும் கடுமையாக எதிர்த்து வந்த மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் டார்வினின் நூலை வரவேற்றனர். டார்வினின் மற்றொரு பிரசித்தி பெற்ற நூல் ஜீவராசிகளின் தோற்றம் (Origin of the Species - 1859) கடவுளுக்கு இவ்வுலகத்திலுள்ள ஜீவராசிகள் எதையுமே, சிருஷ்டிக்கும் உரிமையை மறுத்துவிட்டது. ஆகவே, ஜீவராசிகளும் மனிதனும் இவ்வுலகத்தின் குறிப்பிட்ட சீதோஷ்ண நிலைமைகளில், கோடானுகோடி ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியால் ஏற்பட்டதை விஞ்ஞானிகள் மறுக்க முடியாத நிலையை சார்லஸ் டார்வின் ஏற்படுத்தி விட்டார். எல்லா ஜீவராசிகளும் சிருஷ்டிக்கப்பட்டவை அல்ல; ஒரு சில ஜீவராசிகளின் வம்சம்தான் என்று கூறுகிறார் டார்வின்.
மனிதக்குரங்கு எவ்வாறு பரிணாம வளர்ச்சியின் விளைவாக மனிதனாக மாறிற்று என்பதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
உழைப்பு செல்வத்தை உண்டாக்குகிறது என்றால், உழைப்பு மனிதனையே ஏற்படுத்தியது என்று சொல்ல வேண்டும் என்று ஏங்கல்ஸ் கூறுகிறார். எத்தனை எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இன்று இந்துமகா சமுத்திரம் இருக்கும் இடத்தில் பெரியதோர் கண்டம் இருந்திருக்க வேண்டும். அங்கு மனிதனைப் போல் அங்கமுள்ள குரங்குகள் இருந்தன. இந்த நமது முன்னோர்கள் பற்றி டார்வின் ஒரு வரையறை தந்துள்ளார். இவைகள் உடல் பூராவும் ரோமம் நிறைந்தவை யாகவும், கூர்மையான காதும் உள்ளவையாக இருந்தன. இவை கூட்டம், கூட்டமாக மரங்களில் வசித்து வந்தன.
மரங்களின் மேல் ஏறுவதற்குக் கைகள் உபயோகப் பட்டன. ஆனால், தட்டையான நிலத்தின் மீது நடக்கும் போது கைகளுக்கு வேலை இல்லை. மேலும் மேலும் நிமிர்ந்து நடப்பது மனிதக் குரங்கு மனிதனாக மாற முக்கியப் பங்கை ஆற்றி உள்ளது.
இன்றுள்ள மனிதக் குரங்குகள், தங்கள் பாதங்களின் மீது நடப்பதைக் காணலாம். ஆனால் அவசியப்பட்டபோது தான் அவ்வாறு நடக்கின்றன; கஷ்டத்தோடுதான் நிமிர்ந்து நடக்கின்றன. சாதாரணமாகத் தங்கள் கைகளையும் உபயோகப்படுத்தி நடப்பதைக் காணலாம். சுருங்கக் கூறின், நான்கு கால்களின் மீது நடப்பதிலிருந்து இரண்டு கால்களைக் கொண்டே நடக்கும் பரிணாம வளர்ச்சியின் சங்கடங்கள் அனைத்தையும் பார்க்க முடியும்.
நமது முன்னோர்கள் இரண்டு கால்களைக் கொண்டு நடக்கத் தொடங்க, அவர்கள் கைகளுக்கு வேறு வேலையும் ஏற்பட்டது. கைகளைக் கொண்டு உணவு சேகரிப்பதும், கைகளைக் கொண்டு சாப்பிடுவதும், இதைச் சாதாரணமாகக் குரங்குகளும் செய்கின்றன. சிம்பான்சி குரங்கு (ஊஅயீய ஷ்நந) கிளைகளுக் கிடையே வீட்டின் கூரைபோல் வேய்ந்து கொள்வதும் உண்டு. கைகளில் தடியை ஏந்தி எதிரிகளைத் தாக்குவதும் அல்லது கைகளில் காய்கனிகள் அல்லது கல்லைக் கொண்டு எதிரிகளைத் தாக்குவதும் உண்டு. இவைகளைப் பிடித்து நாம் வளர்த்தால், கைகளைக் கொண்டு நாம் செய்யும் பல வேலைகளையும் இவைகள் செய்கின்றன. எப்படி இருந்த போதிலும் மனிதன் தன் கைகளைக் கொண்டு செய்கின்ற பல வேலைகளை மனிதக் குரங்கு செய்ய இயலாதிருப்பதைப் பார்க்க இயலும். எனவே, எவ்வளவுக் கெவ்வளவோ நூற்றாண்டுகளில் இந்தப் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சக்கி முக்கிக் கல் முதன் முதலில் கத்தியாக்கப்பட்டது மனிதக் கைகளால்தான். இதைச் செய்ய எவ்வளவோ நூற்றாண்டுகள் மனிதனுக்கும் குரங்குக்கும் இடையே உருண்டோடி இருக்கும். ஆனால் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. கைகளுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது. வாழையடி வாழையாக இந்தச் சுதந்திரம் வளர்ந்து, வருங்காலச் சந்ததிகளுக்கு இது ஒரு பொக்கிஷமாகத் திகழ்ந்தது.
எனவே, கைகள் உழைப்பின் கருவிகள் மட்டுமல்ல, உழைப்பின் பலனும் அதுவே என்று ஏங்கல்ஸ் கூறுகிறார். நாளடைவில் கைகள் பலப்பட்டு, தசையும் நரம்பும் வளர எலும்பும் வளர்ந்து, கைகள் நுட்பமான வேலைகளைச் செய்யத் தொடங்கி, மனிதன் சிலைகளையும், ஓவியங்களையும், சித்திரங்களையும் கைகளால் செய்யும் திறமையை அடைந்தான்.
ஆனால் கைகள் உடலின் ஒரு அங்கம்தான் அல்லவா, கைகள் வளர்ந்தன என்றால் அத்துடன் உடலும் வளர்ந்தது.
கைகளின் வளர்ச்சியினால் இயற்கை மேலும் மேலும் வெல்லப்பட்டது. அதுவரை உபயோகமற்ற பொருட்கள் மனிதனின் கைகளால் உபயோகப் பொருட்களாக மாறின. மனிதன், குரங்குகள் போலவே கூட்டம் கூட்டமாகத்தான் இருந்தான். இவ்வாறு கூட்டம் கூட்டமாக இருக்க ஒருவரோடு ஒருவர் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் மொழி என்பது ஏற்பட்டது.
காட்டில் இருக்கும் ஜந்துகளுக்கு மொழி என்பது தேவையில்லை. ஆனால் நாம் வளர்க்கும் நாய் கூடச் சில நேரங்களில் நாம் கூறுவதைப் புரிந்து கொள்கிறது. போய்ப் படு! இங்கே வா! என்று சொன்னால் அப்படியே செய்கின்றது. இது மட்டுமன்றி நாய் சில குணங்களையும் வெளிப்படுத்துகின்றது. உதாரணமாக நன்றி - விஸ்வாசம் என்பதை நாயின் சிறப்பியல்பாகக் காணலாம். இது பழக்கத்தால் மனிதனிடமிருந்து நாய் கற்றுக் கொள்கிறது. மனிதன் தொண்டையைப் போல் நாயின் தொண்டை வளர்ச்சி பெறாத காரணத்தால், அது தன் கருத்தை நமது மொழியில் கூற முடிவதில்லை.
பறவைகளின் தொண்டை மனிதர்களின் தொண்டைக்கு மாறுபட்டது. எனினும், பறவைகள் தான் பேசக் கற்றுக் கொள்கின்றன. எல்லாப் பறவைகளையும் விட மிகப் பயங்கரமான தொண்டை கொண்ட கிளிதான் மிக நல்ல முறையில் நம்மைப் போல் பேசக் கற்றுக் கொள்கின்றன. கற்றுக் கொண்ட பின், தான் கற்றதனைத்தையும் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கும் தன்மை கொண்டது கிளி. ஓர் அளவுதான் பேசுவதைப் புரிந்து கொள்ளும் சக்தியும் கிளிக்கு உண்டு. உதாரணமாகச் சில திட்டுகிற வார்த்தைகளையும் கிளிக்கு சிலர் கற்றுக் கொடுப்பதுண்டு. கிளிக்குக் கோபம் வந்தால் இந்த வார்த்தைகளை மிகப் பொருத்தமாக உபயோகிப்பதைக் காணலாம். எனக்கு மிட்டாய் கொடு என்று கற்றுக் கொடுத்தால், தனக்கு மிட்டாய் வேண்டுமென்ற போது, எனக்கு மிட்டாய் கொடு! எனக்கு மிட்டாய் கொடு! என்று கெஞ்சுவதைக் கேட்கலாம்.
முதலில் உழைப்பும், பிறகு வார்த்தையும், குரங்கு மனிதனை மனிதனாக்கின. இவைகளின் விளைவாக மூளையும் வளர்ந்தது. மூளை வளர வளர, அய்ம்புலன்களும் பரிணாம வளர்ச்சி அடைந்தன.
பேச்சுத் தொடங்கியதும், கேட்கும் சக்தி வளர்ந்தது. அதாவது மூளை வளர்ச்சிக்கும் அய்ம்புலன்களின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மூளை வளர வளர, நல்லது எது, கெட்டது எது என்று ஆராய்ந்து பார்க்கும் சக்தியும் ஏற்பட்டது. நாளடைவில் மனிதனுக்கும் குரங்குக்கும் எவ்வளவோ இடைவெளி உள்ளது போல் நிலைமை ஏற்பட்டது. மனிதனின் சிந்தனை சக்தி வளர்ந்து, எல்லா ஜீவராசிகளிலும் மனிதன் சிறந்தவன் என்ற உண்மை புலனாயிற்று. சமுதாயம் என்பது ஏற்பட மனிதன் ஆகச் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.
மனிதன் வாழ்க்கையில் ஒரு நொடி எப்படியோ, அப்படியே உலக சரித்திரத்தில் பல ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகள் ஆகும். மரத்தில் வசித்து வந்த குரங்குகளுக்கும், மனித சமுதாயத்திற்கும் இடையே பல ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகள் உருண்டோடின. இவ்விரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசமென்ன? உழைப்புத்தான் என்று ஏங்கல்ஸ் கூறுகிறார்.
சீதோஷ்ண நிலைமைகளும், இயற்கையும் எவற்றைத் தந்தனவோ, அவற்றை மட்டும் தங்கள் உணவாகக் கொண்டன குரங்குக் கூட்டங்கள். இடம் மாற்றம் செய்த குரங்குக் கூட்டங்கள் கூடச் சில வரம்புகளுக்குள்தான் அவ்வாறு செய்ய முடிந்தது. தனக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் அழிக்கும் தன்மை கொண்ட ஜீவராசிகள், கிடைக்கும் புதிய உணவை உட்கொள்ள ஆரம்பித்ததும், அவற்றின் ரத்தச்சேர்மானமே வித்தியாசப்படத் தொடங்கின. பழைய ஜீவராசிகள் அழிந்தன. புதிய ஜீவராசிகள் தோன்றின. இம்முறையில்தான் மனிதக் குரங்கு மனிதனாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது.
உழைப்பு மனிதனை உருவாக்கியது என்றால் உழைப்புக்குக் கருவிகள் தேவை. ஆதி மனிதனின் கருவிகள் யாது? வேட்டையாடும் கருவிகளும், மீன் பிடிக்கும் கருவிகளும் தான் முதல் முதலில் தோன்றியதாகச் சரித்திரம் கூறுகிறது. எனவே கனிகளையும் கிழங்குகளையும் புசித்து வந்த குரங்கு மனிதன் வேட்டையாடத் தொடங்கினான். மீன் பிடிக்கத் தொடங்கினான் என்றால், மாமிசம் சாப்பிடத் தொடங்கினான் என்றுதான் பொருள். மாமிசம் சாப்பிடுவதும் மனிதனாக வளர்ச்சி பெறப் பெரிதும் உதவி உள்ளது. மூளை பெரிதாவதற்கும், நல்ல முறையில் செயல்படுவதற்கும் மாமிச ஆகாரம் பெரிதும் உதவி உள்ளது. சாதாரணமாக மாமிசம் சாப்பிடுபவர்கள் மூளை, மரக்கறி பதார்த்தங்களைச் சாப்பிடுபவர்களை விட நல்ல முறையில் செயல்படுகிறது என்பது வாழ்க்கை நிரூபித்த உண்மையாகும்.
மரக்கறி சாப்பிடுபவர்கள் கடவுள் வழிபாட்டின் பேரால், மதத்தின் பேரால், ஜாதியின் பேரால் மாமிசம் சாப்பிடுபவர்களைக் கீழ்த்தரமாக நினைக்கிறார்கள். புலாலைத் தின்றால் அவர்கள் நரகத்திற்குத்தான் செல்வார்கள் என்கிறார் திருவள்ளுவர்.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு
உயிர்கள் உடம்பு பெற்று வாழ்வது, ஊன் உண்ணாமலிருத்தலை அடிப்படையாகக் கொண்டது என்றும், ஊன் உண்டால் அவன் நரகத்தில் என்றென்றைக்கும் இருப்பான் என்றும் கூறுகிறார் வள்ளுவர்.
உலகத்தில், உயிருள்ள பொருள்கள், உயிரில்லாத பொருள்கள் என்று இரண்டு வகை உண்டு. உயிரில்லாப் பொருள்கள் என்று நினைக்கப்படும் பல பொருள்களும் உயிருள்ளவையே. ஆகவே காய்கறி தின்று வசிக்கக் கூடியவர்கள் தாங்கள் சாப்பிடும் பொருள்களில் உள்ள உயிரைச் சாதாரணக் கண்களால் பார்க்க முடிவதில்லையே ஒழிய, மைக்ரோஸ்கோப் (ஆஉசடிளஉடியீந) மூலமாகப் பார்க்க இயலும். ஆகவே, ஊன் உண்ணக் கூடியவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்று கூறுவது கோடானுகோடி மக்கள், ஏன் எல்லா மக்களுமே நரகத்திற்கச் செல்வார்கள் என்பதுதான் ஆகும்.
இது ஒருபுறமிருக்க, பாரத நாட்டில் அசுவமேதயாகம் என்றும் திருமணத்தில் கோ மாமிசம் சாப்பிட வேண்டும் என்றும் சம்பிரதாயம் இருந்து வந்துள்ளது. இன்று கோடிக் கணக்கான ஏழை மக்கள், குறிப்பாகத் தொழிலாளர்களும் விவசாயிகளும் கோ மாமிசம் சாப்பிடுவதை இந்து மதத்தின் பெயரால் எதிர்க்கின்றார்கள் என்றால், இந்து மதத்திலுள்ள ஜாதிக் கொடுமைகளையும் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, ஜாதி இந்துக்கள், ஹரிஜனங்கள் என்று பாகுபாட்டையும் அப்படியே பேணிக் காக்க வேண்டுமென்று கூறுகிறார்கள் என்பதுதான் பொருள்.
மாமிசம் சாப்பிடுபவர்கள் மூளை பெரியதாகவும், அவர்கள் உடல் ஆரோக்கியமாகவும், அவர்கள் அறிவாளிகளாகவும் இருக்கிறார்கள் என்பது சரித்திரம் கண்ட உண்மை.
எது எப்படி இருந்த போதிலும், மாமிசம் சாப்பிடுவது இரண்டு முக்கியமான முன்னேற்றக் கட்டங்களுக்கு மனிதனை இட்டுச் சென்றிருக்கிறது - தீயைக் கட்டுக்குள் அடக்குவதும், கால்நடைப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதுமே ஆகும். உணவைத் தீயைக்கொண்டு சமைப்பதால் ஜீரணம் செய்வதைச் சுலபமாக்கியது. பிராணிகளை வீட்டில் வளர்ப்பதால், வேட்டையாடி, உணவை சேகரிப்பதுடன், வீட்டிலேயே உள்ள கோழி, ஆடு, மாடுகளை உணவாகக் கொள்ள வசதி ஏற்பட்டது. இது மட்டுமன்றிப் பால், முட்டை முதலியன ஏராளமாகக் கிடைக்கவும் செய்தன. இவைகளை உணவாகக் கொள்ள முடிந்தது. இவை இரண்டும் மனிதன் விடுதலை பெற்று, மேலும் வளர உதவின.
எப்படி உணவாகக் கொள்ளத் தக்கதனைத்தையும் கொள்ள மனிதன் கற்றுக் கொண்டானோ, அவ்வாறே பல்வேறு தரப்பட்ட சீதோஷ்ண நிலைமைகளிலும் வாழப் பயிற்சி பெற்றான். உலகம் பூராவும் சுற்றத் தொடங்கினான். மனிதனைத் தவிர வேறெந்தப் பிராணியும் இவ்வாறு உலகம் பூராவும் சுற்றும் தன்மை கொண்டதல்ல. ஆதிமனிதன் இருந்த உஷ்ணமான பிரதேசங்களிலிருந்து, குளிர்ச்சி மிகுந்த இடங்களுக்குச் சென்று வசிக்கத் தொடங்கினான். அங்குக் கோடைக்காலம், மாரிக்காலம் என்று இரண்டு காலங்கள் இருந்தன. காலத்திற்குத் தகுந்தாற் போல் ஆடை அணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிர்ப்பந்தத்திற்கு இணங்க அவன் உழைப்பும் இருக்க வேண்டியதாயிற்று. இது மேலும் மனிதனை மற்றுமுள்ள பிராணிகளிடமிருந்து பிரித்தது.
கரங்களால் உழைப்பும், பேசும் தொண்டைகளின் அமைப்பும், சிந்திக்கும் மூளையும், மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு மேலும் பெரிதும் காரணமாக இருந்தன. மனிதர்கள் கூட்டமாக வாழ்ந்து வந்ததும் இவ்வளர்ச்சிக்கு உதவியது. மனிதர்கள் கூட்டில் பல சிக்கல் மிகுந்த நுட்பமான வேலைகளைச் செய்யத் தொடங்கினர். இவைகளில் வெற்றி காணக் காண மேலும் மேலும் பல நுட்பமான வேலைகளைக் கற்பனை செய்து அவ்வாறு எண்ணியவாறே செய்யத் தொடங்கினர். வாழையடி வாழையாக வேலைமுறைகள், நோக்கங்கள், இந்நோக்கங்களை அடைவது என்ற நிலை ஏற்பட்டது. மனித வளர்ச்சி எல்லையில்லா வளர்ச்சியாகக் காணப்பட்டது. வேட்டையாடுவது, ஆடு மாடுகளை வளர்ப்பது என்பதுடன், ஏர் உழுது பயிர் செய்வது என்பதும் ஏற்பட்டது. பிறகு நூல் நூற்பது, தறிபோட்டு துணி நெய்வது, உலோகங்களைக் கொண்டு வேலை செய்வது, மண்பாண்டங்களைச் செய்வது, கடல்மேல் போக கப்பல்கள் கட்டுவது - இவை அனைத்தும் படிப்படியாக மனித சமுதாய வளர்ச்சிக்குப் பளிங்கு போல் எடுத்துக்காட்டுகின்றன.
வியாபாரம், தொழில் வளர்ச்சியுடன், கலை, நாகரிகம், விஞ்ஞானம் தோன்றின. மனிதக்கூட்டங்களின் பரிணாம வளர்ச்சியின் விளைவாகத் தேசங்களும், அரசும் ஏற்பட்டன. சட்டம், அரசியல் ஏற்பட்டன. இவைகளுடன் மனித சமுதாயத்தின் பிரதி பிம்பம் போல், விசித்திரமானதொன்று மனிதன் மூளையில் ஏற்பட்டது. அதுதான் மதமும் கடவுள் வழிபாடும் ஆகும்.
மனிதன் சிருஷ்டிப்பு அனைத்தும் முதலில் மனிதனின் சிந்தனையாகத் தோன்றின. சிந்தனை செய்ததை நடைமுறையில் கொண்டுவர மனிதன் முயற்சித்தான்; வெற்றியும் கண்டான். இவ்வாறு சிந்தனை செய்து நடைமுறையில் சிருஷ்டிக்கப்பட்ட பொருள்களால் மேலும் மேலும் ஆதிமனிதன் சிந்திக்காமலேயே செய்யப்பட்ட பொருள்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. நாகரிகம் ஏற்பட்டதற்கே மனிதன் சிந்தனை பிரதானக் காரணமாக இருந்துள்ளது. மனிதனின் தேவை, மனிதனின் மூளையில் இடம் பெற்று, அவன் சிந்தனையாகக் காட்சியளித்தது. சிந்தனை நடைமுறை வழிகாட்டி போல் காட்சி அளித்தது. சிந்தனை செய்து பொருளைத் தயாரித்ததால், சிந்தனைதான் முதல், பொருள் பிறகுதான் என்ற கருத்து, எண்ணற்ற முதல்வாதத்தத்துவம் ஏற்பட உதவிற்று. எனவே உலகாயதவாத இயற்கை விஞ்ஞானிகள் டார்வினின் ஜீவராசிகள் தோன்றிய விதத்தை ஏற்றுக் கொண்ட போதும் மனிதன் மனிதனாகத் திகழ உழைப்பின் பாத்திரத்தைத் தெளிவாகக் காணக் கஷ்டப்படுகின்றனர்.
மனிதன் தன் உழைப்பினால் தன்னைச் சுற்றி இருக்கும் இயற்கையை மாற்றுகிறான். அவ்வாறே எல்லா ஜீராசிகளுக்கும் தன் உழைப்பால், அதிபதியாகக் காட்சியளிக்கின்றான். மனிதனுக்கும் இதர ஜீவராசிகளுக்கும் இடையே உள்ள இதுதான் மிக முக்கியமானதோர் வித்தியாசமாகும். இதற்கு மனிதன் உழைப்பே முக்கியக் காரணம். ஆனால் இயற்கையை முற்றிலும் மாற்ற மனிதனால் இயலாது. அதன் விதிகளைத் தன்னலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதே பொருளாகும். ஆகவே எண்ணம் வேறு, எதார்த்த உலகம் வேறு என்று எண்ணுவதே கற்பனையாகும். மதம், கடவுள் வழிபாடு என்பதெல்லாம் இந்த ஒருமைப்பாட்டை உணர முடியாததால் ஏற்பட்டதேயாகும்.
கோடானு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு தான் இயற்கையின் கோட்பாடுகளை நாம் உணர முடிந்துள்ளது என்றால், சமுதாய விளைவுகளை உணர்வது மிகக் கடினமே.


-----------------ஏ.எஸ்.கே. அவர்கள் எழுதிய கட்டுரை -நன்றி ; "விடுதலை" 18-1-2009

3 comments:

Unknown said...

மதவாதிகளின் கருத்துக்களுக்கு மரண அடி கொடுத்துவிட்டது இந்தக் கட்டுரை.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்

நம்பி.பா. said...

படைக்கப்பட்டவை நமது கற்பிதங்களே, தலைமுறைகளின் போராட்டத்தின் மூலமாய் உருவானவையே உண்மைகள்!

நல்ல கட்டுரையை எடுத்துத் தந்தற்கு நன்றி.