Search This Blog

26.1.09

காஞ்சி சங்கராச்சாரிகளின் யோக்கியதை பாரீர்


காஞ்சி சங்கரமடத்தின் முன்பிருந்த மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசப் பிதாவுக்கே தீட்டைக் கழித்தவர்--அவரது தீட்டுக் கருத்தியல், பெண்களைக் குறித்த விமர்சனம் ஆகியன மிகவும் பிற்போக்கானவை.

அதிகார மையமாகச் செயல்பட்டு வரும் காஞ்சி சங்கரமடத்தின் இன்றைய மடாதிபதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது, இவருக்கு முன்பிருந்த மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பல்வேறு பத்திரிகைகள் அடிக்கடி நினைவு கூர்ந்தன. அவர் மிகவும் நல்லவர், நேர்மையானவர், அப்பழுக்கற்றவர் என்பதுபோன்ற கருத்துகள் முன் வைக்கப்பட்டன. அவரது தனிப்பட்ட ஒழுக்கத்துடன், ஜெயேந்திரர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒப்பு நோக்கப்பட்டன.

ஆனால் ஒரு மனிதனின் தனிப்பட்ட ஒழுக்கம் எந்தளவுக்கு முக்கியமானதோ, அந்தளவுக்கு அவனது சமூக ஒழுக்கமும் முக்கியமானது. இந்த வகையில் பார்த்தால் அவரது தீட்டுக் கருத்தியல், பெண்களைக் குறித்த விமர்சனம் ஆகியன மிகவும் பிற்போக் கானவை.

15.10.1927-இல் பாலக்காடு நல்லசேரி என்ற பகுதியில் இவர் தங்கியிருந்த போது மகாத்மா காந்தி இவரைச் சந்திக்கச் சென்றார். தேசத் தந்தை என்றழைக்கப்பட்டாலும், காந்தி வைசிய வருணத்தைச் சார்ந்தவர் என்பதால், `சாமியின் தரிசனம் மாட்டுத் தொழுவில்தான் அவருக்குக் கிட்டியது.

வைசியருடன் உரையாடுவதால் ஏற்படும் தீட்டை மாட்டுத்தொழு போக்கி விடும்’ என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம். தேசப் பிதாவுக்கே தீட்டைக் கழித்தவர், மாதப் பூப்புக்களாகும் பெண்களைக் குறித்து பயப்படாமல் இருப்பாரா?


திருப்பதி மலைப் பகுதியில் பேருந்து ஒன்று கீழே விழுந்து பலர் இறந்துபோன நிகழ்வை ஒட்டி அவர் தெரிவித்த கருத்து வருமாறு: `முன்னெல்லாம் வீட்டு விலக்கு என்று எவர்களை வீடுகளிலேயே தனித்து வைத்தார்களோ அவர்கள் இப்போது கோயிலிலும்கூட விலக்கு இல்லாமல் பிரவேசித்துவிடுகிறார்கள்.

இந்த விதிகளை மீறுவ தால்தான் மகாக்ஷத்திரங்களில், விபத்து, விபரதம் எல்லாம் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்’
இதோடு விட்டாரா? இந்தியா முன்னேறாது என்று சாபம் இடுகிறார்.

``இப்போது அந்த மூன்று நாட்களும் ஸ்திரீகள் ஆஃபீஸுக்குப் போவதில் ஊர் பூராவும் தீட்டுப் பரவுகிறது. `அட்மாஸ் ஃபெரிக் பொல்யூஷன்’ என்று இன்றைக்கு அநேக விஷயங்களை எடுத்துக்காட்டி எதிர்நடவடிக்கை எடுக்கும்படி எச்சரிக்கிறார்கள்.

அந்தப் `பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்த்ரீகளின் தீட்டே. அதை இப்படி எல்லா இடத்திலும் கலக்க விட்டால், ஜனங்களுக்கு எத்தனை தான் வரும்படி வந்தாலும், கவர்ன்மென்ட் எத்தனைதான் அய்ந்து வருட திட்டம் போட்டாலும், தேசத்தில் துர்பிக்ஷமும், அசாந்தியும், வியாதியுமாகத் தான் இருக்கும்.’


தீட்டு குறித்த அவரது பயம் ஒருபுறமிருக்க, திருக்குறள்மீதும், தமிழ்மொழி மீதும் அவருக்கு ஒரே பயம்தான். ஆண்டாள் திருப்பாவையில், `செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்’ என்ற தொடர் வருகிறது. இத்தொடரில் இடம் பெறும் `தீக்குறளை’ என்ற சொல் தீமை பயக்கும் புறம்பேசுதலைக் குறிக்குமென்பதே உண்மை. வைணவர்களும் இதே பொருளைத் தான் கூறுகிறார்கள்.

ஆனால் நமது ஆச்சாரியாரோ வேடிக்கையான விளக்கத்தைத் தந்தார். திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன. வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாதென்ற பொருளில்தான் `தீக்குறள்’ என்று ஆண்டாள் குறிப்பிட்டுள்ளதாகப் புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.


வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் எழுதியுள்ள சுயசரிதையில் இவரைப் பற்றி இடம் பெற்றுள்ள ஒரு செய்தி தமிழின்மீது இவர் கொண்ட வெறுப்பு எத்தகையதென்று வெளிப்படுத்துகின்றது.

குளித்துவிட்டு பூசை செய்து முடிக்கும்வரை இவர் தமிழில் பேச மாட்டாராம். சமஸ்கிருதத்தில்தான் பேசுவார். ஏனென்றால் தமிழ் `நீசபாசை’யாம். பூசை முடிந்தபிறகுதான் நீசபாசையில் பேசுவாராம்.

மனிதநேயம் என்ற சொல் அறிமுகமானபோது அவர் தந்த விளக்கம் வருமாறு:ஸமீபத்தில் `மனிதநேயம்’ என்ற ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப் பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் `மனிதாபிமானம்’ என்று இத்தனை நாளாகச் சொல்லி வந்ததில் `அபிமானம்’ என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல் தான் இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது பரிஹாஸமாகத்தான் இருக்கிறது!

ஏனென்றால், `நேயம்’ என்பதும் ஸம்ஸ்கிருத `ஹநேஹ’த்தின் திரிபுதான்! ஸம்ஸ்கிருதம் என்பது இலக்கண சுத்தமான பாஷை. அதையே பேச்சுக் கொச்சையாக இருக்கும்போது ப்ராக்ருதம் என்பார்கள். அந்த ப்ராக்ருத பாஷையில்தான் ஸம்ஸ்கிருதத்தில் உள்ள நாடகங்களில் ஸ்த்ரீகள், படிப்பில்லாதவர்கள் ஆகியவர்கள் ஸம்பாஷிப்பார்கள். அதிலே `ஸ்நேகம்’ என்றுதான் வரும்.

அது போகட்டும். `மனிதநேயம்’ என்கிறதிலும் முதலில் மனித என்று வைத்துக் கொண்டிருக் கிறார்களே. அதுவும் ஸம்ஸ்கிருத `மநுஷ்ய’வின் திரிபுதானே? ஒருத்தருக்கும் ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் இப்படியெல்லாம் வெறும் துவேஷத்தில் செய்கிற காரியங்கள் கடைசியில் பித்துக்குளித்தனமாகத்தான் முடிகின்றன.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்ட பொழுது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல ஏற்பாடு செய்தார். தமிழ் வழிபாட்டு மொழியாவதை எதிர்த்து வந்தவர். இப்படிப்பட்ட ஒருவரின் பெயரால் புதுச்சேரியிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் `காஞ்சி மாமுனிவர்’ பட்ட மேற்படிப்புத் துறை என்ற துறை ஒன்று புதுச்சேரி அரசியல்வாதி ஒருவரால் உருவாக்கப்பட்டது.

புதுச்சேரிக்கு நல்லதொரு முற்போக்குப் பண்பாட்டுப் பாரம்பரியம் உண்டு. `குயில்’, `சுதந்திரம்’, `புதுவைமுரசு’ என்ற முற்போக்கான இதழ்கள் இம்மண்ணிலிருந்து வெளியாகியுள்ளன. பாரதி நடத்திய `இந்தியா’ பத்திரிகை சிறிது காலம் இங்கிருந்துதான் வந்தது. பாரதிதாசன், தமிழ்ஒளி, வாணிதாசன் போன்ற அற்புதமான கவிஞர்கள் தோன்றிய மண். பிரபஞ்சன், புதுவை சிவம் போன்ற இலக்கியவாதிகள் வாழும் மண்.

இத்தகைய சிறப்புமிக்க பகுதியில் `நீசபாஷை’ என்று தமிழைக் கருதிய, தீண்டாமையை ஆதரித்த ஒருவரின் பெயரால் பட்ட மேற்படிப்பு மையம் அமைந்திருப்பதும், அம்மையத்தின் ஓர் அங்கமாகப் புதுவைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை இருப்பதும், பொருத்தமற்றது. இதை மாற்றியமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முற்போக்காளர் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டும்.

-------------------ஆ. சிவசுப்பிரமணியன் - நன்றி: `ஜனசக்தி’ 17.5.2007

1 comments:

Unknown said...

காஞ்சி சங்கராச்சாரிகளின் யோக்கியதை தான் உலகத்துக்கே தெரியுமே, கொலை, பெண்கள் தொடர்பு என்று அனைத்து விசயங்களையும் அம்பலமாகி இப்ப்போது ஜாமீனில் இருக்கிறார்கள்.

இவர்கள் பேரைக் கேட்டாலே ஒருவித அச்சம் வருவது உண்மைதான் என்கிறார்கள்.