Search This Blog

28.1.09

இந்தியக் குடிமகனுக்கு எது மதம்?





கேரளத்தில், ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ஒரு பாடம் சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது. இப்பாடத்தை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள், பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. என்ன அந்த பாடம்?

தன் மகனைப் பள்ளியில் சேர்க்க தலைமையாசிரியரிடம் வருகிறார் அந்தப் பையனின் தந்தை. மகனும் உடன் இருக்கிறான். தலைமையாசிரியருக்கும் தந்தைக்கும் உரையாடல் துவங்குகிறது.

மாணவனின் பெயர் என்ன?, ஜீவன், நல்ல பெயர், மிகவும் அழகான பெயர். நல்லது, அப்பா பெயர் என்ன?, அன்வர் ரஷீத், அம்மா பேரு?

இலட்சுமி தேவி

தலைமையாசிரியர் எழுதுகோலை கீழே வைக்கிறார். தந்தையை ஒருவிதமாகப் பார்க்கிறார். சற்றே யோசிக்கிறார். தயக்கத்தோடு எழுதுகோலை கையில் எடுக்கிறார். கேள்விகள் தொடர்கின்றன...

பையன் எந்த மதத்தைச் சேர்ந்தவன்?

அந்த இடத்தில் ஒன்றும் எழுத வேண்டாம் அய்யா. அவன் எந்த மதமும் சார்ந்தவனில்லை.

ஜாதி?

அதிலும் எதுவும் எழுத வேண்டாம்...

தலைமையாசிரியர் கோபத்தோடு எழுந்து கேட்கிறார்.

அப்போ, அவன் வளர்ந்து பெரியவனான பிறகு, ஏதாவது ஒரு மதத்தில் சேர விரும்பினால்...? பிற்காலத்தில் அவன் தீர்மானித்துக் கொள்ளட்டும். நாம் அதை விட்டுத் தள்ளுவோம். இதுதான் அந்தப் பாடத்தின் உள்ளடக்கம். பாடத்தின் தலைப்பு மதம் இல்லாத ஜீவன்.

இந்து மத அமைப்புகள், இசுலாமிய மத அமைப்புகள், கிறிஸ்தவ மத அமைப்புகள், ஒன்றிணைந்து இந்தப் பாடத்தை நீக்கப் போராடுகின்றன. நாயர் கழகம், ஜமாத்துகள், தேவாலயங்கள் ஆகியவை கடுமையாக எதிர்க்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றன. எதிர்க்கின்றன.

இடதுசாரி அரசு நடைபெறுகிறது. இந்த அரசுக்கும் இந்தப் பாடத்திற்கும் தொடர்பில்லை. தேசியக் கல்வி ஆய்வு மய்யம் (என்.சி.ஆர்.டி.) வழி காட்டிய நெறிப்படி இப்பாடத்தை கேரள கல்வித் துறை எழுதியிருக்கிறது. முற்போக்காளர்கள், சிந்தனையாளர்கள் இப்பாடத்தை ஆதரித்துக் குரல் கொடுக்கிறார்கள். இதைப் படிப்பவர்களுக்குக் கூட இந்தப் பாடத்தில் என்ன பிழை இருக்கிறது என்று கேட்கத் தோன்றும்.

உண்மையான மதச் சார்பின்மையைப் பின் பற்றுகிற ஒரு நாட்டில் இம்மாதிரியான பாடங்கள் வரலாம்.

இந்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று நம்பப்படுகிறது. அது உண்மையல்ல. நடைமுறையில் இந்தியா மதங்களின் சார்புள்ள நாடாகவே இருக்கிறது. பொதுக்குடிமைச் சட்டம் என்பது மதச் சார்பற்ற குடிமைச் சட்டம் என்ற பொருளில் பிற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நமது அரசியல் உருவாக்கச் சட்டம் பொது என்ற சொல்லையோ, மதச்சார்பற்ற என்ற சொல்லையோ பயன்படுத்தவில்லை. ஒரே சீரான என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.

மத அடிப்படையிலான தனி நபர் சட்டங்களை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே வைத்துக் கொண்டு, அவற்றின் உள்ளடக்கத்தை மட்டும் ஒரே சீராக இருக்குமாறு வைத்துக் கொள்வது நடைமுறையாக இருக்கிறது. நீதிமன்றங்களும் இதைத்தான் பின்பற்றுகின்றன.

மற்றொரு முதன்மைச் செய்தி: 1950இல் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற குடியரசு என்று கூறவில்லை. 1976இல் கொண்டு வரப்பட்ட 42வது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை யொட்டி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில், இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கு உறுதி பூணுவதாகக் குறிப்பிடப்பட்டது. இந்த முன்னுரை இலட்சியந்தான் - சட்டமல்ல; சட்டப் பொறுப்பும் இதற்குக் கிடையாது. அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், நமது நாட்டில் மதச்சார்பின்மை நிலவுவது உண்மை என யாராவது கூறினால், அதே சட்டத்தில் கூறப்பட்டுள்ள சோசலிசம் நிலவுகிறதா என நாம் கேட்கலாம்.

சோசலிசம் கைவிடப்பட்டது போலவே, மதச்சார்பின்ம்யும் கைவிடப்பட்டுள்ளது. மதமில்லாமல் எந்த இந்தியக் குடிமகனும் சட்டப்படி இருக்க முடியாது. குறிப்பாக இந்து மதம் சார்ந்தே அரசியல் சட்டம் (1953-56இல்) எழுதப்பட்டது.

யார் இந்து? - யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்துமோ அவர்களெல்லாம் இந்துகள்.

யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்? - யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தாதோ அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.

யாருக்குப் பொருந்தாது? - முசுலிம்கள், யூதர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்குப் பொருந்தாது. ஆகையினால் இவர்களைத் தவிர அனைவரும் சட்டப்படி இந்துகளே!

உச்சநீதிமன்றம் இதைத்தான் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துகள், சமணர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் ஆகியோர் மதத்தால் இந்துகளே! இந்துப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள் பிறப்பால் இந்துகளே!

முஸ்லிம், கிறிஸ்தவ, யூத, பார்ச்சி மதங்களைச் சாராத மற்றவர்களனைவரும் கூட இந்துகளே! இவர்கள் அனைவருக்கும் இந்து சட்டத் தொகுப்பு பொருந்தும். இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இதை வழங்கியவர் உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப்சிங். இந்தியக் குடிமகன்கள் ஏதாவது ஒரு மதத்தில் இருக்க வேண்டும் என்பதே சட்டம்.


கேரளப் பாடம் சட்டப்படி செல்லாது. செல்ல வைக்க வேண்டுமானால் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். இதை யார் செய்வது?

----------------------- வீ.ந.சோ "இப்படிக்கு" சிற்றிதழிலிலிருந்து..

2 comments:

Unknown said...

மதம் இல்லாத ஜீவன்கள் நாட்டில் ஏராளம் உருவாக வேண்டும் அப்போதுதான் மனிதம் மலரும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்