Search This Blog

27.1.09

அய்யாவின் அடிச்சுவட்டில்...!
அய்யாவின் அடிச்சுவட்டில்தான் நாடே இருக்கிறது. இருக்க வேண்டும். அப்படியிருந்தால் எந்த உரிமை மறுப்பும் நம்மைப் பார்த்து கனைக்க முடியாது - எந்தச் சுரண்டலும் இங்குச் சூல்கொள்ள முடியாது.

1943 ஜூலை 29 இல் தந்தை பெரியார் அவர்களை 10 வயது சிறுவனாக கடலூரில் சந்தித்து, அந்தப் பருவந்தொட்டு 1973 டிசம்பர் 24 இல் பகுத்தறிவுப் பகலவன் தன் இமையை மூடும் அந்தக் கடைசிச் சொட்டு நேரம் வரை - அந்த அடிச்சுவட்டைத் தாளம் தப்பாமல், தளை தட்டாமல் மறந்தும், நொடித்தும் வேறு இடத்தில் தன் கால் சுண்டு விரலைக்கூட தவறவிடாமல் பதித்த ஒரு தலைவர் அய்யாவின் அடிச்சுவட்டில் எனும் தலைப்பில் தன் வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். அவர்தான் இன்றைய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

நாள்குறிப்பு எழுதிப் பழக்கம் இல்லாத அந்தத் தலைவர் தன் நெஞ்சில் பதிய வைத்தவைகளை - ஆதாரக் குறிப்புகளைத் துணைக்கழைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார்.

தன் வரலாற்று நூல்களில் தனிச் சிறப்புடன் குறிப்பிடத்தகுந்த தகைமை உடையது இந்நூல் என்று ஆய்வாளர்களும், விமர்சகர்களும், இதழாளர்களும் தங்கள் கணிப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

மயிலை க. திருநாவுக்கரசு எழுதுகிறார்

அந்த நூல் 368 பக்கங்களைக் கொண்டது. அத்தியாயங்கள் 58 உள்ளன. நூலைப் படிக்க கையில் எடுத்தவுடன் கீழே வைக்க முடியவில்லை; படித்துக்கொண்டே போகவேண்டும் என்ற ஆவலை புத்தகத்தின் நிகழ்வுகள் இழுத்துச் செல்லுகின்றன...

பள்ளிச் சிறுவனாய்ப் பொது வாழ்க்கையைத் தொடங்கிய ஆசிரியர், ஒரு தீப்பொறி எரி நெருப்பாய் ஆனதைப்போல கொள்கை உறுதி மிக்கவராய் அவர் உயர்ந்து திகழ்வதை அய்யா வின் அடிச்சுவட்டில்... என்ற புத்தகம் சொல்லாமல் சொல்கிறது என்று திராவிட இயக்கக் கணினி என்று போற்றப்படும் திறனாய்வாளர் மயிலை க. திருநாவுக்கரசு அவர்கள் கணிப்பீடு செய்துள்ளார்.

("விடுதலை"," ஞாயிறுமலர்" 17.1.2009).


***************************************************

நிகழ்வுகளின் தொகுப்பாக இருப்பினும், பல அரிய வரலாற்று உண்மைகளும் நூலோடு பின்னிப் பிணைந்துள்ளன. பொதுவாகப் பெரியாரின் திருமணம் குறித்தும், அதில் ராஜாஜியின் பங்கு குறித்தும் பெரும்பாலான நூல்களும், விமர்சகர்களும் தருகிற தகவலுக்கு மாற்றாக ஒரு செய்தி: அதாவது பெரியார் திருமணத்தை ராஜாஜி எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் - அய்யா விளக்கம், துவேஷப் புயல் உணர்த்தும் உண்மை, ராஜ கோபாலாச்சாரியார் கடிதம் முதலிய அத்தியாயங்கள் குறிப்பிடத் தக்கன என்று தீக்கதிரில் அதன் பொறுப்பாசிரியர் க.பொ. அகத்தியலிங்கம் தம் எழுதுகோலை ஓட்டியுள்ளார்.

("தீக்கதிர்", 18.1.2009).

**********************************

"தினகரன்" எழுதுகிறது

தந்தை பெரியாரிடம் அறிமுகமானது முதல் அவரது நிழலாக வளர்ந்தது வரையிலான காலத்து, தனது வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்தளித்திருக்கிறார் கி. வீரமணி. தமிழக அரசியலைப் புரட்டிப் போட்ட பல அரசியல் நிகழ்வுகளை பெரியாரின் அருகிலிருந்து பார்த்த அவர், சுவாரசியம் குறையாத நடையில் அவற்றை விவரிக்கிறார். திராவிட இயக்க அரசியல் மீது ஆர்வம் காட்டும் எல்லோரும் அவசியம் படிக்கவேண்டிய நூல் என்று தினகரன் (4.1.2009) மதிப்புரை தந்துள்ளது.


****************************************

"தினத்தந்தி" பேசுகிறது


பெரியாருடன் தனக்குள்ள அனுபவங்களை அய்யாவின் அடிச்சுவட்டில்... என்ற இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். தமிழ் நாட்டின் அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றை உள்ளடக்கியதாக, இந்நூல் அமைந்துள்ளது. சுவையும், விறுவிறுப்பும் கலந்த நடையில் வீரமணி இப்புத்தகத்தை எழுதியுள்ளார்! என்பது தினத்தந்தியின் விமர்சனம்.

***************************************


"தினமணி"யின் தீர்ப்பு


திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 1944 ஆம் ஆண்டு முதன்முறையாக ஈ.வெ.ரா. பெரியாரைச் சந்தித்ததில் இருந்து 1973 ஆம் ஆண்டுவரையும் அவருக்குக் கிடைத்த பல்வேறு அனுபவங்களைப் பதிவு செய்துள்ள நூல். மாணவப் பருவத்தில் அவர் பங்கு கொண்ட இயக்கங்கள், போராட்டங்கள், எதிர்கொண்ட இடர்ப்பாடுகள் அனைத்தும் கூறப்பட்டுள்ள நூல், திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் என்பது தினமணியின் தீர்ப்பு.

*******************************************


புதிய பார்வை

ஒரு தன் வரலாறு எழுதப்படும்போது மேதாவித்தனமும், சிலிர்ப்பும், பெருமை கூட்டி எழுதுவதும் வழக்கம். அப்படிச் செய்யாமல் தனது அறிவாசானின் நிழலில் நின்று, நிதானமாக, இயல்பாக, மிக நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார் - தனக்குத்தானே எடை போட்டு மதிப்பீடு செய்யும் முயற்சிதான் தன் வரலாறு என்பதை உணர்ந்த ஆசிரியர் கி. வீரமணி, இவ்வகையிலும் இந்நூல் முக்கிய கவனத்திற்குரியதாகிறது.

- இது புதிய பார்வையின் கருத்து (சனவரி 1-15, 2009).விமர்சகர்கள், ஏடுகளின் பார்வையில் ஏற்றம் பெரும் இந்நூல் - ஏதோ ஒரு தனி மனிதர்தம் வாழ்வைப் பற்றியதல்ல; ஒரு நாட்டின், ஓர் இனத்தின் வரலாற்றைப் புத்தம் புதிய புரட்சி முறையில் வார்த்தெடுக்க தந்த வரலாற்றுத் தலைவரின் சீடர் ஒருவரால் எழுதப்பட்டது என்றால், அதன் தாக்கங்களும், சீற்றங்களும், செழிப்பான தகவல்களும், புத்தம் புதிய முத்துகளும் நிறைந்து கிடக்கும் - கிடக்கின்றன என்று ஆய்வாளர்கள் சலித்து எடுத்துக் கொடுத்துள்ளனர்.

தன் இனத்தின் வரலாற்றை அறியாத ஓர் இனம் தறுதலையாகத்தான் போகும். தமிழர்கள் அவ்வாறு ஆகாமல் இருப்பதற்கு தந்தை பெரியார், அவர்தம் சீடர்களின் வரலாற்றினைத் தெரிந்துகொள்ள வேண்டுமே!

தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவு ஏன் - எதற்காக? என்ற நூலைத் தமிழ்நாடு தழுவிய அளவில் கொண்டு சேர்த்த மாணவரணியினர், அடுத்தகட்டமாக மாணவரணியினரும், இளைஞரணியினரும் இணைந்து 56 கழக மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு ஆயிரம் என, அய்யாவின் அடிச்சுவட்டில்... என்ற அரிய கருவூலத்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பிப்ரவரி 10 இல் தொடங்கி மார்ச் 10 இல் அந்தப் பணியை நிறைவு செய்து, அதற்கான தொகையினைக் கழகத் தலைவரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆரோக்கியமான போட்டி!

"அய்யாவின் அடிச்சுவட்டில்..." என்ற நூலை தனிப்பட்ட முறையில் அதிகம் விற்று சாதனை படைப்பவர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்படும். இதற்காக ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கப்படும். இது ஓர் ஆரோக்கியமான அறிவுப் போட்டியாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தபோது, பலத்த கரவொலி வெடித்துக் கிளம்பியது.
கோவைப் புறநகர மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் குறிச்சி சந்திரசேகரன் சார்பாக தனிப்பட்ட முறையில் நூறு புத்தகங்கள் விற்றுத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாவட்டத்துக்கு ஆயிரத்துக்குமேல் விற்றுத் தரப்படும் என்று இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு அறிவித்தனர்.

அதற்கான பூர்வாங்கக் கூட்டம் திருச்சி பெரியார் மாளிகையில் கடந்த ஞாயிறன்று (25.1.2009) மாலையில், கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கடவுள் மறுப்புடன் தொடங்கப்பட்ட இந்தக் கலந்துறவாடலில், திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், துரை. சந்திரசேகரன், பொதுச்செயலாளர் கலி. பூங் குன்றன், இளைஞரணி மாநில அமைப்பாளர் பூபேஷ்குப்தா, மாணவரணி மாநில அமைப்பாளர் ரஞ்சித்குமார், இளைஞரணி மாநிலத் துணை அமைப்பாளர்கள் ஈரோடு வைரம், திருத்தணி அறிவுச்செல்வன், இராசபாளையம் இல. திருப்பதி, தருமபுரி சிவாஜி, விருத்தாசலம் முத்து கதிரவன், தஞ்சை ந. இராமகிருட்டினன், சென்னை - தமிழ் சாக்ரட்டீஸ், மாணவரணி துணை அமைப்பாளர்கள் உசிலம்பட்டி செயப்பிரகாசு, சேலம் தம்பி பிரபாகரன் (சட்டக் கல்லூரி மாணவர்) மற்றும் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு. சேகர் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழர் தலைவரின் நிறைவுரை

கலந்துறவாடல் கூட்டத்தின் தலைவர் - தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ரத்தினச் சுருக்கமாக வழிகாட்டும் கருத்துகளை எடுத் துரைத்தார்.

1. நூல்கள் விற்பனையாகவேண்டும் என்பதற்கான முயற்சியல்ல - இது.

2. சரியான வரலாற்றினை மக்களுக்கு - குறிப்பாக இளைஞர் களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சி - திட்டம் இது.

3. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று திட்டமிட்ட வகையில் குழப்பத்தை விளைவிக்கும் சக்திகளை முறியடிக்கும் முயற்சி இது.

4. முக்கியமாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்குமான ஒரு பயிற்சி இது. மக்கள் மத்தியில் செல்வது, நம் கருத்துகளை எடுத்துக் கூறுவது என்பது இதன் உள்ளடக்கம். தன்னம்பிக்கை, நம்மால் சாதிக்க முடியும் என்ற திடத்தை ஏற்படுத்தக் கூடியது இது.

அலை அலையான செயல் திட்டங்களால் இயக்கம் பீடு நடை போட்டு வருவதை மறுப்பார் யார்?

நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது; வேறு யுவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று நாம் கூறுவது வெறும் மந்திரச் சொற்கள் அல்ல - செயலில் காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.

எடைக்கு எடை வெள்ளி, எடைக்கு எடை தங்கம் அளிக்கப்பட்டது - தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த இயக்கமும் செய்து காட்டிடவில்லை. மறைந்த கழகப் பொருளாளர் தஞ்சை மானமிகு கா.மா. குப்புசாமி அவர்கள் துணிவுடன் அறிவித்தார். எனக்கெல்லாம் கூட என்ன, இப்படி அறிவித்துவிட்டார்களே, எப்படி சாத்தியம் என்ற எண்ணம் இருந்தது. நம் தோழர்கள் முயற்சி எடுத்து சாதித்து முடித்து விட்டார்களே!

மானம் பாராத தொண்டு, கூச்சம், தயக்கம் இவற்றிற்கு இடம் இல்லாமல் பொதுப்பணி ஆற்றிட இவையெல்லாம் ஒரு பயிற்சிக்களமாகும்.

5. வரும் ஜூன் மாதத்தில் விடுதலையின் பவளவிழா (75 ஆம் ஆண்டு) ஏற்கெனவேயுள்ள விடுதலை பொலிவுக்கு மேலும் ஒளி சேர்க்கும் வண்ணம் வெளிவர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதுடில்லியில் நடைபெற்ற அச்சு இயந்திரக் கண்காட்சிக்கு நமது அச்சக மேலாளர் சரவணன் சென்று வந்து பல தகவல்களைக் கொடுத்துள்ளார்.

நவீன வசதிகளைக் (Modernisation) கொண்டு எல்லாப் பக்கங்களும் வண்ணமயமாகக் கொண்டு வருவதற்குத் திட்டங்கள் உள்ளன.

குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் தேவைப்படும். நாம் எந்தத் திட்டத்தைத் தொடங்கினாலும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு தொடங்குவதில்லை. தைரியமாக வங்கியில் கடன் வாங்கி செய்து முடிக்கிறோம்.

ஒரு கோடி ரூபாய் கடன் பெறுகிறோம் வங்கியிலிருந்து என்று சொன்னால், மூன்றில் ஒரு பங்கு முதலில் கட்ட வேண்டியிருக்கும். இந்த நூலின் மூலமாகக் கிடைக்கும் இந்தத் தொகையை அதற்குப் (Seed Money) பயன்படுத்திக் கொள்வோம் (பலத்த கரவொலி!).

மே மாதத்தில் புதிய அச்சு இயந்திரத்தை வாங்குவோம். நமது பிரச்சாரத்திற்கு முக்கியமான முதன்மையான ஆயுதம் விடுதலைதான். அதனை விரிவாக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவோம்.

மார்ச் 10 ஆம் தேதி அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாள். அன்றைய தினம் திருச்சி கல்வி வளாகத்தில் அன்னை மணியம்மையார் பெயரில் விளையாட்டரங்கம் (ஸ்டேடியம்) திறக்கப்படும்.

6. நாம் எதைச் செய்தாலும் ஒரு காலவரையறையை வகுத்துக் கொண்டு செய்யவேண்டும் (Time Bound Programme) ஒவ்வொரு மணித்துளியையும் வீணடிக்கக் கூடாது என்று அருமையான வழிகாட்டும் உரையை நிகழ்த்தினார்.

மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் நம்பியூர் சென்னியப்பன் நன்றி கூறிட, இரவு 7.45 மணிக்குக் கலந்துறவாடல் கூட்டம் நிறைவுற்றது.

-------------------நன்றி:-"விடுதலை" 27-1-2009

4 comments:

Unknown said...

//எடைக்கு எடை வெள்ளி, எடைக்கு எடை தங்கம் அளிக்கப்பட்டது - தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த இயக்கமும் செய்து காட்டிடவில்லை. //

சாதனை தான்.

வாழ்த்துக்கள்

Thamizhan said...

உங்கள் திறமைக்கும்,தங்கப் பதக்கம் வாங்கிய படிப்பிற்கும் நீங்கள் எங்கோ போயிருக்கலாமே என்று கேட்டதற்கு,
ஆம்.பணக்காரர் ஆகியிருக்கலாம்,பதவிகளில் என்ன உச்ச நீதி மன்ற நீதிபதி ஆகியிருக்கலாம்.ஆனால் தன்னலமற்ற இத்தனைக் கருப்பு மெழுகுவர்த்திகளுடன் பழகி,உழைத்து அவர்களின் அன்பைப் பெற்றிருக்க முடியுமா?அதில் பெறும் மகிழ்ச்சிக்கு ஈடு,இணை உண்டா? என்றார் இந்தப் பெரியாரின் உண்மைத் தொண்டர்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா