Search This Blog

29.1.09

பக்தர்கள் சிந்திக்கக் கூடாதா?




திருநெல்வேலி மாவட்டம் திருவுருமாமலை வழிபாட்டு மன்றத்தைச் சேர்ந்த 19 பேர், மன்றத்தின் செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் இம்மாதம் 24 ஆம் தேதி தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களைத் தரிசிப்பதற்காக தனி வாகனத்தின்மூலம் சென்றனர். தரிசனம் முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், நேற்று விடியற்காலை 2.30 மணியளவில் திருநெல்வேலி தாழையூத்து அருகே வந்தபோது, எதிரே வந்த பால் லாரியோடு வேகமாக மோதியதில் 15 பக்தர்கள் பரிதாபகரமான முறையில் நசுங்கிச் செத்தனர் என்ற செய்தி நெஞ்சைப் பதறச் செய்கிறது - குருதியை உறையவும் வைக்கிறது.

பகுத்தறிவுவாதிகள் பக்தியை எதிர்த்துக் கருத்துகளைக் கூறினாலும், மனிதாபிமான முறையில் அவர்களின் பரிதாபகரமான மரணம் கண்டு கண்ணீர் வடிக்கிறோம். விலை மதிக்க முடியாத உயிர்கள் இப்படி காரணம் இல்லாமல், பயன் இல்லாமல் பறிக்கப்பட்டனவே என்ற துக்கம் நெஞ்சை அடைக்கிறது.

இந்த நேரத்தில் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு பக்தர்களை நோக்கி சில வினாக்களைத் தொடுப்பது நமது கடமையாகிறது!

கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் என்றும், கடவுள் தரிசனம் புண்ணியம் தரும் என்றும், கேட்டது கிடைக்கும் என்றும் நம்பி, பெரும் பொருள் செலவு செய்து, பொழுதையும் வீணடித்து கோயில் கோயிலாகச் சுற்றியும், தரிசனம் செய்தும், அந்தப் பக்தர்கள் பரிதாபகர மான முறையில் பலியாகிறார்களே - இந்த நேரத்திலாவது கடவுள் சக்தி என்பதுபற்றி அவர்கள் கணநேரமாவது சிந்திக்கவேண்டாமா? என்பதுதான் பகுத்தறிவுவாதிகளின் முதல் கேள்வி.

தன்னை நாடி வந்த அந்தப் பக்தர்களைப் பாதுகாப்பாக வீட்டுக்குக் கொண்டு போய் சேர்க்க உத்தரவாதம் கொடுக்காத ஒருவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்று நம்புவது அறியாமையிலும் அறியாமை அல்லவா என்பதை அனுபவத்திற்குப் பிறகாவது அறியவேண்டாமா? என்பது நமது இரண்டாவது கேள்வி.

அவாள் அவாள் தலையெழுத்து எப்படியோ அப்படித்தான் நடக்கும் என்று சமாதானம் சொல்ல முயலும் முந்திரிக்கொட்டைகளை நோக்கியும் கேள்வி உண்டு. அவாள் அவாள் தலை யெழுத்தின்படிதான் நடக்கும் என்பது உண்மையானால், கோயிலுக்குச் சென்றுதான் என்ன பயன்? கோயிலுக்குச் சென்றாலும், நேர்த்திக் கடன் கழித்தாலும், பக்திச் சொட்டச் சொட்ட தரிசித்தாலும், தலையெழுத்தை அழிக்க முடியாது - ஏற்கெனவே எழுதப்பட்டதை அழித்து எழுத முடியாது என்று உண்மையாகவே நம்புவார்களேயானால், குறைந்தபட்சம் கோயிலுக்குச் செல்வதை, தரிசனம் செய்வதை நிறுத்திக் கொள்ளக்கூடாதா? பொருளும், பொழுதுமாவது மிச்சப்படுமே!

இன்னொரு கேள்வியும் எஞ்சியிருக்கிறது. கோயிலுக்குச் சென்று திரும்பிய அத்தனைப் பேர் தலையெழுத்தும் ஒன்று சேர்ந்தது போல ஆண்டவனால் எழுதப்பட்டதா? அப்படி எழுதப்பட்டது என்பதற்கு ஏதாவது ஆதாரங்களை ஆதினகர்த்தாக்கள், ஆன்மிக மெய்யன்பர்கள் வைத்திருக்கிறார்களா? என்பதும் முக்கியமான வினாவே!


தீராத வினையையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம் என்று பாட்டுப் பாடிக் கொண்டு திருப்பதி செல்லும் பக்தர்கள் ஆனாலும், பல நாள் விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்பப் பக்தர்களாக இருந்தாலும், சாலை விபத்துகளில் மரணமடைவது சர்வ சாதாரணமாகவே இருக்கிறதே - இதற்குப் பிறகாவது புத்தியைக் கொஞ்சம் செலவழித்தால் என்ன என்பது பகுத்தறிவுவாதிகள் கேட்பது, பக்தர்களின் மீது பரிதாபப்பட்டுதான்.

மிகப்பெரிய ஆற்றல் படைத்த மூளையை மூலதனமாக வைத்துக்கொண்டு அதனைப் பயன்படுத்தாமல் பக்தி என்ற விலங்கால் பூட்டிக்கொண்டு வீணாக வாழ்வைத் தொலைத்துக் கொள்ளலாமா? என்று பக்திப் பழமாய் இருக்கும் சக மனிதனை தோழமை உணர்வோடு கேட்கிறோம்.

கோயிலுக்குள் அடித்து வைக்கப்பட்டுள்ள குத்துக்கல்லுக்கு எப்படி சக்தியிருக்க முடியும்? அதனை வடித்த சிற்பியும் ஒரு மனிதன் தானே! அந்தக் குழவிக் கல்லை குளிப்பாட்டுவது, ஆடை உடுத்துவது, அலங்காரம் செய்வது எல்லாம் கூட ஒரு மனிதன்தானே?

பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி கடவுள்களை உருவாக்குவது நாங்கள்தானே என்று பேட்டி கொடுத்தாரே!

("கல்கி", 11.6.2006)

குந்த வைக்கப்பட்ட இடத்திலிருந்து அது என்றாவது நகர்ந்ததுண்டா? படைக்கப்பட்ட உணவைத்தான் சாப்பிட்டதுண்டா? இந்த உண்மைகள் எல்லாம் பிரத்தியட்சமாகத் தெரிந்திருந்தும் மனிதன் புத்தியைப் பலி கொடுக்கிறானே! தன்னம்பிக்கையை இழக்கின்றானே! உழைத்துச் சம்பாதித்த பொருளை புரோகிதச் சுரண்டலுக்குப் பறி கொடுக்கின்றானே என்று கேட்டுக்கொண்டே தானிருக்கிறோம். நெல்லையில் நடந்த கோர சம்பவத்துக்குப் பிறகாவது கண்களைத் திறக்கிறார்களா பார்ப்போம்!


------------------நன்றி: -"விடுதலை" தலையங்கம் 28-1-2009

2 comments:

Unknown said...

//குந்த வைக்கப்பட்ட இடத்திலிருந்து அது என்றாவது நகர்ந்ததுண்டா? படைக்கப்பட்ட உணவைத்தான் சாப்பிட்டதுண்டா? இந்த உண்மைகள் எல்லாம் பிரத்தியட்சமாகத் தெரிந்திருந்தும் மனிதன் புத்தியைப் பலி கொடுக்கிறானே! தன்னம்பிக்கையை இழக்கின்றானே! உழைத்துச் சம்பாதித்த பொருளை புரோகிதச் சுரண்டலுக்குப் பறி கொடுக்கின்றானே//

வேதனையாகத்தான் இருக்கிறது. விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தொடந்து செய்வோம். சிந்திக்க வைப்போம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்