Search This Blog

26.1.09

இலங்கை ராணுவ அமைச்சர், தளபதி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு




தமிழர்களைக் கொன்று மனித உரிமை மீறலில்
ஈடுபடும் இலங்கை ராணுவ அமைச்சர், தளபதி மீது

அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

புஷ்ஷைக் குற்றவாளியாக்கிய வழக்கறிஞர் ப்ரூஸ் ஃபெயின் தகவல்


இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுவது அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் ஆகும். இதில் ஈடுபடும் இலங்கை ராணுவ அமைச்சரான கோத்தபய ராஜபக்சே, ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இருவரும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளனர். எனவே அவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருவேன் என்று அமெரிக்க முன்னாள் துணைத் தலைமை அரசு வழக்குரைஞர் ப்ரூஸ் ஃபெயின் கூறினார். ஈராக்கில் மனிதக் கொலைகளை நடத்தி மரணதண்டனைக் குற்றம் செய்துள்ளதாக ஜார்ஜ் புஷ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஃபெயின் வழக்கு தொடர்ந்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாட்டின் முன்னணி வழக்கறிஞரான ஃபெயின் அரசமைப்புச் சட்ட இயல் மற்றும் பண்பாட்டுச் சட்ட இயல் வல்லுநர் ஆவார். உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றவர். குடியுரிமை வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய இவர் ரொனால்டு ரீகன் ஆட்சியில் துணை அரசு தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியவர்.

ஈராக் உள்ளிட்ட பல்வேறு தலையீடுகள் மூலம் மனிதப் படுகொலைகள் நிகழ்த்தியுள்ளதாக பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் மீது கடும் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் அடிப்படை யில் அவர் மீது வழக்குத் தொடர அனுமதி கோரப்பட்டுள்ளது.

இவர் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அமெரிக்காவில் இதற்கான அமைப்பை ஏற்படுத்தி, தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்.

அண்மையில் மாக்ஸ் பவுன்டேசன் சார்பில் சென்னை வந்துள்ள ஃபென் மனித உரிமைகளும் இனப்படுகொலைகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதன் சுருக்கம் வருமாறு:

இலங்கையில் நடக்கும் இனப்படு கொலையை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ய சிங்களர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.

இந்த இனப்படுகொலை மகாவம்சம் காலம் முதல் நடைபெறு கிறது. தொடர்ந்து தர்மபாலா காலத்தில் அதிக அளவில் தமிழ்க் குடும்பங்களைக் கொடுமைப்படுத்தினர். அதனால்தான் சிங் களர்கள் தர்மபாலாவை தெய்வமாக மதிக்கிறார்கள்.

இந்த வரிசையில்தான் ராஜபக்சே தமிழர்களைக் கொன்று வருகிறார். இனப்படுகொலையைத் தலைமையேற்று நடத்தும் ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சே, ராணுவத் தளபதி சரத்பொன்சேகா இருவரும் அமெரிக்காவில் குடியுரிமையும், அந்தஸ்தும் பெற்றவர்கள். அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதால், இவர்களுக்கு எதிராக 1000 பக்கக் குற்றப் பத்திரிகை தயார் செய்துள்ளேன். அமெரிக்க நீதிமன்றத்தில் இலங்கை இனப்படு கொலை தொடர்பாக வழக்கு தொடரவுள்ளேன்.

பாகிஸ்தானில் இருந்து பங்களாதேச மக்களுக்காக தனிநாடு கிடைக்க இந்தியா உதவியது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒரே தீர்வு தனி நாடுதான். தமிழன் என்ற அடையாளம் தெரிந்தால் கூட கொல்லப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினையில் இந்தியா மவுனமாக இருக்கிறது. இலங்கைத் தமிழர் இனப்படுகொலை நடக்கும்போது, புலிகள் பற்றிப் பேசத் தேவையில்லை. மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு ஃபெயின் பேசினார்.

வழக்கறிஞர் ஃபெயின், சென்னை பெரியார் திடல் வருகை தந்து தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பினார்.

-------------------நன்றி: - "விடுதலை" 26-1-2009

2 comments:

Thamizhan said...

தமிழினப் படு கொலைக்கு முழு ஆதரவும்,முப்படையுடனும் உதவும் இந்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானங் கொண்டு வந்து,
சோனியா அம்மையாரின் பழி வாங்கும் படலத்தைத் தோலுரித்துக் காண்பித்து,உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய கடமை இன்று அனைத்துத் தமிழர்களுக்கும் தலையாயக் கடமையாகும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா